Advertisement

27… இனிதாய் ஒரு நிறைவு…

 

விட்டுக் கொடுப்பதும்

மன்னிப்பதும் தான்

வாழ்க்கை…

யார் முதலில்

விட்டுக் கொடுப்பது

மன்னிப்பது என்கின்ற

மனக்குழப்பமே!

வாழ்க்கையின் 

போராட்டமாகி விடுகிறது….

தன்னைத்தானே கவனித்துக் கொள்வதாய் விஷல்யா கூறிய போதும்.. அலுவல் பணிகளை செய்ய விடாமல் மனைவியின் நினைவே அமுதேவ்வை    அலைக்கழித்தது.

நிலை இல்லாத மனதுடன் நிம்மதியாக வேலை பார்க்க முடியாது என்று தீர்மானித்த அமுதேவ், தன்  நண்பன் தனுஜிடம்   வேலையை ஒப்படைத்துவிட்டு மனைவியைக் காண  புறப்பட்டான்.

அமுதேவ் மோட்டார் வாகனத்தில்  வீட்டை நோக்கி     நகர்ந்து கொண்டிருந்த நேரம்… அவனது வீட்டு வாசலில் காத்திருந்த தானி ஒன்றில்   தன் அன்னையும் மனைவியும்  ஏரி அமர்வதை கவனித்தவன், ‘  அம்மாவா!, இவங்க இந்த நேரத்துல இங்க என்ன பண்றாங்க?,  என்னை துணைக்கு இருக்க  வேணாம்னு சொல்லிட்டு.. இவங்க கூட ஆட்டோல எங்கக் கிளம்பி போறா…?‘ என்று குழப்பமான மனநிலையுடன் சற்று இடைவெளிவிட்டு பின்தொடர துவங்கினான் அமுதேவ்.

வழக்கத்தை விட சற்று மெதுவாகவே நகர்வது போல் இருந்த மூன்று சக்கர வாகனத்தை விடாமல் பின்தொடர்ந்தான் அமுதேவ்.

மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவமனைக்குள் மனைவி மற்றும்  அவளுடன்  அன்னையும் செல்வதை தொலைவிலிருந்து கவனித்தவன், ‘  கைநோகோலஜிஸ்ட்டா (gynaecologist  ) இங்க எதுக்கு போறாங்க…’ என்று யோசித்தவன், மனதில்      விஷல்யா காலையில் இருந்த நிலை வந்து போனது… ‘ ஷாலு  ஃப்ரக்னன்ட்டா இருக்களா!.. அதனால  தான் கொஞ்ச நாளா  டயர்டா இருந்தாளா!,  இன்னைக்கு காலையில  கூட வாமிட்  எடுத்தாளே!, ஒருவேளை என்னை மாதிரியே அவளுக்கும் டவுட் வந்தது கன்ஃபார்ம் பண்றதுக்கு தான் இங்கே வந்திருப்பாளோ?, அதுக்கு எதுக்கு என்னைக் கூப்பிடாம  அம்மா கூட வரணும், ஒருவேளை   ஏற்கனவே சொன்ன மாதிரி ப்ராஜெக்ட் வொர்க்கு இடைஞ்சலா இருக்கும்னு அபார்ஷன் பண்ண வந்திருப்பாளா!,  இந்த மாதிரி விஷயத்துக்கு அவங்கதான் சரியா இருப்பாங்கன்னு அவங்கள துணைக்கு கூட்டிட்டு வந்து இருக்கா போல!, ‘ என்று பலவேறு கோணங்களில் தனக்குள்ளேயே சிந்தித்து அமுதேவ் படபடத்துக் கொண்டிருந்த நேரம்…

மருத்துவமனை  வரவேற்பில்  மருத்துவரை காணவேண்டி  நியமனப் படிவத்தை பூர்த்தி செய்து காத்திருக்கத் தொடங்கினாள் விஷல்யா.

விஷல்யாவுக்கு பின்  அவசரமாய்  உள்ளே நுழைந்த பெண்மணி… “  எனக்கு இப்பவே டாக்டரை பாக்கணும் உடனே     அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்க.. “ என்று அவசரப் படுத்தினார்.

“ வெயிட் பண்ணுங்க மேம்,  உங்களுக்கு முன்னாடி நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு அப்புறம்தான் நீங்க போக முடியும்..” என்று செவிலியர் கூறிக்கொண்டிருக்க… “ அதெல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது,  நான் இப்பவே டாக்டரை பாக்கணும்.. எனக்கு இந்த குழந்தை வேணாம்,  இதை நான்  அபாஷன் பண்ணனும் என்னை உடனே உள்ள அனுப்புங்க..” என்று பிடிவாதம் பிடிக்கத் துவங்கினார் அந்த பெண்மணி.

“ மேம்  இது ஹாஸ்பிடல் கொஞ்சம் அமைதியா பேசுங்க மத்தவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும்,” என்று ஒரு செவிலியர் அந்தப் பெண்மணியை அமைதி படுத்த முயல.., வரவேற்பில் இருந்த பணியாளர், “  அபாஷன் பண்றதா இருந்தா, அதுக்கு நிறையவே ப்ரோசிஜர் இருக்கு, ஃபர்ஸ்ட் உங்க ஹஸ்பண்ட்டோட  பர்மிஷன் வேணும்  அவரும் கூட வந்திருக்கிறாரா?” என்று தன்மையாகவே வினவினார்.

“ அவர்  கூட வரல, அவர் வந்தா அபாஷன் பண்ண விட மாட்டாரு. குழந்தை பெத்துக்க போறது  நான்,  அது வேணுமா வேணாமான்னு நான் முடிவு பண்ணுனா போதாதா.. ?” என்று குரலை உயர்த்தினார் அந்தப் பெண்மணி.

“ சாரி மேம், எங்க ஹாஸ்பிடல்ல எல்லாம் ப்ரோசிஜர் படிதான் நடக்கும். “ என்று வரவேற்பு பணியாளர் மறுத்துக் கொண்டிருக்க… “ ப்ரோசிஜர் பொல்லாத ப்ரோசிஜர், இந்த ஹாஸ்பிடல் இல்லேனா இன்னொன்னு.. இதுக்கு வேற வழியா இல்ல “ என்று வெடுக்கென்று கூறிய பெண்மணி அவ்விடத்தைவிட்டு  நகர்ந்தார்.

அடை மழை பெய்து ஓய்ந்தது போல், அப்பெண் சென்றதும் அங்கு பெரும் அமைதி நிலவியது.

நடந்த விவாதங்களை பார்வையாளர்களாக இருந்து கவனித்துக் கொண்டிருந்த விஷல்யா, ” நானும் இப்படித்தான் முட்டாள்தனமா  குழந்தையை  களைக்கணும்னு  பேசிட்டு இருந்தேன். அம்மு கூட ரொம்ப கோபப்பட்டான்  “ என்று  குற்ற உணர்வுடன் கூறிட…

“  நீ ஒன்னும் முட்டாள் இல்லை ஷாலு.. அதனால தான் இப்போ சரியான முடிவு எடுத்திருக்க, அம்முவும்  சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு உனக்கு ஆதரவா இருப்பான்.“ என்று ஆதரவாய் ஆறுதல் கூறினார் பானுஸ்ரீ.

“ மேம்..   நீங்க உள்ள போகலாம்.. “ என்று செவிலியர் ஒருவர் வந்து கூறிட… பானுஸ்ரீயுடன் மருத்துவர் அறைக்குள் நுழைந்தாள் விஷல்யா.

வாகனத்தில் அமர்ந்தபடியே காத்திருந்து  புலம்பிக் கொண்டிருப்பதை  விட மருத்துவமனைக்குள் சென்று என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்  என்று தீர்மானித்த அமுதேவ், மருத்துவமனைக்கும் சென்று  வரவேற்பில்… “ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு லேடி  வந்தாங்களே!, அவங்க  எங்க…? “   என்று பொதுப்படையாக விசாரித்தான்.

“ அவங்க அப்போவே கிளம்பிட்டாங்க சார்” என்று பதில் தந்தார் வரவேற்பு பணியாளர்.

‘ கிளம்பிட்டாங்களா…  அவங்க போறத நான் பாக்கலையே!,  எப்படி கவனிக்காம விட்டேன், ‘  என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், “ ஃஇப் யூ டோன்ட் மைண்ட்… அவங்க எதுக்காக இங்க வந்தாங்கன்னு சொல்ல முடியுமா? ப்ளீஸ்” என்று அடுத்த கேள்வியை கேட்டான் அமுதேவ்.

“சாரி சார்.. அதை சொல்லக்கூடாது” என்று ஒரு பணியாளர் மறுத்துக் கொண்டிருக்க…  அமுதேவ் முகத்தில்  உறைந்திருந்த பதட்டத்தையும் தவிப்பையும்  கவனித்த…  இன்னொரு பணியாளர்.. “ ரூல்ஸ் படி அதை சொல்லக்கூடாது சார். நீங்க அந்த லேடியோட ஹஸ்பன்ட்டா?” என்று விசாரிக்க… அமுதேவ் ஆம் என்று அவசரமாய் தலையாட்டினான்.

இரு பணியாளர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, பிறகு மெதுவாய். “ அந்த லேடி   குழந்தைய அபார்ஷன் பண்ணுறதுக்காக வந்தாங்க சார். ஹஸ்பண்ட் பர்மிஷன் இல்லாம அபார்ஷன் பண்ணமாட்டோம்னு சொல்லவும் கிளம்பி போயிட்டாங்க” என்று சற்று நேரத்திற்கு முன் வந்து  சண்டையிட்டு சென்ற பெண்ணின் கணவர் என்று அமுதேவ்வை  எண்ணிய பணியாளர்கள் தகவலை மாற்றித்  தெரிவித்தனர்.

“ அபார்ஷனா!” என்று அதிர்ச்சி அடைந்த அமுதேவ் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அங்கிருந்து விலகிச் சென்று விட… “ பாவம் மனுஷன் அபார்ஷன்னு சொன்னதும் ஒடஞ்சு போயிட்டாரு,  இவருக்கு அப்படி ஒரு பொண்டாட்டி.. “ என்று அமுதேவ்விற்காக அனுதாபப் பட்டனர் அப்பணியாளர்கள்.

தன் மனைவியின் பிடிவாதத்தால் கருவிலேயே அழியப்போகும்,   உருவமே இல்லாது சிறு புள்ளி போல்  வளரத் துவங்கி இருக்கும் தனது குழந்தையை எண்ணி கலங்கினான்  அமுதேவ்.

‘ இங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க வேற எங்கேயாவது போய் ட்ரை பண்றதுக்குள்ள, அவங்களை  தடுக்கணும். இது நம்மக் குழந்தை, இதை நல்லபடியா காப்பாத்த வேண்டியது நம்ம ரெண்டு பேரோட பொறுப்புன்னு புரியவைச்சுட்டா அவளோட பிடிவாதம் மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு’ என்று எண்ணியவன் தனது வாகனத்தை கிளப்பிக் கொண்டு அக்கம் பக்கத்தில் இருந்த மருத்துவமனை ஒவ்வொன்றாய் தேடி அலைந்தான்.

எங்கும் தேடியும் அவர்கள் இல்லாமல் போக.. ‘ இங்க எங்கயுமே இல்லையே! இனி எங்கு போய் நான் தேடுவேன்.. ஐயோ என் குழந்தை, நீ உன் அம்மாவுக்குள்ள  வந்தது தெரிஞ்சிருந்தா, அப்பா உன்னை  நிச்சயம் காப்பாத்தி இருப்பேனே!.  நான்தான் தப்பு பண்ணிட்டேன் அவ கூடவே   இருந்திருந்தா இந்நேரம் எல்லாத்தையும் தடுத்து இருப்பேன், ’ என்று தனக்குள்ளேயே அழுது புலம்பிக் கொண்டான்.

உள்ளுக்குள் கொதிகலன் போல் கொதித்து கிடக்கும் கோபத்தையும் வெறுப்பையும் தணிக்க வழி அறியாது கடற்கரை நோக்கி சென்றவன்… அமைதியின்றி அலைபாய்ந்த அலைகடலை வெறித்தபடி.. தன் தவிப்பை அடக்க முயன்றான்.

நிம்மதி இல்லாத மனது அமைதி கொள்வதற்கு பதிலாக மேலும் மேலும் அலை பாயத்துவங்கியது. நேரடியாக மனைவியிடமே கேட்டு விஷயத்தை அறிந்து கொள்வோம் என்று எண்ணியவன் தனது அலைபேசியை எடுத்து  அதில் விஷல்யாவின்  எண்ணை தட்டிவிட்டு அழைப்பு ஒலி ரீங்காரமிட… ‘ சீக்கிரம் எடு ஷாலு…’ என்று பொறுமை இழந்து சீறினான் அமுதேவ்.

முதல் முறை விடுக்கப்பட்ட அழைப்பு தவறிப் போக மீண்டும் ஒருமுறை முயற்சித்தவன் இம்முறை அழைப்பு ஏற்கப்படும்… “  எங்க இருக்க?” என்று கோபக் குரலிலேயே வினவினான்.

“ வீட்ல தான் இருக்கேன். எதுக்கு இவ்வளவு கோவமா கேட்குற?, ஓ முதல் தடவை கால் பண்ணும்போதே அட்டென்ட் பண்ணலன்னு  கோவமா?. ரொம்ப டயர்டா இருந்தது அம்மு,  டாக்டர் கூட… “ என்று எதையோ  சொல்ல துவங்கியவள் சட்டென்று சுதாரித்து, “ என் செல்ல  அம்முல, என்  பட்டு அம்முல.. கோபம் வேணாம் தங்கம். ” என்று கணவனின் கோபத்திற்கு பதிலாக கொஞ்சத்  விஷல்யா.

“ என்ன தப்பு பண்ணுன?, எந்த தப்பை மறைக்க இப்படி கொஞ்சுற?” என்று அதற்கும் சிடுசிடுத்தான் அமுதேவ்.

“தப்பா… ?, ஆமா பெரிய தப்பு பண்ணிருக்கேன். உனக்கு மட்டும் அந்த தப்பு என்னன்னு தெரிஞ்சது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்ப… “ என்றாள் விஷல்யா.

“ அப்போ நீ பண்றது தப்புன்னு புரிஞ்சு தான் பண்ற?” என்று மரத்த குரலில் வினவிட..

“ ஆமாம் புரிஞ்சு தான் பண்றேன் போதுமா… என்ன தப்பு பண்ணினேன்னு அங்க இருந்து ஆர்க்கிவ் பண்ணிட்டு இருக்காம வீட்டுக்கு வந்து தெரிஞ்சுக்கோ!.” என்று கோபம் போல் பேசினாலும்  விஷல்யா குரலில்  கொஞ்சலே மிகுந்து இருந்தது.

‘ பண்றதெல்லாம் பண்ணிட்டு எவ்வளவு திமிரா பேசுறா… எல்லாம்  அவங்க குடுக்குற தைரியம். எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போறதால ஓவரா அட்வான்டேஜ் எடுத்துட்டு ஆடுறாங்க. இனி என் லைஃப்க்குள்ள  வரவே கூடாது எல்லாத்தையும் இன்னைக்கே  பேசி முடிச்சுடனும்.’ என்று தீர்மானித்தவன்… வெகு காலமாய் செல்லாமல்  தவிர்த்து வந்த அன்னையின் வீடு நோக்கி புறப்பட்டான்.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு அமுதேவ் காத்திருக்க… அவன் தேடி வந்த அன்னைக்கு பதிலாக வெளியில் வந்தார் வாசுதேவ்  அமுதேவ்வின் தந்தை.

முதலில்  அமுதேவ்வை கண்டதும் ஆச்சரியமடைந்தவர், அவன் முகத்தில் தெரிந்த கோபத்தையும் வெறுப்பையும் கவனித்து, ‘ மறுபடியும் ஏதாவது காரணம் சொல்லி பானுவை காயப்படுத்த தான்  வந்திருப்பான். ஏடாகூடமா ஏதாவது பேசட்டும் அப்புறம் இருக்கு இவனுக்கு..’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவர்…  அன்னையின் பாசம் புரியாமல் மேலும் மேலும் அவரை அவமதிப்பது போல் நடந்து கொள்ளும் மகனின் மீது ஏற்கனவே கோபத்தில் இருந்ததால், வீடு தேடி  வந்தவனை வீட்டிற்குள் கூட அழைக்காமல் வாசலிலேயே நிற்க வைத்து பேசத் துவங்கினார் வாசுதேவ்.

“ அடடா இது என்ன அதிசயமா இருக்கு!.. வராதவங்க எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க,  என்ன விசேஷம்?” என்று அதீத ஆர்வத்துடன் வினவினார் வாசுதேவ்.

“ நான் உங்களை பார்க்க வரல அவங்க எங்க?, அவங்கள முதல்ல வெளிய வரச் சொல்லுங்க” என்று அதிகாரக் குரலில் பேசினான்   அமுதேவ்.

“ எவங்கள வரச் சொல்லுற?, “ என்று அசட்டையாகவே பதில் கேள்வி கேட்டார் வாசுதேவ்.

“ அவங்க தான் இந்த வீட்டு எஜமானி. அவங்கள வெளிய வர சொல்லுங்க நான் பேசணும்.” என்று மீண்டும் அதே அதிகார தோரணையில் பேசினான் அமுதேவ்.

“ இந்த வீட்டு எஜமானி இப்போதைக்கு வீட்ல இல்ல போயிட்டு அப்புறமா வாங்க…”  என்று அந்நியரிடம் பேசுவதுபோல் பதில் தந்தார் வாசுதேவ்.

“ பொய் சொல்லாதீங்க, அவங்க உள்ள தான் இருக்கணும். ” என்று வழி மறைத்து நின்ற வாசுதேவ்வை அலட்சியப்படுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தான் அமுதேவ்.

“ எங்க இருக்கீங்க எதுக்கு ஒளிஞ்சிட்டு இருக்கீங்க,  வெளிய வாங்க… “ என்று அமுதேவ் கோபத்துடன் கத்திட… “ இங்க பாரு ஏற்கனவே நான் உன்மேல கோபத்துல இருக்கேன். இன்னும் என்னை கோபப்படுத்தாத..  ஒழுங்கா வீட்டை விட்டு வெளியே போ” என்று மகனை அடக்கும் விதமாய் குரலை உயர்த்தினார் வாசுதேவ்.

“ என் மேல கோபமா இருக்கீங்களா!,  நியாயப்படி பார்த்தா..  நான் தான் உங்க மேல கோபத்துல  இருக்கணும்” என்று அப்போதும் கோபம் தணியாமல்  அமுதேவ்  சீறிட… “ நீ கோபப்படுற அளவுக்கு நாங்க என்ன தப்பு பண்ணுனோம். நீதான் பாக்குற இடத்துல எல்லாம் பானுவை அவமானப்படுத்திட்டு இருக்க, குலதெய்வ கோவிலில் கூட ஏதோ சொல்லி அவளை அழுக வைச்சுட்ட… அங்கேயே வச்சு நாலு கேள்வி கேட்கணும் நினைச்சேன் உன் அம்மாதான் தடுத்துட்டா… “ என்றார்  வாசுதேவ்.

அன்று நடந்த உரையாடல்கள் நினைவில் வர… ‘ அன்னைக்கே வார்னிங் கொடுத்தேன், அதையும் மீறி இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்கீங்கன்னா.. என்னை பழி வாங்குறதா நினைச்சு தானே இப்படி எல்லாம்  செய்யுறீங்க. ‘ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன்…  அன்னை செய்த தவறுக்கு  தந்தையிடம்   வாதம் புரிவது சரியல்ல என்று உணர்ந்து, “  நான் உங்ககிட்ட பேச வரல அவங்க எங்க வரச் சொல்லுங்க.. “ என்று குரலை தனித்து அதே நேரத்தில் அழுத்தத்துடன் பேசினான் அமுதேவ்.

“ உன் அம்மா இங்க இல்ல,  ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி காலையிலேயே கிளம்பி போயிட்டா… இன்னும் வீட்டுக்கு வரல, போன் கூட சுவிட்ச் ஆப்னு வருது.” என்று  வாசுதேவ்வும் குரலை  தனித்து  பதில் தந்தார்.

முக்கியமான வேலை எது என்று நினைவில் வரவும்  அமுதேவ்வின் கோபம்  மீண்டும் உச்சத்தைத் தொட்டது, “அவங்க செஞ்ச காரியத்தை நினைச்சாலே அருவருப்பா இருக்கு, மறுபடியும் மறுபடியும் அந்த திமிரு புடிச்ச பொம்பளைய என் அம்மான்னு சொல்லாதீங்க. அவங்க என் அம்மா இல்ல” என்று அருவருப்பை வெளிப்படுத்தும் முக பாவனையுடன் கோபத்தில் கத்தினான் அமுதேவ்.

மகனின் அவமதிப்பான வார்த்தையில்  கோபம் அடைந்தவர்,  சட்டென்று அடிக்க கையை ஓங்கி விட்டு, பின் தன் தவறு புரிந்து… அமைதி கொண்டார்.”   ரொம்ப  மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க தேவ், இது  சரியில்ல… தோளுக்கு மேல வளர்ந்த பையன்னு பார்க்கிறேன், இல்லனா நடக்கிறதே வேற?” என்று எச்சரித்தார்  வாசுதேவ்.

“ ஏன் நிறுத்திட்டீங்க.. இன்னும் இது  மட்டும்தான்  மிச்சம் இருந்தது. அந்த குறையையும் இப்போ   தீர்த்துக்கோங்க..” என்று தந்தையின் கையை வலுக்கட்டாயமாக பற்றி தன் கன்னத்திலேயே ஓங்கித் தட்டி கொண்டவன்… “ போதுமா இப்ப சந்தோஷமா…? நான் அவங்கள தப்பா பேசுனதுக்கு என்ன அடிக்க   கையோங்குனீங்களே!, அவங்க பண்ண தப்புக்கு என்ன தண்டனை கொடுக்க போறீங்க?” என்றான் அமுதேவ்.

“ பானு தப்பு பண்ணுறவ இல்ல, செய்யாத தப்புக்கு தண்டனை கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை… “ என்று மனைவி மீது இருந்த நம்பிக்கையில் உறுதியுடன் கூறினார் வாசுதேவ்.

“ தப்பு பண்றவங்க இல்லையா! “ என்று ஏளனப் புன்னகையுடன் கூறியவன், “ அவங்க தப்பை மட்டும் தான் சரியா செஞ்சுட்டு இருக்காங்க, இன்னைக்கு கூட உங்க கிட்ட முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு போனாங்களே!,  அந்த முக்கியமான வேலை என்னன்னு தெரியுமா?. என் குழந்தையை அழிக்கிறது. ஷாலு வயித்துல வளர்ந்த என் குழந்தையை அழிக்கிறது தான் அவங்க சொன்ன முக்கியமான வேலை… “ என்று கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் கலங்கிய குரலில் கூறினான் அமுதேவ்.

மகனின் கண்ணீரை கண்டவர் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்து, “ நீ எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுற தேவ். உன் அம்மா இப்படி ஒரு கேவலமான காரியத்தை   செய்யமாட்டா… “ என்று மனைவிக்கு பரிந்து பேசினார் வாசுதேவ்.

“ செய்ய மாட்டாங்களா?, ஏன் செய்ய மாட்டாங்க,  ஏற்கனவே பல தடவை செஞ்சு பழக்கப்பட்ட காரியம் தான!,  அதனால தான அவங்கள  துணைக்கு  வைச்சுட்டு ஷாலுவும் அதே தப்பை செய்யுறா.  அவங்க கொடுக்கிற  தைரியத்துல தான். குழந்தை உருவான விஷயத்தைக் கூட எங்கிட்ட இருந்து   மறைச்சு கருவை  அழிக்க ஹாஸ்பிடல் வரைக்கும் போயிருக்கா… “ என்றான் அமுதேவ்.

“ ஏற்கனவே செஞ்சே பழக்கப்பட்ட காரியமா..!,   என்ன சொல்ற நீ?,  எனக்கு புரியல!..” என்று மகன் வார்த்தையில் பொதிந்திருக்கும் அர்த்தம் புரியாமல் குழப்பத்துடன் வினவினார் வாசுதேவ்.

“அவங்க செஞ்ச தப்பை மூடி  மறைச்சதே நீங்க தானே.. உங்களுக்கு எப்படி புரியாம போகும்!, “ என்றான் அமுதேவ்.

“ தப்புன்னு சொல்ற! மூடி மறைக்கிறேன்னு  சொல்ற!” எதையும் புரியுற  மாதிரி தெளிவா பேச மாட்டியா  நீ!” என்றார் வாசுதேவ்.

“ புரியாத மாதிரி நடிக்காதீங்க… எனக்கு முன்னாடி உருவான இரண்டு குழந்தைகளை கருவிலேயே அழிச்சவங்க தான.. உங்கப் பொண்டாட்டி,   இப்போ என்  பொண்டாட்டியும் அதே தப்பை  செய்யுறா,   அதுக்கு துணையா இருக்கிறது உங்க பொண்டாட்டி. “ என்று உண்மையை அறிந்துகொள்ள முயற்சிக்காமலேயே  மொத்தப் பழியையும் பானுஸ்ரீ மீது சுமத்தினான் அமுதேவ்.

“ இப்படி ஒரு  கதையை உன்கிட்ட சொன்னது யாரு?”  என்று உணர்வில்லாத குரலில் வினவினார் வாசுதேவ்.

“ சொன்னது யாரா இருந்தா என்ன?, சொல்லப்பட்ட விஷயம் உண்மை தானே!” என்று அமுதேவ் கூறிட… “அப்போ இத்தனை நாளா யாரோ சொன்ன  இந்த விஷயத்தை மனசுல வெச்சுட்டு தான் உன் அம்மா மேல வெறுப்ப காட்டிட்டு இருக்கியா?” என்றார் வாசுதேவ்.

“  இது வெறுப்பு இல்ல அருவருப்பு. இப்படி ஒரு மோசமான பொம்பளைய என்னோட அம்மான்னு  சொல்லிக்கவே அருவருப்பா இருக்கு. “ என்று  வார்த்தையில் பிரயோகித்த உணர்வை முகத்திலும் பிரதிபலிக்க கூறினான் அமுதேவ்.

“ எட்டு வருஷம் நீ உன் அம்மாகிட்ட தான  வளர்ந்த… அவ உன் மேல வச்சிருந்த பாசத்தை எட்டு வயசு வரைக்கும் அனுபவிச்ச பிறகுமா இப்படி ஒரு வார்த்தை சொல்ற..” என்று அதிர்ச்சியுடன் வினவினார் வாசுதேவ்.

“ எட்டு வயசு… உண்மை எது பொய் எதுன்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியாத வயசு,  அந்த  வயசுல அவங்களோட பொய்யான பாசத்தை புரிஞ்சுக்கத் தெரியாம ஏமாந்துட்டேன். இனியும் அப்படி ஏமாறப் போறது இல்ல. “ என்று அழுத்தமாக கூறினான் அமுதேவ்.

“  சரிதான்… உண்மை   எது பொய் எதுன்னு  பிரிச்சுப்  பார்க்கத் தெரியாம தான், அந்த யாரோ ஒருத்தர் சொன்ன பொய்யை உண்மைன்னு நம்பி இத்தனை வருசமா பொய்யான வாழ்க்கை  வாழ்ந்துட்டு இருக்க…”  என்று   வருத்தக் குரலில் கூறினார்  வாசுதேவ்.

“ கூடவே இருந்து பார்த்த      பாட்டி சொல்லுறது எப்படி பொய்யா இருக்கும்?, “ என்று  பிடிவாதமாய் வாதம் புரிய துவங்கினான் அமுதேவ்.

“ அப்போ இது உன்  பாட்டி வேலை தான்!, எட்டு வயசு சரி தப்புன்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியாத வயசுல, உன் பாட்டி சொன்னது மட்டும் உண்மையா தான்  இருக்கும்னு எப்படி உன்னால  நம்ப முடிஞ்சது தேவ்?. “ என்று பதில் வாதம் புரியத் துவங்கினார் வாசுதேவ்.

“ நீங்களும் ஷாலு மாதிரியே, பாட்டி சொன்னது   பொய்ன்னு  சொல்லாதீங்க, அவங்க பொய் சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை..  “ என்று  உறுதியாக கூறினான் அமுதேவ்.

“ நான் ஒன்னும் அவங்க பொய் சொன்னாங்கன்னு சொல்லையே, நடந்த உண்மையை கொஞ்சம் மாத்தி சொல்லி இருக்காங்கன்னு தான்  சொல்லுறேன்.  “ என்றார் வாசுதேவ்.

“ பாட்டி எதுக்கு உண்மையை மாத்தி சொல்லணும், எனக்கு பாட்டியை பத்தியும்  தெரியும்… உங்க பாஸி வுமன் பத்தியும் தெரியும். சோ என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதீங்க.. “ என்று தனது முடிவில் பிடிவாதமாக நின்றான் அமுதேவ்.

“ நீ சொன்ன ரெண்டு பேரை  பத்தியும் உன்னை விட எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் தேவ்.  நீ நினைக்கிற மாதிரி உன் பாட்டி ரொம்ப நல்லவங்களும் இல்ல,  உன் அம்மா கெட்டவளும் இல்ல” என்று வாசுதேவ் கூறிக் கொண்டிருக்க… “ உங்களை பெத்த அம்மாவைப் பத்தியே தப்பா பேசுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லையா?” என்று தானும் அதே தவறை தான் செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் கோபத்துடன் வினவினான் அமுதேவ். 

“ நீயும் தான் உன் அம்மா மேல வீண்பழி போடுற உனக்கு வெக்கமா இல்லையா?” என்று மகனது கேள்வியை திருப்பி  கேட்டார் வாசுதேவ்.

“ பாட்டியும் இவங்களும் ஒன்னா…!” என்று அதே கோபத்துடன் அமுதேவ் வினவ… “ அது எப்படி ஒன்னாக முடியும். என் அம்மா பாசத்துக்காக எதையும் செய்யக் கூடியவங்க, ஆனா உன் அம்மாவுக்கு பாசம் வைக்க மட்டும் தான் தெரியும், அதை எப்படி வெளிக்   காட்டணும்னு தெரியாது.“ என்றார் வாசுதேவ்.

நம்பாத பாவனையுடன் அமுதேவ் முகம் சுளிக்க… மகனின் முக பாவனையில் இருந்து அவன் உணர்வை படித்தவர் போல… “என்னடா இவரு!,  கொஞ்சம் கூட நன்றி இல்லாம,   அப்பா இறந்ததுக்கு அப்புறம் தன்னந்தனியா  கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவையே இப்படி சொல்லுறாருன்னு யோசிக்கிறீயா?. நான் சொல்றது உண்மை தேவ்.  என் அம்மா என் மேல ரொம்ப பாசமா இருந்தாங்க.  கஷ்டப்பட்டு  வளர்த்தாங்க, படிக்க  வைச்சாங்க. எல்லாமே சரியா செஞ்சாங்க, ஆனா அதெல்லாம் எனக்கு அம்மாவா இருந்த வரைக்கும் மட்டும்தான். உன் பாட்டிகிட்ட ஒரு கெட்ட குணம் இருக்கு, அவங்க ஒருத்தவங்க மேல பாசம் வச்சுட்டா கண்மூடித்தனமா பாசம்  காட்டுவாங்க, அந்த பாசம் கொஞ்சம் பைத்தியக்காரத் தனமாவும் இருக்கும். அதாவது  அவங்களுக்கு பிடிச்சவங்க அவங்க கூட மட்டும் தான் பேசணும் பழகணும்,  அவங்க சொன்னதை மட்டும்தான் கேக்கனும்னு நினைப்பாங்க, அவங்க பேச்சை மீறி எதிர்த்து  பேசினோம்னா, அதை அவங்களால தாங்கிக்க முடியாது. நாம என்னமோ அவங்களுக்கு துரோகம் செஞ்சிட்ட மாதிரி வார்த்தையால நம்மள காயப்படுத்துவாங்க.. இல்ல அவங்களுக்கு அவங்களே காயப்படுத்திக்குவாங்க.  இதை நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை. அவங்க கிட்ட வளர்ந்த நீயே அதை என்னைக்காவது ஒரு நாளாவது அனுபவிச்சு  தான் இருந்திருப்ப..  “ என்று வாசுதேவ்  கூறிட..

தந்தை சொன்னது போல் தன்  பாட்டியிடம் இருந்த  அந்தக் குணத்தை அனுபவத்தில் அறிந்து இருந்தவன், அதையும் அவர்  காட்டும்  அதீத பாச மென்றே  எண்ணியிருந்தான். ஆகையால் தந்தையின் வார்த்தையை ஏற்க முடியாமல், “ அதை ஏன் கெட்ட குணமா பாக்குறீங்க.. அவங்க உங்க மேல வச்சிருக்க அளவுக்கதிகமான பாசம்னு  நினைச்சா பிரச்சனையே இல்லையே!” என்று தன் பிரியமான பாட்டிக்கு பரிந்து பேசினான் அமுதேவ்.

“ அளவுக்கு மிஞ்சினா.. அமுதமே நஞ்சாகும் போது,   அன்பு மட்டும் எம்மாத்திரம் தேவ். நீ சொன்னயே அந்த அளவுக்கு அதிகமான பாசம்,  அது தான் அவங்களுக்குள்ள இருந்த நல்ல குணத்தை அழிச்சு உன் அம்மாவுக்கு கெடுதல் செய்ய  வைச்சது.”  என்றார் வாசுதேவ்.

 குழப்பமான மன நிலையுடன் அமுதேவ் அமைதியாகிட.. அதுவரை உண்மை அறிய மனமில்லாமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த  மகனின் அமைதி வாசுதேவ்விற்கு ஒருவித நம்பிக்கையை தந்தது.  “ உன் பாட்டி அவங்க தரப்பு நியாயத்தை அவங்களுக்கு தகுந்த மாதிரி சொல்லிட்டாங்க. இப்போ எங்க பக்கத்து நியாயத்தை கேளு அதுக்கப்புறம் ஒரு முடிவுக்கு வா“ என்றார்   வாசுதேவ்.

இரு தரப்பு நியாயத்தையும் கேட்டபிறகு எடுக்கப்படும் முடிவே என்றும் சரியானதாக இருக்கும் என்று விஷல்யா கூறிய வார்த்தை அமுதேவ்  மனதில் வந்து போக…  தந்தையின் தரப்பை கேட்கத் தயாராக இருப்பது போல் மெதுவாய் தலையசைத்து… “ ஷாலு எப்பவும் சொல்லுவா,  நான் பாட்டியோட சைடு மட்டும் கேட்டுட்டு உங்களை தப்பா நினைச்சுட்டு இருக்கேன்னு.   அவளுக்காகவே நீங்க சொல்றத கேட்கிறேன்.   பட் இதை கேக்குறதால  உடனே அவங்களை  மன்னிச்சு ஏத்துக்குவேன்னு  எதிர்பார்க்காதீங்க” என்றான் அமுதேவ்.

“ நீ  பானுவை மன்னிக்கவும் வேணாம்,  ஏத்துக்கவும்  வேணாம். இதுக்கு மேலயும் அவளை காயப்படுத்தாமா  இருந்தாலே போதும்.   அது மட்டும் தான் எனக்கு வேணும். ”  என்று தன் மனைவியின் மீது மகன் சுமத்திய பழி தவறு என்று நிரூபிக்கும் விதமாய் உண்மையில் நடந்ததை விவரிக்கத் தொடங்கினார் வாசுதேவ்.

“ அபாஷன் நடந்த விஷயத்தை சொன்னவங்க, கண்டிப்பா எங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு கூட சொல்லி இருப்பாங்க. இருந்தாலும் நானும் ஒரு தடவை சொல்லிடுறேன், ஏன்னா அபாஷன் நடந்த விஷயத்தை மாத்தி சொன்ன மாதிரி இதையும் அவங்களுக்கு சாதகமா ஏதாவது மாத்தி சொல்லிருக்க  வாய்ப்பு   இருக்குல” என்றவர்… முன்பு நடந்ததை விவரிக்க துவங்கினார்.

“ பானுவை முதல் தடவை பார்த்ததுமே எனக்கு பிடிச்சு போச்சு, இந்த காதல் சக்ஸஸ் ஆகுமா இல்லையான்னு கூட யோசிக்காம, உன் அம்மா பின்னாடியே சுத்துனேன். ஒரு ஸ்டேஜ்ல உங்க அம்மாவும் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. அவளோட காதல முதல்ல என் கிட்ட சொல்றதுக்கு பதிலா, அவ அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்துக்கே பர்மிஷன் வாங்கிட்டா… அந்த அளவுக்கு அவ என்னை லவ் பண்ணுனா, என் கூட வாழணும்னு ஆசைப்பட்டா. பானுவோட அப்பாவும் வீட்டுக்கு வந்து கல்யாணத்த பத்தி பேசினாங்க.  உன் பாட்டி பிடிவாதம் தான் உனக்கு தெரியுமே!. அவங்களுக்கு தெரியாம நான் இப்படி ஒரு முடிவெடுத்தது அவங்களுக்கு பிடிக்கல.  பொண்ணு காதலிக்கிறேன்னு சொன்னா காலை உடைச்சு வீட்ல போட்டு பூட்டி  வைக்கிறதுக்கு பதிலா, வெட்கமே இல்லாம வந்து பொண்ணு கேட்கிறீகளான்னு வீடு தேடி வந்தவங்கள அவமானப்படுத்தி அனுப்பி வச்சுட்டாங்க. என்னையும் கூப்பிட்டு,  ஏன்டா இப்படி வெட்கங்கெட்ட குடும்பத்தோட சம்பந்தம் பண்ணனும்னு ஆசைப்படுறயே!, உனக்கு அறிவில்லையான்னு திட்டினாங்க.  அப்பவும் நான்  பானுவை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதமா நின்னேன். “ என்று ஒரு நொடி தயங்கி நிறுத்தியவர், தன் மணிக்கட்டுக்கு மேல்  மாறாத வடுவாய்  மாறியிருந்த  தழும்பை காட்டி…” என் காதலுக்காக பிடிவாதம்  பிடிச்சதுக்காக,  உன் பாட்டி குடுத்த பரிசு இது…” என்றார் வாசுதேவ்.

“  பாட்டி  அவங்க கைய  கிழிச்சுக்கிட்டு,  செத்துருவேன்னு மிரட்டினதால தான் உங்க மனசை மாத்திக்கிட்டதா  சொன்னாங்க… அப்புறம் இது எப்படி?,  பாட்டி மனசை மாத்தணும்னு நீங்களும் அதையே செஞ்சீங்களா?” என்று குழப்பத்துடன் வினவினான் அமுதேவ்.

“ எவளோ ஒருத்திக்காக என்னையே எதிர்த்து பேசுறியான்னு…   முதல்ல எனக்கு  சூடு வைச்சாங்க.  அப்பவும் நான் பிடிவாதமா நீங்க என்ன செஞ்சாலும் சரி, என்  முடிவ மாத்திக்க மாட்டேன்னு    சொன்னேன். அதுக்கு அப்புறம் தான் என்னை பிளாக் மெயில் பண்றதுக்காக அவங்க கைய  கிழிச்சுக்கிட்டாங்க. அதுக்கு மேல என்னால அம்மாவை எதிர்க்க முடியல. பானு கிட்ட பேசி என்னை மறந்திடச் சொன்னேன். ஆனா உன் அம்மா இருக்காளே.. என் அம்மாவை விட பயங்கரமான பிளான் போட்டு ஸ்ட்ரைட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டா,  வேற வழி இல்லாம உன் பாட்டியும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் எங்க வாழ்க்கை சந்தோஷமா தான் போச்சு. அப்போ  உன்  அம்மா வெளிய வேலைக்கு எல்லாம் போகல,  வீட்டில தான் இருந்தா. பிடிக்காத மருமகளா அவங்க சம்பந்தமே இல்லாம வீட்டுக்குள்ள வந்த பானுவை என் அம்மாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கல, நாளாக நாளாக எல்லாம் மாறிடும்னு நம்பிக்கையோட இருந்தேன், ஆனா இருந்த நிலைமை இன்னும் மோசமாச்சே  தவிர எதுவும் மாறல. நான் பானு மேல காட்டுற அன்பையும் அக்கறையையும் பார்த்து அம்மா பானுவை வெறுக்கவே ஆரம்பிச்சுட்டாங்க.  நான் வீட்டுல இல்லாத நேரத்துல பானுவை கொடுமைப் படுத்த ஆரம்பிச்சிருக்காங்க, “ என்று வாசுதேவ் நிறுத்த…

“ பாட்டி கொடுமை படுத்தவும், அவங்களை  பழி வாங்குறதா   நினைச்சு.. அவங்க உங்க குடும்பத்து வாரிசை அழிக்க ஆரம்பிச்சுட்டாங்க..  அப்படித்தானே!”   என்று எல்லாம் அறிந்தவன் போல் இடையில் நுழைந்தான் அமுதேவ்.

“ உன் பாட்டி  சொன்னாங்களா?.. அவங்க கொடுமைப்படுத்துனத அவங்களே ஒத்துக்கிட்டாங்களா என்ன?” என்று ஆச்சரியத்துடன் வினவினார் வாசுதேவ்.

“ கொடுமைப்படுத்துனதா   சொல்லல… வீட்டு வேலை எல்லாம் அம்மாவையே செய்ய வச்சதா சொன்னாங்க. வீட்டு வேலை செய்றது ஒன்னும் கொடுமையான விஷயம் இல்லையே!, அதுக்கு போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு மிரட்டுவாங்களா? ” என்றான் அமுதேவ்.

“ எத்தனை கொடுமையான வேலையை கூட  செஞ்சுடலாம்… ஆனா கடுமையான வார்த்தையை யாராலும் தாங்கிக்க முடியாது தேவ். ஒரு மாமியாரா மருமகள் கிட்ட கேக்க கூடாத கேள்வி எல்லாம் கேட்டிருக்காங்க, உன் அம்மாவோட நடத்தையையும் தப்பா  பேசியிருக்காங்க, உன் அம்மாவுக்கு தான் தன்மானம் அதிகமாச்சே!.. இதுக்கு மேல என்னைப் பத்தி தப்பா பேசினா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு மிரட்டி இருக்கா. பானு எதிர்பார்த்த மாதிரியே என் அம்மாவும் அதுக்கப்புறம் பானுக்கிட்ட  நல்ல விதமா நடந்துக்க ஆரம்பிச்சிருக்காங்க.  அம்மா மாறிட்டாங்க இனி எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்கலாம்னு  எனக்கும் நிம்மதியா இருந்தது.  அப்போதான் உன் அம்மா முதல் தடவை கர்ப்பமானா, உன் பாட்டியும் அவளை ரொம்ப நல்லாவே கவனிச்சுக்கிட்டாங்க. திடீர்னு ஒருநாள் வயிறு வலியில துடிக்க ஆரம்பிச்சா, ஹாஸ்பிடல் போய் அட்மிட் பண்ணுனோம்,  குழந்தை கருவிலேயே அழிஞ்சுடுச்சுன்னு சொன்னாங்க. சரி நம்ம தலையெழுத்து அவ்வளவு தான்னு மனசை தேத்திக்கிட்டோம். அம்மாவும் பானுவுக்கு ஆறுதலா இருந்தாங்க. அடுத்து இன்னொரு குழந்தை தரிச்சது,  அப்பவும் உன் அம்மாவுக்கு முதல் தடவை மாதிரியே வயிறு வலி  வந்துச்சு. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு ஓடினோம் குழந்தை கருவிலேயே கலைஞ்சுடுச்சுன்னு சொன்னாங்க, எதனால இப்படி அடிக்கடி ஆகுதுன்னு டாக்டர் செக்  பண்ணிப் பார்த்ததுல கரு தானா  கலையல, கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கிட்டதால தான் இது நடந்திருக்குன்னு, ஷாக்கிங் இன்பர்மேஷன் குடுத்தாங்க.” என்று வாசுதேவ் நிறுத்த…

“ கருக்கலைப்பு மாத்திரை அம்மாவே தான எடுத்துக்கிட்டாங்க!” என்று ஆர்வத்துடன் வினவினான் அமுதேவ்.

இல்லை என்பதுபோல் மறுத்து தலையசைத்தார் வாசுதேவ். “அப்புறம்?” என்று குழப்பத்துடன்  அமுதேவ் வினவ..

“ குழந்தை வளர்ச்சிக்கு நல்லதுன்னு  சொல்லி உன் பாட்டி தான் ஏதோ ஒரு கஷாயத்தை கட்டாயப்படுத்தி  குடிக்க  வைச்சிருக்காங்க. அது குடிச்ச அடுத்த நாளே வலி வந்து குழந்தை கலைஞ்சிருக்கு. “  என்றார் வாசுதேவ்.

“ பாட்டி உயிரோட இருந்த வரைக்கும் என்னை ரொம்ப பாசமா பார்த்துக்கிட்டாங்க. அதுக்கு காரணம் நான் உங்களோட வாரிசு. அப்படி இருக்கும்போது எனக்கு முன்னாடி உருவான குழந்தையை மட்டும் எப்படி அவங்களுக்கு அழிக்க மனசு வந்தது. “ என்று அப்போதும் தந்தையின் வார்த்தையில் முழு நம்பிக்கை இல்லாமல் சந்தேகமாய் வினவினான்  அமுதேவ்.

“உன்  அம்மா வயித்துல உருவான கருவை எல்லாம் அழிச்சுட்டு, அவளுக்கு மலடின்னு  பட்டத்தை கட்டி, என்னை விட்டு பிரிச்சுட்டு,  அவங்க சொந்தத்துல ஒரு பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணியிருக்காங்க. அவங்க நினைச்ச படியே.. ரெண்டு தடவையும் ஹெவி டோஸ் மருந்து சாப்பிட்டு கரு கலைஞ்சதால கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருக்கு.. அடுத்த குழந்தை  உருவாகுறது  கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாங்க.   இரண்டு பேரும் உடைஞ்சு போயிட்டோம். அந்த நேரத்துல தான்  அம்மா என்கிட்ட வந்து.. இவளை   அவ அப்பா வீட்டுக்கு அனுப்பி வைச்சுடு, நான் உனக்கு எந்தக் குறையும் இல்லாத  பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி  வைக்கிறேன்னு சொன்னாங்க. பானுவுக்கு இப்படி ஒரு நிலைமை வரதுக்கு நீங்கதான் காரணம்னு அம்மா கிட்ட கோபமா  பேசின நான் அதுக்கடுத்து அவங்ககிட்ட பேசுறதையே குறைச்சுக்கிட்டேன்.  உண்மை தெரியவும் உன் அம்மாவும் பாட்டி கூட  சண்டை போட்டா, எவ்வளவு சண்டைபோட்டு கத்தினாலும் கதறினாலும் என்ன பிரயோஜனம்,  போனது போனது தானே, இனிமே நாம கவனமா இருப்போம்னு ஆறுதல் படுத்தினேன்.  எவ்வளவுதான் ஆறுதல் சொன்னாலும் உன் அம்மா அந்த சோகத்துல இருந்து வெளிய வரல,  ரெண்டு குழந்தைய பறிகொடுத்த  துக்கத்துல உன் அம்மா கிட்ட தட்ட நடைபிணமாகிட்டா. சரியா சாப்பிடுறது இல்ல, தூங்குறது இல்ல,  யாருகிட்டயும் பேசாம ஜடம் மாதிரி  இருந்தா..  எது நடந்தாலும் தாங்கிக்க கூடிய தைரியமான பொண்ணு குழந்தைங்க மேல இருந்த பாசத்துல ஒரே நிமிஷத்துல கோழையா மாறிட்டா.  அவளை எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வரதுன்னு புரியாம இருந்தப்போ தான்,   என் ஃப்ரெண்ட் ஒரு சைகாடிஸ்ட் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக சொல்லி அட்வைஸ் பண்ணுனான். நானும் உன் அம்மாவை கூட்டிட்டு போனேன்.  வீட்டுக்குள்ளேயே இருந்தா இதையேதான் நினைச்சிட்டு இருப்பாங்க,  வெளிய  அனுப்புங்க புது ஆட்கள் நாலு பேர பாக்குறதால மனசு மாறும்ன்னு, டாக்டர் அட்வைஸ் பண்ணாங்க. நானும் உன்  அம்மாவை ஒரு  கார்மெண்ட்ஸ்ல வேலைக்கு அனுப்புனேன்.  அவ கிட்ட நல்ல முன்னேற்றம்  தெரிஞ்சுது, கொஞ்சம் கொஞ்சமா பழைய பானுவா தைரியமா மாற ஆரம்பிச்சா.  அப்போ தான் அவ வேலை பார்த்துட்டு இருந்த கார்மெண்ட்ஸ்ஸை     க்ளோஸ்  பண்ணப் போறதா  நியூஸ் வந்தது. அந்த வேலையை நம்பி எத்தனையோ குடும்பம் இருந்தது, அவங்க நிலைமை எல்லாம் என்னாகும்னு யோசிச்ச உன் அம்மா புதுசா நாமளே கார்மெண்ட்ஸ் பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு ஐடியா சொன்னா.  அதை வேணாம்னு சொல்ல என்கிட்ட எந்த காரணமும் இல்லை,  சோ நானும் சரின்னு சொல்லிட்டேன்,  ஆனா உன் பாட்டி தடுத்தாங்க. என் பேச்சைக் கேட்காம உங்க இஷ்டத்துக்கு  இருக்கணும்னா  வீட்டை விட்டு வெளியே போயிடுன்னு சொன்னாங்க. ஏற்கனவே உருவான குழந்தையெல்லாம் அவங்களால தான்   அழிஞ்சுதுன்னு கோபத்துல இருந்த உன் அம்மாவும்  உடனே வீட்டை விட்டு வெளியே வந்துட்டா… உன் அம்மாவை விட்டுக்கொடுக்க மனசில்லாம நானும் அவ கூடவே வெளிய வந்துட்டேன். அதுக்கப்புறம் குழந்தைக்காக நிறைய ட்ரீட்மென்ட் பார்த்தோம் அப்போதான் நீ எங்களுக்கு கிடைச்ச.. நீ  வயத்துக்குள்ள இருக்கிறப்போ உன்  அம்மா ஓங்கி நடக்க கூட பயப்படுவா தெரியுமா?, சத்தம் போட்டு பேச மாட்டா.. அந்த அளவுக்கு உன்னை பொத்திப் பொத்தி பாதுகாத்தா. ஆனா நீ பிறந்ததுக்கு அப்புறம் உனக்கு அந்த அளவுக்கு செல்லம் கொடுக்கல, உன்கிட்ட ரொம்பவே கண்டிஷனா இருப்பா, நான் கூட கேட்பேன் அந்தப் பிள்ளை வயித்துக்குள்ள இருக்கும்போது அப்படி பார்த்து கிட்ட.. இப்போ எதுக்கு இவ்வளவு கண்டிஷன் பண்ணுறன்னு.  அதுக்கு உன் அம்மா என்ன சொல்வா தெரியுமா?” என்று ஆர்வத்தை தூண்டும் விதமாய் கேட்டுவிட்டு அரைநொடி தயங்கியவர்.. மகனின் முகத்தில் இருந்த உணர்வை படிக்க முயன்றார்.

உள்ளத்தின் உணர்வை முகத்தில் பிரதிபலிக்காமல் வெகு கவனமாக பார்த்துக் கொண்ட அமுதேவ்.. “ அம்மா என்ன சொன்னாங்க?” என்று ஆர்வம் இல்லாதது போலவே வினவினான்.

“ இதுக்கு அப்புறம் நமக்கு குழந்தை இருக்குமா இல்லையானு தெரியல!, சப்போஸ் இவன் ஒருத்தன் தான் நமக்கு  பிள்ளைன்னு இருந்தா, நாம கொடுக்கிற அளவுக்கதிகமான செல்லத்துல அவன் வாழ்க்கை கேள்விக்குறியா மாறிடக் கூடாது. அதனால தான் இப்பவே கட்டுப்பாட்டோட  வளர்க்கிறேன்னு சொல்லுவா. பானு சொன்னது சரிதான். உனக்கு செல்லம் குடுக்காம வளர்த்தப்பவே, எங்களை இந்தப் பாடு படுத்துற.. இதுல செல்லம் கொடுத்து வளர்த்திருந்தா எங்க நிலைமை என்ன ஆயிருக்கும்” என்று மகனின் பிடிவாதத்தை குறிப்பிட்டு கிண்டலுடன் கூறி சிரித்தார் வாசுதேவ்.

“ ஒருவேளை செல்லம் கொடுத்து வளர்த்திருந்தா.. , உங்களை விட்டு பிரிய மனசில்லாம, பாட்டியை விட்டுட்டு உங்க கிட்டயே வந்திருப்பேனோ என்னவோ!, ரொம்ப கட்டுப்பாடோட வளர்த்ததால தான்..  பாட்டி சொன்ன மாதிரி உண்மையிலேயே உங்களுக்கு என்னை பிடிக்கலன்னு  நினைச்சு விலகியே இருந்துட்டேன்.” என்று வெறுமையான குரலில் கூறினான் அமுதேவ்.

“ அப்படித்தான் இருக்கும்னு நாங்களும் நினைச்சோம். எங்ககிட்ட வளர்றது பிடிக்காம தான் உன் பாட்டி கூடயே இருக்கன்னு நினைச்சு, ஆரம்பத்துல உன்னை அங்கேயே விட்டுட்டோம். அதுக்கு அப்புறம் நீ எங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகுறது புரியவும், இதுக்கு மேல உன்னை அங்க விட்டு வைக்கிறது சரியில்லன்னு எங்க கூடவே கூப்பிட்டுக்க நினைச்சோம். ஆனா நீ எங்க கூட  வர விருப்பம் இல்லாம உன் கையிலேயே சூடு  வைச்சுக்கிட்டு   அடம்பிடிச்சிருக்க.. அதுக்கு மேல உன்னை கஷ்டப்படுத்த வேணாம்,  உனக்கு எப்போ தோணுதோ அப்போ எங்கள தேடி வரட்டும்னு  அங்கேயே விட்டுட்டோம். ஆனா நீ இப்போ வரைக்கும் எங்களை தேடி வரவே இல்லை.” என்று வருத்தத்துடன் கூறினார் வாசுதேவ்.

“தேடி வரத் தோணவே இல்ல. அப்புறம்    சூடு நானா வைச்சுக்கிட்டது இல்ல, பாட்டி வைச்சது “ என்று வெறுமையான குரலில் கூறியவன்… “ எனக்கு ஒரு சந்தேகம், கேட்கலாமா?” என்றான் அமுதேவ்.

சம்மதமாய் வாசுதேவ் தலையசைக்க.. “ அம்மாவோட கர்ப்பப்பை வீக்கா இருக்குனு ஏற்கனவே தெரியும் தான!,  நான்  உருவாகி  இருக்கும்போது ரெண்டு மடங்கு பாதுகாப்பா இருந்தவங்க,  அடுத்த குழந்தைக்கு அதை ஏன் செய்யாம விட்டுட்டாங்க”  என்றான் அமுதேவ்.

“ அந்த நேரம் பிசினஸ்ல ஒரு பெரிய ப்ராப்ளம்,  அதை சரி செய்ய ஒரு  பாரின் டீலிங் முடிக்க வேண்டியது இருந்தது. அந்தப் பெரிய ப்ராஜெக்ட் முடியாம போனா பிசினஸ்ஸை க்ளோஸ் பண்ண வேண்டிய நிலைமை வந்துவிடும். கார்மெண்ட்ஸ்சை மூட வேண்டிய நிலைமை வந்தா அதை நம்பி இருக்கிற பல பேர் குடும்பப் பொருளாதாரம் கேள்விக் குறியாகிடும்.  அந்த நேரத்துல   நானும் வேலை இல்லாம இருந்தேன். நம்ம வீட்டு சூழ்நிலையும் அப்போ சரி இல்ல. சோ உன் அம்மா அந்த நேரத்துல தன்னைப் பத்தி கூட யோசிக்காம இரண்டு மடங்கு வேலை செஞ்சா..  ஏற்கனவே வீக்கா இருந்த     உடம்பு பாழானதோட,   குழந்தையும் சேர்ந்து  போயிடுச்சு.   தன்னோட கவனக்குறைவால தான் குழந்தை இறந்துடுச்சுன்னு குற்றவுணர்வுல உன் அம்மா பழைய மாதிரியே யார் கூடயும் பேசாம… தனியா இருக்க ஆரம்பிச்சா..  அப்போ எங்க நிலைமையை  புரிஞ்சுக்கிட்ட உன் பாட்டி, உன்னை கொஞ்ச நாளைக்கு   அவங்க கூட கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.. எனக்கும்  வேற வழி தெரியல..   உன் அம்மா வோட நிலைமை  உனக்கு தெரியக் கூடாதுன்னு நினைச்சேன், அதனால அவ   குணமாகிற வரைக்கும்  நீ உன் பாட்டி கூட இருக்கிறது தான் சரின்னு  நினைச்சு, உன்னை அங்க அனுப்பி வைச்சேன். முதல்ல பாத்துகிறேன்னு சொல்லி கூட்டிட்டு போனவங்க அடுத்து என்ன நினைச்சாங்களோ, நானே வளர்த்துக்கிறேன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.” என்றார் வாசுதேவ்.

“ இது தான் உண்மைன்னா,  பாட்டி எதுக்கு என்கிட்ட பொய் சொல்லணும்?, உண்மையை மறைக்கிறதால  அவங்களுக்கு என்னக் கிடைச்சிடப் போகுது.. “ என்று குழப்பமாய் அமுதேவ் வினவ…

“ இரண்டு விஷயம்… ஒன்னு   உன் அம்மாவை பழிவாங்குறது, இன்னொன்னு நீ..  இது இரண்டுமே  அவங்களுக்கு கிடைச்சுடுச்சுல.” என்றார் வாசுதேவ்.

“  அவங்க சொன்னப் பொய்யை நான் என்னைக்குமே  கண்டுபிடிக்க மாட்டேன்னு நினைச்சுட்டாங்களா.. எந்த தைரியத்துல இப்படி ஒரு பொய்யை சொல்லிருப்பாங்க..  “ என்று அப்போதும் நம்பிக்கை இன்றி வினவினான்  அமுதேவ்.

“ இப்படி  ஒரு  சூழ்நிலை வராம இருந்திருந்தா,  எதுக்கு அபாஷன் பண்ணுனாங்கன்னு      நீயும் கேட்டிருக்க மாட்ட.. நீயா கேட்காம நாங்களும் விளக்கம் கொடுத்திருக்க மாட்டோம், அந்த தைரியத்துல தான் சொல்லிருப்பாங்க.. “ என்றார் வாசுதேவ்.

“ புரியல.. !” என்று ஒற்றை  வரியில் அமுதேவ் விளக்கம் கேட்க….

 “ நீ உன் அம்மா  மாதிரி தேவ். பிடிக்கலன்னு சொன்னா பேசாம  ஒதுங்கி  இருப்பியே தவிர!, தேவை இல்லாம வந்து விளக்கம் கேட்கவும் மாட்ட,  கொடுக்கவும் மாட்ட..   அது உன் பாட்டிக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு, அதனால  நீ அவ்வளவு சீக்கிரம் இந்தப் பொய்யை  கண்டு பிடிக்க மாட்டன்னு  நினைச்சிருப்பாங்க. அவங்க  நினைச்சது தானே தேவ்  கடைசில  நடந்திருக்கு, இப்போ கூட நீ உன் அம்மா கிட்ட சண்டை போடத்தான் வந்தையே  தவிர., உனக்குள்ள இருந்த குழப்பத்துக்கு விளக்கம் கேட்க வரல!.. “ என்றார் வாசுதேவ்.

ஒருவர்  சொன்னது உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க கூட முடியாமல், அதை கண்டுபிடிக்கவும் முயற்சி செய்யாமல் இருந்த தனது முட்டாள்த்  தனத்தை   எண்ணி தனக்குள்ளே மருக்கிக்கொண்டவன். தன் உள்ளத்தின்  உணர்வை வெளிப்படுத்தாமல், அங்கிருந்து அமைதியாக  வெளியேற   முயன்றான்.

“ ஒரு நிமிஷம் தேவ். இப்ப கூட நான் சொன்னது உண்மையா பொய்யான்னு,  புரியாம  குழப்பத்தோட  தான் எதுவும் சொல்லாம  கிளம்பிப் போறன்னு  புரியுது.  அது மட்டும் இல்ல உன் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருக்குமோன்னு பயமும் உனக்குள்ள இருக்கு. நீ கவலைப் படாம போ, உன்  குழந்தைக்கு எந்த கெடுதலும் வந்திருக்காது.  ஷாலுவே குழந்தையை கலைக்கிற முடிவுல  இருந்தாலும், உன் அம்மா அதை செய்ய விட்டிருக்க மாட்டா. கண்டிப்பா நல்ல விதமா பேசி அவ மனசை மாத்திருப்பா. அதுவே நான் சொன்னது உண்மைன்னு நிரூபிக்க உனக்கு  சாட்சியா இருக்கும்” என்றார் வாசுதேவ்.

அமைதியாக தந்தை முகம் பார்த்தவன், வெறுமையாக புன்னகைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

மதிய உணவு வேளை நெருங்கிக்கொண்டிருந்த நேரம் அமுதேவ் வாகனத்தின் சத்தம் கேட்டு பாரபரப்பானாள் விஷல்யா. “ அத்தை  அம்மு வந்துட்டான். “ என்று சந்தோஷத்தில் துள்ளியவளை..  பார்வையால் கண்டித்தவர்,  “ இன்னும் கொஞ்ச நாளைக்கு ரொம்ப  கவனமா இருக்கணும் ஷாலு, உன் வாலுத் தனத்தை எல்லாம்  மூட்டை கட்டி வைச்சுடு, “ என்று  பெரியவராய் அறிவுரை வழங்கினார் பானுஸ்ரீ.

“ புரியுது, அத்தை.. இருந்தாலும்  அம்மு எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு யோசிச்சு ஓவர் எஸ்சைட் ஆகிட்டேன். அவனோட பேஸ் ரியாக்ஷனை கேப்சர் பண்ணக் கேமரா கூட செட் பண்ணிட்டேன். ” என்று அளவில்லா சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டாள் விஷல்யா.

“ சரி..  என்னை பார்த்தா அம்மு ரொம்ப  அப்செட் ஆவான்,  அதுக்கப்புறம் நீ சொல்ற குட் நியூஸ் கூட அவன் காதுல ஏறாது, அதனால நான் தோட்டத்துல இருக்கேன். “ என்று பானுஸ்ரீ அமைதியாக பின்புறம் வழியாக  தோட்டத்தினுள் நுழைந்த நேரம் அமுதேவ் வீட்டினுள்  நுழைந்தான்.

அவனையும் மீறி கண்கள்  அறை முழுவதும் வாட்டமிட்டு  அவன் அன்னை முகத்தை தேடிட.. அவர் அங்கு இல்லாமல் இருக்க… நிம்மதியா ஏக்கமா என்று கணிக்க முடியாத பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் அமுதேவ்.

“ என்ன அம்மு அங்கயே  நின்னுட்டு,  யாரைத் தேடுற.. ?“  என்ற விஷல்யா கேள்விக்கு… “ ஒன்னும் இல்ல… சும்மா தான்.. “ என்று மழுப்பலாய் பதில்  தந்து.. உள்  நுழைந்தான் அமுதேவ்.

வழக்கத்திற்கு மாறான அமைதியுடன் வந்தவன் எதுவும் பேசாமல், வீட்டை நோட்டமிட்டபடி இருக்க…  “ போன்ல அவ்ளோ கோபமா பேசுன…  நீ  பேசுன வேகத்தைப் பார்த்து, நேரா வீட்டுக்குத் தான் வருவன்னு  எதிர்பார்த்து காத்திட்டு இருந்தேன், எதுக்கு இவ்ளோ லேட்” என்றாள் விஷல்யா.

“ வர வழியில ஒரு முக்கியமான வேலை  இருந்தது,  அதை முடிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு. ஆமா வீட்ல நீ மட்டும் தனியாவா இருக்க..?” என்றான் அமுதேவ்.

“ என்னமோ புதுசா கேக்குற எப்பவும் நான் மட்டும் தனியாத் தான இருப்பேன்… சமையல்கார அம்மா சாப்பாடு சமைச்சு வச்சிட்டு அப்பவே கிளம்பிட்டாங்க “ என்றவள்…  “ நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் உன் முகமே சரியில்லை.. என்னாச்சு?” என்றாள் விஷல்யா.

“ ஒன்னும் இல்ல.. ஆமா போன்ல பேசும்போது ஏதோ தப்பு.. அதை வீட்ல வந்து தெரிஞ்சுக்கோன்னு சொன்னயே அது என்ன?” என்று உள்ளுக்குள் உண்டான ஆர்வத்தை மறைத்து அமைதியாகவே வினவினான் அமுதேவ்.

“ சொல்றேன் சொல்றேன்… அதுக்கு முன்னாடி கண்ண மூடு..” என்று கட்டளைப் பிறப்பித்தவள்,  விசித்திரமான எதையோ பார்ப்பது போல் விழி விரித்து அதிசயத்துடன் அமுதேவ் பார்த்திருக்க…” என்னடா அப்படி பார்க்கிற ஒருவேளை நான் என்ன சொல்லப் போறேன்னு,  உனக்கு முன்னாடியே தெரிஞ்சிடுச்சா!”  என்று சோகமாக வினவினாள் விஷல்யா.

இல்லை என்பது போல வேகமாய்  தலையசைத்தவன் மனம் வார்த்தையில்  வருணிக்க  இயலாத  உவகையில் துள்ளியது. 

கண்களை மூடியிருந்த கணவனின் கன்னம் பற்றி வாய் திறக்க செய்தவள்,   தித்திப்பான.. கேசரியை  ஊட்டிவிட… மெதுவாய்  மென்று  விழுங்கியவனுக்கு அதன்  சுவை  சொன்னது,  இதை   சமைத்தது யாறென்று.. அதன் சுவையில் அமுதேவ் மெய்மறந்திருந்த நேரம்..

அவனது  வலது கரத்தைப் பற்றி தன் வயிற்றுப் பகுதியில் வைத்தவள், “ நீ எனக்காக   எத்தனையோ செஞ்சிருக்க..  உன் பிடிவாதத்தை கூட எனக்காக மாத்திக்கிட்ட,   இது எல்லாத்துக்கும்  கைமாறா இதுவரைக்கும் நான்  எதுவுமே உனக்கு திருப்பித் தரல அம்மு.  இது  தான் உனக்காக பரிசு, நம்மக் குழந்தை, “ என்றவள்.. அமுதேவ் கண்களில் அவனையும் மீறி கண்ணீர் வழிய… “  இது உனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தான அம்மு,  அப்புறம் எதுக்கு அழுகுற?” என்று குழப்பமான குரலில் வினவினாள்  விஷல்யா.

மூடியிருந்த கண்களைத் திறந்து.. மனைவியை இறுகக் கட்டிக்கொண்டவன், “ இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல…ஷாலு,  இப்போ கிடைச்சிருக்கிற ப்ரொஜெட் ஒர்க்கு  இடைஞ்சலா  இருக்கும்னு கலைச்சிடுவியோன்னு  பயந்துட்டே இருந்தேன்” என்றான் அமுதேவ்.

“ அப்போ  உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று  ஆச்சர்யத்துடன்  விஷல்யா வினவ.. “ முன்னாடி இல்ல,”  என்றவன் அவளைக் காண அலுவலகம் விட்டு வந்தது, அதன் பின் மருத்துவமனையில்  விசாரித்தது  வரை கூறி  முடித்தவன், தாய்  வீடு சென்று தந்தையுடன் பேசி  வந்ததை மட்டும் சொல்லாமல்  தவிர்த்து விட்டான்.

“ ஓ…   எனக்கு அப்புறம் வந்த  லேடியைப்  பத்தி உன்கிட்ட சொல்லிருக்காங்க போல, அவங்க தான் குழந்தை வேணாம்னு வந்தாங்க” என்று மருத்துவமனையில் நடந்த  குழப்பத்திற்கான காரணத்தை விளக்கி முடித்தவள்,

 “ உண்மையை சொல்லுனும்னா…  அத்தைகிட்ட பேசுற வரைக்கும் நானும் அந்த  மனநிலையில் தான் இருந்தேன் அம்மு. நீ வீட்டை விட்டு கிளம்பப் போனதும், மெடிக்கல் கிட்  வாங்கிட்டு வந்து  பிரக்னன்ஸியை கன்பார்ம் பண்ணிக்கிட்டேன். முதல்ல இந்த ப்ராஜெக்ட் முடியிற வரைக்கும் குழந்தை வேணாங்கிற    முடிவுல அன்னைக்கு  உன்கிட்ட சொன்ன மாதிரி   அபாட் பண்ணிடலாம்னு நினைச்சேன். ஆனா என்னவோ தெரியல அன்னைக்கு சொல்லும் போது  ஈஸியா இருந்தது, இன்னைக்கு அதை செய்யணும்னு நினைக்கும் போது மனசு  ரொம்ப  பாரமா  இருந்தது. என்னடா இது எதுக்கு இப்படித் தயங்குறேன்னு யோசிக்கும் போது தான்,    கமலி மேம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.” என்றாள்  விஷல்யா.

“ கமலி மேம்… என்ன சொன்னாங்க? “ என்று குழப்பத்துடன் அமுதேவ்  நிறுத்த…

“நானும் கமலி மேம்மும் அவங்க எழுதின தாய்மையை போற்றுவோம் கதையைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். அப்போ தாய்மை பொண்ணுங்களோட பொறுப்பு,  குழந்தையோட வளமான எதிர்காலம்  தந்தையோட கடமை, சோ  குழந்தைங்க விஷயத்துல அப்பா அம்மா ரெண்டு பேரும் யாரோட தியாகம் பெருசுன்னு ஈகோ பார்க்காம ஒத்துமையா இருக்கணும்னு சொன்னாங்க,   அந்த வார்த்தை ஞாபகத்துக்கு வரவும்,    இது எனக்கு மட்டும் குழந்தை இல்லையே! உனக்கும்  தானே! சோ உன்னோட பர்மிஷன் இல்லாம இதை கலைக்கிறது சரியா இருக்காதுன்னு நினைச்சேன். சரி உன் கிட்ட  பர்மிஷன் வாங்கிட்டு  ஹாஸ்பிடல் போகலாம்னு  யோசிச்சா.. அப்போவும் மனசு பாரமா தான் இருந்தது.  எனக்கு எதுக்கு அப்படி கஷ்டமாயிருந்ததுன்னு  புரியல!,  அடுத்து என்ன  பண்றதுனே தெரியல!,  குழப்பமா இருந்தது. முதல்ல அம்மாவைத் தான் வரச் சொல்லலாம்னு நினைச்சேன், ஆனா அவங்க வந்தா என்னைப் பத்தி யோசிக்காம, என்னையே குறைச்சொல்லி  திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. அத்தை தான் இதுக்கு சரியான ஆள்னு தோணுச்சு அதனால அத்தைக்கு போன் பண்ணுனேன். “ என்று விஷல்யா நிறுத்த…

“ அம்மா வந்தாங்களா?, என்ன சொன்னாங்க?” என்று ஒருவித தவிப்புடன் அமுதேவ் வினவ, இதுவரை அவன் பயன்படுத்தாமல் தவிர்க்கும் அம்மா என்ற வார்த்தையை கவனிக்காத விஷல்யா, கணவனின்  தவிப்பை தவறாய் புரிந்து கொண்டு,   “ சாரி அம்மு..  உனக்கு அத்தை இங்க வந்தா பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் எனக்கு அதை விட்டா வேற வழி தெரியல.. “ என்று மன்னிப்பு வேண்டினாள் விஷல்யா.

“ அதெல்லாம் இருக்கட்டும்.. அம்மா என்ன சொன்னாங்கன்னு முதல்ல சொல்லு” என்று  அவசரப்படுத்தினான்  அமுதேவ்.

“நான் போன் பண்ணுன கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துட்டாங்க!,  ஃகன்சிவ்வா இருக்கிற  விஷயம் கேள்விப்பட்டதும் அவ்ளோ   சந்தோஷப்பட்டாங்க. அதை கலைக்க  நினைக்கிறேன்னு தெரியவும் அவங்களுக்கு அப்படி ஒரு கோபம்!,  குழந்தைக்காக எத்தனை பேரு தவம் இருக்காங்க தெரியுமா?, அப்படியிருக்கும் போது பொக்கிஷமாக கிடைக்கிற பிள்ளையை அழிக்கிறேன்னு  சொல்லுறன்னு பயங்கரமா திட்டுனாங்க. பிள்ளைகள் கடவுள் கொடுக்கிற வரம், அவர் கொடுக்கும் போதே வாங்கிக்கணும்,  இப்போ வேணாம்னு நாம தட்டிக் கழிச்சா.. நாம தேடுறப்ப அது கிடைக்காது. அதனால இந்த குழந்தையை வேணாம்னு  சொல்லாம பெத்துக்க சொன்னாங்க.   குழந்தையை கலைக்கனும்னு யோசிக்கும் போது,  என்  மனசு  பாரமா இருந்ததுன்னு சொன்னேன்ல!,  அது தான் தாய்மையாம்,  என்னோட உயிருக்குள்ளே இன்னொரு உயிரா… உருவாகி இருக்கிற குழந்தையை அழிக்க நினைச்சாதால தான் எனக்கு  அப்படி ஒரு ஃபீல் வந்ததாம். அத்தை சொன்னதும்  தான்.. பொண்ணுங்களுக்கு தாய்மை உணர்வு  இயல்பாவே  இருக்குங்கிற  விஷயமே எனக்கு புரிஞ்சது. அதுவரைக்கும் எனக்குள்ள புரியாம குழப்பமா இருந்தது தெளிவாச்சு. இது என்னோட குழந்தை, நம்மளோட குழந்தை,  இதை அழிக்க கூடாதுன்னு முடிவு பண்ணுனேன், அப்புறம் தான் மனசு நிம்மதியாச்சு. குழந்தை வேணும் முடிவெடுத்தாலும் ப்ராஜெக்ட் ஒர்க்கை  நினைச்சு கவலையா இருந்தது. அத்தைகிட்ட  ப்ராஜெக்ட் வொர்க்கைப் பத்தி சொல்லி பீல் பண்ணுனேன். எத்தனை பொண்ணுங்க வேலைக்கு போறாங்க, அவங்க எல்லாம் குழந்தை பெத்துக்க யோசிக்க ஆரம்பிச்சா… நாம நம்மளோட  அடுத்த சந்ததியை  பார்க்காமலேயே இருந்திட வேண்டியது  தான்னு, அதுக்கும் ஒரு டோஸ் கொடுத்தாங்க. அப்புறம் நான் பாவமா முகத்தை  வைச்சுகவும், சாரிமா.. குழந்தை வேணாம்னு சொல்ல காரணம் தேடுறியோன்னு நினைச்சு கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். இப்போ உனக்கு என்ன உன் ப்ரொஜெட் ஒர்க்கு ஒரு  சப்போர்ட் வேணும் அவ்ளோ     தானேன்னு,  அதுக்கும் ஒரு  சொல்யூஷன் சொன்னாங்க.  மாமாவுக்கு தான்  கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் நல்லாவே தெரியுமே!, அவர் அந்த ஃபீல்டுல தான் வேலை பார்த்துட்டு இருந்தாரு, அதனால மாமா எனக்கு ப்ராஜெக்ட் வொர்க்ல ஹெல்ப் பண்ணுவாரு, சோ ஒர்க்கை பத்தி கவலைப்படாம ஹெல்த்தைப்  பார்த்துக்கிட சொன்னாங்க. அது மட்டும் இல்ல அம்மு, அத்தையோட கார்மெண்ட்ஸ் பிஸினஸை கூட சூப்பர்வைசர் பொறுப்புல விட்டுட்டு எப்பவும் என் கூடவே இருக்கேன்னு  சொல்லிருக்காங்க,  அதனால எந்த கவலையும் இல்லாம  இந்தக் குழந்தையை  பெத்துக்கணுமாம்,  குழந்தை பிறந்ததும்  என்னையும்   குழந்தையையும் பார்த்துக்கிறது அவங்களோட  பொறுப்பாம்.  “ என்றவள் ஒருநொடி  தயங்கி…

“  அத்தை உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறாங்க அம்மு,    உன்னைப்  பத்தின ஒவ்வொரு விஷயத்தையும் இப்ப வரைக்கும் ஞாபகத்துல வச்சிருக்காங்க,  நீ   கருவுல உருவான தேதி,    கன்ஃபார்ம் பண்ணுனது,  ஐஞ்சாவது மாசம் வளையல் போட்ட   அன்னைக்கு   உன்னோட  ஃபர்ஸ்ட் மூவ்மெண்ட்டை உணர்ந்தது. ஏழாவது மாசத்துல வயித்துல இருக்கும் போது இளையராஜா மியூசிக்  கேட்டா நீ ரொம்ப குஷியாகிடுவியாம், ஒன்பதாவது மாசத்துல கால் கையை  விரைச்சுக்கிட்டு நிப்பியாம்.. அப்போவே உனக்கு அவ்ளோ வீரப்புன்னு  சொல்லி சிரிப்பாங்களாம்.   நீ சின்ன வயசுல எப்படி இருந்த, என்னெல்லாம் சேட்டை பண்ணுவ,  இப்படி உன்னை பத்தின ஒவ்வொரு விஷயத்தையும் என்கிட்ட சொன்னாங்க, அதை கேட்கும் போது எனக்கும் இதே மாதிரி நம்ம குழந்தையோட மெமரீஸ் எல்லாம் சேர்த்து வைக்கனும்னு ஆசையா இருக்கு அம்மு. “ என்றாள் விஷல்யா.

“ மெமரிஸ் தான தாராளமா சேர்த்து வைக்கலாம். ஆமா நீ சாப்பிட்டயா?, இந்த மாதிரி  நேரத்துல நேர நேரத்துக்கு சரியா சாப்பிடணும்.” என்றான் அமுதேவ்.

“ அதெல்லாம் அப்பவே சாப்பிட்டேன்.   சரி சரி பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல.. நீ போய் ஃபிரஸ் ஆகிட்டுவா.. நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன், “ என்றவள் பார்வை நொடிக்கு ஒருமுறை பின்புற தோட்டத்தில் பதிந்து மீள… அமுதேவ்  கவனமும் அங்கு சென்றது.

“ஏன் அந்தப் பக்கம் பார்த்துட்டே இருக்க? ஷாலு,  அங்க யாரு இருக்கா?, “ என்று அமுதேவ் வினவ… 

“ அத்தை இருக்காங்க அம்மு,  உனக்கு அவங்க முகத்தை பார்க்க பிடிக்காதுன்னு, பின்னாடி போய் உட்கார்ந்திருக்காங்க”  என்றாள் விஷல்யா.

“ சரி உனக்கு இப்போ ஓகேன்னா…. எனக்கு சாப்பாடு எடுத்து வை. டயர்டா இருந்தா இட்ஸ் ஓகே நானே பார்த்துக்கிறேன்.. “ என்றவன் பின்புற தோட்டத்திற்கு செல்லும் வழியில் திரும்ப…

” அம்மு ப்ளீஸ் எனக்காக அத்தையை எதுவும் சொல்லிடாத… “ என்று  கெஞ்சலுடன் வேண்டினாள் விஷல்யா.

“  சாப்பிட்டாங்களா?” என்றவன் விஷல்யா இல்லை என்பது  போல தலையசைக்க…

 “ அப்போ அவர்களுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வை,  அவங்களை கூட்டிட்டு வரேன், எவ்வளவு நேரம் தான் வெயில்ல உட்கார்ந்து இருப்பாங்க” என்று  அன்பும் அக்கறையும் கலந்த குரலில் பரிவுடன் கூறினான் அமுதேவ்.

கணவன்  குரலில் தெரிந்த  பரிவை கவனித்தவள்,” அம்மு!” என்றவள் குரல்  மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்த…

“ இங்க வரதுக்கு முன்னாடி அப்பாவை போய் பார்த்துட்டு வந்தேன். நீ அடிக்கடி சொல்ற மாதிரி அவங்க தரப்பு நியாயத்தையும் கேட்டுட்டேன். சோ இனி நான் எடுக்கிற முடிவு ஒருதலைப்பட்சமா இல்லாம தெளிவா இருக்கும்”  என்றான்  அமுதேவ்.

“ அம்மு உண்மையைத்தான் சொல்றியா?” என்று ஆச்சரியத்துடன் விஷல்யா வினவ,

காதலும் கனிவுமாய் மனைவியை  இதமாய் அணைத்துக் கொண்டவன் “  நான் எதிர்பார்க்காத ஒன்னை நீ கொடுத்திருக்க ஷாலு.. அதுக்கு பிரதிபலனா நான் ஏதாவது செய்யணுமே!,  அதுக்கு தான்  நீ ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டுட்டு இருக்கிற குடும்பத்தை உனக்காக தரப்போறேன். இப்போ உனக்கு சந்தோஷமா?” என்றவன் மனைவி மகிழ்வுடன் ஆம் என்பது போல் தலையசைக்க, “ எனக்கும் இப்போ தான் ரொம்ப சந்தோஷமாவும், நிம்மதியாவும் இருக்கு ஷாலு. இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான். நீ மட்டும் என் லைஃப்ல வராம போயிருந்தா, இது எதுவுமே நடந்திருக்காது,  என் அம்மாவும் எனக்கு திரும்ப கிடைச்சிருக்க மாட்டாங்க.”  என்று நன்றியுடன் மனைவியின் முன் நெற்றியில் முத்தமிட்ட அமுதேவ்,  அன்னை இருக்கும் இடம் தேடிச் சென்றான்.

கணவனின் மாற்றத்தை எண்ணி உவகை கொண்டவள்… அவன் சொல்லிச் சென்றது போல  இருவருக்குமான உணவைப் பரிமாறத்  தயாரானாள்.

பெயருக்கென்று நான்கு ஐந்து  செடிகள்  நட்டுவைத்து,    அண்டி அமர நிழல் இல்லாத  வீட்டின்  பின்புறத்தில்…   துணி துவைக்கும்  கல்லில்  சாய்ந்து நின்றிருந்த  பானுஸ்ரீயின் பின் வந்து நின்ற  அமுதேவ். “ இன்னும் எவ்ளோ நேரம் இப்படி வெயில்ல நின்னுட்டு இருப்பீங்க?, உள்ள வாங்க” என்றான்.

திடீரென்று கேட்ட மகனின் குரலில் அதிர்ந்து திரும்பியவர், “ என்னையா கேட்டப் பா?” என்றார்  பானுஸ்ரீ.

“ இங்க நம்ம ரெண்டு பேர் தான் இருக்கோம்.. அப்போ உங்களை தானே கேட்டிருப்பேன். “ என்று வெகு இயல்பாக பேசி அருகில் வந்தவன், “ சரியான நேரத்துக்கு ஷாலுவுக்கு சரியான அட்வைஸ் பண்ணிருக்கீங்க தேங்க்ஸ்.. “ என்றான்.

“  இது என்னோட கடமை இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்.. “ என்றார்  பானுஸ்ரீ.

“ சாரி… “ என்று தயக்கத்துடன் அமுதேவ் கூறிட..  “  எதுக்குபா?” என்று  குழப்பமாய் வினவினார்  பானுஸ்ரீ.

 “ எல்லாத்துக்கும்” என்று காரணம் கூறாமல் கூறியவன், “ ஷாலு நமக்காக காத்திட்டு இருப்பா… சாப்பிட போலாம் வாங்க” என்று வீட்டினுள் அழைத்தான்  அமுதேவ்.

மகனின் இந்த கனிவு மனைவியின் விருப்பத்திற்காக நடத்தப்படும் உபசரிப்பு நாடகம் என்று எண்ணிய பானுஸ்ரீ, “ வேணாம்பா.. அங்க  வாசு எனக்காக  காத்திட்டு இருப்பார்.. “ என்று மகனின் அழைப்பை நாசுக்காக மறுத்தார்.

“ ஷாலுவை  கூடவே இருந்து பாத்துக்குறேன்னு சொல்லிட்டு இப்போ கிளம்புறேன்னு  சொன்னா என்ன அர்த்தம்?, அவ்வளவுதான் உங்க  கடமையா?”  என்றவன்..  சட்டென்று அவர் கரம் பற்றி தன் கன்னத்தில் பதித்துக் கொண்டு.. “இத்தனை வருஷமா உங்களை தப்பா புரிஞ்சுகிட்டு ஒதுங்கியே இருந்துட்டேன், இப்போதான் சரி எது தப்பு எதுன்னு தெளிவா புரியுது. நான் தெரியாம செஞ்ச  தப்பை மன்னிக்க மாட்டீங்களா?,  எங்க கூடவே இருக்க மாட்டீங்களா..? “ என்று ஏக்கத்துடன் வினவினான் அமுதேவ்.

“ அம்மு!” என்று  கண்ணீர்   ததும்பிய விழிகளுடன் மகன்  கன்னத்தை பரிவுடன் வருடியவர்,  “ நீ தான் என்னை  மன்னிக்கணும் பா… என்  தப்பால வயித்துல இருந்த குழந்தை தவறிப் போச்சு, அந்தக் கவலையிலேயே உன்னை தவற விட்டுட்டேன்.  உன்னை நானே வளர்த்திருந்திருக்கணும்“  என்றார் பானுஸ்ரீ.

“ நீங்களும் எத்தனையோ தடவை என்னை உங்க கூட கூட்டிட்டு போக முயற்சி பண்ணுனீங்களே அம்மா!, நான் தான் முட்டாள் தனமா எதை எதையோ நம்பி உங்க கூட வர மாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டேன்.  “ என்று குற்ற உணர்வுடன் அமுதேவ் கூறிட..

“ நீ சின்ன பையன் பா,  உனக்கு என்ன தெரியும்?, எல்லாம் தெரிஞ்சிருந்தும் அவங்ககூட உன்னை அனுப்பி வைச்சது எங்கத் தப்பு” என்று பானுஸ்ரீ தன் தரப்பு தவறை கூறினார்.

“   செய்யும் போது எல்லாம் சரியா இருக்கும், செஞ்சதை   உணர  ஆரம்பிக்கும்போது செஞ்சதுல இருக்கிற தப்பு புரிய ஆரம்பிக்கும். அதனால  நடந்து முடிஞ்சதைப்  பத்தி  இப்போ பேச வேணாம்,    இனி நடக்கப் போறத பத்தி மட்டும் பேசுவோம். நீங்க இனிமே எங்கேயும் போகக்கூடாது, என் கூட தான் இருக்கணும், சப்போஸ் உங்களுக்கு இந்த வீட்ல இருக்க விருப்பம் இல்லைன்னா சொல்லுங்க நானும் ஷாலுவும் உங்க கூட வந்து செட்டில் ஆகிடுறோம், நாங்க அங்க வரல உங்களுக்கு எந்த அப்ஜெக்சன்னும் இல்லையே?”  என்றான் அமுதேவ்.

“ என்னப்பா இப்படி கேட்டுட்ட அது உன் வீடு.  உன் வாயால மறுபடியும் அம்மான்னு கூப்பிட மாட்டாயான்னு   ஏங்கிக்கிட்டு இருந்தேன் அம்மு. இப்போ வாய் நிறைய அம்மானு கூப்பிட்டதும்  இல்லாம,  என்னை உன் கூடவே இருக்கவும் சொல்ற இதைவிட வேற என்ன வேணும் எனக்கு.  நீ எப்படி சொல்றியோ அதுபடியே செஞ்சிடலாம்  பா” என்று மனம் நிறைந்த மகிழ்வுடன் சம்மதம் தெரிவித்தார் பானுஸ்ரீ.

“  வாங்க இந்த  நியூஸை முதல்ல.. ஷாலுகிட்ட சொல்லுவோம், அவ ரொம்ப சந்தோசப்படுவா..  “ என்று அமுதேவ் கூறிட…

தன் மகன் தன்னை மன்னித்து மனம் விட்டுப் பேசிய மகிழ்ச்சியான நிகழ்வை தன் கணவருக்கு அறிவிக்க விரும்பிய பானுஸ்ரீ, அவரது அலைபேசியை எடுக்க அதுவோ..  போதிய மின் ஆற்றல் இல்லாமல் அனைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

வீட்டினுள் நுழையச் சென்றவன், தன் அன்னையின் கரம் பற்றி அவரையும் தன்னுடன் அழைத்துச் செல்லும் எண்ணத்துடன் திரும்பிப் பார்த்திட.. கையிலிருந்த அலைபேசியை சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் பானுஸ்ரீ.

“ என்ன அம்மா போன்ல சார்ஜ் இல்லையா..  ?, யாருக்கு பேசணும் அப்பாவுக்கு தானே. இருங்க நானே கால் பண்றேன்.” என்று கூறியவன் அடுத்த நொடியே தனது அலைபேசியை எடுத்து அதில் தன் தந்தையின் என்னை அழுத்தி அவரின் பதிலுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.

எதிர்முனையில் வாசுதேவ் பேசத் துவங்க.. “ நீங்க இல்லாம உங்க வைஃப் சாப்பிட மாட்டேன்னு  அடம் பிடிக்கிறாங்க, சீக்கிரம் நம்ம வீட்டுக்கு கிளம்பி வாங்க… “  என்றான் அமுதேவ்.

செவியில் விழுந்த செய்தியின் உண்மைத் தன்மையை நம்ப இயலாமல்.. “ தேவ்!” என்று அதிர்ச்சியுடன் மகனின் பெயரை அழைத்தார் வாசுதேவ்.

“  நான் பேசுறேன், . “ என்று மகனிடமிருந்து அலைபேசியை வாங்கிக் கொண்ட பானுஸ்ரீ.. “ ஹலோ வாசு.. நான் இப்போ நம்ம பையன் வீட்லதான் இருக்கேன். என் பையன் என் கூட பேசிட்டான் வாசு. என்னை மன்னிக்கவும் செஞ்சுட்டான். அவன் கூடவே இருக்க சொல்லுறான்.. “ என்று மகிழ்ச்சியில் குரல் ததும்ப பேசினார் பானுஸ்ரீ.

“ இதுதான் நடக்கும்னு தெரியும் ஆனா இன்னைக்கே நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!. அப்புறம் அம்மாவும் பையனும் ஒண்ணு சேர்ந்துட்டீங்க,  இனி என்னை கண்டுக்க மாட்டாங்க,  இனி உங்களுக்கு கொண்டாட்டம் என் பாடுதான் திண்டாட்டம்..” என்று பொய்யான சோகத்துடன் கூறினார் வாசுதேவ்.

“ சும்மா அங்க உட்கார்ந்து சோக கீதம் வாசிக்காம சீக்கிரம் கிளம்பி வாங்க. இங்க உங்களுக்கு நிறைய வேலை இருக்கு” என்று   கணவனுக்கு கட்டளை பிறப்பித்தவர்,  மகனின் கை பற்றிக்கொண்டு வீட்டினுள் சென்றார்.

“ அத்தை இப்போ சந்தோஷமா?, “ என்று வார்த்தையில் வடிக்க இயலாத இன்பத்தை முகத்திலும் புன்னகையை இதழிலும் சூடிய படி  வந்த  மாமியாரை பார்த்து வினவினாள் விஷல்யா.

“ சந்தோஷங்கிறது சின்ன வார்த்தை ஷாலு. இது எல்லாத்துக்குமே நீ தான் காரணம், உன்னால தான் என் பையன் எனக்கு திரும்ப கிடைச்சிருக்கான்”  என்று நன்றியுடன் கூறினார்  பானுஸ்ரீ.

“ அப்பப்பா… அம்மாவும் பையனும் டயலாக் கூட ஒரே மாதிரி சொல்றீங்க. அப்புறம் ஒரு சின்ன கரெக்ஷன் இது எல்லாத்துக்கும் நான் காரணம் இல்லை ஜூனியர் அம்மு தான் காரணம்,  இவனால தான் இன்னைக்கு நம்ம குடும்பம் ஒன்னு சேர்ந்து இருக்கு, சோ உங்க நன்றியை எல்லாம் இவரை சிறப்பா  கவனிச்சுகிறதுல காட்டுங்க.. “ என்று கரு சுமந்து நிற்கும்  தன் வயிற்றை சுட்டிக்காட்டி கூறினாள் விஷல்யா.

மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்த வாசுதேவ் அடுத்த அரை மணி நேரத்திற்குள் மகனின் வீட்டில் இருந்தார்.

தித்திப்பான சம்பவங்கள் நிகழ்ந்ததை கொண்டாடும் விதமாய் மனைவியின் கையால் சமைத்த கேசரியை முதலில் சுவைத்தவர், அதை   செய்தது விஷல்யா என்று தவறாக எண்ணிக்கொண்டு, “ வரே வாவ் சூப்பர்மா மருமகளே… முதல் நாள் வீட்டுக்கு வந்தப்போ உனக்கு சமைக்க தெரியாதுன்னு   சொன்னதும்,  இனி என் நிலைமைதான் என் பையனுக்கும்னு நினைச்சு ரொம்ப  கவலைப்பட்டேன்.. பட் நான் நினைச்சது  தப்புனு நிரூபிக்கிற மாதிரி அசத்தலா இப்படி ஒரு கேசரியை செஞ்சு என் வாயை அடச்சுட்ட மா” என்று மகிழ்வுடன் மனதார பாராட்டினார் வாசுதேவ்.

“ ஐயோ மாமா இது நான் செஞ்சது இல்ல அத்தை செஞ்சது.. “ என்ற விஷல்யா… “ மாமாவை கம்பேர் பண்ணும்போது உங்க பையன் பெஸ்ட்  அத்தை. கேசரியை ஒரு வாய் சாப்பிட்டதும் அதை செஞ்சது நீங்கதான்னு அம்மு கண்டுபிடிச்சுட்டான்,   அது அவன்  முகத்திலேயே நல்லா தெரிஞ்சுது” என்றாள்  விஷல்யா.

“ சின்ன வயசுல, அம்மா அடிக்கடி இந்த மாதிரி கேசரியும், அன்னைக்கு உனக்கு செஞ்சுக் கொடுத்தேனே!   கோதுமை தோசை அதையும்  தான் திரும்பத் திரும்ப செஞ்சுத் தருவாங்க, நான் கூட எனக்கு ரொம்ப பிடிச்சதால இதையே செய்றாங்கன்னு நினைச்சேன்.. அப்புறம் தான்… “ என்று சொல்ல வந்ததை சொல்லாமல் அமுதேவ் இழுக்க…

“ ஏன் பாதியிலேயே நிறுத்திட்ட தேவ்.. அப்புறம் தான் தெரிஞ்சது அவங்களுக்கு இது மட்டும்தான் செய்ய தெரியும்னு, சொல்ல நினைச்சதை முழுசா சொல்லி முடிச்சிடு…” என்று மகன் சொல்லாமல் இழுத்த  வார்த்தையை முடித்து வைத்தார் வாசுதேவ்.

“ உங்களை!” என்று பானுஸ்ரீ கணவனை முறைக்க… “ என்னைக் கம்பேர் பண்ணும்போது ரியலி யூ ஆர் லக்கி டாடி, உங்க மருமகளுக்கு கேஸ் ஸ்டவ் ஆன் பண்ணக் கூட நான் தான் சொல்லித்  தந்தேன்னா  பார்த்துக்கோங்களேன்.  “ என்று தனது நிலையை கூறி அங்கலாய்த்துக் கொண்டான்  அமுதேவ்.

“உன் நிலைமை புரியுது, உன் அம்மாவோட  செலக்சன் வேற எப்படி இருக்கும்… நீ பாவம் தான் கண்ணா. “ என்று  மகனுக்காக பாவம் பார்த்தார் வாசுதேவ்.

“ ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துட்டு எங்களையே கலாய்க்கிறீங்களா?, இன்னைக்கு உங்களுக்கு டின்னர் கட்டு” என்று மாமியாரும் மருமகளும் ஒன்று சேர்ந்து கொண்டு அவரவர் கணவன்மார்களை பழி வாங்கினர்.

 

சில மாதங்கள் கடந்து:

பானுஸ்ரீ வாக்களித்தபடி விஷல்யாவின் தொழிலுக்கு வாசுதேவ் உறுதுணையாய் இருந்திட, அவள் ஒப்பந்தமாகி இருந்த கட்டிடத்தின் உள் அலங்கார வேலைப்பாட்டை சிறப்புடன் செய்து முடித்திருந்தாள் விஷல்யா.

எதிர்பார்த்ததைவிட மிக நேர்த்தியாக முடிக்கப்பட்ட கட்டிட உள் அலங்கார வேலையை  அஸ்வின் வெகுவாய் பாராட்டினான்.

“ நான் எக்ஸ்பெக்ட் பண்ணுனதை விட வொர்க் ரொம்ப பர்ஃபெக்ட்டா வந்திருக்கு. எங்க காலேஜ் ஓல்ட் ஸ்டூடன்ட் கெட் டு கெதர் பார்ட்டியோட சேர்த்து உங்களுக்கும் ஒரு சின்ன ட்ரீட் அரேஞ்ச் பண்ணலாம்னு நினைக்கிறேன் விஷல்யா, உங்க ஒப்பினியன் என்ன?” என்று  தான் ஏற்பாடு செய்யவிருக்கும்  விருந்திற்கு விஷல்யாவிடம் அனுமதி  கோரினான்  அஸ்வின்.

“ ப்ராஜெக்ட் வொர்க் சக்ஸஸ் ஆனதுக்கு பார்ட்டி ஓகே தான் அதை எதுக்கு நம்ம பிரண்ட்ஸோட கெட் டு கெதர் பாட்டியோட சேர்த்து வைக்கணும். தனியாவே வைக்கலாமே!” என்றான் அமுதேவ்.

“  லாஸ்ட் டைம் வினோத் செஞ்ச கலாட்டா.. உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கறேன், அந்த நேரத்துல நம்ம காலேஜ் வாட்ஸ் அப் குருப்ல உன் வைஃப்க்கு தனி ஃபேன்  ஃபாலோவர்ஸ்  உருவாகிட்டாங்க. அதுலயும் பொண்ணுகளோட சப்போர்ட் அதிகம்.  அவங்க எல்லாம் விஷால்யாவை நேர்ல பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க அதுக்காக தான் இப்படி ஒரு அரேஞ்ச்மெண்ட்ஸ்.  “ என்று தனது  எண்ணத்திற்கான காரணத்தை கூறினான் அஸ்வின்.

மறுத்து எதுவும் சொல்லாமல் அமுதேவும் விஷல்யாவும் சம்மதிக்க… விருந்திற்கான ஏற்பாட்டை கவனிக்கத் துவங்கினான் அஸ்வின்.

கல்லூரி பழைய நண்பர்கள் ஒன்று கூடும் சந்திப்பை அனைவரது குடும்பத்தினரும் சேர்ந்து கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருந்தான் அஸ்வின்.

தனது புது கட்டுமான பணி நிறைவடைந்ததையும் அறிவித்து… அதை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த விஷல்யாவிற்கு பாராட்டுகளையும் தெரிவித்தான் அஸ்வின்.

ஒவ்வொருவராய் வந்து அவரவர் வாழ்த்துக்களை…  கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த விஷல்யா,  அமுதேவ், தனுஜ் அஸ்வின் ஆகிய நண்பர்கள் குழுவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்.

வேண்டா வெறுப்புடன் கலந்துகொள்ள வந்த வினோத், அமுதேவ்  மற்றும் விஷல்யா இருவரையும் தவிர்த்து மற்ற இருவருக்கு மட்டும் வாழ்த்துக்களை சொல்லிச்  சென்றிட… அவனை  பின் தொடர்ந்து வந்த அவனது மனைவியோ.. விஷல்யாவை வியப்புடன் பார்த்து, “ஆம்பளைங்களுக்கு சரி சமமா போட்டி  போட்டு  ஜெயிச்சிட்டீங்களே!, உண்மையிலேயே நீங்க கிரேட் தாங்க… “ என்று புகழ்ந்து பேசினார்.

“ ஆண்கள் பெண்கள்ன்னு பேதம் என்ன இருக்கு?, திறமை இருக்கிறவங்க ஜெயிக்கிறங்க..  அவ்வளவுதான் விஷயம்” என்று அதிகப்படியான புகழ்ச்சியை ஏற்காமல் அடக்கமாக கூறினாள் விஷல்யா.

“ நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க!” என்று அதையும் அந்தப் பெண்மணி வியந்து பேசிக் கொண்டிருக்க..  “ அங்க  நின்னு என்னடி பேச்சு?, கூடவே வரமாட்டியா?  “ என்று கணவனின் குரலுக்கு கட்டுப்பட்டு  வினோத்தைப் பின் தொடர்ந்தாள் அந்த அப்பாவிப் பெண்மணி.

“ பாவம்ல அந்தப் பொண்ணு” என்று ஒருசிலர் அவளுக்கு இரக்கம் பார்க்க… “ பாவம் இல்ல.. தனக்காக போராடத்  தெரியாத கோழை..  “ என்று அவ்விடம் வந்து நின்றாள் ஒருத்தி.

“ என்ன விஷல்யா நான் சொல்றது சரிதானே!” என்று தன்  வார்த்தைக்கு வலு சேர்க்க விஷல்யாவையும் துணைக்கு அழைத்தாள் அவள்.

“ ஹும்.. நீங்க சொல்றதும் ஒரு விதத்தில சரிதான். ஆனா பிறக்கும்போதே யாரும் கோழையா பிறக்கிறது இல்லையே!,  அவங்களோட வளர்ப்பு முறை தான் அவங்கள  யாருன்னு தீர்மானிக்குது. “ என்றாள் விஷல்யா.

“ எஸ் யு ஆர் ரைட்.. பை த வே ஐ அம், அனந்திகா.. தேவ் கிளாஸ்மேட்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்  அவள்.

“ நைஸ் டூ மீட் யூ… “என்று மரியாதையுடன் விஷல்யா கை குலுக்க முன்வர… அதை அலட்சியம் செய்து திரும்பியவள், “ தேவ்ங்கிற கடுவன் பூனை உன்கிட்ட இப்படி கட்டுப்பட்டு கிடக்குதே!, அப்படி என்ன மேஜிக் பண்ணுன..?” என்றாள் அனந்திகா.

“ அன்பு தான் அந்த மேஜிக்” என்று சிரித்த முகத்துடனேயே பதில் தந்தாள் விஷல்யா.

“ உண்மையிலேயே அந்த மேஜிக்க்கு பவர் அதிகம் தான். உனக்கு காலேஜ் டேஸ்  தேவ்வை பத்தி  தெரிஞ்சிருந்தா!, அவன் பக்கம் நீ திரும்பி கூட பார்த்திருக்க மாட்ட…  அந்த அளவுக்கு அடமென்ட் அவன்.  பட் அவனை இப்போ பார்க்கிறப்போ எனக்கே ஆச்சரியமா இருக்கு!,   இப்படி இவன் மாறுவான்னு தெரிஞ்சிருந்தா,  அவன் எவ்வளவு துரத்தினாலும் பரவாயில்லைன்னு அவனையே துரத்தி துரத்தி லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருப்பேன்!” என்றாள் அனந்திகா.

“ அது தான் நடக்கலையே!, அப்புறம் எதுக்கு வீண் கனவு  காணுறீங்க!” என்று புருவம் உயர்த்தி விஷல்யா வினவ… “ நடக்கல நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தான் சொல்ல வரேன்!” என்று அனந்திகா, கூறிக்கொண்டிருக்க… “ நீ தலைகீழா நின்னுயிருந்தாலும் அது  நடந்திருக்காது அனந்திகா. அங்க ரொம்ப நேரமா உன் ஹஸ்பன்ட் உன்னை தேடிட்டு இருக்காரு. போய் என்னனு கேளு!” என்று வீண் வம்பு அளக்க வந்தவளை அங்கிருந்து  அனுப்பி வைத்தான்    அமுதேவ்.

“ அவ ஒரு  பைத்தியம், அவப்    பேச்சை நீ பெருசா எடுத்துக்காத!… “ என்று அமுதேவ் சமாதானம் கூறிட.. “ அந்த பைத்தியம் இன்னும் தெளியாம இருக்கிறது தான் ஆச்சர்யமா இருக்கு!. இருந்தாலும் உன் மேல ஒரு கண்ணு வைச்சிருக்கணும் போல,  பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிறேன்னு நீ கிளம்பிப் போயிட்டா,  நான் என்ன பண்ணுறது?”  என்று புருவம் உயர்த்தி  ஏளனமாய்  வினவினாள் விஷல்யா.

“    யாரோட பைத்தியத்துக்கும் என்னால  வைத்தியம் பார்க்க முடியாது.. ஏன்னா நான் தான் உன் மேல  பைத்தியமா இருக்கேனே!, ஒரு  பைத்தியதால எப்படி இன்னொரு பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்க முடியும். “ என்று அமுதேவ் கூறிக்கொண்டிருக்க… “ அடப் பைத்தியங்களா!, இந்த பைத்தியக்கார கும்பல் கிட்ட மாட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே!” என்று இருவருக்குமான உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த தனுஜ்  தன்  தலையிலேயே தட்டிக் கொண்டு அங்கிருந்து  நகர்ந்து சென்றான்.

“ முதல்ல இவர் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்க சரியான ஆளைப் பிடிக்கனும்!” என்று விஷல்யா கூறிட… “ அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு” என்றான் அமுதேவ்.

நண்பர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் விருந்தில் கலந்து கொண்ட நேரம்… தனுஜ் மட்டும்   தன்னந்தனியாய் வந்திருக்க, “ என்னடா நம்ம பேட்ஜ்ல எல்லாரும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டோம்,  நீ இன்னும் ஃபேச்சுலராவே சுத்திட்டு இருக்க..? “ என்று  நண்பர்கள் சிலர் தனுஜ்ஜை கிண்டல் செய்தனர்.

 “ நான் எங்கடா தனியா சுத்திட்டு இருக்கேன். இதோ இருக்குல என் குடும்பம்,” என்று அமுதேவ் குடும்பத்தை தனது குடும்பமாக அறிவித்தான் தனுஜ்.

“ என்னடா உங்கள தான் குடும்பம்னு சொல்றான்.  அப்ப நீங்க தானே பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும். இப்படி பொறுப்பில்லாம இவனை மட்டும் தனியா விட்டுடீங்களே டா.. “ என்று   அதையும் கிண்டல் செய்து சிரித்தது அந்த நண்பர்கள் குழு.

“ எங்களைக் குடும்பம்னு சொல்லிட்டான்ல, இனி  ஏற்பாட்டை கவனிக்க வேண்டியது தான்” என்று உறுத்தியளித்தான் அமுதேவ்.

 

மாதங்கள் கூடிக்கொண்டே செல்ல குடும்பத்தில் அனைவரும் குழந்தையின் வருகையை எதிர்பார்க்கத் துவங்கினார்.

அந்த நாளும் வந்தது…

நிறைமாத கர்ப்பிணியான விஷல்யாவிற்கு பிரசவலி துவங்கிட.. அவளை பத்திரமாய் அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தனர் மொத்த குடும்பமும்.

மனைவி வலியில்  துடித்த ஒவ்வொரு நொடியும் அவள் வலியை தனதாய் உணர்ந்து மனதால்  துடித்துக் கொண்டிருந்தான் அமுதேவ்.

பிரசவ அறைக்குள் ஆண்கள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட…   விஷல்யாவின் பிடிவாதம் மற்றும் அமுதேவ்வின் வேண்டுதலுக்கு மதிப்பளித்து விஷல்யா குழந்தையை பெற்றெடுக்கும்   தருவாயில் பிரசவம் பார்க்கும் மருத்துவர்களால்  அமுதேவ்  பிரசவ அறைக்குள்  அனுமதிக்கப்பட்டான்.

உயிரை யாரோ பிடித்து இழுப்பது போல் வலியில் விஷல்யா துடிக்க.. கண்ணீர் வடிந்த கன்னங்களுடன் வேதனையில் துடித்துக் கொண்டிருந்த மனைவியின் கரம்  பற்றிக் கொண்டு.. “ உனக்கு ஒன்னும் இல்லடா,  இன்னும் கொஞ்ச நேரம் தான், நம்ம குழந்தை இந்த உலகத்துக்கு வந்துடும். அதுக்கப்புறம் இப்ப நீ அனுபவிச்ச வேதனைகளுக்கு எல்லாம் சேர்த்து உன்னை  சந்தோஷமா பார்த்துகிறேன் ப்ராமிஸ் டா  கண்ணம்மா” என்று  நம்பிக்கையுடன் உறுதியளித்தான் அமுதேவ்.

கணவனின் உறுதுணையான வார்த்தைகள் பெண்ணவளுக்கு உடலிலும் மனதிலும் புது தெம்பை தந்திட.. முழுமூச்சுடன் தன் மகவை இவ்வுலகிற்கு கொண்டு வந்தாள் விஷல்யா.

  பிரசவத்தின் போது மனைவி அனுபவித்த வேதனையை அருகில் இருந்து பார்த்து அவன் தன்னை பெற்றெடுக்கும் போதும் அன்னை இதே அளவு வேதனையை அனுபவித்து இருப்பார் என்று எண்ணி அவன் இத்தனை காலம் அவரை பிரித்து வைத்து துன்புறுத்தியதற்கு.. மீண்டும் ஒருமுறை தன் அன்னையிடம் வந்து மன்னிப்பு வேண்டினான் அமுதேவ். 

ஓரிரு வருடம்  கடந்து…

“ இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ஊருக்கு போகாம இங்கேயே  சுத்திட்டு இருக்கப் போற  தனுஜ்.  கோவில் திருவிழான்னு  தானே கூப்பிடுறாங்க… போயிட்டு வாயேன் டா” என்று சொந்த ஊருக்கு செல்ல மறுத்துக் கொண்டிருந்த நண்பனை  சம்மதிக்க வைக்க போராடிக் கொண்டிருந்தான் அமுதேவ்.

“ நீ என்ன வேணாலும் சொல்லு, நான் என் ஊரு பக்கம் மட்டும் போகமாட்டேன். அவங்கள பத்தி உனக்கு தெரியாது கோவில் திருவிழான்னு கூப்பிட்டு, மாமன் பொண்ணு கூட கல்யாணத்துக்கு பரிசம் போட்டுடுவாங்க . அதுக்கு ஐடியா போட்டு தான் கோவில் திருவிழா அது இதுன்னு பொய் சொல்லி என்னை ஊருக்கு வர வைக்க பார்க்கிறாங்க!” என்று விடாமல் பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தான் தனுஜ்.

“நீ கன்னிப் பொண்ணு பாரு… கட்டாயக் கல்யாணம் பண்ணி வைக்க, அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டாங்க,  சும்மா சீன் போடாம ஊருக்கு போயிட்டு வாடா.. “ என்று கிண்டல் செய்தபடி விடாமல் வற்புறுத்தினான் அமுதேவ்.

“ நான் ஊருக்கு போகணும்னா… அப்போ நீயும் என்கூட வரணும், சப்போஸ்  எனக்கே தெரியாம ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அதுல  இருந்து என்னை நீதான் காப்பாத்தணும். “ என்று தங்கள் ஊர் கோயில் திருவிழாவிற்கு அமுதேவ்விற்கும் அழைப்பு விடுத்தான்  தனுஜ்.

“ ஷாலு,  குழந்தை.. அம்மா, அப்பாவை விட்டுட்டு நான் மட்டும் எப்படி டா தனியா வர முடியும்!, ஒன்னு  செய்யலாம், எல்லாரையும் கூட்டிட்டு உன் ஊர் திருவிழாவுக்கு போவோம். ஒரு ஃபேமிலி வெக்கேஷன் போன மாதிரி இருக்கும். “ என்று யோசனை கூறினான் அமுதேவ்.

“ இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே!, நீங்க எல்லாம் வரதா இருந்தா நானும் பயம் இல்லாம ஊருக்கு போவேன்.” என்று நண்பன் குடும்பம் உடன் வரப்போகும் தைரியத்தில் ஊருக்கு செல்ல சம்மதித்தான் தனுஜ்.

ஊர் கோவில் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாய் நடைபெற்றிருக்க.. ஒவ்வொரு வீடும் மாவிலைத் தோரணமும்…  மஞ்சள் மொழுகிய வாசலுமாய்  மங்களகரத்தை நிறைத்து இருந்தது, தனுஜ் வீடு மட்டும் பந்தல்  அலங்காரத்தில்  தனித்துவமாய் தெரிந்திட குழம்பிப்போன அமுதேவ்.. “ என்னடா உன்  வீட்டுல  மட்டும் பந்தல் போட்டிருக்கு ஏதாவது விஷேசமா? “ என்று  சந்தேகத்துடன் வினவினான்.

 நண்பனின் கேள்வியில் சுதாரித்த  தனுஜ்.. “ ஓ…காட்.. நான் என்ன நடக்கும்னு பயந்தேனோ !,  அதுக்கான  ஏற்பாடு தான் இது, இனி இங்க நிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் டேஞ்சர்,  வா உடனே இங்க இருந்து  தப்பிச்சு போயிடலாம்..” என்று வந்த வழியே திரும்பி ஓடத் துவங்கினான் தனுஜ்.

“ டேய் நில்லுடா… எங்களையெல்லாம் இங்க கூட்டிட்டு வந்துட்டு நீ மட்டும் திரும்பிப் போனா என்ன அர்த்தம்?” என்று வாசுதேவ் தனுஜ்ஜை தடுக்க முயல…

“ இதுக்கு மேல இங்க இருந்தா உசுருக்கு உத்தரவாதம் இல்லன்னு அர்த்தம்!, யாரும் அங்க நிக்காதீங்க, ஆளுக்கு ஒரு பக்கமாக தெருச்சு,  ஓடிடுங்க. ஊர் எல்லையில வந்து சந்திச்சுக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே திரும்பியும் பாராமல் விரைந்து சென்றான் தனுஜ்.

தனுஜ் ஊருக்குள் நுழைந்த  தகவல் கிடைக்கப் பெற்ற  உறவினர்கள், அவனை சுற்றி  வளைத்துக் கொள்ள… அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டவன் தன் நண்பனையும் அவனது குடும்பத்தையும் திருப்பிப் பார்க்க.. அவர்களோ பிணைக் கைதி போல்  பிடிபட்டு இருந்தனர்.

“  என்  பின்னாடியே ஓடி வரத் தெரியாது. இப்படி  மாட்டிக்கிட்டீங்களே!. உங்க வீட்டு உப்பைத் தின்ன நன்றிக்கடனுக்கு, உங்களை  காப்பாத்த என் வாழ்க்கையை அடகு வைக்க வேண்டியதா போச்சே!” என்று   புலம்பித் தள்ளினான் தனுஜ்.

“ ஓடு ஓடுன்னு சொல்லிட்டு நீ ஒரு பக்கம் ஓட்டிட்டு இருக்க, கைக் குழந்தையோட  ஷாலு எப்படி ஓடுவா?, வயசான என் அம்மா அப்பா எப்படி ஓடுவாங்க?, இவங்களை விட்டுட்டு என்னை மட்டும் எங்க தப்பிச்சு  ஓட சொல்லுற?” என்று அசட்டையாக கூறினான் அமுதேவ்.

“ உங்களை கூட்டிட்டு வந்தா, நான்  தப்பிச்சுக்கலாம்னு நினைச்சா.. இப்படி உங்களாலேயே மாட்டிகிட்டு முழிக்கிறேனே!” என்று அழுது புலம்பினான் தனுஜ்.

“ இப்படி கையும் களவுமா பிடிச்சு வைச்சு கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு நாங்க என்ன  கனவா கண்டோம்.   ஆமா.. இந்த அளவுக்கு பொறி வைச்சு பிடிச்சு கல்யாணம் பண்ணுற அளவுக்கு என்னத் தப்பு பண்ணுன நீ.?” என்று குழப்பத்துடன் வினவினார் வாசுதேவ்.

“ அதான… எந்தத் தப்பும் பண்ணாம எப்படி இப்படி பிடிப்பாங்க. இவன் ஏதாவது செஞ்சிருப்பான்” என்று கணவரின்  வார்த்தையை ஆமோதித்தார் பானுஸ்ரீ.

“ தாய்குலமே!, நீங்களுமா?, உங்களுக்கு கூட என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று வார்த்தையால்  சோக கீதம் வாசித்தான்  தனுஜ்.

“ நம்பிக்கை இல்லாம தான் கேட்குறோம்.. என்ன தப்பு பண்ணுன?” என்று  அன்னை தந்தை கேட்ட அதே கேள்வியை திருப்பிக் கேட்டான் அமுதேவ்.

“ என் அப்பாவுக்கு  புள்ளையா பிறந்ததே நான் செஞ்ச பெரிய தப்பு,  இந்த வீட்டுல எல்லம் அவர் இஷ்டப்படி தான் நடக்கணும்னு, நினைக்கிறவர், எங்க சிட்டிக்கு போய்  அங்க வேற  ஏதாவது பொண்ணை கல்யாணம் பண்ணிப் பேனோங்கிற  பயத்துல தான் என்னை இப்படி பலியாக்குறாங்க” என்று புலம்பினான் தனுஜ்.

விஷல்யா கணவன் காதுகளில்  ரகசியமாய் ஏதோ சொல்ல… கண்களால் அவளை அடக்கி ஜாடை செய்தான் அமுதேவ்.

தனுஜ் புலம்பல் எதையும் காதில் வாங்காது. திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை கவனிக்க  துவங்கி இருந்தனர்  இரு  வீட்டு பெரியவர்கள்.

மணமேடைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்ட தனுஜ்  அருகில் மணக்கோலத்தில் பெண்ணொருத்தி வந்து அமர்ந்திட.. தனுஜ் கையில  மஞ்சள் கயிறு  ஒன்று திணிக்கப்பட்டது. 

தயக்கத்துடன்  தனுஜ் அமர்ந்திருக்க… வெட்கம் போல தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த பெண்.. மெதுவாய் அவன் காது அருகில் குனிந்து.. “ இப்போ நீ கட்டப் போறயா?, இல்ல நான் உன் கழுத்துல கட்டணுமா?” என்று கட்டளைக் குரலில் மிரட்டல் விடுக்க.. 

“ இங்க பாரு இப்படி ஏமாத்தி வரவைச்சு மிரட்டி கல்யாணம் பண்ணுறது  சரியில்ல,  ரொம்ப தப்பு… “ என்று அவளிடமும் அதே புலம்பலை ஒப்பிவித்தான்  தனுஜ்.

“ நீ உன் நண்பனுக்கு இதை செய்யும் போது தப்பா தெரியலையா?” என்றாள் அந்த மணப்பெண்.

“ அது எப்படி  உனக்குத் தெரியும்?”  என்று தயக்கத்துடன் தனுஜ் வினவ..

“ கர்மா இஸ் பூமராங்… நண்பா… நீ ஒரு காலத்துல எனக்கு செய்ய  நினைச்சது.. இப்போ உனக்கு  திரும்பி இருக்கு. இன்னும் எதுக்கு தாலியை கையிலேயே வச்சு பார்த்துட்டு இருக்க.. சீக்கிரம் கட்டு” என்று கட்டளைப் பிறப்பித்தான்   அமுதேவ்.

“ யூ டூ நண்பா… “ என்று அதிர்ச்சியுடன் தனுஜ் வினவ…

”மீ டூ நண்பா… “ என்று சிரித்தவன்… தனுஜ் சோகம் போல் முகத்தை சுருக்க… “ பின்ன என்னடா உன் கூட படிச்ச நாங்க எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு பிள்ளை குட்டியோட இருக்கும் போது,  நீ மட்டும்  பேச்சுலரா ஹாப்பியா, சுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்?, அதான் உனக்கும் ஒரு கால் கட்டை போடலாம்னு,  இப்படி ஒரு பிளான் போட்டோம் ” என்று சிரித்தான் அமுதேவ்.

“ அட்சதையை எவ்வளவு நேரம்தான் கையில வச்சு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறது சீக்கிரம் தாலி கட்டு ஆசீர்வாதம் பண்ணுறோம்… “ என்று வாசுதேவ்  ஒருபக்கம் அவசரப்படுத்த…

“ எத்தனையோ  தடவை உங்களை கலாய்ச்சிருக்கேன்,  அதுக்கெல்லாம் சேர்த்து  தானே என்னை இப்படி பழி வாங்குறீங்க யூத் அப்பா. “ என்று   சிணுங்கினான் தனுஜ்.

“ நீதான அடக்க ஒடுக்கமான பொண்ணு வேணும்னு கேட்ட.. பாரு வந்ததுல இருந்து குனிஞ்ச தல நிமிராம இருக்கு பொண்ணு!. இதைவிட அடக்க ஒடுக்கமான பொண்ணு உனக்கு வேற எங்க கிடைக்கும்?, பேசாம தாலியை கட்டு..” என்றார் பானுஸ்ரீ.

“ தனுஜ் நீங்க கேட்ட மாதிரியே அந்தமானுக்கு ஹனிமூன்  டிக்கெட் புக் பண்ணி வச்சிருக்கேன், சீக்கிரம் தாலிய கட்டுங்க..  அந்தமான் போக லேட்டாச்சு!” என்று   ஒரு பக்கம் ஆசை காட்டினாள் விஷல்யா.

“ இத்தனை பேரு இவ்வளவு சொல்றாங்க இன்னும் என்னடா யோசிக்கிற… தாலிய கட்டுடா படவா…” என்று தனுஜ் தந்தை குரலை உயர்த்தவும்… பயத்தில் பதட்டத்துடன் அவசரமாக அருகில்

இருந்தவள் கழுத்தில் தாலியை கட்டினான் தனுஜ்.

வீட்டின் பெரியவர்கள் உறவினர்கள் அனைவரும் அட்சதை தூவி வாழ்த்துக் கூறிட… “ ஜெய தேவ்..  தனுஜ் மாமாவும் மாட்டிக்கிட்டான்… அவனுக்கு கங்கிராட்ஸ் சொல்லு..” என்று தன் கையில் இருந்த மகனிடம் கூறினான்  அமுதேவ்.

நம்மை சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும் புரிதலான உறவுகள் கிடைக்கப் பெற்றவரின் வாழ்க்கை வாழும்போதே சொர்க்கம் தான்.

 

 

இனி எல்லாம் சுகமே சுபமே…

உயிர் வாழும் போதே…

சொர்க்கத்தில் வாழ 

ஆசை கொள்கிறாய் என்றால்…

உனக்கென

ஒரு அன்பான  குடும்பத்தை

உருவாக்கிக் கொள்…

Advertisement