13…

உண்மை விளம்புதல்..

 

உன்னையும் என்னையும்

பிரிக்கத் துடிப்பது..

தலைக் கனமா?..

தலைவிதியா?…

எதுவாய் இருப்பினும்

இறுதியில் எனக்கு மிஞ்சுவது

இந்தத் தனிமை மட்டுமே..

 

நாளை நடக்கவிருக்கும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க சென்றிருந்த தனுஜ்… வேலைகளை முடித்துக்கொண்டு அமுதேவ் தங்கியிருக்கும்  மணமகன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

முதலில் அமுதேவ் அறையில் இல்லாதது  பெரிய விஷயமாக தோன்றவில்லை என்றாலும் அலைந்து வந்த அயர்வு தீர சிலமணிநேரக் குளியலை முடித்து வந்த பிறகும்  அறை காலியாகவே இருக்க…‘ நாளைக்கு விடிஞ்சதும் கல்யாணம்.. நேரத்துக்கு படுத்து தூங்காம எங்கப் போனான் இவன்?’ என்று அலுத்துக்கொண்டபடி, அங்கும் இங்கும் நண்பனைத் தேடி அலைந்தவன்.. திருமண மண்டபத்தில் அமுதேவ்  இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு,   அவன் அலைபேசி எண்ணிற்குத் தொடர்புக் கொண்டான்.. இரு முறை அழைத்தும் பதில் இல்லாமல் போக.. பதற்றமடைந்த தனுஜ் உடனே அமுதேவ் அன்னையைச் சந்தித்து நடந்ததைக் கூறினான்.

 

“ என்ன சொல்ற தனு?, கல்யாண நேரத்துல ஆளுக்கொரு திசையில அலைய வேணாம்னு தானே, கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும்  மண்டபத்திலேயேத் தங்க ஏற்பாடுப் பண்ணினேன்.. தேவ் இங்க இல்லனா வேற எங்கப் போனான்?,” என்று குழப்பமும் பதற்றமுமாய் வினவினார் பானுஸ்ரீ.

“அது தெரியலைன்னு தானே சைலன்சர் இங்க வந்து நிக்கிறான், மறுபடியும் அவன்கிட்டயே  கேட்டா என்ன அர்த்தம் பானு?.. ஒருவேளை காதல் கிறுக்கு அதிகமாகி கள்ளத் தனமா காதலியை பார்க்க போயிருப்பானோ!” என்று சந்தேகத்துடன் கூறினார் வாசுதேவ்.

“ இருக்கலாம் பொறுங்க நான் நம்ம மருமகக் கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்.. “ என்ற பானுஸ்ரீ விஷல்யாவை தொடர்புகொண்டு… விபரம் கேட்டிட… “இல்ல அத்தை அம்மு இங்க வரல!, பங்க்ஷன் முடிஞ்சு ரூமுக்கு போனதிலிருந்து நானும்  அவனை பார்க்கல” என்று பதில் தந்திருந்தாள் அவள்.

“ இல்ல மருமகளையும் பார்க்க அவன் போகல. எனக்கு ஏதோ தப்பா இருக்கிற மாதிரி தோணுது, இந்த கல்யாணம் நடக்குமோ நடக்காதோன்னு  பயமாயிருக்கு.. “ என்று தன் வழக்கமான  நிதானத்தை  கைவிட்டுப் பதற்றமானார் பானுஸ்ரீ.

அலைபேசி அழைப்பை ஏற்று பேசி முடித்ததிலிருந்து மகளின் முகம் சரியில்லை என்று கவனித்த தாமரை, “ என்னாச்சு  ஷாலு ஏன் ஒரு மாதிரி இருக்க?”  என்று காரணம் வினவினார்.

“ ஒன்னும் இல்ல அம்மா.. “ என்று மழுப்பலாக விஷல்யா பதில் தர.. “ பொய் சொல்லாத, நானும் உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன் போன் வந்ததுல இருந்து உன் முகமே சரியில்ல.. “ என்று விடாமல்  விசாரணை செய்தார் தாமரை.

“ ஒன்னும் இல்லன்னு சொன்னா விடுங்களேன்.. “ என்று அன்னையின் தொந்தரவுத் தாங்க முடியாமல் கோபமாய் விஷல்யா கத்திட…” ஒன்னும் இல்லனா உன் முகம் ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்கு” என்றார் தாமரை.

பதிலேதும் சொல்லாமல்.. மணமகள் அறையை விட்டு வெளியேற  விஷல்யா முயல.. “ இந்த நேரத்துல எங்கப் போற?. “ என்று தடுத்து நிறுத்த முயன்றார் அவள் அன்னை.

“ பானு அத்தையைப் பார்த்துட்டு வரேன்.. “ என்று நில்லாமல் பதில் சொல்லியபடி  வெளியேறினாள் விஷல்யா.

அடுத்தடுத்து விடுக்கப்பட்ட அனைத்து அலைபேசி அழைப்புகளையும் ஏற்காமல் அமுதேவ் தவிர்த்திட…  என்ன நடக்கிறது என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் தவித்தபடி இருந்த பானுஸ்ரீ, தன்னைக் காண வந்த விஷல்யாவைக் கண்டதும், ஏதோ புது நம்பிக்கை வந்த உணர்வுடன் வேகமாய் அவள் அருகில் சென்று, “ வாம்மா ஷாலு… தேவ் உன்கிட்ட பேசினானா?” என்றார்.

“ இல்ல அத்தை என்கிட்ட எதுவும் பேசல,  நான் போன் பண்ணாலும், ரிங் போகுது பட் அட்டென்ட் பண்ண மாட்டேங்கிறான்.” என்று பானுவுக்கு பதில் தந்தவள் தனுஜ் புறம் திரும்பி… “தேவ் உங்கக் கூட தானே இருந்தான், எங்கப் போனான்னு உங்களுக்கும் தெரியலையா?, இல்ல இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு நீங்களே அவனை மறைச்சு வச்சிருக்கீங்களா?” என்று சந்தேகத்துடன் வினவினாள் விஷல்யா.

அங்கிருந்த அனைவரின் சந்தேகப் பார்வையும் அவன் புறம் திரும்பிட.. தவிப்பாய் உணர்ந்த தனுஜ். “ஆரம்பத்துல பொய் சொல்லி நடக்கிற கல்யாணம்னு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் கல்யாணத்தை நிறுத்தணும்னு நான் என்னைக்கும் நினைச்சது இல்ல. இன்னைக்கு வினோத்  கல்யாணத்தை நிறுத்தப் போறேன்னு சொன்னப்பக் கூட அவனைச் சரிகட்டித் தேவ்கிட்ட உண்மையச் சொல்ல விடாமத் தடுத்து மண்டபத்தை விட்டு அனுப்பிவைச்சு உனக்கு ஹெல்ப் தான் பண்ணுனேன், அப்படி இருந்தும் நீ என்னையேச் சந்தேகப்படுறியா?” என்றான்.

“என்ன உண்மை?… கல்யாணத்தை நிறுத்துற அளவுக்கு அப்படி என்ன நடந்தது?”என்று பானுஸ்ரீ குழப்பத்துடன் வினவிட.. “ அதை என் கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும் அம்மா,  உங்க மருமக தான், இரண்டு நாளைக்கு முன்னாடி ஷாப்பிங் மால்ல ஏதோ தகராறு பண்ணியிருக்காங்க… அதை தேவ் கிட்டசொல்லியே ஆகணும்னு குதிச்சுட்டு இருந்தான் வினோத். நான் தான் இந்தக் கல்யாணம் நடக்கிறது தான் தேவ்வுக்கு நல்லதுன்னு சொல்லி, அவனை சமாதானப்படுத்தி  அனுப்பி வைச்சேன்” என்று நடந்ததை சுருக்கமாக கூறி முடித்தான் தனுஜ்.

“என்ன ஷாலு,  மால்ல என்ன நடந்துச்சு?,” என்று கேள்வியை விஷல்யா புறம் திருப்பினார் பானுஸ்ரீ.

“ அது ஒன்னும் இல்ல அத்தை..  கார் பார்க்கிங்ல இரண்டு பொறுக்கிப் பசங்க.. குடிச்சிட்டு போற வர்ற பொண்ணுங்கக் கிட்ட வம்பு பண்ணிட்டு இருந்தானுங்க. கொஞ்சம் பெரிய இடம் போல வாட்ச்மேனும் எதையும் கண்டுக்கல, குடிகாரன் கிட்ட நமக்கு எதுக்கு பிரச்சனைன்னு.. மத்தவங்களும்  கண்டும் காணாத மாதிரி  கடந்து போயிட்டாங்க, என்னால அப்படி விட முடியல… முதல்ல பொறுமையா குணமாத் தான் எடுத்து சொன்னேன்,  பேச்சை கேட்கிற மாதிரி தெரியல,  என்னையே சீண்ட ஆரம்பிச்சிட்டானுங்க.. சும்மா நாலுத் தட்டுத் தட்டி பொண்ணுங்கள மதிக்க கத்துக் கொடுத்துட்டு வந்தேன். தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் தட்டிக் கேட்காம சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தக் கூட்டத்துல வினோத்தும் ஒருத்தன்… தப்பு செஞ்ச அந்தப் பசங்கள விட்டுட்டு பொண்ணுனா எப்படி இருக்கணும்னு எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டான், சரிதான் போடா.. அரைவேக்காடுன்னு திட்டிட்டு வந்துட்டேன்“ என்று தன் திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு பூதாகரமாக எழுந்த பிரச்சனையின் அடித்தளத்தை விவரித்தாள் விஷல்யா.

“நடந்ததுல உன் தப்பு எதுவும் இல்லையே! நீ நல்லது தானே பண்ணியிருக்க.. அப்புறம் எதுக்கு அந்த வினோத் இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சிப் பண்ணனும்”என்றார் வாசுதேவ்.

“தெரியல மாமா, ஒருவேளை அம்முவுக்கு என்னை மாதிரி அடிதடியான பொண்ணுங்கள பிடிக்காதுன்னு  தெரிஞ்சதால கல்யாணத்தை நிறுத்த நினைச்சிருக்கலாம்” என்று தோள்களைக் குலுக்கி பதில் தந்தவள், தனுஜ் புறம் திரும்பி..  “  வினோத் எப்படி?”  என்று விஷல்யா வினவ.. “ எப்படினா என்ன அர்த்தம்? “ என்று புரியாமல் வினவினான் தனுஜ்.

“ வினோத் அம்முவுக்கு எந்த அளவுக்கு பழக்கம்னு கேட்டேன், உங்களை விட நெருக்கமா?” என்றாள் விஷல்யா.

“ இல்ல.. என்னை விட தேவ்வுக்கு வேற யாரும் கிளோஸ் இல்ல.. எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற பிரண்ட்ஷிப்பை பார்த்து வினோத் பல நாள் பொறாமை பட்டிருக்கான்,  அதை நேரடியா என்கிட்டயே சொல்லியும் இருக்கான். வினோத் தேவ் இரண்டு பேருக்குள்ள எது ஒத்துப் போகுதோ இல்லையோ சாத்வீகக் குணம் இருக்கிற  பொண்ணத் தேடிக் கல்யாணம் பண்ணணுங்கிற முடிவுல மட்டும் ரெண்டு பேரும் உறுதியா இருந்தாங்க,  பட் வினோத் கூட கம்பார் பண்ணும் போது நம்ம தேவ் கேரக்டர் எவ்வளவோ பெட்டர்.. “ என்று வினோத் குறித்து தான் அறிந்த விவரங்களை கூறினான் தனுஜ்.

“அப்போ நான் நினைச்சது சரிதான்.. நீங்கப் பக்கத்துல இருக்கிற வரைக்கும் எந்த உண்மையையும் சொல்ல விடமாட்டீங்கன்னு உங்க முன்னாடி  போற மாதிரி போக்கு காட்டிட்டு நீங்க இல்லாத நேரத்துல எல்லா விஷயத்தையும் அம்மு கிட்ட போட்டுக் கொடுத்திருப்பான், அவன் சொன்னதை உண்மைன்னு நம்புன  அம்முவும் உங்கக் கிட்டக் கூட சொல்லாம      இங்கயிருந்து எஸ்கேப் ஆகிட்டான். ஆமா வினோத்தை விட உங்க தோஸ்த்  பெட்டர்னு எதை வச்சு சொல்றீங்க?” என்று தன் அலைபேசியை ஆராய்ந்தபடி விஷல்யா அடுத்த கேள்வியை கேட்டிட..

 “ தேவ் பொண்ணுங்க இப்படித் தான் இருக்கணும், தனக்கு வரப் போற ஃவைப் இப்படி தான் நடந்துக்கணும்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டாலும் பொண்ணுங்கள தரக் குறைவா பேசுனதோ.. மட்டமா நடத்துனதோ இல்ல. ஆனா வினோத் அப்படி இல்ல, பொண்ணுங்க இனத்தையே மட்டமா தான் பேசுவான்.. ஆண் இனத்துக்கு சேவை செய்ய வந்த அடிமை இனம் தான் பொண்ணுங்கன்னு திமிரா சொல்வான். அந்த விஷயத்துல அடிக்கடி தேவ்வுக்கும் வினோத்துக்கும் சண்டை வரும். நாங்க தான் பேசி  சமாதானப் படுத்துனோம். சரி காலேஜ் படிக்கும் போது தான் அப்படி இருந்தான்,  இப்போ மாறி இருப்பான்னு   நினைச்சோம்.. ஆனா அவன் இன்னும் திருந்தல, அடக்க ஒடுக்கமா  அடிமையாக இருக்கிற பொண்ணு தான் வேணும்னு தேடிப் பிடிச்சு படிக்காத கிராமத்துப் பெண்ணை கல்யாணம் பண்ணியிருக்கான். கல்யாணத்துக்கு கூட நாங்கள் போய் இருந்தோம். எங்க முன்னாடியே அந்த பொண்ண, படிக்காதவ பட்டிக்காடுன்னு ரொம்ப மட்டமா நடத்தினான். என் நண்பன் இதுவரைக்கும் அந்த மாதிரி யாரோட குணத்தையும் மட்டமா பேசினது இல்ல, வினோத் கூட கம்பேர் பண்ணி பாக்கும்போது அவனை விட என் நண்பன் தேவ் பெட்டர் தான் !” என்று  நண்பர்கள்  இருவருக்கும் குணத்தில் உள்ள வேற்றுமையை விவரித்தான் தனுஜ்.

“மட்டமா பேச மாட்டானா?, அன்னைக்கு என்னை பப்ளிக்ல வச்சு பஜாரின்னு இன்சல்ட் பண்ணுனது மட்டம் இல்லையா? இல்ல அவனோட டிக்சனரில மட்டம்ங்கிற வார்த்தைக்கு வேற அர்த்தம்  இருக்கா?”என்று குத்தலான குரலில் வினவினாள் விஷல்யா.

“ அன்னைக்கு ஏதோ ஒரு கோபத்துல அப்படி பேசிட்டான்…அதுக்கப்புறம் அதை நினைச்சு எவ்வளவு பீல் பண்ணினான் தெரியுமா?”என்று நண்பனை தாங்கிப் பேசினான் தனுஜ்.

“ பீல் பண்ணி இருந்தா மன்னிப்பு கேட்டு இருக்கணுமே!, நான் பேசின வார்த்தைக்கு நான் மன்னிப்பு கேட்டுட்டேன், இன்பாக்ட் மன்னிப்பு கேட்டதுக்கு பிறகு தான் கல்யாணத்துக்கு ஓகே  சொன்னான். ஆனா அன்னைக்கு அவன் நடந்துக்கிட்ட முறைக்கு இப்ப வரைக்கும் என்கிட்ட  மன்னிப்பு கேட்கவே இல்ல, ..“ என்று குற்றம் சாட்டும் குரலில் கூறினாள் விஷல்யா.

 

“இப்போ தேவ் காணோங்கிறது  பிரச்சனையா?, இல்ல உன் கிட்ட மன்னிப்பு கேட்கலங்கிறது பிரச்சனையா?” என்று தனுஜ் கோபமாய் வினவிட.. “தனு சொல்லுறது சரிதான் ஷாலு.. இப்போ தேவ்வைத் தேடுறது தான் பெரிய பிரச்சனை.. அதைப் பத்தி மட்டும் பேசுவோமே!” என்று தனுஜ் வார்த்தையை ஆமோதித்தார்  பானுஸ்ரீ.

“தேட வேண்டிய அவசியமே இல்ல அத்தை.. “என்று அலட்சியமாக விஷல்யா கூறிட.. “தேட வேணாம்னா என்ன அர்த்தம்? தேவ் இல்லாம கல்யாணம் எப்படி நடக்கும்,” என்றார் வாசுதேவ்.

“தேட வேண்டிய அவசியம் இல்லன்னு தான் சொன்னேன் மாமா.. கல்யாணம் நடக்காதுன்னு நான் சொல்லவே இல்லையே… !” என்று புதிராய் நிறுத்தியவள், தன் அலைபேசியை உயர்த்திக் காட்டி.. “ஆடு ஆட்டு மந்தையில தான் ஒழிஞ்சிருக்கு.. “என்று எள்ளல் குரலில் கூறியவள்.. “இன்னும் புரியலையா?,  தேவ் அவன் வீட்டுல தான் இருக்கான். மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணாததால.. மொபைல் நம்பர் ஃடிராக்கர் மூலமா.. அவனோட லொக்கேஷனை டிராக் பண்ணிட்டேன். “என்றாள் விஷல்யா.

“குட் தேவ் எங்க இருக்கான்னு தெரிஞ்சிடுச்சு,  இப்போ என்ன பண்றது?” என்று தனுஜ் வினவிட…“ வேற என்னப் பண்ணுறது.. போய் என்ன நடந்ததுன்னு விசாரிப்போம்.  ஒருவேளை வினோத்  பேச்சைக் கேட்டுத் தான் இங்க இருந்து போனான்னு தெரிஞ்சா, அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எடுத்துச் சொல்லுவோம் அப்படியும் மனசு மாறாமக் கல்யாணம் வேணாம்னு அடம் பிடிச்சான்னா கையையும் காலையும் கட்டி மண்டபத்துக்கு தூக்கிட்டு வந்து,   கல்யாணம் பண்ண வேண்டியது தான்.. “என்று கடத்தலையும் கட்டாயக் கல்யாணத்தையும் வெகு இயல்பாய் திட்டமிட்டாள் விஷல்யா.

“ கட்டாயக் கல்யாணமா?.. “என்று அதிர்ச்சியுடன் தனுஜ் வினவிட…” கடைசில என் பையனுக்கும்  என் நிலைமை தானா?” என்று பெருமூச்சை வெளியேற்றிய வாசுதேவ்வை “ என்ன சொன்னீங்க” என்று பானுஸ்ரீ கோபமாய் முறைக்க  “வேற வழி இல்ல”என்றாள் விஷல்யா.

செவிகளை எட்டிய செய்தியை கடினத்துடன் கிரகித்துக் கொண்டவர், “திட்டம் எல்லாம் நல்லாத் தான் இருக்கு.. ஆனா   உன்னை வேணாம்னு சொல்றவரை கட்டாயப்படுத்தி எப்படி தாலிக்  கட்ட வைப்ப… எல்லாத்தையும் புதுமையா புரட்சிகரமாக செய்றேன்னு.. மாப்பிள கழுத்துல நீ தாலி காட்டுறேன்னு சொல்லிடாத.. அப்படிப் பட்ட விசித்திரமான சம்பிரதாயத்தை ஊரும் ஏத்துக்காது நம்ம உறவும் ஏத்துக்காது.. “ என்று அதுவரை நடந்து கொண்டிருந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்ததன் அடையாளமாய் மகளின் திட்டத்தை சாடியபடி அங்கு வந்து நின்றார் தாமரை.

“அப்படிச் செஞ்சாத் தான் என் அம்மு எனக்கு கிடைப்பான்னா நான் அதையும் செய்வேன்” என்று பிடிவாதக் குரலில் அறிவித்தாள் விஷல்யா.

“மாப்பிள்ளையோட உண்மையான அன்பு வேணும்னா,  நீ அவருக்கு உண்மையா இருந்திருக்கணும்… இப்ப கூட நீ செஞ்ச தப்ப புரிஞ்சுக்காம பிடிவாதம் பிடிக்கிறது சரியில்ல ஷாலு. மாப்பிள்ளை கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி மன்னிப்பு கேட்டு கல்யாணத்துக்கு சம்மதிக்க வை.. “என்றார் தாமரை.

“சம்மந்தி.. மொதல்ல தேவ்வுக்கு எந்த அளவுக்கு உண்மை தெரிஞ்சிருக்கு.. அவன் மனநிலை எப்படி இருக்குன்னு தெரிஞ்சு கிட்டு உண்மைய சொல்றது தான் சரியா இருக்கும். ஒருவேளை அவனுக்கு தெரிய வராத உண்மையை நாம தெரியாம உளறிட்டா… பிரச்சினை பெருசாகிடும் அப்புறம் இந்தக் கல்யாணம் என்னைக்கும் நடக்காது” என்றார் பானுஸ்ரீ.

“விருப்பமில்லாதப் பையனைக் கட்டாயபடுத்திக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சு என் பொண்ணோட வாழ்க்கையும் சேர்ந்து வீணாக்க நினைக்கிறீங்களே!, இதுவே உங்க பொண்ணா இருந்தா இப்படித்தான் செய்வீங்களா?, “ என்று மகளிடம் எடுபடாதக் கோபத்தை பானுஸ்ரீ புறம் திருப்பினார் தாமரை.

 

“இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல சம்மந்தி, ஷாலுவை நான் என் பொண்ணு மாதிரி தான் பார்க்கிறேன், நிச்சயம் அவளுக்கு நான் கெடுதல் செய்ய மாட்டேன். “ என்று வருத்தக் குரலில் பானுஸ்ரீ பேசிட..

 

“இப்படி நடக்கும்னு எதிர்பாக்கலன்னா.. வேற எதை எதிர்பார்த்தீங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லன்னு சொன்னவரை போலீஸ் ஸ்டேஷன்ல வைச்சு மிரட்டிக் கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்களால வேற என்ன எதிர்பார்க்க முடியும்?.” என்று கொஞ்சமும் கீழிறங்காத கோபத்துடன் பேசினார் தாமரை.

 

“  என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா தாமரை!, அவங்க நம்ம சம்மந்தி நம்ம பொண்ணோட மாமியார் எது பேசுறதா இருந்தாலும் பார்த்து பேசு” என்று மனைவியைக் கண்டித்தார் தமோதரன்.

 

“என்ன பேசணும்னு  புரிஞ்சுதான் பேசுறேன், கல்யாணத்துக்கு வந்திருக்கிற இவங்களோட  சின்ன மாமியார், இவங்க  கடந்தக் காலக் கல்யாணக்  கதை எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லிட்டாங்க. இவங்க உண்மை என்னனு தெரிஞ்சதுக்கு பிறகு தான், நம்மப் பொண்ணத் தேடி வந்து அவங்கப் பையனுக்கு கல்யாணம் பேசி முடிச்சதுக்கான  காரணமே எனக்கு புரிஞ்சது. “என்றார் தாமரை.

 

விஷல்யா அன்னையின் வார்த்தையில் உண்மையும் அவர் கோபத்தில் நியாயமும் இருப்பதால் மறுத்துப் பேசாமல் பானுஸ்ரீ அமைதிகொள்ள…மனைவி முகம் வாடப் பொறுக்காத வாசுதேவ்,எப்போதும்  கடைபிடிக்கும் நிதானத்தை கைவிட்டு,  தன் மனைவி மீது விழும் வீண் பழிகளை தடுக்கும் விதத்தில் கோபமாய் , “காதலிச்சவங்களையே  கல்யாணம் பண்ணிக்கப் போராடுறது தப்பு இல்லையே! அவளைக் காதலிச்சு கல்யாணம் பண்ணாம விட்டுட்டுப் போக நினைச்சது என்னோடத் தப்பு.  எல்லாரும் ஏன் என் பானுவைக் குறைச் சொல்லுறீங்க.பானு எனக்காக என்னோட காதலுக்காக தான் எல்லா கஷ்டத்தையும், எல்லாரோட வார்த்தையையும் சகிச்சுக்கிட்டு இருந்தா இப்பவும் இருக்கா. போலீஸ் ஸ்டேஷன் போய்  கல்யாணம் பண்ணுனதுல உங்களுக்கு அவளோடத் திமிரும் பிடிவாதமும் தெரிஞ்சதுன்னா..  எனக்கு அதுல என் பானு என் மேல வைச்சிருக்கிற காதல் தெரிஞ்சது.இன்னொரு வார்த்தை என் பானுவைப் பத்தித் தப்பா பேசினா.. பேசினது யாராயிருந்தாலும்  சும்மா விடமாட்டேன்.. “என்றார்.

 

“உங்கள கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுணவங்க மேல உங்களுக்கு எதுக்கு இவ்வளவு அன்பு?” என்று தாமரை வினவிட…

 

“நானும் இதை எத்தனை தடவை எத்தனை பேர் கிட்ட தான் சொல்றது,  பானுவோட வெளி அழகை மட்டும் பார்த்து நான் அவளை விரும்பல, அவளோட போல்டான குணத்தையும் சேர்த்துதான் விரும்பினேன்.  நான் வேணான்னு விலகிப் போனாலும் அவ என்னை விட்டு விலகமாட்டா … எனக்காக என் காதலுக்காக  எதையாவது செய்வான்னு எனக்கு தெரியும். நான் நினைச்ச மாதிரியே .. போலீஸ் ஸ்டேஷன்  போய்  ரிஸ்க் எடுத்து தான் எங்கக் கல்யாணம் நடந்தது,  நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி அன்னைக்கு நடந்தது கட்டாயக் கல்யாணம் இல்லை. முழுக்க முழுக்க என் சம்மதத்தோட,  விருப்பத்தோட நடந்த  காதல் கல்யாணம். ” என்றார் வாசுதேவ். 

” அண்ணி  குணம் இதுதான்னு தெரிஞ்சு தான் நீங்க  காதலிக்க ஆரம்பிச்சேன்னு சொல்லுறீங்க!,,  அதனால தான் இப்போ வரைக்கும் அதே  அன்போட, எந்த  சூழ்நிலை வந்தாலும்,  எத்தனை கஷ்ட நஷ்டத்தைப் பார்த்தாலும் அவங்கள  விட்டுப் பிரிஞ்சு  போகாம,   உறுதுணையாக   அவங்க கூடவே இருக்கீங்க!, உங்களுக்குள்ள இருக்கிற அன்னியோன்யமான அன்புக்கு  காரணம்  என்னன்னு  என் பொண்ணுக்கு புரிய வைக்கத் தான் அப்படி பேசினேன். ” என்றார் தாமரை.

அதுவரை சம்மந்தி என்று அழைத்துக் கொண்டு இருந்தவர் உரிமையுடன் அண்ணி என்று அழைக்க, “ நீங்க சொல்றதும் சரிதான் அண்ணி.. என் இயல்பு என்னவோ அதை அவர் அப்படியே ஏத்துகிட்டதாலத் தான் எங்க வாழ்க்கை இப்ப வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாம சுமூகமாக போயிட்டு இருக்கு.  கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு அப்பப்போ  என்னை கடுப்பேத்தினாலும், இப்ப வரைக்கும் யார்கிட்டயும் என்னை விட்டுக்கொடுத்து பேசினது இல்ல. ” என்று பெருமையுடன் கணவரை நோக்கிட.. அவரும் காலம் கடந்தாலும் மாறாத   காதலுடன்  கனிவாய் மனைவியை நோக்கினார்.

இருவரின் பார்வை பரிமாற்றத்தையும் அதிலிருந்த அன்பையும் அங்கிருந்த அனைவரும் பிரமிப்பு கலந்த மனநிறைவுடன் பார்த்திருக்க.. .  ” மிஸ்டர் யூத் அப்பா போதும் சைட் அடிச்சது…  தேவ் பிரச்சனைக்கு வாங்க” என்று தனுஜ் கிண்டல் செய்திட, கணவர் மனைவி இருவரும் பார்வை பரிமாற்றத்தை நிறுத்திக்கொண்டு.. தங்கள் கவனத்தை தற்போதைய பிரச்சனைக்கு திரும்பினர்..

” என் பையனும் உங்க பொண்ணும் வாழ்க்கையில ஒன்னு சேரணும்னு நினைச்சேனே தவிர… எந்த முறையில சேர்ந்த சரியா இருக்கும்னு  யோசிக்காம விட்டுட்டேன்.  இப்ப என்ன செய்யலாம்னு நீங்க சொல்லுங்க அது படியே செஞ்சிடலாம்  .. “என்று தாமரை அருகில் சென்று அவர் கரம் பற்றிப் பேசத் தூண்டினார் பானுஸ்ரீ.

”  நான் பார்த்த வரைக்கும் மாப்பிள்ளை கொஞ்சம் பிடிவாதக்காரர் மாதிரி  தெரியுறாரு.. ஷாலு அவரை ஏமாத்தி  தான் கல்யாணம் பண்ணிகிட்டான்னு தெரிஞ்சா நிச்சயம் பிரச்சனை பண்ணுவாரு. அதனால ஷாலு மாப்பிள்ளை கிட்ட உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிறது தான் ரெண்டு பேரோட எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதுன்னு எனக்கு தோணுது. ” என்றார்  தாமரை. 

  “இப்போ நான் போய் உண்மையை சொன்னதும் உங்க மருமகனுக்கு என் பக்கத்து நியாயம் புரிஞ்சிடப் போகுதா என்ன? அவன் சரியான ஈகோ பார்ட்டி அம்மா, நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இத்தனை நாள் என்னைப் பார்க்காம என் கூட பேசாம  இருந்தான். இப்போ போய் நான் உண்மையை சொன்னேன்னு வைங்க, இதுதான் சாக்குன்னு தாம் தூம்னு குதிச்சு குட்டிக்கரணம் எல்லாம் போட்டு கல்யாணத்தை நிறுத்திடுவான்” என்று அன்னையின் வார்த்தையை ஏற்க மனமில்லாமல் மறுத்து பேசினாள் விஷல்யா.

“ அதுக்கும்  வாய்ப்பிருக்கு.. ஆனா நீ சொன்ன பொய்க்கான காரணத்தை நீயே விளக்கிச் சொல்லும் போது, உன் மேல இருக்கிற  அன்பால மாப்பிள்ளை மனசு மாறிக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லவும்  வாய்ப்பு இருக்கு. ஒருவேளை நீ  மறைக்க நினைக்கிற  பொய்   அடுத்தவங்க மூலமா தெரிய  வந்ததுன்னா..  அப்போதைக்கு அந்தப் பொய் தான் பூதாகரமாக தெரியுமே தவிர,  உண்மையை மறைச்சு பொய் சொல்லக் காரணமா இருந்த உன் சூழ்நிலையோ உன் தரப்பு நியாயமோ அவருக்கு  புரியாது. நீ சொன்ன பொய்ய மட்டுமே அடையாளமா வைச்சு.. உன் தரப்பு நியாயத்தை புரிஞ்சுக்க முயற்சி பண்ணாம, மொத்தப் பழியையும் உன்மேல சுமத்திட்டு, கல்யாணத்தை கூட நிறுத்திடலாம். அதனால தான் சொல்லுறேன், என்ன நடந்தாலும் சரி உண்மையை சொல்லிடு. கண்டிப்பா மாப்பிள்ளை உன்னையும் நீ அவர் மேல வச்சிருக்கிற காதலையும் புரிஞ்சுக்குவாரு” என்று வற்புறுத்தலுடன் கட்டாயப்படுத்தினார் தாமரை.

” நாளைக்கு கல்யாணத்த வச்சுட்டு இப்ப போய் உண்மைய சொல்லுனா என்ன அர்த்தம் அம்மா?, முதலில் இந்த கல்யாணம் முடியட்டும் நேரம் பார்த்து  நானே அம்முகிட்ட  எல்லா உண்மையையும் சொல்லி  எந்த  சூழ்நிலையில பொய் சொன்னேன்னு  புரியவைச்சிடுறேன் ” என்றாள் விஷல்யா.

” மாப்பிள்ளையே இல்லாம கல்யாணம் எப்படி நடக்கும்.. நடக்காத கல்யாணத்துக்கு பிறகு  நீ எந்த உண்மையை புரிய வைக்க போற.. ” என்றார் தாமரை.

” சப்போஸ் கல்யாண நேரத்துல..  அம்மு இப்படி ஏதாவது ஏடாகூடம் பண்ணி கல்யாணத்தை நிறுத்த ட்ரை பன்ணுனா…  எதுக்கும்  தேவைப்படும்னு ஒரு ஐடியா ரெடி பண்ணி வச்சிருக்கேன் இப்போதைக்கு அதை எக்ஸிக்யூட்..  பண்ணி கல்யாணத்தை நடத்தி முடிச்சிட்டு..  பிறகு பொறுமையா உண்மையை சொல்லிக்கலாம் .” என்றாள் விஷல்யா.

” நீ செஞ்ச தப்ப சரி பண்ணுன்னு சொன்னா திரும்பத் திரும்ப அதே தப்பை வேற ஃடிசைன்ல பண்ணுறேன்னு சொல்லுற.. உனக்கு உன் காதல் வேணுமா ?, இல்ல இந்த கல்யாணம்    நடந்தா மட்டும்  போதுமா?”  என்று கடுமையான குரலில் வினவினார் தாமரை.

” ரெண்டுமே தான் வேணும் அம்மா.. ” என்று  பிடிவாதக் குரலில் கூறினாள் விஷல்யா.

” அப்போ நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு.. ஒருவேளை உன் இடத்துல மாப்பிள்ளையும், மாப்பிள்ளை இடத்துல நீயும்  இருந்து.. உன்னை கல்யாணம் பண்ணிக்க அவர் பொய் சொல்லி.. அது கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு தெரிய வந்தா நீ என்ன செய்வ..?” என்று நியாயமாய் கேள்வி எழுப்பினார் தாமரை.

” மன்னிக்க மாட்டேன் ..” என்று மறைக்காமல் தன் மனநிலையை வெளிப்படுத்தினாள் விஷல்யா.

” உன்னை  ஏமாத்துனவங்கள..  உன்னால மன்னிக்க முடித்தப்போ.. அவங்க மட்டும் உன்னை மன்னிக்கணும்னு எப்படி எதிர்பார்க்கிற ஷாலு.  கட்டாயக் கல்யாணம் பண்ணுறவங்களையும், தன்னைக் கொடுமைப்படுத்தி சந்தோசப்படுறவனையும் மன்னிச்சு மறுபடியும் ஏத்துகிற மஞ்சள் கயிறு மேஜிக் கதையெல்லாம் படத்துக்கும்  படிக்கிற கதைப் புத்தகத்துக்கு வேணும்னா சரிப்பட்டு வரலாம்.  ஆனா நிஜ வாழ்க்கைக்கு அது கொஞ்சம் கூட செட்டாகாது. காயப்படுத்துனவங்கள மறந்து மன்னிக்கிற அளவுக்கு இங்க  யாரும் புத்தனோ சித்தனோ இல்ல.. நீ எனக்கு தந்த காயத்தை உனக்குத் திருப்பித் தருவேன்னு மனசுல வஞ்சத்தை சுமந்திட்டு இருக்கிற சாதாரண மனுஷங்க தான் நாம.. அதனால முடிஞ்ச அளவுக்கு யாரையும் காயப்படுத்தாம இருக்கிறதுதான்  எல்லாருக்கும் நல்லது.”என்றார் தாமரை.

  அன்னை அவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், ஒரு முடிவுக்கு வர முடியாமல் விஷல்யா தயங்கி  நின்றிட.. ”  உன் அம்மா சொல்றது தான் சரின்னு  எனக்கும்  தோணுது ஷாலு. இதுக்கு மேல யோசிக்க ஒன்னும் இல்ல. நேர்ல போய் என்  பார்த்து எல்லா உண்மையையும் சொல்லி அவனை  கல்யாணத்துக்கு சம்மதிக்க வை .. ” என்றார் பானுஸ்ரீ.

மனமில்லை என்றாலும் மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக ” சரி எல்லாரும் சொல்லுறீங்க  அதனால எனக்கும் ஓகே… “என்றாள் விஷல்யா.

” அப்போ வா மாப்பிள்ளை வீட்டுக்கு போவோம்… ” என்று தாமரை உடன்  வரக் கிளம்ப… ” நீங்க எங்க  வரீங்க.. ஒருவேளை நான் உண்மையை சொல்லவும் கோபத்துல அம்மு என்னை அடிச்சுட்டான்னா.. பெத்த பொண்ணு அடி வாங்குறதைப் பார்த்து உங்க மனசு தாங்காது” என்று தன் அன்னை தன்னுடன் வருவதை தடுத்து நிறுத்த முயன்றாள் விஷல்யா.

” சரி வா நான் உன் கூட வாரேன்.. ” என்று பானுஸ்ரீ உடன்வர சம்மதிக்க.. ” ஐயோ ஆண்ட்டி நீங்களா!,  நீங்களும் வேணாம்” என்று பதறினாள் விஷல்யா.

” நான் ஏன் வரக் கூடாது?” என்று குழப்பத்துடன் பானுஸ்ரீ வினவ.. ” உங்களுக்கும் அதே காரணம் தான் அம்மா.. ஒருவேளை உங்க மருமக உண்மையை சொல்லும் போது..  தேவ் டென்ஷனாகி என்கிட்டயே பொய் சொல்லிட்டாயான்னு  குதிச்சா… உங்க மருமக அவங்க கைவரிசையை காட்ட வேண்டிவரும்.. பெத்த பிள்ளை அடிவாங்குறத பார்க்க  உங்களுக்கும் கஷ்டமா இருக்கணும்னு தான் உங்களையும்  வர வேணாம்னு சொல்லுறாங்க.. என்ன ஷாலு நான் சொல்றது சரிதானே ” என்றான் தனுஜ்.

விஷல்யா கோபமாய் முறைக்க..  ” விளையாடாத தனு..  

  ஷாலு கூட  நீயும் அப்பாவும் போயிட்டு வாங்க.. ” என்று ஒரு வழியாக விஷல்யாவுக்கு துணையாக  யார் செல்வது என்று ஒரு முடிவிற்கு வந்தனர் அனைவரும்.

விஷல்யாவுடன் தனுஜ் மற்றும் வாசுதேவ்  சென்றிட… மனைவி அருகில் வந்த  தமோதரன்.. ” இப்போ உன் மனசுல இருந்த  பாரம் குறைஞ்சுடுச்சு தானே!” என்றார்.

” நாளைக்கு கல்யாணம் நல்லபடியா முடியுற வரைக்கும்  என் பாரம் குறையாது” என்றார் தாமரை.

” கவலைப்படாதீங்க.. அண்ணி..  நல்லதே நடக்கும்” என்று பானுஸ்ரீ ஆறுதல் கூறிட.. 

 

“ பொதுவா பொண்ண பெத்த எல்லா அம்மாக்களுக்கும் தன் மகளுக்கு வரப்போற மாமியார் எப்படி இருப்பாங்களோ, நம்ம பொண்ண நல்லா பார்த்துக்குவாங்களோன்னு ஒரு பயம்  மனசுல இருந்துகிட்டே இருக்கும், உங்க சின்ன மாமியார் உங்களைப்பத்தி சொன்னதை கேட்டதும் எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் இல்லாம போச்சு,   என்னை விட நீங்க என் பொண்ண ரொம்ப நல்லாப் பார்த்துக்குவீங்கன்னு   நம்பிக்கை வந்திடுச்சு“ என்று தான் பேசிய  வார்த்தையில்  உண்டான சிறு  மன வருத்தத்தையும் போக்கும் விதமாய் பானுஸ்ரீ குணத்தை உயர்த்திப் பேசினார் தாமரை.

 

அமுதேவ் தங்கியிருக்கும் அமுதவனம் வந்து சேர்ந்த  மூவரும்… வீட்டினுள் ஆள் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருளில் மூழ்கியிருந்த.. வீட்டின் கதவை  வாசுதேவ்விடம் இருந்த மாற்றுச் சாவி  கொண்டு திறந்து    உள்ளே நுழைந்தனர்.

” என்ன இவ்வளவு அமைதியா இருக்கு ஒருவேளை தேவ் இங்க இல்லையோ.. ” என்று வாசுதேவ்  சந்தேகம் கொள்ள… விஷல்யா அவள் அலைபேசியில் இருந்து அமிதேவ்   எண்ணிற்குத்  தொடர்பு கொண்டாள். இருளில்   மூழ்கியிருந்த  அவனது அறையில் அலைபேசி அலறல் சத்தம் கேட்டிட… ” இங்க தான் இருக்கான் மாமா.. ” என்று அமுதேவ் அறைப்பக்கம்   தனுஜ் மற்றும்  விஷல்யா சென்றார்கள். 

“கல்யாணத்துக்கு  பந்தக்கால் நாட்ட, வீட்டை இப்படியா  இருட்டடிச்சு போட்டு வைப்பாங்க..” என்று வீட்டின் அனைத்து  மின்  விளக்குகளையும்  ஒளிரச் செய்ய சென்றார்  வாசுதேவ்.

அறையின் இருளில்  மது மயக்கத்தில் மயங்கிக் கிடந்த   அமுதேவ்வைக் கண்டு  அதிர்ச்சியடைந்த விஷல்யா… ” என்ன இது? இந்தப் பழக்கம் எத்தனை நாளா இருக்கு?, ” என்றாள்.

” எல்லாம் உன்னால வந்து  ஒட்டிக்கிட்ட பழக்கம் தான்,   நீ கழட்டி விட்டுட்டு போன சோகத்துல இருந்து  மீளுறதுக்கு பாட்டிலை கையில எடுத்துட்டான்” என்றான் தனுஜ். 

” என்ன நக்கலா, ” என்று விஷல்யா கோபம் கொள்ள… ” உண்மைய சொன்னா நக்கலா தான் இருக்கும்.. ”  என்று அதையும் பகடி பேசினான் தனுஜ்.

” இவன் போதைக்கு நான் தான் உறுகாவா.  இவன் என்னை விட்டுட்டு போன சோகத்தை  மறக்க நான் ஒன்னும் குடிகாரியா மாறலையே!. பிரச்சனையை சமாளிக்க மனசளவுல தெம்பு இல்லாம.. குடிக்க ஆரம்பிச்சுட்டு அந்தப் பழியைத் தூக்கி பொண்ணுங்க மேல போடுறதே  இந்த ஆம்பளைகளுக்கு வழக்கமா போச்சு..  “என்றவள்…

” இவனை இந்த நிலைமையில பார்த்தா மாமா ரொம்ப சங்கடப்படுவாரு அதனால நீங்க அவரை இங்க வரவிடாம..  பார்த்துக்கோங்க” என்று தனுஜ்ஜை அறையை விட்டு வெளியேறும்படி கூறினாள் விஷல்யா. 

” குடிகாரனும்  குழந்தையும் ஒன்னுன்னு சொல்லுவாங்க,  அடிச்சாக் கூட யாரு அடிச்சாங்கன்னு   சொல்லத் தெரியாத அளவுக்கு பக்குவம் இல்லாதவங்க, அதனால …  பீ கேர் புல்” என்றவன் விஷல்யா கோபமாய் முறைக்க… ” வெளிக் காயம்  எதுவும் இல்லாம மட்டும் பார்த்துக்கோ… நாளைக்கு  மேடையில  கல்யாண கோலத்துல நிக்கும் போது… புத்தூர் மாவுக் கட்டோட  நின்னா  நல்லாவா இருக்கும் .. அதனாலத் தான் சொன்னேன்” என்று அசடு வழிந்தபடி அறையை விட்டு வெளியேறினான் தனுஜ்.

போதையில் கிடந்த அமுதேவ் அருகில் அமர்ந்து… ” உனக்கு என்னாச்சு அம்மு,  ஏன் இப்படி இருக்க?, யாருகிட்டயும் சொல்லாம மண்டபத்துலயிருந்து எதுக்கு வந்த?, ” என்றவள் அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போக.. ” கண்ணுமண்ணு தெரியாத அளவுக்கு குடிச்சிட்டு விழுந்து கிடக்குறியே அம்மு” என்று  அமுதேவ் நெற்றி வருடி… ” ஒரு காதல் இல்லனா..  இன்னொரு காதல்னு இந்த ஜெனரேஷன் பசங்க மாதிரி நீயும் என்னை மறந்துட்டு இன்னொரு வாழ்க்கை தேடிக்கிவன்னு  நினைச்சேன்.  ஆனா நீ என்னை  நினைச்சு இத்தனை நாள் தனியா வாழ்ந்தது மட்டுமில்லாம.. எனக்காக ஹாஸ்பிடல்ல பதறித் துடிச்ச பாரு.. அப்போ அந்த நிமிஷம் முடிவெடுத்தேன் என்ன நடந்தாலும் சரி உன்னை  விடக் கூடாதுன்னு. உன்னால உன் இயல்பை மாத்திக்க முடியுமா அம்மு.. முடியாதுல அப்புறம் எதுக்கு என்னை மட்டும் குணத்தை மாத்திக்க சொல்லி கட்டாயப்படுத்துற!,  அன்புங்கிறது.. ஆளுமைக்கோ அதிகாரத்துக்கோ அடங்கிப் போறது இல்ல அம்மு..  பரஸ்பரமா ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கிட்டு, எப்படி இருக்காங்களோ அப்படியே ஏத்துக்கிறதுக்கு பேரு தான் அன்பு. நான் சரியான வழியில் தான் என் அன்பை காட்டுறேன் ஆனா நீ  என்னை  அடக்கி அடிமையாக்கி அன்பு காட்டணும்னு நினைக்கிற..  அது தப்பு அம்மு.  என் உணர்வுகளைக் காயப்படுத்தாம உறவாக்கிக்க முயற்சி பண்ணு.. ” என்றவள் வருடிய நெற்றியில் இதழ் பதித்து.. ” ஐ லவ் யூ அம்மு.. எனக்காக  என்னை மறக்க முடியாம தானே இந்த குடிப்பழக்கத்தை கத்துக்கிட்ட.. இனிமே இது உனக்கு தேவை இல்லை.. நீயே விலகிப் போன்னு சொன்னாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்.. ” என்று  சுயநினைவற்று.. மது போதையில் இருந்தவனுக்கு தன் மனதில் உள்ள காதலை அறிவுறுத்தி விட்டு அங்கிருந்து விலகிச் சென்றாள் விஷல்யா.

” என்னம்மா ஷாலு என் பையன் கிட்ட பேசிட்டியா.. ?, என்ன சொல்லுறான்.. எதுக்காக மண்டபத்துல இருந்து வந்தானாம்… நாளைக்கு கல்யாணம் நடக்கும்ல.. ” என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார் வாசுதேவ்.

” பேசிட்டேன் மாமா,  அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல . புது இடத்துல   தூக்கம் வரலையாம் அதனால தான்   வீட்டுக்கு வந்துட்டான்.. ” என்று பொய்யாய் காரணம் கூறினாள் விஷல்யா.

” அதுசரி உண்மை எல்லாம் சொல்லிட்டியா அவன் என்ன சொன்னான்?, ” என்று வாசுதேவ் வினவிட… ” முதல்ல கோபப்பட்டான் அப்புறம் சொல்லி புரிய வைச்சேன், இப்போ சமாதானம் ஆகிட்டான்.. ” என்று அடுத்த  பொய்யைக் கூறினாள் விஷல்யா.

” சூப்பர் சூப்பர் சரி நீ  இங்கயே வெயிட் பண்ணு நான் போய் தேவ்வை  பாத்துட்டு வாரேன்” என்று வாசுதேவ்.. அமுதேவ் அறையை நாடிட…”வேணாம் மாமா ரொம்ப டயர்டா இருக்கு தூங்க போறேன்னு சொன்னான்,  இந்த நேரம் தூங்கி இருப்பான்.. நாம கிளம்பலாம்.. ” என்றாள் விஷல்யா.

” ஒரு எட்டு பார்த்துட்டு  வந்துடுறேன் மா.. ” என்று விடாமல் வாசுதேவ் பிடிவாதம் பிடிக்க.. ” ஹலோ யூத் அப்பா உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..?, ஏற்கனவே  டென்ஷன்ல இருப்பான் இப்ப நீங்க போனா வாங்கிக் கட்டிட்டு தான் வரணும், ஓகேன்னா போங்க  ” என்றான் தனுஜ்.

” வேணாம் வேணாம். சம் டைம்ஸ் தேவ் என் அம்மா மாதிரி வார்த்தையாலேயே காயப்படுத்திடுவான்,  எனக்கு எதுக்கு வம்பு  நாமக் கிளம்புவோம்” என்றார் வாசுதேவ்.

அவர்களுடனேயே  தனுஜ்ஜூம் கிளம்பிட.. ” நீங்க எங்க வரீங்க..  இங்கேயே  அம்முவுக்கு  காவல் இருங்க… “என்று தனுஜை  தடுத்து நிறுத்தியவள்.. ” நீங்க முன்னாடி போங்க மாமா..  இவர் கிட்ட பேசிட்டு வரேன்.. ” என்று வாசுதேவ்வை  அங்கிருந்து அகற்றியவள்… தன்னுடன் கொண்டு வந்த கைப்பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து தனுஜ் கையில் கொடுத்து… ” இப்போ இவன் இருக்கிற கண்டிஷனுக்கு நான் சொன்ன எதுவும்   அம்மு  மண்டையில ஏறியிருக்காது.  அதனால நீங்க என்ன செய்றீங்கனா… இன்னைக்கு நைட் இவன் கூடிய தங்கிட்டு.. காலையில சாருக்கு போதை தெளிஞ்சதும்..  என்ன? ஏது?  எதுக்கு இங்க வந்தான்னு  விசாரித்துப் பாருங்க..  ஒருவேளை வினோத் மூலமா உண்மையெல்லாம் தெரிஞ்சுகிட்டு கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொன்னா…  இந்த  பேப்பரை  அவன் கையில குடுங்க.. இந்த பேப்பர்ல   இருக்கிறத படிச்சதும் கல்யாணத்துக்கு மாட்டேன்னு சொல்லாம மண்டபத்துக்கு கிளம்பி வந்துடுவான்.. ” என்றவள் அமுதேவ்வை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை தனுஜ் கையில் கொடுத்துவிட்டு..  அங்கிருந்து கிளம்பினாள் விஷல்யா.

‘ படிச்சதும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லுற அளவுக்கு அப்படி இந்த பேப்பர்ல  என்ன இருக்கு?’ என்று புதிருக்கான விடை அறியும் ஆவலுடன் காகிதத்தைப் பிரித்துப் படித்தவன்… ‘ அடிப்பாவி, இதுதான் நீ சொன்ன எக்ஸ்ட்ரா ஐடியாவா.. ஒரு மனுஷனை எப்படியெல்லாம் பிளாக்மெயில் பண்ணுற ..’ என்று  விஷல்யாவின்   குதர்க்கமான குறுக்கு புத்தியை எண்ணி மிரண்டு போனான் தனுஜ்.

தனுஜ்.. மிரண்டு போகும் அளவிற்கு  இருந்த  விஷல்யாவின் தற்கொலை வாக்குமூலக் கடிதத்தை மீண்டும் ஒருமுறை வாசிக்கத் துவங்கினான். 

” காவல்துறை ஆணையாளர் அவர்களுக்கு.. இறுதி நிமிட கண்ணீருடன் நான் தரும் தற்கொலை வாக்குமூலம் என்னவென்றால்.. என் விபரீத  முடிவிற்கு காரணம் எனது காதலன் அமுதேவ் ஆவான். என்னை காதலித்து திருமண மேடை வரை அழைத்து வந்து விட்டு பிறகு என்னையும் என்னுடன் நடக்க இருக்கும் திருமணத்தையும் வேண்டாம் என்று மறுத்து சென்றதால் மனமுடைந்த நான் இத்தகைய முடிவுக்கு வருகிறேன்.  என் மரணத்திற்கு காரணமாக இருந்த அமுதேவ்விற்கு கருணை காட்டாமல் கடுமையான தண்டனை விதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவனுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனை அவன் போல் பெண்களை ஏய்க்க நினைப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்.

இப்படிக்கு…

நிறைவேறாத ஆசைகளுடன்..

மரணத்தை தழுவும்

விஷல்யா.

என்று தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த தற்கொலைக்கு அமுதேவ் தான் காரணம் என்றும் ஆணித்தரமாக கூறியிருந்தது அந்த வாக்குமூலக் கடிதம்.

.