Advertisement

அத்தியாயம் 9
கௌஷி தனது ஸ்கூட்டியில் முன் நின்று முழித்துக் கொண்டிருந்தாள்.
ஸ்கூட்டியில் முன் டயர்  பஞ்சராகி இருக்க, வண்டியை எப்படி எடுப்பது? என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை.
“காலையில் வந்து நிறுத்தும் பொழுது கூட நன்றாகத்தானே இருந்தது. அட தினமும் நிறுத்தும் இடம் தானே. இன்னைக்கி மட்டும் எப்படி இப்படி ஆச்சு? எல்லாம் அவன் முகத்துல முழிச்ச ராசிதான்” தன் கணவனானவை மனதுக்குள் வசைபாட ஆரம்பிக்க,
“ஐயோ இப்போ எப்படி வீட்டுக்கு போறது? என் மாமியார்காரி வேற லேட்டா போனா வாய்க்கு வந்தபடி பேசுவாளே. கௌஷி நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியல நான் போறேன் டி…” கிரிஜா கௌஷியின் பதிலையும் எதிர்பார்க்காமல் கிளம்பி இருந்தாள்.
கௌஷிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இதற்கு முன் அவள் பஞ்சர் போடாமல் இல்லை. இப்படி ஒரு சூழ்நிலைதான் அவளுக்கு வந்ததில்லை. வேலைக்கு சேர்ந்த பொழுதே இப்படி எல்லாம் நேரக் கூடும் என்று வீடு செல்லும் வழி எங்கும் எங்கெல்லாம் பஞ்சர் கடைகள் இருக்கு என்று பார்த்து வைத்திருக்கின்றாள். அடுத்த தெருவில்தான் பஞ்சர் கடை இருக்கிறது வண்டியை தள்ளிக்கொண்டு சென்று பஞ்சர் போடுவது ஒன்றும் அவளுக்கு பெரிய விஷயமும் இல்ல. இப்படி ஒரு சூழ்நிலையிலும் கூடவா ஒருத்திக்கு உதவ வேண்டும் என்று கிரிஜாவுக்கு தோன்றவில்லை. எவ்வளவு சுயநலம்.
பஞ்சர் கடையில் ஆண்கள் இருப்பார்கள். இவள் எவ்வளவு நிமிடங்கள் இருக்க நேரிடுமோ? அந்திசாயும் வேளை வேறு. தனியாக சென்றால் வேண்டுமென்றே நேரத்தை இழுத்தடிக்கவும் கூடும். இருவராக சென்றால் வம்பிழுக்க மாட்டார்கள். அரைமணித்தியாலம் லேட் ஆனால் குடிமுழுகிப் போகாதே? கூடவே வருபவளுக்கு இந்த உதவியை கூடவா செய்ய மனம் வராது?
அன்னைக்கு அழைத்து ஏன் வர லேட் என்று சொல்லி விடலாம். கிரிஜாவோடு வரும் கௌஷி மட்டும் லேட்டாக வருவதை பார்க்கும் அடுக்குமாடி அவல் வாய்கள் சும்மா இருக்குமா? கண்டபடி கதைகளை இஷ்டத்துக்கு பறக்க விட்டிடும்.
ஒரு பெண் கணவனை பிரிந்து வாழ்ந்தால், அன்றாடம் அவள் வாழ்க்கையில் செய்யும் வேளைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன மாதிரியான பிரச்சினைகளையும், பேச்சுக்களையும் சந்திக்கவும், கேட்கவும் நேரிடும் என்று கௌஷி நன்கு அனுபவப்பட்டுதான் இருந்தாள். அதை நினைத்துதான் அவள் நெஞ்சம் விம்மி மூக்கு விடைத்தது.
“என்ன மேடம் என்ன பிரச்சினை?” ஆபத்பாண்டவனாக வந்து நின்றான் சிவம்.
தொண்டை அடைத்ததில் கௌஷிக்கு பதில் சொல்லவும் முடியவில்லை. கண்சிமிட்டி வரும் கண்ணீரை உள்ளித்துக் கொண்டவள் டயரை காட்ட
“இது எப்படி ஆகிருச்சு” குனிந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்தான் ஷக்தி.
“என்னாச்சு கௌஷி? என்ன சிவம்?” என்றவனும் சிவம் பார்ப்பதை பார்த்து “பஞ்சாரா?” என்றவாறு கௌஷியை ஏறிட்டான். அந்த பஞ்சருக்கு காரணமானவன்
அவ்வளவு நேரம் மழையை சுமந்த மேகம் போல் இருந்தவள் அவன் கண்ட பின்தான் தெளிந்தாள்.
“எல்லாம் இவனால. இவன் முகத்துல முழிச்சதுல இருந்துதான் இப்படி எல்லாம் நடக்குது” அவனை முறைத்தவளுக்கு புரியவில்லை. அவனை கண்டபின்தான் அவளுக்கு தைரியமே வந்ததென்று. 
“மேடம் முன்னாடி டயர் பஞ்சர் பின்னாடி டயர்ல காத்து போகுது பாருங்க. வண்டிய தள்ளிக்கிட்டு போறது சிரமம். ஒன்னு பண்ணுங்க நீங்க சார் கூட போங்க, நான் வண்டிய பஞ்சர் கடைல விடுறேன். ரெண்டு நாள்ல எடுத்துக்கலாம்” என்றான் சிவம்.
“என்னது ரெண்டு நாள்லயா?” கௌஷி பதற
“ஆமாம் மேடம். இப்போ கொடுத்தாலும் இன்னக்கி வேல பார்க்க மாட்டான். நாளைக்குத்தான் பார்க்க ஆரம்பிப்பான். நாளான்னைக்கி மதியத்து பிறகுதான் வண்டிய கொடுப்பான்” சிவம் தெளிவாக சொன்னான். சொல்ல சொன்னதே ஷக்திதான் என்றபோது அவனும் என்னதான் செய்வான்.
“அப்போ நான் நாளைக்கு எப்படி ஆபீஸ் வர்ரதாம்” அதுதான் பெரிய பிரச்சினை போல் கௌஷி பேச
“ஏன் பஸ்ஸுல வாயேன். சேர் ஆட்டோல வாயேன்” என்று கிண்டல் செய்ய தூண்டிய சக்தியின் மைண்ட் வாயிசை இழுத்து பிடித்தவன் “அத நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம். முதல்ல இன்னக்கி வீட்டுக்கு போய் சேரலாம் வா அத்த காத்துகிட்டு இருப்பாங்க” ஷக்தி அழைக்கவும்தான் கௌஷி நிதானத்துக்கே வந்தாள்.
“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் நான் பஸ்ல தனியா போயிடுறேன். என்ன விட்டுட்டு நீங்க உங்க பிரெண்டு ரூம்க்கு போக லேட் ஆகும்”
ஷக்தி இப்பொழுதுதான் ஊரிலிருந்தே வந்திருக்கின்றன. அவனிடம் வண்டி இருக்காது. அவனும் அவளோடு பஸ்ஸில் வந்து அவளை விட்டு விட்டு, மீண்டும் அவன் எதிர் திசையில் பயணம் செய்தால் நேரம் எடுக்கும் என்று கௌஷி பேச
“பஸ்ஸுல எல்லாம் எதுக்கு போகணும் என் கூட வண்டில வா” என்று அழைத்தான் ஷக்தி.
“வண்டிலயா? உங்க கிட்ட ஏது வண்டி?” சந்தேகமாக கௌஷி நோக்க
“அட பிரெண்டு வண்டிமா.. நான் வரும் போது அவன் தூங்கிகிட்டு இருந்தான் நான் அவன் வண்டிய ஆட்டைய போட்டுட்டேன். பயபுள்ள திட்ட போன் பண்ணாலும் போன எடுக்கலையே. சண்டே போய் முதல்ல ஒரு வண்டி வாங்கணும். சொல்லு என்ன வண்டி வாங்கலாம்”
“அடப்பாவி ஒருத்தன் கொஞ்சம் நேரம் தூங்கினது குத்தமா அவன் வண்டிய தூக்கிட்டு வந்திருக்க”  கௌஷி கணவனை முறைக்கும் பொழுதே அவளிடமே என்ன வண்டி வாங்கலாம் என்று கேட்டது சற்று ஆச்சரியம்தான்.
ஊரில் அவனுக்கு வண்டி இருந்தது கௌஷிக்கு தெரியும். அது என்னவாயிற்று தெரியாது. கேட்கவும் ஒரு மாதிரி இருக்க அமைதியாக அவன் வண்டி நிறுத்தி இருக்கும் இடத்துக்கு அவனோடு நடந்தாள்.
ஷக்தி அந்த இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு வந்து அவள் புறம் நிறுத்தும்வரை கௌஷி பொறுமையாக காத்திருந்தாள்.
ஷக்தி “ஏறு” என்றெல்லாம் சொல்லவில்லை. கௌஷியே அமர்ந்துகொண்டாள்.
ஷக்தி வண்டியை இயக்க முன் கௌஷியை பார்த்தான். அவன் மேல் உரசக் கூடாதென்று மிகவும் கவனமாக அவளது கைப்பையை அவனுக்கும், அவளுக்கும் நடுவில் வைத்து அமர்ந்திருந்தாள்.
“விளங்கும்” முணுமுணுத்தவன் “கௌஷி வேகமா போனா விழுந்துடுவ எதுக்கும் நீ என்னையே பிடிச்சிக்க, வண்டி ஓட்டுற உனக்கு நான் சொல்லனுமா என்ன?” என்றவன் கூலரை அணிந்து கொண்டு கௌஷி அவன் மீது கைவைக்கும்வரை வண்டியை எடுக்காது காத்திருக்க, பல்லைக் கடித்த கௌஷியோ அவன் தோள் மீது கையை வைத்ததும்தான் தாமதம் ஷக்தி வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.
கண்ணாடி வழியாக அவளை பார்த்தவாறே இவன் வண்டி ஓட்ட அது தெரியாத கௌஷி அவனை வசைபாடியவாறு வர, சக்தியின் முகத்தில் புன்னகை.
வண்டி சடன் பிரேக் போடாத குறையாக நிற்க “என்ன இங்க நிறுத்துட்டீங்க?” கௌஷி புரியாது கேட்க
“பார்த்தா தெரியல ஐஸ் கிரீம் பாலர். உள்ள போ… வண்டிய நிறுத்திட்டு வரேன்”
“இப்போ நான் ஐஸ் கிரீம் வாங்கித் தர சொல்லி கேட்டேனா? எனக்கு வீட்டுக்கு போக லேட் ஆகாது” கௌஷி முறைக்க,
“என்ன பண்ணாலும் கேட்ட போடுறாளே” மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் “உனக்கு வாங்கித் தரதா நான் சொன்னேனா? எனக்கு சாப்பிடணும் போல இருக்கு. நான் சாப்பிட்டு முடிக்கும்வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணு”  அவளோடு மல்லுக்கட்ட முடியாது என்று வண்டியை விட சென்றான் ஷக்தி.
கொதிநிலைக்கு சென்ற கௌஷியோ உள்ளே சென்று தனக்கு பிடித்தமான ஐஸ் கிரீமை ஆடர் கொடுத்து விட்டு அமர்ந்து விட்டாள்.
“ஏன் எனக்கு வாயில்லையா? கைல காசுதான் இல்லையா? நானும் சாப்பிடுவேன். அவன் வாங்கி கொடுத்தாதான் சாப்பிடணுமா என்ன?” பொறுமியவாறே அமர்ந்திருக்க உள்ளே வந்த ஷக்தி அவளருகில் அமர்ந்து பேரரை அழைக்க, அவளுக்கான ஐஸ் கிரீம் வந்து சேர்ந்தது.
“அடிப்பாவி ஒரு பேச்சுக்கு சொன்னா தனியா வேற சாப்பிடுவியா?” அவளை முறைத்தவாறே “எனக்கும் இதையே கொண்டுவாங்க” பேரரை அனுப்பியவன் அவளையே பார்த்திருந்தான்.
“என்ன?” கணவனின் பார்வையை தாங்க முடியாமல் சற்று முறைப்போடு கேட்டாள் கௌஷி.
“உண்மையிலயே நீ புடவைல்லை செம்ம அழகா இருக்க கௌஷி. என்ன ரொம்ப ஒல்லியா இருக்க, கொஞ்சம் சபியா இருந்தா இன்னும் அழகா இருப்ப” ஷக்தி அவன் பாட்டுக்கு பேச கௌஷிக்கு கண்களின் ஓரம் கண்ணீர் முணுக்கென்று எட்டிப் பார்த்தது.
பன்னிரண்டு, பதிமூன்று வயதுவரை இவன் சொல்வது போல் சபியாக இருந்தவள்தான் கௌஷி. இவனே இவளை பூசணிக்கா, குண்டு தக்காளி, ஹம்டி டம்டி. என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைத்தது மட்டுமல்லாது. வாயில் காற்றை நிரப்பி கையால் குண்டு என்று வேறு சைகை செய்து வெறுப்பேற்றி அழ வைப்பான். அவனே இன்று இப்படி பேசினால் கண்களில் கண்ணீர் வராமல் இருக்குமா என்ன?
நிதானித்த கௌஷியோ “நான் எப்படி இருந்தா அழகா இருப்பேன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். வேற யாரும் அத பத்தி கவலை பட வேண்டிய அவசியமில்லை”
“நான் வேற யாரோ இல்ல கௌஷி உன் புருஷன் அத மறந்துடாத” ஷக்தி கொஞ்சம் சூடாக,
“நீ சொல்லும் பொழுது ஒல்லியாகவும், நீ சொல்லும் பொழுது குண்டாகனும் என் உடம்பு ஒன்னும் மெஷின் இல்ல” சக்தியின் ஐஸ் கிரீம் வரவே “சீக்கிரம் சாப்பிடு. அம்மா காத்துகிட்டு இருப்பாங்க” கௌஷியும் சூடாகவே பதில் சொன்னாள்.
“அத்தைகிட்ட சொல்லிட்டேன். நாங்க வர லேட்டாகும்னு” அவளின் பதிலில் ஷக்தி நிதானித்தான்.
“எப்போ சொன்ன?” சட்டென்று அவனை பார்த்தாள் கௌஷி.
 சுதாரித்தவன் “ஆ… அது வண்டிய விடப்போனப்போ போன் பண்ணி சொன்னேன்” என்றான்.
“ஓஹ்..” என்றவள் அதற்கு மேல் அவனோடு பேச பிடிக்காமல் வேடிக்கை பார்த்தவாறு சாப்பிட ஆரம்பிக்க, சக்திக்கு அவள் பேசியவைக்கள்தான் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அவன் கேலி செய்ததால்தான் முயன்று உடம்பை குறைத்தாளா? அவன் பேச்சு அவளை அவ்வளவு பாதித்து இருக்கிறதா? நீ என்ன சொன்னால் என்ன நான் இப்படித்தான் இருப்பேன் என்று இருக்காமல் மெனக்கிட்டு உடம்பை குறைத்திருக்கின்றாள் என்றால் அதை எந்தவகையில் சேர்ப்பது? கோபத்தில் செய்ததாக சேர்பதா? மனதில் இருந்த அவளறியாத காதலால் செய்ததாக சேர்பதா?
“கல்யாணம் அன்னைக்கும் கூட அவ ஒல்லியாதான் இருந்தா… அப்போ அவ உன் கண்ணுக்கு தெரியலையா?” சக்தியின் மனசாட்ச்சி தூற்ற,
“மொதமொத புடவைல பார்த்ததுல பெருசா வித்தியாசம் தெரியல. அது மட்டுமா? அப்போ என் மனசுல ஓவியா இருந்தா” தனக்குள் பேசிக்கொண்டிருந்தவனை கௌஷி பலமுறை அழைக்கவும்தான் திரும்பிப் பார்த்தான்.
“போலாம்” கைக்கடிகாரத்தை பார்த்தவாறே கூற, சக்தியும் அமைதியாக எழுந்துகொண்டான்.
சாப்பிட்ட ஐஸ் கிரீமுக்கு கௌஷி பணம் ஒன்றும் கொடுக்கவில்லை. சக்திதான் கொடுத்தான். “நான் சாப்பிட்டதற்கு நான் கொடுப்பேன்” அவள் சண்டை போடுவாளோ என்று ஷக்தி எதிர்பார்க்க அவளோ அவனை கண்டுகொள்ளாது வண்டி நிறுத்தும் இடத்துக்கு செல்ல, அவளை புரிந்துகொள்ள முடியாமல் புருவம் சுருக்கினான் ஷக்தி.
வண்டி ஓட்டியவாறு பேசிக்கொண்டுவரும் பழக்கம் சக்திக்கு இல்ல. கௌஷிக்கும் இல்லை என்றாலும் கிரிஜாவின் தொணதொணப்பு காதில் பாதி விழுந்தும் விழாமலும்தான் வருவாள். இன்று அவள் பின்னாடி அமர்ந்து வேடிக்கை பார்த்தவாறு வர, வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. 
“சின்ன வயசுல எப்படி எல்லாம் பேசுவா? என்ன இவ இம்புட்டு அமைதியா இருக்கா? கொஞ்சம் கூட நல்லா இல்ல” மனைவியையே ஒப்புநோக்கியவாறு அடுக்குமாடி குடியிருப்புக்குள் வண்டியை விட்டிருந்தான் ஷக்தி.
மாலை நேரம் என்பதால் அந்த அடுக்கு மாடி சிறு விளையாட்டு மைதானம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் ஊஞ்சல் ஆடவும், வெவ்வேறு விளையாட்டுகளுக்கு தங்களை ஈடு படுத்திக்கொள்ள மும்முரம் காட்டியதோடு, வரிசையிலும் நின்றிருந்தனர்.
வயதானவர்கள் சிலர் நடைபயின்றுக்கொண்டிருக்க, சிலர் கைகுழந்தைகளோடு தள்ளுவண்டிகளை  தள்ளிக்கொண்டும், சில அங்கும் இங்கும் அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டும் இருந்தனர்.
தினமும் காணும் காட்ச்சிதான். ஆனால் இன்று கௌஷிக்கு கணவனோடு வந்ததால் எல்லாம் புதிதாக காண்பது போல் ஒரு உத்வேகம் மனதில் தோன்ற சிரித்தமுகமாகவே வண்டியிலிருந்து இறங்கினாள்.
“யாரு கௌசல்யா இவரு?” என்றவாறு ஆறாம் மாடியில் குடியிருக்கும் பருவதம் அத்த வந்து நிற்க,
“பார்க்க காலரா, அழகா இருக்காரு, புதுசா வேலைல சேர்த்திருக்காரா?” வம்பு வளர்க்கவென்றே ஆரம்பித்திருந்தாள் கீழ் மாடியில் இருக்கும் புஷ்பா.
“ஐயோ ஆன்டீஸ் நான் கௌஷி ஹஸ்பண்ட் என்ன தெரியலையா? அது சரி உங்களுக்கு என்ன எப்படி தெரிய வாய்ப்பிருக்கு. நான் தான் இங்க வந்ததே இல்லையே” அவர்களுக்கு பதில் சொல்லிய ஷக்தி “கௌஷி வா போகலாம் அத்த காத்துகிட்டு இருப்பாங்க” கௌஷியை அவர்களிடம் பேச விடாது அழைத்து சென்றான்.
“என்னடி இது புருஷன்னு சொல்லுறான். கிரிஜா வந்து ரொம்ப நேரமாச்சு இவ இன்னும் வரலேயே இன்னைக்கே பேச ஏதாச்சும் கிடைக்கும்னு பார்த்தா இப்படி ஆகிருச்சு” பருவதம் அங்கலாய்க்க,
“பிரிஞ்சிருக்காங்கனு தானே கேள்விப்பட்டோம். அப்படி இல்ல போலயே” இன்னும் என்னெல்லாம் பேசினார்களோ, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டவாறே மனைவியோடு நடந்தான் ஷக்தி.
தான் செய்த தவறுக்கு இவள் எவ்வாறெல்லாம், யார் யாரிடமோ என்ன மாதிரியான பேச்செல்லாம் கேட்க நேர்ந்திருக்கிறது என்று எண்ணுகையில் சக்திக்கு தன்மீதே கோபம் கோபமாக வந்தது.
கௌஷியை பார்த்தவனுக்கு அவள் முகத்திலிருந்த வாடா புன்னகை உற்ச்சாகத்தைக் கொடுக்க, அவன் முகத்திலும் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
அந்த மாதிரியான பெண்கள் நிற்க வைத்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி மாளாது. மாட்டினோம்டா என்று கௌஷி நினைக்க, நல்லவேளை கணவன் காப்பாற்றி விட்டான். இப்படித்தான் கௌஷியின் என்ன ஓட்டம் இருந்தது.
இருவரும் மின்தூக்கியில் ஏறிய பின்தான் “இவன் எதுக்கு இப்போ வீட்டுக்கு வாரான்?” கணவனை பார்த்தவள் “உங்களுக்கு ரூமுக்கு போக லேட் ஆகலையா?
“இல்லையே” அசால்ட்டாக சொன்னவன் மின்தூக்கி திறந்துகொண்டதும் மொத ஆளாக சென்று கௌஷியின் வீட்டு மணியை அழுத்தினான்.
இந்திரா வந்து கதவை திறந்தது மட்டுமல்லாது “வாங்க மாப்புள, உள்ள வாங்க… உள்ள வாங்க…” பலமான உபசரிப்போடு வரவேற்க, “என்ன டா நடக்குது இங்க?” என்ற பார்வைதான் கௌஷியிடம்.
“வந்த அன்னைக்கே விருந்து, வீட்டுக்கெல்லாம் வாரான். இப்படியே போனா இங்கயே தங்கிடுவான் போலயே. இந்த விஷயம் மட்டும் இவன் அம்மாக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவா?” மனதின் ஓரம் மாப்பிள்ளை கவனிப்பை பற்றி கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், சாம்பவி அறிந்துகொண்டால் வயிறெரிவாள் என்று நினைக்கும் பொழுது சிரிப்பாகவும் இருந்தது.
இந்திரா சக்திக்கு வடையோடு டீயும் கொடுத்தவாறே “மாப்புள ராவைக்கு சாப்பிட்டே போகலாம்” என்றாள். 
“நான் ரூம் போய் குளிச்சிட்டு துணி மாத்திட்டு வந்திடுறேன் அத்த” என்றான் இவனும்.
அங்கே கௌஷி என்றொருத்தி இருப்பதை இருவருமே கண்டுகொள்ளவில்லை. அவளும் கோபமாக தனது அறைக்குள் சென்று மறைந்தாள்.
கதிர்வேலன் வரவும் அவரோடு முக்கியமாக பேசிய ஷக்தி கிளம்பி வெளியே சென்றான். அவன் சென்றது அந்த குடியிருப்பின் தலைவரை சந்திக்கத்தான்.
இன்று மட்டுமல்ல தினமும் கௌஷியை அழைத்து செல்லவும், அழைத்து வரவும் எண்ணி இருந்தான் ஷக்தி. ஒருநாள் வந்ததற்கே பேசுபவர்கள். அவன் யாரென்று தெரியாவிட்டால், கண்டபடி பேசி கௌஷியை மட்டுமல்லாது கதிர்வேலன் உட்பட இந்த்ராவையும் காயப்படுத்தி விடுவார்கள் என்று புரியவே சட்டென்று யோசித்து தலைவரை சந்தித்து அறிமுகப்படலத்தை மேற்கொண்டான்.
காரியாலயத்தில் சொன்ன அதே கதைதான். “ஜாதக தோஷம் அதனால் பிரிந்து இருக்கின்றோம். இப்போ மாமாவின் இறப்பால் பிரிந்திருக்கின்றோம் இன்னும் ஆறு மாதத்தில் சேர்ந்து வாழப்போகின்றோம். என்ன உதவி என்றாலும் கேளுங்க” எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசி விட்டு வர கதிர்வேலனுக்கும் மருமகனை நினைத்து கொஞ்சம் பெருமைதான்.
“சரி மாமா நா இப்படியே கிளம்புறேன்” ஷக்தி விடைபெற
“மாப்புள அத்த உங்களுக்காக சமைக்கிறா…”
“நான் ரூம் போய் குளிச்சிட்டு துணி மாத்திட்டு வந்துடுறேன்”
“ஆபீஸ் வரும் போது எக்ஸ்ட்ரா ஒரு துணி கொண்டு வந்திருந்தா இங்கயே குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு போய் இருக்கலாம்” மின்தூக்கியிலிருந்து வெளிப்பட்ட கௌஷி அவர்களின் பேச்சு காதில் விழவும் எரிச்சலாக நினைத்தாள்.
மின்தூக்கி திறக்கும் சத்தம் கேட்டு ஷக்தி எதேச்சையாக ஷக்தி அப்பக்கம் திரும்ப அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. பேண்ட் டீஷர்ட்டில் போனிடைல் கொண்டையில் கௌஷி நின்றிருந்தாள்.
ஷக்தி சென்றிருப்பான் என்று நினைத்து வழமையாக அணியும் துணியை போட்டுகொண்டு வந்தவளுக்கு இவர்களின் பேச்சு எரிச்சலை கொடுக்க, சக்தியின் பார்வை மாற்றம் மேலும் எரிச்சலைக் கொடுத்தது.
“என்ன இவன்? சென்னை பொண்ணுகளை பார்த்ததே இல்லையா? பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாக்குற மாதிரி பாக்குறான்” அவனை நன்றாக முறைத்தவள் “அப்பா அம்மா உங்கள நெய் வாங்கி வரவாம். காசு இருக்கா?” கணவனின் புறம் திரும்பாமலையே கேட்க
“ஆ.. இருக்குமா..” என்ற கதிர்வேலனும் “மாப்புள நான் கடைக்கு போயிட்டு வரேன். நீங்களும் ரூம்க்கு போயிட்டு வாங்க”
“இனி எங்க போக?” கௌஷியை பார்த்தவாறே பதில் சொன்னான் ஷக்தி.
“என்ன மாப்புள சொன்னீங்க?”
“இனிமேல்தான் போகணும்னு சொன்னேன் மாமா ” என்றான் சமாளிப்பாக.
“சரி வாங்க போலாம்” என்று கதிர்வேலன் அழைக்க ஷக்தி எவ்வாறு மறுப்பு தெரிவிப்பது என்று யோசிக்கையில் அவரது அலைபேசி அடிக்கவே இந்திராதான் அழைப்பதாக காட்டியது.
“இன்னும் எதையாவது கொண்டு வர சொல்லித்தான் கூப்டுறா. ஒரே நேரத்துல சொல்லுறாளா பாரு கேட்டா மறந்துட்டேன்னு சொல்ல வேண்டியது” மனைவியை கடிந்தவாறே அலைபேசியை இயக்கி காதில் வைத்தவர் பேச ஆரம்பித்திருக்க அவரிடமிருந்து நழுவிய ஷக்தி கௌஷியை பார்க்க அவளோ மின்தூக்கியில் ஏறி இருந்தாள்.
“சே வட போச்சே” என்று பீல் பண்ணியவாறே அறைக்கு வந்தவனை தோழன் பிடித்துக்கொள்ள அவனை கண்டுகொள்ளாது குளித்து முடித்த அடுத்த நொடி கௌஷியின் வீட்டில் இருந்தான் ஷக்தி.
இரவு விருந்தோம்பல் கூட தடல்புடலாக இருந்தது. கௌஷியை பேண்ட் டீஷர்ட்டில் பார்த்து புகழலாம் என்று வந்தவனுக்கு அவள் சுடிதாரில் இருந்தது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.
இந்திராதான் மகளை அதட்டி துணி மாற்ற வைத்திருந்தாள் என்பது ஷக்தி அறியாத கதை.
அது மட்டுமா மகளை அதட்டி மாப்பிளைக்கு பரிமாறு என்று அவளை வேலை வாங்கியது வேறு கௌஷிக்கு எரிச்சலை பன்மடங்காக பெறுக வைத்திருக்க, தனியாக பேசட்டும் என்று இந்திராவும் கதிர்வேலனும் தங்களது அறைக்குள் ஒதுங்கிக்கொள்ள இவர்கள் வாசலில் தனித்து வேறு விடப்பட்டனர்.
மணி இரவு எட்டு. வழமையாக கதிர்வேலன் டீவி பார்ப்பார். இவனால் அப்பாவின் சுதந்திரம் போச்சு. கௌஷி சக்தியை முறைத்தவாறே அமர்ந்திருந்தாள்.
“சாப்பாடு செம்மயா இருந்துச்சு கௌஷி. அத்த கைப்பக்குவம் இன்னும் மாறாம அப்படியே இருக்கு. நீயும் அத்த மாதிரியே சமைக்கிரியா என்ன?” அவள் அமைதியாக இருப்பதனாலையே பேச்சை ஆரம்பித்தான் ஷக்தி.
அதுவே அவனுக்கு வினையாக “ஆமா ஓசி சோறுன்னா ருசி அதிகம்தான்” அவன் காதில் விழவென்றே முணுமுத்தவள் “உன் அம்மாக்கு தெரியுமா? நீ இங்க வந்து கொட்டிக்கிட்டது. நெஞ்சு வெடிச்சு ஏடா கூடமா ஏதாவது ஆகிட போகுது”
கௌஷியின் வார்த்தைகள் தடித்துதான் வந்தது. அது அவளுக்கும் தெரியும். வேறு வழியில்லை. சாம்பவி அறியாமல் ஷக்தி இங்கு வருவது பிரளயத்தையே உண்டு பண்ணும். அன்னைக்கு பயந்தவனாக இருந்தால் இனிமேல் வராமல் இருப்பான் என்றுதான் இவ்வாறு பேசினாள்.
அவளின் பேச்சு சக்திக்கு கோபத்தை ஏற்றி இருக்க, “என் அம்மா உனக்கு அத்த கௌஷி பார்த்து பேசு”
சாம்பவி கௌஷி குடும்பத்தை பேசாத பேச்சுக்கள் இல்லை. இருந்தாலும் அன்னை என்பவளை யார் பேசினாலும் மகனாக கோபம் வரத்தான் செய்யும் அதே நிலையில்தான் இருந்தான் ஷக்தி.
“என் அம்மாவையும், அப்பாவையும் பேசினப்போ… எங்க இருந்தியாம்? என்னமோ அத்த, மாமா என்று பாச மழைய கொட்டுற? என்னைக்காவது எங்க அப்பாகிட்ட மாமான்னு உரிமையா பேசி இருக்கியா? அம்மா கிட்ட அத்தனு பாசமா பேசி இருக்கியா? உங்க அம்மா மாதிரியே முறைச்சிகிட்டே திரிஞ்சவன்தானே நீ. வெக்கமே இல்லாம அவங்க கையாள சாப்புடுற?”
கௌஷி இன்னும் என்ன பேசி இருப்பாளோ… “போதும் கௌஷி…” என்ற ஷக்தி எழுந்து சென்றே விட்டான்.
ஷக்தி இங்கு வருவதை, அறிந்து கொண்டால் பிரச்சினை வரும், சொன்னால் ஷக்தி புரிந்துகொள்ள மாட்டான் என்றுதான் இவ்வாறு பேச ஆரம்பித்தாள். அன்னைக்காக அவன் கோபப்பட்டது கௌஷியின் கோபத்தை தூண்டி இருந்தது.
அவளது பெற்றோர்கள் சாம்பவியிடம் என்னவெல்லாம் மனதளவில் அவதிப்பட்டிருப்பார்கள். பொறுக்க முடியாமல்தான் பொங்கி விட்டாள். அதை அவளும் எதிர்பார்க்கவில்லை. என்னதான் நடந்து முடிந்ததை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் இப்படி ஒவ்வொரு பேச்சிலும், ஏதாவது ஒரு நிகழ்வால் தங்களுக்குள் வந்துகொண்டே இருந்தால் ஷக்தியுடனான வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? செல்லும் அவனை தடுக்கக் கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள் கௌஷி.

Advertisement