Advertisement

அத்தியாயம் 9
அடுத்த வந்த நாட்களில் ஜெராட் பராவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றான்.
முதலில் வீட்டுப் பக்கத்தில் உள்ள பாதைகளில் வளம் வந்து எந்தெந்த கடைகள் எங்கெங்கே இருக்கின்றன. எந்த பாடசாலையில் லெனினை சேர்ப்பது என்பது வரை காட்டியவன் மாளிகைக்கு அருகே உள்ள ஒரு எலமண்டரி ஸ்கூலில் ஜெஸியை சேர்த்து விட இருப்பதாகவும் கூறினான்.
“அதெல்லாம் வேணாம் அவளுக்கு இப்போதான் மூணு வயசு இப்போவே எதுக்கு? நான் அவளுக்கு வீட்டுல இருந்தே சொல்லிக் கொடுக்குறேன்” என்றாள் பரா.
குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே பாடம் சொல்லிக் கொடுக்கலாம் அதற்கான ஏற்பாடும் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே பாடசாலையில் சேர்ந்தால் தானே தோழர்களோடு சேர்ந்து விளையாடுவார்கள். ஆங்கிலம் பேச, கற்றால் மட்டும் போதாதே பேசினால் தானே முடியும். தவறாக பேசினாலும் கண்டு கொள்ளாதவர்களும், சிரித்து விட்டு தட்டிக் கொடுப்பவர்களும் தோழர்கள் தான்.
தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு நினைத்தவன் சிறுவயதிலிருந்தே ஜெஸியும், லெனினும் தோழர்களோடு பழகினால் சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்வார்கள் அது பாடசாலை செல்வதன் மூலம் மட்டும் தான் சாத்தியம் என்று எண்ணித்தான் பராவிடம் கலந்தாலோசிக்காமல் ஜெஸியை எலமண்டரி ஸ்கூலில் சேர்ப்பதாக கூறினான்.
அதில் அவனது சுயநலமும் இருக்கத்தான் செய்தது. அதை பற்றி அவன் பராவிடம் கூறாமல் “ஜஸ்ட் பியூ ஹவர்ஸ் தான். வீட்டுல இருந்து நடந்து போற தூரம் தானே. நீயே நடந்து போய் கூட்டிட்டு வரலாம். அது மட்டுமில்ல உனக்கும் இங்லிஷ் கத்துக்கவும், பேசவும் ஏற்பாடு செஞ்சிருக்கேன். குழந்தைகள் ஸ்கூல் போன நேரத்துல உனக்கான க்ளாஸ் நடக்கும்” என்றான்.
ஜெராட்டை பார்த்தவளுக்கு வார்த்தை வரவில்லை. பாதிக்கப்ப ஒருவனால் இவ்வளவு தூரம் பிறரை பற்றி சிந்தித்து செயல்பட முடியுமா?
உண்மையில் இவன் காதலித்த அந்த பெண் அதிஷ்டசாலிதான்.
அன்னையின் மனம் நோகக் கூடாது என்று சிந்தித்து திருமணம் செய்தவன் தன்னுடைய மனஉணர்வுகளையும் மதித்து குழந்தைகளையும் தத்தெடுக்க சம்மதித்தது மட்டுமல்லாது அவர்களது எதிர்காலத்தை பற்றி சிந்தித்து செயல்படுவதோடு கடமைக்காக கல்யாணம் பண்ணி விட்டோமே என்று இருந்து விடாமல் தன்னையும் பற்றி சிந்திக்கின்றானென்றால் இவன் எப்படிப்பட்ட மனிதனாக இருப்பான்.
நான் குழந்தைகளை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். அவர்களை தத்தெடுத்து விட்டோமே, அது என் பொறுப்பு, அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பது என்றெல்லாம் நினைப்பது நான் அவர்கள் மீது வைத்திருக்கும் பாசம்.
ஆனால் எனக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது. அதை நானும் சரியாக வாழ வேண்டும். அது தான் என் பெற்றோரின் ஆசையும். குழந்தைகளை தத்தெடுக்கக் கூடாதென்று அம்மா பிடிவாதமாக மறுத்ததற்கு காரணமும் அதுதான். நான் மற்றவர்களை பற்றி மட்டுமே கவலை பாடுவேன் என்னை பற்றி யோசிக்கமாட்டேன் என்று அம்மா வருந்தினாள்.
அத்தை… அத்தை சொல்ல விளைந்ததும் அதுதான். எனக்கென்று ஒரு குழந்தை உருவாக்கி பிறக்க பத்து மாதங்கள் எடுக்கும். அதற்குள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளலாம். எனக்கு பிடித்த ஏதாவதை செய்யலாம் என்பதைத்தான் அவரும் கூறினார். நான் தான் புரிந்துகொள்ளவில்லை.
ஆனால் எல்லோருடைய கவலையையும் புரிந்து கொண்டு குழந்தைகளையும் மனதில் வைத்து எனக்காகவும் சிந்தித்து செயல்படும் இந்த மனிதனுக்கு அந்த பெண் ஏன் இப்படியொரு அநியாயத்தை இழைத்தாள்.
ஆசிரமத்துக்கு வந்த பின்தான் என்னை தெரியும். என்னை திருமணம் செய்ய முடிவு செய்த பின் எனக்காக சிந்தித்து செயல்படுபவன் தான் காதலித்த பெண்ணுக்காக எவ்வாறெல்லாம் சிந்தித்து நடந்து கொண்டிருப்பான்.
காதலிப்பதை விட காதலிக்கப்படுவது வரம் அந்த வரத்தை இழந்த துரதிஷ்டசாலி அவள்.
“என்ன யோசிக்கிறீங்க? குழந்தைகள் கூடவே இருந்தா அவங்க டிஸ்டப் பண்ணிகிட்டே இருப்பாங்க இல்லையா. நீங்க எப்படி உங்க க்ளாஸ்ல கன்ஸன்ரேட் பண்ணுவீங்க?” பராவின் மனதில் என்ன ஓடுகிறது என்று அறியாமல் அவளுக்கு புரிய வைக்க முனைந்தான் ஜெராட்.
இவன் இவ்வளவு நல்லவனாக இருக்கக் கூடாது. ஜெராடோடு சண்டை போட வேண்டும், சகஜமாக பேச வேண்டும், வாக்குவாதம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அக்கணம் சட்டென்று தோன்ற ஐவியின் மீது கொஞ்சம் பொறாமை கூட தோன்றியது.
“என் குழந்தைகள் எனக்கு டிஸ்டபன்சா? இல்ல உங்க காசு வீணாகும் என்று இப்படி பேசுறீங்களா?” பராவுக்கு உள்ளுக்கு சிரிப்பாக இருந்தாலும் அவனோடு இவ்வாறு பேச வேண்டும் என்ற எண்ணத்தில் பேசி விட்டாள்.
காசை பற்றி சிந்திப்பவனாக இருந்தால் அவளுக்கு க்ளாஸ் எடுப்பது பற்றியே சிந்தித்திருக்க மாட்டானே அது பராவுக்கு தெரியாதா என்ன? அவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலாக அவனையே பார்த்திருந்தாள்.
“நான் அந்த அர்த்தத்துல சொல்லல. குழந்தைகள் கூட இருந்தா நம்ம கவனம் அவங்க பக்கம் இருக்கும். ஏதாவது கேப்பாங்க. கூட விளையாட சொல்லி கூப்பிடுவாங்க. ஜெஸி என் கிட்ட ஒட்டவே மாட்டேங்குறா. இல்லனா ஈவ்னிங் நான் இருக்கும் போது க்ளாஸ வச்சிருந்திருக்கலாம். வர்றது ஒரு லேடி தான். அதான் காலைல ஓகே சொல்லிட்டேன்” என்றவன் பரா காசை பற்றி பேசியதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றது தன்னுடைய முடிவு. இவள் என்னுடைய பொறுப்பு. குழந்தைகளும் தன்னுடைய பொறுப்பு. இவர்களுக்கான செலவும் தன்னுடையது. குழந்தைகளின் மீதிருக்கும் பாசத்தால் எதோ ஒரு கோபத்தில் பரா இவ்வாறு பேசுகிறாள் என்று எண்ணியவன் பணத்தை பற்றி பரா பேசியதை விட்டவன் விளக்கம் கொடுத்தான்.
“இப்போ பளிச்சுனு எரியுது” குறும்பாக ஜெராட்டை பார்த்து கண்சிமிட்டினாள் பரா.
“என்ன?” புரியாது அவளை பார்த்தான் ஜெராட்.
“எதோ ஜெஸிய பிரியணுமா எங்குற கோபத்துல கேட்டுட்டேன். அதுக்கு இம்புட்டு விளக்கம் கொடுத்து என் மூளைக்குல இருக்குற பல்ப எரிய விட்டுட்டீங்க” என்றாள்.
 மலர்ந்த புன்னகையை அடக்கியவன் “ஆமா நீ பொறந்ததுல இருந்தே இப்படித்தானா? காப்பகத்துல பாத்தப்போ நான் உன்ன ரொம்ப அமைதியான பொண்ணுன்னுதான் நினச்சேன். குழந்தைகளை தத்தெடுக்க வேண்டி அன்னைக்கி கோபத்துல கத்தி பேசிட்ட. கோபத்துல மனுசங்க பல மாதிரி தானேனு விட்டுட்டேன். உங்கப்பா நீ ரொம்ப அமைதியான பொண்ணு, வீட்டுக்கு அடங்கின பொண்ணுன்னு சொன்னாரு. அதுவும் பொறந்ததுல இருந்தே அமைதியான பொண்ணுன்னு வேற சொன்னாரே. ஆனா நீ அமைதியான பொண்ணு இல்லனு தெரியுது” நான் பார்த்த பராவும், உங்க அப்பா சொல்லும் பராவும் நீ இல்லையே என்பது போல் அவளை பார்த்து வைத்தான் ஜெராட்.
“அது சரி. வீட்டுல எங்கப்பா. ஏகப்பட்ட ரூல்ஸ் வச்சிருக்காரு. அதெல்லாம் பாலோ பண்ணலன்னா அடிப்பாருன்னு நல்ல புள்ளையா நடிக்கிறது தானே. அதுக்காக அவர் சொல்லுறத எல்லாம் நம்புறதா? ஏன் நீங்க உங்க அப்பா, அம்மா கிட்ட பொய் சொன்னது இல்லையா?” அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பு என்பது போல் பேசினாள் பரா.  
சற்றும் யோசிக்காமல் அவளோடு இவனை கூட்டு சேர்த்தது ஜெராடுக்கு மேலும் சிரிப்பை மூட்டியது. அதற்கு பதில் சொல்லாது “நீ சொன்னதை எல்லாம் ரெகார்ட் பண்ணிட்டேன். இரு உங்க அப்பாக்கு அனுப்பிடுறேன். அவர் கேட்டுட்டு போன் பண்ணுவாரு. நீயே அவர்கிட்ட பேசிக்க” தன்னை வம்பிழுத்தவளை சும்மா விடுவதா? ஜெராடும் பராவை வம்பிழுத்தான்.
திருதிருவென முழித்தவள் “ஹேய் ஹேய் பொய் தானே சொல்லுறீங்க. எங்க அப்பாக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. இது தெரிஞ்சா என்ன ஆகுமோ” பதட்டத்தில் நகத்தை கடித்தவாறு அங்கும் இங்கும்  இரண்டு மூன்று அடிகள் நடந்தவள் எம்பி எம்பி குதித்து மீண்டும் எதிர்திசையில் நடந்தாள். ஜெராட் அவளிடம் விளையாட்டுக்கு கூட பொய் சொல்லியிருப்பான் என்று பரா கொஞ்சம் கூட எண்ணவில்லை. அவன் அவ்வாறெல்லாம் பேசுபவன் கிடையாதே. 
அவளின் நடவடிக்கை பார்த்திருந்தவனுக்கு சிரிப்பாக இருந்தது. அமைதியாக இருப்பவளுக்குள் ஒரு குழந்தைத்தனம், குறும்புப் பேச்சு. இந்த வயதிலும் எங்கோ இருக்கும் அப்பாவுக்கு அஞ்சி நடுங்குகின்றாள். அவளுடைய இயல்பான குணம் இங்கு வந்த பின்தான் வெளிப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்ட ஜெராட் அது தன்னால் தான் என்பதைத்தான் உணரத்தவறினான்.     
“ம்மா… என் பொம்மை பெட்டுக்கு கீழ விழுந்திருச்சு. எடுத்துக் கொடும்மா…” ஜெஸி பராவின் ஆடையை பிடித்து இழுக்க, பரா இருந்த பதட்டத்தில் அவளுக்கு குழந்தை கூட கண்களுக்குத் தெரியவில்லை.
அவள் பின்னால் வந்த குழந்தை அவள் சட்டென்று திரும்பியதில் அவள் மீது மோதி விழப்போக, ஜெராட் சட்டென்று தூக்கியிருந்தான்.
ஜெஸி விழுந்திருந்தால் கூட அழுதிருக்க மாட்டாள். ஜெராட் தூக்கியத்தில் கைகளையும் கால்களையும் உதைத்தவாறு திமிறிக்கொண்டு அவனிடமிருந்து இறங்கி பராவிடம் வர முயன்றது மட்டுமல்லாது கத்தவும் ஆரம்பித்தாள்.
“என்னாச்சு… என்னாச்சு” அப்பாவை மறந்து ஜெஸியின் கவலை தொற்றிக்கொள்ள அவளை தூக்கி சமாதானப்படுத்த ஆரம்பித்தாள் பரா.
ஜெரட்டை பயப்பார்வை பார்த்து விட்டு பராவின் தோளில் சாய்ந்து அவளை இறுக கட்டிக் கொண்டாள் ஜெஸி.
“அப்பாடா…. அப்பா… அப்பா…” பரா ஜெஸியை சமாதானப்படுத்த, ஜெராட் ஜெஸியை எவ்வாறு நெருங்குவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.
பாராவை போலீஸ் அழைத்து சென்றார்கள் என்று லெனின் கூறிய பொழுது ஜெஸியை தூக்கியவாறு லெனினி கையை பற்றிய கணமும் ஜெஸி இவ்வாறுதான் முரண்டு பிடித்தாள். 
வலுக்கட்டாயமாக அவளை வண்டியில் அமர்த்தி லெனினையும் பக்கத்தில் அமர்த்தி வண்டியை கிளப்பியிருந்தான் ஜெராட்.
ஏற்கனவே பாராவை போலீசார் அழைத்து சென்றதில் மிரண்டு இருந்த குழந்தை ஜெராடின் செயலால் விம்மவே ஆரம்பித்திருக்க, லெனின் ஜெஸியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
வண்டியை நிறுத்தி சாப்பிட ஐஸ் கிரீமும் ஸ்னேகும் வாங்கிக் கொடுக்க அதை கூட ஜெஸி வாங்க மாட்டேன் “அம்மா வேணும்” என்று அடம் பிடித்தாள்.
“லெனின் நீ மட்டும் சாப்பிடு. ஜெஸிக்கு வேணாமாம். இப்போ நாம அம்மாவை தான் பார்க்க போறோம். போனா அம்மா சப்டீங்களான்னுதான் கேப்பாங்க. இல்லனா கோபப்படுவாங்க” வண்டியை கிளப்பியவாறே ஜெராட் சொல்ல லெனின் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்கவும் பசியில் இருந்தால் போலும் ஜெஸியும் விம்மியவாறே சாப்பிட ஆரம்பித்தாள்.
அவர்கள் இருவரையும் கண்ணாடி வழியாக பார்த்தவாறே வண்டியோட்டிய ஜெராட்டுக்கு பராவுக்கு என்ன ஆச்சோ என்ற கவலையோடு ஜெஸியை எவ்வாறு நெருங்குவது என்ற கவலையும் ஏறிக்கொண்டது.
ஷாப்பிங் அழைத்து சென்ற பொழுது கூட பைகளை இவன் சுமக்க, குழந்தைகளை பரா தான் பார்த்துக்கொண்டாள்.
அந்த பொம்மை வேண்டுமா? இந்த பொம்மை வேண்டுமா? என்று ஆசைகாட்டிப் பார்த்தும் பராவின் துப்பாட்டிவின் மறைவில் நின்று கொண்டு “வேண்டாம், வேண்டாம்” என்று தலையசைத்து மறுத்தாலே ஒழிய எதையுமே ஜெராடின் கையிலிருந்து பெற்றுக்கொள்ள ஜெஸி விரும்பவில்லை.
பரா கேட்டால் மட்டும் ஒன்றை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் அதன் பின் வேற எந்த பொருளையும் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
“ஏன் இப்படி இருக்கா…” மாலில் இவ்வளவு பொம்மைகள் இருக்க குழந்தைகள் எல்லாவற்றோடும் விளையாட ஆசைப்படுவார்கள். வீட்டுக்கு எடுத்து செல்ல ஆசைப்படுவார்கள் ஏன் இந்தக் குழந்தை மட்டும் இப்படியிருக்கு. ஜெராடால் புரிந்துகொள்ள முடியவில்லை.
“காப்பகத்துக்கு கிடைக்கிற விளையாட்டு பொருட்களை குழந்தைகளுக்கு பிரிச்சி கொடுப்போம். அவங்க ஆசைப்படுறது அவங்களுக்கு கிடைக்காது. ஒருத்தருக்கு ஒரு பொம்மைதான் கிடைக்கும். அந்த தாக்கம்தான். லெனின் கூட இவ மேல பாசமா இருக்குறதுக்கு காரணமும் இவள உசுருள்ள பொம்மையாதான் பார்த்தான். போகப்போக தான் இது பாப்பா. என்ன போல. இது எனக்கு சொந்தம்னு உரிமை கொண்டாட ஆரம்பிச்சான். அந்த பாசமும், உரிமையும் ஜெஸிய தங்கச்சியா ஏத்துக்க வச்சது” என்றாள் பாரா.
ஒருபெருமூச்சி விட்ட ஜெராட் லெனினிடம் என்ன வேண்டும் என்று கேட்க அவனுமே தனக்கு பிடித்த ஒரு விளையாட்டு பொருளை கைகாட்டி அது மட்டும் போதும் என்றான்.
ஜெராட் அவர்கள் விளையாட போதுமான விளையாட்டு பொருட்களையும், பாடசாலைக்கு தேவையான பொருட்களையும், ஆடைகளையும் வாங்கிக் கொண்டு அவர்களை உணவகத்துக்கு அழைத்து சென்று இரவுணவையும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான்.
“லெனின் மட்டும் பொருட்களை பார்த்து இதெல்லாம் எனக்கா? நிஜமா எனக்கா? தேங்க்ஸ் டேடி” என்று ஜெராடின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவனை கட்டியணைத்தான்.
ஆனால் ஜெஸியோ பொருட்களை கண்டுகொள்ள கூட இல்லை.
பரா அவளுக்கு ஒவ்வொன்றாக காட்டி “அப்பா தான் வாங்கிட்டு வந்தாரு. போ போய்… அண்ணா சொன்னது போல தேங்க்ஸ் சொல்லு” என்று முன்னாடி தள்ள ஜெஸி பராவின் பின்னாடி மறைந்து நின்று ஜெராட்டை எட்டிப் பார்த்து “தேக்ஸ்” என்று கூறினாலே தவிர அவனிடம் நெருங்கவில்லை.
“சரி விடுங்க பரா… போகப்போக நெருங்கி வருவா…” என்றான்
ஜெராட் லெனினுக்கு இரவு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது ஜெஸிக்கும் சொல்லிக் கொடுக்க முனைய அவளோ பராவிடம் எழுந்து ஓடுவாள்.
பரவும் அவர்களோடு அமர்ந்திருந்தாள் மட்டும் அவளை ஒட்டி அமர்ந்திருப்பாள் ஜெஸி.
“ஏன் உன் அம்மா மடிலேயே ஏறி உட்காரேன்” ஜெஸியின் முடியை கலைத்தவாறே சிரிப்பான் ஜெராட்.
“மடில உட்காந்தா எப்படி கலர் பண்ணுறது? அப்பாக்கு ஒண்ணுமே தெரியல இல்ல குட்டி” ஜெஸியின் தலையில் முத்தம் வைப்பாள் பரா.
ஜெஸியோ இருவரையும் புரியாத ஒரு பார்வையை பார்த்து வைப்பாள்.
ஆகா மொத்தத்தில் பரா கூட இருந்தால் அமைதியாக இருப்பாள். ஆனாலும் ஜெராட்டிடம் வரமாட்டள்.
ஜெராட் “ஜெஸி” என்று அழைத்தால் அவன் புறம் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் அவள் பாட்டில் அவளது வேலையை செய்வாள்.
அழைத்தால் அருகில் வரமாட்டாள் சரி தூர நின்றே பேசுவோம் என்று “சாப்டியா? அழகா கலர்  பண்ணி இருக்க, ஏதாவது அப்பா வாங்கி வரட்டுமா?” என்று கேட்டாலும் அமைதியாக அவனை பார்ப்பாளே ஒழிய எந்த பதிலையும் சொல்ல மாட்டாள். 
“சாக்லட் வாங்கி வந்திருக்கேன்” என்று ஏதாவது வாங்கியதை கொடுக்க முனைந்தாலும் வாங்காமல் பராவை அல்லது லெனினை பார்ப்பாள். அவர்கள் வாங்குமாறு கூறினால் தவிர ஜெராடின் கையிலிருந்து எதுவும் வாங்கிக்கொள்ள மாட்டாள்.
என்னதான் காப்பகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்தாலும் ஜெஸி இவ்வாறு நடந்துகொள்வதற்கு யாரும் அறியாமல் மனரீதியாக பாதிப்படையாக் கூடிய சம்பவம் ஏதாவது நிகழ்ந்திருக்குமா? என்று முதலில் கருதினான் ஜெராட்.
பராவிடம் பொத்தம் பொதுவாக ஜெஸியை பற்றி விசாரித்ததில் “காப்பகத்துல எல்லார் கிட்டயும் பேசுவா. உங்கள தெரியாதில்ல. அதான் பயப்படுறா”
“என் மூஞ்சி என்ன அவ்வளவு டெரராவா இருக்கு?” இவளை போலவே இவனும் கிண்டல் செய்ய,
“புதியவங்கள கண்டா குழந்தைகள் பயப்படுறது சகஜம் தானே” என்றாள் பரா.
பராவிடம் ஜெஸி நன்றாக சிரித்துப் பேசுவாள். பாட்டுப்பாடி காட்டுவாள். கொஞ்சுவாள். சத்தமாகக் கூட பேசுவாள். இவனை கண்டால் மட்டும் அமைதியாகின்றாள். மனரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் இவ்வாறு இருப்பதில்லையே 
தான் அஞ்சியது போல் எதுவுமில்லை. “அப்பா” என்பவரையும் “அப்பா” என்றால் யார் என்பதையும் ஜெஸிக்கு அறிமுகமும் இல்லை. எப்படிப்பட்ட உறவு என்பதும் தெரிந்துகொள்ளும் வயதும் இல்லை. போகபோகத்தான் புரிந்துக் கொள்வாள். அது தன்னுடைய அணுகுமுறையில்தான் இருக்கிறது என்று ஜெராட் புரிந்துகொண்டிருந்தான்.
கொஞ்சம் இடைவெளி விட்டே ஜெஸியிடம் பழகினாலும் லெனினடம் நல்லாவே ஒட்டிக் கொண்டான் ஜெராட்.
அவன் கட்டிலில் படுத்துக்க கொண்டு அவனுக்கு கதை சொல்ல லெனினும் ஜெராடின் நெஞ்சில் சாய்ந்து கதை கேட்பான்.
ஜெஸி அவளது கட்டிலில் படுத்தவாறு கேட்டுக்கொண்டிருப்பாளே ஒழிய லெனின் அழைத்தாலும் வரமாட்டாள்.
அவள் பராவை தேடி ஓடாமல் அங்கே இருப்பதே மேல் என்று அவளையும் பார்த்தவாறே கதை சொல்வான் ஜெராட்.
லெனினும், ஜெஸியும் பாட்டுப்படும் பொழுது இவனும் சேர்ந்துகொள்வான். ஆரம்பத்தில் இவன் பாடும் பொழுது அமைதியாக ஒதுங்கியவள் இப்பொழுது ஜெராட் பாடும் பொழுது சேர்ந்து பாடுவாள் அனால் அருகில் வர மாட்டாள்.
காலை உணவையும் இரவுணவையும் ஒன்றாகத்தான் அமர்ந்து அனைவரும் உண்பார்கள்.
உண்ணும் பொழுது கண்டிப்பாக நாலு பேரும் ஆளாளுக்கு ஒரு வாய் ஊட்டி விட வேண்டும் என்பது பரா புதிதாக போட்டிருக்கும் சட்டம்.
“ஜெஸி… அப்பா சாப்பிட்டு ஆபீஸ் போகணும் சீக்கிரம் ஊட்டு” பரா தான் சொல்வாள் ஜெராட் வாயை திறந்து வைத்துக் கொண்டு அவளையே பார்த்திருப்பான்.
அவள் மறுப்பாள். பிடிவாதம் பிடிப்பாள் அவளை சமாதானப்படுத்த நேரிடும் என்றுதான் ஜெராட் நினைத்தான். ஆரம்பத்தில் பரா வற்புறுத்தியதால் ரொம்பவே தயங்கி ஊட்டிவிட்டவள் இது எனது வாழ்க்கையில் நாளாந்த செயல் என்று எடுத்துக் கொண்டாலோ இப்பொழுதெல்லாம் தயங்காமல் ஊட்டிவிடுவாள்.
ஆனால் ஜெராட்டிடம் பேசவும் மாட்டாள். நெருங்கவும் மாட்டாள்.
அவளோடு நெருங்க தனக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பாடசாலை அழைத்து செல்லும் பொழுது அமையும் என்று பராவுக்காக மட்டுமன்றி அவனுக்காகவும் நினைத்துதான் ஜெஸியை பாடசாலையில் சேர்க்க நினைத்தான்.
தனக்காக என்று அவளிடம் கூறாமல் அவளுக்காக என்று கூறினால் பரா சந்தோஷப்படுவாள் என்று இவன் நினைக்க, காசை பற்றி பேசியதும் அவளை வம்பிழுக்கலானான்.
அதில் ஜெஸி விழப்போக அவளை தூக்கியத்தில் வளமை போல் முரண்டு பிடித்து பராவிடம் சென்று ஒட்டிக் கொண்டிருந்தாள். 
“சரியான அம்மா கொண்டு” ஜெஸியின் முடியை கலைத்து விட்டவாறே சிரித்தான் ஜெராட்.
அவனை மெதுவாக கண்களை திறந்து பார்த்த ஜெஸி மீண்டும் பராவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ஏதோ வண்டி உள்ளே வரும் சத்தம் கேட்டு “நம்ம வீட்டுக்கு யார் வராங்க?” என்று பரா பார்க்க
வண்டியிலிருந்து இறங்கியவர்களை கண்ட ஜெராட் “பரா நீ ஜெஸிய கூட்டிகிட்டு உள்ள போ. அவங்க போன பிறகு வந்தா போதும்” என்றான்.
அந்த வயதான வெள்ளை தம்பதியினரை பார்த்து “யாராக இருக்கும்” என்று யோசனையிலையே உள்ளே சென்றாள் பரா.
“வாங்க உள்ள வாங்க” ஜெராட் அவர்களை ரொம்பவே மரியாதையாக அழைத்து வந்து அமர வைத்தான்.
வந்தவர்கள் ஐவியின் பெற்றோர். ஐவி காணாமல் போனதால் ஜெராடோடு சண்டை போடத்தான் வந்திருப்பார்கள் என்று தான் ஜெராட் பராவை உள்ளே அனுப்பி வைத்தான்.
ஆனால் வந்தவர்கள் ஜெராடை பார்த்ததும் நலம் விசாரித்தது ஜெராடுக்கே சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஜெராட் ஐவியை காதலித்தது அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. திருமணம் செய்தது கூட பிடிக்கவில்லை. திருமணத்துக்கு அழைத்தும் வரவில்லை.
சரி பெற்றோர்கள் வரவில்லையென்றால் என்ன நாம் சென்று அவர்களை சந்திக்கலாமென்று ஜெராட் ஐவியை அழைத்துக் கொண்டு அவர்களை காணச் சென்றால் வேட்டை துப்பாக்கியை இவன் புறம் நீட்டி “உயிர் மேல் ஆசையிருந்தால் ஓடிப்போய் விடு. என் பெண்ணுக்காக உன்னை உயிரோடு விடுகிறேன். இந்தப்பக்கம் வந்து விடாதே” என்று மிரட்ட ஐவி ஜெராடை இழுத்துக்கொண்டு வந்து விட்டாள்.
அப்படிப்பட்டவர் வண்டியில் இறங்கிய உடனே துப்பாக்கியை எடுத்து ஜெராடை சுட்டுவிட்டுதான் மறுபேச்சே பேசுவார் என்று ஜெராட் எண்ணியிருக்க, நலம் விசாரித்தது ஆச்சரியத்தை கொடுக்காதா என்ன?
“எங்களை மன்னிச்சிடுங்க. நீங்க எங்க பொண்ணு மேல எவ்வளவு மேல பாசமாக இருந்தீங்கன்னு எங்களுக்கு இப்போதான் புரியுது. அவளுக்காக இந்த மாளிகையை வாங்கியிருக்குறீங்க. காணாமல் போன அவளை தேடச் உங்களால முடிஞ்ச வழிகளை மேற்கொண்டிருக்குறீங்க. நாங்கதான் உங்கள புரிஞ்சிக்காம நடந்துக்கிட்டோம்”
இவர்கள் யாராக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஜெஸியை லெனினோடு விட்டு தங்களது அறையின் வழியே வந்து ஜெராட் அவர்களோடு என்ன பேசுகின்றான் என்று கேட்கலானாள் பரா.
அந்தோ பரிதாபம் ஜெராட் பேசும் ஆங்கிலம் அவளுக்கு அரைகுறையாக புரிய, அவர்கள் பேசும் ஆங்கிலம் சுத்தமாக புரியவே இல்லை.
“ஐவி திரும்ப கிடைச்சா போதும். அவ உங்க கூட உங்க வீட்டுக்கு வந்தா போதும்” என்றவன் “பரா…” என்று சத்தமாக அழைக்க  கதவருகே நின்ற பரா தடுமாறியவள் அவன் முன்னே வந்து நின்றாள்.
“இவள் என் மனைவி” என்று பராவை அறிமுகப்படுத்தி வைக்க, அவர்களது முகம் வாடிப்போனது.
அவர்கள் ஆங்கிலத்தில் ஜெராட்டிடம் பேசிக்கொண்டே இருக்க, “அட போங்கடா நீங்களும் உங்க…” ஆங்கிலத்தை வாய்க்குள்ளையே வசைபாடியவாறு நின்றிருந்தாள் பரா.

Advertisement