Advertisement

அனு மிகவும் மனமுடைந்து இருந்ததால், கிருஷ் தனது வீட்டிற்கே அவளை அழைத்துச் சென்றான்… அங்கு சென்று மேகலாமாவுடன் பேசிக் கொண்டிருந்தால், அவள் மனம் லேசாகும் என எண்ணினான்…

ஆனால் வீடு திரும்ப, பத்து மணியானதால், சமயல்காரி, மணிமேகலை என அனைவரும் உறங்கியிருந்தனர்.

இருவரும் மிகுந்த பசியில் சமயலறைக்கு செல்ல, அங்கு உணவில்லை.

வழக்கமாக மருத்துவமனை கேன்டீனில் இருவரும் இரவு உணவை முடித்துக் கொள்வர்… அன்று பேசிக்கொண்டே உண்ணவும் மறந்துவிட, வீடு வந்தால் உணவில்லை…

“ஐயோ!!!…. இப்போ என்ன செய்றது அனு, எனக்கு ரொம்ப பசிக்குதே” என்றான் கிருஷ்.

“நாமே சமைக்க வேண்டியதுதான்” என்று முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகி, தனது அழகிய கண்களை சிமிட்டினாள் அனு.

“பார்ரா”, என்றவன், “அதான, எவ்வளவோ செய்றோம், இத செய்ய மாட்டோமா” என புன்னகைக்க,

அவனுடன் சேர்ந்து, அனுவும் புன்னகைக்க, பழைய நினைவினால், வாடி இருந்த, அவளது முகம் மலர்ந்தது.

அவளது முக மலர்ச்சியில், ஓர் நிம்மதியை உணர்ந்தவன், “என்ன சமைக்கலாம்?” என வினவினான்.

“உங்களுக்கு என்ன பிடிக்கும்?” என்றாள்.

“எனக்கு…. சப்பாத்தி, சன்னா மசாலா, ரொம்ப பிடிக்கும்” என அவன் மிகுந்த ஆர்வத்துடன் கூற கண்டவள்,

“தோசை மாவும் இல்ல போல, அதனால இன்னிக்கு உங்களுக்கு பிடித்த சப்பாத்தியை தான் சமைக்கனும், வேற வழியில்ல” என்றாள்.

“உனக்கும் பிடிக்கு தான, பூஜா சொல்லிருக்கா” என்றவன், “ஆனா அனு!, நிஜமாவே உனக்கு சமைக்க தெரியுமா?, இல்ல நான் தான் ட்ரையலா” என்று, பயந்தது போல், பாவனை செய்தான்….

“பாவம்!!!… பசிக்குதே… னு நினச்சா…கேலியா செய்றீங்க!!…..இருபத்தி ஐந்து வயது பொண்ணுக்கு சமைக்க கூடவா தெரியாது” என முறைத்தாள் அனு.

“என்ன முறைப்பு, பேச்சை சமையல்ல காட்டு” என்று குரும்பாய் புன்னகைத்தான்.

“ஆனாலும்… உங்களுக்கு திமிர் அதிகம் தான், நா கோச்சிட்டு போனா, நீங்க பட்டினி தான்” என்றாள். 

“சாரி சாரி” என்று, பயந்தவன் போல பதரினான் கிருஷ், அதற்குள் அனுவின் வயிறு பசியில் சத்தமிட, அந்த இரவின் அமைதியில், அது நன்கு கேட்டது…

“போச்சுடா”… என அனு, நாவை கடிக்க, இருவருமே சிரித்தபடி, சமையலை துவங்கினர்.

சப்பாத்தி மாவை, கிருஷ் தேய்த்து கொடுக்க, அதை சுடவைத்தவள், அருகில் இன்னொரு அடுப்பை பற்ற வைத்து சன்னா மசாலாவையும் செய்தாள்.

கடந்தகால வாழ்வை பற்றியோ, எதிர்கால வாழ்வை பற்றியோ பேசாமல், கேலியும், கிண்டலுமாய்,  ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு சமையலை செய்தனர், இருவரும் ஆனந்தமாய் பேசி கொண்டு, நிகழ்காலத்தை ஆனந்தமாக்கினார்.

“சன்னா மசாலா எப்டி இருக்கு” என்று, கரண்டியில் கொஞ்சம் எடுத்து, கிருஷின் கையில் ஊற்றினாள் அனு.

“கடவுளே!!!… என்ன நீ தான் காப்பாத்தனும்” என்று பரிதாப பாவனை செய்தவன், ஓரக் கண்ணால், அவள் முறைப்பதை பார்த்து, சிறு புன்னகையுடனே, “இத தைரியமா டேஸ்ட் பன்னலாம் தான” என்றான்.

“உங்க விருப்பம்” என்று, கையை கட்டி, முகத்தை திருப்பிக் கொண்டாள் அனு.

“ஆஹா…. என்ன சுவை… என்ன சுவை,… அற்புதம் அனு… அற்புதம்” என கிருஷ் பாராட்ட,

“இவர் உண்மையாவே புகழ்கிறாரா!…. இல்ல, நக்கலா”, என்ற சிந்தனையோடு பார்த்தாள் அனு.

“இன்னு கொஞ்சம் பிலீஸ்”…. என்று சிறுபிள்ளை போல், கையை நீட்டியபடி, கெஞ்சும் பார்வையில் அவன் கேட்க,

ஓர் சந்தேக பார்வையில் பார்த்த அனு… இன்னொரு முறை கொடுத்துவிட்டு, தானும் ருசி பார்த்தாள், அது நிஜமாகவே நன்றாய் தான் இருந்தது.

“அமிர்தமே தோத்துடும், சூப்பர் டேஸ்ட் அனு”, என்றான் கிருஷ்.

“நீங்க எப்போ அமிர்தத்தை சாப்பிட்டீங்க”, என்று அனு கேலி செய்ய,

“உன்ன போய், பாராட்டினேன் பார்… சரி வா, மாடிக்கு போய் சாப்பிடலாம்”, என்றான்.

ஆளுக்கொரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றனர்.

அன்று பௌர்ணமி நிலவின் வெளிச்சம் பூரணமாய் இருந்தது… ஓர் விரிப்பை விரித்து விட்டு, அதில் அமர்ந்து உணவை ருசித்தனர்.

அவர்களுக்கு இருந்த பசியில், சப்பாத்தியும், சன்னா மசாலாவும், அமிர்தம்  போல தான் சுவைத்தது.

ஒவ்வொரு வாய்க்கும், அனுவை புகழ்ந்து கொண்டே, உணவை ருசித்தான் கிருஷ்.

பசிதீர, உணவருந்திய பின், பிளாஸ்கில் இருந்த சூடான டீயை இரு கப்பில் ஊற்றி, ஒன்றை கிருஷிடம் கொடுத்தாள் அனு.

அந்த அமைதியான இரவு நேரத்தில், சில்லென்று வீசிய காற்றில், சூடான டீயை குடிக்க, இதமாக உணர்ந்தான் கிருஷ்.

அந்த பூரண சந்திரஒளியில், சந்திரனை காட்டிலும், அதிக பொலிவுடன் தேவதையாய் காச்சியலித்த அனுவை கவனித்தான்.

“என்ன”, என்பதுபோல், அவள் தலையசைக்க,

“ஒன்றுமில்ல அனு” என்றான்… வார்த்தையால் ஒன்றுமில்லை என்று அவன் கூறினாலும், மனதினுள்…, 

எவ்வளவு அழகு, எவ்வளவு அறிவு, அனைத்திற்கும் மேலாக, என்ன ஒரு குணம், மனம், பண்பு, அடக்கம், அமைதி…., என பார்த்திருந்தான் கிருஷ்.

‘அனு கூறினாலே!!… இரண்டு மாத கர்ப்பம் என்று,…. அந்த குழந்தைக்கு என்ன ஆச்சு!’… என்று சிந்தித்தவன், அதையெல்லாம், அவளாக கூறும் வரை, எதையும் கேட்டு, அவளை கஷ்டப்படுத்த வேண்டாமென முடிவு செய்தான்.

“ஏமாற்றம், துரோகம், அவப்பெயர், வெறுமை இப்டி எல்லாம் இருந்த வாழ்க்கையில நம்பிக்கை, மனநிறைவு, ஆனந்தம், புகழ், அனைத்துக்கும் மேலாக நிம்மதி,.. ரொம்ப நன்றி கிருஷ்ணா”…..

“உங்க ராதா நீங்க கிடைக்க கொடுத்து வெச்சாங்களோ இல்லையோ தெரியாது…  ஆனா உங்கள போல நட்பு கிடைக்க இந்த அனு ரொம்ப கொடுத்து வெச்சவ”, என்றாள். 

“நானும்தான் அனு….. என்ன ஆனாலும் கடைசி வர, உனக்காக இருப்பேன், இது சத்தியம்”, என்றான் கிருஷ்.

அவன் கூறிய வார்த்தைகளின் அழுத்தத்தை உணர்ந்தாள் அனு.

அனு மற்றும் கிருஷின் உறவை பலரும் பலவாறு விமர்சித்தாலும், ஏன் மேகலாமாவே இருவரிடமும் நீங்க கல்யாணம் செஞ்சிக்கோங்க னு சொன்னாலும், அனுவின் காதில் ஏதும் விழவில்லை.

பதில் கூறியே ஆகவேண்டும் என்னும் வேலையில்… நட்பு நட்புதான், காதல் காதல் தான், என்று கூறிவிடுவாள் அனு… அதற்கு மேல் எவரும் எதையும் கேட்க மாட்டார்கள்…

அன்றிரவு மேகலமாவின் அறையில் அனு உறங்கிவிட்டாள்… முரளி மற்றும் பூஜா எங்காவது வெளியூர் சென்றால் இவ்வாறுதான் உறங்குவாள்… இது மாதம் ஒரு முறையாவது நடக்கும் நிகழ்வுதான்.

********************

வழக்கம்போல நடக்கும் நிகழ்வுகளை எல்லாம், தனது தமையனிடம் ஒப்பித்து விட்டு, தனது கடந்த கால நினைவுகளில் மூழ்கினாள் அனு.

ஆனந்தமாய், பெற்றோருடனும் தமையுடனும், குடும்பம் கல்வி என வாழ்ந்த சொர்க்க வாழ்வு…, அடுத்ததாக நரகமென ஆன திருமண வாழ்வு,… அடுத்த படியாக பெயரும், புகழும், கிரிஷின் நடப்பும் கிட்டிய அதிர்ஷ்ட வாழ்வு.

இம்மூன்று வாழ்வும், நலமென முடிந்தது, அடுத்த கட்டம்,… என் வளர்ச்சிக்கான படிகளை இனிதே எடுத்து வைக்க போகிறேன். இறைவன் மனவாழ்வு என்ற ஓர் கதவை மூடி, பல கதவுகளை திறந்து வைத்து விட்டார்… என்று அனு நினைத்திருந்தாள்….

சட்டென கிருஷ் கூறியது நினைவுக்கு வந்தது, ‘இன்னும் இரண்டே நாட்களில் கேரளம் செல்ல வேண்டும்…  ராதையை பார்பதற்காக மட்டுமல்ல, இது ஓரு நல்ல வெக்கேஷனும் கூட’, என அவன் கூறியது நினைவில் வர, ஷாப்பிங் செய்ய ஆயத்தமானாள்…

ஒரு நாள் முழுவதும் தனியே சென்று பிடித்த உடைகளை வாங்கினாள். ஷாப்பிங் செய்வதென்றால் அனுவிற்கு மிகவும் பிடிக்கும்… 

இப்படி தனியே சென்று ஷாப்பிங் செய்து பல நாட்களானதால், காசை தண்ணீர்போல செலவழித்து… தனக்கு பிடித்தவை அனைத்தையும் வாங்கிக் கொண்டாள்…

பழைய அனுவாய் கடை கடையாய் ஏறி இறங்கி ஆனந்தமாய் தனது தனிமையில் சுதந்திரப் பறவையாய், பல நாட்கள் கலித்து பறந்தாள்.

தொடரும்…..

Advertisement