Advertisement

ஆலம் சுற்றி முடித்தவுடன் இருவரும் உள்ளே வர “இரண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க” என்றார் வள்ளியம்மை.

அன்பு தன் அறைக்கு செல்ல மதி அங்கேயே நின்றாள். “மதி நீ அந்த ரூம்ல குளிச்சிட்டு இந்த புடவைய கட்டிட்டு வாம்மா” என மற்றொரு அறைக்கு மீனாட்சி அவளை அனுப்பி வைத்தார். இருவரும் குளித்து உடை மாற்றி வர “இரண்டு பேரும் விளக்கேத்திட்டு சாமி கும்பிடுங்க..”

மதி விளக்கேற்றி சாமி கும்பிட்ட பின் வள்ளியம்மையும் மீனாட்சியும் வெளியே செல்ல அவர்கள் பின்னே சென்ற மதியின் கையை பிடித்து நிறுத்தியவனை கேள்வியாய் நோக்க, அருகில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில்  வைத்தவன்  “இப்போ போ” என அவன் கூறியது காதில் விழாமல் அப்படியே நின்றாள் மதியழகி. மீண்டும் அவளின் தோளில் தட்டியவனை விழி விரித்து பார்க்க “அம்மா உன்னை கூப்பிட்றாங்க பாரு.. போ” என சொல்ல தலையாட்டி விட்டு சென்றாள்.

“மதி.. இந்தாம்மா காபி” என்று டம்பளரை நீட்டி விட்டு “காலைல என்னமா சமைக்கட்டும்?”

“அத்த.. இன்னைக்கு உங்களுக்கு ரெஸ்ட்.. நான் தான் சமைக்க போறேன்.. என்ன சமையல் செய்யணும்னு மட்டும் சொல்லுங்க”

“நீயே இன்னைக்கு தான் முதன்முதலா வீட்டுக்கு வந்திருக்க.. வந்தன்னைக்கே சமைக்கணுமா? கொஞ்ச நாள் போகட்டும்”

“அதெல்லாம் இல்ல.. நான் தான் இன்னைக்கு சமைக்க போறேன்” என்றாள் அன்புவின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக.

மீனாட்சி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தானே சமையலை ஆரம்பித்துவிட்டாள். காலை உணவிற்கு இட்லி, மட்டன் குழம்பு, இடியாப்பம், ஆட்டு கால் பாயா, கேசரி என அவளே பட்டியலிட்டு செய்ய ஆரம்பித்து விட்டாள். தன் அறையில் உட்கார்ந்து மடிக்கணினியில் வேலை பார்த்து கொண்டிருந்த அன்பு வெகு நேரம் மதியின் சத்தம் கேட்காததால் என்ன செய்கிறாள் என வரவேற்பறைக்கு வந்து பார்க்க அங்கேயும் அவள் இல்லை. மீண்டும் அடுப்பங்கரைக்கு சென்று பார்க்க அங்கே மீனாட்சி மதிய சமையலுக்கு தேவையானவற்றை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அன்புவை பார்த்தவுடன் “பசிக்குதா அன்பு? இதோ இப்போ முடிஞ்சிடும்.. மதி குழம்புக்கு மசாலா அரைச்சிட்டு இருக்கா.. ஒரு பத்து நிமிஷம்..” என்றவர் தன் சமையலை தொடர பின்கட்டில் அம்மி இருந்த இடத்திற்கு சென்றவன் அங்கே தன் புடவையை தூக்கி இடுப்பில் சொருகி நெற்றியில் வேர்வை துளிர்க்க அம்மியில் மசாலா அரைத்து கொண்டிருந்த மதியின் அழகில் மெய்மறந்து நின்றான். அதற்குள் மசாலாவை அரைத்து கிண்ணத்தில் எடுத்து கொண்டு அவன் நிற்பதை பொருட்படுத்தாது அவனை தாண்டி போக அவளின் கையை ஒரே எட்டில் பிடித்தவன் மதியின் இடுப்பில். சொருகி இருந்த புடவை முந்தானை எடுத்து அவளின் நெற்றியில் பூத்திருந்த வேர்வையை துடைத்தவன் “இப்போ போ” என்றான். அவனின் தொடுதலில் தன்னை மறந்து நின்றவள் “மதி.. கறி வெந்துடுச்சுமா.. மசாலா அரைச்சிட்டியா?” என்ற மீனாட்சியின் குரலுக்கு “ஆ.. இதோ வரேன் அத்த” என அவனிடம் இருந்து சிட்டாக பறந்தாள்.

சமையலை முடித்து விட்டு அனைவரும் சாப்பிட அமர “நீங்க உட்காருங்க அத்த.. நான் பரிமாறுறேன்”

“ஏத்தா மதி.. நம்ம வீட்டாளுக தானே இருக்கோம்.. நீயும் உட்காரு.. தேவையானதை அவங்களே எடுத்து போட்டுப்பாங்க” என்ற வள்ளியம்மையின் பேச்சை தட்ட முடியாமல் அவரின் பக்கத்தில் உட்கார “ஆத்தா அன்பு பக்கத்துல போய் சோடியா உட்காரு..” என்றவரின் பேச்சை மீற முடியாமல்  அவனின் பக்கத்தில் உட்கார்ந்தவள் சாப்பிட ஆரம்பிக்க “இன்னைக்கு எல்லாம் ரொம்ப ருசியா இருக்கு மீனாட்சி..”

“அத்த இன்னைக்கு சமையல் மதி தான் செஞ்சா.. அதுவும் சொல்ல சொல்ல கேட்காமல் அம்மில மசாலா அரைச்சு வச்சா.. அதுதான் ருசியா இருக்கு..”

“ஏத்தா மதி.. ஏன் இவ்வளவு கஷ்டப்படுற? பேசாம அந்த மிக்சில அரைச்சிருக்க வேண்டியது தானே?”

“எங்க வீட்ல அம்மில அரைச்சி பழக்கம் தான் ஆச்சி.. அதுவுமில்லாம அம்மில அரைச்சு வைக்கிற ருசியே தனி தான்..”

“ம்ம்.. மீனாட்சியும் இப்படி தான் முதல்ல அம்மில அரைச்சு வைப்பா.. இப்போ தான் அவளுக்கும் முடியல..அன்புவுக்கும் இப்படி அரைச்சு வச்சா தான் ரொம்ப பிடிக்கும்..” என்றவர் சாப்பிட்டு எழுந்துவிட அவரை தொடர்ந்து மீனாட்சியும் மதியும் சாப்பிட்டு எழுந்தனர். அன்பு மட்டும் சாப்பிட்டு கொண்டிருக்க மதி இயல்பாக அவனுக்கு பரிமாறி கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடித்தவன் கையை கழுவி கொண்டு வர மதி சாப்பாடு மேசையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அருகே யாரும் இல்லாததை உறுதி படுத்தி கொண்டு அவளின் இடுப்பில் சொருகி இருந்த முந்தானையை எடுத்து தன் கையை துடைத்தவனை முறைக்க உள்ளிருந்து வந்த மீனாட்சியின் குரலில் இருவரும் விலகினர்.

“முதல்ல இந்த புடவைய மாத்தணும்.. இவன் பாட்டுக்கு வரான்.. பொசுக்குன்னு இடுப்புல கைவெச்சு முந்தானைய எடுக்குறான்..ஏன் இவன் வீட்ல கை துடைக்க துண்டு இல்லையா?” என அன்புவை மனதில் வறுத்தெடுத்தவள் சுடிதாருக்கு மாறியிருந்தாள்.  மதிய உணவிற்கு மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல் செய்து முடித்தவள் வள்ளியம்மையை சாப்பிட அழைக்க “அன்பு வெளியே போயிருக்கான்.. அவன் வந்ததும் எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்..” என்றுவிட நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர அன்புவை காணாததால் “அத்த.. மணி மூணாக போகுது.. நீங்களும் ஆச்சியும் சாப்பிடுங்க..” என இருவருக்கும் பரிமாற மதியையும் மீனாட்சி உண்ண சொல்ல அவள் பிறகு சாப்பிடுவதாக சொல்லிவிட்டாள். இருவரும் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருக்க அன்பு வீடு வந்து சேர்ந்தான். “அன்பு.. நேரத்துக்கு வர கூடாதா? மணி என்ன ஆகுது?”

“அது.. போன இடத்துல வேலை முடிய கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு அப்பத்தா..”

“சரி.. சரி.. சாப்பிட வா..மீனாட்சி நான் கொஞ்ச நேரம் படுத்து எந்திருக்கிறேன் ..” என வள்ளியம்மை தன் அறைக்கு சென்று விட “அம்மா.. நீங்க எல்லாரும் சாப்பிட்டீங்களா? அப்பத்தா மாத்திரை போட்டுட்டாங்களா?”

“நாங்க ரெண்டு பேரு சாப்பிட்டாச்சு பா.. மதி தான் இன்னும் சாப்பிடலை..அம்மாடி மதி.. நீயும் அன்புவும் சாப்பிடுங்க.. காலைல சீக்கிரம் எழுந்தது ஒரு மாதிரி இருக்கு.. நானும் கொஞ்ச நேரம் படுக்குறேன்..” என மீனாட்சி இருவருக்கும் தனிமை கொடுத்து சென்றுவிட அன்பு கை, கால் கழுவி கொண்டு வந்து உட்கார்ந்தான். அவனுக்கு பரிமாறிவிட்டு மதி நிற்க “நீயும் சாப்பிடு மதி.. ரொம்ப லேட் ஆகிடுச்சு..” என்று அவளிற்கு ஒரு தட்டை வைத்து சாப்பாட்டை வைத்தான். எதுவும் பேசாமல் இருவரும் சாப்பிட்டு முடிக்க அன்பு கை கழுவி கொண்டு வெளியே வர, அடுத்து மதி கை கழுவ சென்றாள். அவள் பின்னாலயே சென்ற அன்பு அவளின் சுடிதார் துப்பாட்டாவில் கை துடைக்க “இனிமே நா இருக்கும் போது புடவை கட்டு. சுடிதார்ல ரொம்ப சின்ன பொண்ணா தெரியுற..” என்றவனை முறைத்துவிட்டு “ஏன் உங்க வீட்ல துண்டு இல்லையா?” என்றவளை பார்த்து சிரித்தவன் பதில் கூறாமல் தன் அறைக்கு சென்றான். அடுப்படியை சுத்தம் செய்து கொண்டிருந்தவளிடம் அன்பு  “என் ரூம்க்கு கொஞ்சம் வா மதி..” என்றுவிட்டு செல்ல “இவன் கூப்பிட்டா உடனே நாம போகணுமா?” என நினைத்தவள் வேலையை இழுத்து போட்டு கொண்டு செய்ய “மதி.. இன்னும் என்ன பண்ற? இந்த வேலையை அப்புறம் பார்த்துக்கலாம். இந்த சுக்கு காபியை பாட்டிக்கும், அன்புவுக்கும் கொடுத்துட்டு நீயும் குடிமா..” என்ற மீனாட்சி தனக்கும் ஒரு கோப்பையை எடுத்து கொண்டு சென்றார். வள்ளியம்மைக்கு கொடுத்துவிட்டு அன்புவின் அறைக்கு செல்ல அங்கே அவன் இல்லாது போக “அத்த.. அவரு ரூம்ல இல்ல..”

“பின்னாடி தோட்டத்துல இருப்பான் மா..அங்க பாரு..”

அவள் வந்ததில் இருந்து வீட்டுக்குளேயே இருக்க பின்னால் தோட்டம் இருப்பது அவளுக்கு தெரியாது. பின் வாசல் வழியாக சென்றவள் அங்கே நித்தியமல்லி பந்தலுக்கு அடியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த அன்புவை நோக்கி சென்றாள். “இந்தாங்க” என அன்புவிடம் கோப்பையை நீட்ட அதை வாங்கி கொண்டவன் “உட்கார் மதி..” என மற்றொரு நாற்காலியை காட்ட வெயிலுக்கு அந்த இடம் இதமாக கூடவே பூவின் மனமும் சேர்ந்து வர மதி மறுப்பேதும் கூறாமல் அமர்ந்து தன் கோப்பையில் உள்ள சுக்கு காப்பியை குடிக்க ஆரம்பித்தாள். அவள் குடிக்கும் வரை பொறுமையாய் இருந்தவன் பின் தான் வைத்திருந்த கவரில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை வாங்காமல் அவனை பார்த்தவள் “வாங்கி திறந்து பாரு” என்று அவள் கையில் திணிக்க அதை திறந்து பார்த்தாள். உள்ளே அழகிய பிரேஸ்லெட் இரண்டு இதயம் இணைந்தது போல் இருந்தது. “ரொம்ப அழகா இருக்கு இந்த டிசைன்”

“உனக்கு தான் வாங்கினேன்.. பிடிச்சிருக்கா?”

பெட்டியை மூடி அன்புவின் கையில் வைத்தவள் “இதை போட்டுக்க

எனக்கு உரிமையில்லை” என்றுவிட்டு அவனிடம் இருந்த கோப்பையை வாங்கி கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.

அன்பு தொடரும்…

Advertisement