Advertisement

அன்று முரளிக்கும், பூஜாவுக்கும், விடுமுறை அளித்திருந்தாள் அனு.

காலை அவள் கிளம்பி வெளியே வர, கிருஷின் கார் வந்து நின்றது.

“ஹாய் கிருஷ்ணா… நீங்க எப்போ வந்தீங்க”, என ஆச்சரியமாய் அவள் வினவ.

“காரில் ஏறு அனு. இன்று முரளிக்கு லீவாச்சே, அதனால இன்னிக்கு நான்தான் உன் டிரைவர்”, என்றான்.

“ஆக இந்த அனுவின் தேரோட்டியாக, கிருஷ்ணரே வந்துவிட்டீர்களா”, என்று முன்சீட்டில் அமர்ந்தாள் அனு.

“டாக்டர் மேடம், நல்லதான் பேசுறீங்க” என காரை எடுத்தான்…

இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் ரஞ்சனி.

ரஞ்சனி இதை கவனித்ததையும், அதனால் வரவிருக்கும் சங்கடங்களையும் நன்கு அரிவாள் அனு. 

ஆனால் அதை பற்றி பெரிதாய் சிந்திக்காமல், கிருஷிடம் நன்றாகத்தான் பேசி மகிழ்ந்தாள்.

“சரி சொல்லுங்க உங்க காதல் கதைய”, என்று அனு ஆரம்பிக்க,

“உனக்கு எதுக்கு இந்த கதையில இவ்வளோ ஆர்வம்”,என்று வினவினான் கிருஷ்.

“ஏதோ என்னால முடிந்தது. எனக்குன்னு அழகான பாதைய உருவாக்கி இருக்கீங்க கிருஷ்ணா… என் வாழ்க்கையே முடிஞ்சது னு முடங்கி இருந்தேன். ஆனா உங்களால தான் இப்போ சுதந்திரமா, நான் நானா முடிவெடுத்து ஆனந்தமா செயல்படுறேன்”…

“அதனால உங்க வாழ்கைல ஓரு நல்ல திருப்பத்துக்கு, நான் காரணமா இருக்கனும் னு ஆச படுறேன்”, என்றாள்.

“அப்பப்பா… நா அப்டி ஒண்ணும் பெரிதா செஞ்சிடல”, என்று அவன், சலித்துக் கொள்ள,

“நீங்க என்னோட நம்பிக்கைய, சந்தோஷத்த, வாழ்க்கைய… எல்லாத்தையும் திருப்பி வரச் செய்தீங்க”, என அனு பேச,

“போதும் போதும், நான் என் கதைய சொல்லிடறேன் தாயே… என்ன விடு மா”, என்றான் கேலியாக மன்றாடும் குரலில்.

“அந்த பயம் இருக்கட்டும்”, என அவள் கூற,

“ஆனா இங்க வேண்டா, ஆசரமம் போலாம்… அங்க சொல்றேன்”, என்று மருத்துவமனைக்கு  செல்லும் பாதையை விடுத்து, ஆசரமம் செல்லும் பாதையில் செல்லத் துவங்கினான் கிருஷ்.

“சரி… நானு ரொம்ப நாளாச்சு ஆசரமம் போய், ஆனா ஹாஸ்பிட்டல் போகனுமே கிருஷ்ணா”, என்று அனு கூற,

“நா அங்க இருந்து தான் வரேன். எல்லா சரியா இருக்கு”, என்று ஆசிரமத்துக்கு செல்லும் வழியில் சென்றான் கிருஷ்…

செல்லும் வழியெல்லாம் கேலியும், சிரிப்புமாக, இருவரும் சென்றாலும், இடையிடையே முரளி பூஜா திருமணம் பற்றியும், மருத்துவமனை பற்றியும் பேசினர்…

ராதா கிருஷ்ணன் குடும்பத்தை வெற்றிகரமாக நல்ல முறையில் நடத்த உதவும், அவனது எஸ்டேட் தொழில், மற்றும் பிசினஸ் பற்றியும் கூறினான் கிருஷ்.

எப்போதும் யாருடனும் அதிகம் கலந்து ஆலோசிக்காமல் தனித்தே முடுவுகளை எடுக்கும் கிருஷ், அனு வந்ததிலிருந்தே அவிளடம் அனைத்தையும் பேசி, அவளது கருத்துக்களை கருத்தில் கொண்டு முடுவுகளை எடுக்க துவங்கினான்.

இதனை அறிந்தமையால் தான், கிருஷின் திருமணத்தை அனுவின் பொறுப்பிலேயே விட்டார் மேகலாமா…

தன்னை வெறுக்கும் குடும்பத்தினர், தன்னை மறந்தே போன தோழிகள், மத்தியில் தன்னை மதிக்கும் கிருஷிற்கு நாமும் ஏதாவது செய்தே யாக வேண்டுமென தீர்மானமாய் இருந்தாள் அனு.

அழகிய  தோட்டம், சமையலுக்கு தேவையான காய்கறி தோட்டம், விளையாட, நடைப்பயிற்சி செய்ய மைதானம், சிறிய கோவில், முதல் உதவிக்கான சிறிய கிளினிக், இரண்டு வேன், அனைத்துக்கும் மேலாக… ஓர் அழகிய கட்டிடம், இரு மாடி கட்டிடம் உயர்ந்து நின்றது…

கட்டிடத்தின் நடுவில் ராதாகிருஷ்ணன் மாளிகை, என பெயர் சூட்டப்பட்ட பலகையும் இருந்தது…

“வா அனு”, என்று அவளை அழைத்து உள்ளே சென்றான் கிருஷ்.

முதலில் ஆஃபீஸ்னுள் இருவரும் நுழைந்தனர், அங்கு கிருஷ்ணரும் ராதையும் ஒன்றாக நிற்பதுபோல் வண்ணம் தீட்டப்பட்ட அழகிய ஓவியப் படம் ஆளுயர இருந்தது…

“நேத்து சொன்னேனே, என் காதலி ரொம்ப அழகா ஓவியம் வரைவா னு, இதோ என்னவளின் கைவண்ணம்”, என்று அந்த ஓவியத்தை காண்பித்தான் கிருஷ்.

எத்தனையோ முறை ஆசரமம் வந்தபோதும், இந்த அறைக்கு முதல் முறையாய் வரும் அனு, அந்த அறையிலிருந்த கண்ணை பறிக்கும் கிருஷ்ணர் மட்டும் ராதையின் படத்தை கண்டு மெய்மறந்து நின்றாள்…

“அற்புதமா இருக்கு கிருஷ்ணா”,… என அந்த ஓவியத்தின் அருகில் சென்றவள், 

“க்ளாஸ் பைண்டிங்!…..எனக்கு ரொம்ப பிடிக்கும்”, என்று அந்த ஓவியத்தை மெல்ல தீண்டினாள்.

“இதென்ன ராதா னு சிக்னேச்சர் இருக்கு… அவங்க பெயர் ராதா வா”,… என வினவியவளின் கண்கள் குழலூதும் கிருஷ்ணரின் மீதே படிந்திருந்தது.

“எஸ் அனு”, என அவன் கூற,

“என்ன ஒரு பெயர் பொருத்தம்”, என்று புன்னகைத்த படி திரும்பி அவனை பார்த்தாள்.

அவனது முகம் வாடியிருக்கக் கண்டவள், ஏன் என்பது போல கேள்வியாய் பார்க்க.

“பெயர் மட்டுமல்ல, மனமும் தான். ஆனா ….. காவியத்துல வர ராதா கிருஷ்ணன் காதல் போல, எங்க காதலும் எவ்வளோ தூய்மையா இருந்தாலும்,  எங்களுக்கு சேர்த்து வாழ குடுத்து வைக்கல இனி இந்த கிருஷ்ணனை நினைத்து ராதையும், ராதையை நினைத்து கிருஷ்ணனும் வாழ வேண்டியதுதான்”, என்று கிருஷ் கூறி முடித்தான்.

அவனது குரலில் இருந்த துயரத்தை கவனித்தவள், மேலே எதுவும் பேச இயலாமல் மௌனமானாள்.

சில நோடிகள், அங்கு நிசப்தம் குடிகொள்ள… அதை உடைத்து கிருஷ் பேசத் துவங்கினான், “அவளோட நினைவா தான், இந்த ராதாகிருஷ்ணன் ஆசரமமே ஆரம்பிச்சேன்”, என்றான்.

“அம்மா தாத்தாவின் பெயர் னு சொன்னாங்க”, என்று அவள் கேட்டுவிட,

“ம்ம்ம்… உண்மைய சொல்ல முடியாம இப்டி சொல்லிட்டேன்”, என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

“ராதா எங்க இருக்காங்க, யாரோட இருக்காங்க”, என்று தயங்கியவரே அனு வினவ,

பதில் இல்லை… விரக்தியான பெருமூச்சு மட்டுமே.

அந்த அவனது பாவனை, மேலே ஏதும் கேட்காதே என்று மறைமுகமான பொருளை உணர்த்த… அதற்குமேல் அவள் எதையும் வினவவில்லை.

தான் முரளியை கார் டிரைவராக சேர்த்தது, கிரிஷின் சிநேகம், முரளி மற்றும் பூஜாவின் திருமண வேலைகள், என ஒன்றை விடாது அனைத்தையும் தனது அண்ணன் ரகுவிடம் அனு உரைத்தாள்.

ரகுவிற்கு தெரிந்து தான் அனு அனைத்தையும் செய்வாள்…மேலும் அவனது துணை இருக்கும் வரை, அவளது உறவினர்கள் அவளை எதுவும் நச்சரிக்க மாட்டார்கள் என்பது அனுவின் மிகப்பெரிய நிம்மதி…

ஆனால் கனந்தன், ரகுவிற்கென்ன எவனுக்குமே பயந்தவன் அல்லவே… அவனது செவிகளுக்கு தனது தங்கையும், ரகுவின் மனைவியுமான பிரியா மூலம், அனைத்து விஷயமும் தெரியவந்து.

ரஞ்சினி பிரியாவிடம் ஒன்றுக்கு இரண்டாக கிருஷ் மற்றும் அனுவின் சிநேகத்தை தவறாகக் கூற, பிரியா அவளது தமையனிடம் இரண்டிற்கு பத்தாக கூறினாள்.

கனந்தன் அதுவரை அனுவை பற்றிய எண்ணமில்லாமல் தான் இருந்தான்.

இப்படி ஒரு விஷயம் அறிந்ததும் அவளை காண வேண்டும் என்று முடிவெடுத்தான்.

ரகு இருக்கும் வரை, அனுவின் நிம்மதியை எவராலும் கெடுக்க இயலாது அல்லவா… அதனால் நாமே கெடுப்போம் என்று எண்ணினான் கனந்தன்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அன்று அனுவை பார்த்து அவளுடைய முதல் மாத சம்பளத்தை கொடுக்க வந்தான் கிருஷ்…

“இதுல எழுபத்தைந்தாயிரம் இருக்கு அனு, உன் சம்பளம்”, என்று கிருஷ் கொடுக்க, 

“சம்பளம் எல்லாம் வேண்டாம்,  உங்க சேவையில நானு பங்கெடுக்குறேன், இத சேவையா தான் செய்றேன், சம்பளத்துக்காக இல்ல” என்றாள், கண்டிப்பான குரலில்.

“இது மருத்துவ சேவைக்காக மட்டுமில்ல அனு, இவ்வளோ பெரிய மருத்துவமனைய தனியா நிர்வாகம் செய்றதுக்காக.. என்ன பொருத்தவரை இந்த சம்பளமே குறைவுதான்.. மறுப்பு சொல்லாம வாங்கிக்கோ”, என்றான் கிருஷ்.

“சரி… நீங்க என் பிரண்டுன்னு நினச்சேன்… சம்பளம் கொடுத்து மூனாவது மனுஷியாக்கிட்டீங்க”, என்று அவள் முறைக்க.

“அப்டி இல்ல அனு, உன் வாழ்கைல என்ன பிரச்சனை னு எனக்கு தெரியாது, ஆனா நீ தனியா இருக்க”…..

“அதுக்கென்ன கிருஷ் இப்போ”, என்றாள் அவள் சலிபாக.

“பெண்கள் தனியா சுதந்திரமா இருந்தா, இந்த உலகத்துக்கு  பொருக்காது அனு. அதுலயும் நீ உன் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு தன்னம்பிக்கையோட இருக்க”….

“எல்லாம் உங்களால தான்”, என்றாள் இடை மறுத்து…

“என்ன சொல்லவிடு …. நீ உன்னோட வருமானத்துல வாழ்ந்தா தான் சமூகத்திலும், உன் வீட்டிலும், உனக்கு மரியாதை… அனைத்துக்கும் மேலாக மனநிறைவோட தன்னம்பிக்கையோட வாழலாம்… அதுவே நிம்மதிய தரும்… அத யோசிச்சு தான் இந்த சம்பளத்தை தரேன்”, என்று விளக்கினான் கிருஷ்.

அவன் கூறுவதிலிருந்த உண்மையை  உணர்ந்தவள், இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு ஞானம் என்று மனதுக்குள் மெச்சிக் கொண்டடிருக்க…

“அதைப்பற்றியெல்லாம் கவலைபட, நீ யார்…”, என்றான் திடீரென்று வீட்டினுள் நுழைந்த ஆண்மகன்.

கிருஷிற்க்கு இணையான உயரம், பார்க்கவும் நல்ல தோற்றம், ஆனால் முகத்தில் அவ்வளவு சினம்… அவனே கனந்தன்.

கனந்தனை சற்றும்  எதிர்பாராத அனு, அதிர்ந்து போய் எழுந்தாள்.

அனு எழுந்தவுடன், “அவள் என் பிரண்ட்… நீங்க யார்”, என்று கிருஷ்  வினவ,

“வேண்டாம் கிருஷ்ணா, இவங்க கிட்ட வாய கொடுக்காதீங்க”, என்று கிருஷின் கையை பற்றி… முன் சென்றவனை பின்னுக்கு இழுத்தாள் அனு.

கிருஷ் புரியாமல் அனுவை திரும்பி பார்க்க, கண்ணிமைக்கும் நொடியில் அனுவின் அருகே வந்த கனந்தன்…

“என்ன திமிர் உனக்கு. என் கண் முன்னாடியே வேற ஒருவன் கைய பிடிக்குற…. அப்போ நான் இல்லாதபோது…”, என்று நஞ்சை பொழிந்தான் கனந்தன்.

“போதும்… அனு என் தோழி தேவையில்லாம பேசாத”, என்று பல்லை கடித்துக்கொண்டு கிருஷ் எகிற,

“என்னடி…. வக்காலத்துக்கு வரான், சொல்லு… இருவருக்கும் இடையில என்ன உறவு”, என்று கனந்தன் கத்தினான்.

“போதும் பிலீஸ்”, என்று சோபாவில் அமர்ந்து, தலையை பிடித்துக் கொண்டாள் அனு.

கிரிஷின் பொறுமை அனைத்தும் பறந்தோட, அனுவின் துயரமான நிலையை கண்முன் கண்டவன், கனந்தனை பளார் என்று ஒரு அறைவிட்டு, மேலும் அடிக்க போனான்.

இதை எதிர்பாராத கனத்தன், திருப்பி அடிக்க வர… கிரிஷும் சும்மா இல்லை.

“வேண்டாம் கிருஷ்ணா”, என அனு பதற,

“உன்ன மரியாத இல்லாம பேசுறான், இவன எப்படி சும்மா விட முடியும்”, என்று கையை உயர்த்தினான் கிருஷ்.

கனந்தனிற்கும், கிரிஷிற்கும், இடையில் வந்த அனு, “இவர் என் கணவர், தயவுசெஞ்சு விட்டு விடு கிருஷ்ணா”, என கத்தினாள்.

இதை சற்றும் எதிர்பாராத கிருஷ், அதிர்ந்துபோய் அவளை காண…

“என்ன பாக்குற… வெளிய போ டா”, என்று சீறினான் கனந்தன்.

“ப்ளீஸ் கிருஷ்ணா…… போய்டு….”, என அனு விருப்பமின்றி தயங்கி தயங்கி கூற, அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அவள் கண்ணில் வடியும் கண்ணீரை காண இலத்தவனாய்… அதற்க்கு முடிவு தர இயலாதவனாய் கிருஷ் வெளியேர, வேகமாக ஒரு கார் அனுவின் வீட்டிற்கு வெளியே வந்து நின்றது.

அதிலிருந்து ரகு இறங்கி வேகமாக உள்ளே ஓடினான்…

ஒருவாரம் ஓடின… அனு மருத்துவமனைக்கு வரவே இல்லை. பூஜாவையும், முரளியையும், நான் அழைக்கும் வரை வரவேண்டாம் என்று கூறியதால், அவர்களும் தங்களது திருமண வேலைகள், மற்றும் மருத்துவமனை வேலைகள், என இவற்றில் ஈடுபட்டனர்.

கிருஷிற்கு அனுவைப் பாராமல் வருத்தமாகத்தான் இருந்தது, இருப்பினும் தானாக சென்று பேசவும் விருப்பமில்லை.

இவர் எனது கணவர்”, என்ற அனுவின் வார்த்தைகள்… அவன் செவியில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அது என்னவோ செய்ய, அவன் அவளை அழைக்கவில்லை, அவளும் தொடர்பு கொள்ளவில்லை…

தொடரும்….

Advertisement