Advertisement

என்னதான் விக்னேஷ் திவ்யாவை இஷ்டமில்லாமல் திருமணம் செய்திருந்தாலும், அவள் தானே அவன் மனைவி. அவளை நேசிக்கவும், புரிந்துகொள்ளவும் முயற்சி செய்தான். விலகி நின்றால் ஒட்டாமாலையே போய்விடும் என்றுதான் கணவனாகவே எல்லா உரிமையையும் எடுத்துக் கொண்டான்.
திருமணத்துக்கு பின் பெண்கள் பெற்றோரை பிரிந்து சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில் கண்டதையும் போட்டு மனதை குழப்பிக் கொள்வார்கள். ஒரு குழந்தை பிறந்து விட்டால் அவர்களின் உலகமே  குழந்தை என்றாகி விடும். அதன்பின் தான் வெளியூர் செல்வதை கூட மனைவி கண்டுகொள்ள மாட்டாள் என்று எண்ணினான் விக்னேஷ்.
அவன் நினைத்தது போல்தான் திவ்யாவும் இருந்தாள். குழந்தை பிறந்த உடன் குழந்தையே கதி என்று கிடந்தவள் தனிமையில் வாட கணவனின் அருகாமைக்கு ஏங்க ஆரம்பித்தாள்.
ஆனால் விக்னேஷின் வேலையின் காரணமாக அவனால் வாரத்துக்கு ஒருநாள் கூட வீட்டுக்கு வர முடியாமல் போக, திவ்யாவுக்கு இந்த வாழ்க்கை சலிக்க ஆரம்பிக்க, சமூக வலைத்தளங்களை உபயோகிக்கவும், நண்பர்களோடு பேசவும் ஆரம்பித்தாள்.
ஒல்லியாக இருப்பதுதான் பேரழகு என்று எண்ணிக் கொண்டிருக்கும் திவ்யாவை புகழவும், காதலிக்கவும் கிடைத்தவன்தான் சஞ்சய். இத்தனைக்கும் இவள் இவனை பாத்திருக்கவே இல்லை. குரலை மட்டும் கேட்டிருக்கிறாள்.
புகைப்படம் அனுப்பும்படி இவள் கேட்டால் நேரில் சந்திக்கும் பொழுது பார்த்துக்கொள் என்பான். அவ்வாறு சொல்வது மட்டுமன்றி அவளை கோவிலுக்கு வா, தியேட்டருக்கு வா, குளக்கரைக்கு வா, மாதம் தவறாமல் அழைப்பான். இவளும் அவன் அழைக்கும் இடத்துக்கு அழைக்கும் நேரத்துக்கு சென்று விடுவாள். ஆனால் அவன்தான் வர மாட்டான்.
அவசரமாக ஒரு வேலை வந்து விட்டது உடனே செல்ல வேண்டும். பிறகு சந்திக்கிறேன் என்பான். இல்லையென்றால் நண்பனுக்கு எக்சிடன் ஆகி விட்டது என்பான். அல்லது அம்மா வழுக்கி விழுந்து விட்டார்கள் என்பான்.
அவன் சொல்வது பொய் என்று கூட புரிந்துக் கொள்ளாமல் கண்மூடித்தனமாக திவ்யா அவனை நம்ப ஆரம்பித்தாள்.
திவ்யா இப்படி இருக்க யார் காரணம்? கிராமிய வாசம் வீசும் அவள் ஊரா? அல்லது ஒரே பெண் பிள்ளை என்று பொத்திப் பொத்தி வளர்த்த பெற்றோர்களா? தங்கை எது கேட்டாலும் செய்து கொடுத்து அவளுக்கு சரியான பாதையை காட்ட தவறிய சகோதரர்களா? அல்லது துணையாக இருக்க வேண்டிய கணவனா?
திவ்யா வெகுளியா? அப்பாவியா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியாயின் அவள் எப்படி சஞ்சய்யை நம்பினாள்? காதலுக்கு கண்கள் இல்லையென்றால் கணினிக் காதலுக்கு எதுவுமே இல்லை. அலைபேசியின் வழியே காந்த அலைவரிசையா ஊடுருவுகிறது? அப்படி என்ன பாசாங்கு வார்த்தைகளை சொன்ன உடன் நம்பி விடுகிறார்களோ பெண்கள்.
பெற்ற பிள்ளையும் வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு?
போலீஸ் தரப்பில் குழந்தையின் தாயை கண்டு பிடிக்க ஒரே வழிதான் இருக்கிறது. அது இந்த ஊரை சேர்ந்த பெண்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்து குழந்தையோடு ஒப்பிட வேண்டும். அதை தவிர வேறு வழியில்லை. இதுதான் இறுதி முடிவு என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.
அதன்படி அந்த ஊரிலுள்ள நாற்பது வயதுக்கு உட்பட்ட திருமணமான பெண்களிலிருந்து, பதினைந்து வயதுக்கு மேலான திருமணமாகாத பெண்கள் என்று அனைவரினதும் டி.என்.ஏ மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட, திவ்யாவின் டி.என்.ஏவோடு இறந்து போன குழந்தையின் டி.என்.ஏ பொருந்தியதும், திவ்யாவை கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
இதையறிந்த திவ்யாவின் மாமனார் விக்னேஷுக்கு தகவல் சொல்ல, மருமகளின் மேல் கோபமாக இருந்த மாமியார் கூட “என் மருமகள் கற்பமாகவே இருக்கவில்லையே. அவள் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க வாய்ப்பே இல்லை” என்று கதறினாள்.
“அத நாங்க விசாரிச்சிட்டு சொல்லுறோம்” என்றார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலா. 
திவ்யாவை அடிக்க வேண்டிய அவசியமோ, மிரட்ட வேண்டிய அவசியமோ போலீஸாருக்கு இருக்கவில்லை. திவ்யா சமீபத்தில்தான் குழந்தையை பிரசவித்தாள் என்று மருத்துவ பரிசோதனையின் பொழுது தெரிய வந்திருக்க, அந்த அறிக்கையை அவள் முன் வைத்த இன்ஸ்பெக்டர் நீலா உண்மையை சொல்வதுதான் உசிதம் என்றதும் விசும்பியவாறே உண்மைகளை ஒப்பிக்கலானாள் திவ்யா.
தான் சுகப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்ததாகவும் தான் சஞ்சையோடு சேர்ந்து வாழ அந்த குழந்தை இடைஞ்சலாக இருப்பதால் குளத்தில் வீசியதாகவும் கூறினாள்.
“ஆனா நீதான் கர்ப்பமாக இருக்கவே இல்லனு உன் மாமியாரே சொல்லுச்சே” சந்தேகமாக கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“ஏழு மாசம் வரைக்கும் எனக்கு வயிறே தெரியாது. ஏழு மாசத்துக்கு பிறகு கொஞ்சமா வயிறு தெரிய ஆரம்பிச்சதும் பெல்ட் போட்டு இறுக்கி கட்ட ஆரம்பிச்சேன். துணியும் லூசாதான் போட்டேன். யாரும் சந்தேக படல. வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க. மாமனார் மட்டும்தான் வருவாங்க. நானும் கடைசி ரெண்டு மாசமா வெளிய எங்கும் போகல”
“உன் புருஷனுக்கு கூடவா தெரியாது?”
“அவர் ரெண்டு மாசமா வீட்டுக்கே வரல”  
“ம்ம்… குழந்தையை பிரசவிக்கிறது எவ்வளவு வேதனையான விஷயம்? தனியா எப்படி பண்ண?”
“தண்ணி டங்க்ள நின்னுக்கிட்டே பிரசவிச்சேன். செத்து பொறக்கும்னு நினச்சேன். சாகல. கொண்டு போய் குளத்துல வீசிட்டேன்” என்றவளை கொல்லும் கோபம் இருந்தாலும் பல்லைக் கடித்து அமர்ந்திருந்தார் நீலா.
அவளிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி அவள்தான் குற்றவாளி என்று நிரூபணமாக,  திவ்யாவின் அலைபேசியிலிருந்து சஞ்சய் பற்றிய எல்லா தகவல்களையும் திரட்டி அவன் யார் என்று அறிந்து அவனை கைது செய்யுமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பித்திருக்க, நீலா அந்த வேலையில் மூழ்கி இருக்கும் பொழுது விக்னேஷ் காவல்நிலையம் வந்திருந்தான்.
திவ்யா கொடுத்த வாக்குமூலத்தை விக்னேஷிடம் கூற அதிர்ந்தான் அவன். இறந்து போன குழந்தை கண்டெடுக்கப்பட்ட அதிகாலைதான் விக்னேஷ் ஊருக்கே வந்தான். குளக்கரையில் இறந்து கிடப்பது தன்னுடைய குழந்தை என்று அறியாமளையே பாவமாக பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பி இருந்தான். 
அன்று கூட மனைவி உடம்பு முடியாமல் மாத்திரை போட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அதைத்தான் திவ்யாவும் இன்ஸ்பெக்டரிடம் கூறி இருந்தாள்.
அதிர்ச்சியும், ஆத்திரமும் ஒன்று சேர்ந்து விக்னேசுக்கு கத்த வேண்டும் போல் இருக்க, இருக்கும் இடத்தை பொறுத்து அமைதியாக வீட்டுக்கு கிளம்பினான்.
அவனுடைய வீட்டார் மாத்திரமன்றி திவ்யாவின் வீட்டாருக்கும் பேரதிர்ச்சிதான்.
“உங்க பொண்ணுதான் தப்பானவ தப்பு பண்ணிட்டா” விக்னேஷின் வீட்டார் குற்றம் சொல்ல,
“நாங்க வளர்த்த பொண்ணு தப்பான பொண்ணும் இல்ல. கட்டிக் கொடுக்கும் பொழுது அவ தப்பான பொண்ணும் இல்ல. உங்க வீட்டுக்கு வந்த பிறகுதான் அவ புத்தி கெட்டு போச்சு” திவ்யாவின் வீட்டார் பேச என்று சண்டை முற்றி அடிதடிவரைக்கும் சென்றது.
போலீஸ் சஞ்சய்யை அரெஸ்ட் செய்ததாக பத்திரிக்கையை பார்த்துதான் அனைவரும் அறிந்துகொண்டிருந்தனர். அதை பார்த்து விக்னேஷின் தங்கைக்கு பேரதிர்ச்சியில் மயங்கியே விட்டாள்.
போலீஸ் சஞ்சய் என்று கைது செய்திருந்தது ஒரு ஆணையல்ல ஒரு பெண்ணை. அது விக்னேஷின் தங்கையின் தோழியான காருண்யாவை.
காருண்யாவுக்கு விக்னேஷின் மேல் ஒருதலைக் காதல். விக்னேஷின் வீட்டுக்கு அவள் அடிக்கடி வந்து போனாலும் அவளால் விக்னேஷிடம் தன் மனதை திறக்க முடியவில்லை. விக்னேஷும் அவளை தங்கையின் தோழியாக பார்த்தானா? அல்லது தங்கையாகவே பார்த்தானா? அதிகம் அவளோடு பேச்சு வார்த்தை வைத்திருக்கவில்லை.
திவ்யாவை விக்னேஷ் திருமணம் செய்தது குடும்ப சூழ்நிலையின் காரணமாகத்தான். “எங்க அண்ணன்னுக்கு கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத பொம்பள, பெரிய உலக அழகின்னு நினைப்பு. அம்மாவ மதிக்கிறதே இல்ல” என்றெல்லாம் காருண்யாவிடம் புலம்புவாள் விக்னேஷின் தங்கை.
இவையெல்லாம் காருண்யாவின் அடிமனதில் விக்னேஷின் மேல் இருந்த ஆசைக்கு தூபம் போட காரணமாக அமைந்து விட, திவ்யா நல்ல பெண்ணே இல்லை. விக்னேஷுக்கு துரோகம் செய்கின்றாள். அவளுக்கு ஒருவனோடு கள்ளதொடர்பு இருக்கு என்று நிரூபணம் ஆனால் விக்னேஷே அவளை அடித்து துரத்தி விடுவான் என்று நினைத்த காருண்யா சஞ்சய்யாக  திவ்யாவிடம் முகநூலில் அறிமுகமாகி, ஆண் குரலிலும் பேசி அவளை நம்ப வைத்தாள்.
காருண்யா எவ்வாறெல்லாம் ஆட்டி வைத்தாளோ அவ்வாறெல்லாம் ஆடினாள் திவ்யா.
தான் நினைப்பதெல்லாம் நடக்க போகிறது என்று காருண்யா நினைத்திருக்கும் பொழுதுதான் குளக்கரையில் இறந்த குழந்தை கண்டெடுக்கப்பட்டதும் திவ்யா கைதானதும்.
ஒரு பெண் கண்மூடித்தனமான காதலுக்காக கைகுழந்தையையே கொல்வாளா? காருண்யா மனப்பிறழ்வுக்கு ஆளாகி உளற ஆரம்பித்திருக்க போலீஸ் அவளை கைது செய்திருந்தது.
ஒரு தலைக்கு காதலால் ஒரு குடும்பமே சிதறி சின்னபின்னமான நிலை இன்று.

Advertisement