Advertisement

 

அத்தியாயம் 25-2
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பண்ணை வீடு இரவில் அழகாக ஜொலிக்க “ஷக்தி கதவ பூட்டிக்காப்பா நாங்க போறோம். காலைல வரோம்” என்று சந்திரா சொல்ல
“என்ன அவசரம் அத்த? மதிய சாப்பாடு எடுத்துட்டு வந்தா போதும்” என்றவாறே ஷக்தி கதவை பூட்டி இருக்க,
“துரத்தாத குறையா உன் மகன் கதவ பூட்டுறான் பாரு” சந்திரா சொல்ல, இந்திராவும், சாம்பாவியும்  சிரித்தனர்.
வீட்டார் என்ன பேசினாலும், ஷக்தி அன்னையோடு சென்ற கோபம் அவன் அலைபேசி அழைப்பு விடுக்காத கோபம் கௌஷிக்கு இருந்தாலும், வெற்றி கூறியது போல் சொத்து விவரம் சக்திக்கு தெரிய வந்து அதை தன்னிடம் மறைத்திருந்தால் தான் நிச்சயமாக சக்தியை சந்தேகப்பட்டிருக்கக் கூடும் என்று அவளுக்கு புரிந்தது.
அப்படி சந்தேகப்பட்டால் அவன் அவள் மீது வைத்த காதல் பொய்த்து விடுமா? இல்லையே அவன் அவளை காதலிப்பது உண்மை. அதை அவன் நிரூபித்து விட்டானே. மீண்டும் மீண்டும் அவனை சோதிப்பது போல் சம்பவங்கள் நடைபெறுவதை வெறுத்தாள்.
சந்திரா முடிவாக என்ன சொல்கின்றாய் என்று கேட்டிருக்க, “எனக்கு ஷக்திதான் வேண்டும்” என்றாள்.
உடனே கபிலரை அழைத்து சக்தியையும், கௌஷியையும் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் நாளை மறுநாள் நல்ல நாள் நான் வீட்டுக்கு வருகிறேன் என்று கூற, அதை அவர் ஷக்தியிடம் கூறினார்.
தான் கேட்ட உண்மைகளை தாங்க முடியாமல் இரத்த அழுத்தத்தோடு, ஜூரமும் அதிகமாகி படுத்த படுக்கையாக இருந்த சாம்பவி இதை காதில் வாங்கிக் கொண்டு தான் இந்திரா மற்றும், சந்திராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இப்பொழுதே அழைத்து செல்லும்படி அடம்பிடிக்கலானாள்.
கபிலர் அழைத்து சந்திராவிடம் சொல்ல “அதெல்லாம் எதற்கு வேண்டாம்” என்று மறுத்தாள்.
நாக்குக்கு நரம்பில்லை என்பதற்காக பேச வேண்டியதை எல்லாம் பேசி விட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடுமா? என்ற எண்ணம்தான் சந்திராவுக்கு. அவளை பேசியதை விட தங்கையை எவ்வளவு பேசி இருப்பாள் என்று எண்ணுகையில் கோபத்தை அடக்கவும் முடியவில்லை. கணவனின் தங்கை தானே என்று மன்னிக்க மனமும் வரவில்லை.
என்ன? ஏது? என்று இந்திரா விசாரிக்க சந்திரா தங்கையிடம் சாம்பவி மன்னிப்பு கேட்க இங்கு வர வேண்டும் என்று அடம்பிடிப்பதை கூறினாள். 
“ஐயோ பாவம்க்கா.. சின்ன வயசுல லட்ச்சுமி அத்தையும் சரியா பாத்துகாது. வேலைக்காரம்மாதான் சோறூட்டும். நீ எனக்கு சோறூட்டுறத ஏக்கமா பாக்கும். நீ கூப்பிட்டாலும் வராது. தனக்கு அம்மா, அப்பா, அண்ணன், சொத்துசுகம் எல்லாம் இருந்தும் பாசம் கிடைக்கல எங்குற கோவம்தான் பொறாமையா மாறி இவ்வளவு பேச்சையும் பேச வச்சிருக்கு. வாக்கா ஒரு எட்டு போய் பார்த்து வந்துடலாம்” இந்திரா அக்காவை இழுக்காத குறையாக அழைத்து சென்று சாம்பவியை சந்தித்தாள்.
அதான் கௌஷி ஷக்தியோட சேர்ந்து வாழ சரினு சொல்லிட்டாளே அப்பொறம் அந்த வீட்டுக்கு போக யோசிக்கணுமா? என்று கதிர்வேலனையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர்.
கௌஷியை அழைத்து செல்லவில்லை. வெற்றியை அழைத்தால் “அம்மா நடிக்கிறாங்களா? இல்லையான்னு உங்களுக்கு தெரியுமா? இவ்வளவு நாளா உங்க எல்லாரையும் எதிரியா பார்த்தவங்க திடிரென்று திரிந்திட்டாங்களா? இத நான் நம்பணுமா?” வெறுப்பைக் கக்கினான் அவன்.
“என்னங்க இங்க இருந்து பேசிகிட்டு இருந்தா எப்படி? வாங்க போய் பார்த்து, பேசிட்டு வரலாம்” சந்த்யா அழைக்க,
“அறிவிருக்கா உனக்கு? நீ இருக்கும் நிலமையில உன்ன அங்க கூட்டிகிட்டு போய். அவங்க ஏதாவது பேசி உன் பிபி எகிறவா? இல்ல கோவத்துல தள்ளி விட்டு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட்டா? பேசாம வீட்டுல இரு”
“அப்போ நீங்க மட்டுமாச்சும் போயிட்டு வாங்க” என்றாள் சந்த்யா.
சாம்பவி நடிக்கிறாளோ? திரிந்திட்டாளோ? அவள் வெற்றியின் அன்னை அவளுக்கு உடம்பு முடியவில்லை என்பது உண்மை. அவளை சென்று பார்ப்பது மகனான வெற்றியின் கடமை என்று எண்ணித்தான் சந்தியா பேசினாள்.
இந்திராவையும் அவள் குடும்பத்தையும் சாம்பவி நேரடியாக பேசியது போக வீட்டில் வெற்றியின் முன்னிலையில் எவ்வளவு பேசி இருப்பாள். உண்மை அனைத்தும் அறிந்தபின் அவை அனைத்தும் வெற்றியின் மனதில் அலைக்கழிக்க அன்னையை மனதால் வெறுக்கலானான். அந்த வெறுப்பால் ஷக்தியும், கபிலரும் சாம்பவிக்கு ஜுரம் என்று கூறிய போதும் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வெற்றிக்கு வரவில்லை.
“ஆமாம்பா.. வெற்றி என்ன ஆனாலும் அவ உன் அம்மா வா போய் பார்த்துட்டு வரலாம்” சந்திரா அழைக்க, சந்த்யா கண்களாளேயே கெஞ்சினாள்.
கௌஷியோடு மனைவியை வீட்டில் இருக்குமாறு கூறியவன் அரைமனதாகத்தான் அன்னையை பார்க்க இவர்களோடு கிளம்பி இருந்தான்.
சாம்பவி உண்மையில் திருந்தி மனம் வருந்திக் கொண்டுதான் இருந்தாள். குற்ற உணர்ச்சியாலையே அவளுக்கு ஜுரம் வந்திருக்க, கொரோனாவாக இருக்கக் கூடும் என்று பிரணவ் இவர்களை செல்ல வேண்டாம் என்றும் கூறி பயமுறுத்தி இருந்தான்.
“வீட்டுலயே இருக்குற அவளுக்கு எங்க இருந்து கொரோனா வர போகுது? அப்படினா வெளிய போயிட்டு வர்ர அவ வீட்டுக்காரருக்கு இல்ல முதல்ல வரணும். இல்லையா? சென்னைல இருந்து வந்த சக்திக்கு இல்ல வந்திருக்கணும். நம்ம கௌஷியே நல்லா இருக்கா. சும்மா பயமுறுத்தாதே” சந்திரா மகனின் காதை திருகி இருந்தாள்.
சக்திக்கும் அந்த பயம் இருந்ததால்தான் யாரையும் அண்டவிடாமல் தானே அன்னையை பார்த்துக் கொண்டதாக கூறினான்.  மருத்துவர் பரிசோத்தித்து அழுது, அழுது அவளாகவே தேடிக்கொண்டதுதான். முதலில் அவள் பிரச்சினைக்கு வழியை தேடுங்க சரியாகும் என்றார்.
ஆனால் ஷக்திக்கும் தான் கௌஷி வீட்டாரிடம் என்ன பேசுவது? எப்படி பேசுவது என்று ஒன்றும் புரியவில்லை. அன்னைக்காக பரிந்து பேசவும் தயக்கமாக இருந்தது. ஏற்கனவே பேசி அவனும் கௌஷியும் பிரியும் நிலைக்கு சென்று ஒருவாறு ஒன்று சேர்ந்திருக்க, அவன் அன்னையோடு வந்ததற்கே அவள் என்ன முடிவில் இருக்கின்றாள் என்று தெரியவில்லை. இதில் அன்னைக்காக பேசி நிரந்தரமாக பிரிய நேரிட்டால்?  இறைவன் விட்ட வழியென்று அமைதியாக இருந்து விட்டான். இதோ அனைவரும் வீடு தேடியே வந்து விட்டனர்.
சாம்பவி சந்திராவின் காலைக் கட்டிக்க கொண்டு கதறியது மட்டுமல்லாது, இந்திராவின் கையை பிடித்துக் கொண்டு மன்னிப்பும் கேட்டாள்.
“எதுக்கு இப்போ உடம்பு முடியாம இருக்குறப்போ அழுது கரையிற சாம்பவி. அதான் எல்லாம் மறந்துட்டு நாங்களே உன்ன பார்க்க வந்துட்டோமே” இந்திரா பேச, சந்திராவும் ஆறுதலாக பேச ஒருவாறு சமாதானமடைந்தாள் சாம்பவி.
வெற்றியை கண்டு “வாடா வீட்டுக்கு வர உனக்கு இப்போதான் வர வழி தெரிஞ்சதா” என்று கேக்க, நான்கு நாட்களிலையே உருக்குலைந்த அவளை பார்த்து வெற்றிக்கே பாவமாக இருந்தது.
அன்னையின் கையை பிடித்துக் கொண்டவன் சந்த்யா கர்ப்பமாக இருப்பதை மெதுவாகக் கூறினான். சோபையாக புன்னகைத்தவள் அவளுக்கு சாப்பாடு செய்து எடுத்து வருவதாக கூற “முதல்ல நீ குணமாகு அப்போ தான் பேரபுள்ளைய பார்க்க முடியும்” என்றான் வெற்றி.
“ஒரு புள்ளையோட பேரன்பேத்திய மட்டும் பார்த்தா போதுமா? கௌஷியையும், சக்தியையும் ஒன்னு சேர்த்து வைக்க வேணாமா?” சந்திரா பேச்சை ஆரம்பிக்க, அனைவரும் ஆளுக்கொரு கருத்து சொல்லலாயினர். 
“இப்போ இருக்குற நிலமைல ஊரக் கூட்ட வேணாம் அத்த. நம்ம வீட்டாளுங்க மட்டும் போதும்” முடிவாக சொன்னான் ஷக்தி.
தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கை பண்ணிடலாம் என்று சாம்பவி சொல்ல, “சாந்திமூர்த்ததை எங்க வீட்டுல வச்சிக்கலாமா?” சந்திரா ஷக்தியை கேட்டாள்.
சாம்பவிக்கு தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள ஆசை இருந்தாலும் அமைதியாக இருந்தாள்.
“இல்ல அத்த எங்கயும் வேணாம் பண்ண வீட்டுல ஏற்பாடு செஞ்சிடுங்க. பத்து நாளைக்கு நானும் கௌஷியும் அங்கதான் இருக்கப் போறோம்” கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கூறினான் ஷக்தி.
நல்ல நேரம் பார்த்து இன்று காலை தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ததோடு விருந்தும் பண்ணை வீட்டிலையே ஏற்பாடு செய்திருக்க, இரவானதும் அனைவரும் உண்டு விட்டு கிளம்ப கடைசியாகத்தான் பெண்கள் மூவரும் கிளம்பி இருந்தனர்.
கௌஷி கட்டிலில் அமர்ந்திருக்க அறைக் கதவை பூட்டிய ஷக்தி கதவில் சாய்ந்து அவளையே பார்த்திருந்தான்.
“என்ன ஷக்தி அப்படி பாத்துகிட்டு நிக்குற?” தலை சாய்த்து சிரித்த கௌஷியின் கன்னங்கள் சிவப்பேறி இருந்ததை அறையின் மெல்லிய வெளிச்சத்தில் ஷக்தியின் கண்களுக்குள் விழவில்லை.
“ஜமீந்தாரிணியா போயிட்டீங்க. எங்க என்ன வேணாம்னு சொல்லுவீங்களோன்னு நினச்சேன்” என்றவாறே அவளருகில் வந்தமர்ந்தான் ஷக்தி.
உண்மைகள் அனைத்தும் அறிந்து கொண்ட நொடி அன்னை மயங்கி விழப்போக, ஷக்தி பாய்ந்து சென்று அவளை தங்கி பிடித்தவன் தந்தையோடு அன்னையை அழைத்துக் கொண்டு வீடு சென்ற பின்தான் அவனுக்கும் தானும் சிறு வயதில் கௌஷியை எவ்வளவு கஷ்டப்படுத்தினோம்.
ஓவியாவுக்காக நடந்த திருமணத்தையே தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டோம். உண்மையெல்லாம் தெரிந்ததனால்தான் மீண்டும் திரும்பி வந்து விட்டதாக கௌஷி எண்ணினால் என்ன செய்வது? மீண்டும் ஒருமுறை அவளிடம் தன்னை நிரூபிக்க வேண்டுமா? இல்லை அவளாக யோசித்து முடிவெடுக்கட்டும் என்று அவளை அழைக்காமல் இருந்து விட்டான்.
“ஆமா நீங்கதான் நான் வேணாம்னு அம்மா வீட்டுல போய் உக்காந்துட்டீங்க” கோபமெல்லாம் வரவில்லை. அந்தமாதிரியான சூழ்நிலையில் ஷக்தி ஒரு மகனாக சரியாகத்தான் நடந்துக்க கொண்டான் என்று புரிந்துக் கொண்டவள் பேசினாள்.
“வீட்டுக்கு வந்து என் சட்டைய பிடிச்சி இழுத்துட்டு வருவியோன்னு நினைச்சேன்” சிரித்தான் ஷக்தி.
“போன் கூட பண்ணி பேசாதவங்களையெல்லாம் நான் வீட்டுக்கு போய் பாக்குறதில்ல” கௌஷியும் சிரித்தாள்.
ஷக்தி அவன் என்ன நினைத்தான் என்று கூற, கௌஷியும் அவன் மீது கோபமாக இருந்ததையும் பின் புரிந்துகொண்டத்தையும் கூறியவள் அவள் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டாள்.
“எங்க இந்த சொத்து பிரச்சினையால வேதாளம்  முருங்கை மரம் ஏறிடுமோன்னு நினச்சேன்” கௌஷியின் கைகை பிடித்தவாறு ஷக்தி கூற,
“அப்பா நிலத்தையே வாங்கி எங்க பேர்ல ரெஜிஸ்டர் பண்ண கொடைவள்ளல் ஆச்சே. அதுவும் அவங்க அப்பா காச வாங்காம. உங்கள போய் விட்டுடுவேனா? இனி பிரிவே இல்ல ஷக்தி. உறவு மட்டும்தான்” என்று அவன் காதோடு சொன்னாள் கௌஷி.
“எல்லாரையும் துரத்திட்டு நாம ரெண்டு பேரும் மட்டும் பண்ண வீட்டுல இருக்கணும்னு சொன்னது பேசிகிட்டு இருக்கவா? பேசினது போதும். இனி ஒன்லி ஆக்ஷன்தான்” என்றவன் மேற்கொண்டு அவளை பேசவிடாது அவள் இதழ்களை சிறையெடுத்ததோடு, விடாது அவளை இறுக்கி அணைத்திருந்தான். 

Advertisement