Advertisement

சாந்தியிடம் இருந்து மீனாட்சிக்கு அழைப்பு வர “அத்தாச்சி நல்லா இருங்கீங்களா? பெரியம்மா, தம்பி எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்கோம் சாந்தி.. அத்த எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்க.. மாமா இறந்து இன்னும் ஒரு வருஷம் முடியல.. அதுனால இந்த வருஷம் தீபாவளி கொண்டாட முடியாது..”

“ம்ம்.. நேத்து தான் நானும் அத்தையும் இதை பத்தி பேசிட்டு இருந்தோம்..”

“நீங்களே என்ன செய்யலாம்னு சொல்லுங்க?”

“எங்க வீட்டுலயே அவங்களுக்கு தலை தீபாவளி கொண்டாடிலாம்.. மதியும் இங்க தான இருக்கா..”

“சரி அத்தாச்சி.. நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்..” என கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க மீனாட்சி, சாந்தியுடன் பேசியதை வள்ளியம்மையிடம் பகிர்ந்தார்.

“மதி.. நீ எப்போ ஊருக்கு கிளம்புற?”

“எங்க தாத்தா இறந்து இன்னும் ஒரு வருஷம் முடியல.. அதனால இந்த வருஷம் எங்க வீட்ல தீபாவளி கொண்டாட மாட்டோம்.. நானும் ஊருக்கு போகல..நீங்க ரெண்டு பேரும் எப்போ கிளம்புறீங்க?”

“நான் வெள்ளிக்கிழமை கிளம்புறேன்..தீபாவளி முடிச்சிட்டு செவ்வாய் கிழமை வந்திடுவேன்.. உன்னோட பிளான் என்ன நித்யா ?” என கேட்க ஆதி “திங்கள் கிழமை தானே தீபாவளி.. நான் ஞாயிற்றுக்கிழமை கிளம்புறேன்.. செவ்வாய் கிழமை வந்திடுவேன்..”

அன்று துணி கடையில் அன்புவை கடைசியாக பார்த்தது.. அதன் பின் அவனை பார்க்கவும் முடியவில்லை.. மாதிரி தேர்வு நடந்து கொண்டிருப்பதால் நித்யாவும் ஆதிராவும் படிப்பதில் கவனம் செலுத்த மதிக்கு அன்புவை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

வெள்ளிக்கிழமை மாதிரி தேர்வை முடித்துவிட்டு ஆதிரா தன் சொந்த ஊருக்கு பயணப்பட, நித்யாவிற்கு சனிக்கிழமையும் தேர்வு இருந்ததால் அதை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கிளம்பினாள். தீபாவளிக்காக மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல விடுதி காலியாக இருந்தது. சொற்ப மாணவர்களே இருக்க மதிக்கும் தன் தோழிகள் இல்லாததால் நேரம் மெதுவாக சென்று கொண்டிருந்தது. நித்யா கிளம்பியவுடன் நேரத்தை கடத்த சாந்திக்கு அழைத்தவள் சிறிது நேரம் பேசிவிட்டு வைக்க அடுத்து மீனாட்சியிடம் இருந்து அழைப்பு வந்தது. “மதிம்மா நல்லா இருக்கியா டா? தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னயே கூப்பிடலாம்னு நினைச்சேன்.. பரீட்சை இருந்ததுன்னு அன்பு சொன்னான். பரீட்சை முடிஞ்சதா உனக்கு?”

“ம்ம்.. நேத்து தான் முடிஞ்சது அத்த..”

“ஓ.. சரி மா.. அப்போ நம்ம வீட்டுக்கு கிளம்பி வா.. உங்க அம்மா எதுவும் சொன்னாங்களா?

“ஒன்னும் சொல்லல அத்த..”

“மறந்துருப்பாங்க போல.. நீ கிளம்பி வாம்மா..” என்றவரிடம் “அத்த.. வெளியே போகணும்னா முதல்லயே வார்டன் கிட்ட அனுமதி வாங்கணும்..இப்போ அவங்க இல்ல..” என அங்கே போவதை தவிர்ப்பதற்காக வாயில் வந்ததை சொல்ல மீனாட்சியும் செய்வதறியாது இருந்தார். மதியிடம் பேசிவிட்டு வள்ளியம்மையிடம் விஷயத்தை கூற அதை கேட்டு கொண்டிருந்த அன்பழகன் தன்னை பார்ப்பதை தவிர்க்கவே அவள் அப்படி சொல்லியிருக்கிறாள் என புரிந்து அன்பழகனும் அமைதியாக இருந்தான்.

“தல தீபாவளி முறையா பொண்ணு வீட்ல தான் கொண்டாடணும்..பரசிவம் அண்ணே இறந்து ஒரு வருஷம் ஆகமா இவங்களை அங்கே அனுப்ப முடியாது.. சரி நம்ம வீட்ல கொண்டாடலாம்னு பார்த்த அதுவும் முடியாது போல.. வயசான காலத்துல எம் பேரனுக்கு கல்யாணத்தை பண்ணி அவன் பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்கறதை பார்க்க முடியலையே..” என வள்ளியம்மை புலம்பிவிட்டு தனது அறைக்குள் முடங்கி கொள்ள மீனாட்சியின் முகமும் களையிழந்து இருந்தது.

பட்டாசு சத்தத்தில் தூக்கம் கலைந்த அன்பு மணியை பார்க்க அதிகாலை நான்கு என காட்டியது. தூக்கம் வராமல் சிறிது நேரம் புரண்டவன் தன் அறையில் இருந்து வெளியே வந்து பார்க்க இன்னும் மீனாட்சியும் வள்ளியமையும் தூக்கத்தில் இருந்தனர். சத்தம் எழுப்பாமல் தன் வண்டி சாவியை எடுத்து கொண்டு வெளியில் வந்தவன் தன் கைபேசியில் இருந்து மதியழகிக்கு அழைத்தான். நல்ல உறக்கத்தில் இருந்தவளுக்கு கைபேசியின் சத்தம் கேட்கவில்லை. இரண்டு முறை அடித்து முடித்து மூன்றாம் முறை அடிக்க “அம்மா.. ப்ளீஸ்மா.. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறேன்.. சீக்கிரம் எழுந்து என்ன பண்ண போறேன்” என்றவள் கைபேசியை அணைத்துவிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர “யாரு கூப்பிடறாங்கனு கூட பார்க்காம அவ பாட்டுக்கு பேசிட்டு போனை வச்சிட்டா..சரி மறுபடியும் கூப்பிட்டு பார்க்கலாம்..” என மீண்டும் மதிக்கு அழைக்க “மா.. இப்போ தானே சொன்னேன்..”

“மதி.. நான் அன்பு..”

தூக்கத்தில் இருந்தவள் அவன் பெயரை கேட்டதும் அடித்து பிடித்து எழுந்து தன் கைபேசியை பார்க்க அதற்குள் அவன் பலமுறை “ஹலோ” சொல்லிருந்தான்.

“ஹான்.. கேட்குது..சொல்லுங்க..”

“இன்னும் அரை மணிநேரத்துல உங்க ஹாஸ்டல் முன்னாடி இருப்பேன்.. உனக்கு தேவையானதை எடுத்துட்டு வெளியே நில்லு” என சொல்லிவிட்டு அவன் இணைப்பை துண்டிக்க “இல்ல.. இப்போ வரமுடியாது” என மீனாட்சியிடம் சொன்ன அதே காரணத்தை மீண்டும் அன்புவிடமும் சொல்ல “அதெல்லாம் வார்டன் கிட்ட சொல்லியாச்சு.. நீ கிளம்பி இரு..” என்றவன் அலைபேசியை வைத்து விட்டான்.

“இவன் என்னை என்ன நினைச்சிட்டு இருக்கான்.. எப்போ பாரு ஆர்டர்  போட்டுட்டே இருக்கான்.. இவன் சொன்னா நான் கேட்கணுமா?” என நினைத்தவள் கிளம்பாமல் இருக்க அன்பு அரை மணிநேரத்தில் மதியின் விடுதியின் முன் நின்றான். அவளை காணாமல் மீண்டும் அவளின் கைபேசிக்கு அழைக்க “சொல்லுங்க..”

“எங்க இருக்க நீ? உன்னை வெளியே தானே நிக்க சொன்னேன்?”

“நீங்க கூப்பிட்டா நான் உடனே உங்க பின்னாடி வந்திடனுமா?”

“மதி.. இது நமக்கு தல தீபாவளி.. இன்னைக்கு சண்டை வேண்டாம்..”

“ஓ.. இப்போ தான் உங்களுக்கு நான் ஒருத்தி இருக்கிறதே கண்ணுக்கு தெரியுதா?”

“இப்போ என்னடி உன் பிரச்சனை?”

“என்னால வர முடியாது…”

“சரி.. அப்போ நான் உள்ளே வரேன்..”

“என்னது??”

“காதுல சரியா விழலையா? உன்னோட ரூம் நம்பர் 103 தானே? இப்போ நீ வெளியே வரலைனா இன்னும் பத்து நிமிஷத்துல உன்னோட ரூம்ல இருப்பேன்..”

“என்ன பயம் காட்டுறீங்களா? லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள ஒரு ப்ரொபெஸர் வந்தா என்னாகும்னு தெரியுமா? எனக்கு ஒன்னும் இல்ல.. உங்க பேரு தான் கேட்டு போகும்..”

“என் பொண்டாட்டிய பார்க்க வந்தேன்னு சொல்லுவேன்..வரமாட்டேன்னு மட்டும் நினைக்காத..” என இருவரும் வழக்கடித்து கொண்டிருக்கும் போதே மதியின் அறை கதவு தட்டப்பட “மதி.. இன்னும் என்ன பண்ற? அங்கே உன் ஹஸ்பண்ட் கீழே வெயிட் பண்றார்.. இதுவரை நாலு தடவை கால் பண்ணிட்டார்..” என வார்டன் கூற “அது..அது.. தூங்கிட்டேன் மேம்.. இதோ இப்போ கிளம்புறேன்..” அவரிடம் கூறிவிட்டு கைபேசி இணைப்பில் இருந்த அன்புவிடம் “என்ன தான் வேணும் உங்களுக்கு?”

“சீக்கிரம் கிளம்பி வெளியே வா..” என்றுவிட்டு இணைப்பை துண்டித்தான்..

அடுத்த அரை மணி நேரத்தில் ஹாஸ்டல் வெளியே வந்தவள் அன்புவை தேட அவளின் முன் தன் வண்டியில் வந்தவன் “ஏறு” என்றுவிட்டு அவள் ஏறுவதற்காக காத்திருந்தான். மதி ஏறாமல் அவனை முறைத்து கொண்டிருக்க “இன்னும் என்ன? சீக்கிரம் ஏறு..”

“என்னால வண்டியில வர முடியாது..”

“ஏன்?”

“காரணம்லா உங்களுக்கு சொல்ல முடியாது.. என்னால உங்க கூட வர முடியாது..”

“ரொம்ப படுத்துறடி நீ.. இப்போ ஆட்டோ கிடைக்காது.. ஒழுங்கா ஏறு..”

மதி காதில் வாங்காமல் நிற்க அன்பு தன் வண்டியை உறுமினான்.

“ஐயோ.. ஏன் இப்படி பண்றீங்க? முதல்ல வண்டியை ஆப் பண்ணுங்க..”

“நீ ஏறுற வரைக்கும் இப்படி தான் பண்ணுவேன்.. ” என்றவன் மீண்டும் வடியை உறுமவிட விடுதி காவலாளி “யாருப்பா அது.. இந்த நேரத்துல வண்டியை புறுபுறுன்னு சத்தம் போடுறது?” என கிட்டே வர அதற்குள் மதி வண்டியில் ஏறி இருந்தாள். தன் பையை இருவருக்கும் இடையில் வைத்தவள் வண்டியின் கம்பியை பிடித்து கொள்ள “இதெல்லாம் விவரம் தான்..” என முணுமுணுத்துவிட்டு வண்டியை கிளப்பினான்.

“ஒரு ப்ரொபெஸர் மாதிரியா நீங்க நடந்துக்கிறீங்க?” என மதி திட்ட அதை காதில் வாங்காமல் காற்றில் பறக்கவிட்டவன் தன் வண்டியையும் பறக்கவிட “கொஞ்சம் மெதுவா தான் போங்களேன்” என்றதை காதில் வாங்கி கொள்ளாமல் இன்னும் வேகத்தை கூட்ட “இப்போ நீங்க மெதுவா போகலைனா வண்டியில இருந்து குதிச்சிருவேன்..” என அவள் வண்டியை ஆட்ட “அடியே!! ராட்சசி.. ஒழுங்கா உட்காரு.. இப்படி ஆட்டுனா ரெண்டு பேரும் மேல போக வேண்டியது தான்..” என அதன் பின் மிதமான வேகத்தில் செல்ல வீடு வந்தடைய ஆறு மணியாகியது.

அன்புவை காணாமல் தேடி கொண்டிருந்த மீனாட்சி அவனின் வண்டி சத்தத்தை கேட்டு வெளியில் வர மதி வண்டியில் இருந்து இறங்கினாள்.

மீனாட்சிக்கு மதி வந்ததை நம்ப முடியவில்லை. “என்னடா இப்படி சொல்லாம கொள்ளாம கூட்டிட்டு வந்திருக்கே?”

“அப்போ திருப்பி கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்திடட்டுமா?”

“அடேய்!! நீ செஞ்சாலும் செய்வ.. நீ உள்ள வாம்மா..”

“இரண்டு பேரும் அங்கேயே நில்லுங்க..” என்ற குரலில் மதி அப்படியே நிற்க “ஏன் மீனாட்சி.. கல்யாணம் முடிச்சி முதல் தடவை மதி இப்போ தான் நம்ம வீட்டுக்கு வருது.. இரண்டு பேரையும் நிக்க வச்சு முதல்ல ஆரத்தி எடு..”

“ஆமா அத்த.. மதிய பார்த்த சந்தோஷத்துல மறந்துட்டேன்..” என அவர் உள்ளே சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வர இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆழம் சுற்றினார்.

அன்பு தொடரும்…

Advertisement