Advertisement

கம்பன் காதல் கொண்டு 3

“சிக்ஸ்.. சிக்ஸ்.. வீ நீட் சிக்ஸ்.. வீ நீட் சிக்ஸ்..”

“விட்டுடதடா.. பால் பறக்கணும். ஜெயிக்கிறோம்.. சீனியர் நம்ம டிபார்ட்மென்ட் கெத்து உங்க கையில தான்.. சிக்ஸ் வேணும்.. சிக்ஸ் வேணும்..” ஆணும், பெண்ணும் கலந்து அப்படி ஒரு கத்தல்.

சென்னையின் புகழ் பெற்ற அந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரி கிரவுண்ட் அன்று அதகளம் பட்டது. இரண்டு வில்லங்கமான கேங்க்  மோதி கொண்டது. அந்த கல்லூரிக்கு இவர்கள் தான் இந்தியா.. பாகிஸ்தான். இவர்களின் மேட்ச் அன்று பரபரப்பும் அப்படி தான் இருக்கும்.

இந்த வருடம் மட்டும் இல்லை வருடா வருடம் நடக்கும் கூத்து இது. வழி வழியாக அந்த பகை மறைவதில்லை. சீனியர்கள் ஜுனியர்களுக்கு கொடுத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இந்த வருடமும் மொத்த கல்லூரியும் குவிந்திருக்க, எல்லார் முகத்திலும் டென்ஷன்.

ஒரு டிபார்ட்மென்ட் மட்டும் ஒரு அணி, மற்ற சில டிபார்ட்மென்ட் சேர்ந்து மற்றொரு அணி.  தீ பற்றி கொண்ட சூடு எங்கும். பேட் பிடித்து நின்றிருந்தவன் முகத்தில் வேர்வை வழிய, கண்கள் கூர்மையாக கிரவுண்டை அலசியது. இன்னும் மூன்று பால்கள் மட்டுமே உள்ளது. ஆறு ரன் வேண்டும்.

எப்படி எப்படி..? கண்களை சிமிட்டி வாரும் பால் நோக்கி நின்றான். பாலும் வந்தது. ஆனால் அடிக்க முடியவில்லை. இன்னும் இரண்டு பால். கத்திய கூட்டம் சில நொடி, ‘ஹோ..’ என்று அதிருப்தியில் அமைதியாகி,  திரும்ப உற்சாகப்படுத்தியது.

“டேய் டென்சன் ஆகாத.. ரிலாக்ஸா ஆடு..” இன்னொரு பேட்ஸ் மேன் எதிரில் நின்று கத்தினான்.

“ஊப்.. ஊப்..” காற்றை வாய் வழி ஊதி பேட் பிடித்து நின்றான். இந்த முறை பாலை தொட கூட இல்லை. கிரவுண்ட் டென்ஷன் ஆனது.

“டேய் ம*று என்னடா பண்ற..?” எதிரில் உள்ள பேட்ஸ் மேன் கத்தினான். பவுலர் உதடுகளில் ஒரு சீண்டலான சிரிப்பு. “நீ வந்து பு*ங்கு பாரு, அப்போ புரியும்..” இவன் அந்த சீண்டலான சிரிப்பில் காண்டாகி இங்கிருந்து கத்தினான்.

“ஹூஹூஹூ..” மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் ஊத ஆரம்பித்தது. தெரிந்துவிட்டது எந்த டீம் ஜெயிக்கும் என்று. கல்லூரி நிர்வாகம் அடுத்து எந்த அசம்பாவிதம் நடந்துவிட கூடாது என்பதில் ஆட்களை அங்கங்கு நிறுத்தினர்.

முதல்வர் அவர் அறையில் இருந்து மேட்ச் பார்த்து கட்டளைகள் பிறப்பித்தார். “மெக்கானிக்கல் தோத்தாலும் பிரச்சனை பண்ணுவானுங்க, ஜெயிச்சாலும் பிரச்சனை பண்ணுவானுங்க. உங்க எல்லார் கண்ணும் அவங்க மேல தான் இருக்கணும்..” செக்கியூரிட்டிகளுக்கு உத்தரவு கண்டிப்புடன் வந்தது.

கடைசி பால். அவ்வளவு அமைதி. பவுலர் போட தயாராக, “மச்சி அவன் தலையில பாலை இறக்கி மேட்சை முடிச்சு விடுடா..” ஒரு குரல் கத்தியது.

“இறக்கிடலாமா..?” பதட்டத்துடன் நின்றிருந்த பேட்ஸ் மேனை பார்த்து புருவம் தூக்கினான் ‘கம்பன் வீரய்யன்..’

அவன் இன்னும் டென்ஷன் ஆனான். “பேட்ஸ் மேனுக்கு தண்ணீர் கொடுங்க..” என்றான் பால் போடாமல். நாம தோற்க போறோம்.. அத்தனை பேர் மனதிலும் புரிந்துவிட்டது. அந்த தோல்வியை கூட சீக்கிரம் கொடுத்து விட கூடாது என்பதில் நின்றான் கம்பன்.

“தண்ணீர் எடுத்துட்டு போய் கொடுங்கடா, இவன் வேணும்ன்னே பண்றான்..?” குரல் ஒலித்தது. பேட்ஸ் மேன் குடித்து நிற்க, கம்பன் தயாரானான். ‘முடிஞ்சா தொட்டு பார்..’ சவாலான பார்வையில், பால் போட்டான். பாலும் சவாலாகவே  பறந்து வந்தது. பேட்ஸ்மேன் விட கூடாது என்று தீவிரமாக பேட்டை தூக்க, பால் பேட்டிலே படாமல் மின்னலாக சென்றுவிட்டது.

‘தெரியும்டா..’ கம்பன் பேட்ஸ் மேனை பார்த்து திமிராக சிரித்தான். கடைசி வரை அவர்களை பதட்டத்திலே  வைக்க தானே இப்படி..?

“மச்சான்..” என்று டீம் மெட்ஸ் அவனை தூக்கி போட்டு பிடித்தனர். ஒட்டு மொத்த மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டும் கிரவுண்டில் இறங்கிவிட்டது. எதிர் டீமை வேகமாக செக்கியூரிட்டிகள்  கிரவுண்டை விட்டு வெளியே அனுப்பினர். மற்ற ஸ்டூடன்ட்ஸ்ஸையும் கிளப்பிவிட்டனர்.

“பிரச்சனை பண்ண ஆள் இருந்தா தானேடா பண்ணுவீங்க..” கல்லூரி நிர்வாகத்தின் ட்ரிக்ஸ் இது. அதிகம் பணம் படைத்தவர்கள். பெரிதாக ஆக்க்ஷன் எடுத்துவிட முடியாது.

“மச்சி கலக்கிட்ட.. பங்காளி யூ ராக்ஸ்டா.. சித்தப்பூ எதிர் டீமுக்கு வச்சுட்டியே ஆப்பு.. மெக்கானிக்கல் கிங்க்ஸ்ன்னா சும்மாவா..  ஹேய்.. ஹோ.. ஹேய்.. ஹோ..” வெற்றி கத்தல் எங்கும் எதிரொலித்தது. அவ்வளவு ஆர்ப்பாட்டம்.

செக்கியூரிட்டிகள் அவர்களை அப்புறப்படுத்தலாமா என்று பார்க்க, கிட்ட நெருங்கி பார்.. பார்வைகளில் அத்தனை செருக்குடன் குதித்து கொண்டிருந்தனர். எதிர்  டீம் அவரவர் உடமைகளை எடுத்து கொண்டு கிரவுண்டை விட்டு வெளியேற,  கூச்சல் வானை பிளந்தது. அணிந்து கொண்டிருந்த ஜெர்சியை கழட்டி தலைக்கு மேல் சுற்றி வீசினர். ஜெர்சி அந்த கூட்டத்தை நோக்கி பறந்து சென்று விழுக, அவர்கள் நின்று முறைத்தனர்.

“என்னங்கடா..” காத்திருந்தவர்கள் உடனே எகிறி கொண்டு முன்னேறினர். செக்கியூரிட்டிகள் அந்த டீமை இழுத்து கொண்டு சென்றனர்.

“டேய் இவனுங்களை விடுங்கடா.. நம்ம மச்சிக்கு கொஞ்ச நேரத்துல பாலோயர்ஸ் பிச்சுகிச்சு..” என்று நண்பன் ஒருவன் ஓடி வந்து சொல்ல, இன்னும் உற்சாக கத்தல் காதுகளை செவிடாக்கிவிட்டது.

கம்பன் வீரய்யன்.. வீரா ராயல் மெக்.. டிக்டாக் பிரபலம். மில்லியன் பாலோயர்ஸ் சற்று முன். இரட்டிப்பு ஆர்ப்பாட்டம்.

இவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தோல்வி பெற்ற வருத்தத்தில் செல்ல, “உங்க அண்ணாவை விஷ் பண்ணலாமா..?” என்று கேட்டான் சூர்யாவின் நண்பன்.

அதே கல்லூரியில் படிக்கும் கம்பனின் தம்பி சூர்யா. முதல் வருடம். அவனின் பள்ளி கூட நண்பர்கள் ஐவரில் இவனும், காவ்யாவும் ஆர்கிடெக், இருவர் சிவில். ஒருவன் எலக்ட்ரிக்கல் என்று இருந்தனர்.

“டேய் நம்ம சீனியர்ஸ் பார்த்தா கொன்னுடுவாங்க..” ஒருவன் மிரண்டு சொன்னான்.

“ஆமா.. நாம தனியா வீட்டுக்கு போகும் போது விஷ் பண்ணிக்கலாம்..” மற்றவன் சொல்ல,

“எப்போவும் வேண்டாம், வேலையை பாருங்கடா..” என்றான் சூர்யா.

“டேய்.. ஏண்டா..” ஒருவன் கேட்க,

“சூர்யாவை வச்சு தான் அவர் அண்ணா. அவனே வேணாம் சொல்லும் போது உங்களுக்கு என்னங்கடா..” என்றாள் காவ்யா.

“சரிதான்..” என்று ஐவரும் அவரவர் வழி பார்த்து வீடு செல்ல, இங்கு கொண்டாட்டம் நீண்டு, ஒரு வழியாக கிளம்பினர். கம்பன், அவனின் நண்பர்கள் மட்டும் வீடு செல்லாமல், ரெஸ்டோ பார் சென்றனர். அங்கு உணவுடன், ஆல்கஹாலும் கிடைக்கும்.

பார் ஒருவனின் அப்பாவிற்கு சொந்தமானது. பணம் கொடுத்து சீட் வாங்கிய கூட்டம். கம்பன் உட்பட. படிப்பில் பாஸ் மட்டுமே எதிர்பார்க்க முடியும். அப்பாக்கள் பணம் இவர்களை தான் அதிகம் கொண்டாடியது. பணத்தை பற்றிய கவலையே இல்லை. அப்பாக்களை பற்றியும்.

கம்பன் நான்காம் ஆண்டு மாணவன். இருபது பேர்க்கு மேல் சென்றனர். அதில் கம்பனின் நண்பர்கள் என்று பார்த்தால் இருவர் தான். பாக்கி எல்லாம் கிளாஸ் மெட்ஸ், ஜுனியர்ஸ். உணவு, ஆல்கஹால் வந்தது. ஆல்கஹால் பாட்டில் மூடி திறந்து வெற்றியை உயர்த்தி அறிவித்து குடித்தனர்.

கம்பனோடு இன்னும் அறுவர் உணவில் கை வைக்க, “நோ நோ வீரா.. முதல்ல ட்ரிங்ஸ்.. இதுவே உனக்காக தான்..” என்றனர் எல்லாம் கோரஸாக.

“நோ.. இதை தொட்டா நான் காலி..” கம்பன் மறுத்தான்.

“உன் அப்பா தான் ஊர்லே இல்லையே, இன்னைக்கே நீ குடிச்சே ஆகணும், இந்த ட்ரீட்டே உனக்கு தான், மச்சான் ஒரே மூச்சுல அடிடா..”

“எவ்வளுவோ பண்றோம் இது முடியாதா..? நமக்கெல்லாம் இது துப்ஸு மேட்டர், அசால்ட்டுடா, குடி..”

“சும்மா வானத்திலே மிதப்ப, வெற்றிக்கு அப்புறம் என்ன மரியாதை..?” மகுடி ஊத ஆரம்பித்தனர்.

“என்னடா கிங்கா இருந்துகிட்டு அந்த மனுஷனுக்கு எல்லாம் பயப்படுற..?”

“நீ குடிக்கலைன்னா நாங்களும் குடிக்கலை, உன் சந்தோஷத்தை நீ கொண்டாட வேண்டாமா..?”

“உனக்காக வந்த எங்களுக்கு என்ன மரியாதை..?”

“அப்போ உன் கெத்து எல்லாம் வெளியே தானா, வீட்ல செல்லாகாசா..?”பலப்பல பேச்சுக்கள். அவனை விடவில்லை. அவன் இந்த மகுடிக்கு எல்லாம் மயங்கவில்லை.

“உன் சந்தோஷத்தை நீ கொண்டாட வேண்டாமா..?” இந்த வார்த்தை. தொடர்ந்து அவனின் உதட்டில் பூத்த ரகசிய புன்னகை, “கொண்டாடுவோமே..”  கம்பன் கோப்பையை  கையில் எடுத்தான்.

அவனுக்குள்ளும் அப்படி என்ன இந்த ஆல்கஹால் செய்யும் என்று பார்க்க ஆசை இருந்திருக்கும் போல. “அந்த போதை, இந்த போதை.. பார்ப்போம். இது குடிச்சா தான் கெத்தா.. பார்ப்போம்டா,  நானா, இதான்னு..” ஒரே மூச்சில் குடித்தான். தொண்டை எரிய எரிய குடித்து வைத்தான்.

“குடிச்சுட்டேன்.. எவன்டா என்னை செல்லாகாசு கேட்டது..” வாய் குழற ஆரம்பித்தது.

“இதை அடிடா.. இன்னும் சொர்க்கம்..” எடுத்து கொடுத்தனர்.

மூன்றாவது போகும் போது, “நோ.. வீரா போதும்..” அவனின் நெருங்கிய நண்பன் அதற்கு மேல் அவனை குடிக்க விடவில்லை. அவர்களும் குடிப்பார்கள் தான். ஆனால் அதிகம் வேண்டாம் என்பதே. கம்பன் அப்பா பற்றிய பயம் என்றும் சொல்லலாம்.

பார்ட்டி முடிந்து பார் காரிலே அவரவர் வீட்டில் விட்டனர். கம்பன் வீடு திரும்ப இரவு ஒன்றுக்கு மேலானது. தள்ளாடி வந்தவனை அச்சத்துடன் பிடித்தான் கார்ட். இன்னைக்கு போயா இப்படி..? அந்த கார்டுக்கே வேர்த்தது. கைத்தாங்கலாக கூட்டி சென்று காலிங் பெல் அடித்தான்.

கதவு திறந்த மனிதரை  கண்டு கம்பனை அப்படியே நிற்க வைத்து கேட்டுக்கு சென்றுவிட்டான் கார்ட். கம்பன் தடுமாறி நிமிர்ந்து பார்க்க, ஆறடியில் கை, கால்கள் எல்லாம் இரும்பாக தீர்க்கமாக பார்வையுடன் நின்றிருந்தார் பரசுராம்.

“ப்பா..” அவ்வளவு போதையிலும் சொருகிய கண்கள் இமைக்காமல்  நின்றது.

Advertisement