Advertisement

அத்தியாயம் 6
“அதற்கிடையில் எங்கே சென்றார்கள்” என்று சுற்றும் முற்றும் தேடிப் பார்த்த ப்ரியா போலீஸ் இல் தகவல் கொடுக்கலாமா! என்று யோசிக்க வெளியே தேவ் காரை பூட்டிக் கொண்டு இருப்பது தெரிந்தது. பல்லைக் கடித்து கோவத்தை அடக்கியவள். அவ்விடம் செல்ல அவனோ இன்னுமொரு வழியாக காபி ஷாப்பினுள் நுழைந்தான்.
அவனை பின் தொடர்ந்து வந்த ப்ரியா பெண்கள் கழிவறை முன் நின்றபடி அவன் குரல் கொடுப்பதை பார்த்து அவனை திட்ட அருகில் செல்ல அவனோ பதட்டமாக கையில் இருந்த பையை கொடுத்தவன் “உள்ள…. ‘அம்மு’ கொஞ்சம் பாக்குறீங்களா ப்ளீஸ்” அவள் யோசிக்கும் முன் அவளை தள்ளிவிடாத குறையாய் கதவை திறந்து உள்ளே அனுப்பி கதவை சாத்தி இருந்தான்.
“என்ன இவன் எதுக்கு என்ன உள்ளே தள்ளினான்? அந்த பொண்ணு எங்க? இந்த பைலை என்ன? இருக்கு?” பைக்குள் இருந்தது என்னவென்று பார்க்க நன்றாக பத்திரிகையால் சுற்றி அப்படி என்ன வைத்திருக்கின்றான் என்று அதை கிழித்தால் உள்ளே செனடரி நாப்கின் இருந்தது.
என்ன நடந்திருக்கும் என்று நொடியில் புரிந்து கொண்டவளின் உதடுகள் மலர்ந்தன. அம்மு என்றல்லவா அழைத்தான். மீரா தேவ்வுக்கு தங்கையாக கூட இருக்கலாம். காபி சாப்பிட வந்த இடத்தில் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை நேர்ந்திருக்க, தன்னுடைய அவசர புத்தியை நினைத்து தலையில் தட்டிக் கொண்டாள்.  அவன் வெளியே நின்று அழைத்தும் மீரா பேசாததால் உள்ளே செல்லவும் முடியாமல் அவன் அடைந்த பதட்டம் ப்ரியாவின் கண்ணனின் வந்து போக, மீண்டும் சிரித்துக் கொண்டாள்.  
ஒரு கழிவறை மூடி இருக்கவே கதவை தட்டி மீராவிடம் பையை கொடுத்து மீரா வெளியே வரும் வரை காத்திருந்து மருத்துவம் படிக்கும் மாணவியாக அவளிடம் சில பல கேள்விகளை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டபின் அவளுடன் வெளியே சென்றாள்.
உதவி செய்தவளுக்கு சிறு நன்றியெனும் கூறாமல் ப்ரியாவை திரும்பியும் பாராமல் மீராவிடம் கேள்விகளை கேட்டவாறே  அழைத்துக் கொண்டு சென்று விட்டான் தேவ்.
செல்லும் அவர்களை கண்கள் மின்ன சிறு புன்னகையோடு பார்த்திருந்தாள் ப்ரியா.
அன்று தான் அவசரப்பட்டு அவனை தப்பாக நினைத்து அடிக்க வந்ததாகவும் அதன்பின் புரிந்து கொண்டதாகவும் ப்ரியா தெளிவு படுத்த, 
கோபமான ஒரு பெண்ணின் முகம் அவன் நியாபக அடுக்கில் வந்து போக “ஹாஹாஹா அந்த சிடுமூஞ்சி நீதானா?”
தேவ்வை முறைத்தவள் “உங்க நல்ல நேரம் நா உங்கள அறைய முன்பே நீங்க பேசிடீங்க. அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் நீங்க தான் என் ஆளுன்னு” அவன் நெற்றியில் முட்டியவள்.
“அப்பொறம்” மனைவியின் சைகைகள் ஒவ்வொன்றையும் ரசித்தவன் தொடர்ந்தான்.
 “அப்பொறம் உங்க பின்னாடி வந்து வீடு எங்கன்னு பாத்துக்கிட்டேன் 5  , 6 மாசமா உங்க பின்னாடி அலஞ்சி உங்கள பத்தி முழுசா தெரிஞ்சி கிட்டேன். இதுல வேடிக்க என்னவென்றால் நா உங்க பின்னாடி சுத்துனத மீரா பாத்துட்டு என் பின்னாடி சுத்தி என்ன பத்தி புள் டீட்டைளையும் கலெக்ட் பண்ணி, ஒருநாள் திடீரென என் முன்னாடி வந்து நின்னு “என்ன என் வேத் அத்தான லவ் பண்ணுறியா?” என்று கேட்டு எனக்கே ஷாக் கொடுத்தா. என்ன கோவிலுக்கு வர சொல்லி உங்கள அறிமுகப்படுத்தினா!”
  “இவ்வளவு வேல பாத்திருக்காளா?” சிறு புன்னகையினூடாக கேட்டான் தேவ்
 “நீங்க தான் என்ன கண்டுக்கவே இல்லையே” முறைத்தாள் ப்ரியா.
“சாரிடி பட்டு மீராகு நடந்த இன்சிடெண்ட்டால எப்பவும் அவளை பத்தியே யோசிச்சிகிட்டு இருப்பேனா. சுத்தி என்ன நடக்குறது எங்குறது கூட கவனிக்கிறது இல்லை. இல்லனா உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ண பார்த்துட்டு ஒரு ஸ்மைல் கூட பண்ணாம வருவேனா?”
“ம்ம் புரியுது தேவ்” கணவனை அணைத்துக் கொண்டாள் ப்ரியா.
 “மீராவையும் என்னையும் பல தடவ ஒன்னா பாத்திருப்ப தப்பா தோனலயா?” 
இதுநாள்வரை அவனை மீராவோடு சம்பந்த படுத்தி ப்ரியா சந்தேகப்பட்டு பேசியதே இல்லை. கோபப்பட்டதும் இல்லை. சரஸ்வதி பேசும் பேச்சுக்கள் போதும் ப்ரியாவின் கோபம் எல்லை மீற. ப்ரியா பிரச்சினை செய்தால் தேவ் கண்டிப்பாக தன்னுடைய குடும்பத்தாரின் பக்கம்தான் நிற்பான் என்பதும் ப்ரியாவுக்கு தெரியும். மீராவை அவன் ஒரு பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டான். அதற்காக பொறுமையாக போகும் ரகமும் அல்ல ப்ரியா.
திருமணமாகி இத்தனை வருடங்களில் கேட்கத் தோணாத கேள்வியை தான் இன்று தேவ்வும் கேட்டிருந்தான்.
தலையசைத்து மறுத்தவள் “ஒரு பொண்ணுக்கு அப்பா, அண்ணன், நண்பன், காதலன், கணவன் இப்படி எல்லா உறவும் உறுதுணையா இருப்பாங்க. உங்க ரெண்டு பேரையும் பாக்கும் போது அப்பா பொண்ணா தான் தோணிருச்சு.. கொஞ்சம் பொறாமை கூட வந்துருச்சு. மீரா மேல வைக்கிற அன்புள்ள பாதி கூட என் மேல வைக்காம போய்டு வீங்களோ என்கிற பயம் கூட இருந்தது. நமக்கும் பொண்ணு பொறந்தா நீங்க இப்படித்தான் பாத்துக்குவீங்க என்று தோணினப்போ எல்லாத்தையும் தூக்கி போட்டு உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் நினச்சா மாதிரியே அப்பாவும் பொண்ணும் சேர்ந்து இப்போ என்ன கண்டுக்காம விட்டுடுறீங்க” ஆசையாக சொன்னவள் கணவனை நன்றாக முறைக்கலானாள்.
தேவ் ப்ரியாவை காதலித்துதான் திருமணம் செய்தானா? என்று கேட்டால் ப்ரியா மீராவின் தேர்வு. அதனால் அவன் மறுக்கவில்லை. திருமணம் செய்துகொள்ள முன்பே தனக்கு தன்னுடைய குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாக கூறித்தான் ப்ரியாவை திருமணமே செய்து கொண்டான்.
ப்ரியா புன்னகை செய்தாலே ஒழிய பதில் பேசவில்லை. இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையில் அவனை புரிந்து கொண்டு அவன் குடும்பத்தாரையும் அனுசரித்து போவது அவள் இவன் மீது கொண்ட காதலால் மட்டும் தான் என்பதை தேவும் அறிந்துதான் இருந்தான். அந்த புரிதல்தான் அவனையும் ப்ரியாவை காதலிக்க வைத்திருந்தது.
“அதுக்கென்ன, உனக்கு சப்போர்ட் பண்ண ஒரு பையன பெத்துக்க” தேவ் சொல்லி முடிக்கவில்லை                     
ரவிக்குமார் கேட்டை திறந்துகொண்டு வரவே அவர்களின் பேச்சு தடை பட்டது.
“என்னபா ரெண்டு பேரும் இன்னும் தூங்கலையா? ஒரு மணி தாண்டுருச்சே” கேட்டை பூட்டியவாறு அவர் கேக்க   
“பேசிகிட்டு இருந்ததுல டைம் போனது தெரியல மாமா” என்றான் தேவ். 
“சரி சரி போய் தூங்குங்க”
“என்ன மாமா நாலு கால்ல வருவீங்கன்னு பாத்தேன் மிலிட்டரி சரக்கு எதுவும் கிடைக்கலையா? தேவ் அவரை வம்பிழுக்க ப்ரியா உள்ளே சென்றிருந்தாள். 
“சின்ன பசங்க அத பத்தி பேசக் கூடாதுப்பா” என்றவர் அவன் தோளில் தட்டியவாரே உள்ளே சென்றார்.
உள்ளே வந்த தேவ் அம்மாவின் அறையை பார்க்க அவர் கீழே விழுந்திருந்தார். “அம்மா” என்று கத்தியவன் அவர் அருகில் செல்ல, அவன் போட்ட சத்தத்தில் மற்றவர்களும் ஓடிவர, அவரை பரிசோதித்தவன் உடனே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றான்.
காரில் அவரை கிடத்தி மீரா அவர் அருகில் அமர, ப்ரியா குழந்தையுடன் முன் இருக்கையில் அமர வண்டியை வேகமாக கிளப்பினான் தேவ். தூக்கம் கலைந்த வினுக்குட்டி என்ன நடக்குதுனு ஒன்னும் புரியாம மலங்க மலங்க விழித்தாள். ப்ரியா போன் மூலம் மருத்துவமனைக்கு தகவல் தர மீரா அழுதவாறே வந்தாள். பின் இருக்கையில் அமர்ந்திருந்த மீராவின் கண்ணீரை துடைக்கவென முன் இருக்கையிலிருந்து எம்பி எம்பி முயற்சி செய்த வினுக் குட்டியும் அழுதாள். ரவிக்குமார் அவர் வண்டியில் வந்து சேர்ந்த போது சரஸ்வதி அம்மாவிற்கு சிகிச்சை நடை பெற்றுக்கொண்டிருந்தது.
அதிக மனஅழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்தார் என்றும் வேறு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறிச் சென்றார்.
வீட்டில் நடந்த கலவரத்தை ப்ரியா சுருக்கமாக ரவிகுமாரிடம் கூறிக் கொண்டிருப்பதை கேட்ட மீரா தன்னையே நொந்துகொண்டாள். ‘வீட்டில் இவ்வளவு நடந்து இருக்கு ஒன்னும் தெரியாம வேற உலகத்துல இருந்தேனே’ அழுதவாறே அத்தையின் கையை பிடித்திருந்தவள் சரஸ்வதி கண் முழிக்கும்வரை அவளை விட்டு நகரவே இல்ல.
ரவிக்குமாரும் மீராவுடன் இருக்க ப்ரியா தேவ் குழந்தையுடன் வீடு சென்றனர்.
கண் முழித்த சரஸ்வதி மீராவின் கையை பிடித்துக் கொண்டு மன்னிப்பு வேண்டி நின்றாள். அத்தையின் நிலைக்கு தான் தான் காரணம் என மீரா கலங்கி அவளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவளே ஏற்றுக்கொண்டாள். ப்ரியா கேட்டுப் பார்த்தும் தானே இருப்பதாக சொல்லிவிட்டாள்.
நான்கு நாட்களாக தேவுக்கும் ப்ரியாவுக்கும் வினுவை சமாளிக்க முடியாமல் திணறினர். வீட்டில் சரஸ்வதி இல்லாததால் வினுவுக்கு கொண்டாட்டம்.
“அதை தொடாதே இதை தொடாதே” என்ற அவளின் அதட்டல் இல்லை. இஷ்டத்துக்கு கலர்சோர்க் எடுத்து வீடு முழுவதும் படம் வரைந்தாள். வெளியே  சுற்றிக் கொண்டு பூச்சிகளை பிடித்து பாட்டில்களில் அடைக்கவென சமயலறையில் உள்ள மசாலா டப்பாக்களை தேர்ந்தெடுத்தாள். அதை கொட்டத் தெரியாமல் கொட்டி உடம்பிலும் கண்ணிலும் பட வினுவின் அலறல் கேட்டு  ப்ரியா வந்து பாக்க சமையலறை சூறையாடப்பட்டிருந்தது.
அவளை குளிக்க வைத்து க்ரீம் தடவி ஒருவாறு சமையல் அறையை சுத்தம் செய்து இடுப்பை நிமிர்த்த, பில்டிங்பாக்ஸ்  விளையாடுறேன் என்று வாசல் முழுவதும் பரப்பியிருந்தாள். அதை ஒருவாறு அவளுடனையே அடுக்க தனியே சாப்பிடுகிறேன் என்று அடம்பிடித்து பாதி சாப்பாட்டை சிதறவிட்டிருந்தாள். தேவ் வரவும் அழுதே விட்டாள் ப்ரியா. நான்கு வயதில் சேர்த்தால் போதும் என்றிருந்தவர்கள் அவளை பிளே ஸ்கூலில் சேர்க்க முடிவெடுத்தனர்.
முதல் நாள் மீரா ஆபீஸ் வராது போகவே நேசமணியை விட்டு விசாரித்த சரவணன் சரஸ்வதியின் நிலை அறிந்து லட்சுமி அம்மாவுடன் வந்து பார்த்து விட்டு சென்றார். அவரை பார்க்க வந்தவரிடம்
“ஏன் லட்சுமி போட்டிக் பக்கம் இப்போல்லாம் வர்ரதில்ல” என விசாரிக்க ஏதோ சொல்லி சமாளித்தார்.
உண்மையான காரணம் மீரா!
லட்சுமி அம்மா மீராவை முதலில் சந்தித்தது சரஸ்வதியின் போட்டிக்கில் தான் அவளை பார்க்கவென அடிக்கடி வரும் அவர், அவள் வேலைக்கு செல்கிறாள் என்றதும் எங்கே என விசாரித்தவர். “எங்க வீட்டு மஹாலட்சுமி எங்க இடத்துக்கே வந்துட்டா” என மனதுக்குள் சொல்லிக்கொண்டார். சரவணன் சாருக்கு  சாப்பாடு கொண்டுவருகிறேன் என்ற பேரில் மீராவை சந்தித்து பேசிவிட்டு செல்வார். சரவணன் சார் ஆபீஸ்ல தான் தரமான உணவு கிடைக்குதே எதுக்கு வீணா அலையுற” கடிந்துக்கொள்வார். அதன் பின்தான் தன் மனதில் உள்ள ஆசையை கணவருக்கு தெரியப்படுத்திய லட்சு சரவணன் சம்மதம் கிடைத்த உடன் சைதன்யன் இந்தியா வந்து சேரும் நாளை ஆவலோடு காத்திருந்தார்.
மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கும் சரஸ்வதியிடம் போய் உண்மையான காரணத்தை கூற விரும்பாமல் நல்ல நாள் பார்த்துக்குக் கூறிக்கொள்ளலாம் என்று ஏதேதோ கூறி சமாளித்தார்.  
ரவிக்குமார் மீராவுக்கு துணையாய் ஹாஸ்பிடலிலேயே இருக்க இரண்டு நாளில் வீட்டுக்கு வரவேண்டியவரை எல்லா டெஸ்ட்டும் எடுக்கணும்னு தேவ் கறாறாராய் சொல்லா நான்கு நாட்களில் சரஸ்வதி அம்மா வீடு வந்து சேர்ந்தார்.
இந்த நான்கு நாட்களும் மீராவுக்கு சைதன்யனின் நியாபகம் வந்தாலும் அவனை தொடர்ப்பு கொள்ள முயலவில்லை. இவள் நம்பர் சந்துருவிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடும் என்றிருந்தவளுக்கு அவன் தொடர்ப்பு கொள்ளாதது உறுத்தியது.
இருந்த டென்ஷனில் சந்துருவிடம் கேட்க தோன்றவில்லை. சௌமியா ஒருநாள் வந்து சரஸ்வதியை பார்த்துவிட்டு சென்றாள்.
நான்கு நாட்களுக்கு பிறகு ஆபீஸ் சென்ற மீராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சைதன்யன் வரவில்லை. விசாரித்து பார்த்ததில் அன்று லன்ச் ஹவரில் சென்றவன் எங்கே சென்றான் என்பது யாருக்கும் தெரியவில்லை. சந்துருவை கேட்டாலே முதல் நாள் “மொபைல் ஆப் இல் இருக்கு எங்க போனானென்னு தெரியலையே” என்றவன். அடுத்தடுத்த நாட்களில் அவளுடைய காலை ஏற்கவில்லை.
சரவணன் சாரிடம் மட்டுமே பாக்கி, அவரிடம் போய் என்னவென்று கேப்பது? வேலை சம்பந்தமாக விசாரிக்க முடியாது அவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சௌமியாவிடம் சொல்லி கேட்க சொல்லலாம். முதலில் அவளிடம் என்னவென்று சொல்வது கனவு கண்டேன், முத்தமிட்டான் என்றா! அவன் காதலை சொல்லாமலேயே சென்று விட்டான். மொத்தமாக சித்தம் கலங்கி நின்றாள் பேதைப்பெண்.
பலவற்றை சிந்தித்தவண்ணம் மனதில் உழன்றவள் கால் போன போக்கில் நடந்துகொண்டிருக்க எதிரேவந்த தீரமுகுந்தனின் மேல் மோதி நின்றாள்.
 “பார்த்து பார்த்து” என்று அவளை நேராக நிறுத்தியவன். “யோசனைய எங்க வச்சிட்டு போற?” என்று கேட்க
அவனை விட்டு இரண்டடி பின்னுக்கு நகர்ந்தவள். எதுவும் கூறாது அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அவளை முதல் முதலாக பார்க்கும் போதே உரிமையாக ஒருமையில் பேசியதால், ஏனோ மீராவுக்கு ஆரம்பத்திலிருந்தே தீரமுகுந்தனை பிடிக்கவில்லை.
தனதறைக்கு வந்த தீரமுகுந்தனின் போன் ரிங்டோனை எழுப்பவே பிரத்தியேகமான ஒலியினால்  யாருடைய கால் என்பதை அறிந்தவன்.
ஒரு நிமிடமும் தாமதிக்காமல் “தீரன்” என்றான். வெவ் வெவ் வென நாய் குறைக்கும் சத்தம் தெளிவாக கேட்டது. அப்பக்கம் என்ன கூறியதோ! “நா அனுப்பிய பென்ட்ரைவ் கிடைச்சதா?? அவன் பண்ண வேலைக்கு அவன் உயிரோடு இருக்கணும் பட் ஏன்டா உயிரோடு இருக்கோம்னு நொடிநேரமும் சாகனும்” என்றவன் போனை அமர்த்தினான்.
இங்கே சைதன்யன் நிலைமையோ பரிதாபமாக இருந்தது.

Advertisement