Advertisement

அத்தியாயம் 22

தன் மனதில் உள்ள காதலை மூணு வார்த்தை கொண்டு ரஹ்மான் சொல்லவில்லை. ஆனாலும் மனைவி அறிந்து கொண்டாள் என்ற நிம்மதி நெஞ்சம் நிரப்பி இருக்க தூக்கமும் தூர ஓடி இருந்தது.   

ஷஹீக்கும் தூங்கும் எண்ணம் சிறிதும் இல்லை ஒவ்வொரு பெட்டியாக திறந்து பார்த்து அதில் உள்ளவற்றை ஆராய்ச்சி செய்து மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு கணவனிடம் கேள்விகளை அடுக்கிக்கிக் கொண்டிருந்தாள்.

சலிக்காமல் மனைவிக்கு பதில் சொன்ன ரஹ்மானும் மனைவியைத்தான் ரசித்துக்கொண்டிருந்தான். பதின் வயதில் அவளை பார்த்தால் நெஞ்சில் தோன்றும் பரவசத்துக்காகவே அவள் பின்னாடி அலைந்துகொண்டிருந்தவனுக்கு அவள் மீது இருப்பது காதல் என்று உணர்ந்த பொழுது அவள் தான் இனி எல்லாமே என்று ஆகிப்போக காதல் பித்தனாகி அவள் தூக்கிப் போடுவதையெல்லாம் சேமிக்கலானான்.

அவை இன்று அவனின் காதலின் அளவுகோளாகி அவள் முன்னிலையில் அந்த நடுநிசியில் அவனுக்காக பரிந்துரை செய்துகொண்டிருக்கின்றன. முபாரக்கோடு இருந்த மனக்கசப்பால் காதலை கடைசிவரை சொல்லவே முடியாமல் போய்விடுமோ என்று பல தடவை அச்சம் கொண்டிருக்கிறான்.

துணிந்து சொன்ன போதும் கூட பிரச்சினையில்தானே முடிந்தது. ஒருவாறு கல்யாணத்தில் வந்து நின்ற அவன் காதலை அவன் காதலியே மறுத்து விட்டாள். அவளே சபையோர் முன்னிலையில் சம்மதமும் தெரிவித்தாள். அவளே நேரிலும் வந்து கல்யாணம் செய்து கொள்ளலாமா என்றும் கேட்டாள். மொத்தத்தில் எல்லாம் ரஹ்மானின் கையை மீறித்தான் நடந்து விட்டது.

பானு தனக்கு கிடைத்தால் போதும். தன் வாழ்வில் வந்தால் போதும் அவளுக்கு தன் காதலை உணர்த்தலாம் என்று நினைத்தான். ஆனாலும் அவன் செய்பவை அனைத்தும் தவறாக அவள் கண்களுக்கு புலப்பட அவனும்தான் என்ன செய்வான்.

கடைசியில் பார்த்தால் மூன்றே மூன்று வார்த்தை அதை சொல்லியிருந்தால் எல்லாமே சுமூகமான முடிந்திருக்கும் என்கிறாள். பெண்களின் மனதை அறிந்தவர் யாருமிலர் என்று கவிஞர்கள் சொன்னது சரிதான் போலும். என்ன நினைக்கிறாள்? எதற்காக அழுகிறாள் என்று கணிக்கவே முடியவில்லை.

“என்னங்க? என்ன யோசிக்கிறீங்க? எந்த உலகத்துக்கு போய்ட்டிங்க?” ஷஹீ அவனை உலுக்க

“பானு பானுனு புதுசா ஒரு உலகம் அதுக்குள்ளே போய்ட்டேன்” ரஹ்மான் அவளை பார்வையாலையே விழுங்கியவாறே சொல்ல

அவன் பார்வை மாற்றத்தை கண்டு இதயம் படபடக்க “சரி வாங்க தூங்கலாம் ரொம்ப நேரமாச்சு” திக்கித்திணறி கூறியவாறே பெட்டிகளை மீண்டும் பீரோவில் அடுக்கலானாள்.

நொடியில் தன்னிலைக்கு வந்தவன் “புக்ஸ் வைக்க இன்னொரு பீரோ வாங்கலாமா?” என்று கேட்க

“வேணாம் வேணாம் அப்பொறம் கொழந்த பொறந்தா தொட்டில் போட இடம் பத்தாமல் போய்டும்” மாலை நேரம் ஹாஜரா சொன்னதுதான் அதனால் சட்டென்று வாயில் வந்திருக்க பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தவள் யோசிக்காமல் சொல்லி இருந்தாள்.

“முதல்ல குழந்தைக்கு ஏற்பாடு பண்ணலாம் அப்பொறம் தொட்டில் ஒன்னு வாங்கலாமா? ரெண்டு வாங்கலாமான்னு யோசிக்கலாம்” மனைவியை தன் புறம் இழுத்தவன் இறுக அணைத்துக்கொண்டு கழுத்து வளைவில் முகம் புதைக்க மேனி சிலிர்த்தாள் ஷஹீ. 

“தாங்க்ஸ் டி பொண்டாட்டி” அவள் விலகி விடாதவாறு மேலும் தன்னுள் இறுக்கியவன் கூற

“நான்தான் தாங்க்ஸ் சொல்லணும். என்ன இவ்வளவு லவ் பண்ணுறதுக்காக” அவளும் அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக்கொள்ள

அவள் நெற்றியில் முட்டி நின்றவன் “அப்போ விடியும் வர மாறி மாறி தாங்க்ஸ் சொல்லி கிட்டு இருக்க எண்ணமா?”

“நிஜமா தூக்கம் வரல. ரொம்ப சந்தோசமா இருக்கு” அவனின் மூக்கோடு மூக்குரச கூறியவள் மெதுவாக அவன் இதழ்களில் முத்தம் வைக்க, அவள் கொடுத்த இதழ் முத்தத்தை ரசித்தவன் அமைதியாக இருந்தான். 

அக்கணம் அவளை எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினால் அவள் தடுத்திருக்கவும் மாட்டாள். ஆனால் ரஹ்மானுக்கு அதில் சிறிதும் ஈடுபாடில்லை. இதழ் முத்தம் வைக்கும் அளவுக்கு அவள் மனதில் தன் மீது பிடித்தம் இருக்குமேயானால் அது காதலன்றி வேறென்ன? தான் காதலிப்பதை உணர்ந்தவள் தன்னை காதலிப்பதை உணர வேண்டும். அதன் பின் கூடும் கூடலில்தான் பேரின்பம்.

எத்தனை வருடங்கள் அவளை தூரத்திலிருந்து பார்த்து ரசித்திருப்பான். இத்தனை வருடங்கள் அவள் அவன் வாழ்க்கையில் வருவதற்காக காத்திருந்தான். இன்னும் சில நாட்களோ! மாதங்களோ! காத்திருப்பதில் சுகம்தான். அன்புதான் பெருகும். அதில் மாற்றுக் கருத்தில்லை. மொத்தத்தில் அவள் சொல்லப்போகும் அந்த மூன்று வார்த்தையில் இருக்கிறது அவன் வாழ்க்கை.

காதல் பெருகி ஷஹீக்கு ரஹ்மானை விட்டு விலகும் எண்ணம் சிறிதும் இல்லாமல் மேலும் அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள, இதற்கு மேல் சென்றால் தன்னால் தன்னையே கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாமல் போகும் என்று உணர்ந்த ரஹ்மான் வலுக்கட்டாயமாக அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி பொய்யாக இருமியவாறே

“ரொம்ப தாகமாக இருக்கு, தண்ணி, தண்ணி குடிச்சிட்டு வரேன்” என்றவன் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

ஷஹீயும் தூங்குவதற்கு முன் கழிவறைக்கு சென்று வந்தவள் மேசையில் அனாதையாக இருக்கும் தண்ணீர் குவளையை கண்டு “தண்ணி இங்க இருக்கே, என்னாச்சு” என்று சிந்திக்க உள்ளே நுழைந்தான் ரஹ்மான்.

“தண்ணி இங்க இருக்குங்க”

“ஆ.. நா ஐஸ் வாட்டர் குடிக்க போனேன்” என்றவன் அமைதியாக வந்து கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள ஷஹீயும் மின் விளக்கை அனைத்தவள் கணவனை அணைத்தவாறே அவன் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

“அல்லாஹ் இன்னைக்கின்னு பார்த்து ரொம்ப சோதிக்கிறாளே. நம்மள கண்ட்ரோல்லயே இருக்க விடமாட்டா போல இருக்கே” ரஹ்மானின் சிந்தனை இவ்வாறிருக்க

“ஆமா நீங்க என்ன தொழில் சேரீங்க?” திடுமென ஞாபகம் வந்தவளாக கேள்வி எழுப்பியவள் அந்த அரை இருளிலும் கணவனின் முகத்தை ஏறிட்டாள்.

மனைவியின் புறம் திரும்பியவன் “என்ன மேடம் திடுரென்று நான் என்ன தொழில் பாக்குறேன்னு கேக்குறீங்க? கல்யாணம் பேசும் பொழுது சொன்னேனே கவனிக்கலயா? இல்ல விசாரிக்கலயா?” 

“கவனிக்கலைனு வச்சிக்கோங்களேன். சொல்லுங்க” என்றவள் அவன் புறம் திரும்ப

 “சரி வா சொல்லுறேன் ஆனா இங்க இல்ல வெளிய போலாம்”

“வெளியாவா? இந்த நேரத்திலையா?”

“என்ன லட்டு குட்டி பயமா இருக்கா? பேய் வரும்னு பயமா இல்ல பிசாசு வரும்னு பயமா?” மின்குமிழை போட்டவன் சிரிக்க

அது அவளை சீண்டி இருக்கவே! “நீங்க இருக்கும் போது எனக்கென்ன பயம் வாங்க போலாம்” என்றவளின் கவனத்தில் லட்டு என்று அவன் அழைத்தது புன்னகை வரவழைத்திருந்தது.  

சமயலறையினூடாக வெளியேறி பின் முற்றத்துக்கு வர முற்றத்திலிருந்த பெரிய மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கண்ணில் படவே ஓடிச்சென்று அமர்ந்து கொண்டாள் ஷஹீ.

அந்த ஊஞ்சல் கூட இருவர் அமரும் படி பெரிதாகத்தான் இருந்தது. அது அவள் கவனத்தில் இல்லை. சொகுசாக ஏறி அமர்ந்தவள் எல்லாவற்றையும் மறந்து ஊஞ்சலாட ஆரம்பிக்க ரஹ்மானும் பின்னாடி இருந்து வேகமாக தள்ளலானான்.

போதும் போதும் என்ற அளவுக்கு ஊஞ்சல் ஆடி முடிக்க “டீ சாப்பிடலாமா? குளிருற மாதிரி இல்ல” ரஹ்மான் தான் கேட்டான்

“எனக்குதான் டீ போட தெரியாதே” தருணத்தில் கணவனை பழிதீர்க்கலானாள் ஷஹீ.

“அதுக்கென்ன நா போடுறேன். சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குனு சொல்லு டி என் தங்கம்” என்றவன் சமையல் அறைக்குள் நுழைந்து டீ போட ஆரம்பித்திருந்தான்.

தன்னிடம் சொல்லாமல் ஹாஜராவிடம் டீ போட சொல்லி சாப்பிட்டான் என்ற கோபத்தில் எனக்கு டீ போட தெரியாது என்று சொல்ல அதனாலென்ன நான் போடுறேன் என்றவனை ரொம்பவே பிடித்திருக்க பின்னாலிருந்து அவளை கட்டிக்கொண்டவள் எட்டி அவன் டீ போடும் அழகை பாத்திருந்தாள்.

ஷஹீ முகத்தை சுருக்கி சொன்ன விதம் அவள் டி போட மறுப்பு தெரிவிக்கிறாள் என்றுதான் நினைத்தான் ரஹ்மான். பழையதை மனதில் வைத்துக்கொண்டு சொல்லுவாள் என்று நினைத்திருந்தால் அவள் போட்ட உப்பு டீயை ஞாபகப்படுத்தி இருப்பான்.

“என்ன பட்டு குட்டி புருஷன் டீ போட்டு கொடுத்ததுக்கே ஐ லவ் யு னு சொல்ல போறியா”

“எனக்கு எத்துணை செல்ல பேர் வச்சிருக்கிறீங்க?”

“தெரியலையே! அப்பப்போ என்ன தோணுதோ அத சொல்லி கொஞ்சிக்குவேன்”

“அப்போ இத்தனை நாளா சொல்லல” ஷஹீ முறைக்க

“சொல்லி உன்கிட்ட அடி வாங்கவா” ரஹ்மான் சிரித்தான்.

அவளுக்கும் சிரிப்பாக இருந்தது. டீ தயாராகவே இரண்டு கப்பில் ஊற்றியவன் இரண்டையும் எடுத்துக்கொண்டு ஊஞ்சல் இருக்கும் இடத்து சென்று அமர்ந்து கொண்டு ஷஹீயையும் அமரும்படி சொல்லி ஒரு கப்பை அவள் கையில் கொடுத்தான்.

“என்னோட நீண்ட நாள் ஆச உன் கூட இந்த ஊஞ்சல்ல அமர்ந்து டீ சாப்பிடணும். அது இன்னைக்குத்தான் நிறை வேறி இருக்கு” 

“என்ன நீண்ட நாள் ஆசையா?” ஷஹீ ஆச்சரியமாக கணவனை பார்க்க

“உன் ஸ்கூலுக்கு வந்தா நீ ஊஞ்சல் ஆடுறத பாத்திருக்கேன். உங்க வீட்டு பின்னாடியும் ஒரு ஊஞ்சல் இருக்குறத பாத்திருக்கேன்”

“அத எப்படி உங்களுக்கு தெரியும்” சந்தேகமாக கணவனை ஏறிட்டாள் ஷஹீ.

“சுவரேறி பார்த்தா தெரியாதா?” நகைத்தவன் அவளிடமிருந்து ஒரு அடியையும் பரிசாக பெற்றுக்கொண்டான்.

“இன்னும் என்ன வேலையெல்லாம் பாத்திருக்கிறீங்க”

“நிறைய நிறைய, எக்கச்சக்கமான வேலையெல்லாம் பார்த்ததாலதான் உனக்கு என்னென்ன பிடிக்கும்னு தெரிஞ்சிகிட்டேன். அதுல ஊஞ்சல் பிடிக்கும்னு தெரிஞ்சதும் உடனே நீ எங்க வீட்டுக்கு வந்தா உனக்கா ஒரு ஊஞ்சல் வேணும்னு செஞ்சதுதான் இது. அதுவும் நாம ரெண்டு பேரும் ஜோடியா உக்காரனும்னுன்னு வேற ஐடியா பண்ணி செஞ்சது”

ஷஹீயின் மனதில் அப்படி ஒரு சந்தோசம் அலை பாய்ந்தது. தனக்காக ஒருவன் எதுவேண்டுமானாலும் செய்வான் என்று இருக்கும் பொழுது அந்த சந்தோசமே தனி தான்”

“என்ன பானு குட்டி ஒண்ணுமே சொல்லாம இருக்க? இப்போவாச்சும் ஐ லவ் யு சொல்லுவானு எதிர் பார்த்தேன்”

“அவனவன் லவ்காக தாஜ்மகால் கட்டுறான் இவரு ஒரு ஊஞ்சலை கட்டி என்னமா பில்டப்பு கொடுக்குறாரு அதுலயும் இவரு தங்கசசிங்க ரெண்டும் மாறி மாறி உக்காருதுங்க என்ன அண்டவே விட மாட்டாளுங்க, இதுல இந்த ஊஞ்சல் என்னதாம். பேர் ஏதாவது எழுதி இருக்கா என்ன?” அவனை வெறுப்பேத்த

“என்ன உன்ன உக்கார விடலையா? அவளுங்கள?” நொடியில் முகம் கோபத்துக்கு மாற ஷஹீக்கு மேலும் ஆச்சரியம்.

அவன் கன்னத்தில் முத்தம் வைத்தவள் “சும்மா சொன்னேங்க, ஹாஜி காலேஜ் போய் வந்தா கொஞ்ச நேரம் இருப்பா ஹனா நாளைக்கு ஊருக்கு போறா அதனால இருக்கட்டும்னு விட்டுட்டேன். இருபத்திநாலு மணித்தியாலமும் ஊஞ்சலாயா இருப்பாங்க. நா என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா?”

“நீ என்ன சொன்னாலும் நம்பிடுவேன் பானு. நீ வேற நான் வேற இல்ல. உனக்கு புரியுதா? ஆனாலும் என்ன கூல் டோவ்ன் பண்ண நல்ல டெக்னீக்த்தான் கண்டு பிடிச்சு வச்சிருக்க”

“நல்லாவே புரியுது டீயை சாப்பிடுங்க, நல்லாத்தான் இருக்கு. சமைக்க கூட தெரியுமா?” தன்னை அறியாமல் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு முகத்தில் வரும் வெக்கத்திக் மறைக்க பேச்சை மாற்றினாள்.

சந்தோசமான மனநிலையில் இருந்தவனோ அவள் முகத்தை  கவனிக்கவில்லை. “அதெல்லாம் தெரியாதுமா? வேணும்னா நீ சமைக்கும் போது காய் கறியெல்லாம் கட் பண்ணி கொடுக்குறேன்” 

“இது நல்ல கணவனுக்கு அழகு” என்றவள் சிரிக்க

அவள் நெற்றியில் முட்டி நின்றவன் உல்லாசமாக சிரிக்கலானான்.

“நிறுத்துங்க நிறுத்துங்க நிறுத்துங்க நாம வெளிய வந்தது நீங்க என்ன தொழில் பண்ணுறீங்க அத பத்தி பேச. ஆனா ரூட் மாறி போய் கிட்டு இருக்கோம்”

ம்ம்.. எங்க இருந்து ஆரம்பிக்கிறது?” என்றவன் அருந்தி முடித்த டீ கப்பை கீழே வைக்க, ஷஹீயும் தன் கப்பை வைக்குமாறு ரஹ்மானின் கையில் கொடுத்தாள்.

“உங்க கறிக் கடையிலிருந்தே ஆரம்பிங்க. இன்னைக்கு பைல்ல ஆடுகளை பத்தி பாத்தேன். எனக்கு தெரிஞ்சது வெள்ளாடு, செம்மறியாடு மட்டும்தான். மேச்சேரி, ரெட், வாய்ட், சானேன், ஜம்னாபாரி, போயர், டெக்கனி, மண்டியா, மார்வாரி,  கத்தி, டோர்செட், சப்போல்க், மெரினா,ரம்போயில்லேட், செவியோட இந்த மாதிரி நிறைய பேர் பார்த்தேன். போட்டோவும் இருந்துச்சு.

வயது கூட குறிப்பிட பட்டிருந்தது. கொடுக்கப்படும் உணவு, மருந்து, பாரம் கூட நிறுக்கப்பட்டிருந்தது. அறுக்க போகும் ஆட்டுக்கு எதுக்கு இவ்வளவு டீடைல்ஸ்?”

“நல்ல கேள்விதான் அறுக்க போற ஆட்டுக்கு குறிப்பிட்ட வயதெல்லை இருக்க வேண்டும் என்பது தெரிந்த விஷயம் தானே! அதே மாதிரி முறையா உணவு கொடுத்து பராமரிக்கணும். அறுக்க போற ஆடுதானேனு கண்டுக்காம விட்டுட கூடாது.

சும்மா அறுத்தோம், சாப்பிட்டோம்னு இல்லாம எத்துணை வகையான ஆடு இருக்கு, அதோட குணங்கள்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணேன். எந்த ஆடு செம டெஸ்ட்டுனு தெரிஞ்சிக்க வேணாமா?” அவள் நெற்றியில் முட்டி நிற்க

“விளையாடாதீங்க, உண்மைய சொல்லுங்க”

“சின்ன வயசுல வாப்பா கூட கடைக்கு போவேன். அப்போ ஆடுகளுக்கு இலைகுலைகளையும் சாப்பிட கொடுப்பேன். ஒருநாள் அறுக்கும் போது பாத்துட்டேன். துடிதுடிச்சு ரெத்தம் வெளியேறினத பாத்ததும் துடிச்சிட்டேன். வாப்பா கூட சண்டையும் போட்டேன்.

அப்போதான் வாப்பா சொன்னாரு அறுக்கும் போது மூலைக்குப் போற நரம்பு தான் வெட்டுவாங்கலாம் அதானால் வலி தெரியாதாம். உடம்புல உள்ள எல்லா ரத்தமும் வெளியேறிடுமாம். அப்படி வெளியேறிட்டா அசுத்த ரத்தம் தங்காததால இறைச்சி சுத்தமா இருக்குமாம்.

அதுக்கு பிறகுதான் அத பத்தியே ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன். காரணமில்லாம அறுக்கிற ஆட்டுக்கு வயதெல்லை எதுக்கு நிர்ணயம் பண்ணுறாங்கனு யோசிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் வித விதமான ஆடுகளை பாத்தேன், கலர் காலரா, வித்தியாசமா எல்லாத்தையும் பத்தி தேட ஆரம்பிச்சேன்.

சிலபேர் திருடி ஆட்ட விம்பிப்பாங்க, சிலபேர் காசுக்காக பால் கொடுக்குற ஆட்ட விக்கிறாங்க, சிலபேர் சூழ்நிலையால் பாசமான வளர்த்த ஆட்ட விப்பாங்க, தெரியாத்தனமா அந்த ஆடுகளை வாங்கி அறுத்துட கூடாதில்ல. அதனாலயே ஆட்டு தொட்டிகளிலிருந்து மட்டும் ஆடுகளை வாங்க சொல்லி வாப்பாவை வற்புறுத்த ஆரம்பிச்சேன். அவரும் நான் சொல்லுறத புரிஞ்சிக்கிட்டாரு.

அப்பொறம் ஆடுகளை பத்தி ஆராய்ச்சி, வயது, வகை, நிறம், தரம் என்று பிரிச்சு பார்க்க ஆரம்பிச்சேன். இப்போ ஆட்ட பாத்ததும் அது என்ன ஆடுனு சொல்லிடுவேன். அதே மாதிரி கோழியும். அது தனி பைல் வச்சிருக்கேன்”

“நிஜமாவா?”

“எஸ் பொண்டாட்டி. ஆனா பாரேன் பாய்லர் கோழி வந்த பிறகு நாட்டு கோழியோட அருமை தெரியாம இருந்தோம். இப்போ எல்லோரும் உண்மை என்னனு தெரிஞ்சுக்கிட்டு சத்தான ஆகாரங்களின் பக்கம் போறாங்க. டீடைல்ஸ் போதுமா பொண்டாட்டி” மெதுவாக அவள் நெற்றியில் இதழ் பாதிக்க,

“ஹஜ் பெருநாளைக்கு, ரமழான் மாசத்திலையும் தான் அதிகமான ஆடுகள் வாங்கி இருக்கீங்க”

“ஹஜ் மாசத்துல குர்பான் கொடுப்போமில்ல. ரமழான் மாசத்துலலும் உணவுக்காக அறுக்கப்படும் ஆடுகளின் அளவு அதிகம் அதான். வாங்கி அடுத்த நாளே அறுக்க மாட்டோம் ஒரு வாரம் பாராமரிப்போம். அது என்னோட கட்டளை”

“உணவுக்காக தவிர வேற எந்த காரணுத்துக்காகவும் மிருகங்களை கொல்ல கூடாதில்லையா. நாளை மறுமைல நாம பண்ணுற ஒவ்வொண்ணுத்துக்கும் பதில் சொல்லணும். தொட்டில அந்த ஆட்டுக்கு ஒழுங்கா சாப்பாடு போட்டாங்களானு தெரியாது அதுக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுக்கலைனா மறுமைல அல்லாஹ் கேட்டா தெரியாதுன்னு சொல்ல முடியாது. அவனுடைய தண்டனையில் இருந்து தப்பிக்கணும்னா நாம ஒழுங்கா, நீதமா நடந்துக்கணும்.

அறுக்கும் போது கூட அல்லாஹ் பேர் கூறி எதுக்கு அருக்குறோம்? ஆட்டோட ஏதாவது ஒரு பகுதி அல்லாஹ்வ போய் சேறுதா? இல்லையே! ஒரு உயிரை எடுக்கிறோம் என்ற பயம் இருக்கும் அல்லாஹ் பேர் சொல்லி அவனையே சாட்ச்சியாளனாக்குறோம். மறுமைல எந்த மிருகமாவது அநியாயமா அத கொன்னுட்டாத முறையிட்டா எடுபடாதில்ல. இறைவன் காரணமில்லாம உயிரினங்களை படைக்கல உணவுக்காக கொஞ்சத்தை படைச்சிருக்கான். விருப்பம் இருந்தா சாப்பிடலாம் இல்லனா விட்டுடலாம். கட்டாயமில்லை. இதே தான் பழங்களுக்கும், மரக்கறிவகைகளுக்கும்” ஊஞ்சலை ஒரு காலால் மெதுவாக ஆட்டியவாறே பேசிக்கொண்டிருந்தான் ரகுமான்.

“ஆமா ஆமா எனக்கு பாவக்கானா பிடிக்காது. பூசணிக்கா பிடிக்காது சாப்பிட மாட்டேன். அதே மாதிரி ஆட்டோட இறைச்சி தவிர மத்த பாட்ஸ் சாப்பிட மாட்டேன்” ஷஹீ கண்ணை உருட்ட அவள் கண்கள் பளபளக்க,

“அப்படியா அப்போ அன்னைக்கு நான் ஊட்டி விட்டபோ சாப்பிட்ட”

“என்னைக்கு” ஊஞ்சலிலிருந்து எழுந்து விட்டாள்.

“சும்மா சொன்னேன் பானு. பிடிக்கலைன்னா விடு எதுக்கு சாப்பிடுற?” மீண்டும் அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டவன் அவள் விலகி விடாதவாறு இறுக அணைத்துக்கொண்டான்.

“சிலருக்கு சில சாப்பாடு அலர்ஜிக்காகும். சிலருக்கு சத்து குறைவு. இப்படி எவ்வளவு பிரச்சினை. உலகத்துல ஓடிக்கிட்டு இருக்கு. அல்லாஹு அஞ்சி மறுமை நாளுக்கு பயந்து தண்டனையிலிருந்து தப்பி சுவர்க்கம் சொல்லணும் என்று நினைக்கிற ஒவ்வொரு நல்ல முஸ்லிலும் தொழில்ல ஹலால் பார்ப்பான். நீதமா நடந்துக்குவான். அநியாயம் செய்யமாட்டான்.”

“மூச்சு முட்டுதுங்க”

தன் பிடியை விலக்கியவன் “சாரி டி”

“நா உங்கள சொல்லல உங்க பேச்ச சொன்னேன்” கணவனை கட்டிக்கொண்டவள்” “எல்லா விஷயத்துலையும் எவ்வளவு விஷயம் இருக்கு இல்ல. யோசிக்கும் போது தல சுத்துது. மூச்சு முட்டுது. அத சொன்னேன்”

“ஓ.. அதைத்தான் கற்றது கையளவு கல்லாதது கடலளவுன்னு சொல்லி இருக்காங்க”

“அது உண்மைதான். சரி உங்க மத்த தொழில் பத்தி சொல்லுங்க”

“இல்ஹாமுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தது தெரியும் தானே!”

“தெரியும் ஆனா அதுல வார காச என்ன பண்ணுறீங்க?”

“விவரமான ஆளுதான் நீ. வாப்பா பாதி. நான் பாதி போட்டுத்தான் ஆட்டோ வாங்கினோம் வார லாபத்துல மூணுல ஒன்னு இல்ஹாம் எடுத்துப்பான் ரெண்டு பங்க என் கிட்ட கொடுத்துடுவான்”

“ரெண்டு பங்கும் உங்களுக்கா?”

“ஏன் கேக்குற?”

“மாமா காசு போட்டிருக்காரு அவருக்கு கொடுக்கணும் இல்ல பாஷித்துக்காவது கொடுக்கணும். ஆட்டோ வாங்க உங்களுக்கு எங்கிருந்து காசு?” என்று இழுக்க

ஷெட்ல வரும் லாபத்துல கொஞ்சம் மத்த ஆட்டோல வந்த வருமானம் கொஞ்சம்னு வாங்கினது”

“ஷெட்டா” 

“கறி டிலிவரி பண்ண ஆட்டோ தேவபட்டது. வாடகைக்கு பேசினா சில நேரம் டைமுக்கு வர மாட்டாங்க, அதனால ஒரு டெம்போ வாங்கலாம்னு வாப்பாகிட்ட பேசி முடிவு பண்ணோம். அந்த ஆட்டோ மளிகை சாமானையும் டிலிவரி பண்ணோம், பழங்கள், மரக்கறி, பூணு எல்லாம் டிலிவரி பண்ணோம். ஒண்ணுக்கு இப்போ மூணு இருக்கு.

பவாஸ் தெரியுமில்ல. அவன் வாப்பா திடிரென்று மௌத்தாக வருமானம் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டான். வாப்பாட உதவியோடு அவன் இடத்துலதான் ஷெட்டு வச்சு கொடுத்தேன். அப்பப்போ காசு தேவ படும் போது காசும் கொடுத்து வழி காட்டினேன். நானும் பாட்னார்னு வச்சுக்கோயேன். ஒருநாளைக்கு ரெண்டு அவர் வேல பார்ப்பேன் கல்யாணத்துக்கு பிறகுதான் வேல பார்க்க முடியல. அதுல கொஞ்சம் வருமானம் வரும்.

கறிக்கடைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனா டெம்போல வரும் வருமானம் முழுக்க என்னோடது. அதுல ஒரு பங்கு வாப்பாகு கொடுத்துடுவேன். எல்லாத்துக்கும் பாஷித்தையும் கூட்டு சேர்த்துக்குவேன் விட்டுட மாட்டேன். அவனுக்கும் ஒரு பங்கு ஒதுக்கிட்டுதான் வரேன். ஆட்டோ காசுளையும் தான். அவனும் அந்த காச தேவையில்லாம தொட மாட்டான்”

“நீங்க படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேல தேடிக்கலாமே!”

எங்க ஊர்ல கிடைக்கிறது கஷ்டம் பானு வெளியூர்ல அதுவும் ஒரு வருஷம் ட்ரைனிங் அப்படி, இப்படினு ஆயிரத்து எட்டு கண்டிஷன் போடுறாங்க. உம்மாவை விட்டு இருக்கவும் முடியாது. உன்ன பார்க்காம இருக்கவும் முடியாது அதனாலேயே போகல”

அவன் கடைசியாக சொன்னதில் ஆசையாக கணவனை பார்த்தவளின் உள்ளத்தில் ஏதோ ஓர் அதிர்வலை பாய கண்சிமிட்டாமல் அவனையே பார்த்திருந்தாள்.

“ஆனா இப்போ இருக்குற பிஸினஸுலேயே மொபைல் பிசினஸ் தான் பேஸ்ட்டுனு படுது. எல்லாரும் பாவிக்கிறாங்க. மூணு மாசத்துக்கொருக்கா, புதுசா வாங்குறாங்க, புதுசு புதுசா மாடலும் வருது”

“அதுல ஒரு ஆராய்ச்சி பண்ணிடீங்க போல”

சிரித்தவாறே தலையாட்டியவன் “எல்லா வேலையும் பக்காவா போய் கிட்டு இருக்கு. நான், பாஷித், அஷ்ரப் மூணு பெரும் சேர்ந்து செய்ய போறோம். கடை கூட பார்த்தாச்சு. மொபைல் ரேபயார் கூட இருக்குன்னா கஸ்டமர்ஸ் வருவாங்க. சில பேர் இன்னும் பழைய மொபைல்ஸ் பாவிக்கிறாங்க, அந்த பார்ட்ஸ், சார்ஜெர்ஸ் தேவைப்படும். நெறைய யோசிச்சு வச்சிருக்கேன்”

“போன்ஸ் எங்க இருந்து கொண்டு வர போறீங்க?”

“அஷ்ராபோட மாமா ஒருத்த துபாய்ல இருக்காரு அவர் மூலமாத்தான் ஏற்பாடு பண்ணி இருக்கோம்”

“ஆல் தி பெஸ்ட்”

“இப்படியா வாழ்த்து சொல்வாங்க? கிஸ் எல்லாம் கிடையாதா?”

சிரித்தவாறே கன்னத்தில் முத்தம் வைத்தவள் “இப்போதைக்கு இது போதும் கடைய திறந்த பிறகு இங்க கொடுக்குறேன்” என்று இதழ்களை காண்பிக்க

தான் கேட்கும் முன் சொல்லும் மனைவியை ஆசையாக பார்த்தவனின் எண்ணமெல்லாம் “காதல் இல்லாமதான் என் மனசுல என்ன ஓடும்னு கண்டு பிடிச்சு சொல்ல முடியுதா?”

“என்ன யோசிக்கிறீங்க?”

“ஒண்ணுமில்ல”

சுபஹ் தொழுகைக்கு அதான் சொல்ல ஆரம்பிக்க ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு புன்னகைத்து கொண்டனர்.

ஒருநாள் முழுக்க தூங்காமல் இரவில் பேசிக்கொண்டிருந்தார்கள் என்றால் அது அவர்களுக்கே ஆச்சரியம் தான். வாழ்க்கையில் சில பொழுதுகள் மறக்க முடியாதவை. சில இரவுகள் விடியவே கூடாதென்று இருக்கும் அது முதலிரவு மட்டுமல்ல இது போன்ற இரவும் தான்.

சுபாஹு தொழும் முன்னே எழுந்து கொள்ளும் ரஸீனா அதான் சொல்லவும் வாசலில் மின் விளக்குகளை எரிய விட்டவள் சமயலறையில் மின் விளக்கு எரிவதைக் கண்டு வந்து பார்க்க கதவும் திறந்திருக்கவே! எட்டிப்பார்த்தவள் ரஹ்மானும் பானுவும் ஊஞ்சலில் அமர்ந்திருப்பதைக்கண்டு

“யா அல்லாஹ் இந்த நேரத்துல என்ன பண்ணுறீங்க?”

“தூக்கம் வரல உம்மா சும்மா பேசிகிட்டு இருந்தோம்” என்றவாறே ரஹ்மான் எழுந்து கொள்ள டீ கப்களை எடுத்துக்கொண்டு ஷஹீ உள்ளே செல்லவும்

“பானு நான் மஸ்ஜிதுக்கு போயிட்டே வாறன்” என்ற ரஹ்மான் வாசல் புறம் நகர்ந்திருந்தான்.

ரஸீனாவுக்கு புரிந்தது இருவரும் தூங்கவில்லையென்று “பானு சுபாஹு தொழுதுட்டு சாப்பிட்டுட்டே கொஞ்சம் நேரம் தூங்குங்க” என்றுவிட மாமியாரின் புரிதலை கண்டு புன்னகைத்தவாறு அறையினுள் நுழைந்தாள் ஷஹீ.

Advertisement