Advertisement

கம்பன் காதல் கொண்டு 4

“எங்க அவன்..?” பரசுராம் கேட்க,

“இன்னும் வீட்டுக்கு வரலைங்க..” என்றார் இந்திராணி.

“டைம் என்ன..? நைட் எட்டு  ஆக போகுது, இன்னும் வீட்டுக்கு வரல சொல்ற..?” அவர் டென்ஷன் ஆகிவிட்டார்.

“அவனை பத்தி பேசவே எனக்கு விருப்பமில்லைங்க, நீங்க சாப்பிட வாங்க..” என்றார்.

“பிள்ளை இன்னும் வீட்டுக்கு வரலை, நீ அசால்ட்டா பேச விருப்பம் இல்லை சொல்ற, போன் பண்ணியா..?” என்றார் தான் போன் எடுத்து கொண்டே.

“பண்ணாலும் எடுக்க மாட்டான்..” இந்திராணி அமைதியாக சொன்னார். பரசுராம் அழைத்திருக்க, அவன் எடுக்கத்தான் இல்லை.

“சூர்யாக்கு ஏதாவது தெரியுமா..? சூர்யா..” இளைய மகனை அழைத்தார்.

“சொல்லுங்கப்பா..” என்று உடனே வந்தான்.

“அண்ணன் எங்க..?” என்றார்.

“தெரியலைங்கப்பா.. ஒரு வாரமா அவன் சரியில்லை..” என்றான்.

“காலேஜ்ல பார்த்தியா..?” பரசுராம் கேட்க,

“பார்த்தேன்ப்பா.. வேற டிபார்ட்மென்ட் பக்கம், கோவமா இருந்த மாதிரி இருந்தான்..” என்றான்.

“சரி நீ போ..” என்று சின்ன மகனை அனுப்பி விட்டவர், “என்ன இந்திராணி..? உன்கிட்ட ஏதும் சொன்னானா..?” என்றார் மனைவியிடம்.

“அவன் என்கிட்ட பேசுறதில்லை..” இந்திராணி அமைதியாக  சொன்னார்.

“ஏன் பேசுறதில்லை..?” பரசுராம் கேட்க,

“நீங்க அவனை அடிச்ச கோவம்..” என்றார்.

“நான் அடிச்சா உன்கிட்ட பேச மாட்டானாமா..? தப்பு பண்ணான் அடிச்சேன், இதுல துரைக்கு ரோஷம் என்ன..?”

“அவனை பத்தி பேசாதீங்க, என்னால முடியல..”

“இப்படி சொன்னா எப்படி..? இன்னும் எத்தனை நாளைக்கு அவனை அவன் இஷ்டத்துக்கு ஆட விடுறது..?”

“நம்ம சொல் பேச்சு கேட்கிற பிள்ளையா இருந்தா சொல்லலாம்ங்க, இவன்.. ம்ப்ச்.. விடுங்க..” என்றார் மிகவும் சோர்வாக.

“நீ சாப்பிட்டியா..?” பரசுராம் அப்போது தான் மனைவியை கவனித்தார்.

“சூர்யா சாப்பிட வச்சுட்டான், நீங்க உட்காருங்க, நான் தூங்க போகணும்..” என்றார்.

பரசுராமின் போன் ஒலித்தது. எடுத்து பேசியவர் முகம் இறுகி போனது. “காலேஜ்ல இருந்து தான், உடனே வர சொல்றாங்க..” என்றார். சூர்யாவை விட்டு, இருவரும் மட்டும் கிளம்பினர்.

முதல்வர் அறையில் வீராவுடன் இன்னும் சில மாணவர்கள் நின்றிருந்தனர். கைகலப்பு நடந்து முடிந்த அறிகுறி ஒவ்வொருவரிடமும் நன்றாகவே தெரிந்தது. பரசுராம் மட்டுமில்லாமல் வேறு சில பெற்றோர்களும்,  கார்டியனும் வந்திருந்தனர்.

“உட்காருங்க..” என்று அமர வைத்த முதல்வர், “கொஞ்ச நாள் முன்னாடி கேம்பஸ்ல கிரிக்கெட் மேட்ச் நடந்துச்சு, அதை வச்சு ஒரு சண்டை, ஹாஸ்டல் பசங்களோட சேர்ந்து கலாட்டா, இரண்டு டீம் மேலையும் ஆக்ஷன் எடுக்கிறோம், எல்லாம் பத்து நாளைக்கு சஸ்பெண்ட், பைன் கேட்டு கட்டிடுங்க..” ஒரு பெருந்தொகையை சொல்லி முடித்துவிட்டார்.

யாரும் எதுவும் மறுத்து பேசவில்லை. பிள்ளைகளை கூப்பிட்டு கொண்டு கிளம்பிவிட்டனர். பரசுராம் மனைவியுடன் காரில் செல்ல,  மகன் பைக்கில். கைகலப்பில்  அடிபட்டிருந்தான். மருத்துவமனை கூட்டி செல்ல வேண்டும் என்று கூட பெற்றவர்களுக்கு தோன்றவில்லை. மகனும் கேட்கவில்லை. அவர்களுக்கு முன் வீடு சென்று சேர்ந்திருந்தான்.

“ண்ணா என்ன ஆச்சு..?” சூர்யா தான் பதறி போய் அண்ணனிடம் ஓடினான்.

“தண்ணீர் கொடுடா..” வீரா கேட்டு சோபாவில் அமர்ந்தான். சூர்யா கொடுத்தவன், வீட்டில் இருக்கும் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்து வந்தான். மருந்து எடுத்து நீட்டினான். “போட்டு விடுடா..” என்று கண் மூடி சாய்ந்து கொண்டான். அவனுள் இன்னும்  ஒரு நெருப்பு  கனன்று கொண்டே இருந்தது.

சூர்யா சுத்தம் செய்து போட்டுவிட, பெற்றவர்கள் வந்துவிட்டனர். பரசுராம் கோபத்துடன் மகனை நெருங்க, அவரின் கையை பிடித்துவிட்ட இந்திராணி, “முதல்ல சாப்பிடுங்க..” என்றார் கெஞ்சுதலாய்.

பரசுராம் மறுத்து பெரிய மகனிடம் சென்றார். அவருக்கு கோவம் ஒரு பக்கம் என்றால், மகனின் வாழ்க்கை குறித்தான பயம் தான் அதிகம் நெஞ்சை கவ்வியது. செய்த தவறை கூட உணராமல், இவ்வளவு சாதாரணமாக இருக்கும் மகன் அவர் உள்ளத்தில் தீ வைத்தான்.

“மேட்ச் முடிச்சு இத்தனை நாள் கழிச்சு என்ன பிரச்சனை..?” மிகவும் பொறுமையாக கேட்டார். எழுந்துவிட்டான் மகன்.

தள்ளி நின்று கொண்டு, “இனி நடக்காம பார்த்துகிறேன்..” என்றான்.

“என்னை பாருடா..” பரசுராம் அவனை நெருங்கினார். வீரா கைகளை பின்னால் கட்டி கொண்டான். “என்னடா வேணும் உனக்கு..? ஏன் இப்படி உன் வாழ்க்கையை நீயே கெடுத்துகிற..?” ஆதங்கத்துடன் கேட்டார்.

“என் வாழ்க்கையை நான் நிச்சயம் கெடுத்துக்க மாட்டேன்..” என்றான் மகன் உறுதியாய். போராடுவதே என் வாழ்க்கைகாகத்தானே..?

“சஸ்பெண்ட் வாங்கிட்டு கெடுத்துக்க மாட்டேன்னா எப்படி..? நான் என்ன உன்னை படிச்சு கோல்ட் மெடலா வாங்க சொல்றேன், எந்த ஒழுங்கீனமும் செய்யாம பாஸ் ஆகி வெளியே வா போதும்ன்னு தானே சொல்றேன்..” என்றார். மகன் எங்கோ பார்த்தே நின்றான்.

“முதல்ல இந்த டிக் டாக் கருமத்தை விட்டு வெளியே வா..” என்றார்.

“இவருக்காக கராத்தே, ஜுடோ, சிலம்பம், கார்ட் சர்வீஸுக்கான ஸ்பெஷல் ட்ரைனிங் எல்லாம் எடுத்துக்கும் போது எனக்காக எதுவும் செஞ்சுக்க கூடாதா..?” என்றான் அம்மாவை பார்த்து.

“இப்போ மட்டும் என்கிட்ட ஏண்டா பேசுற..?” என்றார் அம்மா.

“சரி தான்.. இனி பேசல, நான் டிக் டாக் விட்டு வெளியே வர மாட்டேன்..” அப்பாவை பார்த்து நேரே சொன்னவன், ரூம் சென்றுவிட்டான்.

“எவ்வளவு தைரியம்..?” பரசுராமிற்கு மட்டுமில்லை, அங்கேயே நின்றிருந்த சூர்யாவுக்கும் தோன்றியது.

‘சஸ்பெண்ட் வாங்கியும் அப்பாகிட்ட இந்தளவு மோசமா நடந்துகிறான், அப்பாவும் அவன்கிட்ட பேசிட்டு இருக்கார்.. அப்படியென்ன அண்ணனுக்கு திமிர், எப்போவும் சண்டைக்கே நிக்கிறான்..?’ தம்பிக்கு அண்ணனின் செயல், பேச்சு எதுவும் பிடிக்கவில்லை.

திமிறி நின்றிருந்த அண்ணனையே பார்த்து பழக்கப்பட்டவனுக்கு, முதல் முறை காவ்யா முன் இப்படி நிற்பவனை கண்டால்  சந்தேகம் தோன்றாமல் இருக்குமா..?

இன்று காலை  காவ்யா அம்மா ஆக்சிடென்ட், ஹாஸ்பிடல் வரச்சொல்லி கேட்க மறுத்துவிட்டான். இப்போது ராம் தாஸுடன் வந்தவன், கிடைக்கும் பிஸினஸை விட்டு, ஐடியா சொல்கிறான். போதாதற்கு காவ்யா கேள்வி கேட்டால், நீ யார் என்கிட்ட கேள்வி கேட்க..? என்று கேட்பான் என்று பார்த்தால், இவனோ சிறு கோபத்தையும் காட்டாமல், மொபைல் எடுத்து குனிந்து நிற்கிறான்.

‘என்ன, என்ன நடக்கிறது..? ஏதும் பிரச்சனையா..? இவன் இப்படி நிற்கும் ஆள் கிடையாதே..?’

“உங்களை தான் கேட்கிறேன்..? எங்களுக்கு கார்ட்ஸ் கொடுக்க என்ன கஷ்டம் உங்களுக்கு..?” காவ்யா திரும்ப கேட்டாள்.

“காவ்யா.. விடு..” சூர்யா அவளை தடுத்தான்.

“உனக்கு தெரியாதுடா, நான் இவர்கிட்ட ஆக்சிடென்ட் நடக்க முன்னாடியே கேட்டேன், இவர் மாட்டேன்னுட்டார், இன்னைக்கு என் அம்மாக்கு ஏதாவது பெருசா ஆகியிருந்தா..” காவ்யாக்கு கண்ணீர் தேங்க, சிமிட்டி நிறுத்தியவள்,

“உங்க வேலை என்ன ப்ரொடெக்ஷன் கேட்கிறவங்களுக்கு ப்ரொடெக்ஷ்ன்  கொடுக்கிறது தானே..? அதென்ன ஆள் பார்த்து முடியாது சொல்றது..? செய்ற தொழில்ல கூட ஒழுங்கா செய்ய மாட்டிங்களா..? உயிர் சம்மந்தப்பட்ட வேலையில இருந்திட்டு இதென்ன அலட்சியம், மெத்தன தனம்..? ஹலோ உங்களை தான் கேட்கிறேன், என்னை பார்த்து பதில் சொல்லுங்க.. நிமிருங்க மிஸ்டர் கம்பன்..” காவ்யாவிடம் கோவம் கூடியது.

“காவ்யா.. ரிலாக்ஸ்..”  சூர்யா அவளை கண்ட்ரோல் செய்தான். அண்ணனின் தாடை இறுகுவதை கண்டு கொண்டான். கை பிடித்து தள்ளி கூட்டி சென்றான். அவன் திரும்பி காவ்யாவிடம் கோவப்பட்டால் நிச்சயம் நான் பொறுத்து கொள்ள மாட்டேன், மருத்துவமனையில் வைத்து இது எல்லாம் வேண்டாம் என்று நினைத்தான்.

“விடு சூர்யா.. உங்க அண்ணாக்கு ரொம்ப திமிர், யார் நம்மளை கேட்கிறதுன்னு இருக்காங்க..” காவ்யா குரல் தேய்ந்து போனது. கம்பன் நிமிர்ந்து பார்த்தான். சூர்யா அவளை வெளியே அழைத்து சென்று கொண்டிருந்தான்.

ராம்தாஸும், வாசுதேவனும் பேசியபடி வந்தனர். “கிளம்பலாம்  வீரா..” என்றவர், “ஏதா இருந்தாலும் பார்த்துக்கலாம் சார், தைரியமா இருங்க..” என்று கைகுலுக்கி விடைபெற்றார்.

ராம்தாஸ் முன்னே செல்ல, வாசுதேவனிடம் தலை கூட அசைக்காமல் வீரா பின் தொடர்ந்தான். வெளியே வருகிறோம் என்று உடன் வந்த அவனின் டீமுக்கு  ஆர்டர் கூட  கொடுக்கவில்லை. கான்பிடன்ஷியல் ஆட்களை மீட் செய்யும் போது, அங்கு நடக்கும் பேச்சு அவன் டீம் ஆட்களுக்கு கூட தெரிய கூடாது என்பதாலே புளூ டூத்தும் அணைத்து வைத்திருந்தான்.

“வீரா கார் எங்க..?” ராம்தாஸ் கேட்க, இருக்கும் இடம் உணர்ந்து கண்களை மூடி திறந்தவன், புளூடூத்தில் கார் எடுத்து வர சொன்னான்.

“என்னடா ஆச்சு உனக்கு..?” ராம்தாஸ் கேட்டுவிட்டார். முதல் முறை இப்படி வேலையில்.

“சாரி சார்..” என்றான். அவனுக்கே பாதுகாப்பு சம்மந்தப்பட்ட வேலையில் சிறு குறையும் ஏற்று கொள்ள முடியாது.

“விடு.. வாசுதேவனுக்கு ஏன் கார்ட்ஸ் கொடுக்க மாட்டேன்னு நிக்கிற..?” என்று கேட்டார் ராம்தாஸ்.

“அங்க சொன்ன ரீசன் தான் சார்..” என்றான் வீரா.

“அப்படியா..? அவர் பொண்ணு உன்கிட்ட ஏன் கோவமா பேசிட்டிருந்தா..?” அவர் மேலும் கேட்டார்.

“பெர்சனல் சார்..” முடித்துவிட்டான். காரும் வந்துவிட்டது. சூர்யா, காவ்யா இருவரும் பார்த்து கொண்டே இருக்க, வீரா இருந்த கார் அவர்களை கடந்தது. ராம்தாஸ் கண்கள் காவ்யாவை தொட்டு சென்றது.

Advertisement