Advertisement

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய
குரலில் ஒரு சோகம், வேதனை அதையும் தான்டி வசீகரம்.
இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில்
இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி
பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்..
நடை தத்தி தத்தி பழகும்
திரையில் அழகிய விரல்கள் பியானோ இசைத்தவாறு பாடலையும் பாட, லட்சம் பேர் அவளின் குரலின் வசீகரத்தில் கவர்ந்திழுக்கப்பட்டு
“ஐ லவ் யு ரேணு…”
“உங்க முகத்தை காட்டுங்க ரேணு ப்ளீஸ்”
“உங்க விரல்கள் அழகா இருக்கு. நீங்களும் அழகாத்தான் இருப்பீங்க”
“உங்க குரல் அழகா இருக்கு”
“நல்லா பாடுறீங்க”
“சினிமால ட்ரை பண்ணலாமே” போன்ற கருத்துக்கள் அவளுடைய யூ டியூப் சனலில் பதிவிட்ட பாடல் வீடியோவுக்கு கிடைத்திருந்தது.
அவள் ரேணு எனும் ரேணுகா. சினிமாவில் பாடுவது அவ்வளவு சுலபமா என்ன? அவளும் எத்தனை பேரிடம் வாய்ப்பு கேட்டு பார்த்து விட்டாள். ஏறி இறங்காத ஸ்டுடியோவே இல்லை.
குரல்வளம் நன்றாக இருக்கிறது என்றாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சிலரின் பார்வையே சரியில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதை இவள் நிவர்த்தி செய்ய போவதுமில்லை.
டீவி நிகழ்ச்சி ஏதாவதில் கலந்து கொள்ளலாமா? என்று பார்த்தால்,சில சேனல்கள் ஒரு வருடம் எக்ரிமண்ட் போட சொல்கிறார்கள், சிலர் ஒன்னரை வருடம் அல்லது இரண்டு வருடம் தனியாக பாடல் பாடக் கூடாது. எல்பம் சாங் பண்ணாங்க கூடாது. அது, இது என்று ஏகப்பட்ட கண்டிஷன். அதனாலே அவள் எந்த சேனலையும் அணுக வில்லை. 
காலேஜ் முடித்த கையேடு வீட்டில் அவளுக்கு திருமணம் செய்து வைக்க முனைய சென்னைக்கு ஓடி வந்தவள்தான். சாதனை படைத்த பின்தான் அப்பாவின் முகத்தில் முழிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து விட்டாள்.
அவள் வீட்டை விட்டு வரும் பொழுது தெளிவாக தான் எந்த காரணத்துக்காக வீட்டை விட்டு செல்வதாக எழுதி வைத்து விட்டு வந்ததால் அவளுடைய தந்தை ராமநாதனோ “என் பொண்ணு செத்து போய்ட்டா” என்று ரேணுவுக்கு ஈமைக்கிரிகைகள் செய்ய அன்னை ராகவிதான் துடிதுடித்து போனாள். 
“அப்பா செய்யிற காரியத்தை பாருடா… அவ நம்ம வீட்டு குலவிளக்குடா” மகனிடம் கதறினாள். அவனிடமும் பதிலில்லை.
ரேணுகாவின் அறைத் தோழி மோகனா ஒரு யூ டியூப் சேனல் வைத்திருக்கின்றாள். அது ரோட்டுக்கு கடையில் சாப்பிட்டு அதை பற்றி விளக்கும் சேனல்.
“இந்த சேனலுக்குமா இவ்வளவு வீவ்ஸ் வரும்?” ஆச்சரியமாக கேட்டாள் ரேணு.
“நீ வேற பொண்ணுங்கன்னாவே கெத்து என்ன போட்டாலும் பசங்க சப்போர்ட் பண்ணுவாங்க. அதுவும் வித விதமான சாப்பாடுனா விடுவாங்களா?  நீயும் சேனல் ஆரம்பி. அப்பொறம் தெரியும்” என்றாள்.
இதுநாள்வரை அவளுடைய சாப்பாட்டு செலவு, அறை வாடகை, இதர செலவு  என்று அவளுடைய செலவை கூட மோகனாதான் செய்கிறாள்.
தானும் ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பித்தால் தான் என்ன? அதில் பாடல்கள் பாடி பதிவேற்றலாமே. வாய்ப்பும் அமையலாம். பணமும் கிடைக்கும் என்று ஆரம்பித்ததுதான் இந்த சேனல்.
தன் முகத்தை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் காட்டவே கூடாது. யார் என்று அறியாதவரைக்கும்தான் மக்கள் அலைமோதுவார்கள் என்று கணித்து பியானோ வாசித்துக் கொண்டே பாடல்களை பாடியும், கிட்டார் இசைத்தவாறே பாடல்களை பாடியும் பதிவேற்றலானாள்.
அவள் நினைத்தது போலவே மெல்ல மெல்ல அவள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைய ஆரம்பித்ததோடு “யார் இவள்?” “யார் இந்த குரலுக்கு சொந்தக்காரி” என்ற தேடலும் தொடங்கியது.
“ஹலோ போலீஸ் கண்ட்ரோல் ரூம்”
“சொல்லுங்க”
மறுமுனையில் பேசிய நபரோ ஏரியாவையும் இடத்தையும் கூறி “அங்க ஒரு பாழடைஞ்ச வீடு இருக்கு. பக்கத்துல போக முடியல அழிகின வாட வருது. உள்ள போக முடியல. நாத்தம் கொடல் புரட்டுது. கொஞ்சம் என்னனு பார்க்க சொல்லுங்க. நாய் ஏதாவது செத்து இருக்கும்”
“காப்ரேஷனுக்கு பண்ண வேண்டிய போன் எல்லாம் நமக்கு பண்ணி தாலியருக்குறானுகளே” புலம்பியவாறே பேசியவர் சொன்ன ஏரியாவையும், இடத்தையும் ஒரு தாளில் குறிக்கலானார் பொன்னம்மபலம்.
ரவுன்சில் வந்த கமிஷ்னர் என்ன? ஏது? என்று விசாரிக்க, தனக்கு வந்த அழைப்பை கூறினார்.
சற்று யோசித்தவர் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை அழைத்து கிடைத்த தகவலை கூறும்படி கூறினார்.
“சார் ஏதாவது நாய் செத்திருக்கும் சார். அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரத்னவேல் ஒரு மாதிரியான ஆள். நாளை பின்ன இத மனசுல வச்சி ஏதாவது செஞ்சாலும் செய்வாரு” தயங்கினார் பொன்னம்பலம்.
“சமீபகாலமா திடீர் திடீர் என்று பொண்ணுங்க காணாம போறாங்க. காரணமும் தெரியல. ஒவ்வொரு பொண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்றும் தெரியல. இத்தனை வருஷ அனுபவத்துல சொல்லுறேன் எனக்கு என்னமோ அந்த வீட்டுலதான் காணாம போன பொண்ணுங்களோட டெட் பாடிஸ் இருக்கும்னு தோணுது. நீ போன போடு. நம்மாளுங்க பார்த்துப்பாங்க” 
அவர் கூறியது போலவே இன்ஸ்பெக்டர் ரத்னவேலுக்கு ஆறு பெண்களின் சடலங்கள் அந்த வீட்டில் கிடைத்தது. ஆனால் காணாமல் போன ரேணுவின் சடலம் மட்டும் கிடைக்கவில்லை. அவளை பற்றி தடயம் கூட கிடைக்காமல் குழம்பித்தான் போனார் ரத்னவேல். 
ஆம் ரேணு காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆகி இருந்தன.
ஒரு அடிஷனுக்கு அழைப்பு வந்திருப்பதாக அறை தோழி மோகனாவுக்கு கூறி விட்டு காலையில் போனவள்தான் இவள் அறைக்கு வந்த பின்னும் வந்து சேரவில்லை. ஆடிஷனில் செலெக்ட் ஆகவில்லையே மனம் சரியில்லாமல் வேறு எங்கயாவது போய் இருப்பாள் என்று இவள் சற்று நேரம் தூங்கினாள்.
தூங்கி எழும் பொழுது நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருக்க, பசிக்கவே “ரேணு ஏதாவது சமச்சியா? இல்ல ஆடர் பண்ணலாமா?” என்றவாறுதான் எழுந்தாள்.
பதிலும் வரவில்லை. மின் விளக்குகளும் எரியவில்லை என்றதும் கரண்ட் போய் இருக்கும் என்றெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை. ரேணு இன்னும் வரவில்லை என்றுதான் தோன்றியது.
அவசர அவசரமாக மின்விளக்குகளை எரியவிட்டவள் பதட்டமாக ரேணுவின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க, அது அனைத்து வைத்திருப்பதாக தகவல் வந்தது.
என்ன செய்வது என்று ஒரு நொடி புரியாமல் தடுமாறியவள் சற்றும் தாமதிக்காமல் காவல் நிலையம் கிளம்பினாள். 
பாழடைந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பிணங்கள் அனைத்தும்  போரான்சிசிக்கு அனுப்பட்ட பின் அவர்களின் உதவியோடு அடையாளம் கண்டுபிடித்து குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டன.
அவர்களின் கை,கால், வாய் கட்டப்பட்டு மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
குடும்பத்தார் கதறிய கதறியலை ஊடகங்கள் வளைத்து வளைத்து படம்பிடித்துக் காட்டி தங்களது டி.ஆர்.பியை ஏற்றிக் கொண்டிருந்ததோடு போலீசார் இன்னும் ரேணுவை கண்டு பிடிக்கவில்லையென்று போலீசார் மீது சேற்றை வாரி இறைத்தனர். 
ரேணுவின் அன்னை ராகவி கணவரிடமும் மகனிடமும் மகளை பற்றி போலீசாரிடம் விசாரித்து விட்டு வருமாறு கெஞ்சினாள்.
“அவ எப்பயோ செத்துட்டா”  ராமநாதன் கர்ஜிக்க,
அண்ணன் செந்தில்நாதன் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு சென்று விட்டான்.
“சார் ரேணுவை பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?” மோகனாதான் காவல்நிலையம் அலைந்து கொண்டிருந்தாள்.
“அந்த பொண்ணையும் சீரியல் கிளர்த்தான் கடத்தி கொலை பண்ணி இருப்பான்னு நினைச்சோம். ஆனா அப்படி இல்ல போல அந்த சீரியல் கிளற கைது பண்ணிட்டோம். அவன் ஆறு பொண்ணுங்களை கடத்தி கொலை பண்ணதா ஒத்துக்கிட்டான் ஆனா ரேணுவை அவனுக்கு தெரியவே தெரியாது என்று சொல்லுறான். அந்த பொண்ணுக்கு லவ்வர் என்று யாராச்சும்…”
“அப்படி யாரும் இல்ல சார். எம்பிஷனோடு வாழும் பொண்ணு சார் அவ”
“தேடிகிட்டுதான் இருக்கோம். பார்க்கலாம்” என்றதோடு இன்ஸ்பெக்டர் ரத்னவேல் கிளம்பிச் சென்றார்.
ஆனால் இவள் விடுவதாக இல்லை.  தனது யூ டியூப் சேனலில், ரேணுவின் சேனலில் அவளை காணவில்லை என்று அடிக்கடி வீடியோக்களை பதிவிட ரேணுவை கண்டுபிடிக்கும்படி ரேணுவின் விசிறிகள் போலீஸாருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தனர்.
இன்றைய இணையதளத்தை சரியாகவும், முறையாகவும் கையாண்டு உபயோகித்தால் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்யலாம்.  மோகனா சரியான வழியை கையாண்டாள்
போலீஸாருக்கு எத்தனையோ கேஸ் இருக்க, மக்கள் கொடுத்த அழுத்தத்தால் ரேணுவை தேடும் பணியில் மும்முரம் காட்டலாயினர்.
அவளது அலைபேசி, சமூகவலைத்தளங்கள் என்று எல்லாம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எந்த துப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
கேஸை எந்த திசையில் எடுத்து செல்வது? ரேணுவுக்கு காதலனும் கிடையாது. இருந்தால் ஜாதி பிரச்சினையா? என்று விசாரிக்கலாம்.
அவளை காதலிப்பதாக அவளுடைய சானலில் கருத்துக்கள் சிலர் பதிவு செய்திருந்தாலும் யாரும் அவளை சமூகவலைத்தளங்களில் தொடர்புகொண்டிருக்கவில்லை. நேரடியாக யாருக்கும் அலைபேசி எண்ணையும் அவள் கொடுத்திருக்கவில்லை.
போலீஸாரின் மொத்த சந்தேகமும் அவளை ஆடிஷனுக்கு வர சொன்ன நம்பருக்கு செல்ல அந்த நம்பர் கூட பி.சி.ஓ நம்பராக இருக்க, எல்லா வழியும் முட்டு சந்தாகவே இருந்தது. 
காலங்கள் கரைந்தோடிக் கொண்டிருந்தன. ரேணுவின் தந்தைக்கு அவளை பற்றிய கவலை கொஞ்சம் கூட இல்லை. அன்னை ராகவியோ தன் மகள் உயிரோடு இருக்கின்றாளா? இல்லையா? என்ற கவலையில் பூஜையறையை கதி என்று இருந்தாள்.   
அண்ணன் செந்தில்நாதனுக்கு அவன் காதலித்த பெண்ணோடு சமீபத்தில்தான் திருமணமாகி இருந்தது.
ரேணுவை கண்டு பிடித்தே ஆகா வேண்டும் என்று அலைந்தது மோகனா ஒருத்திதான்.
இது சம்பந்தமாக அவள் ஒன்லைனில் ஏற்படுத்திய கேம்பைனின் மூலம் அறிமுகமாகிய தோழர்கள் அவளுக்கு உதவ முன்வந்த நிலையில் அவர்களோடு சென்று ரேணு ஆடிஷனுக்கு எங்கே சென்றாளோ அங்கு சென்று விசாரித்தாள்.
ஆடிஷன் காலையிலையே முடிவடைந்திருந்தது. அலைபேசி மூலம் அவர்கள் தகவல் கூறுவதாக கூறி இருக்க, ரேணுவின் அலைபேசி அனைக்கப்பட்டிருப்பதாகவும், இறந்து போனது இந்த ரேணு என்று அவர்களுக்கு தெரியாது என்றும் கூறினார்.
அவர்கள் கூறியதை மட்டும் நம்பாமல் சீசீடியியையும் பரிசோதித்து அவள் உள்ளே வந்த நேரம், வெளியே சென்ற நேரம், மீண்டும் அவள் இங்கு வந்தாளா என்று மாலைவரை பரிசோதித்துக் கொண்டனர் மோகனா குழுவினர்.
அவள் அலைபேசி கூட இந்த ஏரியாவில்தான் அனைக்கப்பட்டிருந்தததாக போலீஸ் தகவல் சொல்ல, அந்த ஏரியாவிலுள்ள அனைத்து கடைகளிலும் ஏறி இறங்கி சீசீடிவிகளையும் பார்வையிட்டு ரேணுவை பற்றி ஏதாவது ஒரு தகவல் கிடைக்குமா என்று தேடலாயினர்.
ரேணு காணாமல் போய் மூன்று மாதங்களுக்கு மேலான நிலையில் சில கடைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த சீசீடிவி புட்டேஜுகளும் இல்லையென்றனர். சில கடைகளில் “நீங்க என்ன போலீசா? அதெல்லாம் தர முடியாது” என்று துரத்தலாயினர்.
சிலரிடம் சொல்லி புரியவைத்து சீசீடிவி புட்டேஜுகளை வாங்கி இருக்க, சிலரை மிரட்டித்தான் வாங்க வேண்டி இருந்தது.
இவ்வாறு நடந்துகொள்வது சரியா? தவறா? என்ற கேள்விக்கே இடமில்லை. சிலநேரம் சிலரிடம் நடந்துகொண்டுதான் ஆகவேண்டி இருக்கிறது.
மிகவும் பொறுமையாக கிடைத்த காட்ச்சிகளை பரிசோதிக்க, ஒரு காட்ச்சியில் ரேணு ஒரு வண்டியில் ஏறி செல்வதை மோகனா கண்டாள்.
சத்தியமாக பொலிஸாரால் அது ரேணு என்று அடையாளம் கண்டுகொண்டிருக்க முடியாது. முக்காடு அணிந்திருந்ததோடு, கண்ணனுக்கு கூலர் கூட அணிந்திருந்தாள். அவள் அன்று எந்த துணியை அணிந்து சென்றாள் என்று மோகனாவுக்குத்தானே தெரியும் அதை வைத்துதான் அவளே கண்டு பிடித்தாள்.
அவள் சென்ற வண்டி, அது எங்கே சென்றது என்பதை பார்த்தால் இதே ஏரியாவில் இருந்த ஒரு பிளாட்டுக்குத்தான். அங்கே தங்கி இருப்பவன் யார்? என்று அவனை பின் தொடரலாம். அவனை கடத்தி விசாரிக்க முடியாது. அது கிரிமினல் குற்றம். அதனால் அவனை பின் தொடர்ந்தவர்கள் அவனுடைய அலைபேசி என்னை கண்டு பிடித்து, அதன் முழுது தகவலையும் தோண்டி எடுத்திருந்தனர்.
அவன் வேறு யாருமில்லை ரேணுவின் அண்ணன் செந்தில்நாதனின் நண்பன் விஷ்ணு என்று தெரிய வந்ததும் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க, இன்ஸ்பெக்டர் ரத்னவேல் அவனை கைது செய்து விசாரிக்க ஆரம்பித்தார்.
விஷ்ணு ரேணுவை காதலித்திருப்பான். ரேணு பிடிக்கவில்லை என்று சொன்னதால் ரேணுவை கொலை செய்திருப்பான் என்று அனைவரும் நினைத்திருக்க, அவன் சொன்ன தகவலில் கோயமுத்தூரில் மனைவியோடு குதூகலமாக காலை உணவை உண்டவாறு இருந்த செந்தில்நாதனை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர். 
செந்தில்நாதனும் நித்யாவும் ஒரே ஊர் என்றாலும் அவர்கள் பேசிக் கொண்டது என்னமோ முகநூலில்தான். அதிகமாக பேசியதால் காதல் மலர்ந்ததா? அல்லது ஒரே ஜாதி, பணம் அந்தஸ்து பார்த்து வந்த காதலா?இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்தது.
சம்மதம் கிடைத்து என்ன பயன். ரேணு வீட்டை விட்டு சென்றது மானப்பிரச்சினையாக நித்யா பேச செந்தில்நாதனுக்கும், நித்யாவுக்குமிடையில் ஊடல் ஆரம்பமானது.
அலைபேசி வழியாகத்தான் எல்லா பேச்சு வார்த்தையும் இருந்தது. வாட்ஸாப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது என்ன? முகநூல், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போடுவதென்ன என்று மனவேதனையையும், மனக்குறையையும் சொல்லலாயினர்.
அன்று ரேணு விஷ்ணுவின் வண்டியில் ஏறியது என்னமோ உண்மைதான். வண்டியை ஓட்டியது செந்தில்நாதன். செந்தில்நாதன் வற்புறுத்தியதால்தான் ரேணு வண்டியிலையே ஏறி இருக்கிறாள்.
 அண்ணனும் தங்கையும் பேசிக்கொள்ளட்டும் என்று விஷ்ணு வேலைக்கு கிளம்பி சென்று விட்டான்.
தன்னுடைய காதலுக்கும், கல்யாணத்துக்கு பிரச்சினையாக இருப்பது ரேணு என்று செந்தில் பேச, தன்னுடைய லட்சியம் முக்கியம் அதை புரிந்துகொள்ளுமாறு ரேணு பேச வாய்தாக்கம் கடைசியில் செந்தில்நாதன் ரேணுவை அடிக்கும் அளவுக்கு சென்றிருக்க, அடித்த அடியில் கீழே விழுந்தவளின் தலை அருகில் இருந்த கப்போர்டில் மோதி இறந்து விட்டாள்.
என்ன செய்வது என்று தெரியாத செந்தில்நாதன் அதிர்ச்சியில் உறைந்தது கொஞ்சம்நேரம்தான் அவசர அவசரமாக ஒரு சூட்கேசில் அவள் பிணத்தை போட்டுக்கொண்டு அவன் சரக்கு கொண்டு வந்த வண்டியில் ஊருக்கு கிளம்பி சென்று விட்டான்.
ஊருக்கு செல்லும் போது இரவானது. அவர்களது தோட்டத்திலையே ரேணுவை புதைத்தும் விட்டான். இது தெரியாமல் ராகவி ரேணு வருவாள் என்னு வேண்டிக் கொண்டிருந்தாள்.
ஒருவாறு ரேணுவுக்கு நியாயம் கிடைத்து விட்டதாக மோகனா கண்ணீர் வடிக்க, செந்தில்நாதனை கோட்டில் ஆஜர் செய்திருந்தனர் போலீஸார்.
“அவ என்ன ஆச பட்டா? அத கூட பண்ண விடாம அவளுக்கு உசுரோட கருமாதி பண்ணி அவளை கொன்னுட்டியே நீ எல்லாம் நல்லா இருப்பியா? நாசமாதான் போவ” கணவனுக்கு சாபம் கொடுக்கலானாள் ராகவி.
பெண்ணுக்கு பெண்தான் எதிரியா?
சொந்தங்களே புரிந்துகொள்ளாவிட்டால் பெண்கள் எவ்வாறு முன்னேறுவது?
உறுதுணையாக இருக்க வேண்டியவர்களே உதாசீனப்படுத்தினால் பெண்களின் நிலை இதுதானா?

 

 

Advertisement