8..

மறக்க வேண்டுமென்று  

மனதில் புதைத்து வைக்க..

மண்ணைக் கீறி

வெளிவரும் விதை போல..

என் மனதைக் கிழித்து..

விருட்சமாய் விரிந்து..

என்னை விழுங்கப் பார்க்கிறது..

உன் நினைவுகள்..

கல் மனதையும் கரைக்கும் வித்தை அறிந்த காதல், பெண்ணியம் பேசும்  பெண் மனதை மட்டும் விட்டு வைக்குமா என்ன?.. அமுதேவ் அன்னையிடம் பேசிவந்ததில் இருந்து…  மனம் அவனையே நினைக்க… தன்னை விட்டுக் கடந்து சென்றதாய் எண்ணிய காதல்  தன்னுள் மீண்டும் உயிர்த்தெழுவதாய் உணர்ந்தாள் விஷல்யா.

எதிர்காலம் இல்லாதக் காதல் என்று  தனக்குத் தானே  சமாதானம் செய்துக் கொண்டு  அன்றாட பணியில் ஈடுபட முயன்றவள் மனம் மீண்டும்    அமுதேவ்  நினைவில்  உழன்றுத் தவிக்க..  சிந்தனையை மாற்றும் முயற்சியாக கடற்கரைக்கு சென்று   கடல் அலையில் கால் நனைத்தபடி தனக்குள் எழும் காதல் உணர்வுகளை அடக்க முயன்றாள் விஷல்யா.

 காலையும் இல்லாத  மாலையும்  அல்லாத மதியப் பொழுதின்   கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது… கை கோர்த்தபடி நடத்த காதல் ஜோடிகள் மேலும் அவள்  உணர்வுகளை  தூண்டிட..  காதலை  பரிமாறிக்கொண்ட காலத்தில் இதே போல கால நேரம் பாராது கடற்கரையில் கைகோர்த்து நடந்த போது நிகழ்ந்த உரையாடல் உள்ளுக்குள் மீண்டும் எதிரொலித்தது.. 

“எத்தனையோ தடவை பீச்சுக்கு வந்திருக்கேன், ஆனா இப்படி காதலிச்சு.. காதலிச்சவன் கூட கடலை போட்டுட்டே..  கை கோர்த்து ஜோடியா சுத்தி வருவேன்னு கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்லை” என்று தன் செயலையே வியந்தபடி கூறினாள் விஷல்யா.

“ ஏன்?” என்று ஒற்றை வரியில் அமுதேவ் காரணம் வினவிட … “ ஏன்னா என்ன அர்த்தம்?,  உனக்கு ஓகே சொல்லுற வரைக்கும் காதலிக்கிற ஐடியாவே இல்லை எனக்கு!. உனக்கு எப்படி?, காதலிச்சு தான் கல்யாணம் பண்ணணுங்கிற கனவோடயே இருந்தியோ?” என்று அமுதேவ் காதல் முடிவு குறித்து வினவினாள் விஷல்யா.

“ கனவெல்லாம் இல்ல.. என் பாட்டி பாக்குற பொண்ணத் தான் கல்யாணம் பண்ணனும் முடிவோட இருந்தேன்,  எனக்கு பொண்ணு தேடப் பாட்டி இப்போ உயிரோட இல்ல. அதனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணத் தேடிக் கண்டுபிடிச்சு அவளையே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு எடுத்தேன்” என்றான் அமுதேவ்.

“ பாட்டின்னா அவ்ளோ இஷ்டமா?, உனக்கு பாட்டி மட்டும் தான் இருக்காங்களா!,  வேற யாரும் இல்லையா?”  என்ற விஷல்யாவின் கேள்விக்கு.. “ இருக்காங்கம, ஆனா எனக்கு பாட்டியை மட்டும் தான் பிடிக்கும், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம என் மேல பாசம் காட்டினது அவங்க மட்டும் தான்.. “ என்றான் அமுதேவ்.

“உன் பாட்டிக்கு பிடிச்சமாதிரி பொண்ணத் தேடுறேன்னு சொல்லிட்டு.. ரோட்டுல போற வர பொண்ணுங்கள நல்லா சைட் அடிச்சு இருக்க.. அப்படித்தானே!.. ஆமா இதுவரைக்கும் எத்தனை பொண்ணுங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ணி ஃப்ளாப் ஆச்சு.. “ என்று கிண்டலாய் வினவினாள் விஷல்யா.

“ உண்மைய சொன்னா நம்புவியா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேலியான கேள்வியுடன் நிறுத்தியவன் மேலும் தொடர்ந்தான்…” நிறைய பெண்களப் பார்த்தேன்,  ஆனா யாரையும் உன் அளவுக்கு பிடிக்கல, என்னை ஒரே பார்வையில் இம்ப்ரஸ் பண்ணுனதும் நீ தான்.  நான் ஃபர்ஸ்ட் ப்ரொபோஸ் பண்ணுனதும் உனக்கு தான்.  என்னோட பஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ்வும் நீ மட்டும் தான்… “ என்றான் அமுதேவ்.

“ என்ன பட்டுனு லாஸ்ட் லவ்வுன்னு சொல்லிட்ட.. ஒருவேளை நாளைக்கு நமக்குள்ள செட் ஆகாம பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தா.. எனக்கு அடுத்து வேறு எந்த பொண்ணையும் நீ லவ் பண்ண மாட்டியா என்ன?” என்று குறுகுறுப்புடன் வினவினாள் விஷல்யா.

யோசனை கலந்த பார்வையுடன் இல்லை என்பது போல் மெதுவாய் தலையசைத்தவன்.. “ பிரியுற சூழ்நிலை வர விடமாட்டேன்.. “ என்று அமுதேவ் உறுதியுடன் கூறிட…. “ நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது,  ஒருவேளை நானே உன்னை பிடிக்கலைன்னு விட்டுட்டு போனா என்ன செய்வ?, “ என்றாள் விஷல்யா.

“ நீயே விலகிப் போனாலும் உன்னை தேடி வந்து காதலிச்சிட்டே தான் இருப்பேன்.. உன்னை தவிர வேற எந்தப் பொண்ணுக்கும் என் வாழ்க்கையில இடம் தரமாட்டேன். “ என்று உறுதியுடன் கூறினான்அமுதேவ்.

“நீ ரொம்ப சினிமாட்டிக்கா பேசுற அம்மு, பீ பிராக்டிகல்.. “என்று அவன் உறுதியான வார்த்தையையும் வேடிக்கையாக எடுத்துக்கொண்டு கூறினாள் விஷல்யா.

“இட்ஸ் நாட் ஜோகிங் ஷாலு. நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது. நீ தான் எனக்கு முதலும் கடைசியுமான காதல் “ என்று மீண்டும் அதே உறுதியுடனும் தீர்மானத்துடனும் கூறினான் அமுதேவ்.

 அமுதேவ்வின் தீவிரமான காதலை அனுபவித்தவள்  அளவில்லா மகிழ்ச்சியை உள்ளத்தில் உணர்த்தாள், அதை வெளிப்படுத்தும் விதமாய் சிறு வெட்கப் புன்னகையுடன் அமுதேவ்வை ஏறிட்டாள் விஷல்யா.

“ இப்படி பார்த்து என்னை டெம்ப்ட் பண்ணாத.. இது பப்ளிக்.. “ என்று அமுதேவ் காதல் கிறக்கத்தில் கூறிட… “ பப்ளிக்கா இல்லாம பிரைவேட் இடமா இருந்தா சார் என்ன பண்ணுவீங்களாம்?”  என்று கை முஷ்டியை முறுக்கியபடி குறும்புடன் வினவினாள் விஷல்யா.

“என்ன செய்வேன் என்று

கேட்காதே பெண்ணே..

நான் என்னென்னவோ

உளறிவிடுவேன்..

என் உளறல்கள்

உன்னை மேலும்

வெட்கத்தில் மூழ்கடிக்கலாம்.. “என்றான் அமுதேவ்.

“ வெட்கமா அப்படின்னா?, எனக்கு வெட்கப்படவேத் தெரியாது அம்மு.“ என்றாள் விஷல்யா.

“வெட்கப்படத் தெரியாதா? இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மேடம் என்ன செஞ்சீங்க!,” என்று கிண்டலுடன் வினவியபடி.. ஆள் அரவமற்ற இடம் பார்த்து அமைதியாய் மணலில் அமர்ந்தவன்,  அவளையும் அமரும்படி செய்கை செய்திட..

பார்ப்பவர் கண்ணை உறுத்தாத அளவில் சற்று இடம் விட்டு அமர்ந்து.. “ இப்போ இந்த இடத்துல கோபப்பட சொல்றியா!, காரணமே இல்லாம கோபப்பட்டு கத்த என்னால முடியும்.  அதுவே வெட்கப்படச் சொன்னா வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பே இல்ல.. “ என்றாள் விஷல்யா.

ஆள் அரவமற்ற இடத்தில் கூட கண்ணியத்தை கடைபிடிக்கும் தன்னவளின் செயலை எண்ணி கர்வம் கொண்டவன். அவள் விட்ட இடத்தின் தூரத்தின் அளவைக் குறைத்து.. “ அதிகமா உரிமை இருக்கிற இடத்துல தான் கோபத்தை காட்ட முடியும்.  அதே மாதிரி ஆழமான உறவு இருக்கிறவங்க கிட்ட மட்டும் தான் வெட்கத்தை வெளிப்படுத்த முடியும்.. “ என்றான் அமுதேவ்.

“ நான் தான் ஏற்கனவே சொன்னேனே… அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை..” என்று சவால் குரலில் கூறினாள் விஷல்யா.

“ ஓ அப்படிங்களா.. அப்போ நான் உங்கள வெட்கப்பட வச்சுட்டா நீங்க எனக்கு என்னத் தருவீங்க?” என்று பேரம் பேசத் துவங்கினான் அமுதேவ்.

“ரெண்டு இட்லியும் கெட்டி சட்னி வாங்கித் தரேன்.. “ என்று கிண்டலுடன் கூறினாள் விஷல்யா.

“    அதெல்லாம் எனக்கு வேணாம்” என்று முகம் சுருக்கி மறுப்பு தெரிவித்தவன் ஒற்றைக் கண்ணடித்து…

“உன் பூவிதழில்

தேன் பருக அனுமதி

வேண்டும்…

பெண்ணே..!”  என்று கிறக்கத்துடன் அவள் இதழ் பார்த்துக் கூறினான் அமுதேவ்.

“எல்லை மீறிப் போற அம்மு.. இது சரியில்ல.. “ என்று விஷல்யா அங்கிருந்து எழுந்துக் கொள்ள முயல… கைப்பற்றி இழுத்து மீண்டும் தன்னருகில் அமரச் செய்தவன்..

“  வெட்கப்பட மாட்டேன்னு சொன்ன.. அப்போ இதுக்கு பேர் என்ன?” என்று ஆர்வத்துடன் அமுதேவ் வினவ.. “ இது இது.. வந்து.. நீ ஏமாந்துப் போகக் கூடாதுன்னு வெட்கப்படுற மாதிரி நடிச்சேன்“ என்று சமாளித்தாள் விஷல்யா.

“ ஓ அப்படியா..  “ என்றவன்.. மெல்ல  நெருங்கி தோள்கள் உரசும்படி ஒட்டி அமர்ந்து.. ரகசியம் பேசுவது போல் காது அருகே குனிந்து..

“வெட்கத்தில்

சிவந்துக் கொண்டே..

வெட்கத்தின் விலை

என்னவென்று

பேரம் பேசும் பெண்ணே!..

உன் முகம் கொண்ட

வெட்கத்தின் அளவை

என் முத்தத்தால்

அளவிடவா..

உன் இதழ் மறுக்கும்

உண்மையை

என் இதழ் கொண்டு

அறிந்திடவா.. “என்று மெதுவாய் கிசுகிசுக்க..  அவன் மூச்சுக் காற்று பட்ட காது மடல் அவன் காதல் உஷ்ணத்தை உரைத்தது.

அமுதேவ் பேச்சும் பார்வையும் செல்லும் விதம் உணர்ந்து… “ உனக்கு பைத்தியம் முத்திடுச்சு… ஆளை விடு” என்று அங்கிருந்து அவசரமாய் விலகி ஓடினாள் விஷல்யா.

அன்றைய நினைவில் மூழ்கி எழுந்தவள் விழிகள் அவளையும் மீறிக் கண்ணீரில் நனைந்திருக்க… அமுதேவ் அன்று சொன்ன வார்த்தைகள் உண்மையா என்று அறிந்திட பேராவல் எழுந்தது பெண்ணவளுக்கு.

அமுதேவ் மனதில் தனக்கான இடம் என்னவென்று அறிந்திடும் வழியறியாது.. குழம்பி நின்ற.. விஷல்யா விழிகள் சற்று தொலைவில் நடந்த நிகழ்வைக் கவனிக்கத் துவங்கியது.

பார்த்ததும் பரிதாபம் கொள்ளக்கூடிய தோற்றத்தில் அழுக்கடைந்து.. அங்கங்கே கிழிந்து தொங்கிய உடையுடன் நடக்கவே சிரமப்பட்ட ஒருவன் சட்டென்று மயங்கிக் கடற்கரை மணலில் சரிந்து விழுந்திட… அதுவரை அவனை ஏதோ  விசித்திர ஜந்துவை போல் பார்த்து கடந்து சென்ற ஒரு சிலர் அவன் மயங்கி விழுந்ததும், உதவிடத் தோன்றாமல் அவசரமாய் அங்கிருந்து தூரம் விலகி சென்றனர். அதற்கு மேல் எதையும் யோசிக்காமல் மயங்கி விழுந்தவன் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து.. மயக்கத்தில் இருந்தவனின் நிலைப்பாட்டை அறிய.. அவன் நாடித் துடிப்பையும் இதயத்தின் இயக்கத்தையும் தொட்டுப் பார்த்து.. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு,   “  யாராவது இவருக்கு குடிக்கத் தண்ணீர் குடுங்க” என்று கத்திட..  அங்கங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிலரும் கண்டும் காணாதது போல் விலகி நடக்கத் துவங்கினர்.

விஷல்யா தனியே தவிப்பதை உணர்ந்த.. கடற்கரையில் விற்பனை பணிபுரியும் சிறு வியாபாரி ஒருவர் தனது கடையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து.. “ இந்தாம்மா தண்ணீர்.. முதல்ல இதைக் குடிக்க வை.. எத்தனை நாள் பசியில கிடைந்தானோ.. நான் போய் இவன் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்.. “ என்றார்.

அதுவரை மயக்கத்தில் கண்கள் திறவாமல் படுத்திருந்தவன்… சட்டென்று எழுந்து அமர்ந்து.. “ தேங்க்ஸ் மேம்.. தேங்க்ஸ் பெரியவரே!. இந்த மாதிரி  சிச்சுவேஷன்ல மக்கள் என்ன மாதிரி ரியாக்ட் பண்றாங்க, எத்தனை பேர்  உதவ நினைக்கிறாங்கன்னு பார்க்கிறதுக்காக எங்க டீம் மெம்பர்ஸ் நடத்தின சோசியல் எக்ஸ்பிரிமெண்ட் தான் இது. காலையிலிருந்து இதே மாதிரி பத்து தடவைக்கு மேல நடிச்சிருப்பேன், நீங்க இரண்டு பேர் மட்டும் தான் உதவி செய்ய வந்தீங்க..  “ என்றான்.

“நல்லா நடிச்சபோ..  நான் கூட உண்மைன்னு நினைச்சுப் பதறிட்டேன்.. “ என்று உதவிட வந்த பெரியவர் கூறிட.. “ என்ன செய்ய பெரியவரே! உங்க காலத்துல யாருக்கு கஷ்டம் வந்தாலும் யார் எவருன்னு கூட யோசிக்காம விரோதியா இருந்தாக்  கூட.. முடிஞ்ச அளவுக்கு உதவியும் செய்வீங்க. ஆனா இப்போ.. தனக்கு பிடிச்சவங்களுக்கு பிரச்சனைனா மட்டும் தான் துடிக்கிறாங்க…  மத்தவங்களைக் கண்டுக்கிறதே இல்ல.. யார் எக்கேடு கெட்டு போனா நமக்கு என்ன நாம நம்ம வேலையை பார்ப்போம்னு நகர்ந்து போயிட்டேயிருக்காங்க. அதுனால அடிக்கடி இது மாதிரி டெஸ்ட் வச்சு மனுஷங்க மனுஷங்களா இருக்காங்களான்னு செக் பண்ணிக்க வேண்டியதா இருக்கு. “  என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தான் சோதனை மேற்கொண்டவன்.

“ நீங்க நல்ல நோக்கத்துல தான் இதையெல்லாம் செய்யுறீங்க ஆனா உங்கள மாதிரி ஆட்கள் சோசியல் எக்ஸ்பிரிமெண்ட், என்டர்டைன்மென்ட் பிராங்க் ஷோன்னு சொல்லிட்டு இது மாதிரி அடிக்கடி அங்கங்க கேமராவை மறைச்சு வைச்சுட்டு நடிக்கிறதால உண்மையா உதவி தேவைப்படுறவங்களுக்கு கூட மக்கள் உதவி செய்ய யோசிக்கிறாங்க. “ என்று இலவச அறிவுரை வழங்கி விட்டு விலகி சென்றவள் மனதில் அமுதேவ் மனதை அறிந்திட  ஒரு யோசனை தோன்றியது.

அமுதேவ் காதலை பரிசோதிக்கும் முயற்சிக்கு தனக்கு உதவும்படி.. தனது தோழியான கீர்த்தனாவை தொடர்பு கொண்டாள் விஷல்யா.

தன் திட்டத்தை முழுவதுமாய் விவரித்து முடித்தவள்… “ இதுல உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே கீர்த்தி.. உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியும் தானே! “   என்றாள் விஷல்யா.

 “ தாராளமா முடியும்.. “ என்று தோழிக்கு உதவிட சம்மதம் தெரிவித்தாள் கீர்த்தனா.

பேசிக் கொண்டபடி இருவரும் சற்று நேரத்தில்.. கீர்த்தனாவின் உறவினரின் மருத்துவமனையில் சந்தித்து கொண்டனர். அங்கிருந்தபடியே.. கீர்த்தனாவின் தொலைபேசியில்  குரல் மாற்று பயன்பாட்டு செயலியை (வாய்ஸ் சேஞ்சர் ஆப் )  தரவிறக்கம் செய்து.  அதன் வாயிலாக அமுதேவ் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர்.

“ ஹலோ உங்க கேர்ள் ஃப்ரெண்ட்க்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு, நீங்க உடனே ஹாஸ்பிடல் வந்துடுங்க ” என்று அவன் வந்து சேர வேண்டிய இடத்தை சுருக்கமாக கூறிவிட்டு.. அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தாள் விஷல்யா.

“ இது ஒர்க் அவுட் ஆகும்னு நம்புறியா ஷாலு..?” என்று சந்தேகத்துடன் கீர்த்தனா வினவிட.. “ எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும்னு தெரியல, ஆனா இது ஒர்க் அவுட்டானா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். “ என்றாள் விஷல்யா.

தன் மீது மாறாத அன்பும் காதலும் இருந்தால் அமுதேவ் நிச்சயம் தன்னைத் தேடி  வருவான் என்ற எதிர்பார்ப்புடன் விஷல்யா காத்துக் கொண்டிருக்க..

அவள் எதிர்பார்ப்பை வீணடிக்காமல்.. அடுத்த பத்து நிமிடத்திற்குள்  பதற்றமான நடையுடன் மருத்துவமனை வளாகம் வந்து சேர்ந்தான் அமுதேவ்.

“ டேய் நண்பா, உனக்கு என்னாச்சுடா ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?, இப்போ ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு வந்திருக்கோம்“ என்று யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமல் பதட்டத்துடன்  அலைந்து கொண்டிருந்தவனை தடுத்து நிறுத்தி விசாரித்தான் அவனுடன் வந்த நண்பன் தனுஜ்.

“ ஷாலுவுக்கு ஆக்சிடென்ட்ன்னு போன் வந்தது” என்று தன் பதற்றமான தேடலின் காரணம் கூறினான் அமுதேவ்.

“ யாரு ஷாலுவா.. நீ காதலிச்ச பொண்ணா?,” என்று அதிர்ச்சியாகி தனுஜ் நின்றிட.. மருத்துவமனை வரவேற்பில் விஷல்யா குறித்து விசாரித்தான் அமுதேவ்.

“ சாரி சார் உங்களுக்கு யாரோ ராங் இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்காங்க.. அப்படி யாரும் இங்க அட்மிட் ஆகல .” என்றார் வரவேற்பில் இருந்த பெண்மணி.

“ப்ளீஸ் மேடம் இன்னொரு தடவை நல்லா செக் பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க, இந்த ஹாஸ்பிடல் தான் சொன்னாங்க.. ” என்று வற்புறுத்தினான் அமுதேவ்.

“ காலையிலிருந்து நான் தான் ரிசப்ஷன்டியூட்டில இருக்கேன் சார்.  அப்படி ஒரு  ஆக்சிடெண்ட் கேஸ் வந்ததா இல்லையான்னு எனக்குத் தெரியாதா?, நீங்க சொல்லுற நேம்ல எந்தக் கேஸ்ஸும் ஹாஸ்பிடலுக்கு வரல  வேற எங்கேயாவது போய் விசாரிங்க.. “ என்றார் வரவேற்பு பெண்மணி.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவிப்புடன் அமுதேவ் தயங்கி நிற்க… “   ஷாலு அட்மிட் ஆகியிருக்கிறாளா?, இல்ல அவகிட்ட வம்பு பண்ணி அடிவாங்கிட்டு வேற எவனாவது அட்மிட்டாகி இருக்கிறானான்னு தெளிவா விசாரிச்சயா?, “ என்றான் தனுஜ்.

“உங்க கேர்ள் பிரெண்டுக்கு ஆக்சிடென்ட்ன்னு இங்க வரச்சொன்னான், வேற விபரம் விசாரிக்கிறதுக்குள்ளப் போன கட் பண்ணிட்டான் “ என்று விபரம் கூறினான்அமுதேவ்.

“கிழிஞ்சது போ.. ஏன்டா உனக்கு கொஞ்சமாவது மண்டையில மூளை இருக்கா?, இல்ல உன் ஆள் உன்னை கழட்டி விடும் போதே.   மூளையையும் சேர்த்து அவ கிட்ட கழட்டிக் குடுத்துட்டு வந்துட்டியா?,“ என்று தனுஜ் எரிச்சலுடன் வினவிட… அவனை கோபமாய் முறைத்தான் அமுதேவ்.

“ சும்மா முறைச்சுட்டு நிக்காம கிளம்பு… “ என்று நண்பனை இழுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான் தனுஜ்.

“ கையை விடுடா.. “ என்று கையை விலக்கிக் கொண்டு அமுதேவ் கோபமாய் முறைக்க.. “நீ முட்டாள் தனமா நடந்துகிட்டு என்னை ஏன்டா முறைக்கிற?, நீ படிச்சவன் தானா.. நான் தெரியாம தான் கேக்குறேன்.. நீ படிச்சவன் தானா..?யாரோ முன்னப் பின்னத் தெரியாதவன் போன் பண்ணி கேர்ள் பிரிண்ட்ன்னு சொன்னதும் பதறி அடிச்சு இங்க வந்து நிக்கிறியே!, யாரு என்னனு விசாரிக்கமாட்டயா… ?“ என்று எரிச்சலுடன் பேசினான் தனுஜ்.

“கேர்ள் பிரெண்டுக்கு ஆக்சிடெண்ட்ன்னு சொன்னதும்.. ஷாலு தான் என் மைண்ட்ல வந்தா.. எனக்கு இருந்த ஒரே கேர்ள் ஃப்ரெண்ட் அவ மட்டும் தானா..  அவளுக்குத் தான் ஏதோ பிரச்சனைன்னு ஓடி வந்தேன்.. அதுக்கு போய் முட்டாள் அது இதுன்னு ரொம்ப ஓவரா பேசுற ?, “ என்று சீறினான் அமுதேவ்.

“  அதைத் தான் நானும் உனக்கு  புரிய வைக்க முயற்சி பண்ணுறேன் டா..  கேர்ள் பிரென்ட்ன்னு தான் சொன்னான், அவன் ஷாலு பேரை மென்சன் பண்ணல… சரி அப்படியே  ஷாலுக்கு தான் ஆக்சிடென்ட்னு வை   உனக்கு எதுக்கு போன் பண்ணனும் அவங்க அப்பா  அம்மாவுக்கு தானே  போன் பண்ணி இன்பார்ம் பண்ணனும்!. அவளுக்கு ஒரு ஆபத்துன்னா   நேரடியா உன்னைக் கூப்பிட்டு  இன்பார்ம்   பண்ணுற  அளவுக்கு உங்கக் காதல் வேர்ல்ட் பேமஸ்ஸா என்ன?. தெருக் கோடி தாண்டினா உங்களை யாருக்கும்   தெரியாது…   இதுக்கு இத்தனை பில்ட்டப்பு… “ என்று அலுத்துக்கொண்டாள் தனுஜ்.

    “ ஒருவேளை ஷாலுவே மனசு மாறி… என் பேரைச் சொல்லிருக்கலாம்ல” என்று   ஒருவித ஏக்கம் கலந்த ஆர்வத்துடன் வினவினான் அமுதேவ்.

“ ஓவர் கற்பனை  உனக்கு நல்லது இல்ல மாச்சான்.. மனசு மாறுறதா  இருந்தா…  பிரிஞ்சு போன அடுத்த நாளே உன்னைத் தேடி  வந்திருக்கணும், ஆறு மாசம் வாராதவ இப்போ  மட்டும் வருவான்னு எப்படி நம்புற. இந்த மாதிரி நடக்கவே நடக்காத  பாண்டசி கதை  யோசிக்கிறதுக்கு பதிலா..   அந்த நம்பருக்கு மறுபடியும் கால் பண்ணி என்ன ஏதுன்னு டீடெயில் கேளு” என்று யோசனை கூறினான் தனுஜ்.

 நண்பனின் வார்த்தையில் இருந்த உண்மை புரியவும்… உடனே தனக்கு தகவல் தந்த எண்ணை தொடர்பு கொண்டான் அமுதேவ்.

“ சாரி சார். லாஸ்ட் ஒரு நம்பர் மாறி போச்சு.  என் ஃப்ரெண்டுக்கு சொல்ல வேண்டிய இன்ஃபர்மேஷன் உங்க கிட்ட சொல்லிட்டேன். “ என்றாள் விஷல்யா.

விஷல்யா இயல்பாய் தன் குரலிலேயே  பேசினாலும் குரல் மாற்று செயலியின் மூலம் அதை ஆண் குரல் போல் அனுமானித்த அமுதேவ்.. “ டேய் மடையா உனக்கு அறிவு இல்லை!. நம்பர சரியா டயல் பண்ண தெரியாது!, உன்னால என் ஷாலுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்துட்டு.. ஹாஸ்பிடல்ல பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கேன். நீ மட்டும் இப்ப என் கையில கிடைச்ச.. அடுத்த நிமிஷம் உனக்கு சங்கு தான்.. “ என்று கோப மிகுதியில் எரிச்சலுடன் கத்திவிட்டு அழைப்பை துண்டித்தான் அமுதேவ்.

“ அவன ஏன்டா கத்துற?, இப்படி நடந்ததும் நல்லதுக்குத்தான்.. நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு மேலாச்சு.. நீ வேணாம்னு அவ உன்ன விட்டுட்டு போனாலும் நீ இன்னும் அவளை தான் நினைச்சுட்டு இருக்கங்கிறதுக்கு இது பெஸ்ட் எக்ஸாம்பிள்.  போதும்டா இதுக்கு மேலயும் விஷல்யாவை மறந்துட்டேன்னு சொல்லி நாடகமாடி உன்னை நீயே ஏமாத்திக்காம  அவ கிட்ட போய் பேசு. எல்லாம் சரியாகும். “ என்று நண்பனுக்கு அறிவுரை வழங்கினான் தனுஜ்.

“என்னப் பேசச் சொல்லுற?, இதுக்கு மேலயும் காதல் கத்தரிக்கான்னு  பாலோ பண்ணி தொந்தரவு பண்ணுனா செருப்பால அடிப்பேன்னு என்னை அசிங்கப்படுத்தினவள தேடிப் போய் என்னப் பேசச் சொல்லுற?. அவ எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் பரவாயில்லன்னு அவத் திமிருக்கு அடிபணிஞ்சு அவக் காலடியில நாய் மாதிரி கிடக்கச் சொல்லுரியா?, அவளுக்கு மட்டும் தான் தன்மானம் இருக்குமா! எனக்கு இல்லையா?, என் தன்மானத்தை விட்டுக் கொடுத்தா தான் அவக் காதல் கிடைக்கும்ன்னா,  அப்படி ஒரு காதல் எனக்கு தேவையில்லை கடைசி வரைக்கும் நான் இப்படியே தனியாவே இருந்திடுவேன். “என்று திமிரான  தீர்மானத்துடன் கூறினான் அமுதேவ்.

“அதான் விஷல்யா வேணாம்னு முடிவு பண்ணிட்டேல..  அப்புறம் எதுக்கு அவளுக்கு ஒன்னுன்னா இந்தத் துடித் துடிக்கிற.   அவ எக்கேடுகெட்டா உனக்கு என்னன்னு விட்டுட்டு போக வேண்டியது தானே” என்று அலட்சியமாய் கூறினான் தனுஜ்.

“ஷாலு.. எப்பவும் பிராக்டிகலா திங்க் பண்ணுன்னு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பா.. என்னால அவ அளவுக்கு பிராக்டிகலா இருக்க முடியல டா.நான் நார்மல் ஹியூமன் பீயிங்..  என்னால அவளை மாதிரி விருப்பு வெறுப்பை மறைக்க முடியல.. “ என்று தன் உள்ளத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சியின் வெளிப்பாட்டை கொட்டித் தீர்த்தான்அமுதேவ்.

“ சரி.. சரி டென்ஷனாகாத.. மீட்டிங்கு லேட்டாச்சு.. மத்த விஷயத்தை பிறகு பேசிக்கலாம் கிளம்பு.. “ என்று உணர்ச்சி மிகுதியில் தவித்துக்கொண்டிருந்த நண்பனை அங்கிருந்து அழைத்துச் சென்றான் தனுஜ்.

இஸ்லாமிய சகோதரிகள் போல் பர்தாவில் தன்னை மறைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் அமுதேவ் வந்ததிலிருந்து.. அவனை விடாது பின் தொடரும் விஷல்யா.. நிகழ்ந்தவை அனைத்தையும் தனது அலைபேசியில் ஒளிப்பதிவு செய்து கொண்டாள்.

அமுதேவ் அங்கிருந்து விலகிச் சென்றதும் தனது வேடம் கலைத்து விட்டு.. மகிழ்ச்சியின் மிகுதியில் தோழியை கட்டியணைத்து… “என் அம்மு இன்னும் என்னை லவ் பண்ணுறான்… ” என்று துள்ளலுடன் கூறினாள் விஷல்யா.

“ என்னடி சின்ன குழந்தை மாதிரி இந்த குதி குதிக்கிற, ஏற்கனவே ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு தானே இருந்தீங்க..!“ என்று விஷல்யாவின் அளவில்லா மகிழ்வின் காரணம் புரியாமல் வினவினாள் கீர்த்தனா.

“ இதுக்கு முன்னாடி அம்மு என்னை லவ் பண்ணது வேற.. ஆனா இப்போ என் கேரக்டர் என்னன்னு தெரிஞ்சும்.. நான் அவனை அந்த அளவுக்கு மோசமா திட்டுனதுக்கு பிறகும்..  அதே காதலோட இருக்கான்னா.. ரியலி ஐ அம் வெரி லக்கி.. “ என்றாள் விஷல்யா.

“ சரி..அமுதேவ் காதல் புரிஞ்சிடுச்சு  அடுத்து என்னப் பண்ணப்போற?” என்றாள் கீர்த்தனா..

“இப்படி ஒருத்தன் கண்மூடித் தனமா நம்மள லவ் பண்ணுறான்னு தெரிஞ்சத்துக்கு பிறகு.. அடுத்து என்ன கல்யாணம் தான்.. “ என்று குறையாத மகிழ்வுடன் கூறினாள் விஷல்யா.

            ஒரு ஆணுக்கு அவன் காதலிக்கும் பெண்ணின் முதல் காதலே தான் தான் என்பதை அறிவது எந்த அளவுக்கு மகிழ்ச்சியை தருமோ!,  அதைவிட இருமடங்கு இன்பத்தை தரக்கூடியது ஒரு ஆணின் முதலும் கடைசியுமான  காதல் தன் மீது மட்டுமே என்று அந்தப் பெண் அறிவது. அதனால் தானோ என்னவோ வாழ்க்கையில் எத்தனை காதல் நம்மைக் கடந்தாலும் முதல் காதல் மட்டும் மனதில் நீங்காமல் நிலைத்து விடுகிறது.

உன்னை மறக்கச் சொல்லி

மனதிற்கு கட்டளை

பிறப்பிக்க…

உன்னை மணக்கச் சொல்லி

மனு நீட்டுகிறது..

என் காதல் மனது..