Advertisement

என்னுள் மாற்றம் தந்தவளே…

 

1

 

 

 

 

 

 

உடல் வலிமை

கொண்டவன்… 

ஆண் எனில்.. 

அவனை 

அடக்கியாள 

உள்ளத்தில் 

வலிமை கொண்டவள்

பெண்… 

 

 

 

                எப்போதும் அளவான புன்னகையில் மலர்ந்திருக்கும் முகம் இன்று கோபத்தில் சிவந்திருக்க..  “ இப்போ என்னதான் சொல்றீங்க..?” என்று அழுத்தமாக வினவினாள் விஷல்யா. 

 

“  ஷாலு.. இதெல்லாம் காலங்காலமா நடக்கிற சம்பிரதாயம், நம்ம இஷ்டத்துக்கு மாத்த முடியாது.. இப்போ உன் பிரச்சனை என்ன வீட்டுக்கு வந்து பொண்ணு பாக்குறது  பிடிக்கல அவ்வளவுதானே மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்டப்  பேசி ஏதாவது கோயில்ல இல்லைனா  ஹோட்டல்ல வைச்சு பொண்ணு பாக்குறதுக்கு ஏற்பாடு பண்ணிடலாம்.   “ என்று அடம்பிடிக்கும் மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் தாமோதரன். 

 

“ அதெல்லாம் முடியாது அப்பா.  புடவை சுத்திகிட்டு பொம்மை மாறி வந்து நிக்க என்னால முடியாது.. காலங்காலமா நடக்கற சம்பிரதாயத்தை நாம கொஞ்சம்  மாத்தலாமே. எப்பவும் மாப்பிள்ளை வீட்டுல இருந்து  தானே பொண்ணு பார்க்க வருவாங்க  நாம புதுசா  புரட்சிகரமா.. மாப்பிள்ளை வீட்டுக்கு போவோம். “ என்று தன் முடிவில் விடாப்பிடியாக நின்றாள் விஷல்யா. 

 

“மாப்பிள்ளை வீட்டுக்கு மாப்பிள்ளை பார்க்க போகணுமா!.  நல்லா இருக்குடி நீ சொல்றது..  உன் அப்பா கொடுக்கிற செல்லம் தான் உன்னை இப்படி பேசவைக்குது. பொண்ணா லட்சணமா புடவைய கட்டிட்டு கூப்பிடும்போது வந்து நில்லு. சும்மா பெண்ணியம் பேசுறேன் பெண் சுதந்திரம் பேசுறேன்னு வந்தவங்க  முன்னாடி எங்க மானத்தை வாங்கிடாத… “ என்று மகளை கடிந்து கொண்டார் தாமரை. 

 

“ பெண்ணியம்  பெண் சுதந்திரம்.. இந்த வார்த்தையே  முதல்ல தப்பு.. அதென்ன பெண் சுதந்திரம் நமக்கு சுதந்திரம் கொடுக்க ஆண்கள் என்ன பெண்களோட ஆண்டவங்களா.. இல்ல பெண்கள் ஆண்களோட அடிமைகளா. பொண்ணுங்களே  தங்களைத் தானே  வீட்டுக்குள்ளேயும் அடிப்படிக்குள்ளேயும் அடைச்சுக்கிட்டு   சுதந்திரம் வேணும் சுதந்திர வேணும்னு  கத்துறது முட்டாள் தனமா இருக்கு. பெண்ணடிமைத்தனம் பெண் சுதந்திரம்னு பேசுறோமே ஆண்களுக்கு இப்படி ஒரு வார்த்தை இருக்கா..?  அவங்களும் சுதந்திரம் கேட்டு வீதியில இறங்கிப் போராடுறாங்களா..? இல்ல ஏன்?,  ஏனா ஆண்கள் மனசுல நாம  அடிமையா இருக்கோங்கிற எண்ணமே இல்ல,  பெண்கள் மனசுல அது ஊறிப்போயிருக்கு.  முதல பெண்கள் மனசுல நாம அடிமையா இருக்குறோங்கிற நினைப்பு மாறனும். அப்போத் தான் எல்லாம் மாறும்” என்று  விடாமல் வாதம் செய்தாள் விஷல்யா. 

 

“ சபாஷ்டா.. சரியாச் சொன்ன.. மாற்றம் முதல்ல நம்மகிட்ட இருந்து தான் ஆரம்பிக்கணும்,  இதோ பிடி பையனோட.. போட்டோ.. கவர்ல மேலேயே அவங்க அட்ரஸ் இருக்கு.. நீயே நேருல போ.. உனக்கு பிடிச்சா மட்டும் அடுத்து நம்ம வீட்டுக்கு வரச் சொல்லலாம்.. “ என்று விஷல்யாவின்   செயலுக்கு என்றுமே தடை விதிக்காத தந்தை     மகளின் தற்போதைய விபரீத விருப்பத்திற்கும் சம்மதித்தார். 

 

“ நல்லா இருக்கு நீங்க பண்ணுறது உங்க பொண்ணு  தான் புத்தி இல்லாம பேசுறானா அப்பா ஸ்தானத்துல இருந்து புத்திமதி சொல்றத விட்டுட்டு.. நீங்களும் அவக்கூட  சேர்ந்துட்டு  சின்னப்பிள்ளை தனமா   நடந்துக்கிறீங்க.  இதுவரைக்கும் யாரும்  செய்யாததை  செஞ்சு பார்க்க இது ஒன்னும் விளையாட்டு காரியமில்ல..  நம்ம  பொண்ணோட வாழ்க்கை. கல்யாணப் பொண்ணே  நேர்லப் போய் உங்க பையனை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கேன்னு  சொன்னா யாராவது கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா!. இப்படியே புதுமை செய்றேன் புரட்சி செய்றேன்னு  பேசிட்டு இருந்தா நம்ம பொண்ணுக்கு என்னைக்குமே கல்யாணமே நடக்காது. கடைசி வரைக்கும்    நம்ம கூடவே வச்சிக்க வேண்டியது தான்” என்று  உரிமை என்கின்ற பெயரில் மகளுக்கு  அளவுக்கதிகமான செல்லம் கொடுக்கும்  கணவரை கடிந்துகொண்டார் தாமரை. 

 

“ உன் அம்மாவை நான் கவனிச்சுக்கிறேன்… நீ போடா, “ என்று தாமோதரன் கூறிட..  அன்னையை கிண்டலாய் ஒரு பார்வை பார்த்து  வழமையான  நிமிர்வுடன்  விலகி சென்றாள் விஷல்யா. 

 

“ உன்னால என்னை என்ன செய்ய முடியுங்கிற மாதிரி எவ்வளவு நக்கலா பாத்துட்டு போறா பாருங்க, எல்லாம் நீங்க குடுக்குற செல்லம். இப்ப எங்கப் போவான்னு  நினைக்கிறீங்க..  நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு தான் போய் நிப்பா. நீங்க அவளுக்கு  நல்லது செய்ய   நினைக்கிறீங்களா இல்ல உங்க பொண்ணோட   வாழ்க்கையில நீங்களே மண்ணை அள்ளிப் போடப் பாக்குறீங்களா?. “ என்று மகளிடம் செல்லுபடியாகாத கோபத்தை கணவன் மீது செலுத்திக் கொண்டிருந்தார்  தாமரை. 

 

“ நான் அவளுக்கு செல்லம் கொடுக்கல.. அவளுக்கான உரிமையை தான் கொடுக்கிறேன்.   என்னோட பொண்ணு எப்பவும் தப்பான வழில போகமாட்டா.. தப்புக்கு துணையும் போகமாட்டா.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு அதனாலதான் அவளுக்கான உரிமைய தைரியமா   கொடுக்கிறேன் “ என்று மகளுக்கு பரிந்து பேசினார் தாமோதரன். 

 

“ நானும் நம்ம பொண்ணு தப்பு செய்வான்னு சொல்லலையே.. அவளோட திமிரான  நடவடிக்கையால அவ வாழ்க்கையில தப்பு நடந்திடக் கூடாதுன்னு தான் பயப்படுறேன். “ என்று மகளின் செயல்பாடுகள் எண்ணி கவலை கொண்டார் தாமரை. 

 

“ பெத்து வளர்த்த நீயே நம்ம பொண்ணப்  புரிஞ்சுக்காம அவளோட  துணிச்சலான செயலத் திமிருன்னு சொன்னா மத்தவங்க வேற எப்படி பார்ப்பாங்க.. முதல்ல நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ நம்ம பொண்ணுகிட்ட இருக்கிறது திமிர் இல்லை தன்னம்பிக்கை, தைரியம் அதுக்கு திமிர் தலைக்கணம்னு வாய்க்கு  வந்த பெயரை வைக்காத… எதையும் சரியா செஞ்சு பழக்கப்பட்டவ நம்ம பொண்ணு.. ஒருவேளை  அவளையும் மீறி ஏதாவது தப்பு  நடந்தா அதை எப்படி சரி செய்யணும்னு அவளுக்கு தெரியும். “ என்று நம்பிக்கையுடன் பேசினார் தாமோதரன். 

 

                “ எல்லாம் சரி ஆனா நீங்க இப்போ செஞ்சது ரொம்ப  தப்பு.  ஊரோட ஒத்து   வாழுறது தானே..  உலக நியதி. உங்க பழக்க வழக்கமே சரியில்லன்னு ஒதுங்கி நின்னா.. தனியா நிக்கிறவங்க எப்பவும் தனிமரமாய் நிற்க வேண்டியதுதான். இவ நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போய், பொண்ணு பார்க்க வர  சம்பிரதாயம் எனக்கு பிடிக்கல அதான் ஒரு சேஞ்சுக்கு.. உங்க பையன மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கேன்னு சொன்னா என்ன நடக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. பையனை பெத்தவங்க இப்படிப்பட்ட புரட்சிகரமான பொண்ண தன் வீட்டுக்கு  மருமகளா கொண்டு வரணும்னு  நினைப்பாங்களா. இப்ப வந்திருக்கிற வரன்  நல்ல இடம்.  இந்த மாதிரி நல்ல இடம் கிடைக்காதான்னு  எத்தனையோ பேர் தவம் கிடக்கிறாங்க.  அப்படிப்பட்ட நல்ல சம்பந்தம் நாம தேடிப் போகமலேயே நம்மளத் தேடி வந்திருக்கு..   இப்போதைக்கு உங்க பொண்ணு அவளோட வேண்டாத  கொள்கை கோட்பாடு எல்லாம் தூக்கி ஓரமா வச்சுட்டு இந்த பையனை  கல்யாணத்த பண்ணிட்டா அதுக்கப்புறம்  அவ இஷ்டப்படி  இருக்க வேண்டியதுதானே இவள யார் கேள்வி கேட்க போறா!,”  என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தாமரை. 

 

“ நீ இப்போதைக்கு இருக்கிற பிரச்சினைய  மட்டும் பாக்குற… நான் நம்ம பொண்ணோட எதிர்காலத்தைப் பத்தியும்  யோசிக்கிறேன்.   கல்யாணம் நாம வாழுற வாழ்க்கைக்கு அர்த்தமா இருக்கணுமே  தவிர,   நம்ம சுதந்திரத்துக்கு கைவிலங்கா  இருக்கக்கூடாது. நான் என் பொண்ணோட வாழ்க்கைக்கு அர்த்தத்தை  அமைச்சுக் கொடுக்க நினைக்கிறன், விலங்கை இல்ல.ஷாலு  குணம்  எப்படின்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை. மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு கல்யாணத்துக்கு பிறகு நம்ம பொண்ணோட குணம்  தெரிஞ்சு, இவளோட குணத்தை அவங்களால ஏத்துக்க முடியாமப் போனா கல்யாண  வாழ்க்கை நரகமாக மாறிடும், அதுக்கு பதிலா கல்யாணத்துக்கு முன்னாடியே இவளோட குணத்தை அவங்க புரிஞ்சுக்கிறது நல்லது தானே.  ” என்று தன் முடிவின் காரணத்தை கூறினார் தாமோதரன். 

 

“ என்னவோப் போங்க என்னைக்கு  நான் சொல்லி நீங்களும் உங்க பொண்ணும் கேட்டிருக்கீங்க.. இன்னைக்கு கேட்கப் போறீங்க.. இந்த காலத்துல பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பாக்கறது எவ்வளவு கஷ்டமான காரியம்,  இதுல இவ இப்படி நடந்துக்கிட்டா என்னதான் பண்றது.,  ஒருவருசத்துக்கு  முன்னாடி ஒருத்தனை காதலிக்கிறேன்னு சொன்னா. சரி நாம காட்டுறப் பையனை எப்படியும் இவளுக்கு பிடிக்கப்போறதில்ல.  அவளே அவளுக்கான வாழ்க்கைய  தேர்ந்தெடுத்திட்டான்னு நிம்மதியா இருந்தா.. அதுவும் நிலைக்காம எங்க ரெண்டு பேருக்கும் பிரேக்கப் ஆயிடுச்சுன்னு தலையில் இடியை இறக்குறா!.. இதுக்கு மேல இப்படியே விட்டா சரிப்பட்டு வராதுன்னு.. வரன் தேட ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு…. இப்போ வரைக்கும் வந்த எல்லாம் வரனும் இவள பத்தி வெளியே விசாரிச்சுட்டு வந்தச் சுவடேத் தெரியாமத் திரும்ப ஓடிடுறாங்க..  இந்த இடம் மட்டும் தான் பொண்ணு பாக்க வரலாமானு கேட்டாங்க,  இந்த இடத்தையும் ஒரு வழிப் பண்ணப்போறான்னு புரிஞ்சுடுச்சு. இதுக்கு மேல கல்யாணத்துக்கு மாப்பிள்ளைத் தேடமாட்டேன். என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கலன்னு  கவலைப்படவும் மாட்டேன். எல்லாம் அவளோட தலையெழுத்து படி நடக்கட்டும்னு.. ஒதுங்கியே இருந்திடுறேன், ஆளை விடுங்க “ என்று தனது ஆதங்கத்தை  வெளிப்படுத்தினார் தாமரை.

 

“ உன்  ஆதங்கம் புரியுது தாமரை, நான் சொன்ன விசயத்தை கொஞ்சம் யோசிச்சு பாரு… நம்ம   பொண்ணோட குணத்துக்கு பொருத்தமான பையன் கிடைக்கணும்..  இல்ல  அவ வாழ்க்கையோட சேர்ந்து அந்த பையன்  வாழ்க்கையும் அழிஞ்சிடும். “  என்று சோர்ந்திருந்த மனைவியை தேற்றினார் தாமோதரன்.

 

  அன்னை சொல் தவறாத பிள்ளையாய்  தந்தையிடமிருந்து  தனக்கு பார்த்திருக்கும் வரனின்  விபரம் பெற்றச் சென்ற விஷல்யா  நேரடியாக மணமகனின் வீட்டிற்கு விஜயம் செய்தாள்.

 

அலுவலகம் செல்லத் தயாராகிக்  கொண்டிருந்த  வீட்டின் உரிமையாளரிடம் வந்த பணியாள், “ அம்மா  உங்கள பார்க்க, ஒரு பொண்ணு வந்திருக்கு, “ என்று விபரம் சொல்லிச் செல்ல..  ‘ இந்த நேரத்துல யார் வந்திருப்பா..’ என்று குழப்பத்துடன் கீழ் இறங்கி வந்த பானுஸ்ரீ வரவேற்ப்பில்  காத்திருந்த விஷல்யாவை கண்டு அதிர்ச்சியானார்.

 

படியிறங்கி வந்தவர் முகத்தில் இருந்த உணர்வை படித்தவள்  அவர் தன்னை  அறிந்திருக்கிறார் என்று புரிந்து, “ஹாய்.. உங்க  முகத்தை பார்க்கும் போது  என்னை  அடையாளம்   தெரிஞ்சிருக்குன்னு புரியுது, இருந்தாலும்   பார்மாலிட்டிக்காக..  எனக்கு நானே இன்ட்ரோ குடுத்துக்கிறேன்,   நான் விஷல்யா.. “ என்று  புன்னகை   சுமந்த  முகத்துடன் கூறினாள்.

 

ஒருநொடி முகத்தில் வந்து சென்ற அதிர்ச்சியும் அதன் பின் வியப்பில்   உயர்ந்த  புருவமும், மறுநொடி மறைந்திட, “ போட்டோல பார்த்ததை விட நேருல இன்னும் அழகா இருக்க.. நான் பானுஸ்ரீ “ என்று  பதிலுக்கு புன்னகைத்தபடி  தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

 

“ என்னை இங்க பார்த்தும் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்னு தெரியும். நான்  ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்ட்,   எனக்கு சுத்தி வளைச்சு பேசிப் பழக்கம் இல்ல நேரடியா விஷயத்துக்கு    வந்திடுறேன்,  எனக்கு இந்த பொண்ணு பாக்கிற   சம்பிராயத்துல நம்பிக்கை இல்ல, ஆணுக்கு பெண்  சமம்னு  வாய் வார்த்தையில மட்டும் சொல்லாம அதுபடியே வாழ்ந்து காட்டுறதுல விருப்பம் அதிகம்,   நான் இப்போ உங்க  வீட்டையும் பையனையும் பார்க்க வந்தேன்,  எனக்கு உங்களையும்  உங்க வீட்டுல  இருக்கிறவங்களையும் பிடிச்சிருந்தா  அடுத்து கல்யாணத்தை பத்தி பேசலாம்    ” என்று  எதையும் மூடி மறைக்காமல் அப்படியே போட்டுடைத்தாள் விஷல்யா.  

 

 “பானு யார்  வந்திருக்கா” என்று  வினவியபடி  அங்கு  வந்து நின்றார்  வாசுதேவ், பானுஸ்ரீயின் கணவர்.

 

“ ஹலோ  சார், நான் விஷல்யா..” என்று  அவரின் மனைவி பதில் கூறும் முன் முந்திக்கொண்டு    பேசினாள் விஷல்யா.   

 

“ வா மா..  “ என்று  தடுமாற்றத்துடன் கூறியவர்   கண் ஜாடை மூலம் மனைவியிடம் விபரம் அறிய முயன்றார் வாசுதேவ்.

 

“ நீ இருமா. நான் உனக்கு குடிக்க ஏதாவது   கொண்டு வரச் சொல்லுறேன்” என்று விஷல்யாவிடம் கூறியவர், தன் கணவர்  புறம் திரும்பி, தன்னை பின்தொடர்ந்து வரும்படி  செய்கை செய்து  உள்ளே  சென்றார் பானுஸ்ரீ.

 

                மனைவி சொல்லே மந்திரம் என்பது போல பின்தொடர்ந்து சென்ற வாசுதேவ், தனிமை கிட்டியதும் “ இது நம்ம பையனுக்கு பார்த்தப் பொண்ணு தானே..?” என்று விசாரிக்க..  “ஆமா அதே பொண்ணு தான்,” என்று  கணவரின் சந்தேகத்தை தெளிவுப்படுத்தினார் பானுஸ்ரீ.

 

                “ இந்தப் பொண்ணு இங்க என்ன பண்ணுது?” என்று அடுத்த கேள்வி வந்திட.. “ உங்க பையனை  மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கா..” என்று  சிரித்தபடி பதில் கூறினார் பானுஸ்ரீ.

 

                “ என்ன?” என்று வாசுதேவ்  அதிர்ந்திட..

 

                “   ஜாதகப் பொருத்தம் இருந்ததும் நான் கூட இந்தப் பொண்ணை பத்தி கொஞ்சம் விசாரிச்சு பார்த்தேன்,  ஒரு சிலர் நல்லப் பொண்ணுன்னு பாசிட்டிவ்வா சொன்னாங்க, ஒரு சிலர் அது ஆம்பள மாதிரி சட்டம் பேசிட்டு     இருக்கும்னு நெகட்டிவ்வா சொன்னாங்க..  ஆனா இந்த அளவுக்கு தைரியமான  பொண்ணா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.   இந்தப்  பொண்ணு தான்  என்னோட மருமக நான் முடிவு பண்ணிட்டேன்”  என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார் பானுஸ்ரீ.

 

                “ என்ன பானு  பையன்கிட்ட  சம்மதம் கேட்ட்காமலேயே நீயா ஒரு முடிவுக்கு வந்துட்ட..     உனக்கு நம்ம பையன் குணம் நல்லாவே  தெரியும்  அவனுக்கு  இந்தப்  பொண்ணு எப்படி செட்டாகும் “என்று மறுத்தார் வாசுதேவ்.

 

                “ உங்கப் பையனோட சண்டித் தனத்தை  திருத்த இந்தப் பொண்ணு தான் சரியா இருப்பா.  நீங்க என்ன செய்வீங்களோ ஏது  செய்வீங்காளோ எனக்கு தெரியாது, இந்தக் கல்யாணத்துக்கு உங்க  பையனை சம்மதிக்க வைக்க வேண்டியது உங்க  பொறுப்பு” என்று பெரும் பொறுப்பை  தன் சரிபாதியின் தலையில் சுமத்திவிட்டு   வீடு தேடி வந்தவளுக்கு வேண்டிய  பானம் எடுத்து முன்னறைக்கு சென்றார் பானுஸ்ரீ.

 

                ‘ ஷ்… இவளை சமாளிக்கிறதே பெரும் பாடு, இதுல இவளை  மாதிரியே யோசிக்கிற மருமகளா, என் வாழ்க்கை மாதிரியே என் பையனோட வாழ்க்கையும் தலையாட்டி பொம்மை மாதிரி தலையாட்டிட்டே முடிஞ்சிடும் போலயே.. ‘ என்று அலுத்துக்கொண்டபடி வெளியில் வந்தார் வாசுதேவ்.

 

                பானுஸ்ரீ கொண்டு வந்து கொடுத்த பானத்தை மெதுவாய் ரசித்து ருசித்தவள், “ நீங்க போட்டதா.. ரொம்ப நல்லா இருக்கு.. “ என்று புகழ்ந்தபடி மேலும் ஒரு மிடறு விழுங்கியவள், “ எனக்கு சமைக்க தெரியாது” என்றாள்.

 

                “  அது ஒரு பிரச்சனை  இல்ல, எனக்கும் சரியா சமைக்கத் தெரியாது,  சமையல் செய்றது பொண்ணுங்க கடமை இல்லை.. காட்டாயம் சமைக்க  தெரியனும்னு காட்டாயமும் இல்ல” என்று வெகு இயல்பாய் கூறினார் பானுஸ்ரீ.

 

                இம்முறை அதிசயிக்க வேண்டியது விஷல்யா முறையானது, “ ஆர் யூ சீரியஸ் உங்களுக்கு   என் மேல கோபமோ வருத்தமோ இல்லையா?” என்று நம்பாமல் வினவினாள் விஷல்யா.

 

                “ இதுல கோபப்பட என்ன இருக்கு? ஓ…  நீ  எங்க வீட்டுக்கு வந்ததை பத்தி கேட்கிறாயா?  நானும் உன்னை மாதிரி தான்.. எனக்கு உன்னோட குணமும் தைரியமும் ரொம்ப பிடிச்சிருக்கு,  உனக்கும் எங்களையும் எங்க பையனையும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்” என்றார் பானுஸ்ரீ.

 

                தன்னைப் போலவே நேர்படப் பேசும் பெண்மணியை விசித்திரமாய் பார்த்த, விஷல்யா, “ என் அம்மா வயசு  இருக்கிற நீங்களும் அவங்கள மாதிரியே யோசிப்பிங்கன்னு  நினைச்சேன், யூ டோட்டலி டிப்பெர்ன்ட்,  ஐ ரியலி லைக் யூ ஆண்டி.  “ என்றாள் விஷல்யா.

 

                “  என்னை பிடிக்கிறது இருக்கட்டும் என் பையனை பிடிச்சிருக்கா?” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டார் பானுஸ்ரீ.

 

                “  நான் இன்னும் உங்க பையன் போட்டோ பார்க்கல,   முதல  உங்களை பார்த்து செட் ஆகும்னு தோணுனா மட்டும் போட்டோ பார்க்கலாம்னு இருந்தேன், “ என்று  தனது பையில்  இருந்த  புகைப்படக் கவரை பிரித்து பார்த்தவள் அதில்  சிரித்த முகமாய்  நின்றிருந்தவனை கண்டதும் பெண்ணவள் முகம் சிறுத்துப் போனது.

 

                தனக்கு முன்பிருந்தவள் முகத்தில்  உண்டான மாறுதலை உணர்ந்து, “ என்ன மா.. போட்டோ  பார்த்து ஷாக்காகிட்ட,  என் பையனை பிடிச்சிருக்கா..” என்று பானுஸ்ரீ விசாரிக்க..

 

                “ இது தான் உங்க பையனா?” என்று நம்பாத பாவனையில் விசாரித்தாள் விஷல்யா.

 

                “ ஆமாம்மா இது  தான் என் பையன் அமுதேவ்..” என்றார் பானுஸ்ரீ.

 

                “ ரியலி சாரி, எனக்கு உங்கப் பையனை பிடிக்கல, எனக்கும் அவருக்கும் கொஞ்சம் கூட செட்டாகாது” என்று  வேறு எதுவும் பேசாமல் உடனே இடத்தை காலிசெய்தாள் விஷல்யா.

 

                 தன் மகனின் விதியை எண்ணி கவலை கொண்டபடி  நடப்பதை அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவ், “ நல்லவேளை அந்த பொண்ணுக்கு நம்ம பையனை பிடிக்கல, என் பையன் வாழ்க்கை தப்பிச்சிடுச்சு” என்று   மனதுக்குள் சொல்லிக்கொள்ளவாதாய் எண்ணி சத்தமிட்டு  உளறிட…

 

                “ என்ன சொன்னீங்க?” என்று கோபமாய் முறைத்து..  சரியான காரணம் கூறாமல் வெளியேறியவள் சென்ற திசையை வெறித்து, “சம் திங் ராங்.. “  என்று    எதையோ எண்ணி குழம்பியவர்,  குழப்பத்தை கலைக்கும் வழியை யோசிக்கத் துவங்கினார் பானுஸ்ரீ.

 

Advertisement