Advertisement

அத்தியாயம்.30

தோட்டத்துக்கு போகும் போது இருந்த கோபமோ தயக்கமோ திரும்ப வரும்போது மூவரிடமும் துளியும் இல்லை.

ராமிற்கு முதலில் பேச மட்டுமே தயக்கமாக இருந்தது. பின் அவரும் இயல்பாக பேச ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு ஆண்களுக்கு பேச விசயமா வேண்டும்…

 நாட்டுநடப்பு, அரசியல், தொழில், அடுத்து என்ன வெள்ளாமை போட்டா லாபம் வரும், இப்படி ஏகப்பட்ட விசயம் இருக்கே… 

அவர்கள் வீட்டிற்குள் நுழையும்போது வீடே சந்தக்கடையை போல இருந்தது. ஷர்மி ஒருத்தி இருக்கும்போதே வீடு கலைகட்டும் அப்படி இருக்கும்போது இப்போது அவளுடன் சேர்ந்து செல்வி, மகேஷ், வினோதினி, அகிலேஷ் ஒரே இடத்தில் கூடினால் அங்கு சிரிப்புக்கும், கேலி கிண்டலுக்கும் பஞ்சமா என்ன?

லஷ்மிதான் மகளை திட்டிக்கொண்டிருந்தார். எங்க அவர் திட்டுவதை மகள் கேட்டால் தானே… திட்டி திட்டி சலிச்சுப்போய் எப்படியோ போய் தொலைங்க.., என்றவாறே சமையல் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

வீட்டில் இருந்த சந்தோசத்தை பார்த்து மூவருமே புன்னகைத்துக்கொண்டனர்.

சிறிது நேரத்திலே ரகுவையும் அவர்கள் கூட்டத்தில் இனைத்து விட்டனர். ரகுவிற்கும் மனதிலிருந்த பாரமெல்லாம் தாத்தாவிடம் பேசியதில் குறைந்திருந்ததால் அவனும் அவர்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்தான்.

ராமிற்கு அதுவே போதுமானதாக இருந்தது. மகனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அன்று இரவே சுந்தரமூர்த்தியின் தங்கை அகிலாண்டம் குடும்பமும் வந்துவிட்டது. சில வருடங்களாகவே உறவுகளின் வீட்டிற்கு செல்வதை தவிர்த்து விட்ட அகிலாண்டம் இன்று தன் அண்ணன் மகளை பார்ப்பதற்காக அந்த தள்ளாத வயதிலும் அண்ணன் வீட்டிற்கு மகன் குடும்பத்துடன் வந்துவிட்டார்.

வாசலில் கார் வந்து நின்றபிறகு அதிலிருந்து மருமகளின் கைகளை பிடித்துக்கொண்டு வயதின் முதிர்ச்சி காரணமாக தளர்ந்த நடையுடன் மெல்ல காரிலிருந்து இறங்கினார் அகிலாண்டம்.

அகிலாண்டத்திற்கு கார் பயணம் ஒத்துக்கொள்ளாததால் காரிலிருந்து இறங்கும்போதே முடியாமல் தலைசுத்தலுடன்தான் இறங்கினார்.

அவர் தடுமாறிக்கொண்டு இறங்குவதை அவருடைய மகன் ராஜா பார்த்தாலும் அம்மாவுக்கு உதவி செய்ய தோன்றாமல் காரிலிருந்து இறங்கி எங்கையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

எப்போதும்போல ராஜாவின் மனைவி சாரதா கணவன் உதவிக்கு வருவாரா என எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் தானே மாமியார்க்கு உதவினார்.

அகிலாண்டத்தை வயதின் முதிர்ச்சியை விட மனதில் உள்ள குற்ற உணர்ச்சியே அவரை ரொம்ப தளர்ந்துபோக வைத்து விட்டது.

அகிலாண்டம் அன்று செய்த சுயநலமான காரியத்தால் ஒரு உயிர் போயி இரண்டு குடும்பங்கள் நிம்மதியை தொலைத்து விட்டு வாழ்வதற்கு அடித்தள மிட்டது. அவர் செய்த காரியத்திற்கு தண்டனை மகன் மூலமாக கடவுள் அவர்க்கு குடுத்துவிட்டார்.

ராஜா தன் தாயுடன் பேசி பல வருடங்கள் ஓடிவிட்டது. அகிலாண்டம் முதலில் மகன் கோபமாக இருந்ததை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளாமல் விட்டவர் தன் அண்ணி அலமேலு மங்கையின் இறப்பிற்கு பிறகுதான் மகனின் தீவிரத்தை உணர்ந்தார். மகன் மட்டுமே உலகம் என வாழ்ந்தவர்க்கு அவனின் விலகல் தான் தன்னுடைய தவறை உணரவைத்தது., ஆனால் காலம் கடந்து அவர் தவறை உணர்வதால் யாருக்கும் நல்லதில்லையே.. நடந்தது நடந்ததுதானே.. போன உயிர் திரும்ப வருமா என்ன? 

ராஜாவும் கடைசிவரை தன் தாயை மன்னிக்க தயாராக இல்லை., முதலில் தனக்கு திருமணம் செய்து வைக்கும் அம்மாவின் ஆசைதான் அவரை இப்படியெல்லாம் செய்ய வைத்தது என்பதால் தனக்கு திருமணமே வேண்டாம் என பிடிவாதமாக இருந்தார். 

ஆனால் லஷ்மியும் முருகேசனும் ராஜாவை அப்படியே விடாமல் கட்டாயபடுத்தி தாங்களே பெண்ணை பார்த்து கட்டி வைத்தனர். 

அகிலாண்டம் எதை நினைத்து தன் அண்ணணிடம் லலிதாவை பொண்ணுக்கேட்டாரோ அதெல்லாம் சாராதாவின் மூலம் கிடைத்துவிட்டது. மருமகளே மகளாக வாயித்துவிட்டார். ஆனால் மகன் மிகப்பெரிய தண்டனையை தன் மௌனத்தால் குடுத்துவிட்டான். ராஜா தன் தாயுடன் பேசி கிட்டதட்ட முப்பது வருடங்கள் ஓடி விட்டது. 

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் எதிர்வினை உண்டுதானே அதற்கு அகிலாண்டம் மட்டும் விதிவிலக்கா என்ன??

வாசலில் பேசிக்கொண்டிருந்த ஆண்கள் அகிலாண்டத்தின் குடும்பத்தை பார்த்ததும் வரவேற்றனர்.

ரொம்ப நாளுக்கு பிறகு தங்கையை தன்வீட்டில் பார்த்ததும் மூர்த்திக்கு அப்படி ஒரு நிறைவு. 

சாரதா சிரமப்படுவதை பார்த்து தன் அம்மாவிற்கு உதவுவதற்காக அவர் அருகில் வந்த ராஜாவின் மகன் சரண் தன் அப்பத்தாவை கைபிடித்து கூட்டிவந்து அங்கிருந்த கட்டிலில் அமரவைத்தான்.

ராஜா சாரதா தம்பதிக்கு பெண் ஒன்று ஆண் ஒன்று. மகள் அகிலேஷை விட ஒரு வயது மூத்தவள் அவளுக்கு திருமணமாகி ஈரோட்டில் கணவருடன் வசிக்கிறாள். இரண்டாவது மகன் அகிலேஷை விட இரண்டு வயது இளையவன். படித்து முடித்துவிட்டு அவனுக்கு பிடித்த தொழிலான நாமக்கல்லில் கார் பட்டறை வைத்து நடத்திக்கொண்டிருக்கிறான்.

வெளியே கார் வந்த சத்தம் கேட்டு உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்து வந்திருந்தவர்களை வரவேற்றனர்.

வந்திருந்தவர்களுக்கு குடுப்பதற்காக கையில் தண்ணீர் சொம்புடன் வெளியே வந்த தன் அண்ணன் மகள் லலிதாவை பார்த்ததும் அகிலாண்டத்தின் கண்கள் கலங்கி விட்டது.

தன் அருகில் வரும் அண்ணன் மகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இந்தாங்கத்தை தண்ணி” செம்பை அகிலாண்டத்திடம் நீட்டியதும்,

தண்ணீர் சொம்பை வாங்காமல் மருமகளின் கன்னத்தை தொட்டு பார்த்தவாறே “இந்த அத்தைய மன்னிச்சிடு கண்ணு?” கண்ணீருடனே கேட்டார்.

அவரின் கண்ணீரை பார்த்ததும் அங்கிருந்த ராஜாவை தவிர மற்ற அனைவருமே கலங்கிவிட்டனர்.

“ஐயோ அத்தை எதுக்கு இம்புட்டு பெரிய வார்த்தையெல்லாம் கேட்டுடுட்டு இருக்கிங்க? உங்க மேல என்ன தப்பு இருக்கு நீங்க ஏங்கிட்ட மன்னிப்பு கேக்கறிங்க?” என்றாள் லலிதா.

“தெரியாம செய்யற தப்புக்கு தான் மன்னிப்பெல்லாம். தெரிஞ்சே செஞ்ச பாவத்து இந்த ஜென்மத்துல இல்ல இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாவம் குறையாது. அதுலையும் காலம் கடந்து செஞ்ச பாவத்துக்கு மன்னிப்பு கேட்டா குறைஞ்சிடுமா என்ன?” சத்தமாகவே ராஜா சொன்னதும், 

மகனின் பேச்சு அகிலாண்டத்தை குறுகுறுக்க வைத்து விட்டது.

அதை பார்த்த அனைவரும் ஒரு நொடி அதிர்ந்துவிட்டனர்.

மூர்த்தி, “தப்பே செய்யாத மனிதன்னு இந்த உலகத்துல ஆருமே இல்லை.., ஆனா அத உணர்ந்து மன்னிப்பு கேக்கும்போது மன்னிச்சிடனும் மாப்பிள்ளை.”

“நா ஒன்னும் சுந்தர மூர்த்தியோ அவரோட பசங்களோ கிடையாது மாமா. எல்லாத்தையும் மன்னிச்சி ஏத்துக்கிட்டு அவங்களுக்கு நல்லது பண்றதுக்கு. உங்க தங்கச்சியோட சுயநலத்தால ரெண்டு குடும்பத்தோட நிம்மதி, சந்தோசம் ரெண்டுமே இல்லாம போச்சு. நா தெரியாமத்தான் கேக்கறேன் இன்னைக்கு வந்து மன்னிப்பு கேட்டா போன உயிர் தான் திரும்ப வருமா? இல்லை உங்க மகளோட சிதஞ்சிப்போன வாழ்க்கைதான் திரும்ப கிடைக்குமா மாமா? அத்தை இறந்ததுக்கு அப்பறம் நீங்க அனுபவிக்கற வலி அது தீர்ந்துடுமா மாமா? கிடையாதுதானே அப்பறம் இந்த மன்னிப்பு கேக்கற நாடகமெல்லாம் எதுக்கு மாமா?”  

அந்த வீட்டில் சிறிது நேரத்திற்கு முன்பிருந்த கலகலப்பு ராஜாவின் பேச்சால் அந்த இடமே அமைதியாகி விட்டது.

மனைவியின் அருகில் வந்த ராம் லலிதாவின் கையை அழுத்தி பிடித்தவாறே, “எங்க வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நீங்க ஆரும் காரணம் கிடையாது. நாங்க மட்டுமே காரணம். நாங்க வாழ்க்கைய வாழத் தெரியாம வாழ்ந்துட்டோம். தவறு முழுசும் எங்களோடது. தயவு செய்து அத பத்தி பேசி உங்களுக்குள்ள சண்டை வேணாமே…”

“மாமா சொல்றது சரிதான் மாமா. எங்களுக்கு அத்தை மேல எந்த கோபமும் இல்லை. நீங்களும் அத்தைய மன்னிச்சிடுங்க மாமா.” லலிதா சொன்னதும்,

“நீயும் உன்ற புருசனும் வேனா தியாகியா இருங்க, ஆனா என்னால அது முடியாது குட்டிமா. கத்தியால குத்திட்டு உசுரு போனதுக்கு அப்பறம் நா திருந்திட்டேன் என்ன மன்னிச்சிடுங்கனு சொல்றதுல எந்த பிரையோஜனமும் கிடையாது. அது உன்ர அத்தையா இருந்தாலும் சரி, நானா இருந்தாலும் சரி, செஞ்ச பாவத்துக்கான தண்டனைய கண்டிப்பா அனுபவிச்சித்தான் ஆகனும்.,”

ராஜாவின் மனைவி கணவனிடம் “எல்லாரும் இவ்வளவு தூரம் சொல்றாங்கல அத ஏன் நீங்க புரிஞ்சிக்க மாட்றிங்க மாமா?” கேட்டதும்,

“நா ஏன்டி புரிஞ்சிக்கனும்? முதல் உன்ற மாமியார இந்த மாதிரி நடிக்க வேண்டாம்னு சொல்லு., பாக்க பாக்க ஆத்திரமா வருது” மனைவிடம் எரிந்து விழுந்தார்.

ராஜாவின் பிடிவாதம் மற்றவர்களை அதிர்ந்துபோக வைத்துவிட்டது.

கணத்த சூழ்நிலையை மாற்ற நினைத்த ஷர்மி “லச்சுமா என்ன சாப்பாடு செஞ்சி வச்சிருக்க? சீக்கரம் போய் போட்டு வா பசிக்குது.,” என்றாள்.

மகேஷ், “இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு நீ என்னடான திங்கறதுக்கு பத்தி கேட்டுட்டு இருக்க?” கேட்டதும்,

ராஜாவின் மகன் சரண்னும் மகேஷ் உடன் சேர்ந்து ஷர்மியை கலாய்க்க ஆரம்பித்தான். “நம்ம ஷர்மிய பத்தி தெரிஞ்சும் கேக்கறிங்ளே மகிண்ணா., அவ ஒரு தீனி பண்டாரமாச்சே.”

“நீ சரியா சொன்ன தம்பி” என்றவாறே மகேஷ் சரண்க்கு ஹை பை குடுத்தான்.

“என்னடா அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்துட்டு என்ன கலாய்க்குறிங்ளாக்கும்?” ஷர்மி நக்கலாக கேட்டதும்,

சரண் ரகுவை பார்த்து “நீங்க ரொம்ப பாவம்ங்ண்ணா போயும் போயும் இந்த பிசாசுகிட்ட வந்து மாட்டிக்கிட்டிங்க” அவன் சொன்னதும்

“ஆருடா பிசாசு…” என்றவாறே இருவரையும் அடிக்கத் துரத்தினாள்.

“டேய் எருமை நில்லுங்கடா…” நீங்க மட்டும் ஏங்கைல சிக்குனிங்க அம்புட்டுதான்” கத்திக்கொண்டே வீடு முழுக்க அவர்களை தொரத்தினாள்.

அவர்களின் சண்டையை பார்த்து அனைவரின் முகத்திலும் புன்னகை வந்தது.

ஷர்மி நினைத்ததை போலவே அந்த இடம் சிறிது நேரத்திற்குள்ளாகவே பழையபடி கலகலப்பாக மாறிவிட்டது.

மறுநாள் மூன்று வீடும் சேர்ந்து கறி விருந்தை மண்டபத்தில் வைத்து விட்டனர்.

கெடா விருந்து அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சியை குடுத்தது. 

Advertisement