Advertisement

அத்தியாயம் 24

“கல்யாணத்துக்கு ஒரு மாசமாலும் லீவு போடுமா” என்று பேகம் அன்று சொன்ன பொழுது தேவையில்லை என்று முறுக்கிக் கொண்ட ஷஹீ இரண்டு வாரம் லீவ் போட்டால் போதும் என்று முடிவு செய்திருக்க இன்னும் மூன்று நாளில் காலேஜுக்கு செல்ல வேண்டும்.

ஆனால் அவளுக்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை நெடு நாளாக மனதுக்குள் இருக்கவே ரஹ்மானிடம் மெதுவாகக் கேட்டுப் பார்த்தாள். காதல் மனைவி தன்னிடம் ஏதாவது கேட்க மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருந்த ரஹ்மான் இதை சாதாரணமாக விட்டு விடுவானா? இதோ தினமும் காலை மாலை முத்தம் தர வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு உடனே கிளம்பி விட்டான்.

எங்கே செல்ல வேண்டும் என்று ரஹ்மான் கேட்க “எங்க வேணாலும் ஓகே” என்றவளை ஆசையாக பார்த்தவன் அவளிடம் வம்பு வளர்க்கவென்றே “அப்போ காலேஜ்”

“எக்ஸ்ட்ரா மூணு நாள் லீவு போடுறேன் ப்ளீஸ் ப்ளீஸ் கூட்டிட்டு போங்க” என்று அவள் கெஞ்ச

“முடியாது முடியாது ஒரு வாரம் லீவு போடு அப்போதான் கூட்டிட்டு போவேன்” என்று இவன் செல்லம் கொஞ்ச முறைத்தாலும் சிரித்தவாறு சம்மதித்தாள் ஷஹீ. 

ரஸீனா இல்லாமல் அவனால் அன்றைய நாள் இயங்காதே! “வீட்டாரையும் அழைத்து செல்லலாமா?” என்று மனைவியை ஏறிட

ஷஹீ சரி என்றதும் வீட்டாரிடம் கேட்க முதலில் மறுத்தது ரஸீனாதான். “புதுசா கல்யாணமானவர்கள் தேனிலவு பயணம் குடும்பத்தோடா செல்வார்கள்?” மகனை முறைத்தவள் மனதில் உள்ளதை சொல்லாது

“என்னால் எங்கயும் வர முடியாது. வாப்பாகும் கடைய போட்டுட்டு போக முடியாது. ஹாஜி படிக்கணும். நீயும் போய்ட்டா வீட்டு வேலைகளை யார் தேடி பார்த்து செய்றது? பாஷித் வீட்டில் இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் மட்டும் கிளம்புங்க” அனைவருக்குமான முடிவை தானே எடுக்க ஹாஜராவின் முகமும், பாஷித்தின் முகமும்தான் வாடிவிட்டது.

ரஹ்மான் எவ்வளவு சொல்லி பார்த்தும் ரஸீனா அசையவில்லை. ரஸீனா மறுத்தால் ரஹ்மான் வர மாட்டானா என்று கணவனை ஏக்கப் பார்வை ஷஹீ பார்க்க மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான் ரஹ்மான். 

ஷஹீ ரொம்பவே சந்தோசமாக இருந்தாள். தந்தை விட்டு சென்ற பிறகு குடும்பத்தோடு சுற்றுலா பயணம் என்று எங்குமே சென்றதில்லை. தந்தையோடு சென்ற பயணங்களும் ஞாபகத்தில் இல்லை. பாடசாலை சுற்றுலாக்களை அன்னை அனுப்ப மறுத்து விட்டாள். சிறு வயதில் இருந்தே ஊரை சுற்ற வேண்டும் என்று ஆசை. அது இன்று நிறைவேறவும் ரொம்பவே சந்தோசமாக இருந்தாள்.

வாடகைக்கு ஒரு காரை ஏற்பாடு செய்தவன் தானே வண்டியை ஓட்ட ஷஹீ முன்னாடி அமர்ந்திருந்தாள். எங்கே செல்கிறோம் என்று அவள் கேட்கவுமில்லை. எங்கே செல்கிறோம் என்று அவன் சொல்லவுமில்லை. காலை உணவுக்கு பின் ஆரம்பமான பயணம் நெடும்தூர பயணமானது.

இருவரும் தனியாக செல்லும் கார் பயணம். அவளின் இடையோடு கை கோர்த்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள ஆவல் தோன்றினாலும் மனம் விட்டு பேசும் அவளை தொந்தரவு செய்ய மனம் வரவில்லை.

சந்தோசத்தில் ஷஹீ பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே இருந்தாள். ஒரு கையால் வண்டியை செலுத்தியவாறு மறுகையால் வாயின் மீது கையை வைத்து ஷஹீ செய்வதெல்லாம் கேட்டு ரசித்து சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைகையை அவளுக்கு மறைத்தவாறு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் ரஹ்மான்.

அவள் சொல்லும் கதைகளுக்கு சத்தமாக சிரிக்க தோன்றினாலும் சிரித்து விட்டால் முறைத்துக் கொண்டு அமைதியாகிவிடுவாள். சந்தோசமான அவள் மனநிலையை கெடுத்து விடக் கூடாதென்பதில் மிகவும் கவனமாக இருந்தான் ரஹ்மான்.

முதலில் சென்றது காலியில் உள்ள உணவடுன கடற்கரைக்கு. இலங்கை தீவை சுற்றி உள்ள கடற்கரைகளில் மிகப்பிரதானமானது உணவடுன. சுற்றுலா பயணிகளை கோடை காலத்தில் இழுத்து வந்து குவித்து வைத்திருக்க, ரஹ்மானும், ஷஹீயும் வந்த நேரம் அவ்வளவு கூட்டம் இல்லை.

அவர்கள் வந்து சேர மதியமானதால் ரஹ்மான் முதலில் செய்தது கடற்கரையறுக்கில் உள்ள ரிசார்ட்டில் அறையெடுத்து தங்கியதே!

எல்லா அறைகளும் தனித்தனியாக கடலை பார்த்தவாறு கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்க, கதவு இடது பக்கத்திலும், வலது பக்கத்தில் அறையோடு ஒட்டி குடிசை அமைத்து குட்டி சாப்பாட்டு மேசையும் போடப்பட்டு காற்றோட்டமாக உணவுண்ணும் வசதியும் செய்யப்பட்டிருக்க, குளியலறை மறுபக்கம் அமைக்கப்பட்டிருந்ததால் வரும் பயணிகளை ரொம்பவே கவர்ந்தது.

வந்ததிலிருந்து கடற்கரைக்கு செல்லலாம் என்று ஷஹீ நச்சரிக்க அவளை கண்டு கொள்ளவில்லை ரஹ்மான்.

அவளை மதிய உணவனுக்கு அழைத்து செல்ல வர மறுத்தவளை “இந்த வெயில்ல போய் கடல் தண்ணில நின்னா காக்கா மாதிரி கறுப்பாயிடுவ. ஏற்கனவே கருப்பாதான் இருக்க இதுல இன்னும் கருப்பானா பார்க்க சகிக்காது” என்று கிண்டல் செய்ய

“என்ன விட நீங்க நிறம் கம்மி தான்” அவனை முறைக்க

“இருக்காதா பின்ன உன்ன பாக்க வருஷக்கணக்கா வெயில், மழைனு பாக்காம நின்னு இருக்கேனே” சின்ன சிரிப்பினூடே அதற்கும் காரணம் நீதான் என்று மறைமுகமாக சொல்ல

“நான் சொன்னேனா? நான் சொன்னேனா?” சிரித்தவாறே அவனை துரத்த ஆரம்பித்தாள் ஷஹீ.

கடுமையான வெயில் இல்லாவிட்டாலும் கடற்கரை மணலில் கால் வைக்கவும் முடியாமல் சுடும். கடல் நீரில் குளித்தாலும் எரியும் என்றறிந்தே மறுத்தான் ரஹ்மான். அதை அவன் தெளிவு படுத்திய பின்னே கடலை பார்த்தவாறு உணவுண்ண சம்மதித்தாள் ஷஹீ.

“கடல் இங்கதான் இருக்க போகுது. நாமளும் இங்கதான் இருக்க போறோம். பீச் ஒரத்துலையே ரூம் போட்டது, நைட்ல பீச்சிதான் இருக்க போறோம்” ரஹ்மான் சொல்லி முடிக்கவில்லை கை தட்டி ஆர்பரிக்கலானாள் ஷஹீ.

கடலை பற்றின பேச்சுக்களும், சுனாமியை பற்றின பேச்சுகளும் என்று மதிய உணவை உண்டு முடித்தவர்கள் அறைக்கு வந்து கடல் தெரியும்படி அமர்ந்து கொண்டனர்.

“கடல போட்டோல பாத்திருக்கேன். டிவில பாத்திருக்கேன். டாக்குமெண்டரில கூட பாத்திருக்கேன். ஏன் சுனாமியா சீறி எழுந்தப்போ கூட பாத்திருக்கேன். இப்படி அமைதியா அலை வீசி அருகிலே இருந்து பார்த்ததில்லையே! நான் பார்த்ததில்லையே!” சிங்கம் சூர்யா போல் பேச ஆரம்பித்தவள் வராத கண்ணீரை துடைத்தவளாக சிவாஜி கணேசன் போல் முடிக்க சிரித்தவாறே அவள் செய்யும் அளப்பறையை பார்த்திருந்தான் ரஹ்மான்.

“சூரியனே போ.. போ.. வெண்ணிலவே வா வா” ஷஹீ பொறுமையை இழந்தவளாக கத்திக்கொண்டிருக்க, ரஹ்மான் துணி மாற்றலானான்.

அணிந்திருந்த பாண்ட் டி ஷர்ட்டை கழட்டியவன் ஒரு த்ரீ க்வாட்டர் ஷோர்ட் காலர் இல்லாத டி ஷார்ட் அணிந்து கொண்டவன் சத்தமில்லாமல் மனைவியின் அருகில் வந்து அமர்ந்து கொள்ள

“எப்போ கடலுக்கு போறோம்”

“மீன் பிடிக்கவா?” சொன்னவன் வாய் முடி நகைத்து அவளை ஏற்றி விட்டிருக்க கடுப்பில் இருந்தவள் அடிகளை பரிசாக கொடுக்கலானாள்.

அவளை தடுத்தவாறே “அஞ்சு மணிக்கு போனா வெயில் தணிஞ்சு போகும். பன் பண்ணலாம். இப்போ கொஞ்சம் தூங்கி எந்திரிச்சா நைட்டு பீச்ல ஆட்டம் போடலாம்”

“நிஜமாவா?”

ரஹ்மான் தலையசைக்கவும் மணியை பார்த்தவள் மூணு என்றதும் “அஸர் தொழுதுட்டே படுத்துக்கவா” என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் கடலை பார்க்க

“அப்போ மக்ரிப், இஷா எல்லாம் தொழுதுட்டே போலாம்” சின்ன சிரிப்பினூடாகவே சொன்னாலும் கேலியும் கிண்டலும் டான் டானாக வழிந்தது.

அவனை முறைத்தவள் “ஏன் டின்னர் சாப்பிட்டு பொறுமையா தூங்கி எந்திரிச்சே போலாமே” என்று சொல்ல

“அதைத்தான் நானும் சொல்லுறேன் பானு குட்டி. பாங்கு சொல்ல இன்னும் முப்பத்தி அஞ்சு நிமிஷம் இருக்கு அது வரைக்கும் தூங்கு வா..” என்றவன் அவளை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து கட்டிலில் அமர்த்த ஷஹீயும் மறுப்பு தெரிவிக்காமல் உறங்கலானாள்.

“டேய் நல்லவனே என் கல்யாணத்த பேசி முடிகிறதா சொல்லிட்டு நீ பாட்டுக்கு ஹனிமூன் போய்ட்டியே இதெல்லாம் நல்லாவா இருக்கு?” ரஹ்மானை அலைபேசியில் அழைத்த முபாரக் வசை பாடலானான்.

“லவ் பண்ணும் போது உன் தங்கச்சி பக்கம் திரும்ப விட்டியா? நா இப்போ என் பொண்டாடி கூட வந்திருக்கேன் மாச்சன்” முபாரக்கை வெறுப்பேத்தினான் ரஹ்மான்

“டேய் டேய் வேணாம் அழுதுடுவேன்”

சத்தமாக சிரித்தால் மனைவி எழுந்து விடுவாளோ என்று சிரிப்பை அடக்கியவன் “உன் மாமியார் குடும்பம் ஊருக்கு போயாச்சு. வருங்கால பொண்டாட்டி கிட்ட பேசியாச்சு. அவ சம்மதம் சொன்னா மேற்கொண்டு பேசலாம். அதுவரைக்கும் நீ பொறுமையாகத்தான் இருக்கும் மச்சான்” மனைவி உறங்குவதை உறுதி செய்தவாறு மெதுவாக பதில் சொன்னான் ரஹ்மான்.

“அவளுக்கு என்னதான் பிரச்சினையாம்?”

“அது எப்படி எனக்கு தெரியும். நீயே கேளு” என்ற ரஹ்மான் அலைபேசியை துண்டித்தான்.

ஷஹீ கண்விழிக்கும் பொழுது ரஹ்மான் தொழுது கொண்டிருந்தான் மணியை பார்க்க நாலு பத்து என்றதும் தானும் வுழு செய்து கொண்டு வந்தவள் தொழ பர்தாவை அணிந்து கொண்டிருக்க

“டீ ஏதாவது சாப்பிடுறியா?” ரஹ்மானின் குரலுக்கு ஓதியவாறே தலையை ஆட்டுவித்து விட்டு தொழ ஆரம்பிக்க அறையை சாத்திக்கொண்டு வெளியேறினான் ரஹ்மான்.

டீயோடு சிற்றுண்டிகளை கொண்டு வந்து ரஹ்மான் வைத்திருக்க,  கடலை பார்த்தவாறு அமர்ந்து கொண்டவள் “உன் கிட்ட எப்போ வந்து சேர போறேன்னு தெரியல. எப்போ உன்ன என் ரெண்டு கையாலையும் அள்ளி அணைக்க போறேன்னு தெரியல. இப்படி வெயிட் பண்ண வச்சி என்ன சோதிக்கிறியே!”

பருகிக்கொண்டிருந்த டீயும் புரையேற தடுமாறிய ரஹ்மான் சிரிப்பதா அழுவதா என்ற முகபாவத்தோடு “இது உனக்கே நியாயமா இருக்கா? என்ன பார்த்து சொல்ல வேண்டிய டயலொக் எல்லாம் கடலை பார்த்து சொல்லிக்கிட்டு இருக்க, கூட்டிட்டு வந்த எனக்கு ஒன்னும் இல்ல” என்று முறைக்க

“நீங்கதான் என்ன அங்க போக விடாம தடுத்துக்கொண்டு இருக்கீங்க” பதிலுக்கு அவனை முறைத்தவள் எழுந்து வந்து கணவனின் தலையை தட்டியவாறு முதுகை நீவலானாள். 

மலர்ந்த முகமாகவே இருந்தான் ரஹ்மான். பானு அவனை முறைக்கும் அவளின் கோப விழிகளை பார்த்திருக்கிறான். நாணம் கொள்ளும் பொழுது ரூஜ் தடவாமல் சிவக்கும் அவளின் கன்னங்களும், அவனை பார்க்காமல் தவிர்க்கும் விழிகளையும் கண்டிருக்கிறான்.

ஆனால் இன்று அவள் விழிகளில் சந்தோசம் மட்டுமே! சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டுத் தெறிப்பது போல சந்தோச கீற்று கண்ணில் மின்னலாய். கன்னங்கள் புன்னகையில் உப்பிப் போய் வளவளத்துக் கொண்டிருக்கும் உதடுகளை கடித்து சாப்பிடும் பேராவலை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறான். 

அவள் தன்னை உணர வேண்டும் என்று அவன் அவளை நெருங்காமல் விலகி இருந்தால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் விடாது போல் இருக்க, அவள் இடுப்பை கட்டிக்க கொண்டவன் வயிறில் முகம் புதைக்க கூச்சத்தில் தடுமாறலானாள் ஷஹீ.

அவள் அணிந்திருந்தது நீண்ட பாவாடையும், பிளவுசும். அவனின் சூடான மூச்சுக்காற்று தேகம் தீண்ட அவஸ்தைக்குள்ளானவள் கைகளை விலக்கிக் கொண்டு அவனை விட்டு விலக முயற்சசி செய்ய, அவளின் தடுமாற்றத்தை புரிந்து கொண்டவனாக அவளை விட்டவன் தானும் எழுந்து அறைக்குள் நுழைந்திருக்க, ஷஹீக்குள் ஏதோ ஒரு பெரிய ஏமாற்றம்.

அவன் பின்னாலையே வந்தவள் “சாரி” கூச்சத்தில்தான் நெளிந்தாள். அதை அவனிடம் எப்படி புரிய வைப்பது. பிடிக்கவில்லை என்று திமிறியதாக தப்பாக நினைத்து விட்டானோ என்று எண்ணியே மன்னிப்பு வேண்டி நின்றாள்.

அவள் கன்னத்தில் செல்லமாக தட்டியவன் “கெட் ரெடி” என்று கண்ணடித்து நெற்றியில் முத்தம் வைத்த பின்னே சமாதானம் அடைந்தாள் ஷஹீ.

  ஒரு பேண்டையும் டீ ஷர்ட்டையும் ஷஹீயிடம் கொடுத்த ரஹ்மான் அதை அணியும்படி கூற மறுப்பு தெரிவிக்காமல் அணிந்து கொண்டவள் கொஞ்சம் தொளதொளவென்று இருக்கும் தன் உருவத்தை பார்த்து சிரித்தவள் ரஹ்மானை வற்புறுத்தி வாங்கிய சிறு குழந்தைகள் விளையாடும் பீச் டோய்ஸோடு கடற்கரைக்கு நடக்க

“ஒய் பொண்டாட்டி என்ன விட்டுட்டு போறியே”

“டைம் அப் நீங்க லேட். எல்லாம் எடுத்துட்டீங்களா?”

“இரு” என்றவன் குளித்து விட்டு வந்து அணியும் துணி, துண்டு எல்லாம் எடுத்து வைத்த பின்னே அறையை பூட்டிக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தான்.

இலங்கையை சுற்றி உள்ள கடற்பரப்பில் முப்பது கடற்கரைகளில் முதலிடம் வகிப்பது உணவடுன. இது அமைதியான நீல நீருக்கு பிரபலமானது. கடற்கரை மணலோ தங்கமும், பழுப்பும் நிறத்தை கலந்து பிரதி பலிக்க ஷஹீ கால்கள் புதைய புதைய நடக்கலானாள்.

தூரத்தே வெள்ளையர்கள் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் போன்ற சில நீர் விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருக்க, ஜோடி ஜோடியாகவும், குழுக்களாகவும் கால் நனைப்பவர்களை பார்த்தவாறு மனைவியை பின் தொடர்ந்தான் ரஹ்மான்.

ஷஹீ நீரில் கால் நனைக்க ரஹ்மான் கரையில் அமர்ந்து கொண்டான். ஷஹீ மெதுவாக அலையை மிதித்தவள் பின்னால் ஓடி வர அலையும் அவளை துரத்தி வந்து தோல்வியை தழுவி பின் வாங்கியது.

“ஏங்க என்ன உக்காந்துட்டீங்க? எந்திரிச்சு வாங்க” ஷஹீ கையசைத்து கணவனை அழைக்க, தலையசைத்து மறுத்தவன் அவளை விளையாடும்படி கூற அவனை முறைத்தவள் அலையோடு ஐக்கியமாகி விட மனைவியை ரசிக்கலானான் ரஹ்மான்.

ஆசை தீர அலையோடு விளையாடியவள் சிறு குழந்தை போல் பீச் டோய்ஸ் வைத்து கடற்கரையில் அமர்ந்து விளையாட ஆரம்பிக்க கணவனையும் கூட்டு சேர்க்கலானாள்.

மண்ணை அள்ளிக்கொண்டு வந்து கொட்டுவதும் அச்சுகளால் வடிவங்களை அமைப்பதும் என்றிடுந்தவள் கணவனிடம் அரண்மனை அமைக்கும்படி உத்தரவிட ரஹ்மான் மும்முரமாக வேலையில் இறங்கி இருந்தான். 

வானில் மேகங்கள் செந்நிறமான நேரம், இதமான குளிர் காற்றும் வீச, சூரியனும் தன் கதிர்களை முற்றாக தன்னுள் அடக்கிக் கொண்டு கடல் நீருக்குள் பயணம் செய்து கொண்டிருக்க, இவர்களை போலவே மணல் வீடு கட்டுவோரும், கடல் நீரில் கால் நனைப்போர் என்றும் அவரவர் தங்கள் உலகங்களில் திகழ இவர்களை கவனிக்க யாருமிலர்.

பாதி கட்டிய அரண்மனையை பெரிய அலைவந்து அடித்து செல்ல ரஹ்மானும் முற்றாக நனைந்திருந்தான்.

“ஹாஹாஹா பத்திரமா தண்ணில இறங்காம இருந்தீங்களே இப்போ என்ன ஆச்சு” ஷஹீ சிரிக்க, சத்தமாக சிரித்தவன் அமைதியாக மீண்டும் அவள் சொன்ன அரண்மனையை கட்ட ஆரம்பித்தான். இந்த முறை கொஞ்சம் பின்னால் நகர்ந்தே மண்ணை குவிக்க அதற்கும் சிரித்தாள் ஷஹீ.

சூரியன் கடலுக்குள் சென்று விட்டான். இரவை கண்டதும் வெண்ணிலாவும் கண்விழித்து விட்டாள். அறைகளில் மின்குமிழ்களும் ஏற்றப்பட்டிருக்க, கடலோரத்தில் தீப்பந்தங்களும் ஏற்றப்பட்டு அவ்விடமே வேறு உலகம் போல் காட்சியளிக்க ஆரம்பித்திருந்தது.

ரஹ்மானின் அலைபேசியில் அலாரம் அடிக்கவே “பானு இஷாகு அதான் சொல்ல ட்வென்டி பைவ் மினிட்ஸ் இருக்கு மஹரிப்பையும் தொழுதுட்டு அப்படியே இஷாவையும் தொழுதுட்டு வருவோம்” என்றவன் எழுந்துகொள்ள மறு பேச்சின்றி எழுந்தவள் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தாள். 

“இதெல்லாம் இருக்கட்டும். யாரும் எடுக்க மாட்டாங்க”

“ஓகே. வாங்க போலாம்”

ஈரமான ரஹ்மானின் துணி காற்றில்லையே காய்ந்திருக்க மனைவியை வெளியே உள்ள ஷவரில் ஒரு அவசர குளியலை போடுமாறு சொன்னவன் வுழு செய்ய அறையில் உள்ள குளியலறைக்குள் புகுந்திருந்தான்.

உடம்பில் ஒட்டியிருந்த மண் போனால் போதும் என்று அவசரமாக குளித்தவள் அறைக்குள் வர ரஹ்மான் அறையில் இல்லை. சாப்பாட்டு மேசை இருக்கும் பகுதியில் தொழுது கொண்டிருப்பதைக் கண்டவள் தான் துணி மாற்ற வேண்டும் இஷாவுக்கு அதான் சொன்னால் மஹ்ரிப் தொழ முடியாமல் போய் விடும் என்றே அங்கே தொழுவதை புரிந்து கொண்டவள் தானும் அவசரமாக துணியை மாற்றிக் கொண்டு தொழலானாள்.

இஷாவும் தொழுத பின்னே அன்றைய கடமைகள் அனைத்தையும் சரிவர நிறை வேற்றிய நிம்மதி. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டவர்கள் மீண்டும் தடையில்லாது கடலில் குதிக்க ஆயத்தமானார்கள்.

“பானு பசிக்குதா?  சப்பிட்டே போவோமா? இல்ல அப்பொறம் சாப்பிடுவோமா?”

“பசிக்காலங்க. அப்பொறம் சாப்பிடலாம் வாங்க சீக்கிரம் போலாம்” கணவனின் கையை பிடித்து இழுக்காத குறையாக அழைக்க

“அட இரு டி. சாப்பாட்டுக்கு வழி பண்ணிட்டு வரேன். இல்லனா நைட்டு பசிலதான் தூங்கணும்” என்றவன் அலைபேசியை எடுத்து ரிசார்ட் உணவகத்துக்கு அழைத்தான். இருபத்தி நான்கு மணித்தியாலமும் சேவை தொடரும் என்றதும் சற்று தள்ளி சென்றவன் ரகசியமாக ஏதோ பேசி விட்டு வந்து ஷஹீயோடு கடலை நோக்கி நடந்தான்.

வெண்ணிலாவும் நட்சத்திர பட்டாளத்தோடு அழகாக வானில் உலாவர, விறகுகளை எரியவிட்டு இளைஞ்சர்கள் கூட்டம் கிடார் வாசித்தவாறு ஒரு இடத்தில் பாட்டு பாடிக்கொண்டிருக்க அவர்களை சுற்றி கூட்டம் கூடி இருந்தனர்.

சிலர் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். சிலர் கரையில் அமர்ந்து கதைபேசிக்கொண்டிருந்தனர். இந்தமுறை முதலில் கடலில் குதித்திருந்தது ரஹ்மான் தான். அவனை தொடர்ந்து ஷஹீயும் இறங்க அலையில் அடிபட்டு இருவரும் கரையில் இருந்தனர்.

ரஹ்மானின் நெஞ்சம் முழுவதும் சந்தோசம் நிரம்பி இருந்தது. அது அவன் பானுவின் சந்தோஷத்தால் வந்த சந்தோசம் தான். சிறு குழந்தைகள் போல் இருவரு கடலில் குதிப்பதும் அலை அடித்து வருவதும் என்று உலகத்தையே மறந்து சந்தோசமாக சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

யாரும் யாரையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை. தேனிலவு ஜோடிகளும் சிலர் கைகோர்த்து கடற்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருக்க, பாட்டுப் பாடிக்கொண்டிருந்த இளைஞ்சர்கள் குழு இவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்திருந்தனர்.

ரஹ்மானும் ஷஹீயும் கரையில் அமர்ந்திருக்க இவர்களை சுற்றி வரவும் பயந்து போன ஷஹீ ரஹ்மானை ஒட்டி அமர்ந்து கொள்ள கோபமாக ரஹ்மான் எழுந்துகொள்ள, ஒருவன் கிடார் வாசிக்க ஒருவன் பாட ஆரம்பிடிக்க, அப்பொழுதான் கவனித்தான் அந்த குழுவில் பெண்களும் இருந்தனர்.ஆண்களை போல் டெனிமும் டீஷர்ட்டும் அணிந்திருந்தவர்கள் தலையில் கேப் அணிந்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை.

ஆசுவாசம் அடைந்தவன் மனைவியை அமைதி படுத்த தங்களை அறிமுகப்படுத்தலாயினர். அவர்களும் சுற்றுலா பயணிகள் தான் தேனிலவு ஜோடிகள் என்றால் அவர்களுக்காக ஒரு பாடலை பாட விரும்பி அவர்களிடம் சென்று பாடுவார்களாம் அதுவும் அவர்களுக்கு பிடித்த பாடலை.

ரஹ்மானும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனைவரும் சிங்களவர்கள் என்பதாலும் அவர்களுக்கு தமிழ் தெரியாதென்பதாலும் பாட்டு கூட சிங்களப் பட்டாகத்தான் தெரிவு செய்ய வேண்டி இருக்க, ரஹ்மான் ஷஹீயை தேர்வு செய்ய சொல்ல முழிக்கலானாள் ஷஹீ.

“ஏங்க நீங்களே சொல்லுங்க”

“நான் கேட்டதெல்லாம் சோக கீதம் டி பொண்டாட்டி. நீயே சொல்லு”

“எனக்கு ஷிஹான் மிஹிரங்க சோங்ஸ் பிடிக்கும்க”

அதை அவர்களிடம் சொல்ல எந்த பாடல் என்று கேட்கவும் எதுவானாலும் என்று ஷஹீ சொல்ல “எஸ கெட்டேனா” என்று ரஹ்மான் எடுத்து கொடுக்க புருவம் உயர்த்தினாள் ஷஹீ.

நெருப்பு மூட்டி ஆடியவாறே பாட ஆரம்பித்திருக்க ரஹ்மானும், ஷஹீயும் அவர்களோடு ஐக்கியமானார்கள். 

சிறிது நேரத்தில் கூட்டமும் அதிகரிக்க ரஹ்மானின் கையை விடாமல் பிடித்திருந்தாள் ஷஹீ. ஒருவன் ரஹ்மானையும் ஆடுமாறு இழுத்திருக்க ஷஹீ தனியாக நின்றவள் கணவனின் மீதே பார்வையை வைத்திருந்தாள். அவர்கள் அழைத்ததற்காக கையை தட்டியவாறு நின்றிருந்த ரஹ்மான் கூட்டத்தில் அந்த புறம் தள்ளப்பட ஷஹீ இந்த புறம் இருந்தாள்.

முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கியவள் கணவனை தேட அவனை காணவில்லை. பதட்டமடைந்தவளாக அவனை தேட அந்த கூட்டத்திலையே அவன் இல்லை. அவ்வளவு பேர் இருந்தும் தான் தனிமை படுத்தப்பட்டு யாருமற்ற தனித்தீவில் அனாதையாக நிற்பது போலும் தோன்ற ஷஹீக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. கலங்கிய கண்களோடு கணவனை தேடியலைய மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

விளக்குகள் அணைந்து போக பாட்டும் நின்று அனைவரும் என்ன ஏதோ என்று பார்க்க யாரோ ஒருவன் எதையோ தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். என்ன கொண்டு வருகிறான் என்று புரியாவிடினும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன.

அந்த நிழலுருவம் ரஹ்மான் என்று அடையாளம் கண்டு கொண்ட ஷஹீ அவனருகில் ஓடி அவனை அணைத்துக்கொள்ள, அவளைக் கட்டிக்கொண்டவன்   “ஹாப்பி பர்த்டே பொண்டாட்டி” என்று வாழ்த்து தெரிவிக்க கணவனை ஆச்சரியமாக பார்த்தாள் ஷஹீ.

சுற்றுலா வந்த சந்தோசத்தில் தன் பிறந்தநாளையே மறந்திருந்தாள் ஷஹீ. அவள் பிறந்தநாள் கண்டிப்பாக அவனுக்கு தெரிந்திருக்கும். அதற்காக பன்னிரண்டு மணிக்கே வாழ்த்து சொல்லுவான் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்த்து சொன்னாலும் கேக்கோடு வந்து வாழ்த்து சொல்லுவான் என்று எதிர்பார்க்கவில்லை. தன்னோடுதானே இருந்தான் இதை எப்பொழுது ஏற்பாடு செய்தான்” அவளை சிந்திக்க விடாது

“கேக்கை வெட்டுவோமா?” என்று ரஹ்மான் கேட்க புன்னகைத்து தலையசைத்தாள் ஷஹீ.

அவன் கொண்டு வந்தது கேக் அதில் ஹாப்பி பர்த்டே பானு என்றிருக்க அனைவரும் ஷஹீக்கு வாழ்த்து பாட ஆரம்பித்திருந்தனர்.

மின் விளக்குகளும் மீண்டும் எரிய, கத்தியை அவளுக்கு ரஹ்மான் கொடுக்க மெழுகுவர்த்திகளை அவள் ஊதி அணைக்கும் பொழுதே கடற்காற்றும் சேர்ந்து அனைத்தது. சிரித்தவாறே கேக்கை வெட்டியவள் கணவனுக்கு ஊட்ட, ரஹ்மானும் பானுவுக்கு ஊட்டி விட்டான்.

கூட்டமும் அதிகம் என்பதால் இன்னும் சில உணவுகளை வர வளைத்தவன் பகிர்ந்து உண்ணுமாறு கூறி அவர்களிடமிருந்து விடை பெற்று மனைவியோடு தனிமையை நாடி அறைக்கு வந்தான்.

“உன் கூட தனியா கேக் வெட்டலாம்னு தான் பிளான் பண்ணேன். ஆனா கூட்டம் கூடிருச்சு. ஆனாலும் நல்லா இருந்திச்சுல்ல”

“தங்க்யூ புருஷா” என்று கணவனை கட்டிக்கொண்டவள் “இந்த பர்த்டேவ என்னால மறக்கவே முடியாது”

“என்னாலையும்” என்றவன் ஒரு சிறு பெட்டியை அவளிடம் கொடுக்க

“என்ன இது கிப்ட்டா?” என்று கண்களை அகல விரிக்க புன்னகைத்தான் ரஹ்மான்.

“இப்படியெல்லாம் சப்ரைஸ் கொடுக்க கூடாதுங்க. எனக்கிருக்குறது குட்டி இதயம். தாங்காது” என்றவள் பெட்டியை திறக்க அதில் தங்கத்திலான ஒரு மோதிரமும் பிளாட்டினத்திலான ஒரு மோதிரமும் என இரண்டு மோதிரங்கள் இருந்தன. இரண்டும் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டிருந்தாலும் அளவில் வித்தியாசம் இருக்க,

பிளாட்டினம் மோதிரத்தை கையில் எடுத்தவள் ஒவ்வொரு விரலுக்காக போட்டுப் பார்த்துவிட்டு அது பெரிதாக இருக்கவும் “இது என் பெரு விரலுக்கு சரியாகும்” என்று அணிந்துகொண்டவள் கணவன் முதன் முதலாக கொடுத்த பரிசு பொருந்தாமல் போனதில் அவன் மனம் வருந்தக் கூடாதென்று கூற இரண்டு மோதிரங்கள் எதற்கு என்று யோசிக்க தவறினாள்.

“அது என்னுடையது”

“ஆ…”

“அது என்னுடையது. பிளாட்டினம் ரிங். எனக்கு வாங்கினது. கோல்டு ரிங் உனக்கு”

“கபல் ரிங்கா? இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க” சந்தோசத்தில் கண்கள் கலங்கினாள். 

மோதிரத்தை அவளுக்கு அணிவித்தவாறு “ஒரு  படத்துல பாத்தேன் இடதுகையோட மோதிர விரல் ஹார்ட்டோட நேரடி தொடர்புள்ள இருக்காம் அதனாலதான் கல்யாணம் பண்ணும் போது அந்த விரலுக்கு மோதிரம் போடுவாங்கலாம். அப்போவே முடிவு பண்ணேன். ஒரே மாதிரி கபல் ரிங் போடணும்னு. உன் பர்த்டேயும் வருது பேஸ்ட்டு கிபிட் இதுதான்னு முடிவு பண்ணேன்”  என்றவாறே அவன் கையை அவள் புறம் நீட்ட மோதிரத்தை அணிவிக்காமல் அவன் முகம் பார்த்தவள்

“எனக்கு எப்போ உங்க மேல லவ் வருதோ அப்போ இத உங்க விரலுக்கு போடுறேன்” என்றவள் கழுத்தில் இருந்த மலையை கழட்டி மோதிரத்தை அதில் கோர்த்துக்கொண்டாள்.

“மோதிரத்தை போட்டு பஸ்ட் நைட்டுக்கு வழி பண்ணலாம்னு பார்த்தா வசனம் பேசியதெல்லாம் வீணா போச்சு” முணுமுணுத்தவன் மீண்டும் ஹாப்பி பர்த்டே என்றவாறு அவள் கன்னத்தை வலிக்க கடித்து விட்டு துண்டோடு குளியலறைக்குள் புகுந்திருந்தான்.

கன்னத்தை தடவி விட்டுக்கொண்டு ஷஹீ செல்லும் கணவனை செல்லமாக முறைக்கலானாள்.

Advertisement