Advertisement

அத்தியாயம் 5
சந்தியா பக்கத்து ஊரிலுள்ள கல்லூரியிலையே சேர்ந்திருக்கலாம். வெற்றி சென்னையில் இருப்பதால் சென்னையில் உள்ள காலேஜில் சேர்ந்திருந்தாள்.  மனதில் காதல் புகுந்ததோடு கள்ளத்தனமும் சேர்ந்து புகுந்திருந்தது.
சந்தியாவுக்கு வெற்றியை சின்ன வயதிலிருந்தே தெரியும். அவளிடம் ரொம்பவே பாசமாக நடந்துக் கொள்பவன்.
அவன் பாடசாலை செல்லும்வரை அவளோடு அவனது உறவு நல்ல முறையில்தான் இருந்தது. உரிமையோடு பழகுவான். சின்ன வயதில் கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று கேட்டதோடு சரி அதன்பின் அதை பற்றி அவன் பேசவில்லை.
அவன் ஊரை விட்டு செல்லும் போது கூட சந்தியாவை சந்தித்து “நல்லா படித்து ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண் வாங்கு” என்று வாழ்த்தி விட்டு மட்டும்தான் சென்றான்.
சிலநேரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியம்மா வீடு சென்றால் வெற்றி அலைபேசி அழைப்பு விடுப்பான். அப்போது பேசினால் கூட “நல்லா படிக்கிறாயா?” என்று மட்டும்தான் கேட்பான்.
ஆனால் சந்தியாவுக்குத்தான் அவனை பார்க்காமல், பேசாமல் எதையோ இழந்ததை போன்ற உணர்வில் இருந்தாள். நாளாக நாளாக தான் வெற்றியை நேசிப்பதை உணர்ந்துக் கொண்டவள் அதை அவனிடம் சொல்லவும் முடியாமல் தவிக்கலானாள்.
அவள் சொல்லி வெற்றி ஏற்றுக்கொள்வதில் இல்லை பிரச்சினை சாம்பவி ஒரு நாளும் தன்னை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று புத்தியில் உரைக்க, தனக்குள்ளேயே முளைத்த காதலை புதைத்துக்கொண்டாள்.
மனதை அலைய விடாமல் படிப்பில் கவனம் செலுத்தியவள் ப்ளஸ் டூ பரீட்ச்சையை நல்ல முறையில் எழுதி இருந்தாள்.
அந்த நேரத்தில் தான் வெற்றி காலேஜ் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான்.
“பரீட்ச்சை எல்லாம் நல்லா எழுதினியா?” திடுமென கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பிய சந்தியா அங்கே வெற்றியைக் கண்ட ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் மல்க அவனை பார்த்தவள் தலையை ஆட்டுவித்தவாறே தலையை குனிந்து கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
மாலைவேளையில் மாமரத்தடியில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கௌஷியும் அவளும் மாங்கனி சாப்பிட்டுக்கொண்டிருக்க, கௌஷி உப்பும் மிளகாய் தூளும் எடுத்து வருவதாக உள்ளே சென்றிருந்தாள். அந்த நேரத்தில்தான் வெற்றி வந்து சந்தியாவிடம் பேசி இருந்தான்.
சந்தியாவை அவன் மாமா சகாதேவனின் வீட்டில் சந்தித்தால் பேசுவதோடு சரி வேறு எங்கு கண்டாலும் புன்னகைப்பதோடு வீணாக பேச மாட்டான். அதனால் சாம்பாவியும் மகனை அதட்டவில்லை. மகன் மனதில் என்ன இருந்தது என்றும் தெரியவில்லை.
“பாஸ் ஆகிடுவியா?” வெற்றியின் அடுத்த கேள்விக்கு திருதிருவென முழித்தவள் அதற்கும் தலையை ஆட்டுவித்திருக்க, “மேல என்ன படிக்க போற?” என்று கேட்க ஒன்றும் அறியாத குழந்தை போல் அவனையே பார்த்திருந்தான் அவள்.
“இப்படியே பார்த்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம். இதைத்தான் படிக்க போறேன். அதுவும் சென்னைலதான் படிக்க போறேன்னு வாய தொறந்து சொல்லு” என்றதும் சந்த்யா வெற்றியை புரியாது பார்த்தாள்.
அவளை தீர்க்கமாக பார்த்தவன் “என்ன பாக்குற? உன்ன கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு எனக்கு உன்ன பிடிக்கும். இவ்வளவு நாள் சொல்லாம இருந்ததே தப்பு” வெற்றி மேலும் என்ன சொல்லி இருப்பானோ அவனின் அந்த வார்த்தை செவியை தீண்டிய நொடி சந்தியா அவன் நெஞ்சிலையே சாய்ந்து ஓ…வென அழ ஆரம்பித்திருந்தாள்.
 அவள் நெஞ்சை அழுத்திய பாரம் அவன் பேசிய பேச்சில் கரைந்து கண்ணீராக வெளியேற ஏங்கி ஏங்கி அழுபவளை பதட்டோத்தோடு தன்னிடமிருந்து பிரித்த வெற்றி அவளுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று அச்சத்தோடு அவளிடம் வினவளானான்.
அந்த கணம் சந்த்யா சாம்பவியை மறந்தாள். தன் குடும்பத்தையும் மறந்தாள். “இத்தனை நாளா ஏன் சொல்லல ஏன் சொல்ல” என்று அவன் தோளில் அடிக்க
“உனக்காகத்தான் உன் படிப்பு கெட்டிடும் என்று”
“என்ன ரெண்டு பேரும் அடிச்சி புடிச்சி விளையாடுறீங்களா?” என்றவாறு கௌஷி வரவும் அவர்களின் பேச்சும் தடை பட்டது. சந்தியாவின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.
சந்தியாவின் முகம் கலக்கத்தை காட்டவே “கௌஷி எனக்கு குடிக்க தண்ணி எடுத்துட்டு வரியா?” என்று வெற்றி கேட்டதும்
“சரி” வெற்றி அத்தான் என்று சிட்டாக பறந்திருந்தாள் சின்னவள்.
கௌஷிக்கு எப்பொழுதும் வெற்றியை பிடிக்கும். அக்காவின் மீது பாசம் வைத்திருப்பது போல் அவள் மீதும் பாசம் வைத்து அவள் என்ன கேட்டாலும் செய்து கொடுக்கும் வெற்றி அத்தானை பிடிக்காமல் போகுமா என்ன?
“என்ன பிரச்சினை?” சந்தியாவின் முகத்தை ஏறிட்டவாறே நின்றான் வெற்றி.
எப்படி சொல்வது என்று திணறியவள் ஒருவாறு திக்கித் திணறி அவன் அன்னைதான் பிரச்சினை பண்ணுவாள் என்று கூற,
“அம்மாவை பத்தி ஏன் யோசிக்கிற? முதல்ல படிக்கிற வேலைய பாரு. நான் மாமா கிட்ட நம்ம கல்யாணத்த பத்தி பேசுகிறேன். அவர் சொன்னா அம்மா கேப்பாங்க” என்றான் நம்பிக்கையாக.
சகாதேவன் சொன்னால் சாம்பவி கேட்டுக்கொள்வாள் என்ற நம்பிக்கை சந்தியாவுக்கு இருக்க, அடுத்து ஒன்றும் அவள் வெற்றியை கேட்கவில்லை.
ப்ளஸ் டூ பெறுபேறுகள் வந்த பின் சென்னையில்தான் படிக்க வேண்டும் என்று கதிர்வேலனிடம் போய் நின்றாள்.
அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்று இந்திரா மறுக்க, பெண் ஆசை படுகிறாள் என்று கதிர்வேலன் சம்மதித்தார்.
சகாதேவனிடம் பேசிய போது வெற்றியும் அங்குதான் இருக்கின்றான். ஏதாவது ஒன்றென்றால் அவன் பார்த்துக்கொள்வான் என்றார் அவரும்.
சந்தியா மற்றும் வெற்றியின் நோக்கம் என்னவென்று தெரியாமளையே வீட்டார் சந்தியாவின் முடிவுக்கு சம்மதித்திருக்க, வெற்றியும் சந்தியாவும் சென்னையில் சுதந்திரமாக காதல் வானில் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தனர்.  
சந்தியா படித்து முடியும்வரை சென்னையிலையே இருக்க, ஒரு வேலையையும் தேடிக்கொண்டவன் தினமும் அவளை சந்தித்து வந்தான்.
வெற்றியை தரையிறக்கும் செய்தியாகத்தான் சாம்பவி திருமணம் பேசி பரிசம் போட்டு விட்ட செய்தி அலைபேசி வழியாக வெற்றியை வந்தடைந்தது. 
அன்னையிடம் பேசி புரிய வைக்க முடியாது என்றுதான் அவ்வாறு பேசி வைத்தவன் சகாதேவனிடம் பேசலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தான்.
அந்த நேரம் சந்த்யா அழைத்து அழுது கரைய, கோபத்தில் அவளை திட்டி விட்டான் வெற்றி.
 கௌஷி அழைத்து வெற்றிக்கு திருமணம் பேசி உறுதி செய்து விட்டதை அக்காவிடம் கூற, சந்தியாவின் காதல் கோட்டை தன் கண்முன்னால் சுக்கல் சுக்களாக உடைந்து விழுந்தது.
தான் நினைத்தது போல் சாம்பவி ஒரு நாளும் தன்னை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற கவலையில் வெற்றியை அழைத்து புலம்பினாள் அவனும் இருந்த கடுப்பில் அவளை திட்டி விட்டிருந்தான்.
பயத்திலும் அதிர்ச்சியிலும் சந்தியா மயங்கி விழ, அவளை மருத்துவமனையில் அனுமதித்த ஹாஸ்டல் வார்டன் வெற்றிக்குத்தான் தகவல் சொல்லி இருந்தார்.
சந்தியாவை ஹாஸ்டலில் சேர்க்கும் பொழுதே எதுவானாலும் வெற்றிக்கு சொல்லுமாறு கதிர்வேலன் கேட்டுக்கொண்டதால் வடர்ன் வெற்றிக்கு தகவல் சொல்லி இருக்கு அவனும் பதறியவாறு மருத்துவமனையை வந்தடைந்தான்.
 வெற்றியின் திருமண செய்தி கேட்ட அதிர்ச்சி போதாததற்கு அவன் திட்டியதென்று தாங்க முடியாமல்தான் மயங்கி விழுந்திருக்கின்றாள் சந்தியா.
“இதுக்கே இப்படி என்றால்? எப்படி?” அவளை கடிய முடியாமல் அவளருகில் அமர்ந்திருந்தான் வெற்றி.
“நீங்க உங்க அம்மா பார்த்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க” தலை குனிந்தவாறு சந்த்யா சொல்ல
அவளை அறைய வேண்டும் போல் இருந்தாலும் “சரி பண்ணிக்கிறேன்” என்றவன் அவள் முகத்தையே பார்த்திருக்க,
மறுத்து பேசுவான், அவளை திட்டுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவனது பதில் ரணவேதனையை கொடுக்க அவ்வளவுதானா என்ற பார்வையை அவன் மீது வீசினாள்.
“என்ன அப்படிப் பாக்குற? இந்த பதில எதிர்பார்க்கலையா? நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ உன் வீட்டுல பாக்குற மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்கிட்டு, ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கலாம் சரியா” என்று அவளை சீண்ட சந்தியாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.  
“என்னலால நீ இல்லாம வாழ முடியாது. உன்னால நீ இல்லாம வாழ முடியாது. என்ன பண்ணலாம் நீயே சொல்லு” என்று அவளிடமே கேட்க அழுகையை நிறுத்தியவன் உதடு கடித்தவாறு மெளனமாக அவனை பார்த்திருந்தாள்.
நிச்சயமாக வேறொருவனை திருமணம் செய்து கொண்டு வெற்றியை மறந்து வாழ முடியாது என்று நன்றாகவே தெரிய திருமணம் செய்துகொள்ளலாமா என்று வாய் வரை வந்த வார்த்தையைத்தான் உதடு கடித்து தடுத்து நிறுத்தி இருந்தாள்.
“கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று வெற்றி முடிவோடு கேட்க அவனை கட்டிக்கொண்டு கதறலானாள் சந்தியா.
அந்த கண்ணீருக்கு பின்னால் தான் செய்ய போகும் காரியத்தால் தன் குடும்பம் சாம்பவியிடம் என்ன மாதிரியான பேச்சுக்கள் கேட்ட நேரிடும் என்ற பயம் மட்டுமே இருந்தது.
அது வெற்றிக்கும் புரியவே “கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் பேசுவோம் தியா… உங்க வீட்டுல புரிஞ்சிப்பாங்க. எங்க அம்மாவ நான் பார்த்துப்பேன்” என்றான் வெற்றி.
தலையசைத்து மறுத்தவள் “இல்ல. ஊருக்கு போக வேணாம். என்னால எங்கப்பா அம்மா முகத்தை பார்க்க முடியாது” என்றாள் தலை குனிந்தவாறு.
செய்வது திருட்டுக்கு கல்யாணம். அது தப்பு எங்குறதால அம்மா, அப்பா முகத்தை பார்க்க முடியாது என்று சொல்வது தெளிவாக புரிந்தாலும், அவள் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தது வெற்றிக்கு நிம்மதியை கொடுக்க, வேறு எதையும் பற்றி சிந்திக்காமல் உடனே திருமண ஏற்பாடுகளை கவனிக்கலானான்.
சென்னையில் இருந்தால் தங்களை தேடி வந்து விடுவார்கள் என்று மும்பையில் ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்தவன் சந்த்யா இறுதித் தேர்வை வேறொரு கல்லூரியில் எழுத ஏற்பாடுகளையும் செய்யலானான்.
திட்டமிட்டது போல் அனைத்தையும் செய்து முடித்தவன் சந்தியாவையும் திருமணம் செய்து கொண்டு மும்பை பயணமாக தயாரானான்.
“என்னங்க நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்க இல்ல” பயணப்பொதிகளில் துணிகளை அடுக்கியவாறு சந்தியா கேட்க அவளை, ஏறிட்ட வெற்றி சொல்லு எனும் விதமாக செய்யும் வேலையை விட்டு விட்டு அவளையே பார்த்திருந்தான்.
“அந்த பொண்ணு கல்யாணம் நடக்கும் என்று மனசுல ஆசைய வளர்த்துக்கிட்டு இருப்பா. இந்த கல்யாணம் நடக்காது என்று அவங்களுக்கு மட்டுமாவது தெரியப்படுத்திடலாமே”
கணவன் என்ன சொல்வானோ என்ற அச்சம் முகத்தில் அப்பி இருந்தாலும், ஒரு பெண்ணாக, முகமறியா அந்தப் பெண்ணை நினைத்து வருந்தினாள்.
“ஒவ்வொருத்தருக்காக பார்த்திருந்தா நாம நம்ம வாழ்க்கையை பார்க்க முடியாது தியா” என்றவனுக்கு மனைவியின் மனது புரியாமலில்லை.
அவளின் வாடிய முகம் பார்த்து “சரி நான் அந்த பொண்ணுகிட்ட பேச முயற்சி செய்கிறேன்” என்றாலும் அந்தப் பெண்ணை எவ்வாறு தொடர்புகொள்வதென்று தெரியவில்லை.
அன்னையிடம் பேசி அலைபேசி என்னை வாங்கினால் ஊருக்கே தெரிந்து விடும் என்பதனால் சக்தியை அழைத்து கல்யாணப் பத்திரிக்கையை புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லி அதிலிருந்த மணமகளின் தந்தையின் எண்ணுக்கு அழைத்தான்.
திருமண அழைப்பிதழில்தான் அந்த பெண்ணின் பெயரையே பார்த்தான். உதயாராகினி என்றிருந்த அவள் பெயரை கூறி அவளோடு பேச வேண்டும் என்று கூற,
அவளின் தந்தையோ “நீங்க யார் பேசுறது?” என்று கேட்டார்.
வெற்றி என்னவென்று பதில் சொல்வான். தான் இன்னார் பேசுவதாக கூற, சந்தோசத்தில் திளைத்தவர் “எங்க இருக்கீங்க மாப்புள? நீங்க மண்டபத்துக்கு வராம இங்க எல்லாரும் கேள்வி மேல கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க” அவர் பாட்டில் பேச ஆரம்பித்திருக்க,
“ஒரு நிமிஷம் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை. இந்த கல்யாணம் நடக்காது” என்றவன் அலைபேசியை அனைத்திருந்தான்.
மணப்பெண்ணிடம் பேச வெற்றிக்கு விருப்பமிருக்கவில்லை. பெண்ணின் தந்தையிடமே விஷயத்தை கூறியதில் பெரிதும் நிம்மதி அடைந்தவன் சந்த்யாவோடு மும்பய் செல்ல ரயில் ஏறி இருந்தான்.
மூத்த மகன் செய்த காரியத்தால் நிலை குலைந்து போய் இருந்த சாம்பவிக்கு என்ன செய்வதென்று புரியாமல் சக்தியை உதயாராகினிக்கு திருமணம் செய்து வைக்க முனைந்தாள்.
அவள் அவனை விட இரண்டு வருடங்கள் பெரியவள் என்றதும் வெற்றியை போல் சக்தியும் தன் இஷ்டத்துக்கு செய்து விடுவானோ என்ற அச்சமும் மனதில் ஏறிக்கொள்ள, குடும்ப மானம், கௌரவம் என்றெல்லாம் பேசி உடனே திருமணம் நடந்தாக வேண்டும் என்று அண்ணனிடம் பேசினாள்.
உண்மையில் கபிலருக்கு தனது சொந்தங்களுக்கு மத்தியில் பெருத்த அவமானமாகத்தான் இருந்தது. மகனிடம் கேட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது என்று சாம்பவியின் மீது கோபம் வந்தாலும், தனக்கு விருப்பம் இல்லை என்றால் அப்பொழுதே சொல்லி இருக்கலாமே, கல்யாண மண்டபம்வரை வந்து தானா தங்களை அவமதிக்க வேண்டும் என்று பெரிய மகனின் மேல்தான் அவருக்கு கோபம் கோபமாக வந்தது.
அதனால் மனைவி சின்ன மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று எடுத்த அப்போதைய முடிவு கூட அவருக்கு தப்பாக தெரியவில்லை.
கபிலரும் தனது குடும்ப, மானம், மரியாதை, கௌரவம் என்பதை மட்டும் சிந்தித்து சம்மதிக்க, சம்பாவியும் அண்ணனிடம் பேசினாள்.
இந்திரா பெண் என்றதும் சாம்பவிக்கு பிடிக்கவில்லைதான். ஆனாலும் இந்த நேரத்தில் வேறு எங்கு சென்று பெண்ணை தேடுவது? அது போக அவள் குறுக்குப் புத்தியும் கணக்குப் போட்டது.
இந்திரா மகளை மருமகளாக்கி அவளை படுத்தும் பாட்டில் இந்திரா கண்கலங்க வேண்டும் என்பதுதான் அது.
அண்ணன் பேசினால் இந்திரா பெண் கொடுத்தே ஆக வேண்டும் என்ற இறுமாப்பும் சேர்ந்துகொள்ள, மூத்த மகன் சென்ற கவலைக் கூட சாம்பவியின் முகத்தில் இருக்கவில்லை.
ஆனால் ஷக்திதான் நெருப்பில் இருப்பது போல் இருக்கலானான். கல்லூரியில் இரண்டு வருடங்களாக அவன் காதலிக்கும் ஓவியாவிடம் போன வாரம்தான் காதலிப்பதாக கூறி இருந்தான். அவளும் சக்தியை காதலிப்பதாக கூற, சிறகில்லாமல் பறந்தவன் அவளோடு நேரம் செலவிடக் கூட முடியாமல் அண்ணனின் திருமணத்துக்கு வந்தால் அவனுக்கு திருமணம் என்று அன்னை சொன்னால் அது எந்த விதத்தில் நியாயம்?
அன்னையின் பயமும் புரிகிறது. இங்கு இருக்கும் சூழ்நிலையும் புரிகிறது அதற்காக திடிரென்று ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா? முடியவே முடியாது. அன்னையிடம் மறுத்துப் பார்த்தான். கெஞ்சிப் பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை.
நடப்பது நடக்கட்டும் இதுதான் தன் விதி என்று அமர்ந்தவனுக்கு அடுத்த இடியாக, கௌஷிதான் மணமகள் என்று அறிய நேர்ந்ததும் நொறுங்கிய விட்டான். அவனுக்கு எப்பொழுதும் கௌஷியை பிடிக்காது. அவளோடு எப்படி? ஒரு காலமும் முடியாது. நிச்சயமாக முடியாது. அவன் மனம் கூவ, தந்தையிடம் சென்று நின்றான்.
“சக்தி ரொம்ப நன்றி ப்பா… உங்க அம்மா வெற்றி கிட்ட கேட்காம கல்யாண ஏற்பாட்டை செய்தது தப்புதான். அதற்காக எதிரியை பழிவாங்குறது போல அவன் இப்படி பண்ணி இருக்கக் கூடாது. உன் கைலதான் எங்க குடும்ப மானமே இருக்கு” என்று பேசி அவன் மனதை கரைத்து விட்டார் கபிலர்.
அதன்பின் கௌஷிடம் பேசி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை. பேசி இருந்தால் கௌஷி திருமணத்தை நிறுத்தி இருப்பாளா? சந்தேகம்தான்.
கௌஷியை தனது மணமகளாக பார்க்கும் பொழுது சக்திக்கு எரிய ஆரம்பித்தது. தனக்கு அவளை பிடிக்கவில்லை என்று தெரிந்தும் எப்படி இவளால் அலங்கரித்துக்கொண்டு தன் முன்னால் வந்து அமர்ந்திருக்க முடியும் என்று அவளை முயன்ற மட்டும் முறைக்கலானான்.
அவளுக்கும் தெரியுமே சக்திக்கு அவளை பிடிக்காது என்று. அவனுக்கு எங்கே தெரிய போகிறது அவளும் அவளுடைய பெற்றோரிடம் போராடிப் பார்த்து விட்டு தொற்றுப் போய்தான் அமர்ந்திருக்கின்றாள் என்று.
அப்படியே ஷக்தி வந்து அவளிடம் பேசி இருந்தால் கூட குடும்பத்தாருக்காக நடக்கும் திருமணம் என்றுதான் அவனிடம் கூறி இருப்பாளே ஒழிய ஒரு பொழுது தனது பெற்றோரின் பேச்சை மீறி நடந்திருக்க மாட்டாள்.
ஐயர் மந்திரம் ஓத வேண்டா வெறுப்பாக கௌஷியின் கழுத்தில் தாலியை கட்டி விட்டு அடுத்து என்ன எனும் விதமாக அமர்ந்திருந்தான் ஷக்தி.
தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லியாகிற்று, சந்தியாவை தேடுவார்கள் என்று நினைத்த வெற்றி மீண்டும் அழைத்து அவன் சந்தியாவை திருமணம் செய்துகொண்டதாக சக்தியிடம் கூறி அலைபேசியை அனைத்தான் அதன் பின் வெற்றி மற்றும் சந்தியாவை பற்றி எந்த தகவலும் வீட்டாருக்கு எட்டவில்லை.
வெற்றி அழைத்து தான் சந்தியாவை திருமணம் செய்து கொண்டதாக கூற ஒரு கணம் அதிர்ந்த ஷக்தி “முட்டாள் இத நான் அவ கழுத்துல தாலி கட்ட முன்னதாக சொல்லித் தொலைக்க வேண்டியது தானே” என்று அண்ணனை திட்டியவாறு என்ன செய்வது என்று யோசிக்கலானான்.
சாம்பவியின் சின்ன மகனுக்கு அம்மாவின் குறுக்குப் புத்தி இருக்காதா என்ன?
அலைபேசியை காதில் வைத்தவாறு அன்னையின் முன் சென்று “என்னது நீ சந்தியாவை கல்யாணம் பண்ணிக்கிட்டியா? என்ன சொல்லுற? எப்போ பண்ணிக்கிட்ட? ஏன் இத வீட்டுல சொல்லல? சொல்லி இருந்தா மாமாவே முன்னாடி இருந்து நடத்தி வச்சிருப்பாரே” என்று நாடகமாட, சாம்பவி. கபிலர் மட்டுமல்ல, சகாதேவன், சந்திரா, இந்திரா, கதிர்வேலன் உட்பட, மொத்த சொந்தமும் ஷக்தியின் பேச்சில் தான் கவனமாயினர்.
ஷக்தி நினைத்திருந்தால் வெற்றி தொடர்பு கொண்டதை சொல்லாமல் மறைத்து மண்டபத்திலிருந்து வீட்டுக்கு சென்ற பின் பொறுமையாக தந்தையிடம் கூறி இருக்கலாம். அப்படி கூறி இருந்தால் கபிலர் சாம்பவியை சமாதானப்படுத்தி இருப்பார்.
அனைவரது முன்னிலையிலும் வெற்றி திருமணத்தை நிறுத்தி விட்டு ஊரை விட்டு போகக் காரணமே சந்த்யா என்பது போல் பேச சாம்பவி குத்திக்கலானாள்.
சந்த்யா மூத்த மகனை வளைத்தது தெரியாமல் தான் இளைய மகனுக்கு கௌஷியை கட்டி வைத்த மடமையை எண்ணி புலம்பியவள் நடந்த திருமணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று உறுதியாக நிற்க ஷக்திக்கு உள்ளுக்குள் குஷியோ குஷி.  
சொந்தபந்தங்கள் ஆசிர்வாதத்தோடு ஊர் வாழ்த்த கடவுள் போட்ட முடிச்சை அவிழ்க்க நினைத்த ஷக்தி தான் செய்யும் காரியத்தின் பாரதூரத்தை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை.
இருபத்தி ஒரு வயதான ஷக்திக்கு திருமணம் என்றால் என்ன என்று தெரியாமல் இல்ல. ஆனால் வாழ்க்கையை பற்றிய அனுபவமும், அவன் செய்யும் காரியத்தால் நிகழும் விளைவுகளை பற்றின தூர சிந்தனையும் இல்ல. அவனுக்கு அவனது காதல், சந்தோசம் முக்கியமாக தோன்ற சுயநலமாக சிந்துத்து செயல்பட்டிருந்தான்.
சாம்பவிக்கு இந்திரா குடும்பத்தை பிடிக்காது என்று தெரிந்தே அவ்வாறு நடந்து கொண்டவன், அன்னையிடம் மட்டும் கூறாமல் அனைவரின் முன்னிலையிலும் கூறியதற்கு காரணமும் கௌஷியை விட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான். அவன் நினைத்தபடி தான் எல்லாம் நடந்தது.
காதலித்தால் கூட பெண்ணை குற்றம் சொல்லும் சமூகம் ஓடிப்போனால் மட்டும் விட்டு விடுமா? அவல் கிடைத்தது போல் சந்தியாவையும் இந்திரா குடும்பத்தையும் சாம்பவியின் சொந்தபந்தங்கள் தூற்ற ஆரம்பித்திருக்க, ஷக்திக்கு அவன் திட்டம் அமோக வெற்றி தான்.
எல்லாவற்றுக்கும் காரணம் உன் குடும்பம் தான் என்பது போல் தாலி கட்டிய மனையான கௌஷியா முறைத்துக் கொண்டிருந்தவன் சாம்பவியை தூண்டி விட்டு அவள்  பேச்சுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நடந்துகொண்டதோடு மட்டுமல்லாது அன்னையோடு மண்டபத்தை விட்டே வெளியேறி இருந்தான்.
இந்த்ராவுக்கும், சந்த்ராவுக்கும் இந்த ஊரில் சொந்தபந்தங்கள் என்று யாருமில்லையே, கதிர்வேலனின் சொந்தங்கள் துக்கம் விசாரிக்காத குறையாக, காணும் இடமெல்லாம் விசாரிக்க ஆரம்பித்திருக்க, சகாதேவனின் சொந்தங்கள் சகாதேவனுக்காக அமைதியாக சிலர் இருக்க, சாம்பவியின் தூண்டுதலில் சிலர் இந்திரா குடும்பத்தை காணும் இடத்தில் கண்டபடி பேச மனமுடைந்து போன கதிர்வேலன் பிறந்து வளர்ந்த சொந்த வீட்டையும் விற்று விற்று மனைவி மகளோடு சென்னைக்கு சென்று விட்டார்.
ஷக்தியோ தனக்கு திருமணமானத்தையும் மறைத்து ஓவியாவோடு காதல் வானில் வளம் வந்துகொண்டிருந்தான். ஆனால் தனக்கு ஓவியாவின் மீது வந்த காதலுக்கு ஆயுள் கம்மி என்று ஷக்தி புரிந்துக் கொள்ளும் நாளும் மிக விரைவில் வந்து சேரத்தான் போகிறது என்று அவன் அறிந்திருக்கவில்லை.  
திருமணம் பெற்றோருக்காக என்று ஷக்தியும், கௌஷியும் சொல்லிக்கொள்ளலாம், அது அவர்களுக்கு கடவுள் போட்ட முடிச்சு என்பதை இருவரும் உணரவுமில்லை. சக்தியின் சுயநலத்தால் இருவரும் இறுதிசையில் இருந்து விட்டனர். 

Advertisement