Advertisement

அத்தியாயம். 28

அன்றைய விடியல் ராமிற்கு அழகாக விடிந்தது. இரவு முழுவதும் தூங்காமல் தன்னவளின் மதிமுகத்தை பார்த்தவாறு விழித்துக்கிடந்தவர் விடியற்காலை நான்கு மணி ஆகவும் எழ நினைத்தார்.

கணவனை நெருங்கி படுத்தவாறு அவனின் கையை தலையணையாக்கி அதில் தலை வைத்து, மற்றொரு கையை அவனின் மார்பிலே போட்டுக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் லலிதா.

உறங்கிக்கொண்டிருந்தவளை மெல்ல தூக்கம் கலையாமல் தன் கரத்தில் இருந்த தலையை தூக்கி தலையனையில் வைத்துவிட்டு மார்பின் மேலிருந்த கையையும் எடுத்துவிட்டு எழுந்து அமர்ந்தவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை சில நொடிகள் இமைக்காமல் பார்த்துவிட்டு விலகியிருந்த சேலையை சரி பண்ணி போர்வைக்கொண்டு மூடிவிட்டு எழுந்து பாத்ரூமிற்கு சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு அவரின் காலை நேர பழக்கமான வயலுக்கு கிளம்பிச் சென்றார்.

அவரின் மனம் என்றுமில்லாம் இன்று முழு நிம்மதி அடைந்திருந்தது.

ராம் எழுந்து சென்ற சிறிது நேரத்திலே எழுந்து வந்த பொன்னுதாயி மருமகள் இன்னும் எழுந்து வராமல் இருக்கவும் மருமகளை எழுப்ப மனமில்லாமல் அவரே பால் கறக்க ஆள் வரவும் வீட்டிற்கு பொடக்காலியில் இருந்த தொழுவத்திற்கு சென்றார்.

 ஆள்காரன் பால் கறந்து முடித்ததும் வீட்டு செலவுக்கு பாலை வாங்கிக்கொண்டு மீதியை கேனில் ஊற்றி ஆள்காரனிடமே சொசைட்டிற்கு குடுத்துவிட்டு வீட்டிற்கு  வந்து தானே காலை சமையலை செய்ய ஆரம்பித்தார்.

அவர் சமையலை முடித்த பிறகும் கூட ஒருத்தரும் எழாமல் இருந்தனர். மருமகள் இவ்வளவு நேரம் தூங்குவது அவர்க்கே ஆச்சர்யம் தான்… அவரின் மனதில் சிறு ஆசையும் இருந்தது. மருமகள் நேற்று இரவு மகனுடன் சேர்ந்து தூங்கிருப்பாளோ என்று. அவரின் பார்வை முழுவதும் மூடியிருந்த மகனின் அறைக்கதவை தான் தொட்டு தொட்டு மீண்டது. மருமகள் தான் சொன்னதை கேட்டு மகனுடன் பேசி சேர்ந்திருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுதலும் வைத்துக் கொண்டிருந்தார். 

ரகுவும் ஷர்மியும், பொழுது விடிந்து ரொம்ப நேரம் ஆகியும் எழாமல் தூங்கிக்கொண்டிருந்தனர். ஷர்மியின் போன் அடிக்கவும் தான் ரகு கண் விழித்தான்.

ஆனால் அவனின் மனையாளோ போன் சத்தத்திற்கு துளியும் அசையாமல் டெடிபியரை கட்டிக்கொண்டு தூங்கும் பழக்கத்தில் இன்று பொம்மைக்கு பதிலாக கணவனின் மேல் கையையும், காலையையும் போட்டு அவனை கட்டிகொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

உறக்கம் தெளிந்தவன் தன்னை கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தவளின் முகத்தை மறைத்திருந்த அவளின் சிகையை தன் விரலால் விலக்கிவிட்டு தன்னவளின் தூங்கும் அழகை ரசித்தவன் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

அதற்குள்ளாகவே போன் திரும்ப அடிக்கவும் மனையாளின் தூக்கம் கலைக்காமல் படுத்திருந்த வாக்கிலே எட்டி மனைவியின் போனை எடுத்தவன் அதில் ‘லச்சு குட்டி’ காலிங் என வந்தது. 

அவனுக்கு அது யாரென தெரியாமல் இருக்கவும் போனை எடுக்காமல் விட்டுவிட்டான்.

 திரும்பவும் விடாமல் அதே நம்பரிலிருந்து போன் வரவும் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறுபக்கம் மாமியாரின் குரலை கேட்டதும் தான் ‘அத்தையதா லச்சுகுட்டினு சேவ் பண்ணி வச்சிருக்காளா?’ என நினைத்தவனுக்கு உதட்டில் புன்னகை விரிந்தது.

அங்கு லஷ்மியோ ‘மகள்தான் போன எடுத்திருக்கிறாள்’ என நினைத்து எப்போதும்போல திட்ட ஆரம்பித்து விட்டார். 

மாமியாரின் திட்டை கேட்டுக்கொண்டிருந்த ரகுவிற்கு சிரிப்புதான் வந்தது. போனை மனைவியின் காதில் வைத்தான்.

நல்லா தூங்கிக்கொண்டிருந்த ஷர்மி காதில் தாயின் குரல் கேக்கவும் கனவு என நினைத்துக்கொண்டு அரைதூக்கத்துடனே ‘இந்த லச்சு தொல்லை தாங்கல கனவுலக்கூட வந்து திட்டிட்டே இருக்கு. முருகேஷ்ட சொல்லி லச்சுவ டிவோர்ஸ் பண்ணிட்டு புது அம்மாவ கூட்டி வர சொல்லனும்’ என உளறினாள்.

அவளின் பதிலில் ரகுவிற்கு சிரிப்பு வந்ததென்றால், அவனின் மாமியார்க்கோ கோபம் தலைக்கேர “அடியேய் வந்தேன் சீவக்கட்டை பிஞ்சுபோயிடும்டி…” என மறுபக்கம் கத்தினார்.

அப்போதுதான் தூக்கம் தெளிந்தாள் ஷர்மி. காதில் போனை பார்த்ததும் கணவனை முறைத்தவள் “காத்தாலையே எதுக்கு லச்சும்மா திட்ர? உனக்கு வேற வேலையே இல்லையா?” சலிப்பாக கூறினாள்.

“ஆமாடி எனக்கு வேற வேலையே இல்லை பாரு.. பொழுது விடிஞ்சு எம்புட்டு நேரம் ஆகிடுச்சு அதுக்கூட தெரியாம பொட்டபுள்ளைக்கு அப்படி என்னடி தூக்கம் வேண்டிகிடக்குது…? உன்ற மாமியார் புள்ளை வளர்த்து வச்சிருக்க லட்சணத்த பாருனு என்னதான் டி திட்டுவா…”

“திட்டுனா வாங்கிக்கோ லச்சுமா… அதுக்கு நா என்ன பண்றது…”

“எகத்தாளம் மயிறு மேசாம ஒழுங்கா எந்திருச்சி தொலடி…”

“போ லச்சும்மா… எனக்கு தூக்கம் தூக்கமா வருது… உன்ற மாப்பிள்ளை ராத்திரிலாம்…” அவள் அடுத்து என்ன சொல்லிருப்பாளோ அதற்குள்ளாகவே ரகு பதறிப்போய் அவளின் வாயை மூடியவன் காதில் வைத்திருந்த போனை  எடுத்து அழைப்பை கட்பண்ணி விட்டதும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

அவனின் கையை எடுத்து விட்டவள் “உன்ற மாமியார்க்கிட்ட பேசிட்டு இருக்கும்போது ஏ மாமா வாய பொத்துன?., போச்சு லச்சு அதுக்கும் ஒரு மூச்சு திட்டும்…”

“ஏய்… குட்டிபிசாசு… அத்தைகிட்ட போய் நமக்குள்ள நடந்ததெல்லாம் சொல்லப்போற…” என்றான்.

“உன்ற மாமியார்கிட்ட இப்படி சொன்னாதான் நாளைக்கு போன் பண்ணி திட்டாது மாமா…”

“அதுக்கு என்ற மானத்த கப்பல் ஏத்துவியாடி…”

“போ மாமா உனக்கும் வேலை இல்லை உன்ற மாமியார்க்கும் வேலை இல்லை… நா குளிக்கபோறேன்… என்னோட ட்ரெஸ் கீழ இருக்கு போய் எடுத்து வந்துக்குடு…” என்றவள் கட்டிலை விட்டு இறங்கி சென்று கபோர்டில் இருந்து துண்டும், குளித்துவிட்டு கட்டிவர லுங்கியும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றாள்.

ரகுவோ தலையில் அடித்துக்கொண்டு “உன்னெல்லாம் திருத்தவே முடியாது டி…” என்றவாறே அவளுக்கு ட்ரெஸ் எடுக்க கீழே சென்றான்.

அங்கு லஷ்மியோ மகள் கடைசியாக சொன்னதை கேட்டு தலையில் அடித்துக்கொண்டு இந்துவிடம் “இவள எல்லாம் என்னதா பண்றதுனே தெரியலை இந்து… எத எத சொல்லனும்ங்ற வெவஸ்தையே இல்லாம சொல்றாளே…” என கூறினார்.

இந்துவுக்கும் கடைசியாக மகள் சொல்ல வந்தது புரிந்து தான் இருந்தது. அதில் அவருமே சிரித்து விட்டார்.

தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ராம் அம்மாவை பார்த்ததும்  “அம்மா டீ வைங்க” என்றவாறே சோபாவில் அமர்ந்தார்.

பொன்னுதாயின் மனதில் இருந்த ஆசையெல்லாம் மகனை பார்த்ததும் புஸ் என்று ஆகிவிட்டது.

“டேய் நீ எப்போ வயலுக்கு போன?” 

“எப்பவும் போல்தான் போனேன் ஏம்மா கேக்கறிங்க…”

“இனி என்னத்த கேக்க… அதான் எதுவும் நடக்கலையே… இனி கேட்டு என்னாகப்போகுது போடா…” தாயின் குரலில் தெரிந்த விரக்தியை உணர்ந்த ராம்,

“ஏம்மா… என்னமோ மாதிரி பேசறிங்க?”

“நா எப்படி பேசுனா உனக்கென்னடா… நானே நினச்சது நடக்கலைனு செம்ம கோபத்துல இருக்கேன்… எதாவது கேட்டினா சுடுதண்ணிய கொண்டுவந்து தலைல ஊத்திப்போடுவேன் பாத்துக்க…” மகனிடம் எரிந்து விழுந்தவர் “வரட்டும் அவளுக் இருக்கு நானும் பேத்தியும் ராத்திரி அம்புட்டுதூரம் சொல்லியும் அத செய்யாம எனக்கென்னனு தூங்கிட்டு இருக்கா…” பொலம்பிக்கொண்டே சென்றார்.

தாயின் கோபத்தை பார்த்து ஒன்றும் புரியாமல் ராம் முழித்தார்.

அப்போது கீழே வந்த ரகு தந்தையை பார்த்ததும் “குட்மார்னிங்ப்பா… அப்பா அப்பத்தா எங்க?” என்றான்.

“குட்மார்னிங் கண்ணா… அம்மா சமையல் கட்டுல இருக்காங்க…”

சமயலறை வந்தவன் பொன்னுதாயி டீ போடுவதை பார்த்து “அப்பத்தா… எங்களுக்கும் சேர்த்தே டீ போடு…” என்றான்.

“வா கண்ணு… பேத்தி முழிச்சிட்டாளா?”

“முழிச்சிட்டா அப்பத்தா… குளிச்சிட்டு இருக்கா… அவளோட ட்ரெஸ் எங்க இருக்கு?”

“உன்ற அம்மா அறையில்தான் கண்ணு இருக்கு… எடுத்துட்டு போய் குடுத்துட்டு நீயும் குளிச்சிட்டு வா இன்னைக்கு உங்கள மறுவீட்டு விருந்துக்கு அழைக்க உன்ற மாமியார் வூட்ல இருந்து வருவாங்க…”

“சரி அப்பத்தா…” என்றவன் தாயின் அறைக்குச் சென்று ஷர்மியோட துணி பேக்கை எடுத்துக்கொண்டு தனதறைக்கு சென்றவன் அதை கட்டிலில் வைத்துவிட்டு “ஷர்மி… ட்ரெஸ் பேக் கட்டில்ல வச்சிருக்கேன்., எடுத்துக்கோ… எனக்கு பேஸ்ட் ப்ரஸ் மட்டும் எடுத்துக்குடு நா அப்பா ரூம்ல போய் குளிச்சிட்டு வரேன்…” என்றான்.

அவள் எடுத்து குடுத்ததும் அதை வாங்கிக்கொண்டு துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு கீழே வந்தான்.

பொன்னுதாயி டி போட்டு கொண்டு வரவும் குளிக்க செல்லாமல் தந்தையின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

தந்தை மகன் இருவரும் டீ குடித்துக்கொண்டே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

ராம், “கண்ணா அக்காவுக்கு எத்தனை மணிக்கு ப்ளைட்?” கேட்டார்.

“12 மணிக்குப்பா…”

 

“சரி கண்ணா…நானும் அம்மாவும் ஏர்போர்ட் வரையிலும் போய் அக்காவ அனுப்பிட்டு வந்துடுலாம்னு இருக்கோம்…” என்றார்.

“நானும் உங்க மருமகளும் வரோம் ப்பா… நேத்து கல்யாண பிசில அத்தைக்கூட சரிய பேசவே முடியலை… இப்போ வந்தா கொஞ்ச நேரம் பேசலாம்ல…”

“அப்போ சரி கண்ணா… அரவிந்த் தம்பிக்கு போன் பண்ணி சொல்லிடு நாங்க நேரா திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்துடறோம்னு…”

“சரிப்பா…” என்றவன், அப்போது தான் தன் அம்மாவை அங்கு காணாமல் இருக்கவும் அப்பத்தாவிடம்  “அப்பத்தா எங்க அம்மாவ  காணாம்?” என்று கேட்டான்.

“உன்ற அம்மா இன்னும் எழுந்திருக்கல கண்ணு… தூங்கிட்டு இருக்கா…” என்றார் பொன்னுதாயி.

“அம்மாவுக்கு என்னாச்சு அப்பத்தா… தெனமும் வெள்ளனவே எழுந்துருவாங்களே…?” என்றவாறே தாயின் அறை நோக்கி எழுந்து செல்லப்போனவன் தந்தை சொன்னதை கேட்டு நம்ப முடியாமல் அங்கையே நின்று விட்டான்.

“கண்ணா உன்ற அம்மா என்ர ரூம்ல தூங்கறா…” என்ற வார்த்தை ரகுவை மட்டுமில்லாமல் பொன்னுதாயையும் ஆச்சர்யபட வைத்தது. 

கொஞ்ச நேரத்துக்கு முன் மகன், மருமகள் மேல் இருந்த கோபம் கூட இப்போது பனியாக உருகிவிட்டது. 

தன் வயதையும் மறந்து வேகமாக மகனின் அருகில் வந்தவர் “டேய் ராமு… நெசமாதான் சொல்றியாடா…?” பொய்யாய் இருந்து விடக்கூடாதே என்ற பயம் கலந்த பதட்டத்துடன் கேட்டார்.

அவரின் குரலில் இருந்த ஏக்கமும், விழிகளில் தேங்கியிருந்த நீரும் ராமை தடுமாற வைத்து விட்டது. வாயை திறக்க முடியவில்லை.

 

“சொல்லேன்டா… மருமகக்கூட பேசிட்டியா? ராத்திரி உன்றக்கூட தான் தூங்குனாளா…?”

தாயின் கேள்வியில் சங்கடமடைந்தார். மகனை வைத்துக்கொண்டு பதில் சொல்ல தடுமாறியவர் “ஆமாம்மா…” என்றதும் தான் தாமதம் பொன்னுதாயி அப்படியே மகனின் காலடியிலே தரையில் அமர்ந்து விட்டார். அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மகனின் ஒற்றை வார்த்தை பொன்னுதாயை திக்குமுக்காட வைத்துவிட்டது. அவரின் எத்தனை வருட வேண்டுதல் இன்று நிறை வேறிவிட்ட சந்தோசத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தது.

பொன்னுதாயி தடுமாற்றத்துடன் கீழே தரையில் அமர்ந்ததை பார்த்ததுமே மகனும், பேரனும் பதறி விட்டனர்.

“அம்மா… என்னாச்சு எழுந்திரிங்க…” தன் காலடியில் இருந்தவரை தூக்க முயன்றார்.

அதற்குள்ளாகவே ரகுவும் “அப்பத்தா…” என்றவாறே அவரின் அருகில் ஓடிவந்து தானும் ஒரு பக்க கையை பிடித்து தூக்கி சோபாவில் அமர வைத்துவிட்டு தண்ணீர் கொண்டு வர சமயலறை ஓடினான்.

அவன் வருவதற்க்குள்ளாகவே ராம் அம்மாவின் கண்ணீரை துடைத்துவிட்டவாறே “அம்மா என்னாச்சு உடம்புக்கு முடியலையா… வாங்க ஹாஸ்பிட்டல் போலாம்…” படபடவென பதட்டத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்.

ரகு தண்ணீரை கொண்டுவந்து தானே குடிக்க வைத்தவாறே “உங்களுக்கு ஒன்னுமில்லை அப்பத்தா… தண்ணிய குடிங்க ஹாஸ்பிட்டல் போயிடலாம்” என பிதற்றினான்.

கணவனின் அறையில் தூங்கிக்கொண்டிருந்த லலிதா வெளியே கேட்ட சத்தத்தில் முழித்தவள் என்னமோ ஏதோவென்று அடித்துபிடித்து எழுந்து வெளியே ஓடிந்தாள்.

 மாமியாரின் தோற்றத்தை பார்த்ததும் அவரின் அருகில் ஓடி வந்து “அத்தை என்னாச்சு…” பயந்துபோய் கேட்டாள்.

மருமகளை பார்த்ததும் புது தெம்பு பிறக்க “எனக்கு ஒன்னுமில்லை கண்ணுங்களா… நா நல்லாதா இருக்கேன்…” என்றவர் மருமகளின் கன்னத்தை வருடிகுடுத்தார். 

பொன்னுதாயின் பேச்சை கேட்டபிறகு தான் மூவருக்கும் நிம்மதியானது. ஆனால் அதன் பிறகு அவர் பேசியதை கேட்டதும் ராமும், லலிதாவும் செய்வதறியாது நின்றுவிட்டனர்.

மகனின் கரத்தையும், மருமகளின் கரத்தையும் சேர்த்து பிடித்து முத்தமிட்டவாறே “இந்த நாளுக்காகத்தான் இம்புட்டு நாளா காத்திருந்தேன். என்ற வேண்டுதல செல்லாண்டியம்மன் நிறைவேத்தி வச்சிட்டா பேராண்டி…” பேரனிடம் கூறினார்.

 அவரின் குரலில் அத்தனை மகிழ்ச்சி தெரிந்தது.

சோபாவில் இருந்து எழுந்தவர் தன் காலடியில் அமர்ந்திருந்த மருமகளை எழுப்பி மகனின் அருகில் அமரவைத்து இருவரையும் ஜோடியாக பார்த்தவர் “ஏங்கண்ணே பட்ருச்சு…” என்றவாறே வேக வேகமாக சமயலறை சென்று கையில் உப்பும், மிளகாயும் எடுத்து வந்து மகனுக்கும் மருமகளுக்கும் திர்ஷ்டி சுத்தபோனார்.

  

“அம்மா என்ன பண்றிங்க…”

“அத்தை…” அதில் கணவன் மனைவி இருவருமே பதறிப்போய் கேட்டனர்.

“ரெண்டுபேரும் பேசாம இருங்க…” இருவரையும் அதட்டிவிட்டு திர்ஷ்டி எடுத்தபிறகே விட்டார்.

ராம் தர்மசங்கடமாக அமர்ந்திருந்தார் என்றால் லலிதா குற்ற உணர்ச்சியில் தலையை குனிந்து அமர்ந்திருந்தாள்.

“நா போய் இந்த சந்தோசத்த தெருவுல உள்ள எல்லார்ட்டையும் சொல்லிட்டு வரனும். எத்தனை பேர் என்ற முன்னாடி என்ற மகனையும் மருமகளையும் பேசினாளுங்க… ஒருத்தியையும் இன்னைக்கு விடமாட்டேன்..” என சூளுறைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

மைக் செட் இல்லாமையே ஒளிபரப்ப சென்ற அப்பத்தாவை பார்த்து ரகுவிற்கு சிரிப்புத்தான் வந்தது. அவனுக்குமே சந்தோசத்தில் திக்குமுக்காடி தான் நின்றிருந்தான்.

லலிதாவிற்கு அங்கு அமர்ந்திருக்கவே ஒரு மாதிரி இருக்கவும் எழுந்து கணவனின் அறைக்கு சென்று விட்டாள்.

 

அம்மா சென்றதும் தந்தையில் அருகில் சென்றவன் அவரை கட்டிக்கொண்டு “நா ரொம்ப சந்தோசமா இருக்கேன்ப்பா…” என்றான்.

மகனின் அணைப்பில் சில நொடி இருந்தவர் அவனை விலக்கி விட்டு “கண்ணா அம்மாவ போய் கூட்டி வாடா… இல்லைனா தெருவுல ஒருத்தர் விடாம சொல்லிட்டு வந்துடும்… என்னால அப்பறம் ஆரு மூஞ்சிலையும் முழிக்க முடியாது…”

“இதுல தப்பென்னப்பா இருக்கு… அவங்க உங்க பொண்டாட்டிதானே… அப்பறமென்ன? எத்தனையோ பேர் பிரிஞ்சிப்போய் வயசான பிறகு சேர்ந்து ஒருத்தர்க்கு ஒருத்தர் ஆதரவா வாழ்ந்தவங்க இல்லையா என்ன? மத்தங்க என்ன நினைப்பாங்கனு நினைச்சா நாம சந்தோசமா வாழ முடியாதுப்பா. நாம நமக்காகத்தா வாழனும். இனியாவது அம்மாக்கூட சந்தோசமா வாழுங்கப்பா. எங்களுக்கு அதுதான் வேணும். போங்க போய் அம்மாக்கூட பேசுங்க. அவங்களுக்கு இதெல்லாம் ஒரு மாதிரி இருக்கும். நீங்கதான் அவங்கள பேசி சரிபண்ணனும்.”

மகன் கூறியதை கேட்டதும் தான் சிறிது தெளிந்தார்.

 ‘என்ற பொண்டாட்டிக்கூட நா வாழ்றதுக்கு எதுக்கு சங்கடப்படனும்’ அவரின் மனசாட்சி அவர்க்கே எடுத்துரைத்தது. 

மகனின் தோளில் தட்டிக்குடுத்தவர் “தேங்க்ஸ் டா கண்ணா…” என்று கூறிவிட்டு மனைவியிடம் சென்றார்.

தந்தை போவதை பார்த்தவனின் மனதில் அத்தனை ஆனந்தம் கூத்தாடியது. இந்த சந்தோசத்தை பகிர்ந்துக்கொள்ள மனைவியை தேடி தனது அறைக்கு சென்றான்.

உள்ளே வந்த ரகு அவளை பார்த்ததும் சந்தோசத்தில் அவளை இழுத்து அணைத்துக்கொண்டவன் “தேங்க்ஸ் டி குட்டிபிசாசு. நா இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன். இதெல்லாம் நீ என்ற வாழ்க்கைகுள்ள வந்ததுக்கப்பறம்தான் நடந்துருக்கு…” 

கணவன் திடிரென அணைத்ததில் ஒரு நொடி மிரண்டவள் பின் தெளிந்ததும் அவளும் கணவனின் சந்தோசம் எதுக்கென்று புரியாமல் “என்னனு சொன்னாதானே எனக்கும் தெரியும் மாமா?” என்றாள்.

சிறிது நேரம் கழித்து அவளை விலக்கி நிறுத்தியவன் காலையில் நடந்ததை அவளிடம் கூறினான்.

“நெசமாவா மாமா? சூப்பர்ல… இத உடனே லச்சுமாகிட்ட சொல்லனும் மாமா…” என்றவாறே போனை எடுத்து தன் அம்மாவிற்கு அழைத்துக் கூறினாள்.

மகள் கூறியதை கேட்ட லஷ்மியும் சந்தோசபட்டவாறே அந்த செய்தியை மொத்தக் குடும்பத்துக்கும் சொல்லிவிட்டார்.

சுந்தரமூர்த்தி குடும்பத்துக்கு அச்செய்தி அத்தனை மகிழ்ச்சியை தந்தது. 

இரவு இருந்த கவலை அத்தனையும் பனியாய் உருகி கரைந்து விட்டது.

Advertisement