Advertisement

அத்தியாயம் 30 -2

“என்ன டா நடக்குது இங்க? ரோஜா படம் அரவிந்தசாமி மாதிரி அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கச்சிய பிடிச்சிருக்குனு சொல்லுறான்” அஸ்ரப் ரஹ்மானின் காதை கடிக்க

“பேசாம இரு டா. எனக்கும் ஒன்னும் புரியல”

அன்று வண்டி எண்ணை போட்டோ பிடித்த பாஷித் அது வேறு மாகாணத்திற்குரிய வண்டி என்றதும் அவர்களை தேடுவது முடியாத காரியம் என்று விட்டு விட்டான்.

ஆனால் அவன் அறியாதது காலேஜ் படிக்க வந்த மின்ஹா அவளுடைய ஸ்கூட்டியையும் கொண்டு வந்து விட்டாள் என்பதை. அவளை பார்க்க அன்று ஊரிலிருந்து குடும்பத்தாரோடு வந்திருந்த அமீரா வண்டியை ஓட்டி பாஷித்தின் வண்டியின் மீது மோதி இருந்தாள்.

அறைக்குள் வந்தவன் மின்ஹாவை கண்டதும் முகத்தை சுளித்தாலும் அமீரா கண்டிப்பாக அங்கே இருப்பாள் என்றறிந்தவன் எதுவும் பேசாது வெளியே வந்து மணப்பெண்ணாக இருக்கும் மின்ஹா வேண்டாம் அவளின் சகோதரித்தான் வேண்டும் என்றான்.

இது அறையில் இருந்த மின்ஹாவின் காதில் மட்டுமல்ல சமயலறையில் இவர்களுக்கு சிற்றுண்டிகளை அடுக்கிக் கொண்டிருந்த அமீராவின் காதிலும் விழத்தான் செய்தது.

இதை கேட்டு அஸ்ரப் ரஹ்மானின் காதை கடிக்க மின்ஹாவின் தந்தை குழம்ப, மின்ஹா அறையிலிருந்து வெளியேறி

“எனக்குதான் தங்கையே இல்லையே! நீ யாரை கேக்குற” என்றாள் திமிராக

யோசனையாக அவளை பார்த்த பாஷித் அன்று பார்த்தவளின் முகத்தை கண் முன் கொண்டு வந்து இருவருக்குமான முக ஜாடையை ஒப்பிட்டவன் கொஞ்சம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கு என்று உறுதி செய்து கொண்ட பின்

“உனக்கு தங்கை இல்லா விட்டால் என்ன உன் சாச்சி, பெரியம்மா பொண்ணு இருப்பாங்கல்ல” என்றான்.

நக்கலாக அவனை பார்த்தவள் “என் உம்மா அவங்க குடும்பத்துக்கு ஒரே பெண் வாரிசு” என்றாள் அதே திமிராக

பாஷித்தின் குடும்பம் இங்கே என்ன நடக்கிறது என்று குழம்பிப் போய் பார்க்க, தங்களுடைய பெண் ஏன் இவ்வாறு பேசுகிறாள் என்று குழம்பினார் அவளை பெற்றவர்கள்.

“அப்போ அன்று உன் கூட வந்தவள் யார்? உன் முக ஜாடையில் தான் இருந்தாள் அவள்” பாஷித்தும் விடாது கூற

“அவளா? இந்த வீட்டு வேலைக்காரின்னு சொன்னா மிகையாகாது. என்றவள் அமீரா” என்று கத்த அடித்துப் பிடித்து சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் அமீரா.

அங்கே பாஷித்தைக் கண்டு திடுக்கிட்டவள், மின்ஹாவை பயப்பார்வை பார்கலானாள்.

அமீராவை கண்டதும் நிம்மதி பெருமூச்சிட்டவன் “இந்த பொண்ணை நான் கல்யாணம் செய்ய விருப்ப படுகிறேன்” என்று மின்ஹாவின் தந்தையை நோக்கி கூற

“இவ என் தங்கச்சி பொண்ணுதான். ஆனா…”

“அவ ஸ்கூல் மட்டும் தான் முடிச்சிருக்கா. உம்மா, வாப்பா கிடையாது. சொத்து,சொகம் என்று எதுவும் கிடையாது. சொந்தபந்தம் எங்க குடும்பம் மட்டும்தான். கல்யாண செலவும் பெருசா நாம செய்ய மாட்டோம். துணிமணி, நகைநட்டு எதுவும் எங்க கிட்ட எதிர்பார்க்காம கல்யாணம் பண்ணுறதா இருந்தா பண்ணிக்கோங்க” என்ற மின்ஹா “இதைத்தானே வாப்பா சொல்ல தயங்குறீங்க எதுக்கு பயப்படுறீங்க? இவனெல்லாம் ஒரு ஆளு? அழகுக்கு மயங்கி சுத்துவான் சொத்துப்பத்து இல்லனதும் விட்டுட்டு போயிடுவான்” என்று கேலியாக புன்னகைத்தாள்.

பல்லை கடித்த பாஷித் “எதுவும் வேணாம். எல்லாம் நான் போடுறேன். இப்போவே நிக்காஹ் பண்ணி கூட்டிட்டு போறேன். பண்ணி கொடுக்கிறீங்களா?” உறுதியாகவும், கம்பீரமாகவும் ஒலித்தது அவன் குரல்.

“சபாஷ் அப்படி போடுடா” அஸ்ரப் சொல்ல ரஹ்மான் தம்பியின் தோளில் கை வைத்து அழுத்தியிருந்தான். 

மின்ஹாவின் வாப்பாவுக்கு மறுப்பு சொல்ல காரணம் இருக்கவில்லை. அமீராவையும் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. தனது மகளை கரை சேர்த்த பின்தான் தங்கை மகள்.

நவ்பர் பாயின் குடும்பத்தை பற்றி முறையாக விசாரித்ததில் மகளை கொடுக்க முன் வந்தவர். தங்கை மகளை கொடுக்க மறுக்க தன் மகளுக்கு பார்த்த வரன் என்று காரணம் சொல்ல முடியாது. மகளை கட்டி கொடுத்த பின் அமீராவை திருமணம் செய்து கொடுக்கா விட்டால் அவரைத்தான் ஊர் தூற்றும் அதுவும் இப்படி ஒரு சம்பந்தத்தை மறுத்து விட்டார் என்று அறிந்த பின் காரி துப்பும். பெரிய மனிதனாய் நடந்து கொண்டால் தான் தன் மகளுக்கும் நல்ல வரன் வரும் என்று நொடியில் கணக்கு போட்டவர், மறுப்பு தெரிவிக்குமாறு கண்களால் சொல்லும் மனைவியை கண்களாளேயே அடக்கி   சம்மதித்து விட்டார்.

அதன் பின் காதிக்கு அழைப்பு பறக்க, உடனடி ஷாப்பிங் நடந்தேறியது. மணமக்களுக்கான உடையும், மஹருக்கான நகைகளும் வாங்கப்பட்டது.

காதியும் வர, மணமகளும் தயாராகி வந்தாள். மின்ஹாதான் அமீராவை தயார் படுத்தினாள். ஹாஜராவாலும் முடியவில்லை. ஷஹீயையும் மின்ஹா நெருங்க விடவில்லை.

பெண்கள் அறையில் அமர்ந்திருக்க வாசலில் பாஷித், அமீரா நிக்காஹ் நடைபெற்றுக்கொண்டிருக்க அமீரா மின்ஹாவின் கையை பற்றிப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

இந்த பெண் இவளை இவ்வளவு பேசியும் இவள் அவளை சார்ந்தே இருக்கிறாளே! என்று ஹாஜராவும், ஷஹீயும் பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.

முபாரக்கும், அஸ்ரப்பும் சாட்ச்சி கையொப்பமிட்டு நிகாஹ்வை நிறைவேற்றி இருக்க, மணியும் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. முனவ்வர் வேறு பசியில் அழ ஆரம்பித்திருக்க அந்த வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மனம் வராமல் பெரியவர்கள் அமர்ந்திருக்க, மின்ஹாவின் அன்னை பரிமாறியவைகளை யாரும் தொட்டு கூட பார்க்கவில்லை.

பெரியவர்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடியாமல் முர்ஸீத் அவைகளை ருசி பார்க்க, அந்த வீட்டாரின் முன் அவனை அதட்ட முடியாமல் முபாரக் திணற, கணவனை முறைக்கலானாள் ஹாஜரா.

அதை புரிந்து கொண்ட அமீரா முர்ஸீத்துக்கு ஊட்டிவிட ஷஹீ அவளை அன்பாக பார்த்தாள். படிக்காத பட்டிக்காடு என்று மின்ஹா சொன்னாலும் பாசத்துக்கு கட்டுப்பட்டவள் என்று மின்ஹா அவளை பற்றி தரைகுறைவாக கூறிய பின்னும் அவளோடு நடந்து கொண்ட விதத்தில் அமீராவின் குணம் தெரிய பாஷித்தின் தேர்வு சரியானதுதான் என்ற முடிவுக்கு வந்தாள் ஷஹீ.

நிக்காஹ் முடிந்து வீட்டாரிடம் விடை பெரும் பொழுது மின்ஹாவை கட்டிக்கொண்டு ஓவென அழலானாள் அமீரா. அவளை ஒரு புரியாத புதிராக தான் பாஷித்தின் குடும்பம் பார்த்து வைத்தனர்.

“தாங்களே! கொண்டு வந்து விடுறோம், சாப்பிட்டு விட்டு போங்க” என்ற அவர்களின் எந்த வார்த்தைக்கும் எந்த மதிப்பையும் பாஷித் கொடுக்கவில்லை.

வண்டி நேராக சென்றது ஒரு ஹோட்டலுக்கு இரவு உணவை முடித்துக் கொண்டவர்கள் வீட்டுக்கு வரும் வழியில் முபாரக் குடும்பத்தை அவர்கள் வீட்டில் இறக்கி விட அய்நாவும் அவள் கணவனும் இவர்களுக்காக காத்திருந்தனர்.  

இவர்கள் நால்வரும் வீடு வந்ததும் ரஹ்மான் பாஷித்திடம் முதல் கேட்டது “வலீமா விருந்தை எப்போது வைக்கலாம்” என்பதையே!

“முதல்ல உம்மாகும், வாப்பாகும் போன் பண்ணி நடந்தத கல்யாணத்த பத்தி சொல்லிடுங்க நாநா” என்றவன் சிரித்து விட்டு அறைக்குள் நுழைந்திருந்தான்.

அவனை கண்டதும் கட்டிலில் அமர்ந்திருந்த அமீரா எழுந்து விட்டாள்.

“எந்திருச்சு மரியாதையல்லாம் கொடுக்க வேணாம். உக்காரு. உன் பேரென்ன?” மின்ஹா அழைத்த பொழுதே அவள் பெயரை குறித்து கொண்டான் தான். ஏதாவது பேச வேண்டும் என்றே கேட்டான்.

“அமீரா”

“என் பேர் பாஷித்”

“உனக்கு நாளைக்கு போய் டிரஸ் எல்லாம் வாங்கலாம் சரியா. இன்னைக்கு ஒரு நாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்க, என்றவன் அலுமாரியை குடைய”

“டிரஸ் இருக்கு” என்றாள் மெதுவாக

வீட்டில் இருந்து எடுத்து வந்திருப்பாளோ! கோபம் வந்தாலும் அவளை முறைக்கவும் முடியாமல் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டவன் அவளையே பாத்திருக்க,

“இல்ல அவங்க இந்த பேக தந்தாங்க அதுல ரெண்டு சுடிதார் ஒரு நைட்டி இருக்கு”

“எவங்க தந்தாங்க” என்றவன் அதை திறந்து பார்க்க அது புதிதாக வாங்கப்பட்டு பில்லோடு இருக்க

“அவங்க… உங்க கூட வந்தாங்கல்ல உங்க மைனி”

“ஷஹீ மைனியா?”

“ஆமாம்” என்று மேலும் கீழும் தலையசைத்து பதில் சொன்னாள் அமீரா.

“சரி ஏன் டிரஸ் மாத்தல”

திருதிருவென முழித்தவள் “அவங்கள கொஞ்சம் கூப்பிடுறீங்களா?”

“அவங்க எதுக்கு? அவங்களே! பாவம் டயட்ல தூங்கி இருப்பாங்க இப்போ போய் அவங்கள எழுப்ப முடியாது”

“உங்க உம்மா” அன்று ரஸீனா மின்ஹாவை பெண் பார்க்க வந்ததை ஞாபகம் வைத்து கேட்டாள் அமீரா.

“உம்ராஹ் போய் இருக்காங்க” அவனோடு பேசுவாளா என்ற சந்தேகம் பாஷித்துக்கு இருந்தது.

ஆனால் அமீரா பேசினாள். சகஜமாக பேசினாள். அது அவன் அன்று அவளோடு நல்ல முறையில் நடந்து கொண்டதினாலயா? அல்லது கணவன் என்ற உரிமையினாளையா? என்பதுதான் பாஷித்துக்கு புரியவில்லை.

“ஓ..” அதையும் மெதுவாகவே சொன்னாள்.

“என்ன பிரச்சினை” வீட்டில் உள்ள பெண்களை அழைக்கிறாள் என்றால் எதுவோ பிரச்சினை என்று நொடியில் புரிந்து கொண்டவன் உடனே கேட்க

அவள் அணிந்திருந்த லெஹாகாவின் சட்டையில் உள்ள ஹூக் மாட்டிக்கொண்டு கலராமல் அவளுக்கு கண்ணாமூச்சி ஆடுவதை அவனிடம் எவ்வாறு சொல்வாள். அதை கழற்ற முயற்சி செய்தவள் முடியாமல்தான் என்ன செய்யலாம் என்று அமர்ந்து விட்டாள்.

“சொல்லு மா? என்னதான் பிரச்சினை?”

தயங்கி தயங்கி ஒருவாறு சொல்லி முடித்தவள் அவன் முகம் பாராது கையை பிசைத்து கொண்டு தலை குனிந்தாள்.

அவளை எண்ணி சிரிப்பாக இருந்தாலும். தன்னிடம் சொன்னதே பெரிய விஷயம் என்றெண்ணியவன். அவள் புறம் அடியெடுத்து வைக்க அவன் ஒவ்வொரு காலடி ஓசைக்கும் மேனி நடுங்கலானாள் அவள்.

தலையில் அணிந்திருந்த துப்பட்டாவை மார்புக்கு குறுக்காக அணிந்திருந்தாள். நிக்காஹ்வுக்காக அந்த நொடி நேரத்தில் தலை அலங்காரம் கூட செய்திருக்கிறாள். முகத்துக்கு கொஞ்சம் ஒப்பனை வேறு அவள் அழகை கூட்டி இருந்தது.

பாஷித் அவளை நெருங்கி இருக்க, கண்களை இறுக மூடி கீழுதட்டை மேல் பற்களால் கடித்தவாறு நின்றிருந்தாள் அமீரா.

அவளின் தோற்றம் அவனுக்கு சிரிப்பை மூட்டினாலும் புதிய சூழ்நிலைக்கு அவள் பழகும் வரை அவளை தொந்தரவு செய்ய கூடாதுனு நினைத்தவன். அவள் தோள் தொட்டு திருப்ப மேனி சிலிர்த்தாள் பெண்ணவள்.

ஒரு ஆணின் முதல் ஸ்பரிசம் அவளை தீண்ட உள்ளுக்குள் குளிரெடுத்தது. கண்களை மட்டும் திறந்தாளில்லை. கார்மேகம் விரித்தது போல் முதுகை ஆட்கொண்டிருந்தது அவள் கருங்கூந்தல். ஒன்றாக சேர்த்து பிடித்தவன் கூந்தலை முன்புறம் தோளில் போட கண்களை திறந்தவள் தன் மடமையை எண்ணி புன்னகைத்தவாறு கூந்தலை முன் புறம் ஒதுக்கிக் கொண்டாள். 

ஹூக்கை பார்த்தால் அதை யாரோ பல்லால் கடித்து இறுக்கி இருப்பது போல் இருந்தது. சாதாரணமாக மாட்ட வேண்டியதை யார் இவாறு செய்திருக்க கூடும். வேறு யார் மின்ஹாதான் அந்த வேலையாய் பார்த்தாள் என்று பாஷித்திடம் யார் சொல்வது. அதனால் தானே இப்பொழுது இந்த காட்ச்சி அரங்கேறிக்கொண்டிருப்பதும்.

மின்ஹாவாகத்தான் இருக்கும் என்று ஊகித்தவன் “ஆமா யாரு உனக்கு ஹூக்கை மாட்டி விட்டது” பதில் தெரிந்த கேள்வியைத்தான் அமீராவிடம் கேட்டான்   

அவளும் அப்பாவியாக “போட போட கழண்டு கிட்டே  இருக்குனு மின்ஹா தான் குறடால இறுக்கிட்டா”

“ஏன் சுத்தியலை கொண்டு ஒரு ஆணியை வச்சி முதுகோடு சேர்த்து அடிச்சி இருக்க வேண்டியது தானே”  

கிளுக்கி சிரித்தவள் ஒன்றும் சொல்லவில்லை.

கொஞ்சம் குனிந்து பல்லால் கடித்து ஹூக்கை திறக்க முற்பட அது கழன்று வர மறுத்தது. ஆனால் அவனின் மூச்சுக்காறு பட்டு பெண்ணவள் தான் கூசி சிலிர்த்தாள்.

அவள் தடுமாற்றம் வேறு பாஷித்தை பாடாய் படுத்த அவளை விட்டு விலகியவன் வேறு வழியில்லாது கத்தரிக்கோலை எடுத்து ஹூக்கை கத்தரித்து விட்டான்.

“இப்போ சரி போ” என்றவன் கட்டிலில் போய் படுத்துக்கொள்ள அமீரா அசையாது நின்றிருந்தாள்.

“இப்போ என்ன?”

“டிரஸ் மாத்தணும் நீங்க கொஞ்சம்” என்று இழுக்க

“அது பாத் ரூம் தான் அங்க மாத்து. அலுமாரில புது டவல் இருக்கு எடுத்துட்டு போ. நாளைக்கு நீ என்ன சோப்பு பாவிக்கிற, ஷாம்பு பாவிக்கிரனு சொன்னா வாங்கிட்டு வரேன்” எல்லாம் ரஹ்மான் செய்தவற்றை கண்டிருப்பதால் தானகாவே வாயில் வந்தது.

“ஷாம்பு எல்லாம் போட மாட்டேங்க” எதோ ஒரு சோப்பின் பெயரை சொன்னவள் கூந்தலுக்கும், மேனிக்கு அதுதான் என்று சாதாரணமாக சொல்லி விட்டு குளியலறைக்குள் நுழைந்திருக்க, அந்த வீட்டில் அமீராவின் எந்த ஒரு சாதாரண ஆசையும் நிறைவேறவில்லை என்பதை மாத்திரம் நன்கு உணர்ந்து கொண்ட பாஷித்

“இது அன்னைக்கே புரிஞ்சிருத்தா உன்ன தேடி வந்திருப்பேன் டி” என்று மானசீகமாக அவளிடம் மன்னிப்பு வேண்டலானான்.    

  

Advertisement