Advertisement

அத்தியாயம் 6
சகாதேவன் இறந்து ஒருவாரம் சென்றிருந்த நிலையில் வீடு ஓரளவுக்கு இயல்பான நிலைக்கு திரும்பி இருந்தது.
இந்திராவும் கதிர்வேலனும் தங்களது குத்தகைக்கு கொடுத்திருக்கும் நிலத்தை பார்வையிட வெளியே சென்றிருந்தனர்.
சகாதேவனின் வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்ததால் கௌஷி வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. அதனால் பெரியம்மாவோடு அமர்ந்திருந்தாள். அக்காவை தனியாக விட்டு செல்ல இந்திராவுக்கும் மனமில்லை அதனால் மகளை அக்காவோடு இருக்கக் கூறி இருந்தாள். 
சாம்பவி வீட்டு வேலைகளை வேலையாட்களுக்கு ஏவியவாறு பார்த்துக்கொண்டதோடு தனது பிறந்த வீட்டில் தனக்கு இல்லாத உரிமையா என்பது போல் அதிகாரம் பண்ணிக்கொண்டு, மகனை கௌஷியின் பக்கம் அண்ட விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“கௌஷிமா என்ன முடிவு பண்ணி இருக்க?”
சந்திரா திடுமென கேட்டதும் ஒரு நொடி குழம்பிய கௌஷி “எத பத்தி பெரியம்மா?” என்று திருப்பிக் கேட்டாள்.
“உன் வாழ்க்கையை பத்தி. ஷக்தியோட சேர்ந்து வாழுறத பத்தி” என்றதும் கௌஷியிடம் பெருத்த அமைதி.
“பெரியப்பாவோட கடைசி மூச்சு போற நிலைமையிலையும் சொன்னது உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க சொல்லித்தான்” என்ற சந்திராவின் கண்ணுக்குள் கணவன் தங்களது ஒரே மகனின் கையை பிடித்துக் கொண்டு சொன்னவைக்கள் நிழலாடியது.
“இந்த குடும்பத்துல மூத்தவனா பொறந்து எல்லாரையும் வழி நடத்த வேண்டியவன் நீ. இப்படி கடைக்குட்டியா பொறந்துட்ட. எனக்கு பொறந்தவன் நீ நியாயமா நடந்துப்பா…னு தெரியும். இந்த குடும்பம் ஒத்துமையா இருக்கணும். கௌஷியும் சக்தியும் ஒன்னு சேரனும். சந்தியாவும் வெற்றியும் ஊருக்கு வரணும். இதுதான் என் கடைசி ஆச” சகாதேவன் அவ்வாறு சொன்னதும் சந்திராவும் ப்ரணவ்வும் அழ ஆரம்பித்திருந்தனர்.
ஆனால் இறக்கும் தருவாயில் சகாதேவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தங்கள் உண்டு என்று அந்த நேரத்தில் அன்னையும், மகனும் அறிந்திருக்கவில்லை.
உண்மையெல்லாம் அறிந்துகொண்டபின் பிரணவ் மகாதேவனின் பேரனாக முடிவெடுப்பானா? அல்லது சந்திராவின் மகனாக முடிவெடுப்பானா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
“ஷக்தி முன்ன மாதிரி இல்ல. ரொம்ப மாறிட்டான். உன் கூட சேர்ந்து வாழனும் என்று ஆசைப்படுறான். நீ ஒரு தடவ அவன் கூட பேசினாலே நீ அவனை புரிஞ்சிப்ப” என்று விட்டு கணவனை பற்றியும் அவர் சொன்னவைகளையும் புலம்ப ஆரம்பித்தாள் சந்திரா.
இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து தினமும் கேட்பவைகள்தான். கேட்டதையே கேட்டுக் கேட்டு கௌஷிக்கு சலித்து விட்டது என்று சொல்வதை விட ஒரு வித வெறுமைதான் மனதில் இருந்தது.
சக்தியின் தோற்றத்தில் நிறைய மாறுதல்களை காணுகின்றாள். தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டதற்காக ஒருவனுடைய பிறவி குணம் அவ்வளவு சீக்கிரத்தில் மாறுமா என்ன? அவளை வெறுக்கும் ஷக்தி அன்பாக பேசுவானா? அவள் மனம் நம்பத்தான் மறுக்கின்றது.
அவன் அவளோடு பேச முயற்சிப்பதும், சாம்பவி நடுவில் வந்து தடுத்து அவனுக்கு ஏதாவது வேலைக் கொடுத்து வெளியே அனுப்புவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருக்க, அவளும் எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்கியே போகலானாள்.
அப்படி என்ன பேசுவானோ என்று மனதின் ஓரம் சில நேரம் ஆசை எட்டிப் பார்க்காமலுமில்லை.
சின்ன வயதில் நடந்துகொண்ட முறைக்கு மன்னிப்புக் கேட்பானோ?
தன்னை கொட்டியதற்கு? திட்டியதற்கு? அடித்ததற்கு? தள்ளி விட்டதற்கு? என்று ஒவ்வொரு சம்பவமும் கௌஷியின் கண்முன்னால் வந்து போக “சின்ன வயதில், அறியாத வயதில் நடந்து கொண்ட எல்லாவற்றுக்கும் அவன் உன்னிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டுமா?” என்று அவள் மனம் கேலி செய்ய தலையை உலுக்கிக் கொண்டாள்.
சில விஷயங்களை வேண்டும் என்றேதான் செய்து இருக்கின்றான். அவற்றுக்காவது மனதார மன்னிப்பு கேட்பானா? கேட்டாலும் தன்னால் மன்னித்து அவனோடு ஒரு இயல்பான வாழ்க்கையை ஆரம்பிக்கத்தான் முடியுமா? நினைக்கும் பொழுதே உள்ளம் பதறியது.
“நடப்பது நடக்கட்டும். நடப்பதை தடுக்க நான் யார். எல்லாம் என்னை கேட்டா நடக்கிறது?” அடுத்த கணம் இவ்வாறு சிந்தித்தவள் அமைதியானாள்.
சக்திக்கு கௌஷியிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்க, அவளோ அத்தையின் அறையை விட்டு வராமல் இருக்கின்றாள் என்பது கொஞ்சம் கடுப்பை ஏற்றி இருந்தாலும் பொறுமையாக அமர்ந்திருந்தான். அவள் குளிக்க, சாப்பிட, புறவாசலுக்கு செல்ல என்று வரும் ஒவ்வொரு தடவையும் அவளை மடக்கி பேச்சுக்கு கொடுத்தால் அவனை கண்காணித்து அவனது அன்னை அவளோடு பேச விடாமல் ஏதாவது வேலை கொடுத்து விடுகிறாள்.
ஒரே வீட்டில் இருந்துகொண்டு கட்டிய மனைவியிடம் பேசக் கூட முடியாமல் என்ன வாழ்க்கை இது? தனக்குள் முணுமுத்தவனின் மனசாட்ச்சியோ “இத்தனை வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று தூற்ற தலையை உலுக்கிக் கொண்டவன் சந்திராவின் அறைக்கதவை பார்த்தவாறு இருந்தான்.
“டேய் உனக்கு பசிக்கலயா? இலவு காத்த கிளி மாதிரி இங்க என்ன பண்ணுற?” சாம்பவி கத்த
“இப்போ உனக்கு என்னமா பிரச்சினை? பசங்க வீட்டுக்கு வரலைன்னாதான் அம்மாக கவலை பாடுவாங்க. நீ என்னடான்னா வீட்டுல இருக்குறவன துரத்த காரணம் தேடிகிட்டு இருக்க” என்றவாறு அன்னையை முறைக்க,
“நான் எதுக்கு உன்ன துரத்த போறேன். வந்து சாப்பிடத் தானே சொல்லுறேன். ஏன் தொரைக்கு பொண்டாட்டி பரிமாறினாதான் சோறு தொண்டையில் இறங்குமோ?” என்று முறைத்தவாறே கிண்டலும் செய்தாள்.
“ஆமா கூப்பிட்ட உடனே ஆசையா அத்தான்னு வந்து பரிமாறி ஊட்டி விட போறா?” கடுப்பாக மொழிந்தவன் “எடுத்து வை வந்து சாப்பிடுறேன். அந்த வேலையாச்சும் வேலா வேலைக்கு செய்யிறேன்” கோபமாக அன்னையின் பின்னால் சென்றான் ஷக்தி.
சாப்பாடு பரிமாறும் பொழுது கூட “பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுது என்றுதான் பேரு, பொங்கி போடவும், பரிமாறவும் நான் வரணும்” என்ற முணுமுணுப்போடு சாம்பவி பரிமாற ஷக்தி பல்லைக் கடித்தவாறே சாப்பிடலானான்.
கௌஷியிடம் பேசக் கூட விடாமல் நந்தி போல் நடுவில் வந்து வேலை ஏவுவதும், முறைப்பதுமாக இருந்துக் கொண்டு என்ன பேச்சு பேசுது” என்றது அவன் மனது
“ஆயிரம் இருந்தாலும் அம்மா போல வருமா? பிணில படுத்தாலும், ஊட்டி விடவும், கழுவி விடவும் அம்மா மட்டும் தான் டா அத நியாபகத்துல வச்சிக்க. கண்டவளெல்லாம் வர மாட்டாளுங்க” சாம்பவி கொஞ்சம் சத்தமாகவே சொல்ல சக்தியின் கோபம் எகிறியது.
சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை விசிறி அடித்தவன் “கௌஷி…” என்று கத்த
அவன் வாசலில் அமர்ந்திருந்ததிலிருந்த நடந்த அன்னை மகன் சம்பாஷனையும் அவள் காதில் விழுந்திருக்க, தட்டு பறந்ததில் சந்திராவும் அவளும் என்ன? ஏதோ? என்று சாப்பாட்டறையை நோக்கி வந்திருந்தனர்.
“நீ கண்டவளா? நீ கண்டவளா? எங்கம்மா சொல்லுறாங்க? நீ கண்டவள் என்று. ஏன் இப்படி நடந்துகொள்ளுற? எனக்கு பரிமாற கூட உனக்கு நேரம் இல்லையா? அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேல உனக்கு? வா வந்து பரிமாறு?” என்றவனோ எதுவும் நடவாதது போல் அவள் கையை பிடித்து இழுத்தது மட்டுமல்லாது தனக்கு வேறொரு தட்டையும் வைத்துக்கொண்டு அமர்ந்து விட திகைத்து சாம்பவி மற்றும், கௌஷியின் முறையானது.
கௌஷியிடம் ஷக்தி “எனக்கு பரிமாற உனக்கு இஷ்டமில்லையா?” என்று கேட்டிருக்க வேண்டியது. ஆனால் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவன், என்னமோ அவளோடு இந்த ஆறாண்டு காலமாக சந்தோசமாக குடும்பம் நடாத்தியது போல் “எனக்கு பரிமாற கூட உனக்கு நேரமில்லையா?” என்று கேட்டது கௌஷியின் திகைப்புக்கு காரணம் என்றால் “உனக்கு அவ்வளவு வேலையா? எங்கம்மா அவ்வளவு வேலை ஏவுரங்களா?” என்று மறைமுகமாக சாம்பவியையும் தாக்கி இருந்ததுதான் சாம்பவியின் திகைப்புக்கு காரணம்.
என்னவோ மனைவி உள்ளே வேலையாக இருக்கிறாள். அல்லது தங்களது குழந்தையை கவனித்துக் கொள்வது போல் அவன் பேச சந்திராவுக்கு சிரிப்பாகத்தான் இருந்தது.
“என்ன கௌஷி மசமசன்னு நிக்குற? உன் புருஷனுக்கு பரிமாறு. ஆயிரம்தான் இருந்தாலும் பொண்டாட்டி அன்பா பரிமாறினாதான் புருஷன் ஒருபுடி அதிகமா சாப்பிடுவான்” தங்கை பெண்ணை ஏவிய சந்திரா சாம்பவியை கண்டுகொள்ளாது வேலையாளை அழைத்து சாதம் கொட்டியிருந்ததை சுத்தம் செய்யும்படி சொல்ல கௌஷி பெரியம்மா பேச்சை மீற முடியாமல் சக்திக்கு பரிமாற ஆரம்பித்தாள்.
“நீ சாப்பிட்டியா?” ஷக்தியின் குரலில் என்ன இருந்தது கௌஷியால் உணரவே முடியவில்லை. 
“இன்னும் இல்ல” அவன் கேட்டதற்காக மட்டும் பதில் சொன்னாள்.
“சாப்பிடாம என்ன பண்ணிக்கிட்டு இருந்த? முதல்ல உக்காரு” அவளையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டவன் அவனே அவளுக்கு பரிமாற கௌஷியின் கண்கள் தானாக சாம்பவியைத்தான் ஏறிட்டன.
எரிமலை குழம்பாக தகித்துக் கொண்டிருந்தவளோ “இங்க அம்மா இன்னும் சாப்பிடல. சாப்பிட்டியா? என்று கேக்க நாதி இல்ல. அவளுக்கு பறிமாறுறான்” என்று முணுமுணுக்க,
ஷக்தி கௌஷியின் தட்டில் இருந்ததை பிசைந்து அவளுக்கு ஊட்டி விடலானான்.
அதை பார்த்த சாம்பவிக்கு மேலும் எரிய அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள்.
“இல்ல நானே சாப்புடுறேன்” திடீரென்று நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறிய கௌஷி தடுமாறலானாள்.
“நல்லா அள்ளி சாப்பிடு. பாரு குச்சி ஐஸ் போல ஆகிட்ட” என்றதும் அவள் அவனை சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
கௌஷிக்கு குச்சி ஐஸ் என்றால் கொள்ளைப் பிரியம். சின்ன வயதில் கலர் கலராக சாப்பிட்டு வாயை தினமும் ஒவ்வொரு கலரில் வைத்து சக்திக்கு பழிப்பு காட்டுவாள். அவனும் இவளை வெறுப்பேத்த “குச்சி ஐஸ் சாப்பிட்டு அதே மாதிரி இருக்க” என்பான். இன்று அதையே சொன்னதும் சின்ன வயது நியாபகங்கள் கண்முன் வந்துபோக அவனை பார்த்தாலும் அவனோ உணவில் கவனமாக அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் சாதாரணமாக சொன்னானா? தன்னை கிண்டல் செய்தானா? என்று கௌஷிக்குத்தான் குழப்பம்.
கௌஷியும் சாப்பிட்டு முடிந்து எழுந்து செல்ல முட்பட அவள் கையை பிடித்து தடுத்தவன் “நான் இன்னும் சாப்பிட்டு முடிக்கல” என்று அவளை நகர விடாது தடுத்துக்கொண்டு எண்ணி எண்ணி சாதத்தை பருக்கையாக சாப்பிட முடியும் என்றால் அப்படிக் கூட சாப்பிட்டிருப்பான்.
ஷக்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்று சொல்வதை விட நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். கௌஷி தனது அருகில் மிகவும் நெருக்கத்தில் இருக்கும் இந்த தருணத்தை இழக்க அவன் விரும்பவில்லை.
எவ்வளவு நேரம்தான் சாப்பிடுவது? ஏப்பம் விட்டவாறே எழுந்து கொண்டு ஷக்தி கௌஷியோடு சென்று கைகழுவி புன்னகைத்தவாறே அவளது புடவை முந்தியால் கையையும் துடைத்துக் கொண்டான்.
கௌஷியோ நடப்பவற்றை ஆவென பார்த்திருந்தாலே ஒழிய எதுவும் பேசவில்லை. அவளின் அமைதியை பயன்படுத்திக் கொண்ட சக்தியும் மூன்று வேலையும் அவளோடு உணவு உண்பது, அவள் புடவை முந்தியில் கைதுடைப்பது எதற்கெடுத்தாலும் கௌஷி கௌஷி என்று அவளை அழைக்க ஆரம்பித்தான்.
எட்டாம் நாள் சிறப்பாக எட்டு கும்பிடுதலை செய்தது போல் பதினாறாம் நாள் காரியத்துக்கு பத்திரிகை அடித்து நெருங்கி சொந்தபந்தங்களை மட்டும் அழைத்திருந்தனர்.
வள்ளுவர் கல் நிறுத்துதல் எனும் சடங்கை செய்ய  பதினைந்தாம் நாள் இரவு எட்டு மணி வாக்கில் ஒரு முழு செங்கல்லை நீராட்டி அக்கல்லில் பூச்சரத்தைச் சுற்றி திண்ணையில் வைக்கப்பட்டிருக்க,  பதினாறாம் நாள் காலையில் கல்லை எடுத்துக் கொண்டு பிரணவ் ஆண்களோடு  கருமாதி செய்வதற்காக ஆற்றுக்கு சென்றிருந்தான்.
சகாதேவனும் பிடித்தமான உணவுகளை தன் கையால் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக சந்திரா படையலுக்காக செய்து கொடுத்திருக்க, கௌஷியும் பெரியம்மாவுக்கு உதவி விட்டு அன்னையோடு அமர்ந்திருந்தாள்.
“மதியத்துக்கு பிறகு ஊருக்கு கிளம்பனும் இல்ல அம்மா எல்லா பொருட்களையும் எடுத்து வைக்கவா?” என்று கௌஷி கேட்க, இந்திராவுக்கு திக்கென்றானது.
என்ன இவள் புருஷன் கூட சேர்ந்து வாழ கொஞ்சம் கூட ஆசைப்படாமல் இப்படி பேசுறாளே என்ற கோபமும் எட்டிப்பார்க்க “நாளைக்கு காலைல தான் போறோம். ஒன்னும் அவசரம் இல்ல” என்று மகளிடம் பாய்ந்து விட்டு மதிய சமையலை கவனிக்க சென்றாள்.
அன்னையின் ஆதங்கம் கௌஷிக்கு புரியாமலில்லை. சக்தியோடு வாழ்வதற்கு அவன் அன்னை ஒரு காலமும் சம்மதிக்க மாட்டாள். சதா சண்டையும் சச்சரவுமாக அவளோடு ஒரே வீட்டில் குடித்தனம்தான் நடாத்த முடியுமா? அதுவுமில்லாமல் அவளது வேலை. அதை வேறு விட்டு விட்டு ஊரிலையே தங்கி விட வேண்டிய சூழ்நிலை வருமே. எல்லாவற்றையும் நினைக்கையில் கௌஷிக்கு தலையே வலித்தது.
மகாதேவனின் அப்பா காலத்திலிருந்தே வீட்டுக்கு வருவோருக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லாத குடும்பம் சகாதேவன் இல்லையென்று ஆனால் மட்டும் அந்த பழக்கம் போய் விடுமா? சிலர் வீடு தேடி வந்து உண்டு விட்டு செல்ல சிலரின் வீடு தேடி சென்று  உணவுப்பொதிகளை வழங்கி விட்டு வந்திருந்தனர் சக்தியும் ப்ரணவ்வும்.
மகனை கண்டதும் ஓடி வந்த சாம்பவி “வா ஷக்தி வீட்டுக்கு போலாம். தாத்தாவோட நினைவு நாள் வேற வருது. திதி வேற கொடுக்கணும். நாம தானே எல்லாம் முன்ன நின்னு செய்யணும்”
சாம்பவி சொல்வது என்னமோ உண்மைதான். ஒரு மருமகளாக அவள் எந்த கடமையையும் தவற விட்டதில்லை. ஏன் மகளாகக் கூட எல்லாம்  பொறுப்பாக செய்பவள் தான். அதில் அவளை யாரும் குறை சொல்லிட முடியாது.
ஆனால் கருமாதி முடிந்து வந்த கையேடு வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக அன்னை தங்களது வீட்டுக்கு செல்லாம் என்று தாத்தாவின் திதியை காரணம் காட்டுவது ஒன்றும் மருமகளாக கடமையை செய்ய மட்டுமல்ல என்று சக்திக்கு புரியாமலில்லை.
ஷக்தி கௌஷியிடம் உரிமையாக நடந்துகொள்வதை பார்த்த பின்தான் சாம்பவி இப்படியொரு முடிவுக்கு வந்திருக்கின்றாள் என்று புரிந்துகொண்ட ஷக்தி “போலாம்மா… பொறு அப்பா வரட்டும்” என்றான்.
மகன் அவ்வாறு சொன்னதும் சற்று குழம்பிய சாம்பவி மகன் கிளம்பலாம் என்கிறதே போதும் என்று வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமானாள்.
வளமை போல் கௌஷி அறையில் இருந்தவாறு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாலும் அமைதியாக இருந்தாள்.
“என்னக்கா…” என்று இந்திரா அக்காவை கேட்க தங்கையை அமைதியாக இருக்கும்படி கூறினாள் சந்திரா.
கபிலரும், கதிர்வேலனும் வந்திருந்த சொந்தபந்தங்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வர ஷக்தி அன்னை கூறியதை தந்தையின் காதில் போட்டிருந்தான்.
திருமணம் என்பது ஒன்றும் விளையாட்டு இல்லையே. வெற்றி தனது விருப்பத்துக்கு சந்தியாவை திருமணம் செய்து கொண்டான் என்றால் அதற்கு கௌஷி காரணமாக முடியாதே. அவளது வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்?
மகனுக்கு பேசி புரிய வைக்கவே ஆறு வருடங்கள் எடுத்திருக்க, ஒருவழியாக இப்பொழுதுதான் அவன் மனைவியோடு சேர்ந்து வாழவே ஆசைகொள்கின்றான்.
மனைவியின் வீணான பிடிவாதத்தினாலும், கோபத்தினாலும் இவர்களின் வாழ்க்கையை வீணடிக்க முடியுமா? கபிலருக்கு கோபம் கோபமாக வந்தாலும், பொறுமையின் சிகரமாக இருப்பதனால் சக்தியிடம் தான் பார்த்துக்கொள்வதாக கூறினார்.
சாம்பவி தங்களது துணிப்பையையும் சுமந்துக்கொண்டு வாசலுக்கு வந்தவள் “அண்ணி…அண்ணி..” என்று சத்தமாக அழைக்க சந்திராவோடு இந்திராவும் வந்து நின்றாள்.
 “அப்போ நாங்க கிளம்புறோம்” என்று சந்திராவை மாத்திரம் பார்த்து கூறியவள் ஷக்தியிடம் துணிப்பையை கொடுக்க,
அதை வாங்கிக் கொண்ட கபிலர் “ஷக்தி இருக்கட்டும் சாம்பவி. நாம மட்டும் போலாம்” என்றார்.
“என்ன பேசுறீங்க? அவனை இங்க விட்டுட்டு நாங்க மட்டும் போய் என்ன பண்ண?” பதறியவளாக சாம்பவி மகனின் முகம் பார்க்க, கௌஷியும் அறையின் வாசலுக்கு வந்து நின்று வேடிக்கை பார்கலானாள்.
“அவன் ஏற்கனவே சென்னையில வேலைக்கு சேர வேண்டி இருக்கு. மச்சானோட காரியமெல்லாம் நாமளே இருந்து பண்ணனும் என்று வேலைல சேராம இருக்கான். மருமகளோட அவன் சென்னைக்கு போகட்டும். அங்கேயே இருக்கட்டும்”
கபிலர் நன்றாக யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்திருந்தார். சாம்பவியோடு கௌஷி ஒன்றாக இருந்தால் நிச்சயமாக பிரச்சினை வரும். ஷக்தி சென்னைக்கு செல்வதால் இந்த முடிவுதான் சரி என்று அவருக்கு தோன்ற தன் முடிவை அத்தனை பேரின் முன்னால் கூறி இருந்தார்.
ஷக்தி சென்னைக்கு வேலைக்கு போவது சாம்பவிக்கு பிடிக்கவில்லைதான். ஆனால் அது அவன் வேலை. வாழ்க்கை என்று பிடிவாதம் பிடிக்கும் பொழுது என்ன செய்வாள். ஏதாவது காரணம் கூறி மகனை ஊரிலையே வைத்துக்கொள்ளலாம் என்று யோசித்தால் கணவனே மருமகள் என்பவளோடு மகனை அனுப்பி விடுவாராம். அதுவும் வீட்டோடு மாப்பிள்ளையாக.  
“அறிவிருக்கா உங்களுக்கு? மூத்தவன் எங்க இருக்கானென்றே தெரியல. அவனை எங்க கிட்ட இருந்து பிரிச்சி குடும்பம் இந்த இந்திரா குடும்பம். இப்போ ரெண்டாவது பையனையும் வீட்டோட மாப்பிள்ளையா அனுப்ப போறீங்களா?” என்று கோபமாக கத்த ஆரம்பித்தாள்.
“இப்போ உனக்கு ஷக்தி வீட்டோட மாப்பிள்ளையா போறதுதான் பிரச்சினையா?” என்று சாம்பவியை மடக்கிய கபிலர் “ஷக்தி நீ மருமகளோட தனியா அபார்மண்ட் வாங்கி குடியேறு. நமக்கு இல்லாதா காசா பணமா?” என்று கபிலர் பேச சாம்பவி கணவனை முறைக்கலானாள்.
“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க? இந்த குடும்பத்தோட எந்த சகவாசமும் வேணாம்னு சொல்லுறேன். புரியலையா உங்களுக்கு”
“சாம்பவி நானும் இத்தனை நாளா பொறுமையா இருந்தேன். இந்த குடும்பம்னு நீ சொல்லுற என் தங்கை குடும்பம் என் குடும்பம். அவளை ஒதுக்குறது என்ன ஒதுக்குறதுக்கு சமம் வார்த்தையை விட முன்னால யோசிச்சு பேச” சந்திரா கோபத்தை அடக்க முடியாமல் பேசினாள்.
“என்ன அண்ணி அண்ணன் இருக்குறவரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்போ பேசுறீங்க?” சாம்பவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.
“உன் அண்ணன் இருந்தா அவர் பேசுவாரு. அவர் இல்லாததாலதான் நான் பேசுறேன். உறவை முறிக்கிறதுனு முடிவு பண்ணிட்டா மொத்தமா முறிச்சிக்கலாம்” சந்திரா முடிவாக பேச ஒரு நொடி ஆடிப்போனாள் சாம்பவி. 
அவள் பிறந்து வளர்ந்த வீட்டொடு உறவை முறித்துக்கொள்வதா? என்ன பேச்சு இது?
“அண்ணா இல்லை என்றதும் என்ன துரத்தி விட்டு மொத்த சொத்தையும் எடுத்துக்கலாம் என்று பாக்குறீங்களா?” எதை சொல்லி தாக்கினால் சந்திரா அடங்குவாளோ அதை சொல்லி தாக்க, சந்திரா அசரவில்லை.
“சொத்துதான் உனக்கு பிரச்சினை என்றால் வக்கீல் மூலமா தீர்த்துக்கொள்ளலாம். உறவுதான் முக்கியம் என்றால் என் தங்கச்சி பொண்ணும் உன் பையனும் சேர்ந்து வாழனும். இது என் புருஷனோட கடைசி ஆச” என்ற சந்திராவின் கண்கள் கலங்கி இருக்க கௌஷி பெரியம்மாவை அணைத்துக் கொண்டாள்.
“உன் அண்ணனுடைய கடைசி ஆசையை கூட நிறைவேத்த உனக்கு மனசு இல்லையா? அவ்வளவுக்கு நீ கல்நெஞ்சுக்காரியா?” என்று கபிலர் பேச சாம்பவி என்ன பேசுவதென்று புரியாது நின்றாள்.
“எதுக்கு இப்போ எல்லாரும் அம்மாவ பந்தாடுறீங்க, நல்ல நாளா பார்த்து அவங்களே வீடு குடிபுக ஏற்பாடு செய்வாங்க” என்றான் ஷக்தி.
“கல்யாணம் நடந்திருச்சு, மண்டபத்துல எல்லா சடங்கும் பண்ணோம். வீட்டுல பண்ண வேண்டிய எதுவும் பண்ணல. அதுக்கு இப்போ காலமும் இல்ல. தாலி பிரிச்சு மட்டும் கோர்த்துடலாம் அவர் இறந்துட்டதால ஆறு மாசம் போன பிறகு வச்சிக்கலாம். அதுவரைக்கும் இவங்கள பிரிச்சு வைக்க வேணாம்” என்று சந்திரா சொல்ல
“எதுவோ பண்ணிக்கோங்க” என்பது போல் அமர்ந்து விட்டாள் சாம்பவி.
“ஆறு வருஷம் பிரிஞ்சி இருந்தவங்க ஆறு மாசம் பிரிஞ்சி இருக்க மாட்டாங்களா? தாலி பிரிச்சி கோர்க்கும் சடங்கு பண்ணியே ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்து விடலாம்” மெதுவான குரலில் இந்திரா சொல்ல
“ஐயோ அத்த” என்றான் ஷக்தி.
“என்ன ஷக்தி அத்தான். கௌஷி அக்காவை பிரிஞ்சி இருக்க முடியாதா?” பிரணவ் கிண்டல் செய்ய
அசடு வழிந்தவாறே “நீ வேற சென்னைல நான் தனியாக இருக்கணும். தனியாக சமையல் பண்ணனும், துணி துவைக்கணும், வீட்டை பார்த்துக்கணும். கௌஷி கூட இருந்தா அவ அந்த வேல எல்லாம் பார்த்துப்பா இல்ல” என்றான் சமாளிப்பாக.
“அதுக்கு ஒரு வேலைக்காரிய வச்சிக்கோங்க. எதுக்கு எங்க அக்காவ தேடுறீங்க” என்று பிரணவ் கிண்டல் செய்ய கௌஷி சக்தியை முறைக்க, அவனோ அவளை பாவமாக பார்கலானான்.     
ஒரு வழியாக அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து ஷக்தி மற்றும் கௌஷியை ஆறு மாதங்கள் கழித்து சேர்த்து வைக்க முடிவு செய்திருக்க, கௌஷி குடும்பம் சென்னை நோக்கி பயணம் செய்திருந்தனர்.
 “அப்பா உசுரோட இருந்தவரைக்கும் பண்ண முடியாத காரியத்தை செத்து சாதிச்சிட்டாரு” சந்திரா கண்கள் கலங்கியவரு சொல்ல
பிரணவ் அன்னையின் மடியில் தலை வைத்தவாறு படுத்துக்கொண்டு  “அத்தைக்கு சித்தி மேல எதற்கு இவ்வளவு கோபம். எனக்கு புரியவே இல்ல. அப்பாவோட கடைசி ஆச என்றதும் தான் அமைதியானங்க”
“நடந்தத நம்மளால மாத்த முடியாது. ஷக்தி சென்னை போனா எங்க தங்குறான்னு கேட்டியா?”
“அவரு பெரியப்பா ட்ரையின் டிக்கட் போடும் போதே போட்டுட்டாரு. அக்கா கூடத்தான் போய் கிட்டு இருப்பாரு. எல்லாத்தையும் அவர் பாத்துப்பாரு. இந்த வெற்றி அத்தான் தான் எங்க இருக்கார்னு தெரியல. அவரை எப்படி கண்டு பிடிக்க போறேன்னு புரியல” தனது தந்தையின் இறுதி ஆசைகளை நிறைவேற்ற ஒரு மகனாக தவித்தான் பிரணவ்.
“சக்திக்கும் கௌஷிக்கும் ஒரு வழிய காட்டின உங்க அப்பா, வெற்றியும் சந்தியாவும் இருக்கும் இடத்தையும் காட்டுவார்” என்றாள் சந்திரா.

Advertisement