சகாதேவன் திருமண பேச்சை எடுத்ததும் மகாதேவனின் குடும்பத்துக்காக மட்டும் கதிர்வேலன் இந்திராவை திருமணம் செய்து கொள்ளவில்லை.
வாரம் ஒருநாள் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க பெரிய வீட்டுக்கு செல்பவனுக்கு துடுக்குத்தனமான இந்திராவின் தரிசனம் கிட்டும். அவன் மனம் அவனறியாமல் அதை ரசிக்க ஆரம்பித்திருக்க, ஒருநாள் அவன் செல்லும் பொழுது அவள் அழுது கொண்டிருப்பதையும், அவனை கண்டதும் சுதாரித்து தாவணியால் கண்ணை துடைத்துக் கொண்டு சோபையாய் புன்னகைத்து விட்டு “வாங்க” என்று விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அவள் அழுதததற்கான காரணம் தெரியாமல் கதிர்வேலனுக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது. அவளிடமும் கேட்க முடியாது. வேறு யாரிடமும் கேட்க முடியாது. கொண்டு போய் பஞ்சாயத்தில் நிறுத்தி விடுவார்களே!
நாட்கள் அதன்போக்கில் செல்ல இந்திராவின் கண்ணீருக்கான காரணத்தை கதிர்வேலன் கண்கூடாக கண்டுகொள்ளும் நாளும் வந்தது.
அன்று கொய்யா தோப்பில் காய்களை பறிக்கும் நாள். பெரிய தோப்பு என்பதனால் பகுதியாக பிரித்துதான் பறிப்பார்கள். வடக்கு பக்கமாக காய்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்க கதிர்வேலன் மேற்பார்வையிட்டவாறு வந்துகொண்டிருக்க தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக தகவல் வரவும் கிழக்கு பக்கமாக விரைந்தான்.
யாரோ ஒரு பெண்ணின் குரல் ஓங்கி ஒலிக்கவும் திடுக்கிட்டவன் யாரது என்று எட்டிப் பார்க்க சாம்பவி இந்திராவை திட்டித் தீர்த்துக் கொண்டு இருப்பதையும் அவள் கொய்யா மரத்திலிருந்து பறித்த காய்களோடு இறங்குவதையும் பார்த்தவனுக்கு “இதற்கா இவ்வளவு திட்டு” என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
தங்கள் வீட்டுப் பெண் என்றும் பாராமல் சாம்பவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் குத்தீட்டி சொற்களாக குத்திக் கிழிக்க, பார்த்திருந்த கதிர்வேலனுக்கே கோபத்தை ஏற்படுத்தியது. மறைந்திருந்து “ஐயா இந்த பக்கம்தான் வராரு” என்று கத்த சாம்பவி உடனடியாக இடத்தை காலி செய்திருந்தாள்.
ஆனால் இந்திரா தாழ்வான கொய்யா மரக்கிளையில் அமர்ந்து பறித்த கொய்யாவை சாப்பிட ஆரம்பிக்க, “என்ன பெண் இவள்? இவ்வளவு திட்டையும் வாங்கிக் கொண்டு அமைதியாக நிற்கின்றாள்?” என்ற எண்ணத்தில் அவளிடம் பேச நெருங்கிய கதிர்வேலன் அவள் முன் நின்று “ஏன் நீங்க ஓடலையா?” என்று கேட்க
“எனக்கு என்ன பயம்? பத்து கொய்யா பறிச்சதுக்கு உங்க ஐயாக்கு நஷ்டம் ஒன்னும் ஆகாது” என்றவள் ரசிச்சு ருசிச்சு சாப்பிட, அவளிடம் பேசுவதை யாரும் பார்க்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் தொலைபேசி அந்த நேரத்தில் தொல்லைபேசியாய் நியாபகம் வர அவளிடமிருந்து விடைபெற்றான்.
வீட்டுக்கு சென்றும் சாம்பவி ஏன் அவளிடம் இப்படி நடந்துக் கொள்கிறாள் என்று அன்னையிடம் புலம்ப ஆரம்பித்தான்.
கதிர்வேலனின் அன்னை முப்பாத்தாவோ மகனிடம், மகாதேவனின் தந்தை குடி சூது என்று குடும்ப சொத்தை அழித்து விட்டதாகவும், கடனிலிருந்து மகாதேவனுக்கு உதவி செய்தது சந்திரா இந்திராவின் தந்தை என்று அரசல் புரசலாக பேச்சிருப்பதாகவும், அதனால்தான் குழந்தைகளை மகாதேவன் வளர்க்க ஒப்புக்கொன்டதாகவும் கூறினாள்.
“மகாதேவன் ஐயா காசு பணம் என்று அலைபவர்தான். அந்த பொண்ணுகள வளர்க்கவும் நல்ல மனசு வேணும். அது அவர்கிட்ட இருந்திருக்கு. ஆனாலும் படிக்க வச்சிருக்கலாம். மூத்த பொண்ணைத்தான் சின்னையாக்கு கட்டிக் கொடுத்துட்டாரு. சின்ன பொண்ணையாவது படிக்க வைச்சிருக்கலாம்” தனது நீண்ட நாள் மனக்குறையை அன்னையிடம் கூற
அவனறியாமளையே இந்திரா அவன் மனதில் குடிவந்திருக்க, சகாதேவன் திருமண பேச்சை எடுத்ததும் உடனே ஒப்புக்கொண்டவன். அன்னையிடம் கூட கேட்கவில்லையே என்று நொந்துகொண்டு முப்பாத்தாவிடம் பேச
“வீட்டுக்கு வந்தா அந்த புள்ளய பத்தி மட்டும்தான் பேசுவியே ராசா… உன் மனசு எனக்கு தெரியாதா? பெரிய இடம் நாம பொண்ணு கேட்டு போனா கொடுக்க மாட்டாங்க என்று இருந்துட்டேன். தானா அமையுது” சந்தோசமாக கல்யாண வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.
சாம்பவியின் குணம் தெரியும் என்பதனாலையே கல்யாணத்துக்கு பிறகு மருமகளை பெரிய வீட்டுப் பக்கம் முப்பாத்தா அனுப்பவே இல்லை. வளைகாப்பும் அவளது வீட்டில்தான் செய்தாள்.
கேட்டதுக்கு “நானும் ஒத்த புள்ளயதான் ஐயா பெத்து வச்சிருக்கேன். எனக்கும் ஆச இருக்காதா…” என்று விட சகாதேவனால் ஒரு தாயின் ஆசை என்று எதுவும் பேச முடியவில்லை.
பிரசவம் பார்த்து கூடவே மருமகளை வைத்துக்கொள்ள சந்த்ராவுக்குத்தான் மனக்கஷ்டமாகிப் போனது. கணவனிடம் புலம்பினாலும் தங்கை சந்தோசமாக இருக்கிறாள் என்று நிம்மதி அடைந்தாள்.
எல்லாம் குழந்தைகள் ஓரளவுக்கு வளரும் வரைதான்.
சாம்பவிக்கு இந்திராவின் மீதிருந்த வெறுப்பு அவள் பெற்ற பிள்ளைகள் மீதும் இருந்தது.
விதிவசத்தால் அவள் வாயாலே கௌஷியை ஷக்திக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்க வைத்து விட்டான் கடவுள்.
தனது மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் என்று அறியாமளையே சகாதேவனுக்காக சரியென்றனர் இந்திராவும், கதிர்வேலனும்.
திருமணம் முடிந்த கையேடு வெற்றி ஊரை விட்டு செல்ல காரணமே கௌஷி குடும்பம்தான் என்றானதும் சாம்பவி நடந்த திருமணத்தை ஏற்க மறுத்து ஆடித் தீர்த்து விட்டாள்.
ஷக்தி அப்பொழுதுதான் காலேஜில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. எதிலிருந்தோ தப்பியவன் போல்தான் அன்னையின் பின்னால் சென்று விட்டான்.
மாயணத்திலிருந்து வீடு திரும்பி கபிலரும் சக்தியும் சாம்பவி பையோடு வெளியே நிற்பதைக் கண்டு என்ன? ஏது? என்று விசாரிக்க சம்பாவி ஒப்பாரி வைத்தவாறு நடந்ததை திரித்துக் கூறலானாள்.
“முதல்ல உள்ள வாம்மா… மாமாக்காக நாங்க இங்க வந்திருக்கோம். சத்தம் போடாம வா…” என்று ஷக்தி அன்னையின் கையை பிடிக்க
“அப்போ அவளுங்கள வெளிய போக சொல்லு” என்று பிடிவாதம் பிடிக்கலானாள் சாம்பவி.
“அது எப்படி சொல்ல முடியும்? எனக்கு மாமா வீடுன்னா… என் பொண்டாட்டிக்கு பெரியம்மா வீடு இல்ல” என்ற ஷக்தி அன்னையை தீர்க்கமாக பார்க்க
“எப்போலா இருந்துடா அவ உன் பொண்டாட்டி ஆனா?” என்று முறைக்கலானாள்.
“தாலி கட்டினா பொண்டாட்டி தானேம்மா.. விவரம் தெரியாத குழந்தை மாதிரி கேக்குற?” என்றவன் புன்னகைத்தும் வைக்க
“அப்பா… அம்மாவ கூட்டிகிட்டு வீட்டுக்கு போங்க. நான் என் பொண்டாட்டிக் கூட இருந்து எல்லா காரியங்களையும் முடிச்சிட்டு வரேன்” என்றான் ஷக்தி சத்தமாக, அது அன்னைக்காக மட்டுமல்ல, கௌஷிக்காகவும் கூறப்பட்டது என்று தெரியப்படுகின்றானாம்.
“என்னது என்ன வீட்டுக்கு அனுப்பிட்டு நீ இங்க தங்க போறியா? முடியாது, முடியாது நான் இங்கயே இருக்கேன்” என்றவள் விறுவிறுவென வீட்டுக்குள் நடந்தாள்.
சாம்பவி கத்த ஆரம்பிக்கவும் கௌஷிக்கு கோபம் வந்தாலும் வீட்டு சூழ்நிலையை கருதி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அன்னையோடு அறையிலையே இருந்தாள்.
வேறு நாட்களாக இருந்தால் தங்களால் எதற்கு பிரச்சினை என்று அன்னையை அழைத்துக் கொண்டு வெளியேறி இருப்பாள். ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாதே! பெரியம்மா தங்களுக்காக பேசிக்கொண்டிருக்க அமைதியாக அமர்ந்திருந்தாள்.
சாம்பவி பையோடு வெளியே நிற்கவும் இந்திரா பிரச்சினை வருமோ! என்று அஞ்ச சந்த்ராதான் “அவ கெடக்குறா விடு. ஷக்தி வந்தா உள்ள வருவா” என்று சொல்ல கௌஷியின் புருவங்கள் உயர்ந்தன.
அவன் கடைசியாக சொன்ன வார்த்தை அவளை மேலும் ஆச்சரியப்பட வைத்தது. ஆறு வருடங்களாக கண்டுகொள்ளாமல் இருந்தவன், இதோ கொஞ்சம் நேரத்துக்கு முன்னால் நலம் கூட விசாரிக்காதவனை மயானத்துக்கு சென்ற போது காத்து கருப்பு ஏதும் அடித்து விட்டிருக்குமோ? தன்னை பொண்டாட்டி என்று விளிக்கின்றான்?
“அவன் என்னை பொண்டாட்டி என்று அழைத்த உடன் நான் அவனை கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமோ” கௌஷியின் மனம் முரண்டியது.
ஆனால் அவளுக்கு எங்கே தெரிய போகிறது ஷக்தி ஒரு முடிவோடுதான் இருக்கின்றான் என்று.
சின்ன வயதில் விளையாட்டில் கூட அவளை சேர்த்துக் கொள்ளாத ஷக்தி, சதா அவளை முறைப்போடு பார்க்கும் ஷக்தி, அவள் துடுக்குத்தனமாக பேசினாளோ, அவனிடம் வம்பிழுத்தாளோ! வலிக்க அவள் தலையில் கொட்டு வைத்து அவளை அழவைக்கும் ஷக்தி. “உன்னை பிடிக்கவே பிடிக்காது” என்று முகத்துக்கு நேராக சொல்லும் ஷக்தி, இன்று கௌஷியை மனைவியாக பார்க்க ஆரம்பித்து விட்டான் என்று.
“இங்க பாரு ஷக்தி அம்மா சொல்லுறத கேளு. நமக்கு அந்த குடும்பத்து சங்கார்த்தமே! வேணாம். நான் உனக்கு வேற நல்ல பொண்ணா பாக்குறேன். கல்யாணத்த கூட சிறப்பா பெரிய மண்டபத்துல பண்ணலாம். என்ன சொல்லுற?” சகாதேவன் இறந்த அன்று மாலையில்தான் சாம்பவியின் வீட்டில் இந்த பேச்சு வார்த்தை அரங்கேறி இருந்தது.
“அம்மா எனக்கு ஏற்கனவே! கல்யாணம் ஆகிருச்சு. அதுவும் ஆறு வருஷத்துக்கு முன்னாலையே! ஆகிருச்சு. அன்னைக்கு உங்க பேச்ச கேட்டுத்தான் கௌஷி கழுத்துல தாலி கட்டினேன். என்ன நடந்தது என்று தெரியாதவரைக்கும் உங்க கண்ணுக்கு அவ நம்ம குடும்ப மானத்த காக்க வந்த தேவதையா தெரிஞ்சா. உண்மை தெரிஞ்சதும் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வச்சிடீங்க, விருப்பமே இல்லாம நடந்த கல்யாணம் எங்குறதால நானும் நீங்க சொல்லுறதுக்கெல்லாம் தலையை ஆட்டினேன். ஆனா நான் இப்போ என் பொண்டாட்டி கூட வாழனும் என்று ஆச படுறேன்” தனது முடிவை தெளிவாக சொன்னான் சக்திவேல்.
“அவன் எங்க அவன் இஷ்டத்துக்கு பண்ணுறான்? எல்லாம் உன் இஷ்டம் தானே! மூத்தவனுக்கு உன் இஷ்டப்படி பொண்ணு பார்த்த, அவன் அவன் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிகிட்டான். குடும்ப மானம் போகும் என்று உன் அண்ணன் கிட்ட பேசி அண்ணிய சமாதானப் படுத்தி அவங்க தங்கச்சி பொண்ண சக்திக்கு கல்யாணம் பண்ணி வச்ச, வச்ச கையோட மருமகளை துரத்திட்ட, எல்லாம் உன் விருப்பப்படிதான் பண்ண. இப்போவாச்சும் அவன் விருப்படி பண்ண விடு” என்றார் சக்திக்கு தந்தையாக கபிலர்.
“நீங்க ரெண்டு பேரும் என்னதான் சொன்னாலும் அவளை என் வீட்டு மருமகளா நான் கொண்டுவர மாட்டேன்” சாம்பவி ஆவேசமாக கத்த
“அப்போ உனக்கு உன் பையன் வாழ்க்கையை பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்ல அப்படித்தானே” கபிலரும் பொறுமையை இழுத்துப் பிடித்தவராக பேச
“ஆறு வருஷமா அவ வேணாம்னு தானே இவன் இருந்தான் இப்போ மட்டும் திடிரென்று பொண்டாட்டி மேல பாசம் பொத்துக்கிட்ட வருதா? அவளை அத்து விட்டுட்டு நான் சொல்லுற பொண்ண கட்டிக்க சொல்லுங்க”
“நீ சொல்லுற பொண்ணைத்தான் கட்டிகிட்டேன். நீ சொன்னதுக்காகத்தான் அவளை மண்டபத்துல விட்டுட்டு உன் கூட வந்தேன். நீ சொன்னதை தான் இத்தனை வருஷமா பண்ணேன்” என்றவனின் மனமோ அதில் உன் சுயநலமும் அடங்கி இருக்கிறது அடக்கி வாசி என்று கூவியது.
ஆறு வருடங்களாக மகனிடமும் மனைவியிடம் போராடியவர் தானே கபிலர். வெளியூரில் படிப்பவனை மாதம் ஒருமுறை சென்று பார்க்கும் சாக்கில் நடந்த திருமணத்தை பற்றிதானே பேசிவிட்டு வருவார். அன்றே மகன் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எது நடந்தாலும் விதி என்ற ஒன்றை மாற்ற முடியுமா? இப்பொழுதுதான் அவனுக்கு கௌஷியின் அருமை புரிகிறது. மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைகொள்கின்றான். பெரியவர்களாக தாங்கள்தான் சேர்த்து வைக்க வேண்டும். மனைவிக்கு அப்படி என்ன வெறுப்பு புரிந்தும் புரியாமலும் சில நேரங்களில் குழம்பித்தான் போனார் கபிலர்.
“அந்த பொண்ண நம்ம பையனுக்கு கட்டிக்கொடுக்க சொல்லி கேட்டது நாம. கல்யாணம் பண்ணி வச்சது உங்கண்ணன். அவர் பேச்சக் கூட மதிக்காம ஆடிக்கிட்டு இருக்க, இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல” கபிலர் கோபம் கொள்ளாமல் அமைதியாக பேசினார்.
“நானே பண்ணி வச்ச கல்யாணம் எங்குறதாலதான் நானே வேணாம்னு சொல்லுறேன். அந்த இந்திரா பொண்ணு எங்குறதால அண்ணன் யோசிக்கிறான்” என்ற சாம்பவி கௌஷியை விவாகரத்து செய்வதிலையே குறியாக இருந்தாள்.
மகனின் மனதை அறிந்து கொண்ட உடன் கபிலர் கதிர்வேலனை சந்தித்து பேசலாம் என்னு முடிவு செய்திருந்த வேளைதான் சகாதேவனின் மரணம் நிகழ்ந்தது.
ஒரு கெட்டது நடந்தால் உடனே ஒரு நல்லது நடத்தி விட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கதிர்வேலன் குடும்பத்தோடு வருவார் பதினாறாம் நாள் காரியம் முடியும்வரை இருப்பார் பொறுமையாக பேசிக்கொள்ளலாம் என்று கபிலர் நினைக்க அவர் மனைவி மாயணத்திலிருந்து வருவதற்குள் பிரச்சினையை இழுத்து வைத்திருக்கின்றாள்.
நல்லவேளை ஷக்தி ஒருவாறு பேசி சமாளித்து விட்டான் இனி அவன் பார்த்துக்கொள்வான் என்று நிம்மதியடைந்தார்.
ஷக்தியின் மனம் மாறி வருவதை சந்திரா உணர்ந்திருந்தாள் அதனால்தான் தங்கையிடம் சாம்பவியை அவன் பார்த்துக்கொள்வான் என்று கூறினாள்.
சிறு வயதிலிருந்தே தன்னை பிடிக்காத சக்தியை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? என்று அன்னையிடம் வாக்குவாதம் பண்ணிய கௌஷிக்கு பெரியம்மாவிடம் மறுத்து பேச வாய் வராததால் முறைத்துக்கொண்டு ஷக்தி தாலி கட்ட தனது வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற அச்சத்திலையே தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
அடுத்த நொடி சாம்பவி நடந்த திருமணத்தை ரத்து செய்யும்படி சொல்லவும் ஷக்தியின் முகத்தில் வந்து போன புன்னகையை கண்டவள் அவன் ஒருகாலமும் அவளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று புரிந்துகொண்டாள்.
கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தாலும் தன்னை பிடிக்காத ஒருவனோடு தன்னால் வாழ முடியுமா? என்ற கேள்வி மனதில் முளைக்க, நடப்பது நன்மைக்கே என்று அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தாள்.
கௌஷியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது என்று ஆளாளுக்கு அழ, அவள் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கவில்லை. இப்படித்தான் நடக்கும் என்பது போல் அமர்ந்திருந்தாள்.
இந்திரா சதா கண்ணீர் வடிக்க எதுவும் நடவாதது போல் அவள் காலேஜ் சென்று வரலானாள்.
“என்னடி உன் வாழ்க இப்படி ஆகிருச்சு. நம்ம குடும்பம் இந்த நிலைமைக்கு வந்திருச்சு. நீ பாட்டுக்கு போற வர” யார் மீதோ இருக்கும் கோபத்தை எல்லாம் இந்திரா கௌஷியின் மேல் காட்ட
“இப்போ என்ன? என்னையும் உன்ன மாதிரி மூலைல உக்காந்து அழ சொல்லுறியா? நான் படிக்கணும். நல்ல நிலைமைக்கு வரணும். நான் வேணாம் என்று சொல்லியும் அந்த சிடுமூஞ்சிய எனக்கு கட்டி வச்ச. நல்லவேள அவனே போய்ட்டான் இல்லனா நானே துரத்தி இருப்பேன். போனவங்கள பத்தி யோசிச்சு அழாம நாம நம்ம வாழ்க்கையை பார்க்கலாம்”
“என்ன இவ இப்படி பேசிட்டு போறா?” என்று கணவனிடம் இந்திரா புலம்ப
கதிர்வேலனும் “அவ மனச குழப்பிக்காம படிக்கணும் என்று நினைக்கிறா. அதுவே நல்லதுதானே. அவ படிக்கட்டும் அவள தொந்தரவு செய்யாத” என்றார்.
கௌஷியின் படிப்பு முடியும்வரை அவளிடம் நடந்த திருமணத்தை பற்றி பேசாவிட்டாலும் கதிர்வேலன் ஊருக்குச்சென்று சாம்பவியை சந்தித்து பேசி அவமானப்பட்டு விட்டு வந்தவண்ணம்தான் இருந்தார்.
கௌஷி படிப்பை முடித்து வேலையிலும் சேர்ந்த பின் மெதுவாக சக்தியை பற்றி பேச்செடுக்க அன்னையை பொரிந்துத் தள்ளலானாள்.
“என்ன மாப்பிளையை போல இவளும் இப்படியே கண்டுகொள்ளாமல் இருக்கிறாளே என்று இந்திரா அக்காவிடம் அலைபேசியில் புலம்ப ஆரம்பித்தாள்.
“ஷக்திக்கும் கௌஷிக்கும் சின்ன வயசுல இருந்தே ஆகாது அதனால அவ அவன் பேச்சு எடுத்தா சிடுசிடுக்குறா. நீ அவள வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி பேசு” என்று சந்திரா சொல்ல இந்திராவும் அவ்வாறே பேசலானாள்.
“என்னது? வேற கல்யாணமா? என்ன விளையாடுறியா?” என்று எரிந்து விழ,
“அவங்களும் உன்ன ஏத்துக்க மாட்டாங்க, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீயும் இப்படியே இருக்கப்போற?” என்ற இந்திராவின் கேள்விக்கு கௌஷி எந்த பதிலையும் கூறாமல் தனது அறைக்குள் புகுந்து கதைவடைத்துக் கொண்டாள்.
சக்தியை தவிர வேறு ஒருவனை கணவனாக நினைத்து பார்க்கையில் அவன் அவளை வேண்டாம் என்றதை விட வலித்தது.
சகாதேவன் இறந்த அன்று காலை கௌஷி அன்னையிடம் விடை பெற்று ஆபீஸ் செல்ல கிளம்ப மகளது வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கலானாள் இந்திரா.
ஸ்கூட்டி சாவியை கைப்பையில் துளாவியவள் கிடைக்காமல் மீண்டும் வீட்டுக்குள் வர அன்னை அழுது கொடிருப்பதைக் கண்டு “என்னம்மா பிளாஸ்பேக்கா? இப்போ என்ன உனக்கு நான் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷப்படுவியா?” கையை கட்டிக்கொண்டு கேட்க
கண்களை துடைத்துக்கொண்டு இந்திரா மகளை “நிஜமாவா சொல்லுற?” என்ற பார்வையோடு ஏறிட கௌஷியும் விடாது அன்னையை பார்த்திருந்தாள்.
“உன் சந்தோஷத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன். இப்போவாச்சும் சிரி” என்றவள் கன்னத்தில் முத்தமிட்டு செல்ல இந்திரா உடனே! தனது ஒரே அக்காவான சந்திராவை அழைத்தாள்.
தாய், தந்தையின் பேச்சை மீறி அவள் எதையும் இதுவரை செய்ததில்லை. ஏன் ஷக்தியுடனான திருமணம் கூட தனது குடும்பத்தார் சொன்னதற்காக செய்ததுதான்.
அவர்கள் அவளிடம் அவளுடைய சந்தோசத்தை தானே எதிர்பார்க்கின்றார்கள். அவள் மறுப்பதினாலும், முரண்டு பிடிப்பதினாலும் காயமடைவது அவர்களது மனது. கவலையில் ஆழ்ந்து பிணியியை தேடிக் கொள்வார்களோ என்ற அச்சம்தான் கௌஷியின் மனதை வாட்ட ஆரம்பித்திருக்க, திருமணம் செய்துகொள்கின்றேன் என்றாள்.
சொல்லி விட்டாள்தான் “உன் சந்தோஷத்துக்காக பண்ணிக்கிறேன்” என்று சொல்லி விட்டாள்தான். அதன்பின் மழையை சுமந்த மேகம் போல் அவள் மனம் கனத்து இறுகி வலிக்க ஆரம்பித்திருக்க, கண்களும் கலங்கி வண்டியை ஓட்ட பாதையும் தெளிவில்லாமல் பலதடவைகள் பிரேக் போடலானாள்.
“என்ன ஆச்சு கௌஷி?” என்று கிரிஜா வேறு காரியாலயம் செல்ல தாமதமாவதாக புலம்ப, நடு வீதி என்றும் பாராமல் கொண்டு சென்ற தண்ணீர் பாடிலைட் திறந்து நீரை கையில் ஊற்றியவாறே முகத்தில் அடித்துக் கழுவியவள் மீதமிருந்த நீரை ஒரு சொட்டும் விடாமல் தொண்டையில் சரித்துக் கொண்டாள்.
ஒருநாளும் இல்லாமல் அவளது செய்கையை கண்ட கிரிஜா கூட பயந்து விட்டாள்.
“தூக்க கலக்கமா இருக்கு. வேற ஒன்னும் இல்ல” என்றவள் வேலையில் மூழ்கிய பின் எல்லாவற்றையும் மறந்துதான் போனாள்.
பெரியம்மாவின் வீட்டில் கணவனானவை சந்திக்க நேரிடும் என்றும் தெரியும். அவனுக்கு அவளை பிடிக்காது என்றும் தெரியும். அவர்கள் விவாகரத்தை பற்றித்தான் பேசுவார்கள் என்றும் தெரியும்.
அதுதான் அன்னை வேறு திருமணம் செய்துகொள்ள சொல்லி விட்டாளே இனி அவனை பற்றி எதற்கு சிந்திக்க வேண்டும்? அந்த பொம்பள பேச்சை இனி கேக்க வேண்டுமா? என்று எண்ணி இருந்தவளுக்கு அதிர்ச்சி கொடுத்தான் ஷக்தி.
அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு “பொண்டாட்டி” என்று விளித்திருந்தான்.
விளையாடுகின்றானா? வெறுப்பேத்துகின்றானா? என்றெல்லாம் கௌஷியின் சிந்தனை தறிகெட்டு ஓட, விளையாடக்கூடிய சூழ்நிலையும் வீட்டில் இல்ல. இது விளையாட்டான பேச்சும் இல்லை என்று புரிந்த போது அவன் மனதில் என்ன இருக்கிறது? என்ன திட்டமிடுகிறான் என்று புரியாமல் குழம்பி நின்றாள்.
இரவு பண்ணை வீட்டில் தங்கிக் கொள்கின்றோம் என்று கதிவேலன் சொல்ல
“இவ்வளவு பெரிய வீடு இருக்க? அவ்வளவு தூரம் போக வேண்டுமா?” மறுத்தாள் சந்திரா.
சக்தியும் இதைத்தான் எதிர்பார்த்தான். அவன் சொன்னால் கதிர்வேலன் கேட்க மாட்டார் என்றுதான் அவர்களின் உடமைகளை பண்ணை வீட்டில் வைக்க சொன்னான். சந்திரா சொன்னதுதான் தாமதம் ப்ரணவ்வை அழைத்துக்கொண்டு சென்று எல்லாவாற்றையும் எடுத்துக்கொண்டு வந்து கௌஷியின் கையில் கொடுத்து “எல்லாம் சரியாக இருக்கின்றனவா?” என்று வேற கேட்டு வைக்க அவளால் அவனை முறைக்க மட்டும்தான் முடிந்தது.
அடுத்த நாள் காலை ஷக்தி கண் விழித்ததும் அவன் மனம் மனைவியைத்தான் நாடியது. வீடு முழுக்க யார் கருத்தையும் கவராமல் கண்கள் மனைவியை தேடி அலைய “சக்தி இந்தாடா காபி” என்ற அன்னையையும் பொருட்படுத்தாது பின் பக்கம் சென்றான்.
கௌஷி அப்பொழுதுதான் குளித்திருந்தாள் போலும் தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு புடவை முந்தியையும் இடுப்பில் சொருகி இருந்தவள் நேற்று உடுத்தி இருந்த துணிகளை துவைத்து பிழிந்து உதறி விட்டு காய போட்டுக்கொண்டிருக்க, காலை சூரியனின் வரவும் நீர் துளிகளின் சிதறல்களினூடக்காக அவளின் சுளித்த முகமும் ஓவியமாக தெரிய கண்சிமிட்டாது உதட்டில் மலர்ந்த புன்னகையில் சமையலறை கதவில் சாய்ந்து பார்த்திருந்தான் ஷக்தி.
துணிகளை காயப்போட்டு விட்டு திரும்பியவள் கணவனைக் கண்டு திடுக்கிட,
“கௌஷி காபி கொடு” என்றான்.
அவள் கையில் இருந்த பாக்கெட் கூட நழுவ அதை இறுக்கிப் பிடித்தவாறே “என்ன?” சத்தமாகவே கேட்டாள்.
அவள் கொடுத்தால் தண்ணீர் கூட குடிக்காதவன் தினமும் அவள் போட்ட காபியையா குடிக்கிறான்? அவள் கொடுத்தா தானா குடிக்கிறான்? என்ற அதிர்ச்சிதான் அவளிடம்.
“காபி கேட்டேன்” என்றான் இவன் மீண்டும்.
கௌஷி அதிர்ச்சி விலகாமல் பார்த்திருக்க, தான் கொடுக்கும் பொழுது காபியை குடிக்காமல் அவளிடம் காபி கேட்கும் மகனை கடுப்பாக பார்த்து சுடச்சுட காபி டம்ளரை மகனின் கையில் திணித்து விட்டு சென்றாள் சாம்பவி.
சூடு தாங்காமல் ஷக்தி அதை அந்த கைக்கும் இந்த கைக்கும் மாற்ற கொஷியின் முகத்தில் புன்னகை தானாக விரிந்தது.