Advertisement

அவர் அவனுக்கு வழிவிட, கம்பன் தள்ளாடிய கால்களை இழுத்து கொண்டு சென்று பெட்டில் விழுந்தான். ‘எப்படி என்னை வீட்ல விட்டார்..?’ கேள்வியோடு போதையில் தூங்கி போனான்.

அடுத்த நாள் வெடிக்கும் தலை வலியுடன் கண் விழித்தான். இரவு நடந்தது நினைவிற்கு வர, பட்டென மொத்த தூக்கத்தையும் விரட்டியது ‘எப்போ ஊர்ல இருந்து வந்தார்..?’ வீட்டில் சத்தம் கேட்கவில்லை. நேரம் பார்க்க மணி காலை பத்து. அம்மா, தம்பி கிளம்பியிருப்பார்கள்.

வெடிக்கும் தலை வலியுடன் குளித்து வந்தான். ‘இவர் நிச்சயம் இருப்பார்..’ உள்ளுணர்வு சொல்லி கொண்டே இருந்தது. வயதின் திமிர், தைரியம் எல்லாம் கண்ணாமூச்சி ஆடியது. ஆளை கொல்லும் தலைவலியை விட, அப்பாவின் இருப்பே பிரதானம். கட்டிலில் அமர்ந்தான். மேலும் நேரம் சென்று கதவை திறந்து வெளியே வந்தான்.

சோபாவில் அவனை எதிர்பார்த்து கை காட்டி நிமிர்ந்து அமர்ந்திருந்தார் பரசுராம். கால்கள் நின்றது. முகத்தை வேறு பக்கம் திருப்பினான். அவனின் பெரிய பிரச்சனை இவர் மட்டுமே. அதிகம் ஈகோ பார்ப்பான். அவர் எதிரில் வந்தால் வேறு திசையில் செல்லுமளவு விலகல். பேசியே பல மாதங்கள். பேசும் தேவையும் இருப்பதில்லை. எல்லாம் அம்மா மூலம் சாதித்து கொள்வான்.

இப்போது இவர் முன் இப்படி..? அறவே பிடிக்கவில்லை. நேற்று ஜெயித்தது,  டிக்டாக் பாலோயர்ஸ், நண்பர்கள் சொன்னது என்பதை விட அவனின் ரகசிய மகிழ்ச்சி அவனை கட்டுப்பாட்டை உடைக்க வைத்திருந்தது. அதை கொண்டாடி பார்க்க பேராவல். அவனுள் ஆர்ப்பாட்டமாக அந்த நிமிடங்களை ஆராதிக்க வேண்டும். அந்த மகிழ்ச்சி போதையுடன் இந்த போதையும் இருந்தால்..? நினைவே தித்திக்க குடித்திருந்தான்.

இப்போது அப்பா முன்.. பரசுராம் எழுந்தார். இவன் அருகில் வந்தார். கடந்து ரூம் சென்றார். கம்பனுக்கு புரிந்து போனது. உடல் இறுக நின்றான்.  தடியான மூங்கில் கம்புடன் வந்தார்.  கம்பன் முகத்தில் ஒரு கோவம். கண்ணாமூச்சி ஆடிய திமிர், தைரியம் திரும்ப அவனுள் நிறைந்தது. நிமிர்ந்து நின்றான். அப்பாவை பார்த்தான்.

“போதை கேட்குது இல்லை..” என்றார் தந்தை. வாயே திறக்கவில்லை. மன்னிப்பு கூட கேட்கா மகன் அவரை வைதைத்தான். அவ்வளவு திமிரா இவனுக்கு..? அவரின் கம்பு சுரீரென உடலில் இறங்கியது. இதனுடன் இரண்டாவது முறை. கம்பன் கைகளை பின்னால் கட்டி கொண்டான். உடல் அளவுக்கு அதிகமாக விறைத்தது.

“நேத்து போதையில அடிச்சிருந்தா ஒன்னும் தெரிஞ்சிருக்காது..” தொடர்ந்து அடி விழுக,  சிறிதும் நகராமல், வலிக்கு சத்தமில்லாமல் அழுத்தமாக நிற்கும் மகன் பரசுராமனின் வேகத்தை கூட்டினான். அடுத்தடுத்த அடி படபடவென விழுந்தது. எங்கு விழுந்தது, விழுகிறது என்று உணர முடியா அளவு மின்னல் வேகத்தில் உடலில் இறங்கியது. பல இடங்களில் ரத்தம் கசிந்தது. பல்லை கடித்த அவன் தாடைகள் அவனின் வலி அளவை சொன்னது.

ஒரு கட்டத்தில் ஓய்ந்த கைகளில் முறிந்த கம்பை தூக்கி எறிந்தார். பாட்டில் தண்ணீரை குடித்தார். மகன் அப்படியே நின்றிருந்தான்.   ‘இன்னும் கூட  அடிச்சுக்கோ..’ அவன் நகரவில்லை. அவன் உடலின் ஜாட்டைகள் இவரின் தொண்டை குழியை இறுக்கியது.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே இருவருக்கும் இடைவெளி வந்துவிட்டது. விளையாட செல்லாத, படி என்றால் கோவம். “உங்களுக்கு என்ன நான் மார்க் வாங்கணும் அவ்வளவு தானே, அதோட விடுங்க, இதை எல்லாம் கேட்காதீங்க..”  என்றான் மகன்.

நண்பர்களுடன் நேரம் காலம் பார்க்காமல் அரட்டை, குரூப் ஸ்டடி என்று வீட்டில் வேறு கும்மாளம். இந்திராணி மிஞ்சும் மகனை கையாள தெரியாமல் முழித்தார். சூர்யா சந்தேகம் கேட்டால், உதவி கேட்டால் போடா என்று போய் விடுவான். டியூஷன் என்று அங்கும் ஆட்டம்.

பனிரெண்டாம் வகுப்பு மார்க் அவசியம் என்று பரசுராம் பல்லை கடித்து பொறுத்தவர், பனிரெண்டாம் வகுப்பில் மார்க் குறைந்த போது, முதல் முறை மொத்ததுக்கும் சேர்த்து வைத்து இப்படி தான் வெளுத்தார்.

“சம்பாதிக்கிற பணம் யாருக்கு, எனக்கு இந்த காலேஜ், இந்த டிபார்ட்மெண்ட் தான் வேணும்..” அடியும் வாங்கி கொண்டு சொல்லி சென்றான்.

அந்த தனியார் கல்லூரி சேர்ந்து அவனை போலவே நண்பர்கள் கிடைக்க இன்னும் இன்னும் விரோதம், வெறுப்பு. அப்பாவின் எந்த வார்த்தையும் மகனுக்கு பிடிக்கவில்லை. அவர் அறிவுரை வேம்பாக கசந்தது.

“எங்கு எப்படி தவறவிட்டேன்..?” அப்பாவின் இத்தனை வருட கேள்வி பதிலில்லை. ‘இதுவரை இரண்டு முறை அடித்துவிட்டேன். மகனை வெறுத்துவிடுவோமா..?’ அவருக்கே பயமாக இருந்தது.

ஒருவாரமாக இரவு பகல் பாராமல் உடல் நோக ராம்தாஸ் தந்தைக்கு காவல் இருந்து காத்து கொண்டு வந்து அவர் வீடு சேர்ந்திருந்தார். இவரும் இரண்டு நாள் ஓய்வு குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கலாம் என்று வந்தால் முதல் நாளே இப்படி..?

அவ்வளவு அடி வாங்கியும் அவரிடம் திமிராக நிற்கும் மகன் சோர்வடைய வைத்தான். அப்பாவாக நீ தோற்றாய் என்று அவன் நிமிர்ந்து இவரை குறுக வைத்தான். மகனிடம் இவர் எப்படி தோற்பார்..? உன் அப்பாடா நான்..? அவனுக்கு மேல் நிமிர்ந்து நின்றவர், “இனி தொடுவியா..?” கடுமையாக கேட்டார்.

“உங்ககிட்ட இப்படி நிற்க கூடாதுங்கிறதுகாகவே நான் இனி அதை தொட மாட்டேன்..” என்றான் மகன். எவ்வளவு திமிர்.. அத்தனை ஆத்திரம் அப்பாவிற்கு. மன்னிப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை இதென்ன..? பொறுத்து கொள்ளவே முடியவில்லை. இரும்பான கை அதன் பலத்தை அவன் கன்னத்தில் இறக்கி உதட்டை கிழித்தது.

“ஸ்ஸ்ஸ்..” உதட்டை தொட்டு அந்த ரத்தத்தை உணர, அங்கு ரத்தமே இல்லை. எப்படி காணாம போச்சு..? நன்றாக தடவ, எங்கும் இல்லை. ‘ஏன் இருட்டா இருக்கு, மயங்கிட்டேனா..?’ கண்களை திறந்து பார்த்த கம்பன் கண்ணோரம் கண்ணீர் தடம். அப்போது தான் கனவு என்று புரிந்தது.

திரும்ப இறுக கண்களை மூடி கொண்டான். நடந்தது எல்லாம் கனவாக மட்டுமே மிச்சம். நினைத்து பார்க்கவே அவசியம் இல்லாமல், கனவுகளே அவனை ஒவ்வொரு நாளையும் திரும்பி பார்க்க வைத்து கொண்டிருந்தது. இனி எவ்வளவு கண் மூடினாலும் கனவு வராது. எழுந்து குளித்து வந்தான்.

சரியாக போன் ஒலித்தது. சூர்யா. இவன் ஏன்..? “*** ஹாஸ்பிடல் வா..” என்றான் அவன்.

“ஏன்..? யாருக்கு என்ன..?” என்றான் கம்பன். இவன் குடும்பத்தில் என்றால் இவனுக்கு தெரியாமல் எப்படி..? வெளியே என்றால்..? அவள்..? நொடிக்கும் குறைவாக புரிந்து போனது.

“காவ்யா அப்பா உன்னை பார்க்க கேட்டார்..” என்றான் சூர்யா.

“இப்போ முடியாது.. ஈவினிங் வரேன்..” என்றான் கம்பன்.

“காவ்யா அம்மாக்கு ஆக்சிடென்ட்.. அர்ஜென்ட், வா..” என்று நின்றான் சூர்யா.

“எனக்கு இப்போ ராம்தாஸ் சார் டியூட்டி, வாய்ப்பில்லை..”

“இது பிளான் பண்ணி பண்ண ஆக்சிடென்ட், அடுத்து காவ்யாக்கு சொல்றாங்க..” சூர்யா சொல்ல சொல்ல இவன் வைத்தேவிட்டான்.

நேரே உணவு முடித்து, ராம்தாஸை பார்க்க சென்றான். மீட்டிங் கிளம்பினர். மாலை ஆனது. “வாசுதேவன் வைப்க்கு ஆக்சிடென்ட்டாம் வீரா, *** ஹாஸ்பிடல் போகலாம்..” என்றார் ராம்தாஸ். கம்பன் முகத்தில் விருப்பமின்மை. வேறு வழி இல்லை.

அவருடன் செல்ல, சூர்யா இவனை முறைத்து பார்த்து நின்றிருந்தான். காவ்யா இவன் வரவும் முகம் திருப்பி கொண்டாள். உதவி கேட்டும் செய்யாமல் என் அம்மாவிற்கு விபத்து நடக்க விட்டுவிட்டானே..? என்ன மனிதன் இவன்..? வெறுப்பு கூடியது.

நலம் விசாரித்து முடிக்க, “வீரா.. உங்ககிட்ட பேசணும் இருந்தேன்..” என்றார் வாசுதேவன். காவ்யா அந்த போன் பற்றி சொன்னதை இவரும் சொல்லி, “கார்ட்ஸ்  வேணும்..” என்று கேட்டார்.

“எஸ் வீரா.. முக்கியமா அம்மா, காவ்யாக்கு கண்டிப்பா வேணும்..” என்றான் சஞ்சய். காவ்யாவின் அண்ணன்.

‘இப்போ என்ன சொல்ல போற..?’ காவ்யா, சூர்யா பார்த்து நின்றனர். அவன் தான் வந்ததில் இருந்து இவர்கள் பக்கமே திரும்பவில்லையே.

“சார்.. பாதுகாப்பு எனக்கு தெரிஞ்சு அவசியமில்லை. இது ஏதோ லோக்கல் கேங்க் தான், ஒரு மணி நேரத்துல கண்டுபிடிச்சுடலாம்..” என்றான் கம்பன்.

“இல்லை வீரா.. அப்படி நினைச்சு தான் இந்த ஆக்சிடென்ட், நாங்க எடுத்திருக்கிருக்கிற வேலையும், சஞ்சய் கேசும் ரொம்ப சென்சிடிவ் தான், நாம கார்ட்ஸ் போட்டுடலாம்..” என்றார் வாசுதேவன்.

“லோக்கல் ஆளுங்க தான் இன்னும் போன், பயம் காட்டுறதுன்னு இருப்பானுங்க சார், ஈஸியா தூக்கிடலாம்..” என்றான் இவன்.

“வீரா.. ஏன் வீரா, நம்ம வாசுதேவனுக்கு செய்ய என்ன..? செய்..” என்றார் ராம்தாஸ்.

“நான் அவங்களுக்காக தான் சொன்னேன் சார், இந்த லோக்கல் ரவுடிங்களுக்கு எல்லாம் பயந்து கார்ட்ஸ் போட்டா,  நாளைக்கு மத்தவனும் இதையே பண்ணுவான், அடுத்தடுத்து கேஸ் எடுக்கும் போதும் நாம இதையே ரிப்பீட் பண்ணனும், புதுசா  கார்ட்ஸ் போடும் போது வெளியே பேச்சாகும், ஆகாதவங்க கண்ணுல படும், யோசிப்பாங்க, பெட்டர் இதை எல்லாம் விட்டு, கூண்டோட அந்த கூட்டத்தை தூக்கி அடிச்சுட்டா நாளைக்கு நம்மகிட்ட நெருங்க எவனும் யோசிப்பான்..? பயப்படுவான். பணத்தை விட  நம்ம பவர் நம்மளை பாதுகாக்காம எப்படி சார்..?” என்றான் சஞ்சயை பார்த்து.

“இல்லை வீரா..” வாசுதேவன் பேச வர,

“வீரா சொல்றது கரெக்ட்ப்பா.. நான் யாருன்னு விசாரிச்சு இன்னைக்குள்ள அதை முடிக்கிறேன்..” சஞ்சய் கமிஷ்னரை பார்க்க கிளம்பிவிட்டான். போகும் போது காவ்யா போனும் எடுத்து கொண்டு சென்றான். வாசுதேவன் முகம் தெளியாமல் இருக்க, ராம்தாஸ் அவரிடம் பேசினார்.

“அப்படியென்ன எங்களுக்கு செய்ய கூடாதுன்னு..” காவ்யா நேரே கம்பனிடம் கேட்டாள்.

‘எக்காரணத்தை முன்னிட்டும் உன் முன்னாடி வர கூடாதுன்னு தான், கிளியர் கட்..’ கம்பன் மொபைல் எடுத்து குனிந்து கொண்டான்.

பதிலே இல்லாமல் மொபைலில் இருந்தவனை சூர்யா கூர்மையாக பார்த்தான். என் அண்ணனா இது..? முதல் சந்தேகம்.

Advertisement