Advertisement

Epilogue
கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தருணம். கௌஷி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
யார் வேணுமானாலும் எந்த நேரத்திலும் உள்ளே செல்லலாம் என்றுதானே தனியார் மருத்துவமனையை நாடுகிறோம். ஆனால் இந்த கொரோனாவால் அதிகம் கூட்டம் கூட முடியவில்லை.
இந்திராவை மட்டும் அழைத்துக் கொண்டு ஷக்தி மருத்துவமனைக்கு சென்றிருந்தான்.
உள்ளே செல்பவர்களுக்கு கூட PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கட்டளையாக இருக்க, ஷக்தியும், இந்திராவும் கூட பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.
நாடிருக்கும் நிலையில் வேலைக்கு செல்வது அபாயகரமானது. கொரோனாவை கைபிடித்து அழைத்து வருவது போன்றது என்று கதிர்வேலனை சென்னையிலுள்ள வேலையை விடச் சொல்லி இருந்தனர் மக்கள்.
அதேபோல் இருக்கும் தோட்டங்களை பராமரித்தாலே போதும் அதில் வரும் வருமானம் போதும் ஷக்தியையும், கௌஷியையும் மற்றும் வெற்றியையும் கூட வேலையை விடுமாறு கூறலாயினர் பெண்கள்.
ஊருக்கு வந்து விவசாயம் பார்ப்பது என்றால் கூட பரவாயில்லை. மேற்பார்வை பார்க்க நான்கு பேர் எதற்கு வெற்றியே பார்த்துக் கொள்ளட்டும் என்று ஷக்தியும் கௌஷியும் சென்னையிலையே தங்கிக் கொண்டனர். 
“டேய் நீயும், உன் பொண்டாட்டியும் தனியா இருக்க பிளான் பண்ணி வேலைய விடாம இருக்க, ஹனிமூன் போகாததற்கு இப்டியாடா பண்ணுவ?” வெற்றி கிளிண்டல் செய்ய
“அட ஆமா இல்ல” சிரித்தான் ஷக்தி.
உண்மையில் கௌஷிக்குத்தான் வேலையை விட விருப்பம் இருக்கவில்லை. அதை புரிந்துகொண்டுதான் ஷக்தி அவ்வாறு கூறி இருந்தான்.
கர்ப்பமாக இருந்த பொழுதும் கூட அவனேதான் அவளை பார்த்துக் கொண்டான். கொரோனா பீதியால், மூன்று மாதத்துக்கு ஒரு முறைதான் மருத்துவரிடம் அழைத்து சென்றான். அவள் நலமாக உள்ளதால் அச்சப்படாமல் இருந்தவன் கர்ப்பமாக இருப்பதால் தான் பெற்றுக் கொண்ட கொரோனா தடுப்பூசியை மட்டும் கொடுக்க அச்சப்பட்டான்.
வடக்கில் ஆக்சிஜன் பற்றாகுறையில் மக்கள் கொத்துக் கொத்தாக இறக்க, தடுப்பூசி பற்றாக்குறையும் மக்களை கதிகலங்க செய்திருக்க, முதலில் பெற்றவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள சொன்னால் “நாங்க வாழ்ந்து முடிச்சவங்க நீங்க போட்டுக்கோங்கடா…” என்றனர் அவர்கள்.
“நீங்க இல்லமா நாங்க மட்டும் இருந்து என்ன செய்ய? நீங்க நல்லா இருந்தாதான் நாங்க நிம்மதியா இருக்க முடியும்” ப்ரணவ்வும் வெற்றியும் வற்புறுத்தி அவர்களுக்கு தடுப்பூசி போட வைத்திருந்தனர்.
அடுத்து வரும் பொழுது தாங்கள் போட்டுக் கொள்வதாக கூற, ஷக்தி சென்னையில் போட்டிருந்தான்.
தனது செல்ல மகளை கையில் வைத்துக் கொண்டு செல்லம் கொஞ்சியவாறு அமர்ந்திருந்தாள் கௌஷி.
“அப்பா வந்துட்டாரு பாரு”
“உள்ள வராதுக்குள்ள உசுரே போகுது. குழந்தையை என் கிட்ட கொடுத்துட்டு நீ சாப்பிடு” என்று இந்திரா சொல்ல
“நீ முதல்ல கைய கழுவிட்டு வாம்மா” கத்தாத குறையாக கௌஷி சொல்ல, அதே சமயம் ஷக்தியும் “கைய கழுவிட்டு வாங்க அத்த” என்றான்.
இருவரின் சத்தத்திலும் இந்திரா மட்டுமல்ல குழந்தையும் கூட கொஞ்சம் துணுக்குறத்தான் செய்தது.
“இந்த மாஸ்க்க போட்டுக்கிட்டு மூச்சு விடக் கூட முடியல. இதுல ஒரு நாளைக்கு ஆயிரம் தடவ கைய வேற கழுவனும்” முணுமுணுப்போடு இந்திரா கைகழுவ செல்ல, ஷக்தி கொண்டு வைத்த பொருட்களை பத்திரமாக அடுக்கினான். 
“இன்னக்கி டிஸ்டராஜ் பண்ணுறதா சொன்னாங்களே, நான் போய் கேட்டுட்டு வரேன்”
வலி வரவும் நேற்று மாலைதான் கௌஷியை அனுமதித்திருந்தான். அனுமதிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் செல்வதற்குள் குழந்தை பிறந்திருக்க, இருபத்தி நான்கு மணித்தியாலம் எல்லாம் தேவையில்லை. தாயும் சேயும் நலமாக இருந்தால் மதியம் வீடு செல்லலாம் என்று மருத்துவர் கூறி இருந்தார். கொரோனா பீதியால் தான் இந்த முடிவை எடுத்திருந்தது மருத்துவமனை.
“நர்ஸ் வந்து நீங்க வந்தா வர சொல்லிட்டுதான் போனாங்க” கௌஷி சொன்னதும், மகளை கூட பாராமல் விரைந்தான் ஷக்தி.
மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கொரோனா மட்டுமல்ல, ஏதாவது ஒரு தொற்று தாயையும், சேயையும் தாக்கி விடுமோ என்ற அச்சம்தான்.
இந்த ஒன்றரை வருடத்தில் அபார்மண்ட்டிலும் சிலபேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, குணமாகி வந்தவர்களும் இருக்க, இரண்டு பேர் இறந்தும் இருந்தனர்.
இதை கேள்விபட்டதில் இருந்து இந்திரா “ஐயோ கௌஷி ஊருக்கு வந்துடு” என்று அலைபேசியில் மகளிடம் கரைய.
“அம்மா இங்க இருக்குறவங்களும் மனிசங்கதான். நம்ம பாதுகாப்பை நாம் மேற்கொண்டா எந்த தொற்றும் நம்மள அண்டாது” பிடிவாதமாகவே இருந்தாள்.
எல்லோரும் மின்தூக்கியை உபயோகிப்பதால் கண்டிப்பாக மின்தூக்கி ஒரு நாளைக்கு இரு முறையாவது சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும் என்று ஷக்தி கேட்டுக்கொள்ள அடுக்குமாடி தலைவரும் ஒத்துக்க கொண்டார்.
   
கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டது என்னவோ உண்மைதான் ஆனால் மக்கள் அதீத சுத்தத்தை கடைபிடிக்கவும் ஆரம்பித்திருந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டை விற்று தனியாக வீடு வாங்கலாமா? என்று கூட யோசித்தான். கௌஷிதான் தனியாக சென்றால் “அவசரத்துக்கு உதவிக்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள். கொரோனா பீதியில் உதவவும் அச்சப் படுவார்கள். இங்கு எல்லாரும் அறிந்தவர்கள். இங்கயே இருப்போம்” என்றாள்.
ஷக்திக்கும் மனைவி சொல்வது சரியென்று தோன்ற குழந்தை பிறந்து ஒரு வருடம்வரை இருப்போம். குழந்தை நடக்கும் வயது வந்ததும் வீடு மாறலாம். ஓடியாடி விளையாட இடம் வேண்டும்” என்றான்.
எத்தனை பேரின் எதிர்கால ஆசைகள் இவ்வாறெல்லாம் இருந்திருக்கும். கொடிய கொரோனா நோய் எல்லாவற்றையும் சிதைத்திருந்தது.
வீட்டுக்கு வந்த உடன் வீட்டிலிருந்த சாம்பவி குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
ஷக்தி “கௌஷி நீ போய் குளிச்சிட்டு வா. அத்த நீங்களும் போய் குளிச்சிட்டு வாங்க” என்றவனும் குளிக்க சென்றான்.
“இவன் ஒருத்தன்” சாம்பவி மகனை திட்ட ஆரம்பிக்க
“எல்லாம் நல்லதுக்கு தானே அத்த சொல்லுறாரு” என்றாள் கௌஷி.
“நீ அவனை ஒன்னும் சொல்ல விடாதே” மருமகளை திட்டினாலும் சாம்பவியின் முகத்தில் சந்தோசம் மட்டும்தான் இருந்தது.
“முன்ன எல்லாம் வெளில போகும் பொது குளிச்சி தயாராகி போறோம். இப்போ போயிட்டு வந்த உடனே குளிக்க வேண்டி இருக்கு” முணுமுணுத்தவாறே குளிக்க சென்றாள் இந்திரா.
“அத்த குழந்தையையும் துடைச்சிடுங்க. அப்படியே எல்லா துணியையும் வாஷ் பண்ண போட்டுடுங்க” கௌஷியும் குளிக்க செல்ல சரி என்றாள் சாம்பவி.
குளித்து விட்டு வந்த ஷக்தி நீராவி பிடிக்க ஏற்பாடு செய்து கௌஷியை அழைத்தான்.
அழகு நிலையங்களில் உபயோகிப்பது போன்ற சிறிய அளவிலான மின்சாரத்தால் வேலை செய்யக் கூடிய ஒரு நீராவி இயந்திரத்தை வாங்கி இருந்தான் ஷக்தி.
கௌஷியும் ஷக்தியும் வெளியே சென்று வருவதால் காலையும் மாலையும் நீராவி பிடிப்பது அவசியம். எரிவாயு அடுப்பில் இருவருக்கும் மாறிமாறி வைப்பது சிரமம், சில நேரம் மறந்தும் விடுவதனால் இதை வாங்கி இருக்க, மறக்காமல் சக்தியே காலையும், மாலையும் நியாபகப்படுத்தி நீராவி பிடிக்க வைத்து விடுவான்.
கௌஷி ஆவி பிடித்த உடன், இந்திராவை அழைத்தான். “அம்மா அடுத்தது நீ தான்” என்று சொல்ல
“டேய் நான் வீட்டுல தானேடா இருந்தேன். நான் எதுக்கு பிடிக்கணும்” மகனை முறைத்தாள் சாம்பவி.
“ஆ… எங்க கூட தொத்திக்கிட்டு வந்த கொரோனாகு தெரியுமா நீ வீட்டுலதான் இருக்கேன்னு. சும்மா வாம்மா”
“அதுக்கு தானேடா.. இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். கொரோனா வராது” சாம்பவி முறிக்கிக் கொள்ள
“இன்ஜெக்ஷன் எதுக்கு போடுறோம்னு நிறைய பேருக்கு தெரியாது. போட்டவங்க கொரோனா வராதுன்னு மாஸ்க் இல்லாம போறாங்க. அம்புட்டு அறிவு. கொரோனா வந்தா உச்ச கட்டமா நியூமோர்னியா வந்து நிறைய பேர் இறந்திருக்காங்க. இன்ஜெக்சன் போட்டா நியூமோர்னியா வராம தடுக்கும். உசுர காப்பாத்திடலாம். அவ்வளவுதான் கொரோனா வராதுன்னு சொல்லல. புரியுதா. மாஸ்க் போட்டுக்கிட்டுதான் போகணும். கைகழுவனும். இன்னும்பாதி பேருக்கு கூட இன்ஜெக்ஷன் போட்டு முடிக்கல. நாட்டுல இருக்குற எல்லாரும் இன்ஜெக்ஷன் போட்ட பிறகுதான் மாஸ்க் இல்லாம போக முடியும்னு சுகாதாரதுறை சொல்லுறாங்க. அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆகலாம். அதுக்கு மேலையும் ஆகலாம் “
“என்ன கருமமோ. எப்பதான் இந்த நோய் உலகத்தை விட்டு ஒழியுமோ?” திட்டியவாறே ஆவி பிடிக்கலானாள் சாம்பவி.
“கொரோனாவோட வாழ பழகிட்டோம்மா… அது நம்மள விட்டாலும், நம்ம சனங்க அத விட மாட்டாங்க” சிரித்தான் ஷக்தி.
அவன் அவ்வாறு சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்ததன.
நீராவி பிடித்த உடனே வெற்றியை வீடியோ காலில் அழைத்திருக்க அனைவரும் குழந்தையை பார்க்க ஆவலாக அமர்ந்திருப்பது தெரிந்தது. 
சந்தியாவின் மற்றும் வெற்றியின் ஆண் குழந்தைக்கு ஆறு மாதமே ஆனா நிலையில் “தங்கச்சி பாப்பா பாருடா…” என்று சந்தியா அலைபேசிவழியாக கூறிக் கொண்டிருக்க
“கௌஷி போல, இருக்காளா? ஷக்தி போல இருக்காளா? தெரிய மாட்டேங்குதே” கபிலர் கண்ணாடியை மாட்டியவாறு கூற,
“ஊருக்கு வராம இதுங்க ரெண்டும் எங்களை பாடு படுத்து” சந்திரா திட்ட,
“நீங்களும் வந்திருக்கணும் பெரியம்மா என்றாள் கௌஷி.
“ஆமா நானும் வந்தா உன் அக்காவையும், குழந்தையும் யார் பாத்துகிறதாம்”
“ஏன்டா ஷக்தி பேர் வைக்கிறது? மொட்டையடிக்கிறது எல்லாம் அங்கயே பண்ண போறியா என்ன?” வெற்றி கிண்டல் செய்ய
“உன் பையனுக்கு மொட்டை போடும் போதே என் பொண்ணுக்கும் போடலாம்னு இருக்கேன். அப்போ ஊருக்கு வந்துதானே ஆகணும்” என்றான் ஷக்தி.
“பிரணவ் நல்ல பேரா செலெக்ட் பண்ணி கொடுக்குறேன்னு சொன்னான். எங்க அவன்?” கௌஷி தம்பியை காணாது கேக்க,
“அத ஏன் கேக்குற? காலேஜா மூடிட்டாங்க, படிப்ப முடிக்காம என்ன ஆகுமோன்னு பய யோசிச்சிகிட்டே இருக்கான்” சந்திரா கவலையாக சொல்ல
“அத்த அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிடுதுங்க எல்லாம் சரியா போய்டும்” ஷக்தி சிரிக்காமல் சொல்ல வெற்றிக்கு சிரிப்பாக இருந்தது.
காலம்,காலமாக இதைத்தானே சொல்வார்கள்.
“கல்யாணமா? யாருக்கு கல்யாணம்” என்றவாறு வந்தான் பிரணவ்
“உனக்குதான்டா..” என்று அனைவரும் அவனை ஓட்ட ஆரம்பித்திருக்க, வீடியோ கால் ரணகளமாகிக் கொண்டிருந்தது.
இரவு உணவுக்கு பின் “பாப்பா தூங்கிட்டாளா?” ஷக்தி கௌஷியின் அருகில் வந்தமர
“அழுதா அம்மா பாத்துப்பாங்க, பசிச்சா அத்த தூக்கிட்டு வருவாங்க” சிரித்தாள் கௌஷி.
பக்கத்து அறையில் இந்திராவும், சாம்பாவியும் குழந்தையை வைத்திருக்க, கௌஷியும், ஷக்தியும் தங்களது அறையில் இருந்தனர்.
“இப்போதான் நிம்மதியா இருக்கு”
“எது? கதவை பூட்டிட்டு வந்ததா?” கௌஷி நக்கல் பண்ண
“உன்ன…” ஷக்தி அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.
எந்த பொருள் கொண்டு வந்தாலும், கழுவி சுத்தம் செய்து, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவனல்லவா. கௌஷி உண்டான சந்தோசம் ஒரு புறம் இருக்க, அச்சம் அதிகமாகத்தான் இருந்தது.
அதை அவன் வெளிகாட்டிக் கொள்ளாவிட்டாலும், அவன் செய்கைகள் ஒவ்வொன்றும் அவள் பாதுகாப்பை கருதியே இருந்தபடியால் கௌஷியால் அதை நன்றாக உணர முடிந்தது.
“தேங்க்ஸ் ஷக்தி?”
“எதுக்கு தேங்க்ஸ்” ஷக்தி புரியாது பார்த்தவாறே அவள் கையை பிடித்து முத்தம் வைத்திருந்தான்.
“எல்லாத்துக்கும்தான்”
“அப்படினா நான்தான் தேக்ஸ் சொல்லணும். என்ன ஏத்துக்கிட்டதுக்கும். என்ன மன்னிச்சத்துக்கும். என் கூட வாழுறதுக்கும்…” ஷக்தி அடுக்கிக் கொண்டே போக,
ஒரு விரல் கொண்டு அவன் வாயை அடைத்தவள் “உன் மேல லவ் இல்லாமத்தான் இவ்வளவு நாளா உன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கேனா லூசு”
“என்ன லவ்வா? இது எப்போல இருந்து?” சக்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் அவளை காதலிப்பதாக கூறிய பொழுதும் எந்தவிதமான எதிர்வினையையும் காட்டாதவள், அவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்த இந்த ஒரு வருடத்தில் கூட ஒருதடவையாவது காதலிப்பதாக கூறியதே இல்ல.
“நீ மட்டும்தான் என்ன சின்ன வயசுல இருந்து லவ் பண்ணுவியா? நானும் உன்ன சின்ன வயசுல இருந்து லவ் பண்ணுறேன்”
“பொய் சொல்லாத கௌஷி…” சக்தியின் வாய்தான் அவ்வாறே சொன்னதே ஒழிய அவள் என்னதான் சொல்லப் போகிறாள் என்று ஆவலாக காத்திருந்தான்.
“நீ என்னதான் துரத்தி அடிச்சாலும் உன்னையே சுத்தி வந்தேன். அந்த வயசுல அது லவ்ன்னு புரியல. கல்யாணம் பண்ணினப்போ கூட புரியல. ஆனா உன்ன டிவோர்ஸ் பண்ண மட்டும் யோசிக்கவே இல்ல. கோவத்துல டிவோர்ஸ் பண்ண போறேன்னு சொன்னாலும், என்னால அத பத்தி யோசிக்கவும் முடியல. நீ இல்லாத வாழ்க்கையை வாழவே பயமா இருந்துச்சு. அப்பொறம்தான் நான் உன்ன விரும்புறது எனக்கே புரிய ஆரம்பிச்சிருச்சு.
இப்படி ஒரு அம்மாகொண்ட காதலிக்கிறோமேன்னு எனக்கு என்மேலேயே கோவம் வந்தது. என்ன பண்ண? லவ் பண்ணி தொலைச்சிட்டேனே அதான் கொஞ்சமே கொஞ்சம் பழிவாங்கிட்டேன்” சிரித்தாள் கௌஷி.
“எது என்ன சமைக்க சொல்லி? வீட்டு வேலையெல்லாம் செய்ய சொன்னியே? அதுதான் பழிவாங்குறதா? நீ நம்ம பாப்பாவ சுமந்திருக்கும் போதும் அதெல்லாம் நான்தானே பண்ணேன். பொண்டாட்டிக்கு சேவகம் செய்றதெல்லாம் வரம்” சிரித்தான் ஷக்தி.
“குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல இல்ல”
“இல்ல” அன்றும் காதலாகத்தான் செய்தான். இன்று காதலோடு, கடமையும் சேர்ந்திருந்தது.
“பாப்பா உண்டானதும்தான் நீ கும்முனு ஆகிட்ட” ஷக்தி சிரிக்க
“நானா?” கற்பகாலத்திலும் கௌஷி குண்டாகவில்லை “என்ன சொல்கிறான் இவன்” என்று பார்க்க
“உன் கன்னம் ரெண்டும்” என்றவன் காதில் ரகசியமாக ஏதோ சொல்ல
“சீ…” என்று அவனை அடிக்க ஆரம்பித்தாள் கௌஷி.
இருவரும் சேர்ந்து சிரிக்க, ஷக்தி காதலாக கௌஷியை அணைத்துக் கொண்டான் ஷக்தி.
 அவர்களுக்கு தொல்லை செய்யாமல் நாம் விடைபெறுவோமாக
நன்றி
BY MILA

Advertisement