10…
அனைவரிடமும்
பாசம் கொள்வது..
வாழ்விற்கு ஆரோக்கியமாகும்…
ஒருவரை மட்டும்…
அன்போடு நேசிப்பது..
காதலுக்கு அழகாகும்..
அதே நேசம்…
உரிமையோடும்
என்றும் மாறாமல் இருப்பது..
உறவை மேலும் ஆழமாக்கும்..
அமுதேவ் அன்னையிடம் திருமணத்திற்கு சம்மதித்த விஷல்யா, அந்த செய்தியை தன் வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்தினாள்.
“ என்ன சொல்ற.. பொண்ணு பார்க்க வர சொல்லியிருக்கியா?, இது எப்ப நடந்தது?, இதையெல்லாம் எங்ககிட்ட முன்னாடியே சொல்லணும்னு உனக்கு தோணலையா?, நீயா உன் இஷ்டத்துக்கு ஒரு முடிவு எடுத்துட்டு பேருக்கு பெத்தவங்க கிட்ட சொல்லுவ.. நாங்களும் நீ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டனுமா?” என்று திடீர் அதிர்ச்சியில் உண்டான கோபத்துடன் வினவினார் தாமரை.
“ அம்மா இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை?, நீங்கதான் கல்யாணம் பண்ணிக்கோன்னு டார்ச்சர் பண்ணுனீங்க.. சரின்னு நீங்க பார்த்த பையனுக்கு ஓகே சொன்னேன். இப்போ இப்படி பேசுறீங்க.. “ என்று பதிலுக்கு பொரிந்து தள்ளினாள் விஷல்யா.
“ நீ ஓகே சொன்னது பிரச்சனை இல்ல, எங்களைக் கேட்காம ஸ்ட்ரைட்டா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட ஓகே சொன்னது தான் பிரச்சனை. அவங்க நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க.. பொண்ண என்ன இப்படி வளர்த்து வச்சிருக்கோம்னு தப்பா பேச மாட்டாங்களா?,” என்று தன் கோபத்தின் காரணத்தை கூறினார் தாமரை.
“பானு ஆன்ட்டி மத்தவங்கள மாதிரி இல்ல அம்மா, அவங்க பையன மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கேன்னு சொன்னப்ப கூட என்கிட்ட எவ்வளவு தன்மையா பேசினாங்க தெரியுமா?, அங்கிளும் ஆன்ட்டி மாதிரி பிராக்டிகலா யோசிக்கிறவர், அதனால யாரும் யாரையும் தப்பா பேச மாட்டாங்க“ என்று அந்தக் குடும்பத்துடன் ஏற்கனவே பல வருட பழக்கம் இருப்பது போல் உரிமையுடன் பேசியவள், “அமுதேவ் கூட தான் என் கல்யாணம் நடக்கும்.. நான் முடிவு பண்ணிட்டேன்.. இதுல எந்த மாற்றமும் இல்லை“ என்று உறுதியாக தன் முடிவை அறிவித்து விட்டு அங்கிருந்து விலகிச் சென்றாள் விஷல்யா.
“எப்படி பேசுறான்னு பாருங்க.. எல்லாம் நீங்க குடுக்குற இடம். அப்போ இவளே இந்த இடம் செட்டாகாதுன்னு சொன்னா! இப்போ இவளே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுறா? நாளைக்கு இதே வார்த்தைய மாத்திப் பேசமாட்டான்னு என்ன நிச்சயம்?,” என்று மகளிடம் எடுபடாத கோபத்தை கணவரிடம் திருப்பினார் தாமரை.
“ இத்தனை நாள் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தவ இப்போ கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா. பொண்ணுக்கு இன்னும் கல்யாணம்ஆகலங்கிறது தானே உன்னோடு ரொம்ப நாள் கவலை. இப்போ அந்தக் கவலை தீர்ந்ததுன்னு நிம்மதியா இருக்கிறத விட்டுட்டு தேவையில்லாம எதுக்கு புலம்புற. அடுத்து நடக்க வேண்டியதை கவனி.. “ என்று அழுத்தமான குரலில் மனைவியை அமைதிப்படுத்தினார் தாமோதரன்.
“ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னது நினைச்சா சந்தோஷமா தான் இருக்கு. இருந்தாலும் உள்ளுக்குள்ள ஏதோ நெருடல் இருந்துட்டே இருக்கு. “என்று தன் வேதனையை கூறினார் தாமரை.
“ என்ன நெருடல்.. எதை நெருடல்ன்னு சொல்ற?” என்று தாமோதரன் காரணம் வினவிட..
“நமக்கு ஒரு பையன் இருந்து அந்தப் பையனுக்கு நம்ம பொண்ணு மாதிரி குணம் இருக்குப்ற பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க நானே சம்மதிக்க மாட்டேன். அப்படியிருக்கும் போது.. நம்ம பொண்ணு தான் வேணும்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தேடிவந்து கல்யாணத்தை நடத்த ஆர்வம் காட்டுறத பார்த்தா.. எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. அது மட்டும் இல்ல, காதலிக்கிறேன்னு சொன்ன பையன் கேரக்டர் செட் ஆகலன்னு விட்டுப் பிரிஞ்ச மாதிரி, இந்த விஷயத்துலயும் கடைசி நேரத்துல ஏதாவது காரணம் சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவாளோன்னு பயமாயிருக்கு. காதல் விவகாரம் காதும் காதும் வச்ச மாதிரி விஷயம் வெளி ஆட்களுக்கு தெரியாம போச்சு, ஆனா கல்யாணம் விஷயம் அப்படி இருக்காது இல்லையா, ஏதாவது ஏடாகூடம் நடந்தா குடும்ப மானமே போயிடும்”என்று தன் பயத்தின் காரணம் கூறினார் தாமரை.
“இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு ஏன் வேண்டாததை யோசிக்கணும் தாமரை. நல்லதையே யோசிப்போம், ஒருவேளை அவங்களுக்கு நம்மப் பொண்ணோட தைரியமும்.. பெண்ணிய சிந்தனையும் பிடிச்சிருக்கலாம், இப்படி ஒரு பொண்ணு தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு, நம்மப் பொண்ணுகிட்ட பேசி அவளையும் சம்மதிக்க வைச்சிருப்பாங்களா இருக்கும். இன்னொரு கவலை என்ன?, நம்ம பொண்ணு கல்யாணத்த நிறுத்திடுவாளோன்னு பயமா!, இங்க இருந்து கிளம்பும்போது கடைசியா ஷாலு சொல்லிட்டுப் போன வார்த்தைய நீ சரியா கவனிச்சிருந்தா இந்த பயமே உனக்கு வந்திருக்காது. அமுதேவ்வை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு தீர்மானமா சொல்லிட்டு போனா. அதனால தேவையில்லாத கவலையை விடு, நல்லதே நடக்கும் “ என்று மனைவிக்கு ஆறுதலாய் அறிவுரை கூறினார் தாமோதரன்.
“சரி நான் கவலைப்படல.. ஆனா நீங்க உங்க பொண்ணுக்கிட்ட பேசுங்க, இப்போ அவ எடுத்திருக்கிற முடிவுல எந்த மாற்றமும் இல்லன்னு தெரிஞ்சுகிட்ட பிறகு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட பொண்ணு பார்க்க வர சொல்லுங்க. அப்புறம் இன்னொரு விஷயம்.. அவளுக்கு அப்பா அம்மா நாம தான்அதனால இனி எந்த முடிவு எடுத்தாலும் அடுத்தவங்க கிட்ட சொல்றதுக்கு முன்னாடி நம்ம கிட்ட சொல்லச் சொல்லுங்க” என்று சிறு கடுப்புடன் கூறினார் தாமரை.
“பொண்ணு உன் கிட்ட அவ முடிவ சொல்றதுக்கு முன்னாடி மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட சம்மதம் சொல்லிட்டா, இது தான் உன்னோட பெரிய கவலை அப்படித்தானே.. “ என்று சிரித்தபடி மனைவியின் உண்மையான நெருடலை உரைத்தார் தாமோதரன்.
“ஆமா பெரிய கண்டுபிடிப்பு.. ஏன் உங்களுக்கு அந்த வருத்தம் இல்லையா என்ன?” என்று தாமரை பதில் தர.. ஆமாம் என்பது போல் தலையசைத்தவர்.. “ எனக்கும் சின்ன வருத்தம் இருக்கத்தான் செய்யுது, சரி சரி நீ உன் வேலையைபாரு.. நான் போய் ஷாலுகிட்ட பேசிட்டு அடுத்தடுத்த வேலையை கவனிக்கிறேன். “என்று மகளைத் தேடி சென்றார் தாமோதரன்.
அறையில் அலைபேசியில் எதையோ ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள் தந்தையின் வருகையை அறிந்ததும் சட்டென்று அதை மறைத்து.. “ வாங்க அப்பா, அம்மா சமாதானம் ஆகிட்டங்களா, இல்ல இன்னும் கோபத்தோட தான் இருக்காங்களா?” என்று இயல்பாக பேச முயன்றாள் விஷல்யா.
மகளின் நடவடிக்கையை கவனித்த தாமோதரன்.. சிரித்த முகத்துடனேயே அவள் அருகில் வந்து அமர்ந்து.. “நீ கல்யாண விஷயமாக எடுத்த முடிவை அவகிட்ட சொல்றதுக்கு முன்னாடி அடுத்தவங்க கிட்ட சொல்லிட்டன்னு தான் இந்த கோபமே… “ என்றார்.
“ பானு ஆன்ட்டி அடுத்தவங்க இல்லையே அப்பா. அவங்க கிட்ட பேசின பிறகு தான் எனக்கு இருந்த குழப்பம் எல்லாம் போய் ஒரு தெளிவு வந்துச்சு அதனால தான் முதல்ல அவங்க கிட்ட சொன்னேன்” என்று தன் செயலுக்கு காரணம் கூறினாள் விஷல்யா.
மாப்பிள்ளை வீட்டாரை பற்றி பேசும் போது, மகளின் வார்த்தையில் இருக்கும் உரிமையையும் இணக்கத்தையும் கவனித்தவர்.. “ இந்தப் பையன் ஏற்கனவே நீ காதலிச்சு கேரக்டர் செட் ஆகலன்னு பிரேக்கப் பண்ணுன பையன் தானே, இதை ஏன் எங்க கிட்ட இருந்து மறைக்க நினைக்கிற…” என்று புதிராய் நிறுத்தினார் தாமோதரன்.
வெளிப்படையாக கேட்டபின் உண்மையை மறைக்க விரும்பாமல்.. “ ஆமாம்பா நான் காதலிச்ச அதே ஆள் தான் இந்த அமுதேவ். ஒருவேளை உங்களுக்கு உண்மை தெரிஞ்சா நீங்க அம்முவை வேணான்னு சொல்லிடுவீங்களோன்னு நினைச்சு தான் இத உங்க கிட்ட சொல்லாம மறைச்சேன். “ என்று குற்றவுணர்வுடன் உண்மையை ஒப்புக்கொண்டாள் விஷல்யா.
“நீ எடுத்த முடிவு சரின்னு உனக்குத் தோணுதா?.“ என்று சந்தேகத்துடன் தாமோதரன் நிறுத்த..
“ஏன் அப்பா அப்படி கேக்கறீங்க இந்த கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்று சிறு பதட்டத்துடன் வினவினாள் விஷல்யா.
“ இது உன் வாழ்க்கை ஷாலு.. இதுல எங்க விருப்பத்தை விட உன் விருப்பம் தான் முக்கியம். அப்பா இப்படி கேட்டதுக்கு வேறொரு காரணம் இருக்கு. “ என்று சில நொடி அமைதி கொண்டவர், மேலும் தொடர்ந்தார்.. “ சரியோ தப்போ எடுத்த முடிவுல இருந்து பின்வாங்காம நிற்கிறது தான் உன்னோட வழக்கம். ஆனா இந்த விஷயத்துல உன் வழக்கத்தை விட்டுக் கொடுத்துட்டு அவன் தான் வேணும்னு பிடிவாதமா நிக்கிற, இதை காதல்னு எடுத்துக்கணுமா?, இல்ல உன்னோட பிடிவாதம்னு நினைக்கணுமா?, “ என்றார் தாமோதரன்.
“ எதுக்கு தனித் தனியா பிரிச்சு பாக்கணும் அப்பா, பிடிவாதக்காதல்னே நினைச்சுக்கோங்க.. “ என்று சிரித்த முகத்துடன் கூறினாள் விஷல்யா.
“ இத்தனை நாள் இல்லாத பிடிவாதக்காதல் திடீர்னு வரக் காரணம்.. அவங்க அம்மா உன்னை கன்வின்ஸ் பண்ணி பேசினது தானே.. அப்போ இது நீயா யோசிச்சு எடுத்த முடிவு இல்ல!.. இத்தனை நாளா வேண்டான்னு விலக்கி வைச்ச ஒருத்தனுக்கு மறுபடியும் உன் வாழ்க்கையில இடம் தரப் போற.. இது எந்த அளவுக்கு சரியான முடிவா இருக்கும்னு எனக்கு தெரியல. அடுத்தவங்க பேச்சை கேட்டு முடிவெடுக்கிறது சரியில்ல ஷாலு. “ என்று அக்கறையுடன் கூறினார் தாமோதரன்.
“மத்தவங்க பேச்சைக் கேட்டு முடிவெடுக்கிற ஆள் நான் இல்லைன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் இப்படி ஒரு சந்தேகம் வந்ததுக்கு பிறகு அதை தெளிவுபடுத்த வேண்டியது என்னோட கடமை. அம்மு விஷயத்துல இதுக்கு முன்னாடி அவசரப்பட்டு அந்த நேரக் கோபத்துல யோசிக்காம முடிவு எடுத்துட்டேன். ஆனா இந்த தடவ அவசரப்படாம எனக்குள்ள பலதடவை நிதானமா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்திருக்கேன். ஐ ஸ்டில் லவ் ஹிம் அண்ட் ஐ நீட் ஹிம் இன் மை ஃலைப். “ என்று தான் இத்தகைய முடிவை எடுத்ததற்கான காரணத்தை கூறினாள் விஷல்யா.
“ இதுக்கு முன்னாடி ஒத்துவராம இருந்த குணத்தை அவன் மாத்திக்கிட்டானா?.. இல்ல அவனுக்காக அவன் மேல வச்சிருக்க காதலுக்காக உன்னை நீ மாத்திக்க ரெடி ஆகிட்டாயா?.. “என்றார் தாமோதரன்.
“ரெண்டுமே இல்ல.. வேற வேற கருத்து இருக்கவங்க காதலிக்கக்கூடாதா என்ன?, ஃபார் எக்ஸாம்பிள் அம்மாவும் நீங்களும்… உங்க ரெண்டு பேருக்கும் என்னைக்குமே ஓரே கருத்து இருந்ததே இல்ல. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா தான இருக்கீங்க!, அதே மாதிரி நாங்களும் சந்தோஷமா இருப்போம். “ என்று உறுதியுடன் கூறினாள் விஷல்யா.
“ நீங்க சந்தோஷமா இருந்தா எங்களுக்கும் சந்தோஷம் தான்.. இன்னொரு தடவை கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத.. உன் முடிவுல எந்த மாற்றமும் இல்லையே!.. ஏன் கேக்கறேன்னா மறுபடியும் உங்களுக்குள்ள ஏதாவது கருத்து வேறுபாடு வந்ததுன்னா, அதை சரிபண்ண முயற்சிக்காம முன்னாடி சொன்ன மாதிரி இவன் எனக்கு செட்டாகமாட்டான்னு கல்யாணத்தை நிறுத்த சொல்லி வந்து நிக்க கூடாது.. “ என்றார் தாமோதரன்.
“ அப்பா… “ என்று விஷல்யா செல்லமாய் அதட்டியவள்..” நீங்க இப்படித்தான் சந்தேகப்படுவீங்கன்னு தெரியும், இதுக்குத் தான் அம்மு யாருங்கிற விஷயத்தை உங்ககிட்ட இருந்து மறைச்சேன். ஆனா நீங்க எப்படி இதைக் கண்டுபிடிச்சீங்க. உங்ககிட்ட அவன் பேரைக் நான் கூட முழுசா சொன்னது இல்லையே..போட்டோவும் காட்டல. “ என்று குழப்பத்துடன் வினவினாள் விஷல்யா.
“ நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே?. இந்த தடவ உன் முடிவுல எந்த மாற்றமும் இருக்காதே!” என்று அதே கேள்வியை மீண்டும் அழுத்தத்துடன் கேட்டார் தாமோதரன்.
“ எந்த மாற்றமும் இருக்காது.. இனி அவனே என்னை விடணும்னு நினைச்சாலும் நான் அவனை விட மாட்டேன். “ என்று உறுதியளித்தவள்.. “இப்போ நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.. “ என்றாள் விஷல்யா.
“ பையன் பெயர் என்ன?, எப்படி இருப்பான்னு கேட்டதுக்கு தான்.. அம்மாவுக்கு இருக்கிற அவசரத்தைப் பார்த்தா அவன் யாருன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே, கல்யாணத்தை பேசி முடிச்சிடுவாங்கன்னு நீ தான் உஷாரா பையனோட ஊரு பேருன்னு எதையும் சொல்லாம மறைச்சுட்டாயே… அப்படியிருந்தும் எப்படி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கிறீயா.. ? “ என்று சிரித்தவாறே தான் உண்மை அறிந்து கொண்டதன் காரணத்தை கூறத் துவங்கினார்.. “ லவ் பிரேக்கப் ஆகிடுச்சுன்னு சொல்லி கொஞ்ச நாள் லேடி தேவதாஸ் மாதிரி சுத்திட்டு இருந்தியே.. அதே மாதிரி தான் இந்த மாப்பிள்ளைய செட்டாகாதுன்னு சொல்லிட்டு எதையோ பறிகொடுத்த மாதிரி சோகத்துல இருந்த.. ஒருவேளை இது அதுவா இருக்குமோன்னு அப்பவே கொஞ்சம் டவுட் வந்தது. வேணாம்னு ஒதுக்கி வைச்சவங்களுக்கு தப்பித்தவறி கூட இன்னொரு வாய்ப்பு கொடுக்காத ஆள் நீ, அப்படிப்பட்ட நீ கொஞ்சம் வற்புறுத்தி கேட்டதும் பையனோட அம்மாவை பார்க்க கிளப்பினது என் சந்தேகத்த அதிகமாக்கிடுச்சு. இப்போ உன் அம்மாகிட்ட பேசும் போது அமுதேவ் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்னு சபதம் எடுத்த பாரு.. அப்போ தான் அதுவரைக்கும் எனக்கு சந்தேகம் கன்ஃபார்ம்மாச்சு.” என்றார்.
“ உங்ககிட்ட இருந்து எந்த ரகசியத்தையும் மறைக்க முடியாது அப்பா. ஜேம்ஸ்பாண்ட்டுக்கே டஃப் குடுப்பீங்க போல.. இந்த ரகசியம் நமக்குள்ள இருக்கட்டும் அம்மாகிட்ட சொல்லிடாதீங்க ப்ளீஸ்“ என்று கெஞ்சும் குரலில் கூறினாள் விஷல்யா.
“ எந்த ரகசியத்தையும் ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது ஷாலு. யாருக்கு தெரியக்கூடாதுன்னு மறைச்சு வைக்கிறோமோ அவங்களுக்கு அந்த உண்மை தெரியவரும் போது விளைவு ரொம்ப மோசமா இருக்கும். அதுக்கு ஆரம்பத்திலேயே உண்மையைச் சொல்லி பிரச்சனைய ஃபேஸ் பண்ணிடலாம். அம்மாகிட்ட உனக்காக நான் பேசுறேன் அவப் புரிஞ்சுக்குவா.. “ என்றார் தாமோதரன்.
“என் பீலிங்ஷை புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அப்பா.. “ என்று மகிழ்ச்சி நிறைந்த குரலில் நன்றி தெரிவித்தாள் விஷல்யா.
பரிவுடன் மகளின் தலையை வருடி விட்டு அங்கிருந்து விலகிச் சென்ற தாமோதரன், மனைவியிடம் உண்மையை கூறி பக்குவமாக பேசி சமாதனம் செய்து, மகளின் திருமண முடிவிற்கு சம்மதிக்கவும் வைத்தார்.
அமுதேவ் திருமணத்தை மறுக்கும் முடிவில் தீவிரமாக இருக்க.. விஷல்யாஅவனை மணக்கும் முடிவில் தீர்மானமாக இருக்க.. இருவரின் விருப்பு-வெறுப்பு இற்கான நாடகம் அரங்கேறும் நாளும் வந்தது.
“தேவ் பொண்ணு பார்க்க வந்திடுவான் தானே ?” என்று இத்தோடு ஆயிரம் முறை கேட்கப்பட்ட கேள்வியை மீண்டும் சலிக்காமல் தன் கணவரிடம் கேட்டார் பானுஸ்ரீ.
“நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற அதெல்லாம் வந்திடுவான். நான் அந்த அளவுக்கு பயங்கரமா பர்ஃபாமென்ஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். எனக்கு பயந்தே சொன்ன நேரத்துல பொண்ணு வீட்டுக்கு வந்திடுவான்.” என்று தனது வீர பராக்கிரம செயல்களை பெருமையுடன் கூறினார் வாசுதேவ்.
“அதுதான் என் பயமே சும்மா பொண்ணு பார்க்க போறோம்ன்னு சொல்லிருந்தாலாவது.. ஏதோ போனாப் போகுதுன்னு உங்க வார்த்தைக்கு மரியாதை கொடுத்து வருவான். அத விட்டுட்டு ஓவரா பர்ஃபாமென்ஸ் பண்ணிட்டு வந்து இருக்கீங்க அந்தக் கடுப்பிலேயே வராம போயிடுவானோன்னு பயமா இருக்கு” என்றார் பானுஸ்ரீ.
“அதானே பார்த்தேன் என்னடா இன்னும் நம்மள கலைக்காம இருக்காளேன்னு யோசிச்சேன். நடந்துடுச்சு நீ நடத்திட்ட.. “ என்றபடி, தனது அலைபேசியை எடுத்து அதில் அமுதேவ் எண்ணை அழுத்திவிட்டு, “இப்ப என்ன உனக்கு தேவ் பொண்ணு பாக்க வரான்னா இல்லையான்னு தெரியணும் அவ்வளவு தானே!, இதோ உன் முன்னாடியே கால் பண்ணி அவன்கிட்ட பேசுறேன்.. நீயே கேளு.. “ என்று மனைவியிடம் கூறிவிட்டு மறுமுனையில் தனக்காக காத்திருக்கும் மகனிடம்.. “ என்ன தேவ் கிளம்பிட்டியா இல்லையா?, உனக்கு வாட்ஸ்அப்ல ஜிபிஎஸ் லொகேஷன் அனுப்பி வச்சிருக்கேன் சரியான நேரத்துக்கு அங்க வந்திடு. “ என்று அதட்டல் மொழியிலேயே பேசினார் வாசுதேவ்.
“ எல்லாரும் ஒரே இடத்துக்கு தானப் போறோம். அப்புறம் எதுக்கு நீங்க தனியா.. நான் தனியா போகணும். நான் கார் எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வரேன், ரெடியா இருங்க ஒன்னாவே போவோம்”என்றான் தேவ்.
“ பாத்தியா என்னமோ எனக்கு பர்ஃபாமென்ஸ் பத்தாதுன்னு சொன்ன. எனக்கு பயந்துட்டு நம்ம பையன் என்னமா பம்முறான் பாரு.. நம்ம வீட்டுக்கே வந்து நம்மளக் கூட்டிட்டு போறானாம் “ என்று கர்வம் கலந்த புன்னகையுடன் அறிவித்தார் வாசுதேவ்.
“ என்னமோ தப்பா இருக்கு. தேவ் இப்படி மடங்கிப்போற ஆள் இல்ல. அவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்” என்று மகனின் எண்ணம் அறிந்தவர் போல் கவலையுடன் கூறினார் பானுஸ்ரீ.
“அவன் என்ன வேணா பிளான் பண்ணிட்டு போகட்டும்.. அங்க நம்ம மருமக எல்லாத்தையும் பாத்துக்குவா. நீ சீக்கிரம் ரெடியாகு பையன் வர நேரமாச்சு.” என்று மனைவியை சமாதானப்படுத்தி கிளம்பும்படி அறிவுறுத்தி விட்டு அங்கிருந்து அகன்றார் வாசுதேவ்.
சொன்ன நேரத்திற்கு நேரம் தவறாமல் வாசலில் காரை கொண்டு வந்து நிறுத்தியவன். வீட்டிற்குள் செல்லாமலேயே பலமுறை காரின் ஹாரன் ஒலி எழுப்பி.. வீட்டினுள் இருந்தவர்களை வெளியே வரும்படி ஒலி வழி அறிவுறுத்தினான் அமுதேவ்.
“ டேய் நண்பா… ஏன்டா காது சவ்வு கிழியுற அளவுக்கு ஹாரன் அடிக்கிறதுக்கு பதிலா, வீட்டுக்குள்ள போய் அம்மா அப்பாவை கூட்டிட்டு வணதிடலாம்ல” என்றான் அவனுடன் வந்த தனுஜ்.
“ அவங்க வீட்டுக்குள்ள போய் கொஞ்சிக் குலாவுறதுக்கு நான் வரல, அம்மான்னு சொல்லிட்டு இனி என் பெர்மிஷன் இல்லாம என் ஃலைப்ல எந்த முடிவும் அவங்க எடுக்கக் கூடாதுன்னு பாடம் எடுக்க வந்திருக்கேன். “ என்றான் அமுதேவ்.
“ இது வேண்டாத வேலை தேவ், உனக்கு பிடிக்கலன்னு சொன்னா அதோட விட்டுடப் போறாங்க.. அதை விட்டுட்டு எதுக்கு அவங்கள இப்படி ஹர்ட் பண்ண நினைக்கிற” என்றான் தனுஜ்.
“ செஞ்ச செயலுக்கான பலன் தான் கிடைக்கும், அவங்க என் பாட்டிக்கு என்ன செஞ்சாங்களோ அது தான் அவங்களுக்கு திரும்பக் கிடைக்கப் போகுது. இதுக்கு மேல அட்வைஸ் பண்ணி அறுவை போடாத… அப்புறம் இன்னொரு விஷயம் பொண்ணு வீட்டுல என்ன நடந்தாலும் உன் திருவாய மூடிட்டு அமைதியா இருக்கணும் அம்மா பாவம் அப்பா பாவம் அப்படி இப்படின்னு கதை சொல்லி என்னை அடக்க முயற்சி பண்ணுன… கொன்னுடுவேன் “ என்று கொலைமிரட்டலுடன் எச்சரிக்கை விடுத்தான் அமுதேவ்.
கார் ஹாரன் ஓசை கேட்டு அவசரமாய் வாசலுக்கு ஓடி வந்த பானுஸ்ரீயை கண்டும் காணாது அவமதிப்பது போல் தலை திருப்பி அமர்ந்தவன்… அவருக்கு பின் வந்த வாசுதேவ் காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்ததும்.. “ எவ்வளவு நேரமா ஹாரன் அடிக்கிறது. “ என்று எரிச்சலுடன் வினவினான் அமுதேவ்.
“ என்ன தேவ்… எதுக்கு இவ்ளோ எரிச்சல்?” என்று கோபமாய் அவரும் குரலை உயர்த்த.. “ சொன்ன நேரத்துக்கு போகலன்னா தப்பா இருக்கும்” என்றான் அமுதேவ்.
‘அடங்கப்பா இது உலக மகா நடிப்புடா’ என்று படத்தின் வசனத்தை உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான் தனுஜ்.
“ பொண்ணு பார்க்கப் போக அவ்ளோ அவசரமா?” என்று வாசுதேவ் மகனை கேலி செய்ய.. “ அவன் அவசரம் எதுக்குன்னு அங்க வந்து பாருங்க தெரியும்.. “ என்று பூடகமாக பேசினான் தனுஜ்.
“சைலன்சர் சத்தம் இன்னும் கேட்கலனு நினைச்சேன்.. சரியா வாயை திறந்துட்ட. ஆமா உங்க வீட்ல உனக்கு கல்யாணம் காட்சிக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுறாங்களா?, இல்ல கடைசி வரைக்கும் இப்படியே என் பையன் கூடயே ஒட்டிட்டு காலத்தைப் போக்கப் போறியா?” என்று மகனை விடுத்து அவன் நண்பனை கேலி செய்யத் துவங்கினார் வாசுதேவ்.
‘உங்கப் பையனே.. கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணாம ஒண்டிக் கட்டையா சுத்துறதுக்குத் தான் ஐடியா போட்டுட்டு இருக்கான், இது தெரியாம பொண்ணு பார்க்குறேங்கிற பேருல காமெடி பண்ணிட்டு இருக்கீங்க, இதுல என்னை வேற கலாய்க்கிறீங்க! இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, ’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு தனுஜ் அமைதியாகிட… “ என்ன தனு கல்யாணம்ன்னு சொன்னதும் வெட்கம் வந்துடுச்சா சத்தத்தையே காணோம்” என்றார் வாசுதேவ்.
“ கல்யாணம் காட்சி தான பார்த்துட்டாப் போகுது.. உங்க பையனுக்கு பொண்ணு தேடுறதோட சேர்த்து எனக்கும் ஒரு நல்லப் பொண்ணாப் பாருங்க.. ஒரே செலவுல இரண்டு கல்யாணத்தையும் முடிச்சிடலாம்” என்றான் தனுஜ்.
“நல்லா இருக்குடா எங்கச் செலவுல நீ கல்யாணம் பண்ணிக்க அடி போடுறியா.. ?” என்று தாமோதரன் பதில் தர.. அதுவரை மகன் தன்னைக் கவனித்து காரினுள் ஏறும் படி சொல்லவான் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த பானுஸ்ரீ அது நடக்கவில்லை என்றதும்… ஏமாற்றத்துடன் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டு, தன் வேதனையை மறைத்து, “ எப்படி இருக்க கண்ணா?” என்று பரிவுடனும் பாசத்துடனும் மகனிடம் வினவினார்.
எப்போதும் தவிர்ப்பது போலவே இம்முறையும் பதில் கூறாமல் தவிர்த்தவன் அமைதியுடன் காரைக் கிளப்பிட.. “ டேய் நண்பா.. அம்மா உன்னைத் தான் கேட்கிறாங்க பதில் சொல்லு.. “ என்று தனுஜ் நண்பனை அதட்டிட.. “ பார்த்தா பஞ்சத்துல அடிபட்ட மாதிரியா இருக்கேன்.. “ என்றபடி சாலையில் கவனம் வைத்து வாகனத்தை இயக்க துவங்கினான் அமுதேவ்.
“அவன் கிடக்கிறான் விடுங்க அம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று நண்பனுக்கு பதிலாக நலம் விசாரித்தான் தனுஜ்.
“ நான் நல்லா இருக்கேன் பா..” என்று பானுஸ்ரீ பதில் தர.. “ஏன் சைலன்ஸர், அதென்ன அம்மாவுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு?, இதுவரைக்கும் என்னை பார்த்து நல்லா இருக்கீங்களா அப்பான்னு ஒரு வார்த்தை கேட்டு இருக்கியா?” என்றார் வாசுதேவ்.
“இத கேள்வி கேட்டு தான் தெரிஞ்சுக்கணுமா?, அம்மா கூட இருக்கீங்க அப்போ கண்டிப்பா நல்லா தான் இருப்பீங்க.. உங்க கூட இருக்கிறதால தான் அம்மாவ அடிக்கடி நல்லா இருக்கீங்களான்னு கேட்க வேண்டியதா இருக்கு!” என்று நக்கலுடன் பதில் கூறினான் தனுஜ்.
“வர வர உனக்கு நக்கல் அதிகமாயிடுச்சு… என்னைய பொண்ணு பார்க்க சொன்னேல… பொரு போற வழியில பாழுங் கிணத்துல புடிச்சு தள்ளி விடுறேன்” என்று கோபமாக பதில் தந்தார் வாசுதேவ்.
“ நீங்க காட்டுற பொண்ணு கட்டுறதும் பாழுங் கிணத்துல விழுறதும் ஒன்னுதான். “ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் தனுஜ்.
“ என்ன சைலன்சர் அடிக்கடி ஆப் ஆகிடுற? பேட்டரில சார்ஜ் இல்லையோ!” என்று கேள்விக் கேட்டு குடைந்து கொண்டே வந்தார் வாசுதேவ்.
காரில் அவ்விருவர் மட்டுமே இருப்பது போல வயது வித்தியாசம் பாராது வாசுதேவ் மற்றும் தனுஜ் ஒருவரை ஒருவர் கேலி செய்வதும் கிண்டல் செய்வதுமாய் வர மற்ற இருவரும் பெரும் அமைதியில் பயணத்தை கழித்தனர்.
“ இந்த வீடுதான் தேவ் நிறுத்து.. “என்று ஒரு வீட்டின் முன்காரை நிறுத்தச் சொல்லிவிட்டு வாசுதேவ் மற்றும் பானுஸ்ரீ..காரைவிட்டு இறங்கி முன் நடக்க.. அதிர்ச்சி கலந்த யோசனையுடன் அமர்ந்திருந்தான் அமுதேவ்.
“என்னடா நண்பா ஏன் சைலண்டா இருக்க.. அப்பா அம்மாவை எப்படி அடுத்தவங்க முன்னாடி அசிங்கப்படுத்துறதுன்னு நினைச்சு பீல் பண்ணுறியா?, இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல உள்ள போய் வேற எதுவும் பேசாம வீட்டுக்கு போய் பதில் சொல்லுறோம்னு சொல்லிட்டு வெளிய வந்திடு, உனக்கு இந்த கல்யாணம் நின்னு மாதிரி ஆச்சு. அம்மா அப்பாவுக்கும் அவமானமா இருக்காது.. “என்று இலவச ஆலோசனை வழங்கினான் தனுஜ்.
“ டேய் மடையா புரியாம உளராத.. இது விஷல்யா வீடு.. “ என்று தனது அதிர்ச்சிக்கான காரணம் கூறினான் அமுதேவ்.
“ என்ன விஷல்யா வீடா.. அப்ப இன்னும் வசதியா போச்சு உள்ள போய் பொண்ணப் பிடிச்சிருக்குன்னு ஓகே சொல்லிடு. உனக்கு உன் காதலியும் கிடைச்சிடுவா, உன் அப்பா அம்மா விருப்பமும் நிறைவேறிடும்” என்றான் தனுஜ்.
“ நான் அவளை நினைச்சு கடைசி வரைக்கும் தனியாவே வாழனும்னு நினைக்கிறேன். ஆனா அவ அதுக்குள்ள என்னை மறந்துட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டா.. எனக்கு வர்ற கோவத்துக்கு உள்ள போய் அவளையும் சேர்த்து அசிங்கப்படுத்தப் போறேன்.” என்று கோபத்துடன் கூறிவிட்டு விஷல்யா வீட்டினுள் நுழைந்தான் அமுதேவ்.
முறையான வரவேற்பு எல்லாம் முடிந்திட..மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்குமான அறிமுகப்படலம் நிகழ்த்தி வைக்க.. அவைக்கு அழைத்து வரப்பட்டாள் விஷல்யா.
தழையத் தழையப் பட்டுப் புடவையும் அதற்கு ஏற்றார் போல் தங்க நகைகளும் பூண்டு.. பார்ப்பவர் வெட்கம் என கணிக்கும் அளவிற்கு தலை தாழ்ந்தபடி அங்கு வந்து நின்றாள் விஷல்யா.
விஷல்யாவின் அலங்காரக் கோலத்தைக் கண்டு அமுதேவ் கோபம் மேலும் அதிகரித்தது.. ‘காதலிக்கும் போது புடவை கட்டிட்டுவான்னு எத்தனை தடவை கெஞ்சியிருப்பேன்.. அப்போ எல்லாம் எனக்கு புடவை கம்ஃபர்ட்டா இருக்காது சுடிதாரும் டாப்பும் தான் செட் ஆகும்னு எவ்வளவு சீன் போட்ட.. இப்ப எங்க போச்சு அந்த கம்ஃபர்ட்.. ‘ என்று உள்ளுக்குள் புகைந்து கொண்டான்.
அமுதேவ் முக மாறுதலை கவனித்தபடி அருகிலிருந்த தனுஜ்… மெதுவாய் நண்பன் அருகில் சென்று “ டேய் நண்பா.. விஷல்யாவுக்கு ஏதாவது ஐடியல் ட்வின் சிஸ்டர் இருக்கா என்ன? அச்சு அசலா அப்படியே அவளை மாதிரி இருக்குடா இந்தப் பொண்ணு. “ என்று ரகசியக் குரலில் வினவினான்.
“அவ மாதிரி இல்ல இது அவளே தான்.. “ என்று எரிச்சலுடன் கூறினான் அமுதேவ்.
“ மாடர்ன் டிரஸ்ல பார்த்ததை விட புடவைல அழகா இருக்காடா.. நீ எதிர்பார்க்கிற மாதிரி அடக்க ஒடுக்கமாவும் தெரியுறா! பேசாம கல்யாணத்துக்கு ஓகே சொல்லி லைஃப்ல செட்டில் ஆகிடுடா.. “ என்று யோசனை வழங்கினான் தனுஜ்.
“ என்னை அசிங்கப்படுத்தினவள என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. “ என்று திட்டவட்டமாக அறிவித்தான் அமுதேவ்.
“உங்களுக்குள்ள என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று வாசுதேவ் வினவிட… “ அது ஒன்னும் இல்ல“ என்று வாய்க்கு வந்த காரணத்தை தனுஜ் கூறத் துவங்க.. “ நான் பொண்ணு கூட கொஞ்சம் தனியா பேசணும்” என்று அவசரமாய் அறிவித்தான் அமுதேவ்.
“ இவ்வளவு தான் விஷயமா.. இதைக் கேட்கத் தயங்கிட்டு தான் அவன் காதைக் கடிச்சுட்டு இருந்தியா?” என்று கிண்டல் புன்னகையுடன் வினவினார் வாசுதேவ்.
“ என்ன தனியா பேசனுமா? அதெல்லாம் வெஸ்டன் கல்ச்சர். உனக்கு இந்தியன் கல்ச்சர் பொண்ணுங்கள தான பிடிக்கும் தேவ்.. “ என்று என்னென்னவோ சொல்லி இருவரும் தனிமையில் சந்திப்பதை தடுக்க முயன்றான் தனுஜ்.
“ நீ என்னடா பழைய பாட்டி மாதிரி கதை சொல்லிட்டு இருக்க.. ரெண்டு பேரும் தனியா போய் பேசினா தானே மனசு விட்டு பேசிக்க முடியும்” என்றார் வாசுதேவ்.
‘ ரெண்டு பேரும் தனியா பேசினா மனசு விட்டு பேச மாட்டாங்க.. மானம் போற அளவுக்கு மானாவாரியா பேசுவாங்க.. இது தெரியாம நீங்களே கோர்த்து விடுறீங்களே அப்பா’ என்று தனக்குள் புலம்பியவன்.. உள்ளத்தின் குமுறலை வெளியே மறைத்து, “ மனசு விட்டு தானே தாராளமா இங்க நம்ம முன்னாடியே பேசிக்கட்டும்” என்றான் தனுஜ்.
“ நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க. இவன் எப்பவும் இப்படித்தான் விவஸ்தை இல்லாம விளையாட்டா பேசுவான்.. “ என்று தனுஜ் செயலை விமர்சித்து விட்டு.. மகனின் விருப்பத்தை நிறைவேற்ற பெண்ணின் தந்தையிடம் அனுமதி கேட்டார் வாசுதேவ்.
அவரும் அனுமதி வழங்கிட.. வீட்டின் தோட்டத்தில் இருவரும் தனிமையில் சந்திக்கச் சென்றனர்.
இருவரும் சென்ற திசையையே வெறித்தபடி அமர்ந்திருந்த தனுஜை கண்ட வாசுதேவ்..“என்ன சைலன்சர் ரொம்ப சைலன்ட் இருக்க.. “ என்று வினவிட…
“ என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க அப்பா.. அவனே உங்கள அவமானப்படுத்த நேரம் பார்த்துட்டு இருக்கான்.. நீங்களே அதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் குடுக்கிறீங்களே” என்று பொரிந்து தள்ளினான் தனுஜ்.
“ ஆமா எங்க பிள்ளை எதுக்கு எங்கள அவமானப்படுத்த நினைக்கணும்..” என்று புரியாதது போல் வினவினார் வாசுதேவ்.
“ அவனுக்கு பிடிக்காத கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுனா.. அவமானப்படுத்த நினைக்காம ஆரத்தியா எடுப்பான்!” என்றான் தனுஜ்.
“ ஆமா என் பையனுக்கு எதுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.. “ என்று அடுத்த கேள்வி எழுப்பினார் வாசுதேவ்.
“ என்னப்பா புரியாம பேசுறீங்க அவன் தான்.. வேற ஒரு பெண்ணை காதலிக்கிறான்ல அப்புறம் எப்படி இந்தக் கல்யாணத்துக்கு சம்பாதிப்பான்.. “ என்றான் தனுஜ்.
“ அவன் காதலிக்கிற பெண்ணே இது தான். அப்புறம் எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான்.. “ என்றார் வாசுதேவ்.
“ அப்போ தேவ் விஷல்யாவை காதலிச்ச விஷயம் உங்களுக்குத் தெரியுமா?, “ என்று அதிர்ச்சியுடன் தனுஜ் வினவிட.. “ எனக்கு மட்டும் இல்ல… இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும்.. “ என்றார் வாசுதேவ்.
“ எல்லாருமா.. எந்த எல்லாரும்.. “ என்று கேட்டபடி சுற்றும் முற்றும் பார்க்க.. அதுவரை இருவருக்கும் நடந்த வாக்குவாதங்களை கவனித்தபடி அமைதியாய் அமர்ந்திருந்த பெரியவர்கள் மூவரையும் கவனித்து.. “ ஓ அப்போ இதையெல்லாம் உங்க பிளான் தானா.. குடும்பமா சேர்ந்து என் நண்பனை ஏமாத்தப் பாக்குறீங்களா.. இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். இப்பவே போய் என் நண்பனை இந்த சதியில இருந்து மீட்டுட்டு வரேன். “ என்று வேகமாய் எழுந்து அமுதேவ் விஷல்யா சென்ற திசைக்கு ஓட முயன்றான் தனுஜ்.
அவனை இழுத்து பிடித்து பழைய இடத்தில் அமரவைத்து.. “ சும்மா துள்ளாத.. எந்தப் பிளானும் பண்ணல… தற்செயலா பொண்ணு பார்த்தோம். அப்புறம் தான் விஷல்யா எல்லா விவரத்தையும் சொன்னா.. “ என்றார் வாசுதேவ்.
“ இருந்தாலும் இப்படி எல்லாரும் சேர்ந்து என் அப்பாவி நண்பனை இப்படி மாட்டி விடக்கூடாது” என்று தனுஜ் கூறிட..
“ உங்க நண்பன் இன்னும் விஷல்யாவை காதலிக்கிற விஷயம் தெரியுமா… ?, “ என்றார் தாமோதரன்.
“என் நண்பன் காதல் உண்மைங்க அதுக்காக அவனை ஏமாத்துவீங்களா?” என்றான் தனுஜ்.
“ தேவ் மட்டும் இல்ல.. விஷல்யாவும் தேவ்வை காதலிக்கிறா… அவனுக்காக அவ எதையும் செய்வா. அவங்க கல்யாணத்தை நிறுத்த முயற்சிப் பண்ணுனா உன்னை கொலையும் செய்வா” என்று மிரட்டினார் வாசுதேவ்.
“என்னது கொலையா?,”என்று அதிர்ச்சியில் வாயைப் பிளந்தவன்… “ இதெல்லாம் ரொம்ப தப்பு… “ என்று அழுகுரலில் கூறினான் தனுஜ்.
“ எது தப்பு.. பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு ஆயிரத்தெட்டு கண்டிசன் போட்டு.. காதலிச்ச பொண்ணு பாதியிலேயே கழட்டி விடுறது தான் தப்பு. நியாயப்படி பார்த்தா உன் நண்பனுக்கு கல்யாணம் பண்ணி வைக்ககூடாது. லாக்கப்புல தான் வைக்கணும். என் மருமக நல்லவ அதனால தான் உன் நண்பன மன்னிச்சு சும்மா விட்டதும் இல்லாம.. பாவம் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னும் சொல்லிருக்கா. இந்த கல்யாணம் மட்டும் நடக்கலன்னா. பெத்தப் பிள்ளைன்னு கூட பார்க்காம நானே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து உன் நண்பன புடிச்சு உள்ள தள்ளிடுவேன்.. “ என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார் பானுஸ்ரீ.
“பாக்க சீரியல்ல வர்ற அம்மா கேரக்டர் மாதிரி அமைதியா இருந்துட்டு எவ்வளவு வில்லத்தனமா யோசிக்கிறீங்க அம்மா. பாவம் தேவ் உண்மை தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவான்.. “ என்று நண்பனுக்காக இரக்கப் பட்டான் தனுஜ்.
“ உண்மை தெரிஞ்சாத் தானே.. நீ உளராம இருக்கிற வரைக்கும் எதுவும் தெரியாது “ என்றார் வாசுதேவ்.
“ நான் எதுவும் சொல்லாமலேயே.. என் நண்பன் இந்த கல்யாணத்த நிறுத்துவான். இப்போ தனியா பேசிட்டு வந்து இந்தப் பொண்ணை பிடிக்கலன்னு சொல்லப் போறான். அப்போ இந்த சதிகார முகத்தை தூக்கி எங்க வைச்சுப்பீங்கன்னு நானும் பார்க்கிறேன்” என்று சவால் விடுத்தான் தனுஜ்.
“ உன் நண்பனை எப்படி சமாளிக்கணும் சம்மதிக்க வைக்கணும்னு என் மருமகளுக்கு தெரியும்.. அவன் வந்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவான்.. அப்போ இந்தக் குரங்கு முகத்தை தூக்கி எங்க வைச்சுகிறன்னு நானும் பார்க்கிறேன்“ என்று பதிலுக்கு சவால் விடுத்தார் வாசிதேவ்.
‘ என்ன பட்டுன்னு குரங்குன்னு சொல்லிட்டாரு.. டேய் நண்பா என் மானமே நீ சொல்லுற பதில்ல தான்டா இருக்கு’ உள்ளுக்குள் நண்பனிடம் பேசிக் கொண்டான் தனுஜ்.
மகளின் விருப்பத்திற்காகவும் கணவரின் வார்த்தைக்காகவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, அதுவரை நடந்ததை அமைதியுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தாமரை.. தன் கணவரை நெருங்கி “ என்னங்க இங்க என்ன நடக்குது, பொண்ணுக்கு விருப்பம் இருக்கிற மாதிரி அந்தப் பையனுக்கும் கல்யாணத்துல விருப்பம் இருக்குன்னு தானே சொன்னீங்க.. இந்தப் பையன் என்னெனவோ சொல்லுறான், இங்க நடக்கிறத எல்லாம் பார்த்தா ஏதோ தப்பா இருக்கிற மாதிரி தெரியுதே! “ என்றார்.
கணவன் மனைவி இருவரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பானுஸ்ரீ.. “ நீங்க நினைக்கிற மாதிரி இங்க எதுவும் தப்பு நடக்கல.. இரண்டு பேருக்கும் கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டாண்டின் இருக்கு, அதை அவங்களே பேசிக்கிட்டா சரியாப் போகும்னு தான் தனியாப் பேச அனுப்பி வைச்சிருக்கோம். நீ கவலைப் படாதீங்க சம்மந்தி” என்று தன் வருங்கால உறவுக்கு ஆறுதல் கூறினார்.
‘ கடவுளே நடக்கிறது என் பொண்ணோட நல்லதுக்கா இருந்தா இந்தக் கல்யாணம் நடக்கட்டும்… இல்லனா நீயே இதை நிறுத்திடு.’ என்று கடவுளின் மீது ஆதீத நம்பிக்கை கொண்டவர் மனமுருகி இறைவனை வேண்டிக் கொண்டார் தாமரை.
தனியே பேசச் சென்ற இருவருக்கும் இடையில் சிலநொடி நேரம் பெரும் அமைதி நிலவிட.. நொடிகளின் நிசப்தத்தை கலைக்கும் விதமாய் அமுதேவ் பேசத் துவங்கினான்.. “ அப்புறம் மேடம் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல… ஒருத்தனை காதலிச்சு கழட்டி விட்டோமேன்னு குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம இன்னொருத்தனை கல்யாணம் பண்ண ரெடியாகிட்ட.. உனக்கெல்லாம் வெட்கமாவே இல்லையா. “ என்று கோபமாய் துவங்கியவன் அப்போதும் விஷல்யா தலை நிமிராமல் அமைதியாய் இருக்கக் கண்டு.. “ என்னடா.. நம்மளச் சொல்லுறானே! இவனும் பொண்ணுப் பார்க்கத் தானே வந்திருக்கான், இவன் மட்டும் யோக்கியமான்னு யோசிக்கிறாயா?, நான் இங்க என் அப்பாவுக்காகத் தான் வந்தேன், அதுவும் பொண்ணைப் பிடிக்கலன்னு சொல்லனுங்கிற முடிவோட தான் வந்தேன். உன்னை மாதிரி பொண்ணுப் பார்க்க வந்த பையனை மயக்கணும்னு இப்படி மோகினிப் பிசாசு வேஷம் போட்டுட்டு வந்து நிக்கல..” என்று விடாமல் வசைமாரி பொழிந்தான் அமுதேவ்.
‘அடப்பாவி உனக்குப் பிடிக்கும்னு கஷ்டப்பட்டு புடவைய சுத்திட்டு வந்து நிக்கிறேன்.. பட்டுன்னு மோகினிப் பிசாசுன்னு சொல்லிட்ட.. ‘ என்று எண்ணியவள், அமுதேவ் வார்த்தையில் உண்டான கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கஷ்டப்பட்டு வாராத கண்ணீரை வரவழைத்து குனிந்த தலை நிமிராது சிறு சிறு முனங்களுடன் அழுவது போல நடிக்கத் துவங்கினாள் விஷல்யா.
“ இங்க நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்னடான்னா குலுங்கிக் குலுங்கி சிரிச்சுட்டு இருக்க?” என்று அதையும் கோபமாகவே வினவினான் அமுதேவ்.
‘ என்னது குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறேனா? இவன் கிட்ட இந்தச் சீன் எல்லாம் எடுபடாது போல.. ஸ்ட்ரைட்டா களத்துல இறங்கிட வேண்டியது தான்..’ என்று அதுவரை குனிந்திருந்த தலையை நிமிர்த்தி.. “ அம்மு” என்று கதறலுடன் அழைத்தாள் விஷல்யா.
விஷல்யா விழிகள் கண்ணீரில் கலங்கி இருப்பதைக் கண்டு மனம் துடித்தாலும் அதை வெளிக்காட்டாது.. “ இப்போ என்ன சொல்லிட்டேன்னு அழுகுற.. வழக்கமா இது மாதிரி நான் கோபமா பேசினா பெண் சுதந்திரம், சம உரிமைன்னு பக்கம் பக்கமா வசனம் பேசி என் வாய் அடைப்ப.. இப்போ என்னடான்னா இப்படி அழுதுட்டு இருக்க!, உனக்கு என்னாச்சு?” என்றான் அமுதேவ்.
“ உங்கள மதிக்காம, கோபமா பேசிக் காயப்படுத்தின பழைய விஷல்யா இப்போ இல்ல, உங்கக் கண்ணு முன்னாடி நிக்கிறது புது விஷல்யா. “ என்று அதே கண்ணீர்க் குரலில் கூறினாள் விஷல்யா.
“ புது விஷல்யானா எனக்கு புரியல.. என்னை மறந்துட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதைப் பத்தி சொல்லுறியா?” என்று குழப்பத்துடன் வினவினான் அமுதேவ்.
இல்லை என்பது போல சோகப் பதுமையாய் தலையசைத்தவள்.. “ நீங்க நினைக்கிற மாதிரி, யாரோ ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நான் இப்படி ரெடியாகி நிக்கல.. எங்க வீட்டுல மாப்பிள்ளைன்னு சொல்லி உங்கப் போட்டோ காட்டினதுக்கு பிறகு தான் இந்தக் கல்யாணத்துக்கே நான் சம்மதம் சொன்னேன்” என்று விடாமல் தன் நடிப்பைத் தொடர்ந்தாள் விஷல்யா.
“ ஹே.. கையும் களவுமா மாட்டிகிட்டன்னு சும்மா நடிக்காத” என்று அவள் கண்ணீர்க் கதை உண்மையாயென அறிய மேலும் கோபத்தை விடாமல் தொடர்ந்தான் அமுதேவ்.
“ உன்மையத் தான் சொல்லுறேன் அம்மு.. உன்னை விட்டுப் பிரிஞ்சதுல இருந்து நான் நானாவே இல்ல. என்னால உன்னை மறக்க முடியல” என்று கன்னதில் வழியாத கண்ணீரை வலியத் துடைத்து தன் நடிப்புக்கு மேலும் வலு சேர்த்தாள் விஷல்யா.
“ நீ என்ன சொல்லுற? நீயும் என்னை மறக்க முடியாம என் ஞாபகத்துல தான் இருக்கியா?. அப்போ நீ அன்னைக்கு பேசுன வார்த்தை தப்புன்னு உனக்கு புரிஞ்சிடுச்சு அப்படித் தானே” என்றான் அமுதேவ்.
‘ இவன் எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறான்’ என்று யோசனையாக நின்றவள் ஆமாம் என்பது போல தலையசைக்க.. “தப்புன்னு தெரிஞ்சிடுச்சுல இன்னும் என்ன யோசிச்சுட்டு இருக்க? ஹும் கேளு” என்றான் அமுதேவ்.
“ என்ன கேட்கணும்?” என்று குழப்பத்துடன் விஷல்யா வினவ.. “ சாரி கேளு.. நீ சாரிக் கேட்டதுக்கு பிறகு நம்மக் கல்யாணத்தைப் பத்தி நான் யோசிக்கிறேன்” என்றான் அமுதேவ்.
‘ இப்போ கேட்குறேன், கல்யாணத்துக்கு பிறகு இதுக்கெல்லாம் மொத்தமா சேர்த்து வைச்சுக் குடுக்கிறேன்’ என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டவள், “ சாரி அம்மு, அன்னைக்கு நான் பேசினது தப்பு” என்று சத்தமே வெளி வராதபடி ரகசியம் போல கிசுகிசுத்தாள் விஷல்யா.
“ சாரி எனக்கு சொல்லுறியா?, இல்ல உனக்கு நீயே சொல்லிக்கிறியா?” என்று அதட்டலுடன் வினவினான் அமுதேவ்.
‘ என்ன சத்தம் ஓவரா இருக்கு.. ஒருவேளை என் பொறுமையை சோதிக்க இப்படி சீன் போடுறானோ?’ என்று எண்ணிக்கொண்டவள், தன்னை விட்டு விலக முயற்சிக்கும் பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்து.. “சாரி அம்மு..” என்று சத்தமாக கூறினாள்.
“சவுண்ட்ஸ் சோ குட்” என்று புருவம் உயர்த்தி வியப்பைக் காட்டியவன், “ என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருகேன்னா அப்போ என் கண்டிஷன்ஸ்க்கும் ஓகே சொல்லுறன்னு தானே.. அர்த்தம்?” என்று சந்தேகத்துடன் அமுதேவ் வினவ.. சற்றும் யோசிக்காமல் ஆமாம் என்று தலையசைத்தவள்.. “ நீ சொன்ன படியே நடந்துப்பேன் அம்மு” என்று வாய் மொழியாகவும் சம்மதம் தெரிவித்தாள் விஷல்யா.
“ நீ எனக்காக இந்த அளவுக்கு இறங்கி வரும் போது.. நானும் உனக்காக என் கோபத்தை விட்டுக் கொடுத்து உன்னை மன்னிச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லுறேன். ஆனா ஒரு கண்டிஷன்.. கல்யாணத்துக்கு முதல் தேதி வரை உன்னை கண்காணிச்சுட்டு தான் இருப்பேன், உன் நடவடிகையில கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சாலும் எதைப் பத்தியும் யோசிக்காம கல்யாணத்தை நிறுத்திடுவேன்.” என்று நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்தான் அமுதேவ்.
‘ இந்த நடிப்பை கல்யாணம் வரைக்கும் கண்டினியூ பண்ணனுமா? கஷ்டம்டா சாமி., கல்யாணம் வரைக்கும் தானே.. அதுக்கு அப்புறம் உன் குடுமி என் கையில.. கண்டிஷனா போடுற.. கண்டிஷன். கல்யாணத்துக்கு பிறகு உன்னை கவனிச்சுக்கிறேன்’ என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு அமுதேவ் நிபந்தனைக்கு தலையாட்டினாள் விஷல்யா.
இருவரும் தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை பேசித் தீர்த்துக் கொண்டு வீட்டினுள் வர.. அங்கு மற்றவர்கள் தனுஜை உண்டு இல்லை என்று உருக்குலைத்து முடிக்க நேரம் சரியாக இருந்தது.
அடக்க ஒடுக்கத்தின் மறுவுருவம் போல விஷல்யா தாமரை பின் சென்று தன்னை மறைந்து நின்று கொள்ள..
“ நண்பா.. உன் முடிவு என்னன்னு சொல்லுடா?” என்று தனுஜ் அவசரப்படுத்திட.. “ நீ ஆசைப்பட்ட மாதிரியே.. விஷல்யாவை கல்யாணம் பண்ணிட்டு லைப்ல செட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன் டா” என்று நண்பனின் நம்பிகையில் இடியை இறக்கினான் அமுதேவ்.
“ பொண்ணு மாப்பிள்ளை இரண்டு பேருக்கும் கல்யாணத்துல சம்மதம்.. இனி நடக்க வேண்டிய வேலைய நாம கவனிப்போம்” என்று வாசுதேவ் மகிழ்வுடன் கூறிட… அதற்கு தாமோதரனும் ஆமோதிக்க.. நினைத்தது நினைத்தபடி நடந்துவிட்ட நிறைவுடன் அமுதேவ் குடும்பம் அங்கிருந்து கிளம்பியது…
காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது.. “ நீ இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொன்னதும் நம்ம சைலன்சர் முகத்துல ஈயாடல” என்று அமைதியாய் வந்து கொண்டிருந்தவனை வம்பிற்கு இழுத்தார் வாசுதேவ்.
“ ஜெயிச்சுட்டோம்ன்னு ஆணவத்துல பேசாதீங்க… உண்மை தெரிய வரும் போது எதுவும் மாறலாம்” என்று பூடகமாக எச்சரித்தான் தனுஜ்.
“ டேய்.. கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு அமைதியா வா” என்று நண்பனை கோபமாய் அதட்டி அமைதிப் படுத்தியவன்.. “ அவன் ஏதோ உண்மை அது இதுன்னு உளறுறான்… நீங்க இதை பெருசா எடுத்துக்காதீங்க” என்றான் அமுதேவ்.
“ இவன் எப்பவும் இப்படித் தான்னு எங்களுக்கு தெரியும், இனி நீயும் இவன் உளறல பெருசா எடுத்துக்காத.. “ என்றார் வாசுதேவ்.
காரில் வெகுநேரம் ஏதோ யோசனையுடன் அமைதியாக வந்த பானுஸ்ரீ… “ கல்யாண ஏற்பாடு பண்ண ஆரம்பிக்கலாம்ல.. உனக்கு இதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லையே” என்றார்.
“ என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல, நீங்க கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டை கவனிங்க அப்பா” என்று எப்போதும் போல அன்னையின் கேள்விக்கு தந்தையிடம் பதில் கூறினான் அமுதேவ்.
பெரியவர்களை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு வந்தவன், வந்தும் வராததுமாக.. தனுஜ் முதுகில் கோபமாய் குத்தி.. “ கொஞ்ச நேரத்துல அப்பாகிட்ட எல்லா உண்மையும் உளறப் பார்த்தியே… நீயெல்லாம் நண்பானா” என்றான் அமுதேவ்.
காரில் வரும் போது உண்மை என்றது அமுதேவ் விஷல்யா காதல் குறித்த உண்மை என்று எண்ணிக்கொண்டு அவன் கோபமாய் பேசிக்கொண்டே செல்ல…
“ யாரு நானா உளருறேன்.. நீ தான் டா ஸ்டடி மைன்ட் இல்லாம… நிமிசத்துக்கு ஒரு தடவை மாத்தி மாத்தி உளறுற.. என்கிட்ட பெரிய இவன் மாதிரி இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவேன்.. எல்லாரையும் அசிங்கப்படுத்திடுவேன்னு வீர வசனம் பேசிட்டு போன… அங்கப் போனதும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு வந்து நிக்கிற?” என்று கோப மிகுதியில் கடுகடுத்தான் தனுஜ்.
“ எனக்காக ஷாலு அவளையே மாத்திக்கிட்டா.. அதுனால நானும் என் முடிவை மாத்திக்கிட்டேன்” என்றான் அமுதேவ்.
“ ஏன் இந்த விபரீத முடிவு?” என்று அதிர்ச்சியுடன் தனுஜ் வினவிட.. “ என்னடா ஏன்னு கேட்குற?… நீ தான கல்யாணத்தைப் பத்தி யோசிக்க சொன்ன.. நான் உன் பேச்சை என்னைக்கு டா மீறியிருக்கேன் நண்பா..” என்றான்,
“ நீ என்னைக்கு என் பேச்சை கேட்ட…கேட்டாத் தானே மீறுறதுக்கு.. விதி வலியதுன்னு இதைத்தான் சொல்லுவாங்க போல… உன் தலையில இதுதான்னு எழுதி இருக்கும் போது அதை யாரால மாத்த முடியும்” என்று அலுத்துக்கொண்டபடி அங்கிருந்து கிளம்பினான் தனுஜ்.
“ டேய் ஏன்டா… இவ்வளோ விரக்தியா பேசுற? ஏதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் மறைக்காம என்கிட்ட சொல்லு” என்றான்.
“ நீயும் விஷல்யாவும் சேரணும்னு ஆசைப்பட்டேன்… அதை இல்லன்னு சொல்லல… ஆனா அது இப்படி நடக்காம வேற மாதிரி நடந்திருந்தா ரொம்ப சந்தோசப் பட்டிருப்பேன். இட்ஸ் ஒகே நடந்தது நடந்துடுச்சு, இனியாவது லைப்ப உனக்கு பிடிச்ச பொண்ணு கூட எஞ்சாய் பண்ணு நண்பா.. “ என்று வாழ்த்துக் கூறி அங்கிருந்து விடைபெற்றான் தனுஜ்.
வலிமை மிகுந்த
உண்மைகள் சில நேரம்..
கூரிய வாள் போல்..
உரிமையான உறவுகளை
நம்மிடமிருந்து பிரித்து எறியும் போது…
வலி தராத.. சில சிறு பொய்களை
கேடயமாய் உறவைக் காத்துக்கொள்ள…
பயன்படுத்துவதில் தவறில்லை..