Advertisement

அத்தியாயம் 10

ரஹ்மானின் மனதில் என்று பானு நுழைந்தாலோ அன்றிலிருந்து அவள் சிந்தனையை தவிர வேறு வந்ததில்லை. அவள் தன் வாழ்வில் வேண்டும் என்று தானே காதலை சொல்ல புறப்பட்டான். ஏற்றுக்கொள்வாளா? மறுப்பாளா? மறுத்தால்? சம்மதம் கிடைக்கும் வரை படையெடுப்பு தொடரும்.

ஆனால் எல்லாம் கல்யாணத்தில் வந்து நின்ற பிறகு அவள் தனக்கானவள் என்ற உரிமை தானாக வந்து விட்டது. அவளுக்காக தான் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருந்தது. அவள் பாதுகாப்பு அவனுக்கு அதி முக்கியம் பஸ்ஸில் சன நெருக்கத்தில் போகிறவளை வண்டியில் பின் தொடரும் பொழுது காணும் வலி சொல்ல முடியாதது. பல தடவை வண்டியை பஸ் தரிப்பிடத்தில் இருக்கும் கடையின் அருகே நிறுத்தி விட்டு அவளோடு பஸ்ஸில் ஏறி இருக்கிறான். அவளை தொடப் போனவனின் கையை முறுக்கியும் இருக்கிறான். இதற்கு என்ன தீர்வு என்று யோசித்தவனுக்கு கிடைத்த ஒரே பதில் அவளை ஆட்டோவில் அனுப்பலாம் சவாரி காசை தான் கொடுக்கலாம் என்பதே!

ஆனால் அறியாத ஒரு ஆட்டோவை பேசினால் முபாரக் காசு கொடுக்க விடமாட்டான். இருந்தாலும் பரவாயில்லை என்று தனக்கு தெரிந்த நம்பகமான ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்தும் பார்த்தான். பாடசாலை சவாரிகள் இருப்பதால் மறுத்து விடவே! சொந்தமாக ஆட்டோ வாங்கி யாருக்காவது சவாரிக்காக கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

ஆனால் அவன் கையில் போதியளவு பணம் இருக்கவில்லை. வண்டியை விற்று விடலாம் என்று நினைத்து அதற்கான ஏற்பாட்டில் இருக்கும் பொழுதுதான் அஷ்ரப்பின் மூலம் விஷயமறிந்த பாஷித் வீட்டில் விஷயத்தை சொல்ல நவ்பர் பாய் மகனை அழைத்து விசாரிக்க ரஹ்மான் உண்மையை சொன்னான்.  

“இதுக்கு நீ கல்யாணம் பண்ணி பைக்லயே! ஜோடியா போய் இருக்கலாம்” பாஷித் அண்ணனை முறைத்தான்.

வருங்கால மனைவியின் பாதுகாப்பை பற்றி நினைக்கிறான் அதில் தப்பு எதுவும் இருப்பதாக நவ்பர் பாய்க்கு தெரியவில்லை. மகனின் யோசனையும் அவர் யோசித்த ஒன்றோடு பொருந்தி வர

“வண்டியை விற்க வேண்டாம். நானும் பணம் தரேன். உன் கைல இருக்குறதையும் போட்டு உன் பேர்லயே வண்டியை வாங்கலாம். {அக்கா ஷம்ஷாத்தின் கடைசிப் பையன்}  இல்ஹாம் வேல கிடைக்கும் வர கடைக்கு வரேன்னு சொன்னான் அவனை வண்டியை ஓட்ட சொல்லலாம்” நொடியில் தீர்மானித்து  முடிவெடுத்தவர் பணத்தை புரட்டி ரஹ்மானின் பெயரில் வண்டியை வாங்கி அக்கா மகனுக்கு கொடுத்திருந்தார்.

அக்பர் வீட்டில் பெருமையாக இதை பற்றி சொல்ல மஸீஹா சும்மா இருக்காமல் “எங்க இருந்தான் இவங்களுக்கு மட்டும் காசு கொட்டுது தெரியல. பார்த்து தேவ இல்லாத தொழில் ஏதாச்சும் பண்ணுவாங்களானு தேடி பாருங்க. அப்பொறம் பொண்ண கொடுத்துட்டு மல்லு கட்ட முடியாது” வார்த்தையை கொட்டினாள்.

“மூடு வாய எப்போ பாத்தாலும் கண்டதை பேசிகிட்டு” அதட்டி அக்பர் அக்காவிடம் “இவ சொல்லுறத நினைச்சி பயப்படாத நான் நல்லா விசாரிச்சிட்டேன்” என்று மஸீஹாவையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்

ரஹ்மானின் புறம் சாய்ந்துக் கொண்டிருந்த மனம் மீண்டும் முருங்கை மரம் ஏற எதுக்கு இவனுக்கு வேண்டாத வேலை என மனதால் அவனை வசை பாடலானாள் பானு.

அன்று முதல்வரின் அறையிலிருந்து வெளியேறி ஹிதாயாவோடு பேசியவள் முபாரக்கும் ரஹ்மானுக்கு என்ன பகை என்று கேட்க வேண்டும் என்று ரஹ்மானை காண வந்தால் அவன் அந்த இரண்டு பசங்களையும் மிரட்டிக் கொண்டு இருந்தான்.

“அடங்கவே மாட்டானா இவன்?” என்று பல்லை கடித்தவள் நேராக அவனிடம் சென்று “பொறுக்கியா நீ? இல்ல பெரிய ராவ்டியா? தாதாவா?” அவளை அங்கே எதிர்பார்க்காத ரஹ்மான் திடுக்கிட்டு திரும்ப வெறுப்பை கக்க ஆரம்பித்தாள் அவள்.

முதல்வர் சொன்னது போல் காலேஜில் சேர்ந்து ஒருவருடம் கூட ஆகும் முன் பானுவின் பக்கம் ஒருவனின் பார்வை சென்றதென்றால் நான்கு வருடங்களில் எத்தனை பேரின் பார்வை விழும்? அதையெல்லாம் தடுக்க இந்த ஒரு சம்பவத்தை பயம் படுத்திக்கொள்ள நினைத்தவன் அவர்களை வழி மறித்து மீண்டும் மிரட்டினான். ஆனால் அது அவள் கண்களில் பட்டு விடும் என்று அவன் நினைக்கவே இல்லை. திட்டுவதற்காகவே வந்தாளா? என்ற பார்வையோடு நின்றவனின் ஆதாரங்கள் மலர்ந்தன.

“இவ்வளவு திட்டுறேன். சொரணை கெட்டவன். நிக்குறத பாரு சோள காட்டு பொம்மை மாதிரி இளிச்சு கிட்டு” கோபமாக நடையை தொடர்ந்தவளை நிறுத்தினான் ரஹ்மான்.

“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ மேடம். என் கிட்ட பேசிட்டீங்க. நீங்க என் கிட்ட பேசிட்டீங்க. என்னதான் உங்களுக்கு பிடிக்கலையே! இனிமேல் பிடிக்குமா?”

“அடேய் அவ உன்ன திட்டி கிட்டு இருந்தா நீ என்னமோ கொஞ்சி பேசினா மாதிரி சொல்லி கிட்டு இருக்க?” மனம் அவனை கேலி செய்ய பானுவின் மீது காதல் பார்வை வீசிக் கொண்டிருந்தான் ரஹ்மான்.

அவன் பார்வையையின் தாக்கம் இதயத்தில் சுளீரென பாயா முகமாற்றத்தை மறைக்க கோபமாக முகத்தை வைத்துக் கொண்டவள் வாயினுள் அவனை வசை பாடியவாறே கேட்க வந்ததையும் மறந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

கோவக்காரக்கிளியே

எனைக் கொத்தி விட்டுப் போகாதே

அருவா மனையைப் போல

நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

ஏதோ ஏதோ கொஞ்சம்

வலி கூடுதே

அட காதல் இதுதானா…

ஏனோ ஏனோ நெஞ்சம்

குடை சாயுதே

அட காதல் இதுதானா…

கோவக்காரக்கிளியே

எனைக் கொத்தி விட்டுப் போகாதே

அருவா மனையைப் போல

நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

ஏ… சூரியகாந்திப் பூவப்போல

முகத்த திருப்புறியே

நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல

செதரி ஓடுறியே

போகும் அவளையே கண் சிமிட்டாமல் பாத்திருந்தவன்  இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று எண்ணினான். விதி அவனை பார்த்து சிரித்தது.  

ஆகா மொத்தத்தில் ரஹ்மானை திட்டவாவது அவன் கூட பேச ஆரம்பித்திருந்தாள் ஷஹீரா. தூர இருந்து சைட் அடிப்பதை மனதால் திட்டிக் கொண்டிருந்தவள் கண்களால் உறுத்து விளிக்கலானாள்.

ஆட்டோ விஷயம் வேறு அவளை உசுப்பேத்தி இருக்க  பஸ்ஸில் போய் வந்தால் தான் ஒன்றும் கரைந்து போய் விட மாட்டேன் என்று பொறுமியவள் அவனை நேரில் கண்டால் திட்டுவதென்ற முடிவோடு இருந்தாள்.

ஆனால் ஆட்டோவில் செல்ல ஆரம்பித்த பின் அவளுக்கு நேரம் மிச்சமாவதை உணரலானாள். பஸ்ஸுக்கு காத்துக்கொண்டிருக்க தேவையே இருக்கவில்லை. நடக்கும் தூரம் ஆட்டோவிலையே வீடு வந்து விடுவதால் படிக்க நேரம் ஒதுக்க முடிந்தது. அதில் பிழைத்து போகட்டும் என்று பெருந்தன்மையாக ரஹ்மானை மன்னித்து விட்டாலும் கல்யாணம் ஆவதற்கு முன்னாலையே இவ்வளவு உரிமை எடுத்து கொள்கிறான் கல்யாணம் ஆனால் எவ்வாறு நடந்து கொள்வானோ என்ற அச்சமும் எழுந்தது.

கல்யாணத்து பின்னால் உள்ள கணவன் மனைவியின் உறவை பற்றி அறியாதவளால பானு. ஆனால் ரஹ்மானோடு தன் வாழ்க்கையை இணைத்து யோசித்தும் பார்க்க அவளால் முடியவில்லை. தனக்கு அவனை பிடிக்கவில்லை என்று சொல்வதை விட அவன் மேல் எந்த விருப்பமும் வரவில்லை. காதல் இல்லவே இல்லை.

“எல்லாரும் காதலித்துதானா கல்யாணம் செய்றாங்க? புள்ள குட்டி பெத்து ஒண்ணா வாழலையா?” அவள் மனம் கேள்வி எழுப்ப

“வாழும் எல்லோரும் சந்தோசமா இருக்காங்களா? இல்லையே!”

உண்மையில் நாநாவை பழிவாங்கதான் என்னை கல்யாணம் செய்து கொள்ள போகிறானா? இன்னும் அவள் மனதில் முளைத்த அந்த சந்தேகம் தீரவில்லை. அதற்கான பதிலை அவனிடம் கேட்டால் கிடைக்குமா? வாழ்ந்தேதான் பார்க்க வேண்டுமா?

“கல்யாணத்துக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கிறதே இப்போதே எதற்கு அதை பற்றி யோசிக்கிறாய்?” மனம் அவளை வசை பாட தலையை உலுக்கியவாறே அகன்றாள். ஆனால் பாவம் அவள் அறியவில்லை அவளே ரஹ்மானிடம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கப் போகிறாள் என்று.

மாதங்கள் கடக்க இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தாள் ஷஹீரா. இந்த ஆறுமாதங்களில் எவ்வளவோ மாற்றங்கள் ஊரிலும், வீட்டிலும் நிகழ்ந்திருக்க அவள் வாழ்க்கையில் மட்டும் எந்த மாற்றங்களும் இல்லை. வளமை போல் ரஹ்மான் பின் தொடர்வது உட்பட. ஆனால் அவன் வாழ்க்கை மாறிப்போய் இருந்தது.

ஒரு தடவை டெங்குவால் பாதிக்கப்பட்டு பாதியானான். ஐந்து நாள் மருத்துவமனை வாசம். தீவீரசிகிச்சை பிரிவில் இருந்தான். வீட்டுக்கு வந்தும் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டியதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வீட்டில் தான் இருந்தான். உடல் படுத்த மனமோ பானுவை காண ஏங்கியது.

“வாழ்க்கைல ஒரு நாளாவது அவளை பார்க்காம இருந்ததே இல்ல ஜெயில்ல இருக்குற மாதிரி இருக்கு” அவனை பார்க்க வந்த அஸ்ரப்பிடம் புலம்பித்தீர்த்தான் ரஹ்மான்.

அஸ்ரப்புக்கும் அவனை பார்க்க பாவமாகத்தான் இருந்தது. கல்யாணத்துக்கு முன் மணப்பெண் கணவனின் வீடு வரும் வழக்கம் அந்த குடும்பத்தில் இல்லை. மருத்துவமனைக்கும் முபாரக் ஷஹீயை அழைத்து செல்ல மறுத்தான். சென்றிருந்தாலும் தீவீர சிகிச்சை பிரிவினுள் செல்ல அனுமதியும் கிடைத்திருக்காது. பேகம் சொன்னதுக்காக முபாரக் இரண்டு தடவை வந்து பார்த்து விட்டு சென்றான். அவனிடம் பானுவை பற்றி வாய் விட்டே கேட்டான் ரஹ்மான்.

“அவளுக்கென்ன நல்லாத்தான் இருக்கா. உன் காத்து படலானா இன்னும் நல்லா இருப்பா” நோயாளி என்றும் பாராமல் கடுகடுவென பெரிய

“இந்த அண்ணனுக்கும் தங்கச்சிக்கு தன்மீது அப்படி என்ன வெறுப்பு” என்று ரஹ்மானால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னை பார்க்க வரமுடியாவிட்டாலும் ஒரு அலைபேசி அலைப்பாவதாவது ஏற்படுத்த மாட்டாளா? முபாரக்தான் பேச விடமாட்டான். ஆட்டோவில் போகும் போது இல்ஹாமின் அலைபேசியை வாங்கியாவது பேசலாம்ல உண்மையிலயே அவளுக்கு என்னை சுத்தமாக பிடிக்காதா?” முதன் முறையாக பானுவின் பக்கமாக இருந்து யோசித்தான் ரஹ்மான்.

ஆனால் பேகம் அக்பரோடு வந்து பார்த்து விட்டு சென்றபோது ஷஹீ செய்ததாக சொல்லி சூப் கொண்டு வந்து கொடுக்க எல்லாம் மறந்து அதில் லயித்தான்.

உடல் தேறியதும் மீண்டும் பானுவின் தரிசனம்தான். அதே விரிந்த புன்னகையில் அவளை சந்தித்தான் ரஹ்மான். வண்டி ஓட்ட அனுமதிக்காததால் அஸ்ரப்போடு அவன் வண்டியில் வந்திருந்தான். பரீட்ச்சைக்கு நேராமாவதால் கண்களாலேயே நலம் விசாரித்தவள் காலேஜினுள் சென்று விட்டாள்.

அந்த பார்வையே ரஹ்மானுக்கு போதுமானதாக இருக்க, அஸ்ரப்புக்கு கோபமாக இருந்தது உடம்பு முடியாமல் இருந்தவன் வந்து ரெண்டு நிமிடம் பேசி நலம் விசாரித்து அக்கறை காட்டினால் என்னவாம்? என்று கடிந்தது அவன் மனம். ஆனால் ரஹ்மானின் மலர்ந்த முகம் கண்டு வாயை மூடிக்கொண்டான்.  

ரஸீனாவோ உடம்பு இன்னும் தேறவில்லையென்று மகனை வெளியே அனுப்ப மறுத்தாள். கிட்ட தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு தான் வண்டி ஒட்டவே அனுமதித்திருந்தனர் வீட்டார். அன்று பார்த்து வண்டி ஆக்சிடன் ஆகி கையிலும் காலிலும் அடி பட்டு கட்டோடு வீடு வந்தான் ரஹ்மான்.

அதற்கு ஒன்றரை மாதம் வீட்டில் இருந்தான் அதன் பின் மூன்று மாதங்கள் கடந்து சின்னம்மை நோயால் படுத்தான்.

இவ்வாறு மாறி மாறி ஒன்றரை வருடங்களாக நோயாலும், ஆக்சிடண்ட்டாலும் ரஹ்மான் பாதிக்கப்பட ஊர் கண்ணே அவன் மேல்தான் என்று ரஸீனா கண்ணூர் கழிக்க ஏற்பாடு செய்ய,  ஷஹீராவை திருமணம் பேசிய பின்தான் இவ்வாறெல்லாம் ரஹ்மானுக்கு நடக்கிறது என்று மஸீஹா புதுப் புரளியை கிளப்பி விட்டிருக்க, அது காட்டுத் தீ போல் ஊரெல்லாம் பரவியது.

முஸ்லீம்கள் திருமணத்தின் போது ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம் என்று எதுவும் பார்ப்பதில்லை. ஏன் நல்ல நாள் என்று பார்ப்பதும் இல்லை. சிலர் வளர் பிறையில் திருமணம் வைப்பார்கள். சிலர் அதில் கூட நம்பிக்கை வைப்பதில்லை.

ஒரு பெண்ணை திருமணத்துக்காக பார்க்கும் பொழுது அவள் மார்க்க பற்றுள்ளவளாக, அழகானவளாக, வம்சாவழியில் வந்தவளா,  செல்வச்செழிப்புள்ளவளா என்று ஆராயப்படும். இந்த நான்கு காரணங்களில் ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு பெண்ணை திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் அவர்களில் மிகச்சிறந்தவள் மார்க்கப்பற்றுடைய பெண்ணே அவளை நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அப்படி திருமணம் செய்யும் பெண்ணுக்கு மஹர்   கொடுங்கள். சுக துக்கங்களில் பங்கெடுப்பவளுக்கு மரியாதை கொடுங்கள் எனும் பொழுது திருமணமும் ஆகாத நிலையில் ரஹ்மானுக்கு வரும் துன்பம் அனைத்துக்கும் ஷஹீ எவ்வாறு காரணமாக முடியும்.

பொய்யை கூட திரும்பாத திரும்ப சொன்னால் உண்மையாகி விடும். அதே போல் ஊசலாடும் மனித மனங்களில் ஒன்றை நம்ப வைக்க நேரம் சரியில்லை என்றோ! அல்லது பெண்ணின் ராசி சரியில்லையென்றோ கூறினால் போதும் கால் தடுக்கினாலும் அதற்கும் காரணம் அந்த பெண்ணாகி விடுவாள். அதுபோல் தான் ரஹ்மான் தும்மினாலும் ஷஹீராவின் மேல் குற்றம் சாட்டப்பட்டது.

ஜாதகத்தில் தோஷம் என்று சொல்ல முடியாததால் கல்யாணம் பேசியும் அபசகுனமாக தள்ளிப்போச்சு. அவ தான் காரணம். அதனால் தான் கெட்டதாகவே எல்லாம் நடக்குது. இப்போவே இப்படி என்றால் கல்யாணத்துக்கு பிறகு என்னவெல்லாம் நடக்குமோ என்று ரஸீனாவின் காதுப்படவே பேசி வயிற்றில் புளியை கரைத்திருக்க ஷம்ஷாத்திடம் ஓடியவள் விஷயத்தை கூறி கதறியழலானாள். 

இங்கே ஷஹீயின் வீட்டிலும் துக்கம் விசாரிக்காத குறையாக அக்கம், பக்கத்திலுள்ளோர் வீட்டுக்கு வந்து ஷஹீக்கு இனி கல்யாணமே நடக்காது எனும்படி பேசி விட்டு செல்ல, பேகம் தொழுகை பாயிலிருந்து அழுதவாறு துஆ கேட்கலானாள்.

அவளுக்கு இருக்கும் துணை படைத்தவன் ஒருவனைத் தவிர வேறில்லை. அவனிடமே முறையிட்டு கதறி அழ. அன்னையின் நிலையை கண்டு பொருக்க முடியாத ஷஹீ இல்ஹாமிடமிருந்து ரஹ்மானின் நம்பர் வாங்கி ஹிதாயாவின் அலைபேசியிலிருந்து அவனை அழைத்து பேசி சந்திக்க வேண்டும் என்றாள்.

போன ரமழானில் ஜமீலாவுக்கு குழந்தை பிறந்து விட்டதால் யாரும் நோன்பு திறக்க வரவில்லை. பாஷித் மட்டும் பகல் பொழுதில் வந்து அவளுக்கு வாங்கிய துணிகளை கொடுத்து விட்டு சென்றிருந்தான்.

இந்த வதந்தியால் அலைபேசி அழைப்புகளும் காணாமல் போயிருந்தது. இல்லாவிடில் ரஸீனா அல்லாது ஜமீலா அவளோடு பேசாமல் இருந்ததே இல்லை. கிட்டத்தட்ட உறவு முறிந்த நிலைதான். மனம் வெறுத்தவளாகத்தான் ரஹ்மானை சந்திக்க கிளம்பினாள் ஷஹீரா.

அவளின் காலேஜுக்கு அருகில் இருந்த காபி ஷாப்பில் ரஹ்மானுக்காக காத்திருந்தாள் ஷஹீ. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின் தான் ரஹ்மானை பார்க்கிறாள். ஜீன்ஸும், குர்த்தாவும், தாடியும், கண்ணுக்கு சுர்மாவும், கழுத்தில் கர்ச்சீப்பும், தலையில் ஒரு தொப்பியும் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருந்தான் அவன். பார்த்த உடன் யாரோ சினிமா வில்லன் என்ற எண்ணம் தான் வந்தது.

அவளின் அதிர்ச்சியான பார்வையை கண்டு “காலேஜ் வாசல்ல தினமும் உன்ன பார்க்க நிற்பேனே ஒரு ரௌடிய பாக்குறது போல பார்த்து விட்டு முகத்தை சுழிச்சி கிட்டு போவியே அப்போ என்ன அடையாளம் தெரியலையா?” உதட்டின் ஓரம் சின்ன புன்னகை. அது அவள் தன்னை அறிந்து வெறுக்கவில்லை என்றதில் மலர்ந்தது.

அவன் சொன்ன பிறகுதான் அவளுக்கும் ஞாபகம் வந்தது. அவலறியாமலியே அவள் கண்கள் ரஹ்மானை தேடி அலைபாயும். அவன் அங்குதான் இருக்கின்றான் என்று உள்மனம் சொல்லும். கண்களால் ஒருதடவை அலசி விட்டு ஏமாறுபவள், சில நேரம் தலையை திருப்பியும் அலசுவாள். சில நேரம் நின்று அவன் எங்கையாவது நிற்கிறானா என்று பார்ப்பாள். கூலர் அணிந்திருந்ததால் அவளால் அது ரஹ்மான் என்று சுத்தமாக அடையாளம் காண முடியவில்லை.

“என்ன ஆச்சு? எதுக்கு இப்படி டிரஸ் போட்டு இருக்கீங்க?”

“அத ஏன் கேக்குற? யாரோ சூன்னியம் வச்சிட்டாங்க, கண் பட்டிருச்சுனு அந்த தாயத்து இந்த தாயத்துனு கைல, இடுப்புல ஏகப்பட்டது கட்டிட்டாங்க. ஓதின சுர்மா கண்ணுல பூசுங்க, தொப்பியை கழட்ட கூடாது, அப்படி இப்படினு மண்டை குடைச்சல் உம்மா மனம் நோக கூடாதுனு பூசுறேன். இப்போ பாரு உனக்கே என்ன அடையாளம் தெரியல” குரல் கூட விரக்தியாகத்தான் ஒலித்தது.

இந்த தோற்றத்தை பார்த்துதான் முபாரக் கஞ்சா பழக்கம் இருக்கு, பான்பராக் சாப்பிடுறான் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான். அவனை நேரில் காணாவிட்டால் என்ன நாநா சொன்னால் முழுமனதாக நம்பி விடும் ஷஹீயும் அதை நம்பி ரஹ்மான் கெட்டவன் என்று முழுதாகவே நம்பிக் கொண்டிருந்தாள். அதனாலயே அவனை காணவோ! பேசவோ! முயற்சி செய்யவுமில்லை.

ஷஹீராவுக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. நோயில் படுத்தவனுக்கு பேய் அடிச்சா மாதிரி படுத்தி எடுத்து இருக்கிறார்கள்.

“சுர்மா பூசுறது சுன்னத்துதானே! கண்பார்வையும் அதிகரிக்கும்” ஏனோ அவனை சமாதானப்படுத்த மனம் துடிக்க இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசினாள் பானு.

“சுன்னத்துதான். ஆனால் சுர்மாக்கு சக்தி இருக்குனு சொல்லுறதெல்லாம் அபத்தம்” என்றதோடு நிறுத்திக் கொண்டவன் அவள் அனுமதி இல்லாமலேயே! அவளுக்கு பிடித்தமான குளிர்பானத்தை ஆடர் செய்ய அவனை வியந்து நோக்கினாள் ஷஹீ. 

“சரி என்ன எதுக்கு பார்க்கணும்னு சொன்ன?” நேரடியாகவே விசயத்துக்கு வந்தான் ரஹ்மான்.

அவனை உற்று நோக்கிய ஷஹீராவுக்கு அவன் சிரிக்கும் கண்களும், உதடுகளும் காணாமல் போய் ஒரு கடினத்தன்மை இருப்பதாக கண்டாள்.

“நம்ம கல்யாணத்த பத்தி பேசத்தான்” அவளும் மறைக்காமல், திணறாமல் உடனே விசயத்துக்கு வந்தாள்.

அவன் கண்களை பார்த்து நேராக சொன்னதும் அவளை ஆழ்ந்து ஒரு நிமிஷம் நோக்கியவன் மேலே பேசு எனும் விதமாக செய்கை செய்தான்.

வீட்டில் ரஸீனாவின் புலம்பல் தாங்க முடியவில்லை. அன்னையின் அச்சம் அவனுக்கு புரியாமலில்லை. ஊரே பேசும் பொழுது அச்சப்படுவது சாதாரணம். ஷம்ஷாத்திடம் பேசிய பின்னும் தெளிவாகாமல் மனக்குழப்பத்தில் இருக்கிறாள்.

இப்பொழுது பானு வேறு கல்யாணத்தை நிறுத்த சொன்னால்? என்ன செய்வது. தாலி காட்டினால் போதும் கல்யாணம் நடந்து விடும் என்றால் இங்கயே கட்டி விடுவான் ஆனால் இஸ்லாமிய பெண்ணின் திருமணத்தில் வலி {walee} என்பர் மிக முக்கியமானவர். அவர் தான் பெண்ணை மணமகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பானுவுக்கு தந்தை இல்லை. முபாரக் தான் முன் நின்று திருமணம் செய்து வைக்க வேண்டும் இவள் வேண்டாம் என்றாள் போதும் அவன் நூறு தடவை வேண்டாம் என்பானே!

“நம்ம கல்யாணம் சீக்கிரம் நடக்கணும். அடுத்த வாரம் என்றாலும் சரி” தன்னுடைய சம்மதத்தை வெட்கப்பட்டோ! காதலுடனோ சொல்லவில்லை உதவியாக கேட்டாள் ஷஹீரா.

ரஹ்மான் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.  அவளிடம் காதலை சொன்ன போது அவளின் பதிலில் தான் எல்லாம் அடங்கி இருப்பது போல் இருந்தவனுக்கு கல்யாணம் கைகூடிய வேலை அவள் சம்மதம் கூட கேட்க தோணவில்லை. கல்யாணம் நடந்தால் போதும் என்றிருந்தது. அவள் மறுத்த போதும் சரி அவனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று முறைத்த போதும் சரி மனதில் இருந்த அலைப்புறுதல் இப்பொழுது இல்லை.

அன்று அறியாமல் முடிவெடுத்தவள் இன்று அவசரப்பட்டு முடிவெடுக்கிறாள். இன்று சம்மதம் சொல்வதற்கான காரணம் அவனுக்கு தெரிந்தே ஆகா வேண்டி இருந்தது.

“உனக்குத்தான் என்ன பிடிக்காதே பானு. குடும்பத்துக்காகத்தானே என்ன கல்யாணம் பண்ணவே சம்மதிச்ச? எப்படியும் இன்னும் ஒரு வருஷமும் ரெண்டு மாசத்துல நம்ம கல்யாணம் நடந்திடுமே! என்ன அவசரம்?”

ரஹ்மான் சரியான கேள்வியை தான் கேட்டான் ஆனால் ஷஹீராவால் தான் பதில் சொல்ல முடியவில்லை. கடந்த வருடங்களில் அவன் தொல்லை பெரிதாக இல்லை என்றாலும் அவன் மீது விருப்பம் என்று சொல்லிட முடியாது. என்றும் இருப்பவன் ஒருநாள் வரவில்லையானால் எங்கே அவன் என்று மனம் தேடுகிறது என்று எண்ணிக்கொள்பவளுக்கு ரஹ்மான் அவள் அனுமதியில்லாமலே என்றோ மனதில் நுழைந்து விட்டான் என்று புரியவுமில்லை. அவன்தான் கணவன் என்று முடிவானபின் காதலை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யாததால் தன் மனதை அறியவுமில்லை.

காதல் என்று பொய் சொல்லவும் முடியாது. உண்மையை தான் கூற வேண்டும். அன்னையின் நிலைமையை எடுக்கூறியவள் தாங்கள் கல்யாணம்தான் ஒரே தீர்வு என்றாள்.

அதற்கு ரஹ்மானோ! வீட்டில் பேசி விட்டு கூறுவதாக கூற ஷஹீக்கு அப்படி ஒரு கோபம் ரஹ்மானின் மேல் வந்தது.

என்ன விளையாடுறீங்களா? உங்க வீட்டுல கேட்டா என்ன லவ் பண்ணினீங்க? இல்ல உங்க வீட்டுல கேட்டா ப்ரொபோஸ் பண்ண கார்ட தூக்கி கிட்டு வந்தீங்க? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் எந்தநாளும் ஒவ்வொரு இடத்துல நின்னு சைட் அடிப்பீங்களே! வீட்டுல சொல்லிட்டா வருவீங்க? லவ் பண்ண யார் அனுமதியும் தேவ இல்ல ஆனா கல்யாணம் பண்ண மட்டும் எல்லார் சம்மதமும் வேணுமோ!”

வீட்டில் பேசி நல்ல நாள் பாக்குறேன் என்பதை அவன் என்னமோ சாதாரணமாக வீட்டில் பேசுறேன் என்று கூறிவிட அவர்கள் மறுத்தால் கல்யாணம் நடக்காதா என்ற அச்சம் தான் வந்தது. கல்யாணம் நடக்காவிட்டால் அன்னையின் நிலைமை என்னவாகுமோ? ஊர் பேசுவது உண்மையாகிவிடும். அந்த பயம் தான் கோபமாக மாறி கத்தி விட்டாள் ஷஹீ.

“நீயும் என்னை காதலித்திருந்தால் வா போய் காதியை வலியாக்கி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு கூப்பிட்டு இருப்பேன். நீதான் என்ன லவ் பண்ணவே இல்லையே! வீட்டுல பேசி முறையாத்தானே நடக்கணும்” சிரித்தவாறே சொன்னான் ரஹ்மான்.

காதலித்திருந்தாலும் அவள் அவ்வாறான திருமணத்திற்கு சம்மதித்திருக்க மாட்டாள் என்பது வேறு கதை. அவளுக்கு புரியும் படி சொல்ல ரஹ்மான் இவ்வாறு கூறி இருக்க,

“அப்போ நிஜமாலுமே நீங்க என்ன லவ் பண்ணுறீங்களா? பழிவாங்க இல்லையா?” கண்களை விரித்துக் கேட்டாள் ஷஹீ.

கொஞ்சம் நேரத்துக்கு முன்னால் தான் நீ என்னை காதலிக்கிறாய், பின்னாடி அலைகிறாய், ஒவ்வொரு இடத்தில் நின்று சைட் அடிக்கிறாய் என்று கோபமாக சொல்லி இருந்தாள். நொடியில் அதை மறந்து இப்படி கேள்வி கேட்டால் அவன் என்ன பதில் சொல்வான்.

அவள் கண்ணழகில் கரைந்தவன் “அதுக்கு பதில் கல்யாணத்துக்கு பிறகு தெரிஞ்சிக்க. நேரமாச்சு. வீட்டுக்கு போலாமா? நானே உன்ன கொண்டு போய் விடுறேன்” ரஹ்மான் அனுமதி வேண்டி நிற்க, வேண்டாம் வீட்டுக்கு தெரிந்தால் வீண் பிரச்சினை வரும் என்றவள் அவனோடு பஸ்ஸில் போய் இறங்கி நடந்தே வீட்டுக்கு சென்றாள்.

ஆனால் அவன் அவனோடு காபி ஷாப்பில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து விட்டு முபாரக்கின் நண்பனொருவன் முபாரக்குக்கு தகவல் சொல்லி இருக்க, வீட்டுக்கு வந்தவன் ஷஹீராவை பெல்ட்டால் தாறுமாறாக அடித்தவன் கழுத்தை பிடித்து சுவறில் மோத தலை பலமாக மோதியதில் நெற்றி வெடித்து நெற்றியிலிருந்து இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.

ஷஹீராவை அடித்த செய்தி ஊர் பூரா பரவ ரஹ்மானின் காதிலும் விழ பதறியடித்துக் முபாரக்கின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.

Advertisement