Advertisement

 

அத்தியாயம் 4
பெண்குழந்தையோ! ஆண்குழந்தையோ! தந்தை தன் மீது அன்பு செலுத்துவது போல் பிற குழந்தைகள் மீது அன்பு செலுத்துவத்தைக் கண்டால் பொறாமை படும். அதுவே சம வயது குழந்தை என்றால்?
கோபம் கொள்ளும் பிஞ்சு மனம் தான் என்ன செய்வதென்று அறியாமல் பேசும், சில நேரம் விபரீதமான வேலைகலைக் கூட செய்து வைக்கும். சாம்பவிக்கும் இந்திரா மீது அந்த மாதிரியான ஒரு கோபம் தான் இருந்தது.
தந்தை இந்திராவின் மீது அன்பு மட்டும் செலுத்தவில்லை. தனக்கு வாங்குவதை போல் உடைகளும், விளையாட்டு பொருட்களும் வாங்கிக்கொண்டு வர கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாக மாற ஆரம்பித்திருந்தது.
அம்மா. அப்பா இல்லாத அநாதை அவளுக்கு நான் ஈடாவேனா என்ற எண்ணம் வேறு சாம்பவியின் மனதில் இருக்க, இந்திராவை வார்த்தைகளால் குதறி எடுக்கலானாள்.
நல்லது கெட்டதை புரிந்துக்கொள்ளும் வயது அடைந்த போதும் சாம்பவியின் வெறுப்பு மாறாவில்லை. அவள் தன்னை மாற்றிக்கொள்ளவும் முயற்சிக்கவில்லை.
சாம்பவிக்கு வெற்றி, சக்தி என்று இரண்டு வருட இடைவெளியில் இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தது போல் இந்திராவுக்கு சந்தியா, கௌசல்யா என்று மூன்று வருட இடைவெளியில் இரண்டு பெண் குழந்தைகள்.
இந்திராவின் வளைகாப்பு மட்டுமல்ல எந்த ஒரு சீரையும் செய்ய விடவில்லை முப்பாத்தா.
சந்திராவுக்கு அது கொஞ்சம் அதிதிருப்தியை ஏற்படுத்தி இருக்க, கௌசல்யாவின் காதுகுத்துக்கு சென்ற பொழுது வலுக்கட்டாயமாக கபிலரின் மடியில் குழந்தையை அமர்த்தி காதுகுத்த வைத்திருந்தாள்.
இந்திராவின் குடும்பத்தில் எந்த ஒரு சுபநிகழ்வுக்கும் சாம்பவி வருகை தரவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி வாராமல் இருக்க, கௌஷியின் காது குத்தும் விழாவுக்கு வந்தே ஆகவேண்டும் என்று சந்திரா வலியுறுத்தி இருந்தாள்.
காலையிலிருந்தே தலை வலிக்குது என்று அமர்ந்திருந்த மனைவியை பாவமாக பார்த்த கபிலர் “உன் அண்ணன் வந்தே ஆகணும் இல்லனா நம்ம வீட்டுல நடக்குற எந்த ஒரு விஷேசத்துக்கும் வர மாட்டேன் என்று சொல்லிட்டாரு. நீ வீட்டுல இரு நான் குழந்தைகளை கூட்டிக்கிட்டு போயிட்டு வரேன்” என்று சொல்ல
பல்லைக் கடித்த சாம்பவி “நீங்க வேணும்னா போங்க குழந்தைகள் இருக்கட்டும்” என்றாள்.
“அவனுங்க இருந்தா வீட்டை புரட்டி போடுவானுங்க. உனக்குத்தான் வேலை இழுத்துக்கொள்ளும். தலைவலி இன்னும் அதிகமாகும்” என்ற கபிலர் மனைவியின் பேச்சை பொருட்படுத்தாமல் மகன்களை தயார் செய்து அழைத்து சென்றிருந்தார்.
ஆறே வயதான வெற்றிக்கு பூப்போட்ட பாவாடை சட்டையில் இரட்டை ஜடையில் சுற்றிக்கொண்டிருந்த நான்கே வயதான சந்தியாவை பிடித்துப் போக அவளோடு விளையாட ஆரம்பித்தான்.
நான்கே வயதான சக்திக்கு இங்கு என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை. தாங்கள் இங்கு ஏன் வந்திருக்கின்றோம் என்று கூட புரியவில்லை. தந்தையின் கையை பிடித்தவாறே நின்றிருந்தான்.
“ஏன் அத்த இப்படி பண்ணுறீங்க? எங்க பக்கம் எந்த சடங்கும் பண்ண விட மாட்டுறீங்க” என்று சந்திரா முப்பாத்தாவோடு மல்லுக்கு நிக்க வேறு வழியில்லாது முப்பாத்தவும் கபிலரின் மடியில் கௌஷியை அமர்த்தி காது குத்தும்படி மகனை பணித்தாள்.
ஒரு வயது நிரம்பிய கௌஷியை கபிலர் மடியில் அமர்த்திக் கொண்டதும் சக்தியும் கபிலரோடு அமர்ந்துகொண்டான்.
தந்தையின் மடியில் அமர்ந்திருக்கும் குட்டிப்பாப்பாவை பார்த்தவன் தானும் தந்தையின் மடியில் உக்கார வேண்டும் என்று அடம்பிடிக்கலானான்.
“அப்படியே உங்க அம்மா குணத்தோட பொறந்திருக்க” என்றவாறு கபிலர் சக்தியை இடது தொடையிலும் கௌஷியை வலது தொடையிலும் அமர்த்திக் கொண்டார்.
கதிர்வேலனும் கௌஷியை பிடித்துக்கொள்ள கௌஷியின் வலது காதில் துளையிடப்படவும் வலியில் உதடு பிதுக்கியவள் ஏங்கி கண்ணீர் வடிக்க பார்த்திருந்த ஷக்தி தனது பிஞ்சுக் கைகளால் குட்டி கௌஷியின் கண்ணீரை துடைக்கலானான்.
கௌஷி வீறிட்டு அழுதிருந்தால் ஷக்தி பயந்து தானும் அழுத்திருப்பானோ! என்னவோ வலியில் உதடு பிதுக்கி பாவமாய் பார்த்தவாறு ஏங்கி கண்ணீர் வடிக்கும் குட்டி மொட்டை பொம்மை போன்ற குழந்தை அவனுக்கு பிடித்துப் போக தானாக அவன் கை கண்ணீரை துடைத்து விட்டிருந்தது.
அன்றே கடவுள் அவர்களுக்கு முடிச்சு போட்டு விட்டதை அறியாமல் தந்தையிடம் பாப்பாவை வீட்டுக்கு கொண்டு செல்லலாம் என்று அடம்பிடிக்கலானான் ஷக்தி.
எல்லாம் காதுகுத்து முடிந்து வீடு செல்லும்வரைதான். வீட்டுக்கு சென்ற உடன் இந்திராவின் குழந்தைக்கு எப்படி உங்க மடில அமர்த்தி காது குத்தலாம் என்று சாம்பவி கணவனோடு சண்டை பிடிக்க ஆரம்பித்திருக்க, அது சக்தியின் மனதில் ஆழமாக பதிந்து போனது.
சக்திக்கு அன்னை என்றால் உயிர். ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்தவன். அன்னையோடு ஒட்டிக்கொண்டே இருப்பவன். அன்னை முகம் சுளித்தால் தாங்க மாட்டான்.
இந்திரா அத்தையின் குடும்பத்தை பற்றி பேசினாலோ, அவர்களோடு பழகினாலோ அன்னைக்கு பிடிக்காது என்பதனால் சக்தியும் காரணமே இல்லாமல் அவர்களை வெறுக்க ஆரம்பித்தான். ஆனால் வெற்றி அவ்வாறில்லை சந்தியாவின் வால் பிடித்து திரிந்து கொண்டிருந்தான்.
சந்திராவுக்கு குழந்தைகள் இல்லாததால் சாம்பவியின் குழந்தைகளை அழைத்து சென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்திராவின் குழந்தைகளை முப்பாத்தா அங்கு அனுப்ப அவ்வளவு விருப்பம் காட்டவில்லை. அப்படி இருக்கும் பொழுதுதான் சந்திரா கருவுற்றாள்.
அக்கா கருத்தரித்ததை கேள்விப்பட்ட இந்திரா அவள் உண்பதற்காக இனிப்புவைகள், முறுக்கு, சீடை என்று செய்துகொண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அக்காவை பார்க்க சென்றிருந்தாள்.
பாடசாலையில் சந்திக்கும் தோழி எனதும் வெற்றி சந்தியாவோடு விளையாட ஆரம்பித்திருக்க, ஷக்தி அத்தையை விட்டு அசையாது நின்றான்.
கௌஷிக்கு நான்கே வயதுதான். ஆசையாக சக்தியின் கைபிடித்து விளையாட அழைக்க அவனோ அவளை தள்ளி விட்டிருந்தான்.
“ஏனடா அப்படி பண்ண பாப்பா பாவமில்லை” என்று சந்திரா அதட்ட
“நீ தூக்குவியோன்னு நினைச்சி பொறாமைல பண்ணி இருப்பன்கா…” என்றாள் இந்திரா.
சாம்பவி விதைத்த வெறுப்பு சக்தியின் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்கும் என்று அக்கா, தங்கை இருவருமே உணரத் தவறினர்.
வெற்றி சந்தியாவுடன் விளையாட சிலநேரம் கௌஷியை அவர்கள் விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை.
“சந்தியாவும் நானும் கூட்டாளி நீ போய் ஷக்தியோடு விளையாடு” என்பான் வெற்றி. கௌஷி ஆசையாக விளையாட சென்றால் அவள் தலையில் கொட்டி அவளை அழ வைத்து விட்டு தனியாக விளையாடும் ஷக்தி அண்ணன் கூடவும் சேர்ந்து விளையாட மாட்டான்.
இவர்களுக்குள் பஞ்சாயத்து பண்ணுவதே சந்திராவின் வேலையென்றாகிப் போக, பிரணவ்விடம் மட்டும் நால்வரும் ஒரே மாதிரி பாசத்தை பொழியலாயினர்.
ஊரிலுள்ள பாடசாலையில் நான்கு பேரும் படித்தனர். ஷக்தியும் சந்தியாவும் ஒரே வகுப்பில் படித்தாலும் ஷக்தி முறைத்துக் கொண்டே திரிய வெற்றியோடு மட்டும்தான் அவள் தோழமை இருந்தது.
உணவு வேளையில் சந்தியாவும், வெற்றியும், கௌஷியும் ஒன்றாக உணவு உண்ண, ஷக்தி தனியாக உண்பான்.
மூவரும் சிரித்துப் பேசி மகிழ்வதை காணும் பொழுது எரிய வீட்டுக்கு சென்ற உடன் அன்னையிடம் அண்ணனை மாட்டி விடுவான்.
சாம்பவி வெற்றியை போட்டு அடிக்க ஷக்தி கைகொட்டி சிரிப்பான்.
கபிலர் வந்து மனைவியை தடுத்தால் “இவன் அந்த இந்திரா பொண்ணோட சுத்துறான். இப்போவே இப்படின்னா… பெரியவனான அவ பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுவான்” என்று சாம்பவி கத்த
“ஆமா நான் சந்தியாவைதான் கல்யாணம் பண்ணேப்பேன்” என்று அன்னையை விட உரக்கக் கத்தி மேலும் சில அடிகளை அன்னையிடமிருந்து பெற்றுக்கொள்வான் வெற்றி.
தான் வெறுப்பவர்களோடு பழகுவதால்  அண்ணன் அடிவாங்குவதை பார்த்து ஷக்தி மகிழ வெற்றியோ தம்பியை குரூரமாக பார்த்திருந்தான்.
வெற்றி அத்தோடு விட வில்லை. நேராக சந்தியாவிடமே சென்று பெரியவனானதும் என்னை திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டும் வைத்தான்.
பதினோரு வயதான சந்தியாவுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற குழப்பம் இருந்தாலும் தனது நண்பன் முகம் சுருங்குவது தாங்க முடியாமல் தலையை ஆட்டு வைத்திருந்தாள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயதான கௌஷி “அப்போ நா யாரை கல்யாணம் பண்ணிக்கிறது?” என்று அழ ஆரம்பித்திருக்க,
“நீ சக்திய கல்யாணம் பண்ணிக்க” என்று வெற்றி சொன்னதும்தான் தாமதம்.
“ஷக்தி அத்தான்” என்று அவனை தேடி ஓடியவள் “என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று கேட்க
அவள் தலையில் ஓங்கி கொட்டியவன் “நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கணுமா? எனக்கு உன்ன பிடிக்கவே பிடிக்காது” என்று தள்ளி விட்டு செல்ல கௌஷி அந்த இடத்திலிருந்தவாறே அழ ஆரம்பித்திருந்தாள். 
சந்திரா வந்துதான் அவளை சமாதானப்படுத்தினாள். அவள் காரணம் கேட்கும் பொழுது பிரணவ் விழித்துக் கொண்டு அழ, குழந்தையை கவனிக்க சென்று விட்டாள். சந்திரா கேட்டு தான் எதற்காக அழுகின்றோம் என்று கௌஷி கூறி இருந்தால் பின்னாளில் ஏற்பாடக் கூடிய பிரச்சனைகளை தடுத்திருக்கலாம்.
என்னதான் ஷக்தி கௌஷியை துரத்தி அடித்தாலும் கௌஷிக்கு ஷக்தி மேல் அன்பாகத்தான் இருப்பாள்.
அன்று பாடசாலையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, மாணவர்கள் அனைவரும் மைதானத்தில்தான் கூடி இருந்தனர்.
சக்தியும் கௌஷியும் ஒரே இல்லத்தில் இருக்க வெற்றியும், சந்தியாவும் வெவ்வேறு இல்லங்களில் இருந்தனர்.
அப்படி இருந்தும் தரம் பன்னிரண்டுக்கான நூறு மீட்டர் போட்டியில் வெற்றி கலந்துகொள்ளும் போது சந்தியா வெற்றிக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக அவனது இல்லத்துக்கு சென்று அவனது பெயரை சொல்லி கூச்சலிட ஆரம்பித்தாள்.
 அதே போல் வெற்றியும் சந்தியா நீளம் பாய்தல் போட்டியில் கலந்துகொள்ளும் பொழுது அவளது இல்லத்துக்கு சென்று அவளை ஊக்கப்படுத்தலானான்.
ஆனால் ஒரே இல்லத்தில் இருக்கும் சக்தியோ கௌஷியிடம் “ஏய் குட்டச்சி… பெரிய ஆளு போல உயரம் தாண்ட கலந்துகொள்ள போறியா? உன்னால தாண்ட முடியுமா?” என்று கிண்டல் செய்ய
“என்ன ஷக்தி அத்தான் கிண்டல் செயிரீங்க? நான் தாண்டுவேன்” முகத்தை சுருக்கினாள் கௌஷி.
“நீ மட்டும் ஒழுங்கா தாண்டாம, எங்க ஹவுஸ்கு பொய்ண்ட்ஸ் கிடைக்கல மவளே உன்னாலதான் நாங்க தோத்து போய்ட்டோம்னு ஊருக்கே சொல்லுவேன்” என்று மிரட்டி விட்டு செல்ல பாவமாய் அவனை பார்த்து வைத்தாள்.
தரம் ஆருக்கான உயரம் பாய்தலில் கௌஷி தான் முதலிடத்துக்கு வந்திருந்தாள். அதற்கும் ஷக்தி “ஒல்லியா இருக்குறதால மீனு மாதிரி இந்த பக்கத்துல இருந்து அந்த பக்கத்துக்கு குதிச்சிருப்ப” என்று கிண்டல் செய்து விட்டு சென்றான்.
கடைசிப் போட்டியாக வகுப்பு வாரியாக ரிலே நடைபெற, முதல் போட்டியே தரம் பத்தில் படிக்கும் மாணவர்களுக்காக இருக்க அதில் ஷக்தி கலந்துகொண்டிருந்தான்.
ஷக்தி கடைசியாகத்தான் தடியை வாங்கிக் கொண்டு ஓட வேண்டி இருந்தது. அவனது அணியினர் முன்னிலையில் இருக்க சக்தியின் கையில்தான் விளையாட்டின் வெற்றி இருந்தது.
சக்தியின் கையில் தடி கொடுக்கப்படவும் சக்தியின் இல்லத்தில் உள்ளவர்கள் அவனின் பெயரை கூச்சலிட ஆரம்பிக்க அவனும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.
திடிரென்று அருகில் ஓடிக்கொண்டிருந்தவன் சக்தியை தள்ளி விட கோட்டை தாண்டி விழுந்து விட்டான்.
எதிர்பாராமல் விழுந்ததில் கையில் மற்றும் காலில் நல்ல அடியும் சீராய்ப்பும் கூட, எழுந்தவன் ஓட்டத்தை தொடர முயந்தால் கால் வேறு சுளுக்கி இருக்க அருகில் இருந்தவர்கள் அவனை இல்லத்தில் கொண்டு வந்து சேர்ந்தனர்.
 தங்கள் இல்லம் வெற்றிபெற வேண்டிய நேரத்தில் இப்படி செய்து விட்டவனை எண்ணி கடும் கோபத்தில் இருந்தான் ஷக்தி. ஆசிரியரிடம் “சார் அங்க நடந்தத பார்த்தீங்க இல்ல. அவன் ஹவுஸ்கு பொய்ண்ட்ஸ் கம்மி பண்ண சொல்லுங்க” என்று கத்தலானான்.
“நான் போய் பேசுறேன். நீ டென்ஷன் ஆகாத” என்ற ஆசிரியர் பன்னிரண்டாவது படிக்கும் மாணவி இருவரை அழைத்து சக்திக்கு முதலுதவி செய்யும்படி கூறி விட்டு வெளியேறி இருந்தார்.
“முதல்ல இந்த டேப்ளட் போடு ஷக்தி” என்று ஒரு மாணவி கொடுக்க, கௌஷி தண்ணீர் கொடுத்தாள்.
அவளை கண்டதும் ஷக்தியின் கோபம் மேலும் அதிகமானது.
“என்ன தண்ணீல ஏதாவது கலந்து என்ன மயக்க போறியா? இல்ல விஷம் ஏதாவது கலந்து என்ன கொல்ல போறியா” என்று விசிறி அடிக்க பயந்து போனாள் கௌஷி.
வீட்டிலும் அவள் கொடுத்தால் சாப்பிட மாட்டான். இன்று மருந்து சாப்பிடத்தான் தண்ணீர் கொடுத்தாள். கௌஷிக்கு அழுகை ஆழுகையாக வர தலை குனிந்தவாறே அங்கிருந்து சென்று விட்டாள். 
அதன்பின் கௌஷி அவன் விடயங்களிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்தாள்.  
வெற்றி ப்ளஸ் டூவில் மார்க் கம்மியாக வாங்கி இருக்க, அவனை காசு கட்டி சென்னையில் காலேஜ் சேர்த்திருந்தார் கபிலர். அவனுக்கு சந்தியாவை விட்டு செல்ல மனமே இல்லை. வேறு வழியில்லாமல் காலேஜ் சேர்ந்திருந்தான்.
இந்த நேரத்தில் தான் கௌஷி பூப்பெய்து இருந்தாள். அதுவும் பெரியம்மா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தவள் தனக்கு ஏற்பட்ட மாற்றம் என்னவென்று புரியாது அழுதவாறே பெரியம்மாவிடம் முறையிட சந்திரா உடனே தங்கைக்கு தகவல் அனுப்பி அக்கம் பக்கத்திலுள்ள சுமங்களிப் பெண்களை அழைத்து அவளை மஞ்சள் நீராட்டி புத்தாடை அணிவித்து அவள் வீட்டிலையே அமரவைத்தாள். 
இந்திராவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கதிர்வேலனைன் அன்னை முப்பாத்தவும் இறைவனடி சேர்ந்திருக்க, மகளை அழைத்து செல்ல அக்கா விடவில்லை. இங்கயே எல்லா சடங்கையும் செய்வதாக வேறு கூறி விட, கணவனை அழைத்து கூறி விட்டாள்.
சீர் செய்ய தாய் மாமன் என்று யாருமில்லை. பதினாறுநாள் வீட்டுக்கு வெளியே இருக்க வேண்டியதால் உறவு முறையில் சக்தியை அழைத்து குடிசை கட்ட சொல்லி சந்த்ர சொல்ல, அத்தையிடம் மறுத்து பேச முடியாமல் முகம் சுளித்தவாறு கட்டி முடித்தான்.
வெற்றி இருந்தால் இன்முகமாகவே கட்டிகொடுத்திருப்பான். சக்தியும் கழன்றுகொண்டிருப்பான். வெற்றி இல்லாததால் ஷக்தி மாட்டிக்கொள்ள அத்தைக்காக என்று தனக்குள் கூறிக்கொண்டவன் குடிசையை கட்டி இருந்தான்.
இவ்வாறு அவன் கௌஷியை வெறுத்தாலும் அவளது வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான நிகழ்விலும் அவன் இருந்தான். அதை அவன் உணர மறுத்தான்.
ஷக்திதான் குடிசை கட்டிக்க கொடுத்தான் என்றதும் சாம்பவி குதிக்க,
“ஏன்மா… முறை பையன் தானேமா… அவன் கட்டிக்க கொடுத்தா தான் என்ன? அவங்களுக்கு பண்ண தாய்மாமனா இருக்காரு” என்று கபிலர் பேச
“நீங்க வேற அப்பா… அத்த சொன்னதுக்காக செஞ்சேன். முறை, சொந்தம் எல்லாம் சொல்லாதீங்க” ஷக்தி கோபமாக சொல்லி விட்டு செல்லவும்தான் சாம்பவியின் கோபம் மட்டுப்பட்டது.
சடங்கு சுற்றுதல் அன்று எண்ணெய் தேய்த்து நீராடு செய்து கௌஷியை அழைத்து வந்திருந்தனர். உள்ளே இருந்த பதினாறுனாலும் நாட்டுக்கோழி முட்டையோடு நல்லெண்ணெய் கொடுக்கப்பட கௌஷி கொஞ்சம் உடம்பு பூசினாற்போன்று முகமும் மிளிர்ந்தது. புத்தாடை நகைகள் என்று அலங்காரத்தில் அழகோவியமாக இருந்தாள்.
“ஏன்மா.. சாம்பவி அண்ணன் வீட்டுல விழா இப்பயா வரீக?” என்று ஒரு உறவுக்கார பெண்மணி கேட்க
“என்ன செய்யிறது அத்த வீட்டு வேலையெல்லாம் நானே பார்த்துட்டு வரணுமில்ல” என்றவாறே உள்ளே நுழைந்தவள் கையேடு கொண்டுவந்த பரிசையும் கௌஷியிடம் கொடுத்து விட்டு ஒதிங்கிக் கொண்டாள். 
சடங்குக்கு வர சாம்பவிக்கு இஷ்டமில்லை என்றாலும் அண்ணன் வீட்டில் நடைபெறுவதால் வந்தே ஆகா வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளுப்பட, வீட்டி நேரத்தை கடத்தியவள்  வேறு வழியில்லாது மகனையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.
சக்தியும் வந்தவர்களை அமர வைப்பது, குளிர்பானம் கொடுப்பது, பந்தி பரிமாறுவது என்று கௌஷியை மனதுக்குள் திட்டியவாறே சகாதேவன் ஏவிய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய் சக்தி ரெண்டு கூல் ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வாடா” ஜன்னலினூடாக சந்திரா குரல் கொடுக்க, அத்தையை திட்ட முடியாமல் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றவன் அத்தையிடம் கொடுக்க,
“கௌஷிக்கு கொடுடா..” என்று சந்திரா சொன்ன பின்தான் அவனும் அவளையே பார்த்தான். அதே நேரம் அவளும் அவனை பார்க்க ஒரு கணம் கௌஷியின் அழகில் அவளையே பார்த்த சக்தி தலையை உலுக்கிக் கொண்டு “உள்ள இருந்து நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு பூசணிக்கா போல ஆகிட்ட” என்று விட்டு செல்ல கௌஷிக்கு தான் குண்டாகிட்டோம் என்ற கவலையில் கண்களின் ஓரம் கண்ணீர் பெருக்கெடுத்தது.
குளிர்பானத்தை அருந்துவது போல் யாரும் அறியாமல் கண்களை துடைத்துக் கொண்டவள் இயல்பாகி சிரித்துப் பேச ஆரம்பித்திருந்தாள்.
இங்கே சக்தியின் நிலைதான் மோசமாக இருந்தது. கௌஷியின் அழகு முகம் மின்னல் தாக்கியது போல் அவன் மனதில் உள்ளே நுழைய எத்தனிக்க, அவள் மீதிருந்த வெறுப்பு தடுக்க, அவனுள் பெரிய போராட்டமே நடந்துக்க கொண்டிருந்தது.
இரண்டு, மூண்டு தடவைகள் அவன் கால்கள் கௌஷி இருக்கும் இடத்தை சுற்றி வந்து அவன் கண்களுக்குள் அவளை நிரப்பிக் கொண்டு செல்ல, சாம்பாவியும் மகனை அழைத்து “என்ன? இங்க சுத்திகிட்டு இருக்க?” என்று கேட்டு விட்டாள்.
அன்னை கேட்ட பின் தான், தான் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதையே உணர்ந்தவன் கௌஷியின் பக்கம் தலை வைத்தும் கூட படுக்கைக்கு கூடாது என்று முடிவெடுத்தவனாக அவளை பார்க்க சொல்லி தூண்டும் மனதிடம் அவள் உன் எதிரி என்று சொல்லி சொல்லியே அப்பக்கம் வராமல் இருந்துக் கொண்டான்.
நாட்கள் மாதங்களாகி வருடங்கள் உருண்டோட வெற்றி சென்னையிலையே ஒரு வேலையில் சேர்ந்திருந்தான்.
சக்தியும் காலேஜ் இறுதியாண்டில் படிக்க சந்தியாவும் சென்னை கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்க, கௌஷியும் காலேஜ் சேர்ந்திருந்தாள்.
வெற்றிக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்தால் நல்லது என்று சாம்பவி மகனிடம் கூட கலந்தாலோசிக்காமல் பெண்பார்க்க ஆரம்பித்தாள்.
எல்லாம் தன் மகன் தன் பேச்சை மீற மாட்டான் என்ற நம்பிக்கை தான். 
கபிலர் கூட வெற்றியிடம் ஒரு வார்த்தை கேட்டு விடு என்று சொல்லிப்பார்த்து விட்டார். சாம்பவி கேட்கவில்லை.
பெண் பார்த்து பரிசம் போட்ட பின்தான் வெற்றியை அழைத்து கூறி இருந்தாள்.
“அப்படியா அம்மா சரிம்மா.. சரிம்மா… நிச்சயதார்த்தத்துக்கு என்னால வர முடியாது. அதையும் நீயே பண்ணிடு. கல்யாணத்துக்கு நான் நேராக மண்டபத்து வந்துடுறேன்” என்று அலைபேசியை அனைத்திருந்தான்.
“ஏன் டி… கல்யாணம் பண்ண போறவன் பொண்ண பார்க்க வேணாமா? குறைஞ்சது போட்டாவாவது கேக்கல. தப்பா இருக்கு” என்று கபிலர் சொல்ல
“உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பசங்க மேல சந்தேகம்தான். என் பசங்க என் பேச்ச மீற மாட்டாங்க” பூரிப்பில் கல்யாண வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
பத்திரிகை அடித்து, ஊரிலுள்ள பெரிய மண்டபத்தில் திருமணம் என்று ஊரைக் கூட்டி, தடல் புடலான விருந்தென்று விடிந்தால் கல்யாணம். ஆனால் மாப்பிள்ளை வெற்றி மட்டும் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தபாடில்லை.
“ஏன் மா… சாம்பவி வெற்றி வந்து கொண்டு இருக்கானா? காலைல ஏழரை மணிக்கு முகூர்த்தம்மா…” சகாதேவன் கேட்க,
வெற்றியின் அலைபேசி அனைக்கப்பட்டிருக்கவே என்ன செய்வது என்று புரியாமல், அண்ணனுக்கு என்ன பதில் சொல்வதென்றும் தெரியாமல் தடுமாறி நின்றாள் சாம்பவி.
“ஏன்மா… உண்மையிலயே உங்களுக்கு மூத்த மகன் என்று ஒருத்தன் இருக்கானா?” பெண் வீட்டாளர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்க, அன்றிரவு யாரும் தூங்கவில்லை.
ஒருபக்கம் வெற்றிக்கு என்ன ஆச்சோ என்று பதட்டம், இன்னொரு பக்கம் இந்த கல்யாணம் நடக்குமா என்ற பதட்டத்தோடு நேரம் சென்று கொண்டிருந்தது.
பெண்ணின் தந்தை நெஞ்சை பிடித்துக்கொண்டு கதற அனைவரும் என்ன? ஏது? என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தனர்.
“ஏன்மா… நாம உங்களுக்கு என்னம்மா பாவம் பண்ணி இருந்தோம். என் பொண்ணு வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிடீங்களே, விருப்பமில்லாத பையன கல்யாணம் பண்ணி வைக்க பாத்தீங்களே அவன் ஊர விட்டே ஓடிட்டான்” என்று கதறி அழ,
சகாதேவன் யார் போன் பண்ணது என்று விசாரிக்க, வெற்றியின் அலைபேசி எண்ணிலிருந்துதான் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்றதும். வெற்றிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பது அனைவருக்கும் புரிந்து போனது.
“நான் அப்போவே சொன்னேன். அவன் கிட்ட ஒழுங்கா கேளு என்று கெட்டியா?” கபிலர் மனைவியை கடிய
“இப்போ என்ன சக்தி இருக்கானே” சாம்பவி ஆரம்பிக்க,
“அந்த பொண்ணு சக்தியை விட ரெண்டு வருஷம் பெரியவ” என்ற கபிலர் மானம் மரியாதை போனதாக புலம்பினார்.
சகாதேவன் பெண்ணின் தந்தையிடம் மன்னிப்பு கேட்க, அவர்களும் வேறு என்ன செய்வது என்று மண்டபத்தை விட்டு கிளம்பி இருந்தனர்.
வெற்றி இப்படி செய்து விட்டானே என்று கபிலர் புலம்ப சாம்பவி அடுத்து சக்தியை பார்த்தவள் “நீயாச்சும் அம்மா பேச்ச கேக்குறியா?” என்று அவன் முன் வந்து நிற்க
“சொல்லுமா என்ன செய்யணும்” என்றான் அவனும் அம்மா பிள்ளையாக,
விடிந்தால் திருமணம் நின்று விட்டதை அறிந்தால் அவமானம் உடனே திருமணம் ஆகி வேண்டும். அது உன் அண்ணனுக்கு நடந்தால் என்ன உனக்கு நடந்தால் என்ன?” என்று சாம்பவி மகனையோ பார்த்துக் கேட்க
“என்னமா சொல்லுற?” என்று அதிர்ந்தான் சக்தி.
“இல்ல நீயும் உன் அண்ணனை போல ஓடிப்போகக் போறியா?” கண்கள் கலங்கியவாறே கேட்டாள் சாம்பவி.
“ஐயோ அப்படி எல்லாம் இல்லமா…” பதறி துடித்தான் மகன்.
“அண்ணா சக்திக்கு உடனே கல்யாணம் பண்ணிடலாம். நம்ம சொந்தத்துல யார் பொண்ணு இருக்காங்க” என்று அண்ணனிடம் வந்து நின்றாள் சாம்பவி.
“என்ன பேசுற? அதுவும் உடனே யார் பொண்ணு கொடுப்பாங்க?” சகாதேவன் மறுக்க,
“நீ சொன்னா கொடுப்பாங்க” என்ற சாம்பவி உடனே திருமணம் ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கலானாள்.
தங்கள் சொந்தத்தில் இருந்த சக்திக்கு பொருத்தமான ஒரே பெண் கௌஷி என்றாகிப் போக சகாதேவன் இந்திரா மற்றும் கதிர்வேலனிடம் பேசி உடனடியாக திருமணத்துக்கு சம்மதமும் வாங்கி சில மணித்தியாலங்களில் கௌஷியை சக்தியின் மணமகளாக்கி இருந்தனர்.
அடுத்து வெற்றி அழைத்து அவன் சந்தியாவை திருமணம் செய்து கொண்டதாக கூறியதில் எல்லாம் தலைகீழாக மாறிப் போனது.

Advertisement