புகைப்படத்தில் அமுதேவ் உருவத்தைப் கண்டதும், தைரியம் கொண்ட பெண்ணவள் மனமும் மெலிதாய் ஆடித்தான் போனது.
இருவருக்கும் இடையில் நடந்த காதல் சரசமும் சச்சரவும் மனத்திரையில்.. படமாய் ஓடிட அன்றைய நினைவில் மூழ்கினாள்.
விஷல்யாவின் அன்னைத் தாமரை பெண்கள் என்றால் இப்படித்தான் இருந்திட வேண்டும் நடந்துக் கொள்ளவேண்டும், செயல்பட வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கும் குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்மணி. ஆகையால் அவர் பேச்சில் எப்போதும் பிற்போக்குத் தன்மை இருக்கும். அவரின் கணவர் தாமோதரன் அதற்கு அப்படியே நேரெதிர்.. பெண்கள் என்பவர்கள் அடுப்படியில் முடங்கக் கூடியவர்கள் இல்லை, இந்த உலகத்தையே அடக்கி ஆளும் திறன் கொண்டவர்கள் என்று நம்பக்கூடியவர். ஆகையால் அவர் செயலில் எப்போதும் முற்போக்கு சிந்தனை இருக்கும்.
கணவர் கொடுக்கும் அளவற்ற சுதந்திரத்தில் மகளின் வாழ்க்கை தடம் மாறிப் போகிறதோ எனும் அச்சம் கொண்டத் தாமரை, திருமணபந்தத்தில் மட்டுமே மகளின் வாழ்க்கை சீராகும் என்ற எண்ணத்துடன், விஷல்யாவின் வாழ்க்கைத் தடத்தை மாற்றும் முயற்சியாக அவளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.
தன் மனதிலுள்ள கவலையை நெருங்கிய தோழி ஒருவரிடம் தாமரை அறிவிக்க.. ஜாதகம் கிரகநிலைப் பெயர்ச்சிப் பலன்கள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட அவரோ.. ஜோதிடர் ஒருவரின் முகவரி கொடுத்து, “ இவரு ஒரு ஜாதகத்தை வைச்சே அவங்க குணாதிசியத்துல இருந்துக் கல்யாண வாழ்க்கை வரை எல்லாத்தையும் சொல்லிடுவாரு. நம்ம பார்வதி பொண்ணுக்கு கூட ரொம்ப நாளா கல்யாணம் கைக் கூட தள்ளிப் போயிட்டே இருந்ததே.. நான் தான் இவரோட அட்ரஸ் கொடுத்து ஜாதகத்தைப் பார்க்கச் சொல்லி அனுப்பி வச்சேன், சிம்பிளா ரெண்டே ரெண்டு பரிகாரம் தான் சொன்னாரு.. பரிகாரத்தை நல்லபடியா முடிச்ச அடுத்தவாரமே நல்ல வரன் தேடி வந்து கல்யாணம் முடிஞ்சு இப்போ கையில குழந்தையோட இருக்கா. நீ ஒன்னுப் பண்ணு நம்ம விஷல்யா ஜாதகத்தை கொண்டுப் போய் இவர் கிட்ட காட்டு, ஏதாவதுப் பரிகாரம் சொல்லுவாரு, அவர் சொல்றத அப்படியே செஞ்சிடு உன் பொண்ணுக்கும் சீக்கிரமே கல்யாண யோகம் வந்திடும்.. “ என்று ஆலோசனை வழங்கினார் அந்தத் தோழி.
தோழியின் வார்த்தைக்கு செவி மடித்து அவர் கொடுத்த முகவரியில் உள்ள ஜோதிடரைக் காண மகளின் ஜாதகத்துடன் சென்றார் தாமரை.
ஜாதகக் கட்டத்தைக் குறித்துக்கொண்டு அதற்கான பொது பலன்களை கணித்து முடித்தவர்… “ கட்டம் என்ன சொல்லுதுன்னா இந்தப் பையன்.. “ என்று ஜோதிடர் துவங்கிட,
“ ஐயா இது என்னோடப் பொண்ணு ஜாதகம் நீங்க பையன்னு சொல்றீங்க?” என்று குழப்பத்துடன் இடைமறித்தார் தாமரை.
அலட்சிய புன்னகையுடன், ஜாதகத்தில் இருந்த பெயரைப் பார்த்தவர்.. “ நான் பையன்னு சொன்னதுல என்னத் தப்பு?, அங்கத்துல பொண்ணாத் தெரிஞ்சாலும், அகத்துல ஆணுக்கு நிகரான மனோபாவம் கொண்டவங்க தான் இந்த ஜாதக அமைப்புக்கு சொந்தகாரங்க, என்ன நான் சொல்லுறது சரி தானே!, “ என்று மாற்றிக் கூறியதற்கு காரணம் கூறினார் ஜோதிடர்.
‘ சொல்றது உண்மையா இருந்தாலும், தெரிஞ்சு சொல்றாரா இல்ல தப்பா சொன்னத மழுப்பப் பார்க்கிறாராருன்னு தெரியலையே! ‘ என்று தனக்குத் தானே நொந்து கொண்டு எதிரில் இருந்தவர் வார்த்தையை கவனிக்கத் துவங்கினார் தாமரை.
“இந்த ஜாதகத்தோட கட்ட அமைப்புப்படி பார்த்தா… விஷல்யா நீதி நேர்மைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிற ஆள், ஒரு பார்வையிலயே எதிரில இருக்கிறவங்கள எடைப் போட்டு சரியான ஆட்களத் தேர்ந்தெடுத்து பழகக் கூடியவங்க, இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் சந்தோசமா இருக்க மட்டுமே நினைப்பாங்க. எந்த விஷயத்துலயும் எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடிக்காம.. ஒரு தடவைக்கு பலதடவை யோசிச்சு முடிவெடிப்பாங்க, ஒருத்தருக்கு வாக்கு கொடுத்திட்டா அதை நிறைவேத்துற வரைக்கும் ஓயமாட்டாங்க, கஷ்ட நஷ்டம் வந்தாலும் தோல்வி வந்தாலும் துவண்டு போகமாட்டாங்க, ரொம்ப வைராகியமான ஆள், சுயக்கௌரவத்துக் அதிகமா முக்கியத்துவம் கொடுப்பாங்க, எப்பவும் யாரையும் சார்ந்திருக்க விரும்பமாட்டாங்க, இவங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது.. யார் தப்பு செஞ்சாலும் துணிச்சலா எதிர்த்துக் கேள்விக் கேட்கிற இவங்க, தப்பு தன்னோடப் பக்கம் இருக்குன்னு தெரிஞ்சா தயங்காம மன்னிப்பும் கேட்டுடுவங்க, நேர்மையாவும்.. மனசுல பட்டத வெளிப்படையா பேசுறதாலயும் சின்ன சின்ன பிரச்சனை வாழ்க்கைல வந்து போயிட்டு இருக்கும்” என்று விஷல்யாவின் குணாதிசியங்களை வரிசையாய் அடுக்கிக்கொண்டே சென்றார் ஜோதிடர்.
“ நீங்க சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை. இவக் குணம் இப்படி இருக்கிறதால தான் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயம் வருது.. “ என்று மகளின் குணம் குறித்த கவலையுடன் பேசினார் தாமரை.
“ நீங்க இந்த அளவுக்கு பயப்பட வேண்டிய அவசியமே இல்ல, ஜாதகப்படி உங்கப் பொண்ணு கல்யாண வாழ்க்கையில எந்தத் தோஷமும் இல்ல. உங்கப் பொண்ணோட குணாதிசயத்தை புரிஞ்சுகிட்ட பையன் கிடைச்சா போதும் அவங்க வாழ்க்கை ரொம்பவே சந்தோஷமா இருக்கும்” என்று ஜாதகத்தை வைத்து ஆரூடம் கூறினார் ஜோதிடர்.
“ பெத்து வளர்த்த எனக்கே பல நேரத்துல.. அவ எந்த நேரத்துல என்னப் பண்ணுவான்னு புரிஞ்சுக்க முடியல.. இதுல அவளோட குணாதிசயத்தைப் புரிஞ்சுக்க கூடிய பையனை நாங்க எங்க போய்த் தேடுறது.. “ என்றார் தாமரை.
“ அந்தக் கவலை உங்களுக்குத் தேவையில்லை.. உங்கப் பொண்ணை புரிஞ்சுக்க கூடிய பையனை அவங்களேத் தேடிக் கண்டுபிடிச்சு உங்க முன்னாடிக் கொண்டு வந்து நிறுத்துவாங்க..” என்றார் ஜோதிடர்.
“ என்னக் காதல் கல்யாணமா..?” என்று தாமரை அதிர்ச்சியாகி வினவிட..
“ ஆமாம் காதல் கல்யாணம் தான்!, இந்த காலத்துல காதல் கல்யாணம் சகஜம் தானே!, ஏன்மா உங்க வீட்ல காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்களா என்ன?” என்று ஆச்சரியத்துடன் வினவினார் ஜோதிடர்.
“ அதெல்லாம் இல்ல ஐயா. பொண்ணு என்ன முடிவு எடுத்தாலும் அதை மறுக்காம அப்படியே ஏத்துக்குவாரு என் வீட்டுக்காரரு. ஆனா என் பொண்ணோட குணத்துக்கு காதல் செட்டாகாது. அவளே ஒருத்தனத் தேடிட்டு வரட்டும்னு காத்திருந்தா என் பொண்ணுக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும். லவ் மேரேஜா இல்லாம நாங்க பாக்குறப் பையனோட அரேஞ்ச் மேரேஜ் நடக்கிற மாதிரி ஏதாவது பரிகாரம் இருந்தா பார்த்துச் சொல்லுங்க ஐயா. வரவர என் பொண்ணோட அட்டூழியம் அதிகமாகிட்டேப் போகுது, தினமும் இன்னைக்கு புதுசா யாரோடப் பிரச்சனை இழுத்துட்டு வருவாளோன்னு யோசிச்சே எங்களோட நிம்மதிப் போகுது.. காலக்காலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா.. இவ இழுத்துட்டு வர்ற பிரச்சனைகள எல்லாம் அந்தப் பையன் பார்த்துக்குவான். “ என்று அப்பாவித் தனத்துடன் வினவினார் தாமரை.
அவர் சொன்ன தோரணையில் உண்டான புன்னகையை இதழில் தேக்கிக் கொண்டு.. ” உங்க கஷ்டம் புரியுதுமா!, ஆனா என்ன செய்றது ஜாதகத்துல இருக்கிறதைத் தானே சொல்ல முடியும். நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னது தான் இருந்தாலும் திரும்பவும் சொல்றேன், எடுத்த முடிவுல பிடிவாதமாக நிக்கக் கூடிய ஆள் உங்கப் பொண்ணு. சரியோ தப்போ அவங்க ஒரு முடிவு எடுத்துட்டா அதிலிருந்து பின் வாங்கவே மாட்டாங்க, இப்படிப்பட்ட பிடிவாத குணம் இருக்கிறவங்க அவங்க வாழ்க்கைய அவங்களே தேர்ந்தெடுக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது. ஒருவேளை நீங்க தேர்ந்தெடுக்கிற பையன கல்யாணம் பண்ணினாலும் அவங்களுக்குள்ள சின்ன வாக்குவாதம் வந்தாலும் அது ரெண்டு பேருக்கும் நடுவுலப் பெரிய பிரச்சனையைத் தான் கொண்டு வரும். பெத்தவங்க பார்த்துச் சேர்த்து வச்ச கல்யாணம் தானேன்னு, என்னைக்கு வேணும்னாலும் உங்கப் பொண்ணும் தன்னோட முடிவ மாத்திக்கிட்டு கல்யாண வாழ்க்கையை விட்டு வெளியே வர வாய்ப்பிருக்கு. இதுவே அவங்களுக்காக அவங்களே தேடிக்கிட்ட பையனா இருந்தா.. கல்யாண வாழ்க்கையில என்னக் கஷ்டம் வந்தாலும் அதைக் கடந்து அந்தப் பையன் கூட வாழ்ந்தே ஆகணும்னு பிடிவாதமா இருப்பாங்க, ஏன்னா அது அவங்க எடுத்த முடிவு. அவங்க தேடிக்கிட்ட வாழ்க்கைய சந்தோசமா வாழ்றதுக்காக எந்த இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்த்துப் போராடுவாங்க.. போராட்டத்துல வெற்றியும் கிடைக்கும் வாழ்க்கை ரெண்டு மடங்கு சந்தோஷமாவும் இருக்கும்“ என்றார் ஜோதிடர்.
“ நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனா இப்ப வரைக்கும் என் பொண்ணு யாரையும் காதலிக்கல, இதுக்கு மேல காதலிப்பாங்கிற நம்பிக்கையும் எனக்கு இல்ல.. இதுக்கு என்னதான் வழி “ என்றார் தாமரை.
“இந்த ஜாதகத்தை வைச்சு பார்க்கும் போது உங்கப் பொண்ணுக்கு காதல் கல்யாணத்துக்குத் தான் யோகம் அதிகமா இருக்கு. பாவை நோம்பு வழிபாட்டு முறைச் சொல்றேன், வர மார்கழி மாசம் அந்த நோம்பை நல்லபடியா எந்தக் குறையும் இல்லாம செய்யச் சொல்லுங்க, அவங்களுக்கான சரியான வாழ்க்கைத் துணையைச் சீக்கிரமே கண்டுபிடிக்க வழிக் கிடைக்கும்.” என்று ஜோதிடர் முடிப்பதற்குள் இடையில் நுழைந்த தாமரை, “ ஐயா அரேஞ்ச் மேரேஜ் நடக்க வழி கேட்டா நீங்க என்னென்னவோ சொல்லுறீங்க?” என்றார்.
மகள் காதல் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லாமல் மீண்டும் மீண்டும் வேறு வழி கேட்கும் தாமரையின் எண்ணம் புரிந்து “ இந்த நோம்பை சரியாச் செஞ்சு முடிச்சா, சரியான வாழ்க்கைத் துணை கிடைக்கும், அது உறுதி. ஒன்னு அவங்களேத் தேடிக்கிட்டதா இருக்கும், இல்ல நீங்கத் தேடிக் கொடுத்ததா இருக்கும்.. ” என்று நோன்புப் பூஜை முறையை கூறி தாமரையை வழியனுப்பி வைத்தார் ஜோதிடர்.
ஜோதிடரிடம் பரிகாரத்திற்கான வழிமுறை கேட்டுவந்த தாமரை நோன்புப் பூஜை செய்திட வேண்டி வலியுறுத்த.. அதற்கு முதல் தடையாய் வந்து நின்றார் தாமோதரன்.
பூஜைக்கு சம்மதிக்க வைத்திட மகளைவிட அவளது தந்தையுடன் போராடுவதே பெரும் பாடாக இருந்தது தாமரைக்கு.
“ என்ன இது கிறுக்குத் தனமா இருக்கு. ஒரு நோன்புப் பூஜைப் பண்ணிட்டா உடனே கல்யாணம் நடந்திடுமா?.. பரிகாரம் அது இதுன்னு உன்கிட்ட பணத்தைக் கரந்துட்டு உன் காதுல பூவ சுத்தி அனுப்பி வச்சிருக்காரு அந்த ஜோசியரு. “ என்று தாமரை கூறிய பரிகாரப் பூஜைக்கான வழிமுறையை ஏற்க மனமில்லாமல் வாதாடினார் தாமோதரன்.
“ இப்போ என்ன தான் செய்யணும்னு சொல்றீங்க, நீங்களும் உங்கப் பொண்ணுக் கல்யாணத்துக்கு எந்த முயற்சியும் பண்றதில்ல, முயற்சிப் பண்ற என்னையும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. உங்க பொண்ணோட ஜாதகத்துப்படி.. லவ் மேரேஜ் பண்ணத் தான் அதிகமா வாய்ப்பு இருக்காம். அவளா ஒருத்தன இழுத்துட்டு வந்து அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நிக்கிறான்னு வையுங்க அந்தப் பையன் எப்படி இருப்பான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க, அவனும் இவளை மாதிரியே நீதி நேர்மை, சமத்துவம் பெண் சுதந்திரம் அது இதுன்னு வேண்டாத பேச்சுப் பேசி வாழ்க்கையே ஒழுங்கா வாழத் தெரியாதவனாத் தான் இருப்பான், அப்படிப்பட்டவனுக்கா உங்கப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் நினைக்கிறீங்க!. அதுக்கு நாமளே ஒரு நல்ல பையனைத் தேடிப் பிடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறது நல்லதுன்னு யோசிச்சுதான் பரிகாரத்துக்கு கேட்டு வந்தேன். உங்க பொண்ணுக்கு நல்லப் பையன் கூட கல்யாணம் நடக்கணும்னா அதுக்கு இந்த பரிகாரம் செய்றது அவசியம். என் விருப்பத்துக்கு என்னைக்கும் தடையா இருக்கமாட்டேன்னு சொல்லுவீங்களே.. பரிகாரம் நல்லபடியா முடிஞ்சு.. நல்லப் பையன் கூட நம்மப் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும் இது தான் என்னோட விருப்பம். நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது, அந்த ஜோசியர் சொன்ன நோன்புப் பூஜையை எந்த தடங்கலும் இல்லாம விஷல்யாவை செய்ய வைக்க வேண்டியது உங்கப் பொறுப்பு. ” என்று விடாப்பிடியாக பேசி தன் விருப்பத்திற்கு கணவரை ஒப்புக்கொள்ள வைத்தார் தாமரை.
தன் விருப்பம் இதுவே என்று ஆணித்தரமாக அறிவுறுத்தி சென்றப் பின் மனைவியிடம் மறுத்து வாதாட விருப்பமில்லாத தாமோதரன் மகளை நாடி வந்தார்.
“ ஷாலு குட்டி.. அப்பாவுக்காக ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா.. ?” என்று கெஞ்சலுடன் உதவிக் கேட்டுவந்த தந்தையை விசித்திரமாய் பார்த்த விஷல்யா. “ என்னப்பா வழக்கத்தை விட கெஞ்சல் கொஞ்சம் தூக்கலா இருக்கு” என்றாள்.
“ கேட்டுவந்த உதவி அப்படி அதனால கெஞ்சலும் கொஞ்சம் தூக்கலா இருக்கு!” என்ற தந்தையை கிண்டலாய் பார்த்து, “ சரி சரி வந்த விஷயத்தை சொல்லுங்க” என்றாள் விஷல்யா.
“ இப்போ நடந்த ராகுக்கேது பெயர்ச்சி உன் ஜாதகத்துக்கு அவ்ளோவா நல்லது இல்ல போல அதுனால சின்னதாப் பரிகாரப் பூஜைச் செய்யச் சொல்லி ஜோசியர் சொல்லிருகார்” என்று திருமணத்திற்காக செய்யும் பூஜை என்றால் மகள் சம்மதிக்கமாட்டாள் என்று அவள் குணம் புரிந்து பூஜைக்கான காரணத்தை மாற்றிக் கூறியவர் வழிப்பாட்டு வழிமுறைகளை கூறிட..
“ வரவர அம்மாக் கூட சேர்ந்து நீங்களும் ரொம்ப மாறிட்டீங்க அப்பா, “ என்று அலுத்துக் கொண்டவள் பூஜைக்கான வழிமுறைகளை எண்ணிக் கோபமான முகப் பாவனையுடன், “ இது ஜோசியர் சொன்னப் பரிகாரம் மாதிரி தெரியலையே!.. என்னை அடக்க ஒடுக்கமா பாக்கணும்னு ஆசைப்படுற அம்மாவோட சதித்திட்டம் மாதிரி இருக்கே!” என்று சந்தேகக் குரலில் வினவினாள் விஷல்யா.
“ ஜோசியர் சொன்னதோ!, இல்ல உங்க அம்மா சொன்னதோ!, அதெல்லாம் எனக்குத் தெரியாது, இந்தப் நோம்புப் பூஜையை உன்னை செய்ய வைக்கவேண்டியது என் பொறுப்புன்னு உன் அம்மா ஆர்டர் போட்டுட்டா, எனக்காக என் பொண்ணு இந்தப் பூஜைய நல்ல படியா செஞ்சு முடிப்பாங்கிற நம்பிக்கையில நானும் ஒகே சொல்லிட்டு வந்துட்டேன், அப்பாவுக்காக இந்தப் பூஜைய என் செல்லப் பொண்ணு செஞ்சு முடிப்ப தானே குட்டிமா! “ என்று வற்புறுத்தலுடன் வேண்டுதல் வைத்தார் தாமோதரன்.
“ உங்களைச் சொல்லி எந்தப் பிரோஜனமும் இல்ல அம்மா உங்களுக்கு நல்லா சாவி கொடுத்து அனுப்பி வைச்சிருக்காங்கன்னு தெரியுது, நான் மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாலும் விடமாட்டீங்கன்னும் புரியுது, உங்களுக்குகாக மட்டும் தான் இதுக்கு ஓகே சொல்லுறேன்” என்று அரைகுறையாகச் சம்மதம் சொன்னாள் விஷல்யா.
“ நீ சொல்லுற ஓகேவே சரியில்ல ப்ராமிஸ் பண்ணு” என்று குழந்தைகளிடம் சத்தியம் வாங்க நீட்டுவது போல ஒரு கை நீட்டி தாமோதரன் வினவிட..
சிறுவயது முதல் சத்தியம் செய்தால் அதை எக்காரணம் கொண்டும் மீறாத தனது பலவீனம் அறிந்து கேட்கும் தந்தையை யோசனையாய் பார்த்தவள், “ நீங்க சத்தியம் எல்லாம் கேட்குறத வைச்சுப் பார்த்தா விஷயம் பெருசா இருக்கும்னு தோணுதே!. இதுல ஏதாவது வில்லங்கம் இருக்கா என்ன?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவினாள் விஷல்யா.
இதற்கு மேல் உண்மையை மறைத்து பலன் இல்லை என்பதை உணர்ந்த தாமோதரன் நோன்புப் பூஜைக்கான உண்மையான காரணத்தைக் கூறினார்.
“ நினைச்சேன்… அம்மா ஒன்னு சொன்னா அதுக்கு பின்னாடி என் கல்யாண விசயம் தான் காரணமா இருக்கும்னு நினைச்சேன்!, அது சரியாத் தான் இருக்கு. இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? என்கிட்ட சம்மதம் கேட்காமலேயே நீங்களா என்னென்னவோ பண்ணுறீங்க. “ என்று கோபம் கொண்டாள் விஷல்யா.
“ இப்படிப் பூஜைப் பண்ணுனா.. உடனே கல்யாணம் நடந்திடுமா என்ன?, இதெல்லாம் உன் அம்மாவோட திருப்திக்காகச் செய்யுறது, பாவம் உன்னை நினைச்சு ரொம்பக் கவலைப்படுறா, இந்தப் நோம்புப் பூஜை செஞ்சா கொஞ்சம் நிம்மதியா இருப்பா.” என்று மனைவிக்காக பேசினார் தாமோதரன்.
நீ எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக செய்யலாம், ஆனால் உன் செயலும் அதில் வரும் பலனும் என்றும் அடுத்தவர்களை பாதிக்கக் கூடாது, உன் உள்ளம் சரி என்று சொல்வதன் பக்கம் உறுதியாய் நில், தவறென்று வாதிடும் பக்கத்தில் தடுமாறியும் சென்றுவிடாதே.. என்று சிறுவயதில் இருந்து போதித்து வந்த தந்தை இன்று அன்னைக்காக இறங்கிவந்து பேசுவதற்காக தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்தவள், “ எனக்கு இந்தப் பூஜை பரிகாரம் மேல பெரிசா நம்பிக்கை இல்ல, இருந்தாலும் உங்களுக்காக இந்த நோம்புப் பூஜைய எந்தத் தடையும் இல்லாம செஞ்சு முடிக்கிறேன்” என்று தாமோதரன் நீட்டிய கரத்தில் தன் கரத்தைப் பதித்து சத்தியம் செய்தாள் விஷல்யா.
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியும் முன்பே எழுந்து நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை , நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்வர். நோன்பு காலத்தில் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியபடி நெய் மற்றும் பால் உண்ணாமலும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாதும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பை கடைபிடிப்பர்.
தந்தையின் வார்த்தைக்கு பணிந்த விஷல்யா… பாவை நோன்பு மேற்கொண்டு மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருப்பாவை பாடியபடி விஷ்ணு தளத்தை வளம் வந்த போது அமுதேவ்வை முதன் முதலில் சந்தித்தாள்.
இருவரின் முதல் சந்திப்பும் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளையும் எண்ணியபடி வீடு வந்து சேர்ந்தவள், தனது பதிலுக்காக காத்திருந்த தாமோதரன் முன்வந்து, “ இந்த இடம் வேணாம் அப்பா.. எனக்கு அந்தப் பையனை பிடிக்கல, அவன் எனக்கு செட்டாக மாட்டான் “ என்று அங்கிருந்து விலகிச் சென்றாள்.
எப்போதும் தெளிவுடன் இருக்கும் மகளின் குரலில் தடுமாற்றத்தை உணர்ந்தவர் அதற்கு மேல் வற்புறுத்தாமல் திருமணப்பேச்சை அத்துடன் நிறுத்தினார்.