Advertisement

அத்தியாயம் 2

ஓ மனமே ஓ

மனமே உள்ளிருந்து

அழுவது ஏன் ஓ மனமே

ஓ மனமே சில்லுசில்லாய்

உடைந்தது ஏன்

மழையைத்தானே

யாசித்தோம் கண்ணீர்

துளிகளைத் தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம்

கூழாங்கற்களை எறிந்தது யார்

வரிசையாக சோக கீதங்களை கேட்டவாறு தூங்க பிடிக்காமல் தலையணையை கட்டிக்கொண்டு கட்டிலில்  உருண்டுக் கொண்டிருந்தான் ரஹ்மான்.

மனதில் மறைத்து வைத்த காதலைத்தானே சொல்ல போனேன் ஆனால் என்னவெல்லாம் நடந்தேறிவிட்டது.

அக்பர் மளிகைக் கடை வைத்திருப்பவர் பகல் சாப்பாட்டுக்கு என்றுமில்லாமல் இந்த நேரத்திலா வீடு வர வேண்டும். அதுவும் சரியாக பானுவிடம் காதலை சொல்லும் தருணத்தில். அவளும் அதை புரிந்துக்கொள்ளாமல் கலாட்டா சொல்வதாக கூறிவிட்டாளே!

பாவம் அவள் சின்ன பெண். திடுமென போய் காதலை சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வாள்? முன்ன பின்ன பேசி பழகி இருந்தாலாவது பரவாயில்லை. அதான் பயந்து விட்டாள். பயத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் கலாட்டா செய்வதாக கூறி விட்டாள்.

“காலேஜில் நல்லா பேசிப் பழகும் தோழிகளே யாராவது காதலை சொன்னால் தாறுமாறாக திட்டுறாங்க. அப்போ அது என்ன?” அவன் மனம் குறுக்கு கேள்வி கேக்க

“அது…. ஆனா அவங்க கலாட்டா பண்ணதாக எச்.ஓ.டி கிட்ட கம்பளைண்ட் கொடுக்க மாட்டாங்களே! சிரிச்சி பேசினா போதுமே லவ்னு சொல்லுவீங்களேன்னு செல்லமா முறைச்சு, கோபமா பேசிட்டு போய்டுவாங்க. என் பானு அப்படியா? வெகுளி… அவளுக்கு இதெல்லாம் தெரியாதே!” மனசாட்ச்சியை குட்ட

“நீ சரிப்பட்டு வர மாட்ட” என வசை பாடியது அவன் மனம்.

அலைபேசி அடிக்கவே திரையில் அஸ்ரப் என்று வரவும் இயக்கி காதில் வைத்தவன் எடுத்த எடுப்பிலே! “சொல்லுடா நல்லவனே! உன் கூட போன நேரம் லவ் சொன்ன நேரத்துலையே ஊத்திக்கிச்சு”

“நீ ஊத்திகளையே!” அஸ்ரப் கிண்டலாக கேட்டாலும் அவன் குரலில் நண்பனின் மேல் அக்கறை இருந்தது.

“லூசா நீ சரக்கெல்லாம் பச்ச ஹராம் அதெல்லாம் தொட மாட்டேன்”

{ஹராம்:- {அல்லாஹ்வால்} தடைசெய்யப்பட்டது}

“ம்ம்… பொண்ணுங்கள கூடத்தான் பார்க்க கூடாது ஆனா சார் பலோவ் பண்ணுவீங்க, பார்ப்பீங்க… லவ்வும் பண்ணுவீங்க”

“என்னடா பொண்ணுங்கனு தப்பா பேசுற.. நான் என் பானுவை மட்டும்தான் பார்ப்பேன்” திமிராக சொன்னான் ரஹ்மான்.

“அது சரி. ஆனாலும் அந்த அக்பர் மாமா ரொம்ப பண்ணுறான்”

“நீ அவர சொல்லுற அந்த சிடுமூஞ்சி முபாரக் என் பானுவை அடிச்சிட்டான் டா…”

“என்னடா சொல்லுற? இது எப்போ எனக்கு யாருமே சொல்லவே இல்லையே!” அஸ்ரப் அதிர்ச்சியடைய

“ஆமா நீ அக்பர் பாயோட சண்டை முடிஞ்ச பின்னாடி எங்க போன?”

“உம்மம்மா {அம்மாவின் அம்மா} சாச்சி {சித்தி} வீட்டுல இருக்காங்கல்ல உடம்பு முடியாம ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டதாக போன் வந்திச்சு போய்ட்டேன். இப்போதான் வந்தேன் மச்சான். சரி அவன் எதுக்கு உன் பானுவை அடிச்சான்”

நண்பன் சொன்னது காதில் விழுந்ததும்  ரஹ்மானின் குரலில் புது உட்சாகம் பாய “மச்சான் இப்போ என்ன சொன்ன”

“என்ன சொன்னேன். நீ வார்த்தைக்கு வார்த்த என் பானு, என் பானுனு சொல்லுற அதான் உனக்கே எழுதி கொடுத்துட்டேன். சரி விசயத்த சொல்லுடா..”

அஷ்ரப்பின் குரலில் சிறிது நக்கல் இழையோடி இருந்தாலும் அதை கண்டு கொள்ளும் மனநிலையில் ரஹ்மான் இல்லை.

“வீட்டுக்குள்ள என்ன நடந்ததுனு தெரியல. என் பானு மேல மறுபடியும் அவன் கை வைக்கட்டும் கைய ஒடச்சிடுறேன்” ரஹ்மான் கருவ

“ம்ம்.. மச்சான போட்டுத் தள்ளியாவது தங்கச்சிய கட்டிக்கிற மூட்ல இருக்க. சரி… சோக கீதம் பாடாம தூங்கு குட் நைட்”

“குட் நைட்” அஸ்ரபோடு பேசிய பின் மனம் லேசாக நாளை நடக்கவிருக்கும் கலவரம் அறியாமல் நிம்மதியாக தூங்கலானான் ரஹ்மான்.

பானுவின் வீடோ இழவு வீடுபோல் இருந்தது. முபாரக் அவன் அறையில், பானு அவள் அறையில், பேகம் தொழுகை பாயில் அழுதவாறு துஆ கேட்டுக்கொண்டிருந்தாள்.

பானு அறையில் அழுதவாறு இருக்க, முபாரக் அவனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவன் சிந்தனையில் அத்தை மஸீகா பேசியதுதான் நிழலாடியது.

“என்னதான் நம்ம பொண்ணு மேல எந்த தப்பும் இல்லாட்டியும் ஊரு உலகம் இருக்குன்னுதான் பேசும். நாளைக்கு இவள யாரு கட்டிப்பா? சொல்லு. ஏற்கனவே உங்க வாப்பா பத்தி ஊரே தப்பா பேசுது. இந்த லட்சணத்துல நல்ல குடும்பத்துல இருந்து நல்ல மாப்பிளைங்க வருமா சொல்லு. ஸ்கூல் போறப்போவே இப்படின்னா நாளைக்கு காலேஜ் போனா.. எவனயாச்சும் லவ் பண்ணிட்டா என்ன பண்ணுறது? அதுவும் வேற மதத்து பையன லவ் பண்ணிட்டானு வச்சிக்க.. பேசவே வேணாம்… என் பசங்களையும் பாதிக்கும். என் பொண்ணா இருந்தா யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்து நான் நிம்மதியா இருந்திடுவேன். இத நான் உங்க மாமா கிட்டயும் சொல்ல முடியாது, உங்க உம்மா கிட்டயும் சொல்ல முடியாது ஏன்னா நா உங்க குடும்பத்துக்கு நல்லதே! நினைக்க மாட்டேன்னு பேசுவாங்க. இந்த குடும்பத்துக்கு நீதான் ஆம்புள நீதான் முடிவெடுக்கணும்” சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முபாரக்கின் மனதில் ஷஹீராவின் திருமணத்தை பற்றிய எண்ணத்தை விதைத்து விட்டு சென்றாள் மஸீஹா.

அவளுடைய சொந்தத்தில் மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளோடு இருக்கும் காதருக்கு பானுவை திருமணம் செய்து வைக்க திட்டமும் தீட்டலானாள். இதையறியாமல் முபாரக்கும் தங்கையின் படிப்பை நிறுத்துவதென்று முடிவு செய்தவன். தூங்கச்சென்றான்.

சுபஹுத் தொழுகைக்காக அதான் சொல்லும் முன் எழுந்த பேகம் காலை கடன்களை முடித்துவிட்டு பள்ளிக்கு செல்ல முபாரக்கை எழுப்ப அவனும் எழுந்து குளியலறைக்குள் புகுந்துகொள்ள ஷஹீராவை எழுப்ப சென்றவள் பெருங்குரலெடுத்து கத்த

வாயில் பல்துலக்கியோடு ஓடிவந்தவன் அன்னை பானுவை மடியில் வைத்துக்கொண்டு கதறவும் அவள் தப்பாக முடிவெடுத்து விட்டாளோ என்று ஒருகணம் பதற அவளோ சுயநினைவே இல்லாமல் இருந்தாள்.

அவள் நெஞ்சு ஏறி இறங்குவதை கண்டதும் அன்னையை ஆசுவாசப்படுத்தியவாறே தங்கைக்கு ஒன்றுமில்லை என்றவன் அருகில் இருந்த குவளையில் இருந்த தண்ணீரை தெளித்து அவளை எழுப்ப முயற்சி செய்ய விழிப்புவறாமல் இருக்கவே மாமாவை அழைக்க கதவை திறக்கவும், பள்ளி செல்ல தயாராகி வந்த அக்பர் கதவை தட்டவும் சரியாக இருந்தது.

பள்ளியில் சுபஹுத் தொழுகைக்காக அதான் ஒலிக்கும் நேரம் ஷஹீரா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட “அவள் எத்தனை நாள் ஒழுங்காக சாப்பிடவில்லை என்ற கேள்வி தான் முதலில் வந்தது”

“பாடசாலையில் காலையிலையே வகுப்புகள் இருப்பதால் காலை உணவும் தவிர்க்கப்பட, மதியமும் உணவு கொண்டு செல்வதில்லை. சிலநேரம் முபாரக் சென்று டிஃபின் பாக்ஸை கொடுத்து விட்டு வருவான். வீட்டுக்கு வந்தாலும் படிக்க வேண்டும் என்று ஒழுங்காக சாப்பிடமாட்டாள். நேற்று காலையிலிருந்து சாப்பிடாதவள் எப்போ மயங்கினாள் என்று வீட்டாருக்கே தெரியவில்லை.

போதாததற்கு அவள் உடம்பிலுள்ள காயங்கள் சந்தேகத்தை கிளப்ப, மருத்துவமனையிலிருந்து போலீசுக்கு தகவலும் பறக்க, போலீஸ் வந்து விசாரிக்க அக்பரோ அவள் மாடிப்படியிலிருந்து உருண்டதாக கூற அவர்கள் ஷஹீரா கண்முழித்த பின் விசாரிப்பதாக கூறிச்சென்றனர்.

காலையிலையே பாட்டியைக் காண வந்த அஷ்ரப்பின் கண்ணில் இவர்கள் விழ ரஹ்மானுக்கு செய்தி அலைபேசிவலையாக செல்ல அவனும் வண்டியை வேகமாக கிளப்பிக்கொண்டு மருத்துவமனையை அடைய அஸ்ரப் அவனை வாசலிலையே மடக்கிப் பிடித்தான்.

“எங்கடா போற?”

“என் பானுவ பார்க்கணும் டா…”

“டேய் நீ இப்போ உள்ள போக முடியாது அவங்கண்ணன் அங்க தான் இருக்கான்”

“அவனை கொலை பண்ணாம நான் பானுவ பார்க்க மாட்டேன். அவன் அடிச்சதாலதான் அவ இந்த நிலமைல இருக்கா. அவள கொல்ல கூட பாத்திருப்பான்” ரஹ்மான் கோபத்தில் துள்ள

“அறிவுகெட்ட தனமா பேசாத டா.. நான் விசாரிச்சிட்டேன். ஒழுங்கா சாப்பிடாம மயங்கிட்டாங்களாம். பயப்படுற மாதிரி ஒண்ணுமில்ல. நீ கொஞ்சம் அமைதியா இரு” நண்பனை ஆசுவாசப்படுத்த முடியாமல் அஸ்ரப் தடுமாற தொப்பென்று கதிரையில் அமர்ந்த ரஹ்மான் கதறி அழலானான்.

“டேய் ஏன் டா இப்படி பண்ணுற கண்ண துடைடா… வாரவங்க, போறவங்க எல்லாம் நம்மளையே பாக்குறாங்க. அதான் தங்கச்சிக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டாங்களே!”

“என்னாலதான் மச்சான் அவளுக்கு இப்டியாச்சு. நான் மட்டும் லவ் ப்ரொபோஸ் பண்ண போகலானா அவளுக்கு இந்த நிலமை வந்திருக்காது”

“லூசு மாதிரி பேசாதடா… அவங்க சாப்பிடாம இந்த நிலமையை தானாகவே வரவழைச்சிகிட்டாங்க அதுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. புரியுதா”

“டேய் நான் அவள பார்க்கணும் டா… ” ரஹ்மான் கண்களில் நீரோடு சொல்ல

“இருடா… ஏதாவது பண்ணலாமான்னு பாக்குறேன்” நண்பனின் நிலை அவனையும் பதற வைக்க, அஸ்ரப் ரஹ்மானை அங்கேயே இருக்கும் படி கூறிவிட்டு ஷஹீரா இருந்த அறைப்பக்கம் செல்ல அக்பர் வீடு சென்றிருக்க முபாரக்கும் பேகமும் அங்கு இருந்தனர்.

“பேகம் மாமி மட்டும் இருந்தா ஏதாவது பண்ணலாம். இந்த சிடுமூஞ்சி இருந்தா ஒன்னும் பண்ண முடியாதே” நொந்தவனாய் திரும்பி வந்தவன் ரஹ்மானை அழைத்து சென்று பாட்டியின் அறையில் விட்டு

“நீ இங்கயே இரு முபாரக் அங்கிட்டு போனதும் உனக்கு தகவல் தரேன். நீ போய் உன் ஆள பார்த்துட்டு சீக்கிரம் வந்துடுடா… ரொம்ப நேரம் நிக்காத சிடுமூஞ்சி வந்துட போறான்”

வேறு வழியில்லாததால் “சரி” என்றவன் கண்களை மூடி அங்கிருந்த மேசையில் தலை வைத்து படுத்துக்கொள்ள அஸ்ரப் வெளியேறினான்.

அவன் கண்களுக்குள் நேற்று பானுவின் சோர்ந்த தோற்றமும், அச்சத்தால் வெளிறிய முகமும் வர

“டெய்லியும் உன்ன பலோவ் பண்ணுவேன் டி… நீ சாப்டியா இல்லையானு தெரியாம போச்சே டி… ஏன் டி சாப்பிடாம உடம்ப வருத்திக்கிற. மனசு ரொம்ப வலிக்குது டி.. என்னால தாங்க முடியல”  மனதுக்குள் மருகிக் கொண்டிருந்தான் ரஹ்மான்.      

இன்னும் பானுவுக்கு நினைவு திரும்பவில்லை. பேகம் நெஞ்சம் பதற அமர்ந்திருக்க, சோர்வுதான் காரணம் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருப்பதால் தூங்குகிறாள் என்ற டாக்டர் கண்விழித்ததும் முதலில் சூடாக அருந்த ஏதாவது கொடுக்குமாறு கூற வீட்டிலிருந்து எடுத்து வரவே அக்பர் சென்றிருந்தார்.

பானு இருக்கும் அறையினுள் அவள் அருகில் அமர்ந்திருந்த பேகம் கண்களில் நீர்மல்க புலம்பியவாறே மகளின் அருகில் இருக்க முபாரக்கும் வேதனையுடன் தங்கையை பாத்திருந்தான்.

டாக்டர் தன்னை வந்து சந்திக்குமாறு தகவல் சொல்ல முபாரக் வெளியேற அங்கேயே கண்கொத்திப் பாம்பாய் சுத்திக்கொண்டிருந்த அஸ்ரப் முபாரக் வெளியேறுவதைக் கண்டு ரஹ்மானுக்கு தகவல் சொன்னவன் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்து பேகத்திடம் நலம் விசாரிக்க, அவளும் புலம்ப, பாட்டி அனுமதித்திருப்பதைக் கூறி அவரைக்கான பேகத்தை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றான்.

அஸ்ரப் பேகத்தோடு அந்த பக்கம் சென்றதும் பானு இருக்கும் அறையினுள் நுழைந்தான் ரஹ்மான்.

வாடிய கொடியாக கட்டிலில் படுத்திருந்தாள் ஷஹீரா. கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. தூங்குகிறாளா? மயக்கத்தில் இருக்கிறாளா? என்று ரஹ்மானுக்கு புரியவில்லை.

அவள் முகத்தையே சற்றுநேரம் உன்னிப்பாக பார்த்திருந்தவனுக்கு இந்த ஒரே நாளில் வாடிவிட்ட அவள் முகம் வேதனையளித்தது. உதடுகள் வெளிறிப்போய் இருக்க, முகமே பொலிவிழந்திருந்தது.

தூரத்தே இருந்து பார்த்தாலும் சிரிக்கும் அவள் கண்களும், உதடும் அவனுக்கு பல கதைகள் சொல்லும். தோழியோடு தலையசைத்தவாறு பேசிக்கொண்டு வருபவளை கள்ளப் பார்வைப் பார்த்து ரசிப்பான்.

“பானு.. பானு.. பானு..” என்று ஆயிரம் தடவையாவது  அவன் மனம் அவள் பெயரை சொல்லி அழைக்கும் ஒருதடவையாவது அவள் அவனை ஏறெடுத்தும் பார்த்தாலில்லை. இன்று பேசவே திறனில்லாமல் படுத்துக் கிடக்கிறாள் அவன் உயிர்.

பானு… உன் பெயர் சொன்னால் என் இதழ்கள் விரியுதடி…

பானு.. உன் பெயர் சொன்னால் என் புன்னகை மலருதடி…

ரஹ்மானின் நெஞ்சம் விம்மியது. அவளின் இந்த கோலம் கண்டு அவனால் தாங்க முடியவில்லை.

தன்னால் தான் அவளுக்கு இந்த நிலமை என்ற சிறு குற்ற உணர்ச்சியும் தொற்றிக்கொள்ள,  மெதுவாக அவளருகில் சென்றவன் அவளின் கை மீது கை வைக்க, கை சில்லென்று இருக்கவே கையை பற்றிப் பிடித்தவன் தன் கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.

கண்ணோடும்

நெஞ்சோடும் உயிரால்

உன்னை மூடி கொண்டேனே

கனவோடும் நினைவோடும்

நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே

மதி பறிக்கும்

மதி முகமே உன் ஒலி

அலை தன்னில் நானிருப்பேன்

எங்கே நீ சென்றாலும் அங்கே

நான் வருவேனே மனசெல்லாம்

நீதான் நீதானே ஓஹோ …

நீ தூங்கும்

நேரத்தில் என் கண்கள்

தூங்காது கண்மணியே

ஹோ கண்மணியே

பூ ஒன்று உன்

மீது விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய்

போகுமே ஓ ஓ

மருத்துவரின் அறையை தட்டிவிட்டு முபாரக் உள்ளே நுழைய, ஷஹீராவின் கோப்பை கையில் வைத்திருந்த அவர்

“வாங்க உக்காருங்க தம்பி” என்றவர் “வீட்டுல என்ன பிரச்சினைனு நான் கேட்க மாட்டேன் அதுக்காக உங்க தங்கச்சிய இப்படி பெல்டால அடிச்சிருக்கீங்க அறிவிருக்கா உங்களுக்கு? அந்த பொண்ண பார்த்ததும் பாலியல் பலாத்காரம்தான் நடந்திருச்சோன்னு போலீஸ வர வரவழைச்சேன். ஆனா அத விட கொடும சொந்த குடும்பமே கொடும படுத்துறது”

“ஒரு பையன் கூட ரோட்ல பேசிகிட்டு இருந்தானதும் கோவத்துல அடிச்சிட்டேன்” முபாரக் தான் செய்ததை நியாயப்படுத்தி பேச முயற்சி செய்ய

“லவ் மேட்டரா… அதுக்கு இப்படியா அடிப்பீங்க? அவங்க உங்கள தடுக்காம இருந்திருக்காங்க, நீங்களும் மாட்ட அடிக்கிறே மாதிரி அடிச்சி இருக்கீங்க. நாளைக்கு உங்கள நம்பி ஒரு பொண்ணு எப்படி வருவா? கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலைன்னா கவுன்சிலிங் எடுங்க. இனிமேல் இப்படி நடந்துகொள்ளாதீங்க. தப்பா ஏதாவது முடிவெடுத்திருந்தாதான் உங்களுக்கெல்லாம் புரியும். மனசளவுல ரொம்ப அடிப்பட்டு இருக்காங்க. நால்லா தூங்கி எந்திரிச்சி பிறகு சூடா சூப் குடிக்க கொடுங்க, அதுக்கு பிறகு நல்லா சாப்பிட கொடுங்க. மாலைல வீட்டுக்கு போலாம். வீட்டுக்கு போனா நல்லா பாத்துக்கோங்க. இப்போ போங்க…” டாக்டர் கோபமாக பேச முபாரக் அதையெல்லாம் பொருட்படுத்தாது அறையை விட்டு வெளியேறினான்.

ஷஹீரா அசைவற்று இருக்கவும். அவளை நெருங்கி ரஹ்மான் மெதுவாக அவளை அழைத்தான் “பானு…” அழைத்த அவன் உதடுகளுக்கு கூட வலிக்காமல், கேட்ட அவள் காதுகளுக்கு கூட வலிக்காமல் மென்மையாக மீண்டும் அழைத்தான்.

“பானு…”

அவள் நலன் அவனுக்கு முக்கியம். ஏன் அசைவற்று கிடக்கிறாள்? கண்களை திறந்து பார்த்தால் போதும் என்றானது ரஹ்மானுக்கு.

அவன் அழைத்துப் பார்த்தும் சிறு அசைவோ! எந்த மாற்றோமோ! அவளிடத்தில் இல்லை என்றதால் மனதில் அச்சம் குடிகொள்ள மெதுவாக அவள் கன்னம் பற்றி அவள் பெயர் சொல்லி அழைத்தவாறு தட்டலானான்.

மிருதுவான அவள் பட்டு கன்னங்களின் மென்மை கூட அவன் கைகள் உணரவில்லை. மனதில் அச்சம் மட்டும்தான் குடிகொண்டிருந்தது. அவள் சுவாசிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட எழுந்து உடல் உதற அவசரமாக மூக்கின் அருகில் விரலை வைத்து பார்த்தவன் ஆசுவாசமடைந்தான்.

அவ்வளவு பதட்டம் அவன் நெஞ்சில். பொம்மைபோல் உறங்குபவளின் உண்மையான நிலையென்ன என்று அவன் அறிந்தே ஆகா வேண்டும் யாரிடம் கேட்பது?

இறுகிய நெஞ்சோடு அவளை பார்த்திருந்தவனுக்கு வார்த்தை வரவில்லை. மாறாக கண்களிலிருந்து கண்ணீர் தான் துளித்துளியாய் உருண்டு ஷஹீராவின் கைகளில் விழுந்தது.

சில்லென்று இருந்த அவள் கையில் சூடான அவன் கண்ணீர் துளி பட்டதும் உயிர் பெற்ற சிலை போல் ஒருகணம் அசைய அதை உணர்ந்த ரஹ்மான் பதட்டத்துடன் கைகளை விலக்கிக் கொண்டான்.

ஷஹீரா கண்விழித்தால்? அங்கு அவன் இருப்பதைக் கண்டால் எவ்வாறு உணர்வாள்? சந்தோஷமடைவாளா? இல்லை உன்னால்தான் எனக்கிந்த நிலமை என்று தூற்றுவாளா? தூற்றினாலும் பரவாயில்லை.  அவள் அவனோடு ஒரு வார்த்தேயினும் பேசினால் போதும். அந்த சிறு அசைவுக்கு அவன் மனம் பலவாறு சிந்திக்க அவளை விட்டு விலகிச்செல்ல மட்டும் தோணவே இல்லை.

அவள் கண்விழித்தால் அவன் அருகாமையை எவ்வாறு உணர்வாள் என்ற பதட்டம் தான் அது. அவனுக்கு அவள் உயிர். அவளுக்கு அவன்? அதை அவள் உணர வேண்டுமல்லவா? அந்நியன் என்று சொல்லி விட்டால்? அதை  தாங்குமா நெஞ்சம்?. அவள் கண்விழிப்பதற்குள் வெளியே சென்று விடுவோமா என்று கூட தோன்றியது அவனுக்கு. இல்லை அவள் நிலை அறிந்தே ஆகா வேண்டும். இங்கேயே இருந்து டாக்டரிடம் கேட்கலாம் என்று கதவை திறந்துகொண்டு வெளியே வர முபாரக் கதவை திறக்கவும் சரியாக இருந்தது.

“டேய் நீ என்ன டா இங்க பண்ணுற?” முபாரக் கத்த

அவன் ஷார்ட் காலரை பிடித்து இழுத்த ரஹ்மான் அவனை சுவரில் சாய்த்து “கத்தினா கொன்னுடுவேன். தூங்குறால்ல.. ஷ்..” என்று வாயில் விரலை வைத்தவன் கண்களை உருட்டி மிரட்ட

ஒருகணம் திகைத்த முபாரக் ரஹ்மானை தள்ளி விட்டு அங்கிருந்த மேசையின் மீதிருந்த பொருட்களையெல்லாம் அவன் மீது வீச ஆரம்பித்தான்.

“டேய் சைக்கோ அடங்கு டா..” ரஹ்மான் கத்த பொருட்கள் முடிவடையவும்  ரஹ்மானின் மேல் பாய்ந்திருந்தான் முபாரக்.

இருவரும் அறையில் கட்டிப்புரண்டு சண்டை போட கதவை திறந்த செவிலி  அதிர்ச்சியில் கத்த கூட்டமும் கூட பானுவின் தூக்கமும் மெதுவாக கலைய ஆரம்பித்திருந்தது.

ஷஹீராவால்  கண்களை திறக்க முடியவில்லை. அவ்வளவு சத்தத்திலும் எங்கோ பேசுவதுபோல் கேட்டது அவளுக்கு. தலை பாரமாக கனத்தது. ஆனாலும் பேசுவது அனைத்தும் காதில் தெளிவாக விழுந்தது.

பேகமும் மகளிடம் வர அறையின் முன் கூட்டத்தைக் கண்டு பதறியவள் உள்ளே நுழைய ரஹ்மானைக் கண்டு அதிர்ச்சியடைய, அஸ்ரப் தலையில் கைவைத்தான்.

ஷஹீராவை பார்த்து விட்டு முடிந்தளவு  சீக்கிரம் வெளியே வரும் படி கூறி இருக்க ரஹ்மான் அங்கேயே அவளை பார்த்தவாறு அசையாமல் இருந்தது அவனுக்கு தெரியாதே!

“முபாரக் என்னடா பிரச்சினை” பேகம் பதட்டத்துடன் கேட்க

“எங்க போய் தொலஞ்சீங்க? கண்டவனெல்லாம் ரூமுக்குள்ள இருக்கிறான்” சண்டை போட்டதில் சட்டை ஒரு பக்கம் கிழிந்துத் தொங்க முகத்தில் இரத்த காயங்களோடு முபாரக் பேச ரஹ்மான் முறைத்துக் கொண்டிருந்தான்.

“ஏன் பா.. இப்படி பண்ணுற? எங்களை நிம்மதியா இருக்க விடு. நேத்து அவளை இந்த அடி அடிச்சான். புள்ள சாப்பிடாம மயக்கம் போட்டு விழுந்துட்டா அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தா? எதுக்கு நீ இங்க வந்த.. போ பா” பேகம் ரஹ்மானை வெளியேற்றுவதில்லையே குறியாக இருந்தாள்.

“இன்னும் நல்லா கொஞ்சுங்க” முபாரக் எகிற

“இவன் கிட்ட சொல்லி வைங்க. இவன் விரல் நுனி கூட என் பானு மேல படட்டும் அப்போ இருக்கு இவனுக்கு”

“உன் பானுவா? உன் பானுவா? நாக்கை அறுத்து நாய்க்கு போடுவேன்டா.. என் தங்கச்சி பேர உன் வாயால சொல்லாத” கொதித்தான் முபாரக்.

“சும்மா கத்தாதேடா… அவ தூங்குறால்ல டிஸ்டப்பாகாது? வெளியவா உன்ன என்ன பண்ணுறேன்னு பாரு” சொன்னவனின் முகமும் முபாரக் அடித்ததில் வீங்கி இருந்தது.

அஸ்ரப் ரஹ்மானை வெளியே இழுக்க, பேகம் முபாரக்கை உள்ளே கதிரையில் அமர்த்த முறைசிக்க. ஷஹீராவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்து.

மருத்துவமனை ஊழியர்கள் வந்து சத்தம் போடவும் தான் அடங்கினார்கள் இருவரும்.

ரஹ்மானை இழுத்து சென்ற அஸ்ரப் “டேய் ஐஞ்சு நிமிஷம்னு சொல்லிட்டு அரைமணித்தியாலமா என்னடா பண்ணி கிட்டு இருந்த? பாட்டி வேற என் கைய புடிச்சி கிட்டு இருந்ததால என்னால வரவும் முடியல, உனக்கு போன் பண்ணவும் முடியல” அஸ்ரப் புலம்ப

“சும்மா புலம்பாத. பானு பேச்சு, மூச்சு இல்லாம இருக்கா அவளை அப்படியே விட்டுட்டு வர சொல்லுறியா?”

“ஆமா இவரு பெரிய டாக்டர் செயற்கை சுவாசம் கொடுத்து மூச்சு வர வச்சு  பேசிகிட்டு இருந்திருக்காரு. நல்லா வருது வாயில. டேய் மயக்கத்துல இருக்கிறதா சொல்லித்தானே டா உன்ன அனுப்பினேன். பார்த்துட்டு வர வேண்டியதுது தானே. இப்போ மீண்டும் ஏழரைய இழுத்து வச்சிருக்க, ரோட்ல நின்னு பேசினத்துக்கே பெல்டால அடிச்சான். ரூமுக்குள்ள போனதுக்கு என்ன பண்ணுவானோ!” அஸ்ரப் மேலும் கலவரப்படுத்த

“பானுவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு முபாரக்க கொன்னுடுவேன்”

“கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போ… யார் டா  இவன்? பிரச்சினை பெருசாக்காதேன்னு சொன்னா மேலும் மேலும் வளத்துக்கிட்டே இருக்க, இப்படியே போனா அவன் தங்கச்சிய உனக்கு கட்டி கொடுப்பானா?”

“…………..”

“என்ன முழிக்கிற? வார்த்தைக்கு வார்த்த என் பானு என் பானுனு சொல்லுற அந்த பொண்ணு உன்ன லவ் பண்ணுதா? நீ கூப்டா வருவாளா? அவன் கிட்ட பொறுமை இல்ல. உன் கிட்ட நிதானம் இல்ல. உங்க ரெண்டு பேர் கிட்டயும் மாட்டிகிட்டு அந்த பொண்ணுதான் துன்ப படுத்து” அஸ்ரப் விரக்தியாக சொல்ல ரஹ்மான் மௌனம் காத்தான்.

முபாரக்கை பேகம் அடக்கி கதிரையில் அமர்த்தி அக்பருக்கு அழைத்து விஷயத்தை சொல்லி அவனுக்கு துணியும் கொண்டு வர சொன்னாள்.

“அவனுக்கு யார் தகவல் சொன்னது? எதுக்கு ரூமை விட்டு போனீங்க” என்று பேகத்தின் மேல் காய்ந்து கொண்டிருந்தான் முபாரக்.

ஷஹீராவின் மனமோ ஏன் தன் வாழ்க்கையில்   மட்டும் இவ்வாறெல்லாம் நடக்கிறது. அண்ணனை பிடிக்காத ஒருவன் தன்னை நெருங்குவது அண்ணனை பழிவாங்கவேயன்றி வேறெதற்கு. இனி தன் வாழ்வில் அவனால் நிம்மதி என்பதே கிடையாதா? யா அல்லாஹ்…

ஆனால் முபாரக்கின் மனம் வேறு கணக்கை போட்டுக்கொண்டிருந்தது அது ஷஹீராவின் திருமணம். அவசரமாக அவளை திருமணம் செய்து அனுப்ப முடிவெடுத்தவன் அதை அக்பரோடு கலந்தாலோசிக்க முடிவெடுத்தான்.

Advertisement