Advertisement

அத்தியாயம் 17

“சொல்லுடா மச்சான் என்ன என் ஞாபகமெல்லாம் வருது உனக்கு? என் தங்கச்சி சைட் அடிக்கும் போது முறைச்சு கிட்டே திரிஞ்ச. கல்யாணம் பண்ணதும் கண்டுக்க மாட்டேன்னு நினச்சேன் என்ன விஷயம்”

அலைபேசி ஸ்பீக்கர் மூடில் இருக்க, ரஹ்மானை முறைத்துக்கொண்டிருந்த ஷஹீ நாநாவின் துள்ளல் குரல் கேட்டு கணவனின் முகத்தை தான் ஆராய்ந்தாள்.

“பொண்ணு பார்க்க வந்த அன்று என்னமா ரெண்டு பேரும் முட்டி கிட்டு நின்னாங்க, இவன பாக்க போனதுக்கு நாநா அந்த அடி அடிச்சாரு. என்ன அடிச்சதுக்கு நாநாட மாறுகை, மாறுகால் எடுப்பேன்னு சொன்னவன் இவன். இந்த ரெண்டு பேரும் எப்போ சேர்ந்தாங்க” ஷஹீயின் மனம் அதிர்ச்சியில் அலைபேசியையும் ரஹ்மானையும் மாறி மாறி பார்த்தவண்ணம் இருக்க

மனைவியின் முகம் கண்டு உள்ளுக்குள் சிரித்தவன் “மச்சான் அந்த டில்ஷாத் ஊருக்கு வந்திருக்கான் மச்சான். அவனை போய் பார்த்துட்டு வரலாமா?”

“அவனை எதுக்கு டா.. போய் பார்க்கணும். அவனாலதான் எல்லா பிரச்சினையும். போனா அவனை அடிக்கிற அடில ஆஸ்பத்திரில படுக்கணும். உனக்கும் எரியுதுல்ல” முபாரக் எகிற ஷஹீ கண்ணை விரித்து கைகளால் கணவனிடம் என்ன என்று வினவினாள்.

“ஆமா அந்த சம்பவம் மட்டும் நடக்கலைனா நான் உன் பிரெண்டாகி உன் வீட்டுக்கே வந்து உன் தங்கச்சிய சைட் அடிச்சிருப்பேன். அவனாலதான் எல்லாம் போச்சு” ரஹ்மான் சிரிக்காமல் சொன்னாலும் அவன் பார்வையில் மனைவியின் மீதான காதல் அப்பட்டமாக வழிந்தது.

ஷஹீக்கு ரஹ்மானின் காதல் பார்வையெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. அவள் பார்வை அலைபேசியில் இருக்க சிந்தனை முழுக்க இவர்களின் உரையாடலின் இருந்தபடியால் அதிர்ச்சியாக கணவனை பார்க்க மறுமுனையில் முபாரக் சத்தமாக சிரிப்பது நன்றாகவே கேட்டது.

“இப்போ எதுக்கு சிரிக்கிற?” ரஹ்மான் ஷஹீயை பார்த்தவாறே கேட்கலானான். மனம் சொன்னது மனைவி கேட்டுக்கொண்டிருப்பதை அறியாத முபாரக் ஏதாவது ஏடாகூடமாக சொல்லிவிடுவான் என்று.

“நண்பன்னு எவனையும் நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போனதே இல்ல. போகவும் மாட்டேன். உன் பார்வையை வச்சே உன் நோக்கத்தை மோப்பம் பிடிச்சிடுவேன். அப்பொறம் உன் பிரென்ஷிப்ப கட் பண்ணிடுவேன்” முபாரக் சொல்ல இங்கு ஷஹீ கணவனை பெருமிதமாக பாத்திருந்தாள்.

“அப்போ அடிதடில போய் கல்யாணத்துல முடியலைன்னா உன் தங்கச்சி எனக்கில்லனு சொல்ல வர” ரஹ்மானின் குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது.

“நா அப்படி சொல்லலையே! உன்ன எனக்கு பிடிச்சிருந்தா நானே உன் கிட்ட கேட்டிருப்பேன். அப்படி இல்லனா என் குணம் புரிஞ்சிகிட்டு,  நீ உன் வீட்டுல சொல்லி பொண்ணு கேட்டு வந்திருப்ப. ஆனா உன் கல்யாணம் இப்படித்தான் நடக்கும்னு விதி இருந்தா நாம என்ன செய்ய முடியும் அதன்படிதானே மச்சான் நடக்கும்” முபாரக் தீவீர குரலில் சொல்வது ஷஹீக்கு ஆச்சரியமாக இருந்தது.

“அதென்னமோ உண்மைதான். கல்யாணம் ஆகியும் இன்னும் ஒன்னும் நடக்கல சண்டையைத் தவிர” கடைசி வாக்கியத்தை அலைபேசியை தூரமாக்கி மனைவிக்கு மட்டும் கேட்க சொன்னவன் முபாரக் கத்துவது கேட்கவே!

“இங்க உன் தங்கச்சி இருக்கா பேசுறியா” என்று கேட்க முபாரக்கும் அலைபேசியை கொடுக்க சொல்ல, ஷஹீ முதலில் கேட்டது நாநா உங்களுக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை என்பதையே!

முபாரக் விலாவாரியாக விளையாட்டு மைதானத்தில் நடந்ததை கூறி இத்தனை வருடங்களாக தான் ரஹ்மானை தவறுதலாக நினைத்திருந்ததையும், தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியவன் தங்கையிடம் நலம் விசாரித்து விட்டே அலைபேசியை அனைத்திருந்தான்.

“அப்போ நிஜமாகவே என்ன கல்யாணம் பண்ணது பழிவாங்க இல்லையா? ஷஹீ மீண்டும் ரஹ்மானை ஏறிட்டு கேக்க

அவளின் இடது கையை பிடித்து இழுத்தவன் கட்டிலில் அமர்த்தி “இன்னும் என்னடி சந்தேகம் உனக்கு?”  பிடித்திருந்த கையை விடும் எண்ணம் இல்லை தன் கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.

“சந்தேகம் எல்லாம் ஒன்னும் இல்ல. நீங்களும் நாநாவும் எப்படி சேர்ந்தீங்கன்னுதான் புரியல” கீழுதட்டை தனது வலது கையின் பெருவிரலாலும், ஆள்காட்டி  விரலையும் சேர்த்து சுண்டிவிட்டவாறே யோசனையில் விழ ரஹ்மானின் பார்வை பானுவின் உதட்டின் மீது விழுந்தது.

“நான் சும்மா இருந்தாலும் நீ சும்மா இருக்க விடமாட்ட போல இருக்கே” மனதுக்குள் செல்லம் கொஞ்சியவாறே மெதுவாக அவளை நெருங்கி அமர்ந்தவன்

“பாத்து பானு குட்டி உதட்டுக்கு வலிக்கும், அப்பொறம் நான்தான் மருந்து போடணும்”

கணவன் கூறும் உள்ளர்த்தம் புரியாமல் அவன் புறம் திரும்ப அவன் நெத்தியில் முட்டி நின்றவள் தலை வலிக்கவே!

“அல்லாஹ் இப்படியா தலையால அடிப்பீங்க, கருங்கல்லு போல இருக்கு” நெற்றியை தடவியவாறே கூற

“ஆஹா.. ரோமன்ஸ் சீன் பைட் சீன் ஆகும் போல இருக்கே ரஹ்மான் ரூட்டை மாத்து” மனம் கூவ  இரண்டு கைகளிலும் அவள் முகத்தை ஏந்திக்கொண்டவன் நெற்றிக் காயத்தை ஆராய்ந்து விட்டு “அல்லாஹ் ரொம்ப வலிக்குதா..” என்றவாறே அவள் நெற்றியை பெருவிரல் கொண்டு நீவிவிட்டவாறே உதடு குவித்து ஊத்தலானான்.

ரஹ்மான் கைகளை கன்னத்தில் வைத்ததும் கண்களை அகல விரித்து கணவனை ஏறிட்டவள் அவன் உதடு குவித்து ஊதவும் அவன் மூச்சுக்காற்று பட்டு உடலில் ஏற்படும் ரசாயண மாற்றத்தை புரிந்து கொள்ள முடியாத அவஸ்தையில் இருந்தாள்.

“என்ன என்ன பண்ணுறீங்க? விடுங்க நான் போகணும்” திக்கித்திணறி தடுமாறி ஒருவாறு சொல்லி முடித்தாள் ஷஹீ.

தன்னை விட்டு விலகி ஓடுவதில்லையே குறியாக இருப்பவளை தன்னோடு எவ்வாறு தக்க வைத்து கொள்வது. அவள் சிந்திக்கும்படி பேசலானான் ரஹ்மான்.

“எங்க போகணும்? புருஷன் நான் இங்க இருக்கேன். என் கூட இருக்கத்தானே உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்தேன்” சொல்லும் பொழுது அவளை ஆழ்ந்து நோக்கியவாறே கூற

அவனின் பார்வையை சந்திக்க முடியாமல் தடுமாறியவள் என்ன பதில் சொல்வதென்று யோசிக்கலானாள். அவன் சொல்வதுதான் உண்மை அவனை கொண்டுதானே இந்த வீட்டின் மற்றைய உறவுகள். அவர்களை காரணம் காட்டி இவனை ஒதுக்க முடியாதே! அவனோடுதானே இருந்தாகணும். வாழ்ந்தாகணும்.

அங்கே இருந்து எழுந்து செல்லவும் முடியாமல் அங்கே அமர்ந்திருக்கவும் முடியாமல் பெரிய அவஸ்தைக்குள்ளானவள் கணவனின் பார்வை தன் உதட்டின் மீதிருப்பதைக் கண்டதும் இதயம் எகிறிக்குதிக்க துப்பட்டாவின் நுனியை திருகலானாள்.

மெதுவாக அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் கழுத்தில் கைவைத்து தன் புறம் இழுத்து, அவள் கண்களை பார்த்து அனுமதி வேண்டியவாறே இதழ் நோக்கி குனிய துப்பட்டாவால் மூக்குவரை மூடி இருந்தாள் பானு.

அவள் அச்சம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஒரேயடியாக அவளை அடையும் எண்ணமும் அவனுக்கு இல்லை. முத்தம் கூட மெதுவாகத்தான் கொடுக்க எண்ணினான். அவன் மெதுவாக முத்தம் வைக்க அவள் துப்பட்டா கொண்டு முகத்தை மூட முத்தம் துப்பட்டாவின் தடையினூடாகவே இதழ்களில் படிந்தது.

அந்த இதழ் ஒற்றலே உடலில் மின்சாரம் பாய உடல் நடுங்கியவள் கண்களை அகல விரித்தவாறே துப்பட்டாவை விட்டு விட்டு தனது இருகைகளாலும் கணவனின் தோளை இறுக பற்றிக்கொள்ள அவன் கைகள் அவளை விலக விடாது அணைத்துக் கொண்டுதான் இருந்தது.

கொஞ்சம் விலகுவதும் மீண்டும் முத்தமிடுவதுமாக நூலிடைவெளி விட்டு விட்டு முத்தம் பதிக்க துப்பட்டா கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கி விழ ஆரம்பித்திருந்தது.

இப்பொழுது உதட்டின் மேல் துப்பட்டா   வந்தமர அடுத்த விலகளில் துப்பட்டா இல்லாமல் நேரடியாக இதழில் பதியும் முத்தம்.

ஷஹீக்கு படபடவென இதயம் அடித்துக்கொள்ள, வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க, உடலில் சூடு பரவி முத்து முத்தாக நெற்றியில் வியர்வையும் பூக்க இன்ப அவஸ்தைக்குள்ளானாள்.

துப்பட்டாவின் மேலே வைக்கும் முத்தமே இவ்வாறென்றால் நேரடியாக கொடுக்கும் முத்தம் எப்படி இருக்கும் என்று நொடியில் அவள் மனம் கேட்க கணவனின் இதழ் மீது பார்வையை படிய விட்டாள்.

தலையில் அணிந்திருந்த துப்பட்டாவும் நழுவி கழுத்தில் விழுந்திருக்க, திறந்திருந்த ஜன்னல் வழியாக வீசிய காற்று ஷஹீயின் கூந்தலை இழுத்து வந்து முகத்தில் வைக்க கன்னத்தோடு சேர்ந்து அவள் உதடுகளையும் மறைத்தது கருங்கூந்தல். முத்தமிட முடியாமல் மீண்டும் ஒரு தடை கோபம் வருவதற்கு பதிலாக ரஹ்மானுக்கு புன்னகைத்தான் வந்தது.

ஷஹீக்கும் கன்னங்கள் சிவந்து நாணப் பூ பூக்க பார்வையை தாழ்த்திக் கொண்டவள் படபடப்போடு புன்னகைத்தவாறே ஓரவிழியால் கணவனை ஏறிட்டாள்.

எவ்வளவு தடங்களை மீறி அவளை கை பிடித்தான். முத்தமிட நினைக்க அவளே தடையாக இன்று தடுத்துக்கொண்டிருக்கிறாள். போதாததற்கு காற்றும் சேர்ந்து அவனை சோதிக்க, மெதுவாக அவள் கன்னம் மீது கை வைத்தவன் கூந்தலை ஒதுக்கலானான். அந்த ஸ்பரிசம் உயிர்வரை தீண்டிச்செல்ல மோன நிலைக்கு சென்றுகொண்டிருந்த ஷஹீ மெதுவாக கண்களை மூடிக்கொண்டாள். 

கூந்தலை ஒதுக்கி மனைவியின் முகம் பார்த்து “பானு…” மெதுவாக அவளை அழைத்தான் ரஹ்மான். அவள் சம்மதம் அவனுக்கு தேவை.

மோன நிலையில் இருந்தவளோ கண்களை திறவாமலையே “ம்ம்” என்று சொல்ல மீண்டும் அவள் பெயர் கூறி அழைத்தான் ரஹ்மான்.

அவன் அழைப்பில் கண்களை திறந்தவள் கண்களாளேயே என்ன வென்று வினவினாள்.

“உன்ன கிஸ் பண்ணவா? உனக்கு சம்மதம் தானே” மனைவியின் கண்களை பார்த்தவாறே அனுமதி வேண்டி நிற்க சம்மதமாக தலையசைத்தாள் ஷஹீ.

“தேங்க்ஸ் டி பொண்டாட்டி” என்றவாறே அவள் இதழ் நோக்கி குனிய வெளியே ரஸீனா ரஹ்மானின் பெயரை கூறி அழைத்து அஸ்ரப் வந்திருப்பதாக கூற “இதோ வரேன் உம்மா” என்றவன் “கைக்கு எட்டினாலும் வாய்க்கு எட்டவே விடமாட்டாங்க. இன்னைக்கு இருக்கு அவனுக்கு” பொறுமியவாறே எழுந்துகொள்ள வாய் மூடி சிரிக்கலானாள் ஷஹீ.

மனைவி நகைப்பதைக் கண்டு அவள் தோள் தொட்டு திரும்பியவன் அவசரமாக அவள் முகம் முழுவதும் முத்தமிட அந்த முத்த தாக்குதலை எதிர்பார்க்காதவள் திகைத்து நிற்க

“அவனை அனுப்பிட்டு வந்து உன்ன கவனிக்கிறேன்” என்றவாறே ரஹ்மான் அறையை விட்டு வெளியேற ஹனா உள்ளே வந்து பேசலானாள். அதன் பின் அஷ்ரப்போடு காலை உணவை உண்ட ரஹ்மான் அவனோடு கிளம்பி வெளியே சென்றிருந்தான். 

ஷஹீக்கு காலை உணவு கூட சரியாக இறங்கவில்லை. அவள் சிந்தனையில் ரஹ்மானே ஓடிக்கொண்டிருக்க,   “சரியான இம்ச புடிச்சவன் முத்தம் கொடுக்கவே பெர்மிஷன் கேக்குறான் மத்ததுக்கெல்லாம் கெஞ்சிகிட்டுதான் நிக்க போறான்” மனதுக்குள் கணவனை கொஞ்சிக்கொண்டவள் வீட்டாரின் முகம் பார்த்து பேசவே வெட்கப்பட்டு ரகசியமாக புன்னகைக்கலானாள்.

ஹனாவும் ஹாஜராவும் கூட இன்னைக்கு முகம் சுவிட்ச் போட்டா மாதிரி இருக்கு என்று ஷஹீயை கேலி செய்து சிரித்தவர்கள் ஆற்றுக்கு குளிக்க செல்ல தயாரானார்கள்.     

“ஆத்துல தண்ணி சும்மா ஜிவ்வுனு இருக்கும். பச்சை கலரா. ஒருநாள் குளிச்சா எந்தநாளும் குளிக்க வருவீங்க” ஹனா சொல்லியவாறே முன்னால் நடக்க அவள் பின்னால் ஹாஜராவும், ஷஹீயும் நடந்து வந்தனர்.

ரஹ்மானின் வீட்டுக்கு பின்னாடிதான் ஆறு இருந்தது. வீட்டின் பின் முற்றத்திலிருந்து கொஞ்சம் தூரம் நடந்தால் ஒரு மூங்கில் காடு. அதன் நடுவே ஆற்றுக்கு செல்லும் பாதை. 

மூங்கில் காடு தொடங்கும் பொழுதே பாதை சற்று பள்ளமாகத்தான் இருக்கும். மழை வந்தாலும் மூங்கில் காடால் அவ்விடம் அவ்வளவு ஈரமாகாது. அதனால் அங்கு பெண்கள் துணி மாற்ற ஒரு மூங்கில் குடிசைஸையும் கட்டி வைத்திருந்தனர் ரஹ்மானும் பாஷித்தும்.

வெளியாட்கள் யாரும் குளிப்பதற்காக அங்கு வருவதில்லை. வெயில் காலத்தில் ஆற்று நடுவில் மணல் தோன்றும் அப்பொழுது  பாஷித் அல்லது ரஹ்மானின் நண்பர்கள் ஆற்றில் குளிக்க வருவார்கள். அப்படி வந்தால் அந்த மணலில் தான் அன்றைய சமையல். கொஞ்சம் பேர் மீன் பிடிக்கவும் கிளம்பி விடுவார்கள். சில நேரம் இரவில் கூட இஷாவுக்கு பின் வந்து நெருப்பு பந்தம் பற்ற வைத்து பார்ட்டி கொண்டாடுவார்கள். யாருடைய பிறந்தநாளும் இல்லை என்றாலும் பார்ட்டிக்கு ஒரு பெயரையும் வைத்து சமைத்து சாப்பிடுவார்கள்.

லுஹர் தொழுத பின் ஆத்துக்கு செல்லலாமா என்று ஹாஜரா கேட்க ஹனாவும் சரியென்று மாற்று துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்ப சந்தோசமான மனநிலையில் இருந்த ஷஹீயும் அவர்களோடு வருவதாக கூறினாள்.

சின்ன வயதில் தந்தையோடு சென்று ஆற்றில் குளித்தது. அதன் பின் ஆற்றுப் பக்கமே சென்றதில்லை. ஆசையாக இருக்கவே! ரஸீனாவிடம் அனுமதிக்க கேட்டுக்கொண்டு இவர்களோடு கிளம்பினாள்.  

பானு முறைத்துக்கொண்டிருக்கும் பொழுது ஊரை சுற்றிக்கொண்டிருந்த ரஹ்மான் அவள் அனுமதி கிடைத்ததும் உல்லாச வானில் பறந்தவனாக அன்று வெளி வேலைகளை முடித்துக்கொண்டு நேரங்காலத்தோடு வீடு வந்திருந்தான். அறையில் மனைவி இருக்க மாட்டாள் என்று அறிந்தததால் உடுத்தி இருந்த பேண்ட் ஷர்ட்டை கழட்டி விட்டு லுங்கியை அணிந்து கொண்டவன் டிஷர்ட்டை அணிந்தவாறே அறையிலிருந்து வெளிப்பட்டான்.

அவன் கண்களோ! மனைவியின் முகத்தை வீடு முழுக்க தேடி அலைய

“பானு ஹனா, ஹாஜராவோட ஆத்துக்கு குளிக்க போய் இருக்கா” ரஸீனா சொல்லி முடிக்க வில்லை.

“அல்லாஹ் பானுக்கு நீச்சல் தெரியாது” கத்தியவாறே பின்பக்கமாக ஓடி இருந்தான் ரஹ்மான். 

ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்த ஷஹீ ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றை பார்த்து “ஹனா நீங்க சொன்னது போல தண்ணி பச்சை கலர்தான். ஆனா இவ்வளவு அகலமான ஆறு நம்ம ஊர்ல இருக்கிறதே இப்போதான் பாக்குறேன்” கரையில் இருந்தவாறே கால்களை நனைத்தாள்.

இந்த மாதம் மணல் தெரியாது. இன்று வானமும் மந்தமாகத்தான் இருந்தது. வெயில் கூட கடுமையாக இல்லை. இந்த காலநிலை இவர்களுக்கு புதிது. காரணம் தெரியவில்லை. அதை ஆராச்சி செய்யும் எண்ணமும் இல்லை. ஆற்று நீர் கூட ரொம்ப குளிர்வது போல்தான் ஷஹீக்கு தோன்றியது. இந்த பகல் பொழுதில் இப்படி குளிராது என்று அதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டாள்.

“என்ன ஷஹீ மைனி குளிக்க எண்ணம் இல்லையா? வாங்க துணிய மாத்திக்கோங்க” ஹாஜரா அழைக்க ஆற்றில் இறங்க வேண்டும் என்ற ஆவல் அவளை தூண்ட குளிப்பதற்கு எதுவாக ஆடையை அணிந்து கொண்டவள் மெதுவாக இறங்கி கரையின் அருகிலையே மூழ்கி குளிக்க ஆரம்பித்தாள்.

ஹனா தான் அணிந்திருந்த துணியை துவைக்க தான் அணிந்திருந்ததையும் அக்காவிடம் துவைக்க கொடுத்து விட்டு ஆற்றுக்குள் பாய்ந்திருந்த ஹாஜரா நீச்சலடிக்க ஆரம்பித்தாள்.

“உங்களுக்கு நீச்சல் கூட தெரியுமா ஹாஜி” ஷஹீ ஆச்சரியமாக கேட்க

“மீன் குஞ்சுக்கு கற்றுக் கொடுக்கணுமா என்ன? ஸ்கூல் லீவ் விட்டா இந்த ஆத்துல ஆட்டம் போடவே இங்கதான் இருப்பேன். ரஹ்மான் நாநாதான் நீச்சல் சொல்லி தந்தார். சுனாமியே வந்தாலும் நீச்சல் அடிக்க முடியும்” பெருமை பாடியவாறே நீந்த

“அட அப்போ நம்மளும் நீச்சல் கத்துக்க வேண்டியதுதான். சொல்லி கொடுப்பானா?” ஷஹீயின் சிந்தனை இவ்வாறு இருக்க

“வாங்க மைனி நான் உங்களுக்கு கத்து தரேன்” என்ற ஹாஜரா ஷஹீயின் கையை பிடித்து இழுத்திருந்தாள்.  

ஷஹீ குளித்துக்கொண்டிருந்த இடமோ இடுப்பளவில் தண்ணீர் இருக்க, ஹாஜரா இழுத்ததில் மாரளவுக்கு தண்ணீர் இருக்கும் இடத்துக்கு வந்திருந்தாள்.

ஹாஜரா அப்படி பண்ணுங்க இப்படி பண்ணுங்க என்றவாறு ஏதேதோ சொல்ல ஷஹீயும் கையை, காலை நீரில் அடிக்க ஒரு கட்டத்தில் காலை நீரில் ஊன்ற முடியாமல் தடுமாறி மூழ்கி மூழ்கி வெளியே வர ஆற்று நீரை அருந்தலானாள். அவள் எண்ணமெல்லாம் இன்றோடு தன் வாழ்க்கை முடிந்து விட்டது. இனி ரஹ்மானை பார்க்கவே முடியாது என்றிருந்தது. 

கிட்டத்தட்ட ஆற்றின் நடுப்பகுதியில் இருந்தாள் ஷஹீ. நீர் வேறு வேகமாக செல்ல ஹாஜராவாலும் அவளை பிடிக்க முடியவில்லை. அவள் அக்காவை நோக்கி கத்த ஆற்றுக்குள் குதித்திருந்தான் ரஹ்மான்.

வீட்டிலிருந்து வேகமாக ஓடிவந்தவன் கண்ட காட்ச்சி  அவன் பானு நீரில் மூழ்குவதையே! யோசிக்க நேரமில்லை தண்ணீரில் குதித்தவன் மூழ்கிக் கொண்டிருந்த மனைவியை நீருக்கு வெளியே கொண்டு வர, நீருக்குள் மூச்செடுக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள் வேக, வேகமாக மூச்செடுக்கலானாள். இரண்டு நிமிடங்கள் நீருக்குள் இருந்திருந்தால் மூர்ச்சையாகி இருப்பாள்.

ஆற்றின் வேகமோ அதிகமாக இருக்க மனைவியை தன் நெஞ்சோடு அணைத்தவாறே கரையை நோக்கி நீந்த ரஹ்மானின் டீஷர்ட்டை இறுகப் பற்றிக் கொண்டவள் அவன் இடுப்பில் ஏறி அமர்ந்திருந்தாள்.

கரையின் அருகில் வந்தும் கணவனை விட்டு விலகாமல் அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு கோழிக்குஞ்சாய் நடுங்கியவள் நீர் அருந்தியதால் இருமலானாள். 

அவள் முதுகை நீவி விட்டவன் ஒரு குழந்தையை கவனிப்பது போல் அவளுக்கு ஒன்றுமில்லை என சமாதானப்படுத்தியவாறு அவளை தேற்றலானான்.

“அறிவிருக்கா, அவளுக்குத்தான் நீச்சல் தெரியாதே! கொல்லவா பாக்குற” கடுமையான வார்த்தையால் ஹஜாராவை திட்ட ஆரம்பிக்க ஹனா அதிர்ச்சியில் உறைந்திருக்க, ஹாஜரா கண்கள் கலங்கி நின்றாள்.

திட்ட ஆரம்பித்த ரஹ்மான் பத்து நிமிடங்களாக ஹனா, ஹஜாராவை திட்டியவன் அவன் பானுவை மட்டும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அது அந்த இரு பெண்களின் கவனத்தில் இல்லை. ஆனால் அவன் மனைவியின் கவனத்தில் இருந்தது.

அவளால் பேச முடியவில்லை. அச்சத்தால் மேலன்னம் ஒட்டிப்போய் இருக்க, ஆற்று நீரின் குளிர் வேறு மேனியில் பாய்ந்து உடல் நடுங்க ஆரம்பித்திருந்தது. அவளின் நடுக்கத்தை உணர்ந்து கொண்டவன் திட்டுவதை நிறுத்தி விட்டு இரு தங்கையையும் சீக்கிரம் வீட்டுக்கு போகுமாறு பணித்தவன், மனைவியை அணைத்தவாறே துணி மாற்றும் குடிசைக்கு அழைத்து சென்றான்.

கரைக்கு ஏறியதும் காற்று மேனியில் பட மேலும் நடுங்கலானாள் ஷஹீ. உதடுகள் வேறு தந்தியடிக்க, குளிர் ஜுரம் வந்தது போல் கால்கள் கூட மரத்துப்போய்  கணவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவன் கூடவே நடந்தாள் ஷஹீ.  

மார்புவரை ஒரு ஆடை. முழங்காலுக்கு கொஞ்சம் கீழாக இருக்க, அவனை ஒட்டியே நிற்க வேண்டிய தன்னிலை. அவனை விட்டு விலகவும் முடியாமல் அவனோடு ஒட்டிக்கொண்டு இருக்கவும் முடியாமல் அவஸ்த்தையாக உணர்ந்தவள் கணவனை பாவமாக பார்த்து வைத்தாள்.

அவள் மனநிலையெல்லாம் ரஹ்மானின் கருத்தில் இல்லை. குளிரில் நடுங்குபவளின் குளிரை போக்குவதுதான் அவன் எண்ணமாக இருக்க குடிசைக்கு அழைத்து வந்த உடனே பரபரவென அவள் தலையை துவட்ட ஆரம்பித்தான்.

ஷஹீ மெதுவாக அங்கிருந்த துப்பட்டாவை எடுத்து தன் மேல் போட்டுக்கொள்ள அப்பொழுதுதான் அவன் அவளை கவனித்து பார்க்கவே ஆரம்பித்திருந்தான்.

“இதுக்குதான் மேடம் ஓட்டிகிட்டே இருந்தாங்களா? இது தெரியாம போச்சே தெரிஞ்சிருந்தா வெளியவே நிக்க வச்சிருப்பேனே” உள்ளுக்குள் சிரித்தவன் வேண்டுமென்றே அவள் முகம் கையென்று துடைக்க ஆரம்பிக்க, டவலை பிடித்துக் கொண்டவள் தான் துவட்டிக்கொள்வதாக மெதுவாக கூறினாள்.

“எப்படி? குளிருல நடுங்கிக்கொண்டேவா?” சிரிப்பை அடக்கியவனின் பார்வை முழுவதும் மனைவியின் மேனியை மொய்க்க மேலும் நடுங்கியவள் துப்பட்டாவை ஆடையாக்கலானாள்.

அவள் பதட்டம் கண்டு அவளை சீண்டவேன்றே நெருங்கி நின்றவன் இடையோடு சேர்த்தணைக்க மருண்ட விழிகளால் கணவனை பார்த்தாலே ஒழிய விலகவில்லை. விலக தோன்றவுமில்லை.

கணவனின் சூடான மூச்சுக் காற்று முகம் தீண்ட மனம் குறுகுறுத்தது. இமைகள் இரண்டும் படபடக்க கணவனையே பாத்திருந்தாள் ஷஹீ.

“தூங்கினதுக்கு பிறகு உன்ன எத்துணை தடவ கிஸ் பண்ணி இருப்பேன். இந்த கன்னம் சாட்ச்சி சொல்லும் டி. அதெல்லாம் தெரிஞ்சா என்ன பண்ணுவியோ!” உள்ளுக்குள் நினைத்து புன்னகைத்தவன் “என்ன பானுமா.. எந்தநாளும் கட்டிக்கொண்டுதானே தூங்குவீங்க. என்னமோ புதுசா கட்டி புடிச்ச மாதிரி இப்படி நடுங்குறீங்க? நான் பாட்டுக்கு படுத்தாலும் உருண்டு வந்து கட்டிப்பிடிப்பீங்களே!” சொல்லியவாறே அவள் முகத்தில் விழுந்த கூந்தலை காதோரம் ஒதுக்கினான் ரஹ்மான்.

“அல்லாஹ்ட காவல் இவருக்கு தெரியாதுன்னு நெனச்சா.. எல்லாம் தெரிஞ்சும் தெரியாத கள்ள பூனா மாதிரி கண்ண மூடிக்கிட்டு இருந்திருக்காரு”

கணவனுக்கு தெரியாதென்று நினைத்திருக்க அவன் வாயாலையே சொல்ல கேட்க, அவளின் இதயத்துடிப்பு ரஹ்மானுக்கு கேட்கும் அளவுக்கு வேகமாக இதயம் அடிக்க, கூந்தலை ஒதுக்கிய அவன் கை கன்னத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. ஷஹீக்கு அவனை விட்டு விலகும் எண்ணம் சிறிதும் இல்லை. அந்த நெருக்கம் அவளுக்கு பிடித்திருந்தது.

நேற்று முபாரக்கிடம் அலைபேசியில் பேசியதில் அவர்களுக்கிடையில் எந்த மனஸ்தாபமும் இல்லை என்று புரிந்து கொண்டதன் பின்னால் இந்த திருமணம் பழிவாங்க நடந்த திருமணம் இல்லையென்று உணர்ந்ததால் பின்னால் அவனை நெருங்குவதில்லை எந்த மனக்குழப்பமும் ஷஹீக்கு இருக்கவில்லை.

அவளின் பார்வையே அவளின் சம்மதம் சொல்லி இருக்க மெதுவாக அவள் புறம் குனிந்தவன் அவளின் இதழ்களை முற்றுகையிட்டிருந்தான். காலையில் அரங்கேற்றவென்றிய இதழ் யுத்தம், மாலையில் அரங்கேறிக்கொண்டிருந்தது.

இருவருக்குமே இது ஒரு புதுவித அனுபவம். கண்களை மூடி கணவனனுக்கு இசைந்து கொடுக்க அவனுமே விடாது தேன் பருகிக்கொண்டிருந்தான். காலநிலையும் அவர்களுக்கு இசைந்து கொடுக்க இந்த உலகத்திலையே மறந்து புது உலகத்துக்குள் புகுந்து கொண்டிருந்தான் ரஹ்மான்.

வெளியே மழை தூரிக்கொண்டிருந்தது. ஆற்றுக்கு மேலே உள்ள ஊரில் கடும் மழையாக இருந்திருக்கும் அதான் இங்கு காலநிலை மப்பும் மந்தாரமுமாக இருந்தது. இவர்கள் ஆற்றுக்கு வரும் பொழுது இருந்ததை விட ஆற்று நீர் அதிகரித்திருந்தது அதனால் தான் அதீத குளிரும், ஆழமும் அதிகரித்திருந்தது. அதை உணர்ந்தவன்தான் தங்கைகளை சீக்கிரம் வீட்டுக்கு போகுமாறு சொன்னான் ரஹ்மான்.

அவனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஷஹீ மூச்சுக்கு திணற அவளை தன்னை விட்டு விலக்கி ரஹ்மான் நிறுத்த அவனை கட்டிக்கொண்டு ஓவென அழ ஆரம்பித்திருந்தாள் அவனின் பானு. ஒன்றும் புரியாமல் மலைத்து நின்றான் ரஹ்மான்.

Advertisement