Advertisement

அத்தியாயம் 8
விடிய விடிய தூக்கத்தை தொலைத்து நன்கு யோசித்த கௌஷி இறுதியில் எடுத்த முடிவு சக்தியை எந்த கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்வது என்றுதான்.
சக்தியிடம் கேட்க ஏராளம் கேள்விகள் மனதில் முட்டி மோதினாலும் கண்டிப்பாக அவற்றுக்கு அவன் பதில் சொல்லப்போவதில்லை என்ற எண்ணம் கௌஷியின் மனதில் உதிக்க, “கேட்டு பிரயோஜனம் இல்லை. அப்படியே கேட்டாலும் எல்லா கேள்விக்கும் பத்தி சொல்ல மாட்டான். சொன்னாலும் உண்மையை சொல்வான் என்று என்ன நிச்சயம்? அதற்கு எந்த கேள்வியும் கேற்காமல் இப்படியே அவனை ஏற்றுக்கொள்வது மேல்” என்று எண்ணலானாள்.
சின்ன வயதில் நடந்துகொண்டவைகளை வைத்து சண்டை பிடிப்பது சிறுபிள்ளைத்தனம். அதை பிடித்துக் தொங்கிக் கொண்டிருந்தால் சந்தோசமாக வாழ்க்கையை வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
சாம்பவிக்கு இருக்கும் இந்திராவின் மீதான கோபம், அதே கோபம்தான் சக்திக்கும் தன் மீதும் இருந்திருக்கும் என்று எண்ணினாளே ஒழிய ஓவியா என்ற ஒருத்தியை பற்றி கனவிலும் நினைத்து பார்த்திராத கௌஷி, சக்திக்கு தன் மீது இருந்த வெறுப்பு போய் விட்டது சேர்ந்து வாழ நினைக்கும் பொழுது தான் மட்டும் பழசை நினைத்து அவனை கஷ்டப்படுத்தக் கூடாது என்றுதான் எண்ணலானாள்.
தெளிவான முடிவோடு விழித்ததினாலே என்னவோ மிகவும் பொலிவோடு காணப்பட இந்த்ராவே மகளைக் கண்டு அசந்துதான் போனாள்.
“என்னடி… முகம் ஜொலிக்குது மாப்பிள கிட்ட ராத்திரி முழுக்க பேசிகிட்டு இருந்த்யா?”
“நீ வேற. உன் மாப்புள ஒரு தூங்கு மூஞ்சி அவர் எங்க ராத்திரி போன் பண்ண போறாரு. நல்லா குறட்டை விட்டு தூங்கி கிட்டு இருப்பாரு. ராத்திரி முழுக்க நான் என் புருஷன் கூட கனவுல டூயட் பாடிகிட்டு இருந்தேன். நீ எனக்கு காபி கொடு. டான்ஸ் ஆடி ஆடி காலு வலிக்குது”
“இருந்தாலும் உனக்கு ரொம்பத்தாண்டி குசும்பு” மகளின் தலையில் செல்லமாக கொட்டியவாறே காபி கலக்க சென்றாள் இந்திரா.
அன்னைக் கொடுத்த காபியை குடித்தவாறே தொலைக்காட்ச்சியை இயக்கி அன்றைய காலை செய்திகளை கொஞ்சம் பார்வையிட்டவள் தந்தையோடு ஜோக்கிங்கின் சென்று வந்து காலை உணவை உட்கொண்டு விட்டு காரியாலயம் செல்ல ஆயத்தமானாள்.
“கௌஷி ஒரு நிமிஷம் நில்லு” திருநீறை பூசி விட்டவாறே “இனிமேல் நடக்குறது எல்லாமே நல்லபடியாக நடக்கட்டும்” இந்திரா மகளை வழியனுப்பி வைக்க, அன்னையிடம் விடைபெற்றவள் கிரிஜாவை அழைத்துக் கொண்டு காரியாலயம் நோக்கி ஸ்கூட்டியில் பறந்திருந்தாள்.
வளமை போல் கிரிஜா தொண தொணவென்று பேசியவாறு வர, தான் சக்தியோடு சென்றால் இந்த கிரிஜாவின் நிலைமை என்னவாகும் என்றெண்ணிய கௌஷிக்கு கிரிஜாவை நினைக்கையில் பாவமாக இருந்தது.
“ஏன் கிரிஜாக்கா… நீங்களும் ஸ்கூட்டி ஓட்ட கத்துக்கலாம் இல்ல. சண்டே ஒருநாள் டிரைவிங் ஸ்கூல் போனா ஒரு மாசம் போதுமே”
கௌஷி என்ன சொல்ல விளைகிறாள் என்று கூட கவனத்தில் கொள்ளாது “ஏன்டி யம்மா உன் ஸ்கூட்டில நான் ஓசில வரதாக குத்திக் காட்டுறியா? நீ இல்லாத இந்த பதினாறு நாளும் பஸ்லதான் போனேன். பஸ்ல போறது ஒன்னும் எனக்கு கஷ்டமில்ல. என்னமோ உங்கம்மா ரதிய பெத்து வச்சிருக்கிறது போலவும், ஊருல உள்ள அத்தனை ஆம்புளைகளும் உன் பின்னாடிதான் சுத்துற மாதிரியும் என்ன உனக்கு துணையா போகும்படி கேட்டுக் கொண்டதாலதான் நான் உன் கூட வரேன்” என்றாள் கிரிஜா.
கிரிஜா சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது கல்யாணமாகாத பெண் என்றால் காதலிக்க என்று ஆண்கள் சுற்றுவார்கள். கல்யாணமாகி கணவன் கூட இல்லை என்றால் ஆண்களின் பார்வையே வேறு. எவ்வாறெல்லாம் பிரச்சினைகள் வரக்கூடும் என்று அஞ்சிய இந்திராதான் கிரிஜாவிடம் தன் மகளுக்கு துணையாக செல்லும்படி கேட்டுக்கொண்டாள்.
கிரிஜாவுக்கு வந்தவரைக்கும் லாபம். பஸ்ஸுக்கு செல்லும் காசை மிச்சப்ப படுத்தலாம் என்று பெருந்தன்மையாக ஒத்துக்கொள்வதாக இந்திராவிடம் கூறி இருந்தாள். அதைத்தான் இப்பொழுது கௌஷியிடமும் கூறினாள்.
கௌஷிக்கு ஏன்டா வாயை தொறந்தோம் என்று எண்ணத் தோன்றியது. இவளிடம் பேசிப் புரிய வைப்பதை விட தான் ஷக்தியோடு சென்ற பிறகே தெரிந்துகொள்ளட்டும். அதான் சொல்லிட்டாளே பஸ்ஸில் செல்வது ஒன்றும் அவளுக்கு கஷ்டமில்லை என்று” அதன்பின் கௌஷி ஒன்றும் பேசவில்லை அமைதியாக வண்டியை செலுத்த கிரிஜா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே காரியாலயம் வந்து சேர்ந்திருந்தாள்.
கௌஷி வண்டியை நிறுத்தி விட்டு வர கிரிஜா உள்ளேயே சென்று விட்டாள். கௌஷி உள்ளே செல்லும் பொழுதுதான் அவளுக்கு புதிதாக மேனேஜர் வந்திருப்பார் என்ற நியாபகம் வந்தது. தான் இத்தனை நாள் லீவ் எடுத்ததற்கு எந்த மாதிரியான டோஸ் விழும் என்ற எண்ணத்திலையே உள்ளே நுழைந்தாள்.
“சே இந்த கிரிஜாவை வேற கோப படுத்திட்டேன். அவ கிட்ட இந்த புது மேனேஜரை பத்தி கேட்டு வச்சிருக்கணும். குணம் தெரிஞ்சா எப்படி அணுகலாம்னு யோசிச்சிருக்கலாம்” தன்னை நொந்துகொண்டவள் தன் இருக்கையில் அமர்ந்து அன்றைய வேலையை பார்கலானாள்.
“என்ன கௌசல்யா வந்த உடனேயே உக்காந்துட்ட நீ வந்தா உன்ன உடனே மேனேஜர் வர சொல்லிட்டாரு” கணக்காளர் பாலமுருகன் சொன்ன உடன்
“என்னது மேனேஜர் வந்துட்டாரா?” கைக்கடிகாரத்தை பார்த்தவள் பதறியவாறு மேனேஜரின் அறைக்கு விரைந்தாள்.
“பழைய மேனேஜர் கொஞ்சம் நேரம் சென்றுதான் ஆபீஸ் வருவார். இவர் என்ன நேரம் காலத்தோட வந்திருக்கிறார். வீட்டுல மனைவி வேல ஏதும் கொடுக்குறது இல்லையோ” உள்ளே தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சி அறியாமல் புலம்பியவாறே சென்றாள்.
கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவள் அறையில் யாருமில்லாததைக் கண்டு திகைத்தாள்.
அறை கூட இருட்டாகத்தான் இருந்தது. சூரிய வெளிச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் திரை கூட திறக்கப்படாமல் இருந்தது என்றால். வேலை செய்பவர்களை கவனிக்க கூடிய விதத்தில் கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த திரையும் கூட கீழிறக்கப்பட்டிருந்தது கௌஷியின் கவனத்தில் இல்லை.
“என்ன யாரையும் காணோம். இன்னும் வரலையா? அப்போ என்ன வரச்சொன்னது யாரா இருக்கும்? ஆமா என்ன காலைலயே இவ்வளவு இருட்டா இருக்கு?” தனக்குள் கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுக்க,
“நான் தான் வர சொன்னேன். எங்க எனக்கு சாப்பாடு? நான் இன்னும் காலைல சாப்பிடல” என்றவாறே உள்ளே நுழைந்தான் ஷக்தி.
அவனை கண்டு மேலும் திகைத்தவள் “நீ என்ன இங்க பண்ணுற?” விரலை நீட்டியவாறே கேட்க
“மரியாதை, மரியாதை. என்னதான் நான் உன் புருஷனா இருந்தாலும் வேல பாக்குற இடத்துல நான் உனக்கு மேனேஜர் கௌஷி யார் காதுலயாவது நீ என்ன மரியாதை குறைவா பேசுறது விழுந்தா… நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க” என்றதோடு அவள் நீட்டிக்கொண்டிருந்த விரலை அவன் விரல் கொண்டு கொக்கி போல் மாட்டி பிடித்து கையை பற்றியவன் அவளை தன் புறம் இழுத்து அணைத்திருந்தான்.
அவள் பேசுவதை கேட்டால் தப்பாக நினைப்பார்கள் என்று சொல்லியவன் அவன் செய்வதை கண்டால் தப்பாக பேசுவார்கள் என்று எண்ணவில்லையோ?
அவனிடம் சந்தேகம் கேட்க வந்த கணக்காளர் பாலமுருகன் கதவை தட்டாமல் திறக்க இந்த காட்ச்சியை கண்டு வாயை பிளந்தது மட்டுமல்லாது கதவை சாத்திக்கொண்டு சென்று மற்ற ஊழியர்களிடம் தான் கண்டதை சொல்லி கௌஷி வந்த உடன் புது மேனேஜரை மடக்கி விட்டதாகா பேச ஆரம்பித்தான்.
அவனுக்கு எப்பொழுதும் கௌஷியின் மேல் ஒரு கண் தான். பலவாறு பேச முயன்றும் வேலையை தவிர வேறு எந்த பேச்சு வார்த்தையும் அவளிடமிருந்து வராது. வந்த ஒரே நாளின் இந்த மேனேஜர் கௌஷியை மடக்கியதன் ரகசியம் தெரியாமல் இருந்த கடுப்பில்தான் இவ்வாறு திருத்துக் கூறி இருந்தான்.
 “என்ன என்ன பண்ணுற? விடு ஷக்தி” கௌஷி திமிறி விலக முயற்சி செய்ய
“பசிக்குக்குது கௌஷி” அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவாறே கொஞ்சலானான்.
அவனிடமிருந்து தப்பிப்பதற்காக “இருங்க சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றவள் அவனை தள்ளி விடாத குறையாக அவனிடமிருந்து விலகி அவனது அறையை விட்டு ஓடி இருந்தாள்.
அவளது இருக்கைக்கு வந்து பூத்த வியர்வையை துடைத்துக்கொண்டவள் ஆசுவாசமாக சுவாசிக்க,
“என்ன கௌஷி… மேனேஜர் ரொம்ப திட்டிட்டாரு போல” பக்கத்தில் இருந்த பத்மா கொஞ்சம் நக்கலாகவே கேட்க, அவளது நக்கல் குரல் கௌஷிக்கு புரியவில்லை. பியூனை அழைத்து தனது சாப்பாட்டை சக்திக்கு கொடுக்குமாறு சொல்ல, அத்தனை பேரின் கண்களும் அவளை ஒரு மாதிரிதான் பார்த்து வைத்தது. யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. கேட்கவும் மாட்டார்கள்.
கணவன் நடந்து கொண்ட முறையில் அவனை மனதுக்குள் வசை பாடியவாறே வேலையை கவனிக்கலானாள் கௌஷி. 
கௌஷிக்காக காத்திருந்த ஷக்தி பியூன் வந்து சாப்பாட்டை கொடுக்கவும் “அது சரி அவ ஊட்டி விடுவான்னு நீ எதிர் பார்க்குறது கொஞ்சம் ஓவர்தான்” தன்னையே திட்டிக்கொண்டான்.
“சார் ஒன்னு சொன்னா தப்பா நினைக்காதீங்க, கௌசல்யா மேடம் ரொம்ப நல்லவங்க. யார் வம்புக்கு போக மாட்டாங்க. உதவி தேவையான்னு கேட்டு செய்றவங்க. உங்களுக்கு அவங்க மேல என்ன கோவம்னு தெரியல. இப்படி அவங்க பேர கெடுக்குற மாதிரி நடந்துக்காதீங்க” பியூன் சக்தியை முறைக்க முடியாமல் கூறி முடித்தான்.
“என்ன சிவம். என்ன பிரச்சினை?” ஷக்தி ஒரு நொடி புரியாது பார்க்க, அக்கவுண்டன் பாலமுருகன் கண்டதையும், சொன்னதையும் சொல்ல சக்திக்கு ஐயோ என்றானது.
ஏற்கனவே கௌஷியை தன்புறம் வளைப்பது எப்படி என்று புரியாமல் முழித்துக் கொண்டு இருக்கையில், இப்படி ஒரு பேச்சு அடிபட்டால் தன்னால்தான் அவளுக்கு இந்த அவப்பெயர் என்று மெம்மேலும் அவள் மனதை இறுக பூட்டி வைப்பாள் என்று புரிந்தது.
“யார் இப்படி பேசுறாங்க? நீங்க போய்….” என்று சிவத்துக்கு ஒரு வேலையை கொடுத்து அனுப்பியவன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.
சிவமும் ஷக்தி ஏவிய வேலையை மறுக்க முடியாமல் செய்து முடிக்க கிளம்பினான்.
சிவத்தை பொறுத்தவரையில் ஏழ்மையின் காரணமாக இந்த வேலையில் சேர்ந்திருந்தான். குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பொழுது ஆபீசில் யாரிடமாவது கடனாக கேட்பதுதான். இரண்டு வருண்டங்களேயான குழந்தை டைபாய்டில் படாத பாடு பட்ட பொழுது கௌஷி பணத்தை கொடுத்து உதவியதோடு பணம் வேண்டாம் என்றும் கூறி இருக்க, அவள் அவன் கண்களுக்கு அவனுடைய குலதெய்வம் பச்சையம்மாள் போன்றே தோற்றமளித்தாள்.
அன்றிலிருந்து கௌஷியின் மீது அவனுக்கு ஒரு வித பற்றும், மரியாதையும் உண்டு. அவளை கவனித்த மட்டில் தேவைக்கு தவிர அவனை அலைய விடுவதுமில்லை. அவளுண்டு, அவள் வேலை உண்டு என்று இருப்பவள். அவளை பற்றி மற்றவர்கள் கணவனை பிரிந்து வாழ்வதாக பேசுவதை கேட்டும் இருக்கின்றான். என்ன பிரச்சினையோ? அது அவள் பாடு. அதை வைத்து சிலர் அவள் வாழ்க்கையில் நுழைய முயற்சிப்பதை கண்டிருக்கின்றான். ஆண்களின் சபலப்புத்தியை பற்றி அவனுக்கு தெரியாதா. கௌசி வீணான பேச்சுக்களை தவிர்ப்பதால் அவளிடம் வழிந்து பேச முற்படுபவர்களுக்கு அவளை அணுகுவது கொஞ்சம் கஷ்டம்தான். இந்த ஆபீசில் என்னவெல்லாம் நடக்கிறது என்று சிவம் அறியாது அல்லவே.
யார் யார் எந்த மாதிரி? என்ன பேசுவார்கள்? என்றெல்லாம் அறிந்து வைத்திருப்பதால் யாராவது கௌஷியை அணுக முயன்றால் சிவம் அவள் அறிய முன்னமே தடுத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் ஷக்தி வந்த அன்றே கௌஷியை அணுகுவான் என்று கொஞ்சம் கூட யோசித்துப் பார்த்திருக்கவில்லை. அவனை எப்படி தடுப்பது? என்ற சிந்தனையிலையே அவன் வாங்கி வரச் சொன்ன சாக்லட்டை வாங்கி வந்து அவனிடம் கொடுத்தான் சிவம்.
“நீங்களும் வாங்க சிவம் கௌஷிய பேசின வாய அடச்சிட்டு வரலாம்” என்று புன்சிரிப்போடு ஷக்தி அழைக்க, அப்பொழுதும் சிவத்துக்கு ஒன்றும் புரியவில்லை. மேனேஜர் அழைக்கிறான். அவனோடு சென்றாக வேண்டுமே என்ற எண்ணத்தில் கடுப்பாகத்தான் சென்றான்.
“ஹாய் கைஸ். நீங்க ஆபீஸ் வர முன்னாடியே நான் வந்துட்டதால என்ன அறிமுக படுத்திக்க முடியல” சக்தியின் குரல் கேட்டதும் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் தங்களது வேலைகளை நிறுத்தி அவனை ஒரு நிமிடம் புரியாது பார்க்க, சிலருக்கு அவன் யாரென்றே தெரியவில்லை.
அவ்விடமே நிசப்தமான நொடி “புது மேனேஜர்”  “மேனேஜர் டி” மெல்லிய குரல்கள் சலசலக்க, அனைவரும் மரியாதைக்காக எழுந்து வணக்கமும் வைக்கலாயினர்.
“காக்கா புடிக்க மரியாதை எல்லாம் நல்லாத்தான் கொடுக்குறாங்க இல்ல சிவம்” பியூன் புறம் திரும்பாமலையே ஷக்தி கூற, இவன் லேசு பட்டவன் இல்லை என்ற எண்ணம் தான் பியூனின் மனதில் ஓடியது.
“நான் என்ன அறிமுகப்படுத்த முன்னதாகவே உங்க எல்லாருக்கும் என்ன மேனேஜராக தெரியும். சோ அறிமுகம் தேவ இல்ல. ஆனா இப்போ நான் சொல்ல போற விஷயம் உங்க எல்லாருக்கும் கொஞ்சம் ஷாக்காக இருக்கும்” என்றவன் கௌஷியை பார்த்து “கௌஷி இங்க வா…” என்று அழைக்க அவளோ கண்களை உருட்டி முறைத்தாள்.
“அட வாம்மா இன்னும் எத்தனை நாளைக்கு மறைப்ப?” என்று சத்தமாகவே சொல்ல
“என்ன? என்ன?” என்ற குரல்கள் எழுந்ததோடு அனைவரின் பார்வையும் கௌஷியை துளைக்க, கௌஷி ஓடாத குறையாக அவனருகில் சென்று நின்றிருந்தாள்.
அவள் ஒன்று சொல்லி, அவன் மறுத்துப் பேசி எதற்கு வீண் வம்பு? சொல்வதை அவனே சொல்லட்டும். அவன்தானே ஆரம்பித்தான் என்ற எண்ணமே கௌஷிக்கு.
“நான் மிஸ்டர் ஷக்தி மட்டுமல்ல. மிஸ்டர் கௌசல்யாவும் தான். இந்த அழகான தேவதைக்கு புருஷனா இருக்கேன். என்ன அபாய்மண்ட் ஆடர் மட்டும் கொடுத்திருக்காங்க, வேல பார்க்க விட மாட்டேங்குறாங்க. இதுல எங்க ப்ரோமோஷன் பத்தி யோசிக்கிறது” என்றவன் கௌஷியை பார்த்து கண்சிமிட்டி சிரிக்க, கௌஷிக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.
“கௌசல்யா என் மனைவி. இவ மிஸிஸ் சக்திவேல் என்று அறிமுகப்படுத்துவான் என்று எண்ணி இருக்க, என்ன இப்படி சொல்கிறான். அதுவும் இத்தனை பேர் முன்னிலையில்”
“கலக்கிட்டீங்க சார்” சிவம் சொல்ல
“ஐயோ அப்போ இந்த கௌசி ஆறுமாசம் கழிச்சி அவ புருஷன் கூட சேர்ந்துடுவாளா? அப்போ ஓசில ஸ்கூட்டி பயணம் இல்லாம போய்டுமா? இப்போ என்ன பண்ணுவேன்” கௌஷியின் வாழ்க்கை சீரானதை எண்ணி சந்தோசப்படாமல் சுயநலமாக சிந்திக்கும் கிரிஜாவுக்கு ஆறு மாதங்கள் கடந்து அல்ல இன்றிலிருந்தே ஓசி பயணம் ரத்து என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
“சொல்லவே இல்ல” கௌஷியை கிரிஜா உட்பட சிலர் குறைப்பட்டதோடு அரைகுறை மனதோடும், சிலர் உண்மையாகவும் வாழ்த்தும் சொல்லி விட்டு செல்ல, சிலர் “நீங்க ரெண்டும் பிரிஞ்சி வாழுறதா கேள்விப்பட்டோம்” என்று ஷக்தியிடமே கேட்டிருந்தனர்.
“அதைத்தான் சொன்னேன். பிரிஞ்சி வாழல, பிரிச்சி வச்சிருக்காங்க. எங்களுக்கு கல்யாணம் ஆகும் பொழுது கௌஷிக்கு பதினெட்டு வயசு. எனக்கு இருபத்தி ஒன்னு. சந்தர்ப்பம் சூழ்நிலை, எங்க கல்யாணம் நடந்து போச்சு. ஜாதக பொருத்தம் பார்த்தா தோஷம் அது இது என்று பெரியவங்க பிரிச்சு வச்சிட்டாங்க. இன்னும் ஆறு மாசம் பிரிஞ்சி இருக்கணும். அது வரைக்கும் என் பொண்டாட்டிய பிரிஞ்சி இருக்க முடியாம நான் அவ வேல பாக்குற இடத்துக்கே வந்துட்டேன்” பேசியவாறே சிவம் வாங்கி வந்த சாக்லட்டை அனைவருக்கும் கொடுக்குமாறு பணித்தான்.
“சார் பெரியவங்க உங்கள சேர்த்து வைக்கிற போ வளைகாப்புக்கு ஏற்பாடு பண்ணிடாதீங்க. காலைலயே பார்த்தேன் உங்க அவசரம்” பாலமுருகன் யாரும் சக்தியிடம் தன்னை போட்டு கொடுத்து விடக் கூடாதே என்று உஷாராக சொல்லி சிரிக்க, ஷக்தியும் சேர்ந்து சிரித்தான்.
ஆறு வருடங்களாக அவர்கள் பிரிந்து வாழ்வதை ஒன்றுமே இல்லை என்பது போல் ஒரே நொடியில் பேசிய கணவனை ஆச்சரியமாக பார்த்தாள் கௌஷி.
எத்தனை பேர் கேட்டிருக்கிறார்கள்? பதில் சொல்ல முடியாமல் எவ்வாறெல்லாம் திணறி இருக்கிறாள். எவ்வளவு அழகாக சமாளித்து பதில் சொல்கிறான்.
பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு உளறிக்கொட்டி தங்களது பிரச்சனைகளை அடுத்தவர்களுக்கு கடைபரப்பும் நேரத்தில் ஆண்கள் சிந்தித்து செயல்பட்டு குடும்ப மானத்தை காக்கிறார்கள்.
இப்படி நினைத்த கௌஷல்யாவே தன் கணவன் தன்னை ஏமாற்ற நன்கு திட்டமிட்டு செல்யட்டிருக்கின்றான். என்று பேசத்தான் போகிறாள் என்று அவளே அறிந்திருக்கவில்லை.
“ஓகே கைஸ் வேலைய பார்க்கலாமா?” இன்முகமாக கூறியவன் கௌசிக்கு கண்சிமிட்டியவாறே உள்ளே சென்றான்.    
  
 “பலே ஆளுதான் கௌசல்யா நீ. ஹஸ்பனே மேனேஜரா வந்துட்டாரு. இனி வேல செஞ்சா என்ன செய்யலைன்னா என்ன?” பக்கத்தில் இருந்த பத்மா பேச, புன்னகைத்தவள் கணனியில் கவனமானாள்.
இந்த மாதிரி பேச்சுக்கு பதில் சொல்வதும் வீண். ஏதாவது பதில் சொன்னாலும் அதையும் திரித்து பேசத்தான் பார்ப்பார்கள். அமைதியாக கடந்து விடுவதுதான் புத்திசாலித்தனம். கௌஷியும் மென்னகையில் கடந்த்தாள். 
ஷக்திக்கு வேலை இழுத்துக்கொள்ள கௌஷியை கவனிக்கவும் மறக்கவில்லை. அடிக்கடி அவள் என்ன செய்கின்றாள் என்று கண்ணாடி தடுப்பின் வழியாக பார்த்தவாறுதான் இருந்தான். ஆனால் அவளோ இவனை ஒரு தடவையாவது பார்த்தாளா என்று தெரியவில்லை.  
“நான் பார்க்கும் பொழுதாவது ஒருதடவை திரும்பி பார்குறாளா பாரு? விவஸ்த கெட்டவ” அதற்கும் அவளை வசைபாடலானான்.
மதிய உணவு இடைவேளையில் ஒவ்வொருவராக எழுந்து செல்லும் பொழுதுதான் தான் மதியத்துக்கு கொண்டு வந்த உணவை ஷக்த்திக்கு காலை உணவாக கொடுத்தது கௌஷிக்கு நியாபகம் வந்தது.
“ஐயோ இன்னைக்குனு பார்த்து செமயா பசிக்குதே” வயிற்றை பிடித்தவாறு கௌஷி அமர்ந்திருக்க அவளது மேசையிலிருந்த தொலைபேசி அடித்தது. சக்திதான் அழைத்திருந்தான். உடனடியாக அவனது அறைக்கு வருமாறு உத்தரவு.
“இவன் வேற சின்சியர் சிகாமணி மாதிரி இப்போ போய் வேல சொல்லிக்கிட்டு” அவனை திட்டியவாறே உள்ளே நுழைந்தாள்.
“வா வா வந்து உக்காரு. இன்னைக்கின்னு பார்த்து செம்ம பசி. வாசனை வேற தூக்குது” மோப்பம் பிடித்தவாறே கூற, உணவின் வாசனையில் கௌஷியின் பசி அதிகமாக அவனுக்கு எதிர்புறம் அமர்ந்து தட்டை எடுத்துக் கொண்டாள்.
மீன், முட்ட, மட்டன், என்று அசைவ உணவுகளுடன் கீரை, பருப்பு, ரசம், பொரியல் நெய் சோறு என்று வித விதமாக கடைபரப்பி இருப்பதை பார்த்தவளுக்கு “எந்த ஹோட்டலில் வாங்கி வந்திருப்பான் என்ற சிந்தனைதான் ஓடியது”
இருந்த கொலைப்பசியில் அதிகம் ஆராய்ச்சி செய்யாமல் அவனுக்கு பரிமாறியவள் தானும் பரிமாறிக்கொண்டு அவசர அவசரமாக உண்ண ஆரம்பித்தாள்.
“இத சாப்பிட்டு பாரேன் செம்ம டேஸ்ட்டா இருக்கு. ஆகா… மீன் வருவல்னா இதல்லவா மீன் வறுவல். மட்டன் எப்படி சாப்ட்டா வெந்திருக்கு” புகழாரம் சூட்டியவாறு அவன் சாப்பிட,
“விட்டா சமச்ச செப்புக்கு வளையல் போட்டு விடுவான் போல. ரொம்பதான் பண்ணுறான்” கௌஷி அவனை முறைக்க அவளுக்கு விக்க ஆரம்பித்தது 
அவள் தலையை தட்டி தண்ணீர் புகட்டியவன் “மெதுவாக சாப்பிடு கௌசி சாப்பாடு நிறையவே இருக்கு. உங்கம்மா ரெண்டு பேருக்கு அனுப்ப சொன்னா அஞ்சு பேருக்கு அனுப்பி இருக்காங்க”
“என்னது அம்மா சமயலா?” விக்கியவாறே கேட்க,
அவளுக்கு தண்ணீர் புகட்டியவன் “அவங்க கையாலதானே தினமும் சாப்பிடுற? ருசி கூடவா தெரியாது?”
பசி ருசி அறியாது. அவள் எங்கே கவனித்தாள்.
“ஆமா எங்க வீட்டு பாத்திரம் தான். அம்மாவை சமைக்க சொல்லி சொன்னீங்களா? ஏன் உங்களால ஹோட்டல்ல சாப்பிட முடியாதா?” வந்த அன்னைக்கே ஆரம்பிச்சுட்டான். இவனுக்கு தினமும் அம்மா ஆக்கிப் போட வேண்டுமா? என்ற ஆதங்கத்தில் கடுப்பானாள்.
“ஹோய் ஹோய்… நான் உங்க பொண்ணு மதிய சாப்பாட்டை எனக்கு கொடுத்துட்டான்னு மட்டும்தான் போன் பண்ணி சொன்னேன். உங்க அம்மாதான் மாப்புள மதியத்துக்கு நான் சமைச்சி மாமா கைல அனுப்புறேன். அவர் இன்னைக்கி வேலைக்கு போகலானு சொன்னாங்க. முதல் தடவையா ஆசையா கேக்குறாங்களேன்னு வேணாம்னு சொல்ல மனசு வரல” ஷக்தி சொல்லி முடிக்க கௌஷியால் கையில் தட்டையும் சாதத்தையும் வைத்துக்கொண்டு அவனை அடிக்க முடியவில்லை. முறைக்க மட்டும்தான் முடிந்தது.
“எங்க அப்பாவும் அம்மாவும் உங்க வீட்டு வேலைகாரங்க இல்லை. நீங்க சொல்லுறத எல்லாம் செய்ய” வாயில் சாதத்தை வைத்துக் கொண்டு பேச
அவள் கோபம் ஷக்திக்கு நன்கு புரிந்தது. அவன் அன்னை பார்த்து வைத்திருக்கும், வேலைகளும், பேசிய பேச்சும் அப்படி இருக்க, கௌசி இவ்வாறு பேசுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனாலும் அவள் இப்போதைய தோற்றம் அவனுக்கு சிரிப்பைத்தான் மூட்டியது.
“சிரிச்சி தொலச்சிடாத ஷக்தி. அப்பொறம் பத்ரகாளியா மாறி உன்ன உண்டு இல்லனு ஒரு வழி பண்ணிடுவா” வந்த சிரிப்பை சாதத்தோடு முழுங்கிய சக்திவேல்.
“மாப்புள்ள விருந்துனு என்ன உங்க வீட்டுல உக்கார வச்சி சோறு போட்டியாடி… என்னவோ ஒருநாள் உங்கம்மா சமைச்சி போட்டாங்க, உங்கப்பா கொண்டு வந்து கொடுத்தாரு. அதுக்கு இப்படி துள்ளுற? இனிமேல் தினமும் நீயே எனக்கு சமைச்சி எடுத்துட்டு வர” என்று கர்ச்சிக்க
“எனக்கு என்ன வேற வேல இல்லையா? ஹோட்டல்ல சாப்பிட்டுக்கோங்க” கௌசி தண்ணீர் அருந்தி விட்டு பேச
“சொன்னதை செய்டி…பொண்டாட்டி அப்பொறம் நான் பொல்லாதவனாகிடுவேன்” பொய்யாய் மிரட்டலானான்.
“ஆமா இவரு எப்போ நல்லவரா இருந்தாரு? பொல்லாதவராக” சத்தமாகவே முணுமுத்தாள் கௌஷி.

Advertisement