Advertisement

அத்தியாயம் 2
நேரம் அதிகாலை ஐந்து மணி பொன்னையா வீட்டிலிருந்து கூலி வேலைக்காக கிளம்பினார். குறுக்குவழியில் தெருக்களுக்குள் புகுந்து பிரதான பாதையை அடைந்தால் பெரிய குளம். அங்கேதான் பஸ் தரிப்பிடம். “ஐந்தரை மணி பஸ்ஸை பிடித்தால் ஏழு மணிக்கு போய் சேர்ந்து விடலாம். எட்டு மணிக்கு வேலையை ஆரம்பித்தால் ஐயாவிடம் சொல்லிக் கொண்டு நாலு மணிக்காச்சும் பஸ்ஸ பிடிக்கணும் இல்லனா இருட்டுறதுக்குள்ள ஊருக்கு வந்து சேர முடியாது”
இதுதான் பொன்னையாவின் எண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்க, நடந்தே வந்தவர் பஸ் வர இன்னும் நேரம் இருப்பதால் குளக்கட்டில் இளைப்பாறினார்.
விடியா காலைப்பொழுதில் வெளிச்சத்தில் குளத்தில் ஏதோ மிதப்பது போல் தெரிய, என்ன அது? என்று உற்றுப் பார்த்தவருக்கு என்ன என்று சரியாக தெரியவில்லை.
“கண்ட கண்ட குப்பையெல்லாம் கொண்டு வந்து  குளத்துலையும், ஆத்தூளையும் கொட்டுறானுங்க. அறிவு கெட்டவனுங்க” திட்டியவாறே பார்த்திருந்தவருக்கு குழந்தையின் கால்கள் தெரிய தூக்கிவாரிப் போட்டது.
அந்த அதிகாலையிலும் வியர்க்க, யாரை அழைப்பது என்று கூட புரியவில்லை. ஓட்டமும், நடையுமாக ஊர் தலைவரின் வீட்டை அடைந்தார்.
வாயில் திறக்கும் சத்தத்தில் பல் துலக்கியவாறே இருந்த தலைவர் “என்னய்யா காலைலயே என்ன?” போயும் போயும் இவன் முகத்திலையா முழிக்கணும்? கொஞ்சம் கோபமாகவே தான் கேட்டார்.
பதட்டமாகவே தான் பார்த்ததை பொன்னையா கூற, வாய் நிறைய கொப்பளிக்க எடுத்த நீரை பட்டென்று துப்பி இருந்தார் தலைவர்.
அடுத்த நொடியே தகவல் அலைபேசி வழியாக போலீஸுக்கு பறக்க, போலீஸ் வண்டி ஊருக்குள் நுழையும் பொழுது நன்றாகவே சூரியன் தன் கதிர்களை பரப்பியிருந்தது மட்டுமல்லாது ஊர் மக்களும் குளக்கரையை சுற்றி நின்றுகொண்டிருந்தனர். போலீஸ் வந்த உடன் மக்களை விலக்கி குளத்தில் வீசப்பட்டிருந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு போஸ்ட் மாட்டம் செய்ய அனுப்பப்பட்டதோடு போலீஸ் விசாரணையையும் துவங்கியது.
ஊரில் எத்தனை பெண்கள் கர்ப்பமாக இருந்தார்கள். யார் யாருக்கு குழந்தை பிறந்தது என்று விசாரிக்க, ஊர் தலைவரோ “என்ன சார் பேசுறீங்க. ஒரு குழந்தையை கொல்லுறவ கல்நெஞ்சுக்காரியாதான் இருப்பா. எங்க ஊர் பொம்பளைங்க இப்படி பண்ண மாட்டாங்க. இது யாரோ வெளியூர்காரியாதான் இருக்கும். புள்ளய பெத்து இங்க கொண்டுவந்து போட்டுட்டு போய் இருக்கு” என்றார்.
போலீஸ் விசாரணையில் ஊரில் கர்ப்பமாக இருந்த, பிள்ளை ஒப்பற்ற என்று எல்லா பெண்களும் தரவாக விசாரிக்கப்பட, சந்தேகப்படும்படியான யாரும் இருக்கவில்லை.
வெளியூரில் இருந்து வந்து குழந்தையை இந்த குளத்தில் போட்டு விட்டு செல்ல வாய்ப்பே இல்லை. காரணம் குழந்தை பிறந்து முழுதாக ஒருநாள் கூட ஆகி இருக்கவில்லை. அப்படி இருக்க, மாலை ஏழு மணிக்குத்தான் கடைசி பஸ். அந்த நேரத்தில் வந்தாலும் எப்படி சென்றிருக்க முடியும்? வண்டியில் வந்திருந்தால் ஊரில் யாராவது பார்த்திருக்க மாட்டார்களா? போலீஸின் சந்தேகம் ஊர்க்காரர்கள் மேல்தான் இருந்தது. குற்றவாளியை எப்படி பிடிப்பது என்று போலீஸ் தரப்பில் தீவிர பேச்சுவார்த்தையில் மூழ்கி இருந்தனர்.
“சொல்லுடா செல்லம் சாப்பிட்டியா? என்ன பண்ணுற?” அலைபேசியின் திரையை பார்த்தவாறு புன்னகைத்த திவ்யா, சஞ்சய் அனுப்பிய குறுந்செய்திக்கு பதில் அனுப்ப அவள் மூன்று வயதே ஆனா பெண் குழந்தை தூக்கத்திலிருந்து கண்விழித்து வீறிட்டு அழ ஆரம்பித்தது.
“சனியன் சனியன் நிம்மதியா போன் பேச விடுறியா? எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டு” குழந்தையின் முதுகில் இரண்டு வைக்க, குழந்தை மூச்சை இறுக்கிப் பிடித்து விடாமல் அழ, கணவனை திட்டியவாறே சமையல்கட்டுக்குள் சென்று காய்ச்சி வைத்திருந்த பாலை பாட்டிலில் ஊற்றி குழந்தையின் வாயில் வைத்து “குடி குடி” என்று கத்த குழந்தை மேலும் அழுதது. 
“சே இந்த சனியனாள என் வாழ்க்கையே போச்சு” குழந்தையை திட்டியவாறு அறைக் கதவை சாத்தியவள் வாசலுக்கு சென்று அலைபேசியில் மூழ்கினாள். 
திவ்யா நடுத்தர வர்க்கத்து குடும்பத்து பெண் மட்டுமல்ல வீட்டுக்கு ஒரே பெண் பிள்ளையாகிப்போக, இரண்டு அண்ணன்களுக்கும் செல்ல தங்கை.
வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து அவள் விருப்பத்துக்குத்தான் விக்னேஷை திருமணம் செய்து வைத்திருந்தனர்.
விக்னேஷ் பக்கத்து ஊர்தான். குடும்பத்தில் இரண்டாவது பையன். திவ்யாவை பார்த்த உடன் ஒன்றும் அவனுக்கு பிடித்து விடவில்லை. ரொம்பவே ஒல்லியான திவ்யா பிடித்தால் ஒடிந்து விடும் போல் இருந்தாள்.
அவள் போட்டு வரும் நூறு பவுன் நகையும், பத்து லட்சம் பணமும் தான் அவன் பெற்றோரோரின் கண்களுக்கு முதலில் தெரிந்தது.
ஏற்கனவே அக்காவின் திருமணத்துக்கு வாங்கிய கடன், வண்டி லோன் என்று இவனும் நடுத்தர குடும்பம்தான். வேறு வழியில்லை. இருமனத்தில் இணைய வேண்டிய திருமணம் செட்டில் மென்டில் செட்டில் ஆகியது.
திவ்யாவின் வீட்டில் இவர்கள் கேளாமலையே ஆடம்பரமாக செலவு செய்திருக்க, பணம் கொட்டிக் கிடக்கும் இடம் என்று இவர்களுக்கும் சந்தோசம். 
கல்யாண விருந்து, சாந்திமுகூர்த்தம், மறுவீடு, குலதெய்வபூஜை என்று எல்லாம் முடிந்த கையேடு மாமியார் நகைகளை கழட்டிக் கேற்க, திவ்யா வார்த்தைகளை நெருப்பாய் கக்கினாள்.
“நான் என்ன தப்பா கேட்டுட்டேன். பத்திரமா எடுத்து வைக்கத்தான் கேட்டேன்” என்று மாமியார் சண்டைக்கு நிற்க,
“என் நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள எனக்கு தெரியாதா?” திவ்யா எகிறினாள்.
புது மனைவியா? அன்னையா? எந்த பக்கம் நிற்பது என்று தெரியாமல் திவ்யாவின் கணவன் விக்னேஷ் திண்டாடி மௌனமாகி அன்னை, மனைவி என்று இருவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டான்.
வீட்டில் தினம் ஒரு சண்டை. இரு பெண்களும் விட்டுக் கொடுத்து போக எண்ணமே இல்லாமல் இருக்க, வேறு வழியில்லாது விக்னேஷ் மனைவியை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்று விட்டான்.
வாடகைக்கு சென்ற வீடோ அவர்களின் வீட்டுக்கு அருகாமையிலையே இருக்க, விக்னேஷாலும் திவ்யாவை தனியாக விட்டு விட்டு வெளியூருக்கு வேலைக்கு செல்ல முடிந்தது.
விக்னேஷின் வேலை ஒரே இடத்தில் இருந்தால் தங்கையை வீடெடுத்து அவனோடு தங்க வைக்கலாம். ஆனால் அவன் வேலையோ ஊரூராக அலையும் வேலை. இவளை அழைத்துக் கொண்டு செல்ல முடியாதே. “பேசாம வேலையை விட்டு விட்டு வேறு வேலை பார்க்க சொல்” திவ்யாவின் அண்ணன்கள் அறிவுரை சொல்ல விக்னேஷ் மனைவியை கடிந்தான்.
“இங்க பாரு. வந்தோமா, தங்கச்சிய பார்த்தோமா போனோமான்னு இருக்கணும். உன் அண்ணங்கள அவங்க வேலை என்னவோ அத மட்டும் பார்க்க சொல்லு. என் வேலைய நான் பார்த்துகிறேன்”
வாடகை வீட்டுக்கு வந்த பின்னும் சந்தோசமான வாழ்க்கையில்லை. விக்னேஷ் வீட்டில் இருந்தால் தினம் ஒரு வாக்குவாதம், சண்டை என்று இருவருக்கிடையில் சுமூகமான உறவுமில்லை. ஆனால் குழந்தை மட்டும் உருவாகி இருந்தது.
குழந்தை பிறந்த பின்னால் எல்லாம் நல்லபடியாக இருக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. விக்னேஷ் வேலைக்காக வெளியூர் போக, திவ்யா குழந்தையோடு தனியாகத்தான் இருந்தாள்.
மாமனார் வந்து குழந்தையை தூக்கிக் சென்றால் இவள் பாட்டுக்கு அலைபேசியோடு ஐக்கியமாகி விடுவாள்.
பேத்தி மேல் இருக்கும் பாசத்தில் மாமியாரும் குளிப்பாட்டி, உணவூட்டி, தூங்க வைப்பது ஆயி போனால் கழுவுவது என்று எல்லாம் செய்து இரவில்தான் குழந்தையை மாமனாரின் கையில் கொடுத்து விடுவாள். ஒரே மகனின் மகள் அல்லவா.
“ஐயோ! அத்த இவ்வளவு செய்கின்றாள் என்று திவ்யா மனமிறங்கங்கி பேசவுமில்லை. பேத்தியை பெற்றவள் என்று மாமியார் மருமகளிடம் சுமூகமாக நடந்துகொள்ள முயற்சிக்கவுமில்லை. அவர்களின் உறவு என்றும் போல் தாமரை இல்லை தண்ணீர்தான். 
குழந்தை பிறந்தும் திவ்யா குண்டாகவில்லை. மேலும் உடல் எடை குறைந்துதான் போனாள். விக்னேஷும் “சத்தான ஆகாரம் சாப்பிடு. அப்பாக்கு சொன்னா ப்ரூட்ஸ் வாங்கிட்டு வருவாரு. இல்லனா நீயே சூப்பர் மார்க்கட் போய் வாங்கிக்கோயேன்” என்று பணம் கொடுத்து விட்டு செல்ல, இவளோ அவற்றை பியூட்டிபாளருக்கு செலவழிப்பாள்.
இப்படி இருந்த திவ்யாவின் வாழ்க்கையில்தான் முகநூலில் அறிமுகமானான் சஞ்சய். அவள் அழகை புகழ்ந்து. அவளை காதலிப்பதாக கூற, வெறுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு சஞ்சய்யின் வார்த்தைகள் தேன் தடவியது போல் இனிக்க ஆரம்பித்தது. குழந்தையை மாமனாரிடம் கொடுத்து விட்டு அவனோடுதான் உரையாடுவாள். ஒழுங்காக சாப்பிடுவதும் இல்லை. வீட்டை பராமரிப்பதும் இல்லை. ஆனால் அவள் மட்டும் சீவி சிங்காரிப்பாள்.
இவளை பற்றி இவளே எல்லாம் கூற, “குழந்தையை உன் கணவன் பார்த்துக் கொள்ள மாட்டானா? அவன் குழந்தைதானே விட்டுட்டு வா” என்றான் சஞ்சய். திவ்யாவுக்கும் சஞ்சய் சொல்வதுதான் சரி என்று தோன்றியது.
தான் பத்து மாதங்கள் சுமந்து பெற்ற குழந்தையையே எதிரியாக பார்க்க ஆரம்பித்தாள் திவ்யா.

 

 

Advertisement