Advertisement

அத்தியாயம் 10
“அப்போ உன்ன ராகவேந்திரன்தான் இங்க வர சொன்னாரா? நீயா வரல?” தன்னை பார்க்க ஷாலினி வரவில்லை என்றதும் மாறனின் முகம் விழுந்து விட்டது.
“எவ்வளவு பெரிய போலீஸ் ஆபீசர் இப்படி சின்னபுள்ளத்தனமா நடந்துக்கிறியே…” சிரித்த ஷாலினி “ஒரே கல்லுல ரெண்டு மங்கா” ரகசியமாய் சொல்வது போல் மெதுவாக கூற, மாறன் அவளை புரியாது பார்த்தான்.
“டேய் லூசு அவர் வர சொன்னதும், உன்ன பார்க்கத்தான் ஸ்கூலையும் கட் பண்ணிட்டு ஓடி வந்தேன்” என்றவளின் கன்னங்கள் சிவப்பேறி இருந்தது. அதை மறைக்க அவள் தலை குனிவதும் முகத்தை திருப்புவதுமாக மாறனின் கண்களை சந்திப்பதை தவிர்த்தாள்.
மாறனின் இதயத்தில் சாரல் மழை வெள்ளமாய் கரைபுரண்டோடிக் கொண்டிருக்க, அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இப்படியே பார்த்துகிட்டு இருக்க போறியா? இன்னும் பக்கத்துல இருந்து பார்க்கணும்னா என்ன கல்யாணம் பண்ணிக்க. எப்போ பண்ணிக்கலாம்?” தலை குனிந்தவாறே பேசிக்கொண்டிருந்தவள் கேள்வியை மட்டும் மாறனின் கண்களை பார்த்து நேருக்கு நேராக கேட்டாள். 
கல்யாணம் என்றதும் மாறனுக்கு இதே ஷாலினி “நீ என்னை ஏமாற்றி விட்டாய்” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்குவதை போன்ற காட்ச்சிகள் தோன்றி மறைய, “ஷாலு நீ என்ன வெற்றி என்று நினைச்சி பேசிகிட்டு இருக்க நான் மாறன். மணிமாறன் வெற்றியோட அண்ணன்” என்றான்.
அவன் இந்த உண்மையை ஷாலினியிடம் இந்த இடத்தில், இந்த நேரத்தில் சொல்வானென்று அவன் கூட எதிர்பார்த்திருக்க மாட்டான். ஏன் அவளிடம் உண்மையை சொல்ல நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. அவன் கண்களுக்குள் வந்து போன காட்ச்சிகளின் தாக்கம் அவனை சொல்ல வைத்திருந்தது.
ஷாலினி அதிர்ச்சியடைவாள் என்று மாறன் எதிர்பார்க்க, அவள் அதிர்ச்சி அடையவில்லை. அவன் சொன்னதை அவள் கண்டுகொள்ளவே இல்லாத முகபாவனையை கொடுக்க மாறன் தான் அதிர்ந்தான். 
அமர்ந்திருந்த இருக்கையை தள்ளி எழுந்தவள் பொறுமையாக மாறனின் அருகில் வந்து, அவன் மேசையில் சாய்ந்து, அவன் புறம் குனிந்து “உன்ன காக்கிசட்டையில பார்த்த அன்னைக்கே உன் பேர் மணிமாறன்னு இருந்துச்சே அப்போ நான் ஏதாச்சும் கேட்டேனா?” என்றவாறே அவன் நெஞ்சில் குத்தியிருந்த பெயரை நீவி விட்டாள்.
அவள் கைதீண்டியதும் மாறனின் இதயம் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. அவள் அருகாமை, அவள் நெருக்கம், அவள் வாசம், அவள் சுவாசம் எல்லாம் வேண்டும், வேண்டும் என்று மனம் ஏங்க அவளை விலக்கி விட துடிக்கும் கைகளை இருக்கையின் கைப்பிடியில் இறுக்கியவாறு அமர்ந்திருந்தான் மாறன். “உண்மையை அவன் மறைகின்றான் என்று நினைத்திருக்க இவள் என்ன சொல்கின்றாள். அன்றே அவன் வெற்றி இல்லை என்று இவளுக்கு தெரியுமா? தெரிந்தும் இவனை திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றாளா? அற்புதங்கள் சில நேரம் வாழ்க்கையில் நிகழலாம். அது இதுவோ? தன் வாழ்க்கையில் தேவதையாக ஷாலினி இருப்பாளோ?” காதலாக அவளை பார்த்தான்.
“என்ன பாக்குற? பேர மாத்தி வச்சுக்கிட்டா நீ என் வெற்றி இல்லனு ஆகிடுமா? என்ன பார்க்கும் போதெல்லாம் உன் கண்கள்ல தெரியிற காதல் பொய்யா? இதோ… இதோ… இந்த பார்வ தான். அப்படியே ஐஸ் கிரீம் மாதிரி உருகி வழியிற, கனிஞ்சி கொட்டுற, பொங்கி வழியிற” மாறன் எதோ ஒரு காரணத்துக்காக தான் வெற்றி இல்லையென்று சாதிக்கின்றான் என்று நினைத்து ஷாலினி பேச
தனக்கு உண்மையாகவே ஷாலினியின் மேல் காதல் இருக்கிறதா? அல்லது வெற்றியின் மூளையின் ஒரு பகுதியை பொருத்தியதன் விளைவால் வந்த காதலா என்ற சந்தேகம் மாறனுக்குள் இருந்து கொண்டே இருக்க, அவ்வப்போது வெற்றியின் மூளையை பொருத்தியதால்தான் ஷாலினியின் மீது காதலில் விழுந்தான் என்று சில நேரமும், தனக்கும் அவள் மீது காதல் உண்டு என்று சில நேரமும் மாறன்  குழம்பித் தவிக்கின்றான்.
இப்படி இருக்க ஷாலினி கண்களில் வழியும் காதலை பற்றி பேச அதிர்ச்சியடைந்தான் மாறன். “கண்களில் வழியும் காதலை வைத்தா தான் வெற்றி என்று நினைக்கின்றாள்? அது வெற்றியின் மூளையை பொருத்தியதால் வந்த விளைவு என்று இவளிடம் எவ்வாறு புரிய வைப்பது? சொன்னால் புரிந்து கொள்வாளா? முதலில் மூளையை அறுவை சிகிச்சை செய்து பொருத்தி இருப்பதை நம்புவாளா? எப்படி சொல்வது?” சில கணங்களுக்கு முன் காதலாக பார்த்த அவன் கண்கள் யோசனையாக பார்க்க ஆரம்பித்தன.
“நீ சரிப்பட்டு வரமாட்ட” என்றவள் அவளை இழுத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தாள்.
“ஷாலினி என்ன பண்ணுற?” அவளை தடுக்க நினைத்தவனுக்கு அவள் கொடுத்த முத்தம் கூட அந்த நேரத்தில் இதமாகத்தான் இருந்தது. ஆனால் அவள் வெற்றியென்று நினைத்து அல்லவா அவனிடம் அவ்வாறு நடந்துகொள்கின்றாள். வலுக்கட்டாயமாக அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் “இது நம்ம வீடல்ல. அங்க பாரு சீசீடிவி கூட இருக்கு” என்று அறையின் வலது பக்க மேல் மூலையை காட்டினான். 
 ஆக அவனும் தான் மாறன் என்று அவள் முத்தம் கொடுத்தது தவறு என்று கூறவில்லை. முத்தம் கொடுத்த இடம்தான் தவறு என்று பேசினான்.
அதற்கும் அவள் “அதற்குத்தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன். நீதான் கேக்க மாட்டேங்குற. இங்க வச்சு வேணாம்னா வா வீட்டுக்கு போலாம். அன்னைக்கி பாதில விட்டத தொடரலாம்” என்று கண்ணடித்தாள்.
“என்ன இவள் கொஞ்சம் கூட புரிந்துகொள்ளாமல் இப்படி பேசுகின்றாளே” என்று மாறன் பார்க்க
“என்ன ஓகேவா? எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம். நீதான் நான் தனியா இருக்க வேணாம்னு சொன்னியே. நீ அன்னக்கி அப்படி சொன்னது நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு இண்டாரெக்ட்டா கேட்டான்னு நெனச்சேன். அதான் நானே நல்லா யோசிச்சு இந்த முடிவுக்கு வந்துட்டேன். சொல்லு தாலி கட்டிக்கலாமா? இல்ல ரெஜிஸ்டர் மேரேஜா?” ஷாலினி தன் இஷ்டத்துக்கு பேசிக்கொண்டே போனாள்.
“ஷாலு சொன்னா புரிஞ்சிக்க, நான் வெற்றி இல்ல”
“ஆமா… மணிமாறன் என்கிறது உன் ட்வின் பிரதர் ஊட்டில உன் அம்மா கூட இருக்கிறதா சொன்னியே. ஆனா இப்போ நீ அவன் போஸ்டிங்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ஆமா அவன் எங்க?”
“வெற்றிக்கு நான் அம்மாவோடு இருப்பது தெரியுமா? எனக்குதான் வெற்றியை பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அம்மா அவனை பற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை. அவனிடம் அப்பா எங்களை பற்றி எல்லாம் கூறி இருக்கிறார் போலும். அம்மா அவரை வரக் கூடாது என்றதால் வரவில்லையா? அன்று வெற்றியை சந்தித்த பொழுது ஏன் அவன் என்னிடம் இதை பற்றி கூறவில்லை” வெறியின் நினைவில் உழன்றான் மாறன்.
“டேய் என்னடா யோசிக்கிற?” ஷாலினி அவனை உலுக்கும் பொழுதே கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்த ஏட்டு ஆறுமுகம் ராகவேந்திரன் வந்திருப்பதாக கூற, மாறன் அவனை உள்ளே அனுப்புமாறு கூறினான்.
உள்ளே வந்த ராகவேந்திரன் அறிமுகப்படலமெல்லாம் ஆரம்பிக்கவில்லை. நேரடியாகவே “மாலினியை யார் கொலை பண்ணான்” என்று கேட்டான்.
“முதல்ல உக்காருங்க ராகவேந்திரன்” என்றான் மாறன்.
அவன் தோற்றத்தில் பெரிய மாற்றமே நிகழ்ந்திருந்தது. மாலினி இறந்தபின் தினமும் குடித்து கவலையில் கருத்து போனவனா? இவன் என்று யோசிக்கும் அளவுக்கு குளித்து தாடியை கூட ஷேவ் செய்து அழகாக ஆடை அணிந்து வந்திருந்தான்.
“மாமா உங்கள இப்படி பார்க்கத்தான் நல்லா இருக்கு. அக்கா கூட நீங்க இப்படி இருக்கத்தான் ஆசை படுவா” என்றாள் ஷாலினி.
“என் மாலினி ஏன் செத்தா? நான் எதோ தவறு பண்ணிட்டேனோ? அதனாலதான் அவ செத்துட்டாளாணு தினம் தினம் தவிச்சேன். எப்போ அவள யாரோ ஒருத்தன் கொன்னுடதா சார் சொன்னாரோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் அவனை கண்டு பிடிச்சி தூக்குல போட்டா தான் என் மாலின் ஆத்மா சாந்தி அடையும் அதான் உடனே வந்துட்டேன்” ஆவேசமாக பேசினான் ராகவேந்திரன்.
“ரிலேக்ஸ் ராகவேந்திரன். நான் கேக்குற தகவல்களை எனக்கு கொடுங்க நாம மாலினியோட கொலைகாரனை நெருங்கலாம்”
அமைதியான ராகவேந்திரன் “கேளுங்க” என்றான்
“உங்க கூட இருக்குறவங்க எல்லாம் நம்பிக்கையானவங்களா?”
“குறிப்பா நீங்க என் பி.ஏ செல்வமணிய கேக்குறீங்கன்னு புரியுது. அவன் என் பி.ஏ மட்டுமல்ல என் பாடிகார்டும் கூட. நான் யார் கூடையும் ஷெயார் பண்ணாத சில உண்மைகளை சொல்லுறேன். என் கொள்ளுத்தாத்தா ஒரு இங்கிலிஷ்மன். இந்தியா வந்தவரு கொள்ளுப்பாட்டிய விரும்பி கல்யாணம் பண்ணி அங்க கூட்டிகிட்டு போய்ட்டாரு. அவங்களுக்கு ஆறு பசங்க. இந்தியாவோட சொந்தம் விட்டுப் போயிடும்னு அங்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள்ல ரெண்டு குடும்பத்துல ஒரு பையனையும் ஒரு பொண்ணையும் கட்டிக் கொடுத்துட்டாங்க.
என் அம்மாவோட அம்மாதான் அவங்க. என் அப்பா ஒரு இந்தியன்தான். நானும் அண்ணனும்தான். அவன் அங்க இருக்கான். அந்த காலத்துல இருந்தே ட்ரஸ்ட் அமைச்சு ஆனதை ஆசிரமங்களுக்கும், ஊனமான குழந்தைகளுக்கும் உதவி செஞ்சிகிட்டு வரோம். பாட்டியோட அண்ணன் தான் வருவான். நீயும் இதெல்லாம் தெரிஞ்சிக்கடான்னு என்ன இழுத்துக்கொண்டு வந்த நேரம்தான் நான் மாலினியை எதேச்சையா ஒரு சிக்கனல்ல வச்சி பார்த்தேன்.
அப்போ அவ காலேஜ் போய் கிட்டு இருந்தா. அவ படிக்கிற காலேஜுக்கே போய் உதவி செய்யிறேன் எங்குற பேர்ல அவ யாரு என்னனு விசாரிச்சு தெரிஞ்சிகிட்டேன்.
அப்போவே வீட்டுல சொல்லிட்டேன் கட்டினா மாலினியதான் கட்டுவேன். அவளுக்காக ஸ்கூல் கட்டினேன். அவளுக்கு ஷாலினி மட்டும்தான்னு அடிக்கடி சொல்லுவா. என் குடும்பம் ரொம்ப பெருசு. பார்த்தா நீ பிரம்மிச்சு போய்டுவானு சொல்வேன். கடைசி வரைக்கும் எவ்வளவு பெருசுனு நான் சொன்னதும் இல்ல. அவளால பார்க்கவும் முடியல” சோகமானான் ராகவேந்திரன்.
இந்த தகவல் ஷாலினிக்கே அதிர்ச்சிதான். ராகவேந்திரன் அன்பாக பேசுவான். இடத்து ஏற்றது போல் நடந்துகொள்வான். அவனது ஒவ்வொரு செயலிலும் “க்ளாஸ்” என்பது இருக்கும்.
அது வெறுக்க வைக்காமல் கவரும் விதமாக இருப்பதனால் தான் ஷாலினிக்கு அவனை பிடித்துப் போனது. தன் சகோதரிக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைய இருந்திருக்கிறது? அதை நினைக்கையில் உள்ளம் பூரித்தது. யாரோ ஒரு கயவன் அதை பறித்து விட்டான் என்று நியாபகம் வந்த போது உள்ளம் கனன்றது.
“மாறன் என் அக்காவ கொன்னவன சும்மா விடாத அவன என் கையாலேயே கொல்லனும்” கைகளை மடித்தவாறு கோபத்தை வெளிக்காட்டினாள் ஷாலினி.
“அவன் மட்டும் என் கைல கிடைச்சான் சூட் பண்ணிடுவேன்” என்றான் ராகவேந்திரன்.
“அட கொஞ்சம் பொறுங்கப்பா… நான் எதுக்கு இருக்கேன்” அவர்களை தன்புறம் திரும்பியவன் ராகவேந்திரனிடமும் மேலோட்டமாக தான் பார்த்துக் கொண்டிருக்கும் கேஸை பற்றி சொன்னவன் மாலினியின் கேஸும் அதற்குள் அடக்கம் என்றான்.
“பத்தோடு பதினொன்னு என்று விட்டுடாதீங்க சார்”
“பத்தோடு பதினொன்னு எங்குறதாலதான் என்ன மோட்டிவேஷன்னு தேடிகிட்டு இருக்கேன்”
“எல்லாத்தையும் ஹேக் பண்ணவன் உங்க போலீஸ் ஸ்டேஷனையும் ஹேக் பண்ண மாட்டான்னு என்ன சார் நிச்சயம்?”
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாமே  என்ற அர்த்தத்தில் தான் ராகவேந்திரன் கேட்டான்.
“வாரத்துக்கு ஒருக்கா, எல்லா ஸ்டேஷன்லேயும் இருக்குற எலெக்ரிக் ஐட்டம்ஸ், சீசீடிவி உட்பட ஹேக் பண்ண பட்டிருக்கானு செக் பண்ணிடுவோம். டோன்ட் ஒர்ரி” சிரித்தான் மாறன். 
“சார் மாலினி சூசைட் பண்ணிக்கல அவள கொன்னுட்டாங்கனு எப்படி கண்டு பிடிச்சீங்கன்னு என்கிட்டே இன்னும் சொல்லவே இல்லையே” ராகவேந்திரன் ரொம்பவே நிதானத்துக்கு வந்திருந்தான்.
“நான் எங்க கண்டு பிடிச்சேன். எல்லாம் ஷாலுதான் கண்டு பிடிச்சா” என்றவன் மாலினி இடது கை பழக்கமுடையவள் என்றும் அவள் தற்கொலை செய்திருந்தால் அவளது வலது கையை அல்லவா அறுத்துக் கொண்டிருக்க வேண்டும். மாறாக இங்கே இடது கை அறுக்கப் பட்டிருக்கிறது. என்பதை எடுத்துரைக்க,
மாறனின் கூற்றை ஏற்றுக்கொண்டதன் விதமாக தலையசைத்தவன் “எனக்கு தகவல் கிடைக்கும் பொழுதே மாலினி கைய அறுத்துகிட்டு தற்கொலை பண்ணிகிட்டான்னுதான் தகவல் வந்தது. அவ வீட்டுக்கு போனா, அக்கம் பக்கம் உள்ளவங்க என்னாலதான் அவ செத்துட்டான்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதெல்லாம் என்ன யோசிக்க விடாம பண்ணிருச்சு” காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள் அந்த காதலுக்கே ஆபத்து நேர்ந்த பொழுது சிந்திக்க முடியாமல் சோகம் புத்தியை மறைத்திருந்ததை உணர்ந்தான் ராகவேந்திரன்.
ஏட்டு ஆறுமுகம் மீட்டும் வந்து அன்வர் வந்திருப்பதாக கூற மாறன் எழுந்து வெளியே செல்ல போக அன்வர் உள்ளே வந்தான்.
“நா வேணா வெயிட் பண்ணவா?” உள்ளே இருந்தவர்களை பார்த்தவாறே மாறனிடம் கேட்டான் அன்வர்.
“கேஸ் விசயமாத்தான்… நீங்க வாங்க நாம பேசலாம்” என்று அவனை உள்ளே அழைத்தவன் “மிஸ்டர் ராகவேந்திரன் நீங்களும் ஷாலினியும் கொஞ்சம் வைட் பண்ணுறீங்களா? ப்ளீஸ்” ஷாலினியின் பக்கம் திரும்பாமலையே சொன்னான் மாறன்.
ராகவேந்திரன் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு “ஓகே” என்று எழப்போக
“நீங்க இருங்க மாமா” ராகவேந்திரனை தடுத்தவள்  அன்வரை பார்த்த “சார் உங்களுக்கு ஏதும் முக்கியமான வேலையா?” என்று கேட்க,
“முக்கியமான வேல இல்லாம அவர் இங்க வரவும் மாட்டாரு, யாரும் என்ன பார்க்க வரவும் மாட்டாங்க. கொஞ்சம் வெளிய இரு” கோபமே இல்லாத பதில்தான் மாறனிடமிருந்து வந்தது.
“கேஸ் விஷயமா பேசுறதா சொன்னாலும் உங்கள மாறனுக்கு நல்லா தெரியும் போலயே” குறும்பாக சிரித்த அன்வர் மாறனை பார்த்தான்
“கல்யாணம் பண்ண போறோம் சார். அத சொல்ல தயங்குறாரு. அவருக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்” என்றாள் ஷாலினி. பதில் என்னவோ அன்வருக்காக  இருந்தாலும் பார்வை முழுவதும் மாறனின் மீதுதான் இருந்தது.
“ஓஹ்… கங்கிராட்ஸ் மாறன். இது மஞ்சுளாவுக்கு, நந்தகோபாலுக்கும் தெரியுமா?” என்று கேட்டு கிண்டல் வேறு செய்தான். நேற்றிரறவு தானே மாறனின் திருமணத்தை பற்றி பேசினார்கள்.
“யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டான். ஓகே நீங்க உங்க வேலைய பாருங்க நாங்க வெயிட் பண்ணுறோம்” என்று ஷாலினி வெளியே செல்ல இருக்கையை நகர்த்தினாள்.
“இருக்குற பிரச்சினைல இவ வேற புதுசு புதுசா கிளப்புறாளே” மாறன் நொந்தவனாக அவளை பார்க்க,
“ஆமா நீங்க எதோ கேஸ் விஷயமாக வந்ததாக மாறன் சொன்னது?” என்று இருவரையும் ஏறிட்டான் அன்வர்.
மாலினி யார் என்றும் அவள் எப்படி இறந்தாள் என்றும். அது விஷயமாகத்தான் மாறனை சந்திக்க வந்ததாக கூறிய ஷாலினி ராகவேந்திரனையும் அறிமுகப்படுத்தினாள்.
“காலேஜ் பொண்ணுங்களை மட்டும்தான் டாக்கார்ட் பண்ணுறதா நான் நினைச்சுகிட்டு இருந்தேன். இப்போ இந்த கேஸ் ரொம்ப காம்ப்ளிகேடட் ஆகிருச்சு” என்றான் அன்வர்.
“சார் எனக்கு ஒரு சந்தேகம் சொல்லலாமா?” ஷாலினி குறுக்கிட
“சொல்லுமா” என்று அன்வர் சொல்ல, “வில்லங்கமா ஏதாவது சொல்ல போறாளோ” என்று பார்த்தான் மாறன்.
“ஏன் கில்லர் ஒரு லவ் பெய்லியரா இருக்கக் கூடாது. இல்ல. ஒரு பொண்ணால ஏமாற்றப்பட்டவனா? பாதிக்கப்பட்டவனா? இருக்கக் கூடாது. அவன் பார்வைல வெளில தங்கி தனியா இருக்குற பொண்ணுங்க எல்லாம் தப்பானவங்களா இருந்தா? அந்த பொண்ணுங்களைத்தான் அவன் டார்கட் பண்ணுறதா இருந்தா?”
“எத வச்சி அப்படி சொல்லுற?” மாறன் குறுக்கிட
“நான் நிறைய கிரைம் த்ரில்லர் நாவல்ஸ் படிப்பேன். இதோ கொலை எங்குற லிஸ்ட்ல இருக்குற எந்த பெண்களுமே வெளில தங்கள. பூங்குழலி ஹாஸ்ட்டல்ல தான் தங்கி இருக்கா. அது கூட ரூல்ஸ் ஓட, பாதுகாப்பான இடம். தற்கொலை அண்ட் மற்ற கேஸெல்லாம் வெளில தங்கின பெண்கள்” என்றாள் ஷாலினி.
அங்கே இருந்த வெள்ளை பலகையில் ஒட்டி இருந்த புகைபடங்களை காட்டி தான் மாறன் ஷாலினிக்கும், ராகவேந்திரனுக்கும் விளக்கம் கொடுத்தான். அதில் இருந்த சின்ன சின்ன தகவல்களை வைத்தே அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தவள் தனக்கு தோன்றியதை சொல்லி இருந்தாள்.    
“யு ஆர் ரைட் ஷாலினி. மாறன் நாம ஏன் இந்த எங்கில்ல யோசிக்கக் கூடாது” என்றான் அன்வர்.
“எனக்கும் ஷாலினி சொல்லுறது சரினு தோணுது” என்று மாறன் “நம்ம கிட்ட இருக்குற மொத்த கேஸையும் இந்த எங்கில்ல பிரிக்கலாம்” என்றான் மாறன். 
“ஓகே சார் நான் கிளம்புறேன். ஏதாவது இருந்தா எனக்கு போன் பண்ணுங்க. ரொம்ப நாள் கழிச்சி ஸ்கூலுக்கு போறேன்” என்ற ராகவேந்திரன் “ஷாலினி உன்ன டிராப் பண்ணவா? உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்ற ராகவேந்திரனின் பார்வை சொன்னது மாறனை திருமணம் செய்துகொள்ள போவதை பற்றி பேச வேண்டும் என்று.
“நீங்க போங்க மாமா நா அப்பொறம் வந்து உங்கள மீட் பண்ணுறேன். முதல்ல இந்த கல்லூளிமங்கன் கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு வரேன்” ஷாலினி ராகவேந்திரனை அனுப்பி வைத்தாள்.
 அன்வரும் மாறனும் ரொம்ப நேரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஷாலினி வெளியே அமர்ந்து காத்திருந்தாள்.
அன்வர் வெளியேறும் பொழுதே எஸ்,ஐ கௌதம் உள்ளே நுழைந்தான்.
“வாங்க புது மாப்புள. ஹனிமூன் எல்லாம் போயிட்டு வந்தாச்சா?” கிண்டல் தொனியும், இல்லாமல், அக்கறையாய் நலம் விசாரிக்கும் தொனியிலும் இல்லாமல் விசாரிக்க, கௌதமுக்கு மாறன் கோபமாக இருக்கானா என்ற சந்தேகம் எழுந்தது.
மாறனுக்கு சாலியூட் வைத்த எஸ்.ஐ கௌதம் “சாரி சார்” என்று முழிக்க,
“எதுக்குயா சாரி. நமக்கெல்லாம் கல்யாணம் நடக்கிறதே அதிசயம். போலீஸ்காரன் என்றா பொண்ணு கொடுக்க மாட்டேங்குறான்யா?” சிரிக்காமல் சொன்னவன். “கேஸுன்னு வந்துட்டா ராத்திரி, பகல்னு பார்க்காம வேல பாக்குறோம். குடும்பத்தை மறந்துடுறோம். தீபாவளி, பொங்கல்னு குடும்பத்தோட கொண்டாட முடியுதா? கல்யாணமாகி ஹனிமூன்னு பத்துநாள் லீவ் எடுத்தாதான் உண்டு. சரி சரி போ.. போய் வேலைய பாரு”
“சார் வரும் போதே போரன்சிக்கு போய் ரிப்போர்ட் வாங்கிட்டு தான் வந்தேன்” தான் கொண்டு வந்த கோப்பை நீட்டினான்
“இதான்யா உன்கிட்ட எனக்கு பிடிச்சதே” என்றவாறே கோப்பை எடுத்து படிக்கலானான் மாறன்.
கௌதம் பொறுமையாக அங்கேயே இருந்து வெள்ளை பலகையை பார்த்திருந்தான்.
“என்ன கௌதம் நா இல்லாத நேரம் கல்யாணம் பண்ணி லீவ்ல போயிட்ட கேஸ மறந்துட்டியா?”
“அப்படி எல்லாம் இல்ல சார். அப்பத்தாக்கு திடிரென்று உடம்புக்கு முடியல. ஊருக்கு போனா அத்த பொண்ண கட்டி வச்சிட்டாங்க. குலதெய்வ பூஜ, சொந்தகாரங்க வீடுன்னு பத்துநாள் ஓடி போச்சு. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் ஊருல இருந்து எல்லாரும் வந்து இங்க நம்ம குவார்ட்டஸ்ல நான் தங்கி இருக்குற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துட்டு போய்ட்டாங்க. நேத்து முழுநாளும் நம்ம கேஸ்ல என்ன நடக்குதுன்னுதான் ஸ்டடி பண்ணேன் சார்”
“அடப்பாவமே அப்போ நீ ஹனிமூன் போகலையா? அதுசரி கட்டாய கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே உனக்கு உன் அத்த பொண்ண பிடிச்சிருக்கா? அந்த பொண்ணுக்கு உன்ன பிடிச்சிருக்கா? வாழ்க பிரச்சினடா” “எதோ ஒரு கிழவி உசுரு போகப்போகுதுனு இந்த இளசுகளை சேர்த்து வச்சிருச்சு. இதுங்க மனசுல என்ன இருக்கோ?” என்ற எண்ணத்தில்தான் மாறன் கேட்டான்.
“இஷ்டம் இல்லனா தாலி கட்டி இருப்பேனா சார். மணிமேகலைக்கு கல்யாணத்துல விருப்பம் இருந்தாலும் அவ காலேஜ் முடிக்கல. அவ படிப்பு முடியட்டும் அப்பொறம் நம்ம வாழ்க்கையை பார்க்கலாம்னு ஊர்லயே விட்டுட்டு வரலாம்னுதான் பார்த்தேன். அப்பத்தா விடல. சரினு இங்க கூட்டிட்டு வந்துட்டேன். இங்க அவள காலேஜ்ல  சேர்க்கணும்” என்ற கௌதமின் முகம் பொறுப்புக்கள் கூடிய பாவனையை காட்டியது.
“ஒன்றும் பிரச்சினை இல்ல. ஏரியாலயே உள்ள காலேஜ்ல சேர்த்துடலாம். கேஸ் அப்டேட் சொல்லு”
முகம் மலர “அந்த நாலு பொண்ணுங்க வீட்டுலையும் எந்த பிங்கர் ப்ரிண்ட்ஸும் கிடைக்கல. மேபி வந்தவன் கிளவுஸ் போட்டிருந்திருப்பான். இல்லையா சம்பவம் நடந்து ஒருவருஷத்துக்கும் மேல் ஆகுறதனால அழிந்துகூட இருக்கலாம்”
“ஓகே. என்ன பண்ணலாம்?”
“என்னதான் திட்டம் போட்டு கொலை பண்ணாலும் கொலைகாரன் ஏதாவது ஒரு க்ளூவ விட்டுட்டு போவான் ஆனா இந்த கேஸ்ல ஹேக்கிங் சம்பந்த பட்டிருக்கு. சம்பந்தப்பட்ட பொண்ணோட மொபைல் கேமரா  மூலமா வரவனுக்கு அந்த வீட்டோட இன்ச் பை இன்ச் தெரியும். சோ ரொம்ப கவனமா இருப்பான். இன்னொரு கொலை நடந்தாலும் நமக்கு க்ளூ கிடைக்குமா எங்குறது சந்தேகம்தான்”
“பிகோரஸ் அவன் கொலை பண்ணாலும் ரத்தம் சிந்தாம பண்ணுறான். கொலைகாரனோட எதிரியே ரத்தம்தான். அவன் கொலையை தற்கொலையா காட்ட முயற்சி செய்யிறான். எம் ஐ ரைட்?” கௌதம் முடிக்கும் முன் குறிக்கிட்டான் மாறன்
“ரைட் சார்” என்றான் கௌதம்.
“ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு” என்ற மாறன் ஷாலினி சொன்னதை சொல்ல
“வாய்ப்பிருக்கு சார். எல்லா காலேஜுக்கு போய் வெளிய வீடெடுத்து தங்கி இருக்குற பொண்ணுங்கள பத்தி விசாரிக்கிறேன்”
“மூணு நாள் எடுத்துக்க ஒன்னும் பிரச்சினை இல்ல. அதுக்குள்ளே உன் வைப் காலேஜ் வேலையையும் பார்த்துடலாம்”
“ஓகே சார்” மாறனுக்கு சாலியூட் வைத்த கௌதம் இன்முகமாக வெளியேற “ஆறுமுகம்” கத்தினான் மாறன்.
“எனக்கு டீ எடுத்துட்டு வாங்க” உள்ளே வந்தது யார் என்று கூட பார்க்காமல் மாறன் கூற,
“சார் எப்போலா இருந்து டீ சாப்பிட ஆரம்பிச்சீங்க?” என்றாள் ஷாலினி
“நீ இன்னும் கிளம்பலையா?” அதிர்ச்சியாகவே கேட்டான்.
“நாம பேசி தீர்க்க எவ்வளவோ இருக்கு வெற்றி”
“ப்ச் நான்தான் சொன்னேனே ஷாலு நான் வெற்றி இல்லனு” மாறன் வெறுமையாக பேச
பொறுமையாக அவனருகில் வந்து அவன் வலது கையை பிடித்தவள் அவன் அணிந்திருக்கும் பிளாட்டினம் பிரஸ்லட்டை காட்டி “அப்போ நான் கொடுத்த பிரஸ்லட்ட நீ எதுக்கு போட்டுக்கிட்டு இருக்க?” என்று கேட்க
“இது இது இது…” என்ற மாறனுக்கு அதை பற்றிய நியாபகம் சுத்தமாக வரவில்லை.

Advertisement