Advertisement

அடுத்த நாள் நித்யா, மதியை சீனியர்ஸ் பில்டிங்கிற்கு அழைக்க அவள் வரமுடியாது என தன் வகுப்பிற்கு சென்றுவிட்டாள். முதல் வகுப்பு தொடங்கி சிறிது நேரம் கழித்து வந்த நித்யா எதுவும் சொல்லாமல் வகுப்பை கவனிக்க ஆரம்பித்தாள். மதியம் வரை பொறுத்திருந்து மதி “என்ன பார்த்தாச்சா இன்னைக்கு?”
“என்ன பார்க்கணும்?”
“அதுதான் சீனியர்ஸ் பில்டிங் போனீயே.. அதை தான் கேட்குறேன்..”
“ஓ அதுவா.. ம்ம்.. பார்த்தாச்சு.. சும்மா சொல்லக்கூடாது.. ஆள் எவ்ளோ ஸ்மார்ட் தெரியுமா? நீ தான் வர மாட்டேன்னு சொல்லிட்ட.. இவ்ளோ நாள் இப்படி ஒரு சார் இருக்காருன்னு எப்படி தெரியாம போச்சு? இனிமே தினமும் நேரம் கிடைக்குறப்போ அவரை போய் பார்த்துட்டு வந்துடனும்.. அச்சோ.. அவர் பெயர் என்னனு சுஜா அக்காகிட்ட கேட்க மறந்துட்டேனே” என நித்யா கவலைப்பட அடுத்த வகுப்பு தொடங்கும் வரை அன்புவின் புகழை பேசிக்கொண்டிருந்தாள்.
மாலை விடுதி சென்றதும் நித்யா தங்கள் அறை தோழியான ஆதிராவிடமும் அன்புவின் புகழை ஆரம்பிக்க “மறுபடியும் முதல்ல இருந்தா? நம்மால முடியாதுடா சாமி” என அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் மதியழகி. அடுத்து வந்த இரண்டு மாதமும் மதியழகி கேட்காமலே அன்பழகனை பற்றி நித்யாவும், ஆதிராவும் கூற ஆரம்பிக்க மதிக்கும் அன்புவை காணும் ஆசை அதிகமாகியது. “நித்யா, இன்னைக்கு அன்பு சாரோட ஷர்ட் கலர் சூப்பர்ல..” என்றாள் ஆதிரா. மற்றொரு நாள் “மதி, இன்னைக்கு அன்பு சார் லீவ்..” என மற்ற இருவரும் கூற இப்படியாக அன்புவை பற்றி ஏதேனும் ஒரு செய்தி மதிக்கு தினமும் வந்தது.
“நித்யா, சனிக்கிழமை திநகர் போகலாமா? தீபாவளிக்கு இங்கேயே டிரஸ் எடுக்க போறேன்..”
“ம்ம்.. சரி ஆதி.. நானும் டிரஸ் எடுக்கணும்.. மதி நீயும் வா. சென்னை வந்ததுலேருந்து எங்கேயும் போகல.. இந்த தடவை எங்ககூட நீயும் வர..” என கூற மதியழகியும் சம்மதித்தாள்.
சனிக்கிழமை காலை பத்து மணி போல் கிளம்பி மூவரும் ஒவ்வொரு கடையாக அலசி கொண்டிருந்தனர். சுமார் நான்கு மணி போல் துணி எடுத்தபின் தன் அன்னைக்கு புடவை எடுக்க வேண்டும் என ஆதிரா கூற மூவரும் புகழ்பெற்ற துணி கடைக்கு சென்றனர். அங்கே பட்டுப்புடவை பார்த்து கொண்டிருக்க “மதி.. நீ என்ன பண்ற இங்க?” என்ற குரலில் மூவரும் திரும்ப “நா பிரண்ட்ஸ் கூட வந்தேன் அத்த..நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்ல இருக்கேன் மா..”. பின் மதி தன் தோழியரை அறிமுகப்படுத்த “பாட்டி வரலையா? நீங்க மட்டும் வந்திருக்கீங்க?”
“இல்ல மதி.. அவங்களுக்கு கால் வலி.. அதனால நான் மட்டும் தான் வந்தேன்” என்றவர் “நீங்க புடவை எடுத்திட்டீங்களா?” என்றார் மற்ற இருவரை பார்த்து.
“ஆன்ட்டி.. காலைல இருந்து இது வரைக்கும் மூணு சுடிதார் தான் எடுத்தோம்.. இப்போ புடவை எடுக்க ஒரு ரெண்டு மணி நேரமாவது ஆகும்..”
“ஓ..அப்போ தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்க புடவை செலக்ட் பண்ற வரைக்கும் மதிக்கிட்ட நான் பேசிட்டு இருக்கட்டுமா?”
“ஐயோ ஆன்ட்டி.. நீங்க எவ்ளோ நேரம் வேணும்னாலும் பேசிட்டு இருங்க..”
“அதுக்கில்லமா.. நீங்க பிரண்ட்ஸா என்ஜாய் பண்ணலாம்னு வந்திருப்பிங்க.. நான் உங்களை தொந்தரவு பண்ண கூடாதுல..”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆன்ட்டி.. நீங்க மதிய கூட்டிட்டு போங்க..” என இருவரும் கூற மதியும், மீனாட்சியும் மற்றொரு தளத்திற்கு சென்றனர்.
“மதி உனக்கு ஒன்னும் கஷ்டமில்லேயேமா?”
“அய்யோ அத்த.. அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என இருவரும் பேசி கொண்டே வர “அம்மா எங்க இருக்கீங்க?” என அன்புவிடம் இருந்து அழைப்பு வர ” நான் செகண்ட் ப்ளோர்ல இருக்கேன்..” என்றுவிட்டு மதியுடன் வள்ளியம்மைக்கு புடவை பார்க்க சென்றார்.
இரண்டாம் தளத்திற்கு வந்த அன்பு மீனாட்சியை தேடி செல்ல அங்கே மதியழகி மீனாட்சியுடன் சிரித்து பேசி கொண்டிருந்தாள். மதியை சற்றும் எதிர்பார்க்காத அன்பு அப்படியே நின்று விட “அன்பு.. இங்க இருக்கேன்..” என மீனாட்சி குரல் கொடுத்தார். மதியும் அன்புவை எதிர்பார்க்காததால் அவளும் அப்படியே நின்றுவிட “ஏம்மா கொஞ்சம் தள்ளு” என்று பக்கத்தில் இருந்த பெண்ணின் குரலில் சுயத்திற்கு வந்தாள்.
“கீழே தானே இருந்தீங்க? நா உங்களை அங்க தேடிட்டு இருந்தேன்..”
“ஆச்சி காட்டுற புடவை இங்க தான் இருக்குனு சொன்னாங்கப்பா.. மதியும் அவங்க பிரெண்ட்ஸ் கூட வந்திருந்தா.. அவ கூட பேசிட்டே அப்படியே இங்க வந்துட்டோம்..”
“சரி புடவை எடுத்தாச்சா?”
“ம்ம்.. முடிஞ்சுதுப்பா..”
“சரி நா பில் கட்டிட்டு வந்திடுறேன்..”
“இரு இரு.. மதிக்கும் புடவை எடுத்துட்டு மொத்தமா பில் போட்டுடலாம்..”
“நீங்க போய் எடுத்திட்டு வாங்க.. நான் இங்கேயே இருக்கேன்..”
“காலைல இருந்து அலைஞ்சது ஒரே கால் வலிப்பா.. நீயும் மதியும் போய் எடுத்துட்டு வந்துடுங்க.. மேல அஞ்சாது மாடில இருக்கு..” என அவர் கூறி ஓராமாக இருந்த நாற்காலியில் அமர்ந்துவிட “அத்த.. எனக்கு எதுக்கு புடவை? ஏற்கனவே நிறைய இருக்கு..”
“எனக்காக ஒரு புடவை எடுத்துக்கோ மதி.. நீ எடுக்கலைனா ஆச்சி என்னை தான் திட்டுவாங்க..”
“சரி மா.. நாங்க போய் எடுத்துட்டு வரோம்..” என அன்பு பொதுவாக கூறிவிட்டு நடக்க மதியும் அவன் பின் நடந்தாள்.
ஐந்தாம் தளம் என்பதால் அன்பு நேராக மின்தூக்கியில் செல்ல பண்டிகை நேரம் கூட்டம் அதிகமாக இருந்தது. மின்தூக்கிக்காக காத்திருந்த அனைவரும் நெருக்கி கொண்டு மின் தூக்கியில் ஏற மதி வேறு வழியில்லாமல் அன்புவுடன் உரசியபடி நின்றாள். அவளுக்கு பின்னால் இளைஞர் பட்டாளம் இருக்க அன்பு மதியை தன்னுடன் அணைவாக அவளின் தோளை சுற்றி பிடித்து கொண்டான். மதி அவஸ்தையில் நெளிய சற்று நேரத்தில் ஐந்தாம் தளத்தில் நின்றதும் வேகமாக வெளியில் வந்தாள். அன்பு அவளை கடந்து நடக்க மதி அவனை தொடர்ந்தாள். குறைவான கூட்டம் உள்ள இடத்தில் அன்பு நிற்க “வாங்க சார்.. என்ன மாதிரி புடவை பாக்குறீங்க?”
“புதுசா வந்திருக்க டிசைன்ஸ் காட்டுங்க..உனக்கு எது பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ..” மதியிடம் சொல்ல “அப்பாடா.. இப்போ தான் நான் கண்ணனுக்கு தெரிஞ்சேன் போல..” என நினைத்து கொண்டு விற்பனையாளர் எடுத்து போட்ட புடவையை பார்த்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு புடவையாக பார்த்து கொண்டு வந்தவள் ஒரு மாம்பழ கலர் புடவையை எடுத்து தன் மேல் வைத்து பார்க்க அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. பின் அதன் விலை “பத்தாயிரம்” என இருக்க அதை வேண்டாம் என வைத்து விட்டாள். அவளுக்கே தெரியாமல் அவளை ரசித்து கொண்டிருந்த அன்பு அவள் என்னதான் செய்கிறாள் என பார்க்க “இந்த புடவை எடுத்துகிறேன்” என்றாள் மதி ஒரு புடவையை காட்டி.
“கொடு” என அவளிடம் இருந்து புடவையை வாங்கிய அன்பு அதன் விலையை பார்க்க “இரண்டாயிரம்” என்றிருந்தது.
“இந்த புடவைய பில் போட்டுடுங்க” என அவள் ஏற்கனவே பார்த்த மாம்பழ வண்ண புடவையை விற்பனை பெண்ணிடம் கொடுக்க “இல்லல அது வேண்டாம்.. இதுவே போடுங்க” என மதி கூற விற்பனை பெண் இருவரையும் பார்க்க “உன் புருஷன் ஒன்னும் இந்த புடவையை கூட வாங்கி கொடுக்க முடியாத பிச்சைகாரன் இல்ல.. என்னை அசிங்கப்படுத்தாம ஒழுங்கா இந்த புடவையை வாங்கிக்கோ” என அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறிவிட்டு “சாரிங்க.. நீங்க இந்த புடவையே பில் போட்ருங்க” என அவன் தேர்ந்தெடுத்த புடவையை கொடுத்துவிட்டு மதியை முறைத்தான். அவள் பதில் கூறுவதற்குள் நித்யா அவளின் கைபேசிக்கு அழைக்க “இன்னும் ஒரு அரை மணியை நேரத்துல வந்திடுறேன்” என கூறிவிட்டு அன்புவை பார்க்க அப்போதும் அவன் இறுக்கமாகவே இருந்தான்.
பில் போட்டவுடன் இருவரும் மீனாட்சி இருக்கும் தளத்திற்கு வர “அன்பு நேரமாகிடுச்சு.. எல்லாரும் சாப்பிட்டுட்டு போகலாம்”
“இல்ல அத்த.. நா ஹாஸ்டல்ல போய் சாப்பிட்டுக்குறேன்.. பிரண்ட்ஸ் கீழே வெயிட் பன்றாங்க.. நான் கிளம்புறேன்..” என அவரிடம் கூறிவிட்டு அன்புவை பார்ப்பதை தவிர்த்தவள் விடுவிடுவென நடந்தாள். அவளின் முகமாறுதலை கவனித்த மீனாட்சி “என்னடா சொன்ன மதியழகியை? அவ முகமே சரியில்ல?”
“அம்மா கிளம்பலாமா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..” என அந்த பேச்சை தவிர்த்தவன் மீனாட்சியை கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
அன்பு தொடரும்…

Advertisement