Advertisement

அத்தியாயம் 18

மறு வீட்டு விருந்து பகல் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவுதான் அனைவரும் வீட்டில் இருப்பார்கள் இரவில் வைத்துக்கொள்ளலாம் என்றும் ரஹ்மானிடம் முபாரக் கேட்க

“பகல் வந்தால் தான் அனைவரும் கொஞ்சம் நேரமாவது இருப்பார்கள் இரவு வந்தால் சாப்பிட்டதும் கிளம்பிவிடுவார்கள் வரணும் என்று நினைப்பவர்கள் வருவார்கள். நீ பகலே ஏற்பாடு பண்ணு” என்று சொல்லிவிட்டான் ரஹ்மான்.

மறுவீட்டு விருந்துக்கு செல்ல ரஹ்மானின் குடும்பம் மொத்தமும் தயாராகிக்கொண்டிருந்தனர். அய்நா குடும்பமும், ஷம்ஷாத் குடும்பத்தாரை தவிர யாரையும் ரஸீனா அழைக்கவுமில்லை.

ஷம்ஷத்தின் குடும்பம் அவர்களின் வீட்டிலிருந்தே வருவதாக கூறி இருக்க இவர்கள் இங்கிருந்து ஒரு வேனை ஏற்பாடு செய்து அதில் மொத்த குடும்பமும் செல்லலாம் என்று பேசியிருந்தனர்.

பானுவும், ரஹ்மானும் மூன்று நாட்கள் அங்கு தங்கி விட்டுத்தான் வருவார்கள் என்பதால் அவர்களுக்கான துணிமணிகள் அடங்கிய பெட்டியொன்றும் வாசலில் கொண்டு வந்து வைத்திருந்தான் ரஹ்மான்.

இரவே தேவையான அனைத்தையும் லிஸ்ட் போட்டு பார்த்துப் பார்த்து அடுக்கிக்கொண்டிருப்பதைக் கண்ட ஷஹீ

“பக்கத்தில் தானே இருக்கிறோம் மறந்தாலும் வந்து எடுத்துக்கொள்ளலாமே” என்று கூற

“ஒரு வேல செஞ்சா ஒழுங்கா செய்யணும். சின்ன வயசுல இருந்தே பழகிருச்சு” அவளின் அத்தனை துணிமணிகளை எடுத்து வைத்தவன், உள்ளாடைகளை எடுத்து வைத்திருப்பதைக் கண்டு ஷஹீக்கு கொஞ்சம் ஆச்சரியம் தான்.

அப்படி என்னதான் செய்கிறான் என்று பாத்திருக்க, அந்த உடைக்கு பொருத்தமான நகையிலிருந்து, ஒப்பனை பொருட்கள்வரை எடுத்து வைத்தவனுக்கு “மிஸ்டர் பெர்பெக்ட்” என்று பெயரிடலாமே என்ற யோசனையில் இருந்தாள் அவன் மனையாள்.

எந்த பொருளையும் அவன் மறக்கவில்லை. கையில் லிஸ்ட்டை வைத்துக்குக் கொண்டு அனைத்தையும் கட்டிலில் கிடத்தியவன் ஒருமுறைக்கு இரண்டு முறை சரி பார்த்து விட்டே பெட்டியில் அடுக்கினான்.

ஒரு அனார்கலி சுடிதாரை அணிந்திருந்தாள் ஷஹீ. அவளுக்கான ஒப்பனையை ஹனா செய்ய அவர்களுக்கு முன் தயாராகி வெளியே வந்த ரஹ்மான் சோபாவில் அமர்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்தான்.

கைவிரல்தான் போனை பார்த்ததே! ஒழிய சிந்தனை முழுக்க மனைவியை சுற்றியே இருந்தது.

நேற்று மாலை எதற்காக அழுதாள் என்று அவனுக்கு இன்னும் தெரியவில்லை. காரணம் கேட்டும் சொல்லாமல் தேம்பித் தேம்பி தன் நெஞ்சின் மீதே சாய்ந்து அழும் அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவதென்றே அவனுக்கு புரியவில்லை.

எதற்காக அழுகிறாள் என்று தெரிந்தால் தானே சமாதானப்படுத்த முடியும். முத்தமிடும் போது இசைந்து கொடுத்தவள் மூச்சுத்திணறியதால் அழுதாளா? நீரில் மூழ்கியது ஞாபகத்தில் வந்து அழுதாளா? அல்லது பிடிக்கவில்லையா?  வீட்டு நினைவில் அழுதாளா? என்ன காரணம் என்று தெரியாயவில்லை. சொல்லாமல் ஏங்கி ஏங்கி அழும் மனைவியின் முதுகை நீவி விட்டுக்கொண்டே இருந்தான்.

கொஞ்சம் நேரத்தில் தானாகவே சமாதானமானவள் வெளியே மழை பொழிவதைக் கண்டு ஹனா, ஹாஜரா எங்கே என்று வினவினாள். அவர்கள் அப்போவே வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டார்கள் என்றதும் ரொம்பவே லேட் ஆச்சு என்றவாறே அவனை விட்டு விலகி துணிமாற்ற வேண்டும் என்று கணவனை வெளியே நிற்க சொல்லி மிரட்டலானாள்.

இவ்வளவு நேரம் அழுதவளா? தன்னிடம் குலைந்தவளா? என்று ரஹ்மானையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினாள் அவனின் பானு. 

எந்த நேரத்தில் என்ன அவதாரம் எடுப்பாள் என்று அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. மழை வேறு தூரிக்கொண்டிருக்க, குளிரில் இருப்பவள் அழுததில் ஏதாவது ஆகிவிடும் என்ற அச்சத்தினாலையே அவள் மிரட்டவும் பயந்தவன் போல் நடித்தவாறு வெளியே சென்று நின்று கொண்டான்.

ஹனாவும் ஹஜாரேவும் வீட்டை அடைய ரஸீனா ஷஹீ எங்கே எனக் கேட்க ரஹ்மானோடு வருவாள் என்று மாத்திரம் கூறினார்கள் தவிர ஆற்றில் நடந்த சம்பவத்தை மறைத்து விட்டனர்.

சொன்னால் அவர்களுக்கு திட்டு கிடைக்கும் என்பதை விட ரஹ்மானும் அதை விரும்ப மாட்டான். அவன் தங்கைகளை திட்டினாலும் அவன் பாசமும் அவர்கள் அறிந்ததே ஆதலால் அமைதியாகவே உள்ளே சென்று விட்டார்கள்.

துணி மாற்றிக்கொண்டு வந்தவள் “ரொம்ப பசிக்குது வீட்டுக்கு செல்லலாம்” என்று சாதாரணமாக சொல்ல மனைவியின் முகத்தை முகத்தை பார்த்தவன் அவள் அமைதியாக வரவும் தானும் அமைதியாகவே நடந்தான். ஏதாவது கேட்கப் போய் மீண்டும் தங்களுக்குள் பிரச்சினை உருவாகுமோ என்ற அச்சம் வேறு மனதில் பாரமாக ஏறி அமர்ந்து கொண்டது.

அவளே சொல்லட்டும் என்று அடிக்கடி அவள் முகத்தை பார்த்தானே ஒழிய வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை. ஷஹீ சாதாரணமாகவே பேசினாள். கோபமாக இருப்பதாகவும் தெரியவில்லை.

இரவு தூங்கும் பொழுது மனைவியை நெருங்கவே பயந்தான் ரஹ்மான். வழக்கம் போல் குட் நைட் சொன்னவன் திரும்பி படுத்துக்கொள்ள, அவளும் நெருங்கி வராமல் தூங்கி இருந்தாள். எல்லாம் சிறிது நேரம் தான் உருண்டு, புரண்டு வந்தவள் அவனை அணைத்துக்கொள்ள அதன் பின்தான் ரஹ்மானால் நிம்மதியாகவே தூங்க முடிந்தது.

காலையில் கண்விழிக்கும் பொழுது மனைவி அருகில் இல்லை. இப்பொழுது அவள் மனதில் இருக்கும் குழப்பம் என்னவென்று தெரியவில்லை. கேட்டால் சொல்வாளோ? கேட்காமல் சொல்வாளோ? இன்று அவள் வீடு செல்வதால் ஒரு மனமாற்றம் ஏற்படும் என்று நம்பியவன் அவள் குளிக்க சென்றவேளை தயாராகி வந்து வாசலில் அமர்ந்திருந்தான்.

  

அனார்கலி சுடியில் மிதமான ஒப்பனையில் பொருத்தமான அணிகலன்களோடு தயாராகி வந்தவளை புன்னகைத்து வரவேற்றான் ரஹ்மான். அவளும் புன்னகைத்தவாறே வந்து அவனருகில் அமர்ந்துகொள்ள தயாராகி வந்த ஹாஜரா இருவரையும் சேர்ந்து நிற்க சொல்லி புகைப்படம் எடுக்கலானாள்.

ஹனாவும் ஹாஜராவும் கூட சுடிதார்தான் அணிந்திருந்தனர். ஒரே நிறத்தில், ஒரே டிசைனில். ஒரே டிசைனில் வாங்கினாலும் ஒரே நிறத்தில் வாங்க மாட்டார்கள் அக்காவுக்கு திருமணம் நிச்சயமான பின் ஏனோ ஒருதடவையாவது ஒரே மாதிரி அணியலாம் என்று எண்ணி வாங்கி இருந்தனர். இந்த ஆடை குழப்பத்தால் முபாரக் ஹாஜராவிடம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்பது விதி.   

அனைவரும் தயாராகி வாசலுக்கு வர ரஸீனாவை மட்டும் காணவில்லை.

“உம்மா எங்க” ரஹ்மான் கேட்க பின்னால் காய போட்டிருந்த துணிகளை அள்ளிக்கொண்டு வந்து சோபாவில் போட்டவள்

“மழை வந்தால் நனஞ்சிடும். சரி சரி நேரமாச்சு வாங்க போலாம்” புடவை முந்தியை தலையில் போட்டவாறே கூற

“ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்காங்க தேடிப் பார்த்து ஒரு வேலையும் செய்றதில்ல” அய்நா தன் இரு மகள்களையும் கடிய ஹாஜரா அன்னையை முறைக்கலானாள்.

ஷஹீக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. “தான் இந்த வீட்டு மருமகள் அவர்கள் இருவரையும் குற்றம் சொல்லலாகாது. தான்தான் கேட்டுப்பார்த்து, தேடிப்பார்த்து செய்யவேண்டும்” மனதுக்குள் எண்ணியவள் முகம் சுருங்க

அவள் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட ரஹ்மான் “அதான் வெளிய போகும் பொழுது காய போட்ட துணியெல்லாம் எடுக்கணும்னு தெரிஞ்சிருச்சே! இனி மனசுல வச்சிக்க, இப்படி முகத்தை சுருக்கிக்கொண்டு உங்க வீட்டுக்கு போனா அங்க வர பிடிக்கலைனு உன் உம்மா நினைக்க போறாங்க” அவளை சகஜ நிலைக்கு கொண்டுவர அவள் புறம் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்ட கேலியாக கூறி முடிக்க, அது கொஞ்சம் வேலை செய்து கணவனை முறைக்கலானாள் ஷஹீ.

வேனின் பின்னால் ரஹ்மான், பானுவின் துணிப்பெட்டி ஏற்றப்பட்டதோடு, மறு வீட்டுக்கு கொண்டு செல்ல ரஹ்மான் வாங்கி வந்த பழங்களும், ஸ்வீட், காரம், உட்பட வீட்டாருக்கு வாங்கிய துணிமனைகளும் ஏற்றப்பட்ட பின், வீட்டை பூட்டி துஆ ஓதிய பின் பெண்கள் பின்னாடி அமர்ந்து கொள்ள ஆண்கள் முன்னாடி அமர்ந்து கொண்டனர்.

பின்னாடி அமர்ந்து கொள்ள போன ஷஹீயை அய்நா முன்னால் இருக்கும் இருக்கையின் கண்ணாடியின் புறம் அமரரும் படி சொல்ல அவள் அருகில் ரஹ்மான் அமர அவனின் மறு புறம் பாஷித் அமர்ந்து கொண்டான்.

அவர்களுக்கு பின்னால் உள்ள இருக்கையில் நவ்பர் பாயும், ரஸீனாவும், ஆதிலும் அமர்ந்து கொள்ள அய்நா இரு மகள்களோடு கடைசி இருக்கையில் அமர, அய்னாவின் கணவன் ஓட்டுனருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொள்ள மறு வீட்டு விருந்துக்கு கிளம்பிச்சென்றார்கள்.

ஷஹீயின் வீடு இரண்டு தெரு தள்ளித்தான் ஐந்தே நிமிடத்தில் சென்று விடலாம். ஷம்ஷாத்தின் குடும்பமும் வர வேண்டி உள்ளதால் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டார்க்ளா என்று விசாரித்துக்கொண்டதன் பின்னே வண்டியில் ஏறி இருக்க, அவர்கள் ஷஹீயின் வீட்டின் அருகில் என்றதும் தான் வண்டியை கிளப்பி இருந்தனர்.

இரண்டு வாகனங்களும் ஒன்றாகத்தான் ஷஹீயின் வீட்டின் முன் வந்து நின்றது. முபாரக்கும், அக்பரும், ஹஸனும் வாசலில் இருந்து வரவேற்க பேகம், ஸலாம் கூறியவாறு கட்டித்தழுவிக்கொண்டு நலவிசாரிப்புகளும் நடை பெற்ற பின் ருகையா மஸீஹா மூவரும் உள்ளே வந்த பெண்களை வரவேற்று அமரும்படி கூறலாயினர்.

ரஹ்மான் மனைவியைத்தான் பாத்திருந்தான். அன்னையை கண்டு அழுது ஆர்பரிப்பாள் என்று எண்ணி இருந்தான். பேகத்தை கட்டித்தழுவி நலம் விசாரித்தவள் சாதாரணமாகத்தான் இருந்தாள். நேற்று மாலை அழுததற்கு விடை கிடைக்காமல் மண்டையே வெடித்து விடும் போல் இருக்க வெளியே சென்று அமர்ந்து கொண்டான். காற்றும் இதமாக வீச சூடான மூளைக்கு அது இததத்தை கொடுத்தது.

அன்று காலநிலையும் நன்றாகவே இருக்க ரஹ்மான் வெளியே அமர்ந்திருப்பதை பார்த்த மற்ற ஆண்களும் வெளியே அமர்ந்து கொண்டு கதையடைக்க ஆரம்பிக்க முபார்க்கோடு சேர்ந்து ஹஸனும், பாஷித்தும் அவர்களுக்கு குளிர்பானம் பரிமாற பெண்களுக்கு ஹனா, ஹாஜராவோடு சேர்ந்து ருகையா பரிமாறலானாள்.

இதுவரை வீட்டை தவிர எங்குமே தங்கி இராத ஷஹீ ரஹ்மானின் வீட்டில் இருந்த ஒரு வாரமும் அது தான் இனி தன் வீடு என்ற உணர்ந்து கொண்டதால். பிறந்து, வளர்த்த தன் சொந்த வீடு  தனக்கு இனி என்றும் வந்து போக மட்டும் என்ற எண்ணம் தோன்ற பெருமூச்சு விட்டுக்கொண்டாள். 

   

“புள்ளைகளே நீங்களும் குடிங்கோ” பேகம் ஹனாவுக்கும், ஹாஜராவுக்கும் கூற

“மாமி பாலூத நல்ல ருசியா இருக்கு. யாரு செஞ்சாங்க” சமயலறையிலையில் இருந்த கதிரையில் அமர்ந்தவாறே ஹனா ருசிபார்த்தவாறு கேட்க

“என் மகன் தான் மா.. ஷஹீ இருந்தா அவ தான் பண்ணுவா. அவ இல்லாமற் நான் கஷ்ட படுறேனு முபாரக் எல்லா வேலையும் செய்வான்” பேகம் சாதாரணமாக சொல்ல

“அப்போ சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க வர மருமகள் வந்து எல்லா வேலையும் பார்த்துக்கொள்ளட்டும்” ஹனாவும் சிரித்தவாறே சொல்ல

தட்டில் குடித்து முடித்த குவளைகளோடு உள்ளே நுழைந்தான் முபாரக். ஹாஜரா அமர்ந்திருந்த இடத்துக்கு முபாரக் உள்ளே வருவது தெரியவில்லை.

“ஆ மாமி சமைக்க கூட தெரியுமா? உங்க மகனுக்கு” ஹாஜராத்தான் கேட்டாள்.

“ஜமாத்ல போனதுல சமைக்கவும் கத்துக்கிட்டான்” பேகம் பெருமையாக சொல்ல கிளாஸை எடுத்துக்கொண்டு வந்த முபாரக்கின் காதில் இவர்களின் பேச்சு விழவே யோசனையாக ஹானாவை பார்த்தான்.

ஹாஜரா பேசுவது காதில் விழுந்தாலும் அவன் உள்ளே வரும் பொழுது கண்டது ஹானாவை என்பதால் அவனின் பாடும் குயில் ஹனா தான் என்று நினைத்தான்.

“எனக்கொரு வேல மிச்சம்” ஹாஜரா மனதுக்குள் நினைத்தவாறு திரும்ப முபாரக் ஹானாவை பார்ப்பது கண்ணில் விழவே அவனை முறைக்கலானாள். அதே நேரம் அவனும் அவள் புறம் திரும்ப

“ஆஹா.. எப்போ பார்த்தாலும் இந்த பொண்ணு கிட்ட போய் வசமா மாட்டிக்கிறோமே இன்னைக்கி என்ன செய்ய போறான்னு தெரியலையே” அவளை பார்த்து மெதுவாக புன்னகைத்தான் முபாரக்.

வஸீமும் ஜமீலாவும் குழந்தையோடு அவர்களின் வீட்டிலிருந்தே வந்திருந்தனர். ஏன் லேட் என்று ரஹ்மான் கேட்க “நீயும் சீக்கிரம் பெத்துக்கோடா அப்போ புரியும் என் கஷ்டம் என்று ஜமீலா வஸீமை முறைக்க”

“கேட்டது என் தப்புதான்” என்று முணுமுணுத்தான் ரஹ்மான்.

மறுவீட்டு விருந்து பிரியாணிதான். அதுவும் மட்டன் பிரியாணி. அஷ்ரப்பையும், பவாஸையும் விருந்துக்கு அழைத்திருந்தான் ரஹ்மான். அவர்களும் வந்து சேரவே பிரியாணி பரிமாறப்பட்டது.

சஹன் முறை என்பதால் ரஹ்மானும், ஷஹீயும் ஒன்றாக சாப்பிடவில்லை. இந்த ஒருவாரமாக மூன்று வேலையும் ஒன்றாக சாப்பிட்டவர்கள் இன்று குடும்பத்தாரோடு சாப்பிட்டது இருவருக்கும் மகிழ்ச்சியே!

கண்களாயையே மனைவியிடம் சம்மதம் கேட்க ஷஹீயும் கண்சிமிட்டி சம்மதம் தெரிவித்த பின்தான் உண்ணவே அமர்ந்தான் ரஹ்மான். ஆண்கள் வாசலில் அமர்ந்து சாப்பிட்ட பின் பெண்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடிந்த பின்னும் ஆண்கள் வெளியே அமர்ந்துதான் பேசிக்கொண்டிருந்தனர். பெண்கள் சாப்பிட்டு முடித்ததும் வாசலில் உள்ள தட்டுக்களை ஹாஜரா எடுத்து செல்ல பாயை மடித்துக்கொண்டிருந்தாள் ஹனா. அவளுக்கு உதவிக்கொண்டிருந்தாள் ருகையா.

இதை பார்த்த முபாரக் ஹனாவோடு பேச கிடைத்த நல்ல சந்தர்ப்பம் இதுதான் என உணர்ந்து கொண்டவன், வாசலில் வைத்து அவளோடு பேசுவதை யாராவது பார்த்து விட்டால் வீண் பிரச்சினை என்று எண்ணி சமயலறையின் புறமாக வந்து வாசல் ஜன்னல்களின் அருகே நின்றுகொண்டு

“ஹலோ ஹனா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல அவனை திரும்பி பார்த்தாள் ஹாஜரா. அவன் வெளிப்புறம் திரும்பி இருந்ததால் ஹாஜராவின் முகத்தை காணவில்லை. ஹனாவும், ஹாஜராவும் ஒரேமாதிரி சுடிதார் போட்டிருந்ததால் ஜன்னலின் அருகில் வந்தவன் அங்கே நிற்பது ஹனா என்று கருதி திரும்பி நின்றே கூறி இருந்தான்.

ஹனா பாயை மடித்துக்கொண்டிருந்தவள்தான் அவளுக்கு அலைபேசி அழைப்பு வந்ததாக அய்நா கூற அப்படியே போட்டு விட்டு செல்ல, தட்டை வைத்து விட்டு வந்த ஹாஜரா பாயை மடிக்க போக ஒரே மாதிரியான சுடிதார் என்பதால் முபாரக்கும் ஹனாதான் நிற்கிறாள் என்று பேசி இருந்தான்.

இடுப்பில் கைவைத்து அவனை முறைத்த ஹாஜரா “ஷஹீ மைனி ரூம் ஜன்னல் கிட்ட வாங்க” என்று விட்டு அகன்றாள்.

அவளின் குரல் கேட்டு மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, குத்தாட்டம் போடாத குறையாக தங்கையின் அறையின் ஜன்னலின் அருகில் நின்றிருந்தான் முபாரக்.

அவளோடு எப்படி பேசுவது என்று யோசித்தவனுக்கே ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவள் யோசித்து ஜன்னல் அருகில் வர சொல்லி இருக்கிறாள். அறையினுள் யாருமில்லை. யாராவது வந்தால் கூட இருவரும் இருதிசையில் சென்று விடலாம். மூளைக்காரிதான்” ஹாஜராவின் திட்டம் என்ன என்று அறியாமலே அவளுக்கு பட்டம் கொடுத்தவன் மனதில் செல்லம் கொஞ்சிக்கொள்ள

“முதலில் அவ மனசுல என்ன இருக்குனு கேளு. அந்த பிசாசு {ஹாஜரா} சொன்னது போல உண்மையிலயே ஹனாகு நிச்சயம் ஆகிருச்சானு கேளு” மனசாட்ச்சி ஞாபகப்படுத்த தலையை கோதியவன் ஆழமாக மூச்சை இழுத்து விட்டான்.

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க ஹனா அறைக்குள் வந்த பாடில்லை. “வாசலிலிருந்து அறைக்கு வர இவ்வளவு நேரமா யா அல்லாஹ் என் பொறுமையா ரொம்ப சோதிக்கிறா” என்றவாறே வானத்தை பார்க்க சரியாக அந்தநேரம் மொட்டை மாடியிலிருந்து பெரிய ஒருவாளித் தண்ணீர் அவன் மீது கொட்டி, தொப்பலாக நனைந்தான் முபாரக்.

மொட்டை மாடியிலிருந்து அவனை ஹாஜரா குனிந்து பார்த்தவாறே முறைத்துக்கொண்டிருக்க, கடுப்பானவன் மாடிப்படிகளில் தாவி ஏறலானான். 

முபாரக் சாதாரணமாக பேச வேண்டும் என்று கூறி இருந்தால் இவ்வளவு கோபம் ஹாஜராவுக்கு வந்திருக்காதோ என்னவோ ஹனாவின் பெயரை குறிப்பிட்டு கூறியதும் அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததென்று அவளுக்கே தெரியவில்லை. அதனால் தான் ஷஹீயின் அறையின் புறம் வர சொன்னவள் கஷ்டப்பட்டு ஒரு வாளித் தண்ணீரை மொட்டை மாடிக்கு தூக்கிச் சுமந்து அங்கிருந்து ஜல அபிஷேகம் செய்யலானாள்.

கிழே செல்லப் போனவளை வழி மறித்து தொப்பலாக நனைந்தவாறு கோபமாக முறைத்துக்கொண்டு நிற்பவனை தானும் முறைக்கலானாள் ஹாஜரா.

அப்பொழுதுதான் கவனித்தான் ஹனாவும் இவளும் ஒரே மாதிரியான சுடிதார் அணிந்திருப்பதை. தவறு எங்கே நடந்தது என்று புரிந்துகொண்டவன் “இவ கிட்ட போய் மாட்டிக்கிறதே என் வேல” தன்னையே நொந்து கொண்டவன் “என்ன இது சின்னபுள்ளத்தனமா?” இடுப்பில் கை வைத்து, முறைத்துக் கொண்டு நிற்பவளை ரசித்தவாறே கேட்க

“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா? அவளுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்குனு அன்னைக்கே சொன்னேனே! இந்த மரமண்டைக்கு ஏரளயா? எத்தனை தடவ தான் சொல்லுறது” பல்லைக் கடித்துக்கொண்டு கோபமாக பேசும் தன் பாடும் குயிலை கண்டு கொண்டான் முபாரக்.

தான் ஏன் இவளிடம் சென்று மாட்டிக்கொள்கிறோம் என்ற புதிருக்கான விடை கிடைத்து விட “அவ கெடக்குறா விடு. உனக்கு நிச்சயமாகல இல்ல. நாம ரெண்டு பேரும் லவ் பண்ணலாமா?” அவளை நெருங்கி நின்றவாறே கேட்க ஹாஜராவின் உடல் ஆட்டம் காண ஆரம்பித்தது.

“நீ ஒரு பெண்ணிடம் இவ்வாறு கேட்பாய்” என்று யாராவது கூறி இருந்தால் அவனை அடிபின்னி எடுத்திருப்பான். ரஹ்மானோடு பேசியதற்கு ஷஹீயை அடித்தவன் இன்று ஒரு பெண்ணிடம் சென்று காதலிக்கலாமா என்று கேட்கின்றான். அவனுக்கே அவன் செய்கை ஆச்சரியம் தான்.

தன் அக்காவின் மீது முபாரக்கின் பார்வை செல்வத்தினால் கோபம் கொண்டு அவனை திட்ட வந்த ஹாஜரா அவன் இப்படி கேட்பான் என்று சிறிதும் நினைக்கவில்லை. தனியாக வேறு வந்து மாட்டிக்கொண்டாளே! இது அவன் இடம். கத்த கூட முடியாமல் தொண்டை வறண்டு போக அவனையே பயப் பார்வை பார்கலானாள்.

ஹஜாராவை சந்தித்த ஒவ்வொரு நாளையும் மனதில் ஓட்டிப்பார்த்தவன் “ஏன் எனக்கு போன் பண்ணுறது நிறுத்திட்ட” நேரடியாகவே கேட்டான்.

“நான் தான் இவனுக்கு போன் பண்ணி பேசினது என்று இவனுக்கு எப்படி தெரியும்” ஒருகணம் யோசித்தவள் உடனே மறுத்தாள் “நான் போன் பண்ணினேனா? யாருக்கு? உனக்கா? அறிவிருக்கா? ஒழுக்கமான பொம்பள புள்ளைகிட்ட போய் என்ன கேள்வி கேக்குற” படபட பட்டாசாக பொரிந்து தள்ள,

“நல்ல ஒழுக்கமான புள்ளத்தான் நீ” நக்கலாகவே கூறியவன் “அப்போ நீ எனக்கு போன் பண்ணல, மெஸேஜ் பண்ணல. ஆதாரத்தோடு வந்து ரஹ்மான் கிட்டயே பேசுறேன்” தீவிரமான குரலில் சொல்ல

“என்ன பேச போற?” வீட்டுக்கு தெரிந்தால் அடி விழும் என்பது உறுதி. கண்டிப்பாக இந்த செயலை ரஹ்மான் ஆதரிக்க மாட்டான் என்பதும் உறுதி. வயிற்றில் உருண்ட பயப்பந்து தொண்டையில் வந்து அடைத்துக்கொள்ளும் முன் முபாரக் என்ன பேச போகிறான் என்று தெரிந்தாக வேண்டி இருந்தது. ஆதாரம் என்று வேறு சொல்கிறான் என்ன ஆதாரமாக இருக்கும்? நொடியில் பலவிதமான சிந்தனைகள் வந்து வந்து போக கண்கள் மட்டும் அவன் முகத்தை விட்டு அகலவில்லை.

அவள் முகத்தில் தெரிந்த அச்சம் அவனுக்கு சிரிப்பை மூட்ட அவளை சமநிலைக்கு கொண்டு வருவதற்காக “சரி ஒரு பாட்டு பாடு உன்ன மன்னிச்சு விட்டுடுறேன்” நீண்ட நாட்களாக அவள் குரலில் பாடுவதை கேட்க முடியவில்லை. அது வேறு மனதை ரணப்படுத்தி இருக்க, பாடுமாறு சொன்னான்.

“இங்கேயா? இப்பொவேவா? இந்த வெயில்ல நின்னு கிட்டா?” கோர்வையாக கேள்விகளை அடுக்கினாள் ஹாஜரா.

“ஏன் மேடத்துக்கு ஸ்டேஜ் போட்டு மைக் செட் போட்டு ஸ்பீக்கர் வச்சி கொடுத்தா தான் படுவீங்களோ” மீண்டும் அவளை வம்புக்கு இழுக்க அவனை முறைத்தவள்

“என்ன பாட்டு பாடணும்” அந்த நேரத்தில் அவளுக்கு எந்த ஒரு பாட்டும் ஞாபகத்தில் வரவில்லை. அதனாலயே அவனிடம் கேட்டாள்.

“வானே… வானே வானே.. அந்த பாட்டு” முபாரக் வேண்டுமென்றுதான் சொல்லி இருந்தான்.

“போன் கொடுங்க” அவன் அலைபேசிக்கு கையை நீட்டி இருந்தாள் ஹாஜரா.

“போன் எதுக்கு”

“லிரிக்ஸ் ஞாபகம் இல்ல. பார்த்து பாடுறேன்” என்றவள் கையை நீட்டிக்கொண்டு இருக்க அலைபேசியை அவளிடம் கொடுத்தான் முபாரக்.

“சும்மா கொடுத்தா? ஓபன் பண்ணி தாங்க” மீண்டும் அவனிடமே கொடுக்க

“பாஸ்வர்ட் போட்டு லாக் பண்ணி வைக்கிற அளவுக்கு அதுல ஒன்னும் இல்ல. வேணும்னா நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கலாமா?” கள்ள சிரிப்பினூடாகவே சொல்லலானான் முபாரக்.

முபாரக் பேசியதை யாரிடமாவது கூறி இருந்தால், ஏன் சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். பாத்திருந்தால் காண்பது கனவு என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொள்வார்கள் அப்படி இருந்தது அவன் பேச்சுக்கள்.

“இவன் கூட பேசினாவே வம்பு” முணுமுணுத்தவள் அலைபேசியை திறக்க உண்மையில் கடவுச்சொல் கேட்க வில்லை என்றதும் அவனை கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்தவள் பாடல்வரிகளை தேடியெடுத்து பாடலானாள்.

கடைசியில் ஆண் பாடும் வரிகள் வரவும் “நீதானே என் பொஞ்சாதி நானே உன் சரிபாதி” என்று ஹஜாராவை பார்த்தவாறே முபாரக் மெதுவாக பாடலானான்.

அவன் பார்வையும், ஸ்ருதியும் வேறு அர்த்தம் சொல்ல ஹாஜராவுக்கு அங்கிருந்து சென்று விட்டால் போதும் என்றிருந்தது. இன்னும் அவன் வழியை மறைத்தவாறுதான் நின்றிருந்தான். எப்படி கீழே செல்வது? யாராவது மேலே வந்து தங்களை பார்த்து விட்டால்? அல்லது அன்னை தன்னை தேடினால்?

“வழியை விடுங்க அதான் பாட்டு படிச்சு முடிச்சிட்டேனே!” மீண்டும் முகத்தில் கடுமையை கொண்டுவந்தவள் பேச

நாடியை தடவியவன் “பாட்டு படிச்சதுக்கு கிப்ட் எதுவும் வேணாமா?”

சொல்லி முடித்தவன் உதடு குவித்து கூறவும் மிரண்டவள் “வேண்டாம், வேண்டாம்” என்று பதற

“ஆனா எனக்கு கொடுக்கணும் போல இருக்கே” என்று மேலும் அவளை நெருங்க அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் படிகளில் தாவி இறங்கலானாள்.

“பாத்து போ” கத்தியே சொன்ன முபாரக் அவ்வளவு நேரம் வெயிலில் நின்றதில் போட்டிருந்த ட்ரெஸ்ஸும் காய சிரித்தவாறே கீழே சென்றான்.

அஸருக்கு அதான் சொன்னதும் ஆண்கள் பள்ளிக்கு சென்று வந்ததும், காபி கேட்டவர்களுக்கு, காபியும், டீ கேட்டவர்களுக்கு டீயும், இனிப்பு, காரங்களோடு பரிமாறப்பட்டது.

முபாரக்கின் பார்வை ஹஜாராவை தொடர்ந்து கொண்டே இருக்க,   அவளும் அவனை முறைத்துக்கொண்டேதான் இருந்தாள்.

அன்றைய நாளே விருந்து, இனிப்பு, காரம், என்று குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கழிய, மாலை ஐந்து மணியளவில் ரஹ்மானின் குடும்பம் ஷஹீ குடும்பத்தாரிடம் விடை பெற்று சென்றனர்.

போகும் பொழுது ரஸீனா, ஹனா, ஹாஜரா, அய்நா, ஜமீலா என அனைத்து பெண்களும் ஷஹீயை கட்டி முத்தமிட்ட விடை பெற முபாரக் ஹாஜராவிடம் சைகையால் ஏதோ சொல்ல எதேஷையாக திரும்பிய ரஹ்மானின் கண்ணில் இந்த காட்சி பட்டது.

Advertisement