Advertisement

அத்தியாயம் 7
ஷக்தி பிறந்ததிலிருந்தே பிடிவாதக் குணமுடியவன். தான் நினைத்தத்தை எவ்வழியிலும் நிறைவேற்றிக்கொள்ளும் சாமர்த்திய சாலியும் கூட.
சாம்பாவியும் அப்படித்தான் பலவருடங்கள் கடந்து பிறந்ததினால் மகாதேவன் ரொம்ப செல்லம் கொடுத்ததினாலும் அழுதே சாதிப்பாள்.
அன்னையின் மொத்த குணத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு பிறந்தவன்தான் ஷக்தி.
சின்ன வயதில் அழுது சாதிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் ஷக்தி வித்தியாசமாக இருந்தான். அவன் கேட்பது கிடைக்கவில்லையாயின் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து விடுவான். அவனை சமாதானப்படுத்த சாம்பவிக்கு போதும் போதும் என்றாகி விடும்.
வீட்டுக்கு வரும் கபிலர் அவன் கேட்கும் பொருளை வாங்கிக் கொடுத்து விடுவேன் என்ற பின்தான் உண்ணவே ஆரம்பிப்பான். அத்தோடு விடாமல் காலையில் எழுந்த உடன் தந்தையிடம் நியாபகப்படுத்தியும் விடுவான்.
“மறந்துடாம வாங்கிட்டு வந்துடுங்க. இல்லனா என் உசுர வாங்குவான்” என்பாள் சாம்பாவியும்.
தந்தை வீடு வரும்வரை வாசல் படியிலையே அமர்ந்திருப்பவனை சாம்பவி மனதுக்குள் திட்டியவாறுதான் வேலை பார்ப்பாள்.
நல்ல குணங்கள் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரும் பொழுது மெச்சிக்கொள்ளலாம். இந்த மாதிரியான குணங்கள் வரும் பொழுது யாரை குற்றம் சொல்வது?
அவனது பிடிவாதக் குணம்தான் சற்றும் யோசிக்காமல் நடந்த திருமணத்தை புறக்கணித்து தான் காதலை தேடி ஓட வைத்தது.
அதே பிடிவாத குணத்தினால்தான் இன்றும் கௌஷியை தன்னோடு இருத்திக்கொள்ள முயற்சி செய்கின்றான்.
அவளுக்கு தான் இழைத்தவைகளால் அவளது மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்? அவள் தன்னை வெறுக்கின்றாளா? என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் அவள் என் மனைவி என்ற உரிமையை நிலை நாட்ட முயற்சி செய்கின்றான். அதற்கு அவள் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் ஷக்திக்கு கவலையில்லை.
கௌஷி என்பவள் அவன் மனைவி அவள் அவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழப்பதிந்து போய் இருக்க, அவளை தேடி வந்து விட்டான்.
கதிர்வேலனிடம் கேட்டு அவர்கள் சென்னை செல்லுமன்றே அவனும் சென்னை செல்ல ட்ரையின் டிக்கட் போட்டவன் அவர்களோடு ரயில் ஏறி இருக்க, கௌஷிக்கு சாப்பிட அது இது என்று எல்லாவற்றையும் வாங்கிக் குவிக்கலானான்.
கௌஷியும் இந்திராவும் ஒரு பக்கமாக அமர்ந்திருக்க, இந்திராவுக்கு நேரெதிராக சக்தியும்  கௌஷிக்கு நேரெதிராக கதிர்வேலனும் அமர்ந்திருந்தனர்.
“இவ்வளவு எதுக்கு மாப்புள?” இந்திரா வேண்டாமே என்ற தொனியில் கேட்டிருந்தாலும் முகத்தில் சந்தோசம் அவ்வளவு பிரதிபலித்திருந்தது.
“கௌஷிக்கு மட்டும் இல்ல அத்த, உங்களுக்கு பிடிக்கும்னு தான் வாங்கிட்டு வந்தேன் சாப்பிடுங்க” மாமியாரின் தலையில் ஐஸ் வைக்கலானான் ஷக்தி.
கதிர்வேலன் மருமகனிடம் சென்னையில் எங்கே தங்கி இருப்பதாக கேட்க, நண்பன் ஒருவனின் அறையில் இப்போதைக்கு தங்கிக்கொள்வதாகவும், கூடிய விரைவில் வீடு பார்க்க வேண்டும் என்றும் கூறிய ஷக்தி தனது வேலையை பற்றி மாமனாரிடம் அளவலானான்.
“சாப்பிடு கௌஷி… மாப்புள எவ்வளவு ஆசையா வாங்கிட்டு வந்திருக்காரு” இந்திரா மகளிடம் ஒரு பாக்கெட்டை கொடுக்க,
அன்னையை முறைத்தவளின் கண்களின் ஓரம் நீர் கோர்த்தது. சின்ன வயதில் இதே ஷக்தி வேண்டுமென்றே இவளை வெறுப்பேற்ற பாக்கெட்டை காட்டி காட்டி சாப்பிடுவான். இவளும் அறியாத வயதில் அவன் பின்னால் கெஞ்சியவாறு அலைவாள். சாப்பிட்டு விட்டு வெறும் பாக்கெட்டை கொடுத்து இவள் அழுவதை ரசித்துப் பார்த்து விட்டு மற்ற நாட்களில் அதை நடித்துக்காட்டி பலிப்புக் காட்டி இவளை வெறுப்பேற்றுவான். அப்படிப்பட்டவன் வாங்கிக் கொடுத்ததை தான் சாப்பிட வேண்டுமா? மனம் முரண்டு பிடிக்க, கைகள் எதையும் தொட பிடிக்காமல் அமர்ந்திருந்தால் அவள் அன்னை ஊட்டி விடாத குறையாக பாக்கெட்டை நீட்டிக்கொண்டிருக்கின்றாள்.
“இப்ப ஒன்னும் சாப்பிட முடியாதுமா… வேணாம்” நாசுக்காக மறுத்து பார்த்தாள். 
அது சக்தியின் காதில் விழுந்ததுதான் விதி.
அவனுக்கும் தெரியுமே அவன் வாங்கிக் கொடுத்ததினால்தான் அவள் சாப்பிடாமல் இருக்கின்றாள் என்று. கதிர்வேலன் வாங்க செல்லும் பொழுது அவரை தடுத்து அவன் சென்றது எதற்காம்? இவளுக்காக தான் எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே, “என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள். இதற்கே இப்படி என்றால்? மற்றதற்கு? கூடாதே” என்றவனின் மனம் பாடிக்கொண்டிருக்க அதை அடக்கியவாறு
“என் பொண்டாட்டிக்கு நான் ஊட்டி விட்டாதான் சாப்பிடுவாளாம் அத்த, இது உங்களுக்கு புரியல பாருங்க” என்றவாறே வந்து கௌஷியின் அருகில் அமர்ந்து கொண்டது மாட்டுமல்லாந்து வாயை திறக்கும்படி அவளை இம்சிக்கலானான்.
கௌஷியை முற்றாக சக்தியின் புறம் திரும்பியதால் அவளுக்கு பெற்றோரின் நிலை என்ன என்று தெரியவில்லை.
என்னடா வம்பு எனும் விதமாக அவனை பார்த்த கௌஷியோ “நானே சாப்பிடுறேன்” என்றதும்தான் தாமதம் அவன் வாங்கிக் குவித்த ஒவ்வொன்றையும் “இது நல்லா இருக்கும், இது நல்லா இருக்கும்” என்று எடுத்துக் கொடுக்க, எல்லாம் கௌஷிக்கு பிடித்தமான உணவுப்பொருட்களைத்தான் வாங்கி வந்தும் இருந்தான். 
“இவ்வளத்தையும் சாப்பிட்டா வாமிட்தான் வரும்” கடுப்பாகி கௌஷி சொல்ல
“விட்டா அடுத்த மாசமே வாந்தி எடுக்க வச்சி இருப்பேன். எங்க என் கஷ்டத்த யாரும் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியல. ஆறு மாசம் உன்ன பிரிஞ்சி எப்படி இருக்க போறேனோ?” ரயிலின் வேகத்தால் காற்றில் பறக்கும் அவள் கூந்தல் முடியை ஒதுக்குவது போல அவள் முகம் நோக்கி குனிந்தவன் கிசுகிசுப்பாக சொல்ல, கௌஷிக்கு அவன் தொடுகையை மின்சாரம் தாக்கியது போல் மேனி முழுவதும் ஒரு வித உணர்வை கொடுத்தது என்றால் அவன் பேச்சு குப்பென்று வேர்த்து பதட்டத்தைக் கொடுக்க, சட்டென திரும்பி பெற்றோரை பார்கலானாள்.
அவளருகில் அமர்ந்திருந்த அன்னை எப்பொழுது தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள் என்று தெரியவில்லை. இவன் பேசியது அவர்களுக்கு கேட்டிருக்குமோ? அவர்கள் இவர்களை கவனிக்காதது போல் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதை கண்டபின்தான் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டாள் கௌஷி.
“என்ன அங்க பாக்குற? நீ சாப்பிடு” என்று ஊட்டி விட முனைய, சாப்பிடாமல் அவன் விட மாட்டான் என்பதனால் அவன் கையிலிருந்த பாக்கெட்டை பறிக்காத குறையாக வாங்கிய கௌஷி அவளே அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு தண்ணீரும் அருந்தியவள்
“அம்மா தூக்கம் வருது” என்றவள் ஷக்தி பேச முன் தாய்க்கும் தந்தைக்கும் நடுவில் சென்று அமர்ந்து இந்திராவின் மடியில் தலை வைத்துப் படுத்துக்க கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
பெருமூச்சு விட்டுக்கொண்டு ஷக்தியோ அவளை ஏக்கமாக பார்கலானான்.
 சக்தியின் பேச்சுதான் அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. “விட்டா ட்ரைன்லயே முதலிரவை நடத்தி பிள்ளையும் பெத்துகொடுப்பான் போல பேசுற பேச்சப்பாரு” பொருமிக்கொண்டிருந்தவளுக்கு அவன் கடைசியாக பேசியவைகள் நியாபகத்தில் வரவும் அவன் முதலில் சொன்னதை விட்ட அவளது மனம் கடைசியாக சொன்னதை பிடித்துக்கொண்டு அவனோடு மல்லுக்கட்டியது.
“ஆறு மாசம் எப்படி இருக்க போறேன்னு கவலை படுறான். ஆறு வருஷம் எப்படி இருந்தானாம். அம்னீசியால இருந்தானாமா? ஒரு வேல கோமால இருந்தானாக்கும்” கௌஷி கணவனை மனதுக்குள் வசைபாடியவாறே கண்களை மூடி படுத்திருந்தாள்.
கௌஷிக்கு தூங்க வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் இருக்கவில்லை. ஷக்தியிடமிருந்து தப்பிப்பதற்காக தூங்குவதாக பாசாங்கு செய்ய ஆரம்பித்தவள் கண்ணை மூடியவாறு அவனை வசைப்பாடிக்கொண்டே தூங்கி இருந்தாள்.
கௌஷி கண்விழிக்கும் பொழுது சக்தியின் மடியில் தலை வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள். அன்னையின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்தவள் எப்படி சக்தியின் மடியில் தலை வைத்தாள் என்று புரியாது அதிர்ந்து அவன் முகம் பார்க்க, இவள் விழித்து விட்டதை அறியாதவனோ, அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான். 
அவனது வலது கை அவளது இடுப்பில் இருக்க அவளால் எழுந்துகொள்ளவும் முடியவில்லை. தூங்குவது போல் பாசாங்கு செய்யவும் முடியவில்லை. சேலை விலகி அவன் கை படும் இடம் குறுகுறுக்க நெளிய ஆரம்பித்தவளின் உடல் மொழியே அவனுக்கு அவள் விழித்து விட்டதை காட்டிக் கொடுத்து விடும்.
சென்னையை நெருங்கி விட்டதாக இந்திராவும் கதிர்வேலனும் பேசிக்கொள்ள, அவன் கவனிக்க முன் எழுந்து அமர்ந்து விடுவதுதான் உசிதம். சக்தியின் கையை உதறாத குறையாக எழுந்து அமர்ந்தவள் பெற்றோரைத்தான் தேடினாள்.
“என்ன கௌஷி என்ன வேணும்” கதிர்வேலன் மகளை கவனித்து கேட்க,
அன்னையை முறைத்தவாறு “தண்ணி வேணும் ப்பா…” என்றாள் சக்தியின் புறம் திரும்பாது.
அவளது செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்தவனோ “ஹோய் தூங்கு மூஞ்சி அத்த உன்ன எவ்வளவு நேரம்தான் மடில வச்சிருப்பாங்க? கால் வலிக்குதுன்னு சொன்னாங்க அதான் நான் வச்சிக்கிட்டேன். என் பொண்டாட்டிய காலம் பூரா நான் மடிதங்குவேன் டி” என்று சொல்ல கௌஷியிடம் எந்த பதிலும் இல்ல. கதிர்வேலன் கொடுத்த தண்ணீரை குடித்தவள் இறங்க ஆயத்தமாக, ஷக்தி ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
சின்ன வயதில் “ஷக்தி அத்தான் ஷக்தி அத்தான்” அவன் எவ்வளவு துன்புறுத்தினாலும் பின்னால் ஓடி வருபவள்தான்.
அவன் கொடுக்காமல் சாப்பிட்டு அழ வைத்தாலும், அவள் தன் கையில் இருப்பதை கொடுக்காமல் சாப்பிட்டதே இல்லை. ஆனால் ஷக்திதான் அவள் கொடுப்பதை சாப்பிடுவதில்லை. அவளை காயப்படுத்தவென்றே தூக்கி எறிவான். விசிறி அடிப்பான். அல்லது அவளை திட்டி விட்டு “இதையெல்லாம் யார் சாப்பிடுவா? உன்ன தவிர?” என்று விட்டு செல்வான்.
அவனை பாவமாக பார்த்து உதடு பிதுக்கி அழும் நிலையில் இருக்கும் கௌஷியின் குழந்தை முகம் இன்னும் அவன் மனதில் பதிந்து போய் இருந்தாலும், அன்று அவன் மனம் சற்றும் இளகாததை நினைத்து பார்க்கையில் தன்னையே வெறுக்கலானான்.
அவன் செய்தவைக்கள் கொஞ்சமா? நஞ்சமா? நடந்தவைகளை மாற்றவும் முடியாது. இல்லையென்று சொல்லவும் முடியாது. மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. அப்படியே ஏற்றுக்கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டும்.
அவன் அவள் அருகில் இருந்தாலே போதும் அவள் மனதை மாற்றி விடலாம் என்று எண்ணி இருக்க, இந்த ஆறு மாத இடைவெளி கூட மிக நீண்ட இடைவெளியாக தெரிந்தது. இப்படியே இவளோடு இவள் வீட்டுக்கு சென்றால் என்ன? என்ற எண்ணம் தோன்ற அவன் அலைபேசி அடிக்கவே யார் என்று பார்த்தான்.
அவன் அன்னைதான் அழைத்திருந்தாள். “மூக்கு வேர்த்தா மாதிரி கரெக்ட்டா எப்படித்தான் பேசுவாளோ” அன்னையை கடிந்தவாறே அலைபேசியை எடுத்து காதில் வைத்திருந்தான் ஷக்தி.
“என்னடா. சென்னை போய் சேர்ந்திட்டியா? நீ பாட்டுக்கு உன் பொண்டாட்டி பின்னாடி போய்ட போறடா… பார்த்து ஆறு மாசம் ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கணும். மறந்துடாத”
“இத சொல்லத்தான் போன் பண்ணியா?” தான் நினைத்ததை அன்னை ஊரிலிருந்தவாறே கூறவும் கடுப்பான ஷக்தி. “எல்லாம் எனக்கு தெரியும். நீ அங்க இருந்துகிட்டு எதையும் பண்ணாம இருந்தாலே போதும்” என்றவன் அலைபேசியை அனைத்து சட்டைப் பாக்கெட்டினுள் போட்டுக்கொள்ள முகம் கடுகடுவென இருந்தது.
வீட்டிலிருந்து வரும்பொழுதே சக்தியிடம் கெஞ்சாத குறையாக பேசிப்பார்த்தாள். ஷக்தி அசையாததால் சரி உன் இஷ்டப்படியே நடக்கட்டும் என்று விட்டவள்தான் இப்படி பேசுகிறாள்.
கணவனின் கோபமான முகத்தை பார்த்த கௌஷிக்கு ஒரு நொடி இத்தனை வருடங்கள் அவன் தன்னை தேடி வராததற்கு காரணம் அவன் அன்னையின் பிடிவாதம்தான் என்று நினைக்கத் தோன்றியது.
அடுத்த கணமே மண்டபத்தில் நடந்த நிகழ்வுகளும் அவன் அவளை பார்த்து கேலியாக புன்னகைத்ததும் நியாபகம் வர தலையை உலுக்கிக் கொண்டாள்.
ரயில்நிலையத்தில் அனைவரும் இறங்கிக்கொள்ள ஷக்திதான் ஓடாத குறையாக இவர்கள் வீடு செல்ல டாக்சி கூட பிடித்து வந்தான். பத்திரமாக அனைத்து பொருட்களையும் ஏற்றி விட்டு வழியனுப்ப
“அப்போ நாங்க போயிட்டு வரோம் மாப்புள” என்று கதிர்வேலன் சொல்ல அந்த விடாக்கொண்டானோ அவரை கண்டுகொள்ளாது கௌஷியை தான் பார்த்திருந்தான்.
அவனை புரிந்துகொண்டவராக “கௌஷி மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிட்டு வாம்மா” கதிர்வேலன் கௌஷியிடம் கூற, தந்தை கூறியதை மறுக்க முடியாமல் “போயிட்டு வரோம்” என்றவாளோ அவன் முகம் பார்க்கவே இல்லை.
கௌஷி பார்க்க பிடிக்காமல் ஒன்றும் சக்தியை பார்க்காமல் இருக்க வில்லை. அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல்தான் பார்ப்பதை தவிர்த்தாள்.   
“மாமா நான் கௌஷி கூட கொஞ்சம் தனியா பேசணும்” என்றவன் கதிர்வேலனின் பதிலை எதிர்பார்க்காமல் அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கொஞ்சம் தள்ளி சென்று நின்று கொண்டு “இப்போ உனக்கு என்ன பிரச்சினை? என் முகத்தை கூட பார்த்து பேச மாட்டேங்குற?” என்று கேட்க
சட்டென்று அவன் முகம் பார்த்தவள் என்ன பதில் சொல்வது என்று யோசிக்கலானாள். அவளுக்கு அவனோடு பேசுவதில் எந்த தயங்கும் இல்லை. ஏன் வெற்றியை பற்றி கேட்ட பொழுது பதில் சொன்னாலே. வாயாடவும் தயங்க மாட்டாள். ஆனால் கணவனாக அவனை நினைத்துப் பார்க்கையில்தான் மனம் முரண்டு பிடித்து உடல் ஆட்டம் காண தலை தானாக தொங்கிப் போகிறது என்பதை அவனிடம் எப்படி சொல்வாள்.
“இங்க பாரு? யார் என்ன சொன்னாலும், நான்தான் உன் புருஷன். நீதான் என் பொண்டாட்டி. அத மாத்த முடியாது. அத மட்டும் நல்லா புரிஞ்சிக்க. கண்டதை போட்டு மனச குழப்பிக்காம வீட்டுக்கு போ… நான் உன்ன அப்பொறம் வந்து மீட் பண்ணுறேன்” என்ற சக்தியும் இப்போதைக்கு அவள் எதுவும் பேசமாட்டாள் என்பதினால் அவளை உலுக்காமல் வழியனுப்பி வைத்தான்.
கௌஷி இருந்த மனநிலையில் அப்போதைக்கு அவனோடு என்ன பேசுவது என்று கூட எண்ணத் தோன்றவில்லை. விட்டால் போதும் என்று இருந்தவளோ ஓடியே விட்டிருக்க, பெற்றோரோடு வீடு வந்திருந்தாள்.
வீடு வந்தாலும் அவள் எண்ணமெல்லாம் கணவனின் சிந்தனைதான் ஓடிக்கொண்டிருந்தது. “சின்ன வயதில் நடந்ததை விட்டு விடுவோம். இல்லை இல்லை கொஞ்சம் நேரத்துக்கு மறந்து விடுவோம். இந்த ஆறு வருடங்களாக என்ன செய்துகொண்டிருந்தான். இத்தனை வருடங்களில் இல்லாத அக்கறை திடிரென்று ஏன் வந்தது. எதனால்?”  கிரிஜா வந்து துக்கம் விசாரித்து விட்டு கௌஷி இல்லாத நாட்களில் அவள் எவ்வாறெல்லாம் ஆபீஸ் செல்ல கஷ்டப்பட்டாள் என்பதை கொட்டி விட்டு சென்றிருக்க அது எதுவும் கௌஷியின் கவனத்தில் இல்லை.
இந்திரா இரவு உணவு தயாரிப்பில் இறங்கி இருக்க, “கௌஷிமா… மாப்புள அவரோட சிநேகிதன் அறைக்கு போய் சேர்த்துட்டாரா தெரியல போன் போட்டு கேளுமா” என்றவாறு அவளருகில் வந்தமர்ந்தார் கதிர்வேலன்.
“அவன் என்ன சின்ன பாப்பாவா? வழிமாறி போக? அட்ரெஸ்ஸ தொலச்சாலும் போன் போட்டு விசாரிச்சு கரெக்ட்டா போய் சேர்ந்துடுவான்” கௌஷியின் மனம் கூவினாலும். “என் கிட்ட அவரோட போன் நம்பர் இல்லையப்பா..” என்று தப்பிக்க முயன்றாள் மகள்.
அப்படியெல்லாம் ஷக்தி அவளை அவனிடமிருந்து இலகுவில் ஓடிவிட விட்டு விடுவானா? “என் கிட்ட மாப்புள நம்பர் இருக்குமா? நானே போன் பண்ணி கேட்டிருப்பேன். நான் கேக்குறத விட நீ பேசினா உங்க ரெண்டு பேருக்கும் இடைல ஒரு அன்னியோன்யம் உருவாகும் இல்ல. ஆறு மாசம் கழிச்சி சேர்ந்து வாழுறப்போ எந்த தயக்கமும் இருக்காது” என்றவாறே அவரது அலைபேசியை கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
கௌஷிக்கு தந்தையின் பேச்சு திக்கென்றிருந்தது. ரயிலில் அவன் நடந்து கொண்டதையும் தான் நடந்து கொண்டதையும் கவனித்துதான் தந்தை இவ்வாறு பேசுகிறாரோ! என்ற சந்தேகம் எட்டிப்பார்க்க, சந்தேகம் என்ன சந்தேகம்? அவரது தெளிவான பேச்சே அதுதான் உண்மை என்று அவளுக்கு உறுதி கூற, பெற்றவர்கள் கவனிக்கும் வகையிலான தான் இருந்தோம் என்று நொந்துகொண்டாள். அவர்களின் அச்சம் அவள் அறிந்தது தானே! அதற்காக மனதை மறைத்து நடிக்கத்தான் முடியுமா? நினைக்கும் பொழுதே தலை வலித்தது.
அழைத்து பேசி விடுவோமா? அல்லது தந்தையிடம் பேசி விட்டதாக கூறலாமா? கௌஷியின் மனம் ஒருநிலையில்லாது தள்ளாட,  ஆறு மாதங்கள் கழித்து அவனோடுதான் சென்றாக வேண்டும். சேர்ந்து வாழவென்று சென்று எதிரும் புதிருமாக, எலியும் பூனையுமாக, இருதுருவங்களாக இருந்து விட முடியாதே! இப்பொழுதே பேசிப் பழகினால்தான் பெற்றவர்களின் முன்னிலையிலாவது இயல்பாக இருக்கலாம் என்றெண்ணியவள் பேசி விடலாம் என்று ஷக்திக்கு அழைத்தாள்.
“சொல்லுங்க மாமா” என்றவன் பதில் வரும்வரை காத்திருக்க, கௌஷிக்கு வெறும் காற்றுதான் வந்தது வார்த்தை வரவில்லை.
மறுமுனையில் அமைதியை வைத்தே “ஹோய் கௌஷி நீயா… என்ன போன் பண்ணிட்டு பேசாம இருக்குற? என்ன மௌன விரோதமா?” ஷக்தி அவன் பாட்டுக்கு பேச
“போய் சேர்ந்துட்டீங்களா?” கடனே என்று மொட்டையாக கேட்டு வைத்தாள் சக்தியின் மனையாள்.
“ஏன்டி… ஏன் நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா? என்ன ஒரேயடியா மேல அனுப்ப பாக்குற?” ஷக்தி படபடவென பொரிய ஆரம்பித்தான்.
அவன் மாறியது போல் கௌஷியும் உடனே மாற வேண்டும் என்று ஷக்தி எதிர்பார்ப்பது என்னவோ முட்டாள்தனம் என்று அவனுக்கு புரிந்தாலும் அவன் மனம் கேட்பதில்லை. அவள் அவனோடு இன்முகமாக, அன்பாக பேச வேண்டும் என்று எதிர்பார்க்க, அவளின் முகத்திருப்பல்களும், வெடுக்கென்ற பேச்சும் அவனின் பொறுமையை சோதித்துக்கொண்டிருக்க, சக்தியின் உண்மையான குணம் தலைதூக்கி இருந்தது.
“ஐயோ நான் அந்த அர்த்தத்துல கேக்கல, நீங்க உங்க பிரெண்டு ரூம்க்கு போய்ட்டீங்களான்னு தான்…” எங்கே அவன் கோபம் கொண்டானோ என்று கௌஷி பதறினாள்.
என்னதான் ஷக்தி அவளை பிடிக்காது என்று சிறு வயதில் செய்தவைகளால் மனம் முரண்டிக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவன் கோபம் கூட தன்னை பாதிக்கிறது என்று உணர மறுத்தாள் கௌஷி.
அலைபேசி வழியாக அவளின் பதட்டம் சக்திக்கு சாரல்மழை தூவ “அப்படி தெளிவா கேளுடி பொண்டாட்டி. ஐம் வெரி ஹாப்பி டி பொண்டாட்டி. மொத தடவ எனக்கு போன் பண்ணி இருக்க, சொல்லு உனக்கு என்ன வேணும்” என்று சந்தோசத்தின் உச்சத்தில் ஷக்தி பேச
“என்ன ஆச்சு இவனுக்கு?” எனும் விதமாக கௌஷி அலைபேசியை ஒரு தடவை கையில் எடுத்து பார்த்து விட்டு “நீங்க நல்லபடியா போய் சேர்ந்துட்டீங்களானு அப்பா கேக்க சொன்னாரு. சேர்ந்துட்டீங்க இல்ல. அப்பா கிட்ட சொல்லிடுறேன்” என்றவள் அலைபேசியை துண்டிக்க,
“அப்பா போன் பண்ண சொன்னதுக்காகத்தான் போன் பண்ணாளா? இவளா பண்ணலையா? ஆமா… அவர் நம்பர்ல இருந்துதானே போன் வந்தது. இவ கொஞ்சமாச்சும் என்ன புரிஞ்சிக்க மாட்டாளா? போன் போட்டவ அறை எப்படி இருக்கு? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? அங்க இருந்து ஆபீஸ் ரொம்ப தூரமானு விசாரிக்க வேணாம். அறிவு கெட்டவ” கௌஷி உடனே அலைபேசியை துண்டித்ததில்  சக்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
தந்தையிடம் வந்த கௌஷி ஷக்தி பத்திரமாக அறைக்கு போய் சேர்ந்து விட்டதாக கூற
“மாப்பிளையோட போன் நம்பரை உன் போன்ல சேவ் பண்ணி வச்சிக்கம்மா… அடிக்கடி போன் போட்டு பேசு. வர ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு சாப்பிட வர சொல்லலாம். ரூம்ல தங்கி இருக்குறவரு எங்க சாப்பிடுறாரோ தெரியல” மகள் கண்டிப்பாக விசாரித்து இருக்க மாட்டாள் என்று அறிந்தவராக கதிர்வேலன் மனைவியிடம் பேச
அவசரமாக அலைபேசியை அனைத்தது தவறல்ல அதை அவசரமாக தந்தையிடம் கொடுத்த தன் தவறை எண்ணி நொந்துகொண்டவள் “அவர் இப்போதான் ரூம்க்கு போய் இருக்காருப்பா… நான் போன் பண்ணதும் அப்பொறம் பேசுறதா சொன்னாரு” தன் நெஞ்சறிய பொய் உரைக்கலானாள்.
கௌஷிக்கு சக்தியின் மீதுதான் கோபம் கோபமாக வந்தது. தன் பெற்றோரிடம் அவள் ஒருநாளும் பொய் சொன்னதில்லை. இன்று அவனால் அவள் பொய் சொல்லி இருக்கிறாள். அதுவும் அவர்கள் வருத்தப்படக் கூடாதென்று.
“களைப்பாக இருக்கும் அதான் அப்படி சொல்லி இருப்பாரு” என்றாள் இந்திரா மகளின் வாடிய முகம் கண்டு. 
“என் போன் எடுத்துட்டு வரேன். அவர் நம்பர் சேவ் பண்ணிக்க” என்ற கௌஷி பெற்றவர்களின் முகம் பார்க்க சக்தியற்றவளாக அந்த இடத்திலிருந்து அகன்றிருந்தாள்.

Advertisement