Advertisement

அத்தியாயம் 3
“அம்மா… எனக்கு மொபைல் வாங்கிக் கொடுமா… அம்மா… நான் சொல்லுறது உன் காதுல விழுதா?…” அன்னையின் பின்னும் முன்னும் புடவை முந்தியை பிடித்தபடி அலைந்தாள் தீக்ஷனா.
வயது பதினைந்து நிரம்பிய தீக்ஷனானாவுக்கு எதற்கு அலைபேசி என்று அவள் அன்னை மாலா வாங்கிக் கொடுக்காமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
மாலா ஒரு சிங்கிள் பேரண்ட். தீக்ஷனா கிடைத்து சில நாட்களிலையே அவளுடைய கணவனுக்கு வேலை பார்க்கும் ஆபீசில் ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பது தெரிய வரவே விவாகரத்து செய்தவள் குழந்தையோடு தனியாக வந்து விட்டாள்.
தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைப்பவன் தான் விவாகரத்து கோரிய உடன் அவளிடம் மன்னிப்பு கேட்டு, அந்த தப்பை மீண்டும் செய்ய மாட்டேன் என்றல்லவா கூறி இருப்பான். ஆனால் அவள் கணவனோ விவாகரத்து காகிதங்களில் கையொப்பம் போட்டுக் கொடுத்தது மட்டுமல்லாது மாலா குழந்தையின் உரிமை தனக்கு மட்டுமே வேண்டும் என்று சொன்னதற்கும் தலையசைத்து விட்டுத்தான் சென்றான்.
அவன் குழந்தை, அவனுடைய இரத்தம். அவனுக்கு சம்பந்தமே இல்லை என்பது போல் வேண்டாம் என்று விட்டு செல்பவனிடம் இவள் கெஞ்ச வேண்டுமா? அப்படித்தான் அவள் வீட்டார் கூறினார்கள்.
அவள் வீட்டினரோ படித்த திமிர் அதனால் தான் தனியாக முடிவெடுத்து செயல்பட்டாள். எங்களிடம் கூடிப் பேசினால் மாப்பிள்ளையிடம் பேசிப் புரியவைத்து ரெண்டு பேரையும் ஒன்று சேர்த்திருப்போம் என்று அறிவுரை கூற, மாலாவுக்கு கோபம் வந்தது.
இதே தவறை அவள் செய்திருந்தால் யாரிடம் பேசி புரிய வைப்பார்கள்? திருமணம் ஆன அவள் செய்தது தவறு என்று இவளிடம் பேசுவார்களா? அவள் செய்த தவறை மன்னிக்கும்படி அவள் கணவனிடம் பேசுவார்களா?தன் மனைவி, தன்னோடு வாழ்ந்தவள், தன் குழந்தைக்கு அம்மா என்று அவள் கணவன்தான் மன்னித்து அவளை ஏற்றுக் கொண்டிருப்பானா?
நடத்தகெட்டவ என்ற பட்டத்தை கட்டி அவளை அசிங்கப்படுத்த மாட்டானா? பெண்ணுக்கு ஒரு நியாயம்? ஆணுக்கு ஒரு நியாயமா? அவள் வீட்டார் என்ன சொன்னாலும் அவள் எடுத்த முடிவுதான் சரி என்று உறுதியாக இருந்தாள்.
இதனால் தினம் தினம் அவள் வீட்டாரோடு பிரச்சினை. யாரோ ஒருவனுக்காக, அதுவும் தப்பு செய்தவனுக்காக தன்னை பெற்ற அன்னையும், தந்தையும் சகோதரர்களும் பேசுவது பிடிக்காமல் அவர்களை ஒதுக்கி வைத்து தனியாகவே வாழ ஆரம்பித்தாள் மாலா.
இத்தனை வருடங்கள் யார் துணையுமின்றி மகளை தனியாகத்தான் வளர்த்தாள். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தவளுக்கு அலைபேசியை வாங்கிக் கொடுக்க தெரியாதா? அனாவசியம் என்றுதான் நினைத்தாள்.
“உனக்கு எதுக்கு தனியா போன்? தேவைப்பட்டா என் போன பாவிக்கலாமே? உன் ப்ரெண்ஸ் கூட பேசணுமா? என் போன்லேயே பேசலாமே? உனக்கு எதுக்கு தனியாக போன்?” மகள் மீது பாசம் இருந்தாலும் கண்டிப்பும் அதிகமாகவே காட்டினாள் மாலா.
இந்த பருவத்தில் தன் மகள் தவறேதும் செய்து விடுவாள் என்று எல்லா பெத்தவளும் அச்சப்படுவது போல் மாலாவும் அச்சப்பட்டால்தான். அத்தோடு தந்தை இல்லாமல் அன்னை வளர்த்த பெண் என்று சமூகம் மட்டும் பேசாது. அவள் குடும்பத்தாரும் “இதற்குத்தான் நாங்க படிச்சி படிச்சி சொன்னோம்” என்று குத்திப் பேசுவார்கள். 
யாரிடமும் எந்த ஒரு பேச்சும் கேளாமல் தன் மகளை வளர்க்க வேணும் என்று சபதம் கொண்ட மாலா மகள் மீது கூடுதல் அக்கறையும், கண்டிப்பும் வைத்ததில் தவறேதும் இல்லையே. அதை தீக்ஷனா புரிந்துகொள்ளாமல் இருந்ததுதான் பிரச்சினை.
 “போம்மா… என் கிளாஸ்ல எல்லாரும் லேப்டாப் வச்சிருக்காங்க. அதுலதான் அசைங்மண்ட் செய்யிறாங்க. சிலபேர் டாப் வச்சிருக்காங்க. நான் என்ன? உன் கிட்ட லட்ச ரூபாய்க்கு லேப்டாப் கேட்டேனா? டாப் தான் கேட்டேனா? ஒரு போன்தானே கேட்டேன். வாங்கிக் கொடுமா? ப்ளீஸ் ம்மா… ப்ளீஸ்…” கெஞ்சலின் உச்சத்துக்கே சென்றாள்.
“நல்லா பேச கத்துகிட்டடி…” சிரிப்பாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் பாத்திரம் விளக்க ஆரம்பித்தாள்.
“போம்மா.. உன் கூட நான் பேச மாட்டேன்” இரண்டு நாட்கள் முகத்தை தூக்கி வைத்திருந்த தீக்ஷனா மீண்டும் கெஞ்சுவாள்.
இப்படியே நாட்கள் செல்ல அவளுடைய பதினாறாவது பிறந்த நாளும் வந்தது. பிறந்தநாள் பரிசாக தனக்கு பிடிக்காத எதோ ஒன்றை அன்னை கொடுப்பாள் என்று எதிர்பார்த்திருக்க, அலைபேசி ஒன்றைத்தான் பரிசாக கொடுத்திருந்தாள்.
அன்னையை கட்டிக்கொண்டு முத்தம் வைத்தவள் பாசமழையை என்றுமில்லாதவாறு பொழிய ஆரம்பித்தாள்.  
“என் கன்னத்த எச்சில் படுத்தினது போதும் நான் சொல்லுறத கவனமாக கேட்டுக்க, போன் ஆத்தூர, அவசரத்துக்கு பேசுறதுக்குத்தான். ஸ்கூல் போறப்ப, கிளாஸ் போறப்ப எடுத்துட்டு போ. வீட்டுல உக்காந்து போன் நோண்ட கூடாது. ஸ்கூல் போனாலும் போன் ஆப் பண்ணி வச்சிடு. இல்ல மாட்டிகிட்டு போன பிடுங்கிட்டாங்கனு வந்து நிற்க கூடாது. என்ன புரிஞ்சதா?”
“ம்மா… எப்ப கேட்டேன்? இப்போ கொடுத்திருக்க? இன்னக்கி யூஸ் பண்ணிக்கிறேன் டோன்ட் டிஸ்டர்ப் மீ…”
“ஆ… செகண்ட் ஹாண்ட்ல வாங்கினது. பார்த்து பாத்திரம்டி… தொலைச்சிடாத. வேற வாங்கிக் கொடுக்க மாட்டேன். கீழ போட்டு ஒடச்சினா அவ்வளவுதான் பாத்துக்க” நடுத்தறவர்கமான அந்த தனியொருத்தியின் சம்பாத்தியத்தில் எத்தனையென்று செய்ய? சம்பாதிப்பவளுக்குத்தானே பணத்தின் அருமை புரியும். கணக்கு பார்த்து செலவழிப்பதினாலையே மாத கடைசியில் வயிற்றில் ஈரத்துணி கட்டாமல் மகளின் வயிறு வாடாமல் வளர்க்க முடிந்தது. 
கடைசியா சொன்னவைகளை கேட்க அவள் இருந்தாள் தானே சிட்டாக தனதறைக்குள் புகுந்திருந்தாள் தீக்ஷனா.
தனது உயிர்த்தோழி சஞ்சனா போன் வைத்திருக்கின்றாள். வீட்டுக்கு தெரியாமல் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்றெல்லாம் உபயோகிக்கின்றாள். இவளுக்கும் அவற்றை எவ்வாறு உபயோபிப்பது என்று கற்றுக் கொடுத்திருக்கின்றாள்.
அலைபேசி கையில் கிடைத்ததும் முதலில் செய்தது எல்லாவற்ரைலும் கணக்கு வைத்து அவள் புகைப்படங்களையும் ஏற்றி. தோழிக்கு கோரிக்கை விடுத்ததுதான்.
உடனே அவளது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு இவளுக்கு அவளிடமிருந்து குறுந்செய்தியும் வந்தது. இருவரும் நீண்ட நேரமாக பேசி சிரித்தனர்.
தீக்ஷனாவுக்கு, பசியெடுக்கவில்லை, தாகமெடுக்கவில்லை. மாலா பலதடவை அழைத்த பின்தான் சென்று சாப்பிட்டாள். அதேபோல் “போதும் இப்ப படு…” என்ற பின்னும்
“இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம்” என்று சொல்லிச் சொல்லியே அலைபேசியில் மூழ்கி இருக்க,  மாலா அலைபேசியை பிடுங்கி வைத்த பின் கோபமாக தூங்கியும் போனாள்.
காலை எழுந்த உடன் குளியலறைக்குள் புகும் போதே அன்னையின் கண்ணில் சிக்காமல் அலைபேசியோடு உள்ளே நுழைந்தாள்.
கழிவறையை உபயோகிக்கும் போதும், பல் துலக்கும் போதும் அலைபேசியை உபயோகித்தாள்.
ஏகப்பட்ட நண்பர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதில் பாடசாலையில் உள்ளவர்களும், தனியார் வகுப்பில் உள்ளவர்களும் அதிகமாக இருந்தனர். அதை தவிர சுமேஷ் என்றொரு அழகான வாலிபன் அமெரிக்காவிலிருந்து அவளுக்கு கோரிக்கை விடுத்திருக்க, அவனையும் தனது நண்பர்களின் பட்டியலில் சேர்த்திருந்தாள்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான் தீக்ஷனாவுக்கு அலைபேசி கிடைத்த கதையும். மாலா ரூல்ஸ் ராணியாக திகழ, தீக்ஷனாவால் நண்பர்களோடு உரையாட முடியவில்லை. குறிப்பாக சுமேஷோடு பேச முடியாதது அவளுக்கு டென்ஷனை கொடுத்தது.
பொதுவாகவே குழந்தைகள் பருவ வயதை அடையும் பொழுது பெற்றோர்கள் சொல்வது எல்லாமே தங்களை அடிமை படுத்துவது போலவும், தங்களை கட்டுப்படுத்துவது போலவும்தான் தோன்றும்.
தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும். தாங்கள் செய்வது தான் சரி என்பது போலவே பேசுவார்கள். எது சரி? எது தவறு என்று சொல்லி புரிய வைக்கும் வயதும் இல்லை இது. புரிந்துகொள்ளவும் முயற்சி செய்ய மாட்டார்கள்.
பதின்வயது, பருவ வயது கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறும் வயது. கண்டு, கேட்டு, பார்த்து. அறிந்து கொண்டால்தான் உண்டு. அல்லது பட்டுத்தான் புத்தி தெளிய வேண்டும்.
மாலை வகுப்பு சென்ற மகளை காணாமல் அலைபேசி வழியாக அவளது தோழிகள் எல்லோருக்கும் அழைத்து பார்த்து விட்டாள் மாலா.
அலைபேசியை வாங்கிக் கொடுத்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. “அம்மா நான் ஸ்கூல்ல இருந்து கிளம்பிட்டேன். அம்மா நான் கிளாசுக்கு வந்துட்டேன். அம்மா நான் சாப்பிட்டேன். அம்மா நான் வீட்டுக்கு வந்துட்டேன். குளிச்சிட்டேன். சாப்பிட என்ன இருக்கு?” என்றெல்லாம் மகளிடமிருந்து மாலாவுக்கு குறுந்செய்தி வரும்.
முகம்கொள்ளா புன்னகையில் “அம்மா வந்துகிட்டே இருக்கேன்” பதில் அனுப்புவாள்.
இன்று கணித படத்துக்கான வகுப்பு இருக்க, வகுப்புக்கு வந்து விட்டதாக குறுந்செய்தி அனுப்பி இருந்தவள் அதன் பின் எந்த ஒரு குறுந்செய்தியும் அனுப்பவில்லை.
மகளுக்கு அழைப்பு விடுத்து பார்த்தால் அலைபேசி அணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. “சார்ஜ் போய் இருக்கும்” தனக்குள் சொல்லிக் கொண்டவள் கடவுளை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தால் வீட்டில் மகள் இல்லாததைக் கண்டு அதிர்ந்து அவளுடைய தோழிகளுக்கு அழைப்பு விடுத்து விசாரிக்கலானாள்.
அவள் இன்று வகுப்புக்கே வரவில்லை என்ற பதில்தான் மாலாவுக்கு வந்தது. தன்னிடம் மகள் பொய் சொன்னாள் என்பதே முதல் அதிர்ச்சி. தன்னிடம் சொல்லாமல் எங்கே சென்றிருப்பாள் என்று மாலாவால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை.
“தினேஷ்… தினேஷ்… ஒருவேளை தினேஷை தேடி போய் விட்டாளோ?”
தன்னுடைய தந்தை யார்? அவர் ஏன் எங்களோடு இல்லை? என்ன காரணமாக ரெண்டு பேரும் பிரிஞ்சீங்க? என்ற கேள்விகள் தீக்ஷனாவிடமிருந்து வெளிப்பட, நடந்ததை எடுத்துக் கூறிய பின்னும்
“நீ கொஞ்சம் எட்ஜர்ஸ்ட் பண்ணி இருந்திருக்கக் கூடாதா ம்மா… எனக்காக” என்று விட்டாள் மாலாவின் செல்ல மகள். சுக்குநூறாக உடைந்து போனாள் மாலா.
தன்மானம் இருக்கும் ஒருத்தி அவனோடு வாழ நினைப்பாளா? இன்று அவள் மகளுக்காக அவன் வீட்டுக் கதவை தட்டினாள்.
ஒரே ஊரில் இருந்தும் விவாகரத்துக் கொடுத்த பின் மாலாவோடு தினேஷ் பேசியதே இல்ல. அவனை பலதடவை இவள் அவன் இரண்டாவது மனைவியோடு பார்த்திருக்கின்றாள். அந்நிய பார்வை பார்த்து விட்டு வந்து விடுவாள். கொஞ்சம் அதிர்ந்தவன் அவள் வந்த காரணம் கேட்டு மீண்டும் அதிர்ந்தான்.
தீக்ஷனா அங்கு வரவில்லை என்றதும் மாலாவால் யோசிக்க கூட முடியவில்லை. தினேஷ்தான் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று அழைத்து வந்திருந்தான்.
போலீஸ் கம்பளைண்ட்டும் கொடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையும் ஆரம்பமானது.
தீக்ஷனா இன்று பாடசாலைக்கு சென்றிருக்கின்றாள் மாலை வகுப்பு செல்லவில்லை.
மாலா அழுது கரைந்தாள் “இல்ல சார் கிளாசுக்கு போய் சேர்ந்ததாக என் பொண்ணு எனக்கு மெஸேஜ் அனுப்பி இருக்கா. யாராவது அவளை கடத்தி இருப்பாங்க”
“காசுக்காக கடத்தி இருந்தா இந்த நேரம் உங்களுக்கு போன் வந்திருக்கணும். மூணு மணித்தியாலயம் ஆகியும் எந்த காலும் வரல இல்ல. பார்க்கலாம்” என்றார் இன்ஸ்பெக்டர் விக்ரம்.
“ஜான் இந்தம்மாகிட்ட அவங்க பொண்ணு நம்பர் வாங்கி யார் யார் கூட பேசினா, பேஸ்புக், வாட்ஸ்ஆப் எல்லா டீட்டைளையும் எடுங்க. கடைசியா அவங்க போன் சுவிட்ச் ஆப் ஆனா லொகேஷனியும்” எஸ்.ஐயிடம் பொறுப்பை கொடுத்தவர் வெளியே சென்றார்.
அவர் வரும் பொழுதும் மாலா அழுது கொண்டுதான் இருந்தாள். அவளுக்கு துணையாக தினேசும் இருந்தான். தன் இரத்தம் என்ற தவிப்பு இத்தனை வருடங்கள் கடந்து வந்திருக்குமோ?
“சார் அந்த பொண்ணு போன் அண்ணாநகர்ல சுவிட்ச் ஆப் ஆகி இருக்கு. மூணு மாசமா சுமேஷ் எங்குற பையன் கூடத்தான் ராத்திரி பூரா பேசி இருக்கா”
“இல்ல சார் நைட் போன் பாவிக்க மாட்ட சார்” தவிப்போடு கூறினாள் மாலா.
“நீங்க வேறம்மா பெத்த அம்மா பக்கத்துல தூங்கும் போது, தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து போன் பேசுறாங்க, உங்களுக்கு தெரியாம பேச உங்க பொண்ணுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேணாம். இப்போ பொறக்குற புள்ளைங்களே அறிவாளியாதான் பொறக்குதுங்க. ஆமா போன் வாங்கிக் கொடுத்து எத்தனை மாசம்னு சொன்னீங்க?”
“வர பதினஞ்சாம் தேதிக்கு நாலு மாசம் சார்”
“வாங்கின அன்னைக்கே அந்த பையன் கூட பேச ஆரம்பிச்சு இருக்கா… இது சைபர் க்ரைம், கிட்னப்பிங் என்று ஏகப்பட்ட சிக்கலான கேஸ். அவங்களுக்கு வேற தகவல் சொல்லி இருக்கேன். அவங்க அவனை தூக்கினாத்தான் உங்க பொண்ணுக்கு என்ன நடந்ததுன்னு பார்க்க முடியும்”
“ஐயோ என் பொண்ணு…” மாலா உடைந்து அழ, தினேஷ் அவளை சாமாதானப் படுத்தக் கூட முடியாமல் ஒதுங்கி நின்றான். 
தீக்ஷனா காணாமல் போய் இருபத்தி நான்கு மணித்தியாலம் முடிவடைந்திருந்தது.
தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டத்திலும் இதுபோன்ற காணாமல் போன சம்பவங்கள் பதிவாகி இருந்தன. அதில் பசங்களும் இருக்க, கடத்தியவனின் நோக்கம் என்னவென்று புரியாமல் போலீசார் குழம்பினர்.
பெண்பிள்ளைகளை கடத்தினால் விபச்சாரத்துக்கு பயன்படுவதாக கூறலாம். பசங்களை? இன்டர்நெட்டில் காதல் என்ற வலையை விரித்துதான் பதின் வயது பருவ சிட்டுக்களை கவந்திருந்தனர் அந்த கடத்தல் கும்பல்
நகரத்திலிருந்து செல்லும் எல்லா வாகனங்களும் தரவா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்க, தமிழ்நாடு  முழுவதும் தேடுதல் வேட்டை  நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சைபர் கிரைம் சுமேஷ் யார்? எங்கே இருக்கின்றான் என்பதை கண்டு பிடித்திருந்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன் மும்பையிலிருந்து இருந்து பேசியதாக ஐ.பி அட்ரஸ் தகவல் சொல்லி இருக்க, இரண்டு நாளைக்கு முன்னதாக திநகரில் ஒரு லாட்ஜில் இருந்திருக்கின்றான்.
தீக்ஷனாவோடு அவன் பேசிய சாட்டும் அவ்வாறுதான் கூறுகிறது. அவன் அமெரிக்காவில் இருப்பதாகவும். அவளை காண சென்னை வருவதாகவும் அவன் அனுப்பிய குறுந்செய்தியில் இருக்க, மும்பையிலிருந்து அவன் வந்ததே தீக்ஷனாவை கடத்த என்பது உறுதியானது. அதன் பின் அவனது லொகேஷன் தெரியவில்லை.
லப்டப் கூட லாட்ஜில் தான் இருந்தது. போலீஸ் வரும் என்று தெரிந்தே வைத்து விட்டு சென்றிருக்கின்றான். அவன் எப்படி இருந்தான் என்று லாட்ஜில் விசாரித்ததில் மாநிறமாக, வயது இருபத்தி ஐந்துக்குள் இருந்ததாகத்தான் கூறினார்கள்.
அப்படியாயின் அவன் முகநூலில் வைத்திருந்த புகைப்படம் அவனுடைய புகைப்படமா? தெரியவில்லை. தனியாக செயல்படுகின்றானா? கூட்டாகவா? தெரியவில்லை. எதற்காக தீக்ஷனாவை கடத்தினான்? தெரியவில்லை.
இந்த எல்லா கேள்விகளுக்கும் போலீஸாருக்கு பதில் மட்டும் தெரியவில்லை.
தீக்ஷனா கடத்தப்பட்டு மூன்று நாட்களான நிலையில் போலீசில் உள்ள உயரதிகாரிகளின் கூட்டம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
“சொல்லுங்க மாறன் நாட்டுல எல்லா பக்கமும் கடத்தல் அரங்கேறி இருக்கு. காணாமல் போனார்களா? கடத்தப்பட்டங்களா என்று தெரியாத அளவுக்கு நடத்தி இருக்காங்க. டெக்நாலஜி மட்டும் இல்லனா இது கடத்தல் என்கிறதே நமக்கு தெரியாது” “ஏ. டி.ஜி.பி சொல்ல
” டெக்நாலஜி இல்லனா இந்த கடத்தலே நடந்திருக்காது” முணுமுணுத்தவன் “கடத்தினவங்களுக்குள்ள இருக்குற ஒரே காமனான விஷம் டெக்நாலஜி, இன்டர்நெட் அண்ட் லவ்” என்றான் டி.சி.பி. மாறன்.
எதற்காக கடத்தி இருக்காங்க? எனி க்ளூ?”
“எனக்கு தெரிஞ்ச விதத்துல கடல்ல மீன் பிடிக்க வலை விரிக்கிறோம். ஒரு இடத்துல இந்த மீன்தான் இருக்கும் என்று வளைய வீசினா சிலநேரம் வேற மீன்களும் சிக்கும். அதே மாதிரிதான் இதுவும்.
கடத்தப்பட்டவங்களுக்குள்ள எந்த காமனான விஷயமும் இல்ல என்ற உடனே அவங்க ஆர்கன் திருட கடத்தினங்களோ என்ற சந்தேகம் வந்தது. உடனே அவங்க பிளட் குரூப்பை பற்றி விசாரிச்சதுல கடத்தப்பட்ட அறுபது பேர்ல நாப்பது பேருக்கு ரேர் பிளட் குரூப் இப்போ அவங்க உயிரோடு இருக்காங்கலானே தெரியல. கடைசியாக கடத்தப்பட்ட பொண்ணையாவது மீட்க முயற்சி செய்யிறோம்”
“எனி ஐடியா?”
“தேடி கிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவோம். இதையே பெத்தவங்களுக்கும், பத்திரிக்கைகாரங்களுக்கும் சொல்லிடுங்க” என்றவன் அலைபேசி வழியாக தேடலை துரிதப்படுத்தினான்.  
மெல்ல கண்விழித்தாள் தீக்ஷனா. கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு, கால்கள் இரண்டும் கட்டப்பட்டு, வாயும் கட்டப்பட்ட நிலையில் ஒரு மூலையில் கிடந்தாள்.
கண்கள் கட்டப்படாததால் அவளால் அறையை நன்றாக பார்க்க முடிந்தது. குறைந்த வால்ட்டேஜில் ஒரு மின்குமிழ். அவளை போன்று கடத்தப்பட்டவர்களின் முனகல் சத்தம் அவள் காதை தீண்ட உடல் சில்லிட்டது.
தான் எங்கே இருக்கிறோம்? கடத்தப்பட்டு எத்தனை மணித்தியாலங்கள் ஆயிற்று? என் எத்தனை நாட்கள் ஆயிற்று என்று கூட தெரியவில்லை.
ஆனால் அதை பற்றியெல்லாம் அவளுக்கு கவலையுமில்லை. அவளுக்கு இருந்த ஒரே சிந்தனை அன்னைக்கு தெரியாமல் அவளை ஏமாற்றியதற்கு தனக்கு தக்க தண்டனை கிடைத்து விட்டது என்று மட்டும்தான்.
நடந்ததை நினைத்துப் பார்த்தாள். சுமேஷ் இவள் அழகை புகந்தவாறே இருந்தான். உயிர் தோழியிடம் கூட அவனை பற்றி பகிர்ந்துகொள்ள மனம் வரவில்லை.
“யாரடி அது?” என்று தோழி கேட்டிருக்க
“ரிலேட்டிவ் அமெரிக்கால இருக்காங்க” என்றதோடு நிறுத்திக் கொண்டாள். யாராவது எதையாவது கேட்டால் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதையும் சுமேஷ் தான் சொல்லிக் கொடுத்தான்.
மாலாவை ஏமாற்றுவதில் அலாதி சந்தோசம் கிடைத்தது. வகுப்பு வந்து விட்டதாக கூறி விட்டு அவனை சந்திக்க சென்றவளுக்கு விலை உயர்ந்த காரில் பயணிப்பது கனவுதான்.
தூங்கினால்தான் கனவு வரும். கனவு கண்டு கொண்டிருந்தவள் தூங்கி இருந்தாள்.
விழித்தால் இப்படி மாட்டிக்கொண்டு நிற்கின்றாள்.
கதவு திறக்கப்பட்டு இன்னும் சிலரை கொண்டு வந்து அடைத்தார்கள்.
யார் இவர்கள்? இத்தனை பேரை எதற்காக கடத்தினார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. இங்கிருந்து எப்படி தப்பிப்பது அதுவும் தீக்ஷனாவுக்கு தெரியவில்லை. இப்படி பதில் தெரியாத கேள்விகள் அவளிடமும் ஏராளம்.
போலீஸ் வருமா? தீக்ஷனாவோடு மற்றவர்களும் காப்பாற்றப்படுவார்களா? தெரியவில்லை. இந்த கேள்விக்கு இன்னும் பதில் தெரியவில்லை.

Advertisement