அத்தியாயம் 7

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

உன் பார்வையில் விழுகிற பொழுது

தொடு வானத்தைத் தொடுகிற உறவு

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

உன் பார்வையில் விழுகின்ற பொழுது

தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு

ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்

இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்

இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்

என்றாலும் கால்கள் மிதக்கும்

ஓஹோ…

“ஹாய்…” ரஹ்மானின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை அது சூரியனை கண்டு மலரும் தாமரை போல் பானுவை கண்டால் மட்டும் விரியும் புன்னகை. மனதில் குடியிருப்பவளை நேரில் கண்டால் வரும் மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு. சொல்ல முடியாத அளவில்லா சந்தோசம் மனதில் இருந்தால் மட்டும் முகத்தில் வரும் மலர்ச்சி. காதலில் மட்டுமே அது சாத்தியம்.

அவனை பார்த்த நொடி நெஞ்சின் ஓரத்தில் இருந்த வெறுப்பு இரத்தத்தினூடாக கோபமாக பாய்ந்து கையில் இருந்த மருதாணியின் நிறத்துக்கு முகம் சிவந்தவள் பானு.

அவளுக்கு எதிரே நின்றவன் அவளைக் கண்டு எவ்வளவு மகிழ்ந்தானோ! அவனுக்கு எதிரே நின்றவள் அவ்வளவு அவனை வெறுத்தாள்.

அவள் முகச் சிவப்பு ரஹ்மானுக்கு வெட்கத்தால் வந்ததென்று நினைக்க தோன்றியதுதான் காதல் செய்த விந்தை. சிறு துளியேனும் கோபத்தால் வந்ததென்று நினைத்திருந்தால் அவளை பார்த்து இப்படி மலர்ந்த முகமாக நின்றிருக்க மாட்டான்.

“இளிக்கிறத பாரு… ஈன்னு” பானு மனதுக்குள் பொரும

“எப்படி இருக்க பானு? நல்லா இருக்கியா பானு”

“நல்லா தான் இருந்தேன் நீ வந்திடல இனி கெட்ட காலம் தொடங்கிடும். எப்போ பாத்தாலும் பானு.. பானுனு ஏலம் போட்டு கிட்டு. என்னமோ இவன்தான் பேர் வச்சா மாதிரி” மனதுக்குள் பேசியவள் வாய் திறந்தாலில்லை. ஆனால் நெஞ்சம் முழுக்க வெறுப்புதான் எஞ்சி இருந்தது. 

“உக்காரு” தான் அமர்ந்துகொண்டு தன்னவளையும் அமரும் படி சொல்ல அவன் கண்கள் அவளை விட்டு வேறு எங்கும் சுழலவுமில்லை. அதே விரிந்த புன்னகை.  கொஞ்சம் வெட்கம் கலந்த புன்னகை. ஆண்கள் வெட்கப்பட்டால் அழகுதான். அது தன் மனதுக்கு இனியவளால் மட்டும் உருவாகும் வெட்கம். காதல் கொண்ட நெஞ்சம் காதலியை கண்டதில் வந்த வெட்கம்.

பாடப் புத்தகத்தில் ஊறிப்போன பதின் வயது மங்கைக்கு ரஹ்மானின் முகபாவங்களை படிக்க தெரியவில்லை. படிக்கும் எண்ணமும் இல்லை. வெறுப்பு, கோபம் என்ற திரை கொண்டு மனதை மறைத்துக் கொண்டிருப்பவளோ!

“என் வீட்டுக்கே வந்து என் ரூமுக்குள்ளயே வந்து என்னையே உக்கார சொல்லுறான். எதுக்கு இப்படி இளிக்கிறான்னு தெரியல, லூசு மாதிரி” பானுவும் ரஹ்மானை பார்த்தவாறு மனதில் வசை பாட

எப்படி பேசுவதென்று தடுமாறியவன் கையேடு கொண்டு வந்திருந்த சிறு பையை கொடுத்தது “இதுல சாக்லட் இருக்கு உனக்கு புடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன்” புன்னகை மட்டும் மாறவே இல்லை.

“நான் சாக்லட் சாப்பிட மாட்டேன். எனக்கு பிடிக்காது” ரசித்து ருசித்து ஆசையாக சாப்பிடும் சாக்லட் கூட அவன் வாங்கி வந்தது என்றதும் கசக்க, பையை ஏறிட்டும் பார்க்காமல் பட்டென்று சொன்னாள் பானு.

புருவம் சுருக்கியவன் யோசனையில் விழுந்தான். ஹிதாயாவோடு எதையாவது கொறித்தபடிதான் கதையடிப்பாள் பானு. அதில் சாக்லட் என்றால் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். சாக்லட் ஐஸ் கிரீம் கூட. அதையும் வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் வைக்க சொன்னவன் சாக்லட்டை மட்டும் தன் கைகளால் கொடுத்து அவள் ஆசையாக உண்பதை காண வந்தால் பிடிக்காது என்றதோடு பையையும் வாங்க மறுத்தாள். மறுக்கிறவளிடம் நீ சாப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன் என்று சொல்லி சங்கடப்படுத்த விரும்பாமல் பையை மேசையின் மீது வைத்தவன்

“அன்னைக்கி கொடுத்த காத்தாடி பிடிச்சிருக்கா?” என்ன பேசுவதென்று புரியாமல் ஏதோ கேட்டு வைக்க

“அத அப்போவே தூக்கிப் போட்டுட்டேன். நீ கொடுத்ததுனு ஹஸன் சொல்லி இருந்தா தொட்டு கூட பாத்திருக்க மாட்டேன்”

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதுபோல் பானுவிடம் பதில் உடனுக்குடன் வரவே! தான் பார்த்த பானு இவளில்லை என்று மாத்திரம் உணர்ந்தான் ரஹ்மான்.

தங்களுடைய குடும்ப வழக்கங்களில் கணவனை ஒருமையில் அழைக்கும் பழக்கம் இல்லை. பானு ஒருமையில் அழைத்ததும்

“பானு ஏதாவது பிரச்சினையா? ஏன் ஒரு மாதிரியா பேசுற?” யோசனையாகத்தான் கேட்டான்

கோபப்பட இது நேரமல்ல இவனிடம் பொறுமையாக பேசிப்பார்களாம் என்ற முடிவுக்கு வந்தவள் ஆழ மூச்செடுத்து “யாரு உங்கள பொண்ணு கேட்டு வர சொன்னாங்க? நீங்க படிச்சி முடிச்சி கல்யாணம் பண்ணிக்கோங்க அதுக்காக நான் எதுக்கு கல்யாணம் பண்ணனும்” பட்டென்று சொல்ல இதான் பிரச்சினையா எனும் விதமாக புரிந்து கொண்டவன்

“கல்யாணத்துக்கு அப்பொறம் படி… நானே உன்ன காலேஜ்ல  கொண்டு போய் விடுறேன். படிக்க வேணாம்னு நான் சொல்லவே இல்லையே!” ரஹ்மான் பிரச்சினைக்கு நொடியில் தீர்வு கண்டு சொல்ல.

பல்லைக் கடித்த பானு பொறுமை பறக்க “கல்யாணம் பண்ணா புருஷன பார்க்கணும், அவங்க குடும்பத்தை பார்க்கணும். சமைக்கணும், துவைக்கணும், வீட்டு வேல எல்லாம் பண்ணனும். வீட்டுல இருக்குற மாதிரி சுதந்திரம் இருக்குமா? அம்மா மாதிரி மாமியார் பாப்பாங்களா? இல்ல சொந்தபந்தம்தான் படிமானு சப்போர்ட் பண்ணுமா? குறைதான் சொல்வாங்க. அதுவும் உங்க குடும்பம் இருக்கே! எவ்வளவு பெரிய குடும்பம், வீட்டுக்கு வரவங்கள கவனிக்கவே டைம் பத்தாது. மூணு மாசமாகியும் குழந்தை உண்டாக்கலைனா அதுக்கொரு பஞ்சாயத்து வைப்பாங்க. அப்பொறம் குழந்தைனு ஒன்னு வந்தா அத பார்க்கவா? படிக்கவா?. இப்போ இப்படித்தான் சொல்வீங்க கல்யாணம் ஆனா எல்லாம் மறந்துடும்” கையை ஆட்டி ஆட்டி உதடு வளைத்து, வெறுப்பாக, குத்தலாக, கோபமாக தன்னுடைய மனதில் உள்ளதை கொட்டித்தீர்த்தாள் பானு.   

மஸீஹா ஓதிய மந்திரம் இவைகள். பானு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை அறிந்தவள் வருபவர்களிடம் தன் திட்டம் பலிக்கவில்லையானால் என்ன செய்வது? கல்யாணத்தை நிறுத்த பானுவையே பயன்படுத்த திட்டம் தீட்டி புகுந்த வீடு சென்றால் ஒரு மருமகள் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கும் என்பதை சொல்லி இதுல நீ எங்க படிக்க என்று சேர்த்து சொல்லவும். பானுவின் மனதில் உழன்றுக்கொண்டிருந்தது ரஹ்மானின் பெரிய குடும்பத்தை பார்த்ததும் படிப்பை மறந்துட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தாள். 

பாடமாக்கியதை ஒப்பிப்பது போல் மனதில் உள்ளதையெல்லாம் கடகடவென சொல்ல இவள் இவ்வளவு பேசுவாளா அவள் கோபம் கூட அவன் முகத்தில் புன்னகை மலரச் செய்ய ரசனையாக பாத்திருந்தான் ரஹ்மான்.

அவள் அச்சம் சாதாரனனமானது. அதை போக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கின்றது. அதை அவன் பேசித்தான் புரிய வைக்க வேண்டும். அவள் மனம் நோகும் படியும் பேசி விடக் கூடாது. பொறுமை ரொம்ப அவசியம்.

“நீ என் உம்மா கிட்ட பேசினியே! கொடுமைக்கார மாமி மாதிரியா இருக்காங்க? உன்ன உன் உம்மாவை விட ஒரு படி மேல பாத்துப்பாங்க. நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் உன்ன நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ நிம்மதியா படிக்கலாம். ஆனா என் கூட மட்டும் இருந்தா போதும்” பொறுமையாக, நிதானமாக ரஹ்மான் சொல்லி இருந்தால் பரவாயில்லை புன்னகையோடு சொன்னதுதான் பானுவுக்கு எரிச்சலாக இருந்தது.

“அறிவுனு ஒன்னு உங்களுக்கு இருக்கா இல்லையா? நான் என்ன சொல்லுறேன் நீங்க என்ன சொல்லுறீங்க?” கோபத்தில் ஷஹீராவின் கண்கள் சிவக்க கூடவே கண்களும் கலங்கி கண்ணீர் கன்னத்தில் உருண்டு வழிந்தது.  

அவள் கண்ணீர் கண்டு நெஞ்சம் துடித்தவன் உள்ளுக்குள் வலிக்க “என்ன பானு” என்றவாறு அவள் கண்ணீரை துடைக்க கையை நீட்ட

“என்ன தொடாதீங்க உங்கள பார்த்தாவே எனக்கு பிடிக்கல. உங்களாலதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பமாச்சு. நான் உண்டு என் படிப்புண்டுனுதானே இருந்தேன். கார்ட் கொடுத்து பிரச்சினை பண்ணி, ஹாஸ்பிடல் வந்து பிரச்சினை பண்ணி. என்ன கல்யாணம் பண்ணி கொடுக்குற எண்ணத்தை நாநா மனசுல விதைச்சது நீங்க. அன்னைக்கி வந்த மாப்புள நாநா கிட்ட பேசி புரிய வச்சி என்ன படிக்க வச்சிருப்பாரு. அங்கேயும் வந்து குட்டைய  குழப்பினது நீங்க. எனக்கு உங்கள சுத்தமா பிடிக்கல” குரலிலும், பார்வையிலும் அப்படியொரு வெறுப்பை அனல் போல் கக்கினாள் பானு

ஒரு கணம் ரஹ்மானுக்கு ஒன்றும் புரியவில்லை. “தன்னை பிடிக்கவில்லையென்றா கூறினாள். காதில் சரியாகத்தான் விழுந்ததா? என்ன சொல்ல விளைகிறாள். படிக்க முடியாமல் போய் விடும் என்று பயந்து பேசுகிறாளா” நொடியில் மனம் பலவாறு சிந்திக்க

“பானு உனக்கு என்ன பிரச்சினை?” அவள் எதற்கு இவ்வாறு பேசுகிறாள் என்று புரியாமல் கேட்க

இவன் முன் அழுவதா? கண்களை துடைத்துக் கொண்டவள் அவனை நேருக்கு நேராகப் பார்த்து  “நீதான் பிரச்சினை. நீ மட்டும் என் வாழ்க்கையில் வராம இருந்தால் நான் நிம்மதியாக இருந்திருப்பேன்” அவள் குரலில் அப்படி ஒரு கடினம்.

ரஹ்மானால் அவன் காதுகளில் விழுபவைகளை நம்ப முடியவில்லை. இதயம் வலித்தது. எத்தனை வருட காதல். எத்தனை வருட காத்திருப்பு. எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது தன்னை பிடிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? இந்த திருமணத்தில் அவளுக்கு சம்மதம் இல்லை என்றுதானே அர்த்தம்.

  “ஏன்… ஏன்.. பிடிக்கல… அன்னைக்கி பிடிச்சிருக்குன்னுதானே சொன்ன?” 

“நீ என் கிட்ட வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டியா? நான் யார் கிட்ட சொன்னேன் உன்ன கல்யாணம் பண்ண சம்மதம்னு? அவங்க வந்து உன் கிட்ட சொன்னாங்களா?” விரக்தியாக புன்னகைத்தவள் கண்களில் நீர் நிறைத்து நின்றாள்.

“சரி இப்போ கேக்குறேன் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?” கனத்த இதயத்தை இறுக்கிப் பிடித்தவாறே மறுத்து விடாதே என்ற குரலில் கேட்டான்.

“எனக்கு உன்ன பிடிக்கல” சிறிதேனும் யோசிக்காமல் பட்டென்று பதில் சொன்னாள் பானு.

“ஏன்? ஏன் பிடிக்கல?” பல வருடங்களாக நெஞ்சில் சுமந்தவள் தன்னை பிடிக்கவில்லையென்று ஒரு நொடியேனும் யோசிக்காமல் சொன்னது ரஹ்மானின் இதயத்தை குத்திக் கிழித்திருக்க குழந்தை போல் காரணம் கேட்டு கெஞ்சினான்.

“பிடிக்கிறதுக்கு காரணம் இல்லாதது போலத்தான் பிடிக்கலை என்று சொல்லவும் காரணம் இல்ல. எனக்கு உன்ன பிடிக்கல, பிடிக்கல, பிடிக்கல” அவன் கண்களை பார்த்து நேராகவே கூற முழங்கால்களில் கைகளை ஊன்றி முகம் புதைத்தான் ரஹ்மான்.

ரஹ்மானால் பானுவின் மேல் கோபப்படக்கூட முடியவில்லை. இதுவே வேறு ஒருவனாக இருந்தால் அவள் கழுத்தை பிடித்திருப்பான். ஆனால் ரஹ்மானின் இதயம் கனத்து கண்கள் கலங்கி பேசக்கூட முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது.

திக்கித்திணறி.. “வெளிய நம்ம கல்யாணத்த பத்தி பேசி முடிவெடுத்துட்டாங்க. இப்போ போய் நிறுத்த எப்படி சொல்லுறது? என்ன காரணம் சொல்வேன்” குழந்தை போல் அவளை கெஞ்சலாக பார்க்க அசையாமல் இருந்தாள் அவன் பானு.

பிடிக்கவில்லை என்று சொல்பவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய ரஹ்மானின் மனம் விரும்பவில்லை. கண்களை துடைத்து மனதை திடப்படுத்தியவன் கல்யாணத்தை நிறுத்துமாறு சொல்ல வெளியே சென்றான்.

இதயம் ஒரு கண்ணாடி

உனது பிம்பம் விழுந்ததடி

இதுதான் உன் சொந்தம்

இதயம் சொன்னதடி கண்ணாடி

பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி

கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி

பெண்ணே இல்லை நின்று

கொல்லடி கண்ணே எந்தன்

வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்

என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே

இல்லை இல்லை

சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத்

தாங்குவதென்றால் இன்னும்

இன்னும் எனக்கோா் ஜென்மம்

வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்

மூச்சுக்கு முன்னூறு தடவ என் பானு என் பானு என்றிருப்பான். அவளுக்கு அவனை பிடிக்கவில்லை என்கிறாள்! என்ன செய்ய? 

கல்யாணத்தை நிறுத்த என்ன காரணம் சொல்வேன் என்று பானுவிடம் அப்பாவியாக கேட்டு வைத்தான் ரஹ்மான். பானுவுக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதே கசந்தது. அவளை காண எவ்வளவு ஆசையாக வந்தான். வந்தவனிடம் “உன்னை எனக்கு பிடிக்கவில்லை” என்று முகத்தில் அடித்தது போல் கூறிய பின்னும் அவன் உயிரோடு இருக்கிறானே!

அவன் பானுவுக்கு பிடிக்காததை அவன் என்றுமே செய்ய போவதில்லை. கல்யாணத்தை நிறுத்த என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்று கூட அவனுக்கு புரியவில்லை. நெஞ்சம் கனத்து தொண்டையடைத்து பேச்சு வராமல் கண்கள் கலங்கி கண்ணீர் தான் வந்தது. அதை அவள் பார்த்து விடாமல் அவளுக்கு முதுகுகாட்டி எழுந்து நின்றவன் கண்ணீரை சுண்டி விட்டு. மேலும் கண்ணீர் வராமல் கண்களை சிமிட்டி. அடைத்திருந்த தொண்டையையும் கனைத்து சரி செய்தான். ஆழ மூச்சுக்களை இழுத்து விட்டவாறு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தவன் நேராக வாசலுக்கு சென்று கல்யாணத்தை நிறுத்துமாறு சொல்ல அக்பரும், நவ்பரும் எழுந்து நின்றவர்கள் ஒரே நேரத்தில் “என்ன பிரச்சினை” என்றுதான் கேட்டார்கள்.

என்ன பிரச்சினை என்று எப்படி சொல்ல? அவன் பானுவுக்கு அவனை பிடிக்கவில்லை என்று சொல்லி அவள் மேல் பழியை போட்டால் அவன் வீட்டார் அவளை பத்தி தப்பாக நினைக்கக் கூடும். ஏன் முபாரக் மீண்டும் அவளை அடிக்கக் கூட செய்வான். என்ன சொல்வது? என்ன சொல்வது? ஒன்றும் தோன்றாமல் தடுமாறியவனுக்கு எடுத்துக் கொடுத்தான் முபாரக்

“நான் சொல்லல மாமா இவன நம்பாதீங்கனு, இவன் என்ன பழிவாங்கத்தான் எல்லாம் பண்ணுறான். ஷஹீ கல்யாணத்த நிறுத்துறதுதான் இவன் ஒரே நோக்கம். அன்னைக்கி வந்த மாப்பிளை கிட்ட நல்லவன் மாதிரி பேசி நிறுத்தினான். இன்னைக்கி ஊருக்கே தெரியும் இவங்க குடும்பம் பொண்ணு பார்க்க வர்ரது. வந்து பொண்ணு புடிக்கலைனு போனா. பொண்ணுக்கு ஏதோ பிரச்சினைனு ஊரே ஒரு மாதிரியா பேசும்.. ஷஹீய யாரு கல்யாணம் பண்ணுவாங்க. இதுதான் இவன் திட்டம்” கோபத்தில் முபாரக் பேச கோபப்பட வேண்டிய ரஹ்மான் அமைதியாக இருக்க ரஹ்மானின் சகோதர்கள் தான் எகிறினார்கள்.

“ஆமா… உன்ன பழிவாங்கத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொன்னேன்” ரஹ்மான் கத்தி சொல்ல மயான அமைதி அங்கே நிலவ அறையிலிருந்த ஷஹீயும் அதிர்ந்து நின்று விட்டாள்.

எப்படியோ கல்யாணம் நின்றால் போதும் என்று வெளியே நடப்பவைகளை கேட்டுக்கொண்டிருந்தவள் “உண்மையிலயே நாநாவ பழிவாங்கதான் கல்யாணம் பண்ணறேன்னு சொன்னானா?” அறையில் அமர்ந்திருந்தவள் அறையின் கதவருகில் வந்து எட்டிப்பார்க்க முகம் சிவந்து நின்றிருந்தான் ரஹ்மான்.

பத்து வருடங்களுக்கும் மேலாக காதலிக்கிறேன் என்று சொன்ன போது நம்பாதவள், கோபத்தில் சொன்னதை உடனே நம்பி விட்டாள். போதாததற்கு ரஹ்மானை வெறுப்பாக உறுத்து விளிக்கலானாள்.

“டேய் என்னடா சொல்லுற?”

 “பைத்தியம் மாதிரி பேசாத”

“அந்த பொண்ண நீ உண்மையா லவ் பண்ணுறது எங்களுக்கு தெரியுமே!” என்ற குரல்கள் ஒலிக்க உதடு கடித்து பொறுமை காத்தான் ரஹ்மான்.

ஆனால் முபாரக்கு அந்த பொறுமை இல்லை ரஹ்மானை அடிக்க அவன் மேல் பாய்ந்திருந்தான் அவன். மனவேதனையிலிருந்த ரஹ்மானும் அடக்கிக் கொண்டிருந்த கோபத்தை முபாரக் மேல் காட்ட முனைய அவர்களை விலக்குவதில் மும்முரமானார்கள் ரஹ்மானின் சகோதரர்கள்.

கோபத்தின் உச்சிக்கே! சென்ற நவ்பர் பாய் ரஹ்மானின் கன்னத்தில் அறைந்திருக்க என்றுமே அடித்திராத தந்தை அடித்ததில் ரஹ்மான் அதிர்ச்சியாக, அவரை அமைதி படுத்துவது பெரும் பாடானது.

“என்ன விளையாட்டா இருக்கா உனக்கு? அப்படி என்னடா பகை வேண்டி இருக்கு? ரவ்டியா நீ? உனக்கு இந்த வீட்டு பொண்ண புடிச்சிருக்குனு சொன்னதாலதானே குடும்பம் மொத்தமும் இந்த வீட்டுல இருக்கோம். பொம்பள புள்ள வாழ்க்கைனா விளையாட்டுவீங்களோ! உன்ன பொறுப்பான பையன்னு நானே பாத்து சந்தோசபட்டு இருக்கேன். எல்லாத்துலயும் மண்ணை அள்ளி போட்டுட்டியே! யா அல்லாஹ் இவன் இப்படி ஆக்கிட்டானே!”

சத்தம் கேட்டு மாடியிலிருந்தவர்களும் வர நவ்பர் பாய் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

“இப்போ சொல்லுறேன் கேட்டுக்க, இந்த வீட்டு பொண்ணுதான் எங்க வீட்டு மருமக, வாக்கு கொடுத்தது கொடுத்ததுதான். என்ன அக்பர் பொண்ணு கொடுப்பீங்கள்ல” நெஞ்சை பிடித்துக்கொண்டு நவ்பர் பாய் கேட்க குடும்பம் மொத்தமும் அவரை சூழ்ந்து கொண்டனர்.

எந்த ஒரு விஷயத்தையும் அக்கா பேகத்திடம் கலந்தாலோசித்தே முடிவெடுப்பவர் இன்று அக்காவை மறந்து,  எங்கே மாட்டேன்னு சொன்னால் நவ்பர் பாய்க்கு ஏதாவது ஆகிடுமோ என்று அஞ்சியே அவர் தலையசைத்திருக்க, பேகமும் வந்து ரஹ்மானை தாறுமாறாக கேள்வி கேட்கலானாள்.

“ஏன் பா… இப்படி பண்ணுற? வாப்பா இல்லாத புள்ள அவ. உனக்கும் என் பையனுக்கும் அப்படி என்ன பகை? என் பொண்ணு வாழ்க்கைல விளையாட நினைக்கிற? விட்டுடுப்பா” என்றவாறே புடவை முந்தியால் வாய் முடி அழ

“இன்னும் என்ன உம்மா இவன் கிட்ட கெஞ்சி கிட்டு முதல்ல இவன இங்க இருந்து போக சொல்லுங்க” முபாரக் எகிற

மகனை முறைத்த ரஸீனா “என் வளர்ப்பு தப்பாகிருச்சுனு சொந்தபந்தத்துக்கு முன்னாடியே சொல்லி புரிய வச்சிட்ட. ஒரு தாயோட மனச நோகடிச்சிட்ட உனக்கு தண்டனை என் மருமக வீட்டுக்கு வரும் வர நீ என் கூட பேச கூடாது” என்றவள்

ஷஹீராவின் அருகில் சென்று “நீ பயப்பாடாதேம்மா… இவன் சொன்னதுக்காக வருத்தப்படாதே. ரெண்டு மாசத்துக்கு முன்னதாகவே என் மகன்தான் உனக்கு வரப்போகும் கணவன் என்று முடிவாகிருச்சு. உன் மனசுல ஆசைகளை வளர்த்துக்கொண்டு இருப்ப. திடீரெண்டு மாத்த சொன்னா உன்னால முடியாது. எனக்கு அது நன்றாகவே புரியுது. நீ யாருக்கும் பயப்படாத. உன் மனசுல இருக்குறத சொல்லு. நீ தான் எங்க வீட்டு மருமகள் அத யாராலயும் மாத்த முடியாது. ஆனா ஒன்னு மட்டும் சொல்லு உனக்கு என் மகன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? ” ரஸீனா உறுதியாக பேச

“என்னது நான் மனசுல ஆசைகளை வளர்த்துக்கொண்டு, கனவு காண்கிறேனா?” கேலியாக எண்ணியவள் ரஸீனா தொடர்ந்து பேசியதில் “என் உம்மா உன் உம்மாவை விட ஒரு படி மேலாகவே பார்த்துகொள்வாங்க” சற்று நேரத்துக்கு முன்பாக ரஹ்மான் சொன்னது ஞாபகத்தில் வர ரஸீனா என்ன மாதிரியான ஒரு அன்னை என்றும், எப்படி பட்ட மாமியாராக இருப்பார் என்றும் புரிந்தது.

வாசலில் இருந்த அனைவரும் அவளைத்தான் பாத்திருந்தனர். அவள் பதிலுக்காக மட்டுமே காத்திருந்தனர். அவள் பதிலில் தான் எல்லாமே அடங்கி இருந்தன. நவ்பர் பாயின் நிம்மதி. பேகத்தின் மரியாதை. ரஸீனாவின் சந்தோசம்.

ரஹ்மானின் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போக ஷாம்ஷாத் உட்பட பெண்கள் அனைவரும் பானுவின் பக்கம்தான் நின்றனர்.

“இங்க பாருமா… ஒருத்தன கட்டாயப்படுத்தி உன் கூட வாழ வைக்க முடியாது. ஆனாலும் மொத்த குடும்பமும் உன் பக்கம் இருக்குற வரைக்கும் அவன் எங்க பேச்சு மீற மாட்டான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்ற ஷம்ஷாத் தன்னை மட்டும் முன் நிறுத்தி பேசியவாறு ரஹ்மானை பார்க்க

அவனுக்குத்தான் அவள் பதில் ஏற்கனவே தெரிந்து விட்டதே! அவனை பிடிக்கவில்லை என்று அவனிடமே சொன்னவள் அவனின் குடும்பத்தாரிடம் என்ன சொல்வாள்? தன்னை திருமணம் செய்ய சம்மதம் இல்லை என்றுதானே சொல்வாள். எந்த கண்கள் அவளை ஆசையாக பார்த்தனவோ! இப்பொழுது அவளின் புறம் திரும்பாமல் எங்கயோ! வெறித்தவாரு நின்றிருந்தான் ரஹ்மான்.

வஸீமின் அருகில் நின்றிருந்த ஜமீலா இங்கே என்ன நடக்கிறது என்று திகைத்து பாத்திருந்தாள். பழிவாங்கும் அளவுக்கு ரஹ்மான் கெட்டவனுமல்ல. அதுவும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடி அவன் அண்ணனை காயப்படுத்த என்றுமே நினைக்க மாட்டான். அவளுக்காக அது இது என்று வாங்கியவன் ஒரு மொபைலையும் வாங்கி ஜமீலாவின் கையில் கொடுத்து கொடுக்குமாறு கூறி இருந்தான். அனைவரின் முன்னிலையிலும் கொடுக்காமல் தனியாக கொடுக்கலாம் என்று வைத்திருந்தவள் ரஹ்மான் வைத்திருந்த சாக்லட் பையில் போட்டிருந்தாள். அது மட்டுமா நிச்சயதார்த்தம் போல் எதுவும் வேண்டாம் அவர்களுக்கு வீண் செலவு பெண் பார்த்து விட்டு வரும் பொழுது பேசி முடித்ததுக்கான அடையாளமாக அணிவிக்கலாம் என்று ஒரு தங்க மாலையை கூட வாங்கி வந்து கையில் கொடுத்தானே! அவளுக்காக ஒவ்வொன்றையும் யோசித்து  பார்த்துப் பார்த்து செய்பவன் அவன். கண்டிப்பாக இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை இருவரும் தனியாக பேசிய பின் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான்” ஜமீலாவுக்கு கொஞ்சம் புரிய அந்த சூழ்நிலையில் தம்பியோடு பேசவும் முடியாது. பானு என்ன சொல்ல போகிறாள் என்பதில் கவனமானாள்.

“நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன். இப்போ வேணாம் என் காலேஜ் படிப்பு முடியட்டும்” தெளிவாக தன் முடிவை பானு கூற அதிர்ச்சியாக அவள் புறம் திரும்பினான் ரஹ்மான்.

அவள் தானா பேசியது. திருமணம் செய்து கொள்கின்றேன் என்று கூறினாளா? அப்போ ஏன் பிடிக்கவில்லை என்று சொன்னாள் ரஹ்மான் குழப்பமாக பானுவையே பாத்திருக்க

அவளும் அவனைத்தான் பாத்திருந்தாள் சற்று நேரத்துக்கு முன்தான் அவனை பிடிக்கவில்லை என்று கூறினாள். இப்பொழுது அவளே அவனை திருமணம் செய்ய சம்மதமும் கூறுகிறாள் என்றால் அவன் பார்வை அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

அவனை பார்வையை தவிர்த்தவள் “என்ன நீ பழிவாங்க கல்யாணம் செய்ய போறீயா? உன்ன கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையை நரகமாக்குறேன். நாலு வருஷம் நாலே! வருஷம் என் படிப்பு முடியும் வரைக்கும் சந்தோசமா இருந்துக்கோ! அதுக்கு பிறகு நான் பண்ணுற டாச்சர்ல நீ நாநா பக்கம் தலவச்சி கூட படுக்கக் கூடாது” மனதுக்குள் பல திட்டங்களை வகுத்தவள், பல முடிவுகளோடு தான் திருமணத்துக்கு சம்மதம் கூறி இருந்தாள்.

பிடிக்கவில்லை என்பவனை திருமணம் செய்து எப்படி வாழ போகிறாள். குடும்பத்தாரின் அன்பான பேச்சை கேட்டு சம்மதித்திருந்தால் அவள் தன்னை பிடிக்கவில்லை என்பதும் மனதில் இருந்து வந்த வார்த்தை இல்லையோ! ரஹ்மானால் அவளை புரிந்துகொள்ள முடியாமல் பார்த்திருந்தான்.

ஜமீலாவும் ஒன்றும் புரியாமல் குழம்பினாள். ஷஹீரா தான் ஏதாவது சொல்லி இருப்பாள் என்று அவள் கணிக்க அவளோ! கல்யாணம் செய்ய சம்மதம் என்கிறாள் என்னதான் நடக்கிறது இங்கே!

“என்னம்மா சொல்லுற?” ரஸீனா கேட்க

“மருமகள் சொல்லுறதும் சரிதான். அவ படிப்பை முடிக்கட்டும். அதுக்குள்ளே எங்க பையனுக்கு நல்ல புத்திய கொடுன்னு துஆ கேட்கலாம்” குல்தூம் சொல்ல

“சரி உன் இஷ்டம் போல் நடக்கட்டும் மா..” என்றவர்கள் விடை பெற்று சென்றார்கள்.