Advertisement

அத்தியாயம் 30-1

சில வருடங்களுக்கு பின்

ரஹ்மானின் வீடோ அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அது முபாரக் ஹாஜராவின் இரண்டு செல்ல புதல்வர்களுக்கு ஆடை அணிவிக்கத்தான்.

ஷஹீயும் ஹாஜராவும் தயாராகி சோபாவில் அமர்ந்திருக்க, ரஹ்மான், பாஷித், முபாரக், அஸ்ரப் என்று நால்வருமே அந்த இரண்டு வாலில்லா சின்ன குரங்கு குட்டிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கலாயினர்.

“டேய் கொஞ்சம் நேரம் ஒழுங்கா ஆடாம இருடா… டைம் வேற ஆகுது” ரஹ்மான் மூத்தவனை அதட்ட அஸ்ரப் அவனை பிடித்துக்கொள்ள ரஹ்மான் அவனுக்கு டி ஷர்ட்டை அணிவித்தான்.

“ஏன் டா உன்ன குளிப்பாட்டி ட்ரெஸ்ஸ போட்டு விட்டா பின்னால தான் உனக்கு ஆயி வருமா? வந்தா ஒழுங்கா போய் வரணுமில்ல. தண்ணி விளையாடணுமா?” சொல்லியவாறே முபாரக் அவனின் இரண்டாவது புதல்வனின் பின் பக்கத்தில் இரண்டு அடியை கொடுத்து விட்டு ஜட்டியை அணிவிக்க அவனை தூக்கி பிடித்திருந்தான் பாஷித்.

வாப்பா அடித்ததில் விம்மியவாறு உம்மாவை ஏறிட்டவன் குற்றப்பத்திரிக்கை வாசிக்க கன்னத்தில் கைவைத்து அங்கே நடக்கும் அக்கப்போரை பார்த்துக் கொண்டிருந்த ஹாஜரா இன்னொரு குழந்தையை எட்டு மாதம் வயிற்றில் சுமந்த படிதான் அமர்ந்திருந்தாள். அவளால் மூச்சு விட கூட முடியவில்லை. இதில் பேகம் தான் இவர்கள் இருவரையும் கட்டி மேய்ப்பாள். இங்கு அவளும் இல்லை. ஆண்களிடம் பொறுப்பை கொடுத்து விட்டு அமர்ந்து விட்டாள்.

“அடேய் கால கொஞ்சம் தூக்குடா” ஐந்து  வயதான முர்ஸீதை மீண்டும் அதட்டினான் ரஹ்மான் அவனோ கையிலிருந்த அலைபேசியில் லயித்திருந்தான். கோபம் கொள்ளவும் முடியாமல், கடியாவும் முடியாமல் அவன் காலை தூக்கிக் கால்ச்சட்டையை அணிவிக்கலானான் ரஹ்மான்.

தனது மூன்று வயது மகனுக்கு கால்ச்சட்டையை அணிவித்து முடித்த முபாரக் “பாஷித் டி ஷர்ட்டை போடும் வரைக்கும் பிடிச்சிக்க ஷூ போட்ட பிறகு மறந்தும் கீழ வச்சிடாத வெளில போய் டப்புக்கடிலதான் நிப்பான்” ஆம் அந்த சின்னவனின் ஒரே பொழுது போக்கு குளிப்பதுதான். குளியலறை திறந்திருந்தால் போதும் உள்ளே நுழைந்து குழாயை திறந்து குளிக்க ஆரம்பித்து விடுவான்.

அவனுக்கு நேரங்காலம் எல்லாம் கிடையாது. எங்கே தண்ணீரை பார்த்தாலும் பாய்ந்து விடுவதால் முனவ்வர் என்ற அவன் பெயர் கூட யாருக்கும் தெரியவில்லை. தண்ணீர் பாம்பு, நீர் காகம், கடலாம, என்று ஒவ்வொரு பெயரால் அழைக்கப்பட்டான். எந்த விலங்கின் பெயர் சொல்லி கேட்டாலும் அது அவனைத்தான் என்பது மற்றவர் புரிந்துகொள்வதுதான் தனி சிறப்பு.

“ஏன் மைனி வந்து மூணு மணித்தியாலம் கூட ஆகல அதுக்குள்ளே இந்த அக்கபோர். வீட்டுல எப்படி சமாளிக்கிறீங்க?” ஷஹீக்கு தலைவலியே வந்து விடும் போலிருக்க ஹாஜராவிடமே கேட்டாள்.

“அத ஏன் கேக்குற? கல்யாணம் ஆனா புதுசுல உன் நாநா கூட சண்டை போட டைம் பத்தலை. மூத்தவன் முர்ஸீத் பொறந்ததும் சரி நைட் தூக்கம் போச்சு. அவன் எங்க நைட் தூங்கினான். அழுது கிட்டே தானே இருந்தான். பகல்ல தூங்குறான். அவனை சமாளிச்சு. காலேஜ்க்கு போய் படிக்கிற வேலைனு இருக்குற போ ரெண்டாவதும் உண்டாகிரிச்சு. இவன் சரியான வாலு உண்டானதிலிருந்தே படுத்தி எடுத்துட்டான். உன் நாநா கூட பேச கூட நேரமில்லன்னா பாரேன். மூணாவதவாது பொண்ணு பொறந்தா நல்லா இருக்கும். அதுவும் அமைதியான பொண்ணா” நொந்தவளாக சொன்னாள் ஹாஜரா.

ஹாஜரா அடிக்கடி ஹானாவை பார்த்ததாகவும், நேசித்ததாகவும் சொல்லி முபாரக்கை டாச்சர் செய்ய ஆரம்பித்து உப்பு, மொளகா என்று அவனுக்கு தண்டனை வழங்கிக் கொண்டிருந்தவள் வார்த்தைகளாலும் அவனை காயப்படுத்த ஆரம்பிக்கலானாள்.

இதற்கு ஒரே வழி அவள் அதை பற்றி சிந்திக்க கூடாதென்று முடிவெடுத்தவன் அவள் அதை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் முத்தமிட்டு அவளை கொள்ளையடிக்கும் வேலையில் இறங்கலானான். விளைவு அவள் கற்பமானதே!

குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகும் வரை அவளால் வேறு எதையும் சிந்திக்க கூட முடியவில்லை. அதன் பின் அந்த வாழ்க்கைக்கு பழகிக் கொண்டவள் மீண்டும் கணவனை வசை பாட ஆரம்பிக்க பிறந்தவன்தான் முனவ்வர்.

அவன் பிறந்த பிறகு ஹாஜராவல் பழசை என்ன அந்த நாளை கூட நினைத்து பார்க்க பயமாக இருந்தது. கொஞ்சம் தவறினால் ஏதாவது தண்ணீர் இருக்கும் இடத்தில் இருப்பதால் அவனை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை. இதில் அவள் எங்கே கணவனை கவனிப்பாள். பேகம் இருப்பதால் வீட்டு வேலைகளும், குழந்தைகளின் வேலைகளும் ஒழுங்காக நடை பெறுகிறது. நல்லவேளை அவன் உண்டான நேரம் காலேஜ் படித்து முடித்திருந்தாள். இல்லையென்றால் படிப்பை பாதியில் நிறுத்திதான் இருக்க வேண்டி இருக்கும்.

முபாரக்கும் பொறுப்பான கணவன்தான். மளிகை கடை அதன் பின் வீடு. குழந்தைகள், மனைவி என்று இருப்பவன். கடையையும் ரஹ்மான் கூறியதை போலவே இந்த சில வருடங்களில் விசாலாமாக்கி இருந்தான்.

இரண்டு குழந்தைகளோடு ஹாஜரா கணவனை நன்கு புரிந்து கொண்டிருந்தாள். குழந்தைகளுக்கு உணவூட்டுவதிலிருந்து, குளிப்பாட்டுவது முதல் எல்லா வேலைகளையும் முபாரக் பார்ப்பான். முகம் சுளிக்க மாட்டான். அதற்காக அடிக்க மாட்டான் என்றெல்லாம் இல்லை. சொல் பேச்சு கேட்கா விட்டால் சில அடிகள் விழும்.

அந்த நேரம் ஹாஜரா நெருங்க மாட்டாள். ஹாஜரா அடித்தால் முபாரக் அரவணைப்பான். இப்படி மாறி மாறித்தான் அன்பையும் கண்டிப்பையும் காட்டினார்கள். இருந்தும் சேட்டைக்கு குறைவில்லை. அடிக்கும் குறைவில்லை.

பேகமும் “அடிக்காதீங்கப்பா… குழைந்தைங்கன்னா அப்படிதான் நீயும் ஷஹீயும் பண்ணாத சேட்டையா?” என்பாள்.

“அப்போ நீங்களும் எங்களை அடிச்சிருக்க கூடாது” என்று உம்மாவின் கன்னம் கிள்ளி முத்தமிடுவான் முபாரக்.

இரவின் தனிமையில் “என்னதான் நானும் ஷஹீயும் சேட்ட பண்ணாலும் இது குரங்கு சேட்ட ஹாஜி. நீ சின்ன காலத்துல என்னெல்லாம் பண்ணி இருக்கானு தெரியலையே! உன் கிட்ட இருந்துதான் வந்திருக்கும்” என்று அவளை வம்பிழுத்து சில அடிகளையும் பெற்றுக்கொள்வான்.

ஹஸனும் காலேஜ் படித்துக்கொண்டே கடைக்கு வந்து செல்கிறான் அதனால் முபாரக்கால் வீட்டையும் கவனிக்க முடிகிறது.

ருகையாவும் காலேஜ் செல்லும் பெண். பாஷித்க்கு அவளை பேசும் படி மஸீஹா கூற முறையில் தங்கை என்பதால் தயங்கிய ஷஹீ ரஹ்மானிடம் கேட்டுப்பார்க்கிறேன் என்று கூறி இருந்தாள்.

மஸீஹாவின் வழியில் நவ்பர் பாயின் அக்கா ஷம்ஷாத் உறவாம் அந்த வழியில் பார்த்தால் உறவு சரியா வரும் என்று கூற சரி என்ற ஷஹீ பாஷித்திடமே நேரடியாக கேட்டுப் பார்த்தாள்.

உறவு முறையில் மாத்திரமல்ல தங்கையாகவே பார்த்து விட்டேன் வேண்டாம் என்று மறுத்தவனின் கண்ணுக்குள் அன்று பார்த்தவளின் முகமும் மின்னலிடிக்க தலையை உலுக்கிக் கொண்டான்.

இந்த அக்கப்போர் அவனுக்கு பெண் பார்க்க செல்லத்தான். மனசுக்கு பிடித்த பெண் என்று யாராவது இருந்தாள் சொல்லிவிடுமாறு ரஸீனாவும் அவனிடம் பல தடவை கேட்டுப் பார்த்து விட்டாள்.

அப்படி யாருமில்ல உம்மா இருந்தா சொல்ல மாட்டேனா? நீங்களே ஒரு நல்ல பொண்ணா பாருங்க” என்பான்

அவளும் “நாலு கல்யாணத்துக்கு போனா நாலு பொண்ண பார்த்து வச்சி கல்யாணம் பண்ணிக்கலாமா வேணாமான்னு யோசிக்க மாட்டானுகளா? எங்க உசுர வாங்குறானுங்க. நல்ல பொண்ணுக்கு நான் எங்க போறது” முணுமுணுத்தவள் இரண்டு மூன்று தரகர்களிடம் சொல்லி வைத்து ஒருவாறு குடும்பத்து ஏற்றது போல் ஒரு பெண்ணை தேடி கண்டு பிடித்திருந்தாள்.

நவ்பர் பாயும் ரஸீனாவும் ஜமீலா மற்றும் வஸீமும் மாத்திரம் தான் போய் பெண்ணை பார்த்து விட்டு வந்திருந்தார்கள் அவர்களுக்கு முழு திருப்தி. பாஷித் பெண்ணை பார்த்தால் மற்றத்தை மேற்கொண்டு பேசலாம் என்றிருக்க, அவன் நாற்பது நாட்கள் ஜமாத்தில் போய் இருந்தான்.

அவன் வந்ததும் ரஹ்மான் உம்மா, வாப்பா மற்றும் பேகத்தையும், ஷம்சாத்தையும் உம்ராஹ் அனுப்பி வைத்திருக்க பத்து நாட்கள் அவர்கள் மக்கா சென்றிருக்கும் இந்த நேரத்தில் பெண்ணை பார்த்து விட்டு வரும் படி ரஸீனா அலைபேசியில் அடிக்கடி ரஹ்மானுக்கு, பாஷித்க்கும் சொல்லிப் பார்த்தவள் அவர்கள் தொழிலே கதி என்று இருக்க ஷஹீயை அழைத்து அதட்டியதில் காரியம் கைகூடி இருந்தது.

ஷஹீ மட்டும்தான் பெண் என்பதால் ஹஜாராவையும் அழைத்து செல்லலாம் என்று முபாரக் மற்றும் ஹஜாராவையும் அழைக்க கூடவே அஷ்ரப்பையும் அழைத்திருந்தான் ரஹ்மான்.

மணப்பெண் வீட்டுக்கு அஸருக்கு பின் செல்ல தயாராகத்தான் இந்த யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஹாஜராவாலும் முடியாது. ஷஹீயாலும் தனியாக செய்ய முடியாது என்று  பகல் சாப்பாடு கூட வீட்டில் தயார் செய்யாது வாங்கி வந்திருந்தான் ரஹ்மான். சமைத்தாலும் அவைகளை சுத்தம் செய்ய ஒரு நேரம் எடுக்கும். அதனாலயே வெளியில் வாங்கி வந்தவன் உண்டு விட்டு பெண்களை சுத்தம் செய்ய விடாது அவர்களே சுத்தம் செய்து அஸருக்கு அதான் சொல்லும் பொழுதே தயாராகி பள்ளிக்கு சென்று வந்ததும் செல்லலாம் என்று பார்த்தால் வந்த உடன் சின்னவன் ஆயி போய் இருந்தான் என்றால் மூத்தவன் அணிந்திருந்த துணிய கழட்டி போட்டு ஹாயா சோபாவில் தூங்கி இருந்தான்.

முர்ஸீதை எழுப்பி முகம் கழுவி ரஹ்மானும் அஸ்ரப்பும் ஆடை அணிவித்துக் கொண்டிருக்க, முபாரக் சின்னவனை சுத்தம் செய்த்து பாஷித்தோடு ஆடை அணிவித்துக் கொண்டிருக்க பெண்கள் இருவரும் சோபாவில் அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தனர்.

ஒருவாறு அனைவரு கிளம்பி செல்ல மணி ஐந்தை நெருங்கி இருந்தது. மணப்பெண்ணின் வீடு ரஹ்மானின் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டரில் இருந்ததால் விரைவில் வீட்டை அடைந்திருந்தனர்.

வீடு கொஞ்சம் மலையில் இருக்க குடிவந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறதாம். இது அவர்களின் சொந்த ஊர் கிடையாதாம். பெண் இங்குதான் காலேஜ் படித்தாளாம். படிக்கும் பொழுது அறையெடுத்து தங்கி இருந்தாளாம். இப்பொழுது இங்கையே வேலை செய்வதால் வீடு மாறி வந்து விட்டதாக கூறினார் பெண்ணின் வாப்பா.

வேலைக்கு செல்லும் பெண் என்பது அவர் கூறிய பின் தான் பாஷித்துக்கு தெரிந்தது. மைனியும் வேலைக்கு செல்வதுதான். உம்மா வீட்டோடு இருக்கும் பெண்ணையே பார்த்திருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.

“சரி வாங்க பொண்ண பார்க்கலாம்” என்று பெண்ணின் உம்மா அழைக்க எழுந்து செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் பாஷித்.

இதுதான் அவன் பெண் பார்க்க வந்த முதல் முறை. போட்டோவை கூட பார்க்கவில்லை. நேரிலையே பார்த்துக்கொள்கிறேன் என்று விட்டான். ஹாஜராவும், ஷஹீயும் பெண்ணின் அறையில் இருப்பார்கள் அவர்கள் அழைத்தால் செல்லலாம் இவரோடு செல்லலாமா? என்ற குழப்பம்தான்.

“பாஷித் என்ன டா?” ரஹ்மான் கேட்க

“மாப்பிளைக்கு வெட்கம் போல” அஸ்ரப் வார அவனை முறைத்த பாஷித் அந்த பெண்மணியின் பின்னால் சென்றான்.

திரைசீலையை விலக்கியவன் முதலில் கண்டது அமர்ந்திருக்கும் ஷஹீயையும் ஹஜாராவையும்தான். அதன் பின் அவள் அன்று வண்டியில் பின்னால் அமர்ந்திருந்தவள் “இவளா?” என்று பாஷித் அதிர்ச்சி முகபாவனத்தை கொடுக்க

“இவனா?” என்ற அலட்ச்சிய முகபாவனத்தை கொடுத்தாள் அவள்.

Advertisement