Advertisement

சூர்யா புருவம் சுருங்க  நின்றிருந்தான்.  ராம்தாஸ் காருக்கு காத்திருந்ததை கவனித்திருந்தானே..? இது நிச்சயம் அண்ணனின் தவறு, டியூட்டியில் இருக்கும் நேரம் முழு விழுப்புடன் இருக்க, இன்று என்னவானது அவனுக்கு..?

சூர்யா இரவு வரை அங்கிருந்துவிட்டு வீடு வந்தான். ராம்தாஸை வீட்டில் விட்டு அண்ணனும் வீடு வந்து விட்டிருந்தான். இரவு உணவு அவனுக்கு எப்போதும் மேலே சென்றுவிடும் என்பதால் அவனை பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் சூர்யா எழவே லேட் ஆனது.

அவன் மனைவி வெளியே செல்ல வேண்டும் என்று காத்திருந்தாள். “இன்னைக்கு ஆபிஸ் போகணும் ஆதிரா..” என்றான் சூர்யா.

“எனக்கு முக்கியமான ஷாப்பிங் இருக்கு சூர்யா..” மனைவியிடம் எடுத்ததும் பிடிவாதம்.

“ஈவினிங் வந்து போலாம், ப்ளீஸ்..” சூர்யா சொல்ல,

“நோ.. நேத்து உங்களுக்கு ஆபிஸ் இல்லையா..? முழு நாளும் ஹாஸ்பிடல்ல இருந்தீங்க இல்லை, நான் கேட்டேனா..?” என்றாள்.

“கேட்டேனான்னு கேட்டுட்டு தான் இருக்க..” சூர்யா சொன்னவன், “ஒரு மீட்டிங் மட்டும் இருக்கு, முடிச்சிட்டு..”

“நோ சூர்யா.. நாம இப்போ போறோம், அவ்வளவு தான்.. கிளம்புங்க..” என்று நின்றாள்.

“சரி.. ஆபிசுக்கு தகவல் சொல்லிடுறேன்..” போன் எடுக்க,

“நானே சொல்லிடுறேன்.. நீங்க குளிக்க போங்க..” தானே அவன் போன் எடுத்து மெசேஜ் செய்ய ஆரம்பித்தாள்.

சூர்யா மூச்சை இழுத்துவிட்டு குளிக்க சென்றான். இந்திராணி சின்ன மகனும், மருமகளும் உணவுக்கு வரும் போது ஆபிஸ் போக கிளம்பி நின்றிருந்தார். “ஷாப்பிங் போய்ட்டு வரோம்மா..” என்றான் மகன் அம்மாவிடம்.

‘மீட்டிங் இருக்குன்னு..’ கேட்க வந்து மருமகளின் முகம் பார்த்து நிறுத்தி கொண்டவர், “சரி.. சாப்பிட்டு போங்க, பத்திரம்..”  என்று இருவருக்கும் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டார்.

சூர்யாவிற்கு இன்னைக்கு நடக்க இருக்கும் மீட்டிங் பற்றியே ஓடி கொண்டிருந்தது. முக்கியமான ஆள் அவர். மற்ற மாநிலங்களில் காபி ஷாப் வைத்திருப்பவர், சென்னை வருகிறார். இங்கு செயின் ஆப் காபி ஷாப் வைக்க கேட்கிறார். கொட்டேஷன் கொடுத்து பேச வேண்டும். செய்தால் நல்ல லாபம். பேரும் கூட. நல்ல வாய்ப்பு.

காவ்யா வேறு இல்லை. மற்ற மூவரும் தான் பேச வேண்டும். அதில் ஒருவனை நம்பலாம், மற்ற இருவர் சந்தேகம் தான். போனில் கைடன்ஸ் கொடுக்கலாம் என்றால் ஆதிரா மொபைலை தர மாட்டேங்கிறாள். உணவு முடித்து காருக்கு வர, “நீ கார் எடு ஆதிரா..” என்று பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஆதிராவும் கார் எடுத்து சிறிது தூரம் செல்ல, அவளின் ஹாண்ட் பேக் எடுத்து அவனின் மொபைலை பார்க்க, அதில் இல்லவே இல்லை. “ஆதிரா என் மொபைல் எங்க..?” சூர்யா கேட்க,

“அச்சோ.. சாப்பிடும் போது டைனிங்கில வைச்சது எடுக்கல, மறந்துட்டேன்..” என்றாள்.

“சரி உன் போன் எடுத்துகிறேன்..” ஆதிரா மறுப்பை கண்டுகொள்ளாமல் எடுத்து கொண்டவன், காவ்யாவிற்கு அழைக்க நினைத்து,  அம்மாவுடன் மருத்துவமனையில் இருப்பாள், தொந்தரவு வேண்டாம் என்று மற்றவனுக்கு அழைத்து பேசினான்.

மீட்டிங் நேரம் இருக்க, போனிலே எப்படி என்று டிஸ்கஷன் ஓடியது. “வீடியோ கால் பத்தி காவ்யா பேசினாடா..” வைக்கும் நேரம் நண்பன் சொன்னான். வீடியோ கால்..? சூர்யா யோசிக்க, ஆதிரா காரை பாண்டிச்சேரி சாலையில் செலுத்தினாள்.

“நீங்க மீட்டிங் முடிச்சிட்டு கூப்பிடுங்க, முடிஞ்ச வரை ரெடி பண்ணியிருக்க கொட்டேஷன் மட்டும் கொடுத்து, இன்னொரு நாள் மீட்டிங் வைச்சு முடிவு பண்ணிக்கலாம்’ன்னு சொல்லி முடிங்க..” என்று வைத்தான்.

“இந்த ரோட் ஏன் ஆதிரா..?” சூர்யா கேட்க,

“சர்ப்ரைஸ்..” என்றாள் மனைவி கண்ணடித்து. சூர்யா அமைதியாகிவிட்டான். பேசியும் பயனில்லையே.

இங்கு காவ்யா சூர்யா வீட்டின் முன் நின்றிருந்தாள். கதவு திறந்திருக்க ஆள் நடமாட்டமே தெரியவில்லை. ‘எங்க போனான்..? மெசேஜ் அனுப்பினேனே..?’ காவ்யா வீட்டுக்குள் வந்தவள், “சூர்யா.. சூர்யா..” என்றாள். சத்தமே இல்லை. போன் எடுத்து அழைக்க, உள்ளே சத்தம் கேட்டது. டேபிளில் போன் இருந்தது.

‘போனை இங்க வைச்சுட்டு எங்க போயிட்டான்..? ஆன்ட்டி, ஆதிரா கூட காணோமே..?’ என்று பார்க்க,  கிட்சன் பின் வாசலில் இருந்து சமையல் செய்பவர்  வந்தார்.

“வாம்மா காவ்யா..” என்றழைத்தவர், சூர்யாவை கேட்க, “வெளியே கிளம்பிட்டாங்களே..” என்றார் அவர்.

‘வீடியோ கால் மீட்டிங் பத்தி மெசேஜ் அனுப்பியும்..’

“காவ்யா.. சாப்பிட உட்காரும்மா..” என்றார் அவர்.

“முக்கியமான மீட்டிங்ண்ணா.. நேரம் ஆச்சு, நான் இங்கிருந்தே அட்டண்ட் பண்றேன்..” என்றாள்.

“செய்ம்மா..” என்றவர் கிட்சன் சென்று காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தார்.

“தேங்ஸ்ண்ணா..” டேபிளில் லேப் எடுத்து அமர்ந்துவிட்டவள்,  ஆபிசுக்கு போன் செய்ய, “இப்போ தான் சூர்யா அவன் வைப் நம்பர்ல இருந்து பேசு வைச்சான்..” என்றனர்.

“சரி.. ஓகே.. நாம பார்த்துக்கலாம்..” என்றவள், மீட்டிங்கில் கவனத்தை வைத்தாள். காலை வரை மீட்டிங் பற்றிய நினைப்பே இல்லாமல், அதன் பின்னே சூர்யாவிற்கு மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

மருத்துவமனையில் இருந்து ஆபிஸ் தொலைவு. மீட்டிங் மட்டும் சூர்யா வீட்டில் அவனுடன் முடித்து திரும்ப மருத்துவமனை செல்ல திட்டம். இப்போது சூர்யா இல்லை.

‘அவன் இல்லன்னா கூட ஓகே, அவன் அண்ணா இல்லாமால் இருக்கிறது தான்  ரொம்ப சந்தோசம்’ காவ்யா நினைத்தபடி மீட்டிங்கை ஆரம்பித்தாள்.

அவள் நினைத்த நேரம் பின்னால் கதவடைக்கும் சத்தத்துடன் கம்பன் இறங்கி வந்தான். “சாமிண்ணா.. டிபன்..” என்று சொல்லி வர,

“ஷ்ஷ்..” என்றாள் இவள் திரும்பி கண்ணை உருட்டி. மீட்டிங் கால்.

‘இங்க தான் இருக்காரா..? கார் பார்க்காம விட்டேனே..?’ கலைந்த கவனத்தை மீட்டிங்கில் வைத்தாள்.

கம்பன் புருவம் சுருங்க அவளை கடந்து டேபிளில் அமர்ந்தான். சாமிண்ணா உணவு வைக்க, வேகமாக சாப்பிட்டு முடித்தான். “தம்பி நான் கடை வரைக்கும் போய்ட்டு வரேன்..” கையில் காபி கொடுத்து சாமிண்ணா கிளம்பினார்.

‘இவளை விட்டு எங்க போறார் இவர்..?’ வாய் திறந்து அழைக்க போக, முன்னால் காவ்யா பேச கூடாதென்ற எச்சரிக்கையுடன்.

‘வர வர ரொம்ப கண்ல படுறா..’ நெற்றியை தேய்த்து கொண்டான்.

‘வீட்ல யாரும் காணோம் போலயே, இவளை மட்டும் தனியா விட்டு எப்படி போக..? வெளியே கார்ட் தான் இருக்கார் இல்லை, நீ கிளம்புடா, போ..’ மூளை விரட்டியது. எழ கால்கள் ஒத்துழைக்கவில்லை. சிறிது சிறிதாக காபியை குடித்து கொண்டே அவள் ஸ்டிக்கர் ஒட்டிய லேப் மேல் கண் வைத்திருந்தான். உடன் அவள் குரலும்.

காபி ஷாப் வடிவமைப்பை பற்றி பேசி கொண்டிருந்தாள். இடையிடையே ஏதோ மெல்லிய சிரிப்பும். எதிர்பக்கம் இருந்தவர் ரசனையான ஆள் போல. பேச்சிலே தெரிந்தது. காவ்யா இங்கு சிரிக்கும் போது, சட்டென  தலைக்கு ஏறிவிட்டது. டேபிளில் தண்ணீர் இல்லை.

கம்பன் நொடி தாமதித்து தண்ணீர் எடுக்க கிட்சன் செல்ல,  “உங்களை யாரோ ரொம்ப தீவிரமா நினைக்கிறாங்க போல..” என்றார் எதிரில் இருந்தவர்.

இருமல் குறைந்து, குரலை செறுமியவள், “ரொம்ப திட்டுறாங்க சார்..” என்றாள் கம்பன் மேல் பார்வை பதித்து.

கம்பன் நீட்டிய டம்ளரை அப்படியே பின்னால் இழுக்க, வேகமாக எட்டி வாங்கி கொண்டவள், முறைப்புடன் குடித்து வைத்தாள்.

“ஓகே.. நாங்க டிஸ்கஷன் முடிச்சுட்டு உங்களை கான்டெக்ட் பண்றோம்..” மீட்டிங் முடிய, காவ்யா லேப் மூடி வைத்தாள்.

கம்பன் மொபைல் எடுத்து எழ, “பாதுகாப்பு தான் கொடுக்க மாட்டீங்க, தண்ணீர் கூடவா..?” என்றாள்.

கம்பன் நிற்காமல் நடந்தான். “அதென்ன எப்போ பேசினாலும் பதில் சொல்லாம இருக்கிறது..? அட்லீஸ்ட் இந்த கேள்விக்காவது பதில் சொல்லுங்க கம்பன் சார்..” என்றாள் எழுந்து நின்று.

அவன் காதில் விழுந்தது போல் கூட காட்டி கொள்ளாமல் வாசலுக்கு செல்ல, “திமிர்.. திமிர்.. உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை திமிர், சூர்யா எப்படி தான் இவரோட பிறந்தானோ..?” காவ்யா திட்டியபடி லேப் பேக் செய்து திரும்ப, அவளுக்கு முன் கம்பன்.  காவ்யா அதிர்ந்துவிட்டாள். வாசலுக்கு போனவர் இங்க எப்படி..? நெஞ்சு படபடவென்றானது.

“இப்படி யாராவது வந்து நிப்பாங்களா..?” என்றாள் அவனிடமே.

“நீ எப்படி வந்த..?” என்று கேட்டான்.

“உங்களுக்கு ஏன் நான் பதில் சொல்லணும்..?” கை கட்டி கேட்டாள்.

“சொல்லணும்..” என்றான் இவன் அழுத்தமாக.

“நீங்க நான் கேட்டா  பதில் சொல்றீங்களா..? இல்லையில்லை, அப்புறம் என்ன என்கிட்ட மட்டும் அதிகாரம்..”” காவ்யா  நிதானமாக கேட்டாள். கம்பன் தலையை கோதி கொண்டான்.

‘எத்தனை நாள் என்னை டென்ஷன் பண்ணியிருப்பார்..’ இவளுக்கு திரும்ப தண்ணீர் வேண்டும் போல இருக்க, கலியான டம்ளருடன் கிட்சன் சென்றாள்.

இவன் புளூ டூத் ஆன் செய்தவன், யாருக்கோ பேசினான். ஏதோ கோர்ட் வோர்ட் போல, மொபைல் பார்த்து கொண்டே பேசினான்.  கம்பன் டென்ஷனில், ‘ஏதாவது  சீரியசான விஷயமா..?’ தண்ணீர் குடித்தபடி வந்தாள்.

பேசி கொண்டிருந்தவன் பார்வை டம்ளரில் இருக்க,  “தண்ணீர் வேண்டுமா..?” என்று டம்ளரை நீட்டி சைகையில் கேட்டாள். கம்பன் டக்கென வாங்கி அதிலே குடித்துவிட்டான்.

காவ்யா அதிர்ந்து விழிக்க, கம்பன் அவள் முகம் பார்த்து தான் செய்ததை உணர்ந்தான். அவள் குடித்து கொண்டிருந்த தண்ணீர்..? போனில் பேசி கொண்டிருந்தவன் பேச்சும் நின்றது.

Advertisement