பிறந்ததிலிருந்து தன் விருப்பு வெறுப்புக்கு மதிப்பளித்து, எதற்காகவும் தன்னை வற்புறுத்தாத தந்தையின் வேண்டுகோளுக்கிணங்கி அமுதேவ் அன்னையை சந்திக்க காத்திருந்தாள் விஷல்யா.
“சாரிமா, வந்து ரொம்ப நேரமாச்சா..?, சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வர்றது தான் என்னோடப் பழக்கம். ஆனா இன்னைக்கு அதைக் கீப்பப் பண்ண முடியல அதுக்கு காரணம் என்னோடப் பையன் தான். மைண்ட் ரிலாக்ஸ்க்காக ஃபாரின் டிரிப் போனவன், இன்னைக்கு தான் ஊரு திரும்பினான் அதனால கொஞ்சம் லேட்டாச்சு” என்று எதிரில் இருந்தவள் கேட்காமலேயே தாமதமாக வந்ததன் காரணத்தை கூறியபடி மகன் என்றதும் விஷல்யா முகத்தில் வந்து போன சிறு மாற்றத்தை மனதில் குறித்துக்கொண்டபடி, அவள் அருகில் வந்து அமர்ந்தார் பானுஸ்ரீ.
சமீபகாலமாக.. எப்போதாவது தற்செயலாக நிகழும் சந்திப்பு கூடத் தட்டிப் போனதன் காரணம் அவனின் வெளிநாட்டு பயணம் தானோ என்ற யோசனையுடன் விஷல்யா அமைதியாய் இருந்திட.. “ என்னடா அன்னைக்கே வேணாம்னு சொல்லிட்டு வந்தப் பிறகும் எதுக்கு நம்மள பார்க்க வரச் சொல்லியிருக்காங்கன்னு யோசிக்கிறயா?” என்று விஷல்யாவின் அமைதிக்கான காரணத்தை தானே அனுமானித்துக் கொண்டு வினவினார் பானு.
இல்லை என்பது போல் மெதுவாய் தலையசைத்தவள், “ நான் வேணாம்னு சொன்னதுக்கான காரணத்தை விசாரிக்கத்தான் வரச் சொல்லி இருக்கீங்கன்னு தெரியும்.. “ என்று அமர்த்தலான குரலில் கூறினாள் விஷல்யா.
தன் எண்ணத்தை சரியாக கணித்துக் கூறியவளை மெச்சுதலாய் பார்த்தவர், “ நான் எதுக்கு வரச் சொல்லிருப்பேன்னு தெரிஞ்சிருந்தும் நீ வந்திருக்கேன்னா, காரணத்தை சொல்லத் தயாரா இருக்கன்னு அரத்தம், நான் சொல்றது சரியா?” என்றார் பானு.
“ யெஸ் யூ ஆர் ரைட், உங்கப் பையன வேணாம்னு சொன்னதுக்கான காரணத்தை இதுவரைக்கும் நான் என் அப்பா அம்மாகிட்டக் கூட சொல்லல. உங்கக்கிட்ட அந்தக் காரணத்தை சொல்ல ஒரு காரணம் இருக்கு, “ என்று விஷல்யா பாதியில் நிறுத்தி அமைதியாகிட..
“ காரணம் சொல்ல ஒரு காரணமா? இண்ட்ரஸ்டிங்” என்று பானு வியப்பைக் காட்டிட,
“ அந்தக் காரணம் என்னன்னா, நீங்க பெருமைப்படுற அளவுக்கு உங்க பையன்கிட்ட பெருசா எந்த நல்ல குணமும் இல்ல, அவருக்கு கல்யாணம் பண்ணிவைச்சு ஒருப் பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துடக் கூடாதுன்னு உங்கள எச்சரிக்கை பண்ணத் தான் இங்க வந்தேன் “ என்றவள் எதிரில் இருந்தவர் முகம் போனப் போக்கைக் கண்டு…
” ஆக்சுவலா நான் இதை உங்கள ஹெர்ட் பண்ணனும்னு சொல்லல.. யாரையும் டிபென்ட் பண்ணமா சொந்தமா கார்மெண்ட்ஸ் ஆரம்பிச்சு அது மூலமா நிறைய ஆதரவற்ற பொண்ணுங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கீங்கன்னு உங்களப் பத்தி விசாரிக்கும் போது தெரிஞ்சுகிட்டேன், உங்க பையனப் பொண்ணுப் பாக்க வந்திருக்கேன்னு சொன்னப்பக் கூட, ஒரு சிலர் மாதிரி என்னை வினோதமாப் பாக்காம, என் மேலக் கோபப்படாம,என்கிட்ட நிதானமாப் பேசி நல்ல விதமாப் பிஹேவ் பண்ணுன உங்க மேல எனக்கு நிறையயவே மரியாதை இருக்கு மேம், ஆனா உங்கப் பையன் மேல அந்த மதிப்பும் மரியாதையும் ஒரு பர்சன்ட் கூட இல்ல. உங்களுக்கு அமுதேவ் மாதிரி ஒருப் பையன் இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… அவன் எப்படி மேம் உங்க பையனா இருக்க முடியும் உங்க குணத்துக்கு அவனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை, அவனெல்லாம் இந்தச் சொசைட்டிக்கு சரியான ஆளே இல்ல“ என்று உணர்ச்சி வசப்பட்டு பேசியவள் சற்று நிதானித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு..
” உங்கள மாதிரி ஸ்ட்ராங் லேடி வளர்ப்பு சரியாத் தான் இருக்கும், ஆனா உங்கப் பையனுக்கு உங்க நல்லப் போதனை எதுவும் அவர் புத்தில ஏறல, மனசளவுல இன்னும் வளராம பழையப் பஞ்சாங்கமாவே இருக்காரு.” என்றாள் விஷல்யா.
தன் வளர்ப்பையும் மகனின் குணத்தையும் குறைக் கூறும் பெண்ணின் மீது கோபம் கொள்வதற்கு பதிலாக கண் இமைகள் மட்டும் சுருங்க இதழ் விரியா புன்னகையுடன் எதிரில் இருந்தவளை எதிர்கொண்டவர், “ என் பையனுக்கு எந்தக் விதக் கெட்டப் பழக்கமும் இல்ல, அது எனக்கு நிச்சயமாத் தெரியும், “ என்று மகனின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்து வைத்தவர் என்ற முறையில் அழுத்தமாக கூறினாள் பானுஸ்ரீ.
“ அச்சோ மேம் நான் சொல்ல வர்றது அம்மு பழக்கவழக்கத்தை பத்தி இல்ல அவனோட ஆட்டிட்யூட் பத்தி. பொண்ணுங்கன்னா இப்படிதான் இருக்கணும் இப்படிதான் நடந்துக்கணும்னு அவனே ஒரு அகராதி எழுதி வச்சிட்டு அழிச்சாட்டியம் பண்றான். “ என்று தன் அனுபவத்தில் அறிந்ததை சலிப்புடன் கூறினாள் விஷல்யா.
தன் மகனை உரிமையுடன் பெயர் சொல்லி அழைக்கும் விஷல்யாவிற்கும் தன் மகனுக்குமான உறவு எத்தகையது என்று ஓரளவுக்கு யூகித்தவர், ” என் பையனோட அகராதி பிடிச்சக் குணம் அவன் பாட்டியோட வளர்ப்பினால வந்தது, அவனை இந்த உலகத்துக்கு கொண்டு வந்தது மட்டும் தான் நான், அவனை வளர்த்தது அவனோடப் பாட்டி, அதாவது என் ஹஸ்பெண்ட்டோட அம்மா. ” என்றார் பானுஸ்ரீ.
“ஓ.. அதான் அவனும் பழையக் காலத்துப் பாட்டி மாதிரி பத்தாம் பசலித்தனமா யோசிக்கிறான் போல.. “ என்று அமுதேவ் நடவடிக்கைக்கு காரணம் அறிந்துக் கொண்ட வியப்பில் பேசினாள் விஷல்யா.
“ நான் ஒத்துக்குறேன் என் பையன் கொஞ்சம் பத்தாம் பசலித்தனமாத் தான் யோசிப்பான். அவனோட கொள்கைக் கோட்பாட்டுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு தான்.. இப்ப வரைக்கும் என்னை விட்டு ஒதுங்கியே இருக்கான்.” என்று தன் வேதனையை மறைக்கும் விதமாய் புன்னகை செய்தபடியே கூறினார் பானுஸ்ரீ.
“ என்ன உங்க பையன் உங்கக் கூட இல்லையா?” என்று விஷல்யா அதிர்ச்சியுடன் வினவினாள்.
ஆமாம் என்பது போல் வெறுமையாய் தலையசைத்தவர்… “ இன்னைக்கு நேத்து இல்ல.. இருபது வருஷமா என்னை விட்டுப் பிரிஞ்சு தான் இருக்கான், அதைப் பத்தி பிறகு பேசலாம்.. முதல நீ உன்னோடக் கதையச் சொல்லு!, உனக்கும் என் பையனுக்கும் தொழில் முறையா எந்தப் பழக்கமும் இல்லன்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா நான் விசாரிச்ச முறை தப்புன்னு நீ என் பையனோட பேரச் சுருக்கி கூப்பிடுற விதத்துல தெரியுது. நீ இந்த அளவுக்கு என் பையனை வெறுத்து ஒதுக்கிற அளவுக்கு என்ன நடந்தது?” என்று நேரடியாக விசயத்திற்கு வந்தார் பானுஸ்ரீ.
“ நீங்க நினைச்சது சரிதான், எங்களுக்குத் தொழில் முறையில எந்தப் பழக்கமும் இல்ல, எங்கத் தொழிலுக்கு கொஞ்சம் கூட சமந்தம் இல்லாத மயிலாப்பூர் பெருமாள் கோவில்ல வைச்சு தான் முதல் தடவையா அமுதேவ்வைப் பார்த்தேன்.” என்று இருவருக்கும் உண்டான பழக்கத்தை விவரிக்கத் துவங்கினாள் விஷல்யா.