Advertisement

அத்தியாயம் 25-1

 

வீடு குடிபுகுந்து நான்கு நாட்களாகி இருக்க, வீடே அமைதியாக இருந்தது. யாரும், யாருடனும் பேசிக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சிந்தனையில் இருந்தனர்.
சந்த்யா கர்ப்பமாகி இருப்பதால் அவள் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது. ஆரோக்கியமாக இருக்க வேண்டும் வேளாவேளைக்கு அவளுக்கு உணவு கொடுக்க வேண்டும் “அத்த நீங்க இப்படி இருந்தால் சரியா?” இந்திராவை யோசிக்க விடாது உணவு சமைக்கும் வேளையில் இருத்தி இருந்த வெற்றி மனைவியோடு இருந்துக் கொண்டான்.
யோசனையாகவே இந்திரா சமைப்பதை பார்த்து கதிர்வேலனும் மனைவியை விட்டு நகரவேயில்லை. சந்திராவின் கையை பிடித்துக் கொண்டு கதறியவள் தானே “அக்கா எனக்கு அம்மா அப்பா முகம் கூட நியாபகம் இல்ல. உனக்கு நல்லாவே நியாபகம் இருக்கும். அவங்க பேர்ல இந்த சொத்து இருந்து என்ன பயன்? இத்தனை வருஷமா இறந்து போன அவங்களுக்கு ஒரு காரியம் கூட பண்ணல”
“மாமா இறந்த பிறகு ப்ரணவ்வோட அப்பா என் கிட்ட கேட்டார்டி எனக்கு தெரியாதுன்னு சொன்னதும் என்ன நினச்சர்னு தெரியல ப்ரணவ்வ வச்சி காரியம் பண்ணுவாரு” அழுதவாறே சொன்னாள் சந்திரா.
அக்காவோட கையை மேலும் இறுக்கிய இந்திரா “அக்கா… நீ மாமா கூட சந்தோசமா தான் வாழ்ந்தியா?”
சகாதேவனுக்கும், சந்த்ராவுக்கும் இருக்கும் வயது வித்தியாசம் இந்திராவின் கண்களிலும், கருத்திலும் படவேயில்லை. கபிலர் இன்று சொன்ன உண்மைகளால்தான் அவளுக்கு லட்சுமி சந்திராவை கட்டயாப்படுத்தி தனது மகனுக்கு திருமணம் செய்திருப்பாளோ என்று நினைக்காத தூண்டியது.
“அசடு… நான் உன் மாமவ இஷ்டப்பட்டுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அத தெரிஞ்சும் அவர் இப்படி அநியாயமா உசுர விட்டுறாரே. என் கிட்ட சொல்லி இருந்தா எங்க எல்லா சொத்தையும் அவர் பேர்லயே எழுதிக் கொடுத்திருக்க மாட்டோமா?” சந்த்ராவால் அழுகையை அடக்க முடியவில்லை.
அக்காவின் பேச்சுக்கு மறுபேச்சின்றி தலையை ஆட்டினாள் இந்திரா. சேற்றில் மலர்ந்த செந்தாமரை தான் சகாதேவன். அவர்கள் அந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து அவர்களுக்கு அன்பை மட்டும்தான் கொடுத்தார்.
அவர்கள் மட்டுமன்றி அவர்களின் பிள்ளைகளும் வாழ வேண்டும் என்று எண்ணியதால்தானே கதிர்வேலன் போன்ற நல்ல மனிதனை இந்திராவுக்கு திருமணம் செய்து வைத்தது மட்டுமல்லாது. யார் காசு, பணத்தையும் பார்த்து ஆசைப் படாத கதிர்வேலனின் பணத்தையே சேமித்து நிலம் வாங்கி வைத்திருக்கின்றார்.
அப்படிப்பட்ட மனிதருக்கு உயிரையே கொடுக்க முடியும். சொத்தை கொடுக்க மாட்டோமா? என்ற எண்ணம்தான் இந்திராவுக்கு வந்தது. இனி அதை பற்றி பேசி என்ன பயன்? “மானஸ்தன் உசுரையே விட்டுட்டாரே” அடிக்கடி தன்னை வளர்த்த தந்தை போன்ற மாமாவை நினைத்துதான் கண்ணீர் வடிக்கலானாள் இந்திரா.
“மாப்புள போன் பண்ணலையா இந்து?” 
கபிலர் சொன்ன உண்மைகளை தாங்க முடியாமல் சாம்பவி மயங்கி விழப்போக அவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு ஷக்தியும், கபிலரும் வீட்டுக்கு சென்றிருக்க, ஷக்தி இந்த வீட்டுப்பக்கம் வரவே இல்லை.
கணவனை ஒரு பார்வை பார்த்தவள் “கௌஷி கல்யாணம் அவ விருப்பம் இல்லாம நடந்தது. விவாகரத்துதான் வேணும்னா… அவ இஷ்டப்படி பண்ணட்டும்”
“ஏய் என்னடி பேசுற?”
“தமிழ்ல தானே பேசுறேன்? ஹிந்திலையா பேசிகிட்டு இருக்கேன். புரியாத மாதிரி கேக்குறீங்க? போனவருக்கு ஒரு போன் பண்ணி அவ கூட பேச தெரியாதா என்ன? ஷக்தி நல்ல பையன்தான். எந்த உறவையும் கட்டாயப்படுத்தி சேர்த்து வைக்க முடியாது. காலம் முழுக்க கஷ்டப்படுறத விட அவவங்க அவவங்க வாழ்க்கையை பார்க்கலாம்” என்றாள் இந்திரா.
“என்ன இப்படி பேசுறா? இது சரியில்லையே” புலம்பினார் கதிர்வேலன். 
“அம்மா வாம்மா வீட்டுக்கு போலாம். வீடு பூட்டினபடியே இருக்கு. போட்டது போட்டபடியே இருக்கு. நீ இங்க உக்காந்து இருக்க. இப்படியே எல்லாரும் சுவத்த பார்த்து உக்காந்து இருந்தா சரியா?இங்க என்ன எழவா விழுந்திருக்கு” வெளியே இருந்து உள்ளே வந்தபடி சொன்னான் பிரணவ்.
அவன் சத்தத்தில் அனைவரும் வாசலுக்கு வந்திருக்க, “என்ன பேசுற? நாளை மறுநாள் சக்தியையும் கௌஷியையும் ஒன்னு சேர்த்துட்டே போலாம்னு இருந்தேன். அது ஒரு குத்தமாடா? குடும்பத்துல கடைக்குட்டியா பொறந்துட்டு, சும்மா பெரிய மனிசன் போல பேசாத நீ” சந்திரா மகனை அதட்டினாள்.
“ஏன் அத எங்க வீட்டுல இருந்து பண்ண முடியாதா?” பிரணவ் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
“முதல்ல உன் அத்தானுக்கு சேர்ந்து வாழ இஷ்டமான்னு கேட்டு சொல்லு தம்பி” என்றாள் கௌஷி.
கௌஷிக்கு தான் காதால் கேட்ட அனைத்தும் உண்மையா என்று உணரவே சில கணங்கள் எடுத்திருக்க, ஷக்தியின் கையை அவள் முழங்கைக்கு மேல் ஆறுதலாக பிடித்திருந்தால் அவனோ அவளை உதறாத குறையாக அன்னையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
சாம்பவியின் பக்கம் பேச மாட்டான் என்று கௌஷி எண்ணி இருக்க, இவன் என்னடா என்றால் உண்மை அனைத்தும் அறிந்த பின் அன்னையோடு சென்று விட்டான்.  தோள்சாய கணவன் இல்லை. ஆறுதலாக நாலு வார்த்தை சொல்ல அலைபேசியாலவாது அவளை அழைக்கவுமில்லை என்ற கோபத்தில் அமர்ந்திருந்தாள் கௌஷி. 
“என்ன பேசுற கௌஷி? அவன் உன்ன நேசிக்கிறது உனக்கு தெரியாதா? உனக்காக என்னெல்லாம் பண்ணானு உனக்கு தெரியாதா? எங்க சொத்து விஷயம் அவனுக்கு மட்டும் தெரிஞ்சி உனக்கு தெரியாம போய்ட்டா சொத்துக்காகத்தான் அவன் உன்ன ஏத்துக்கிட்டதா நீ அவனை சந்தேகப்படுவியோன்னு நான் தான் அவன் கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன்” தம்பிக்காக வக்காலத்து வாங்கினான் வெற்றி.
“ஆமாக்கா… பழைய பெட்டகத்துல உங்க நிலப்பத்திரம் கிடைச்சப்போவே இந்த சொத்து விவரமெல்லாம் கிடைச்சிருச்சு. அம்மாகிட்ட சொன்னப்போ ஆடிபோய்ட்டாங்க. அப்பொறம் கபிலர் மாமாவையும் வெற்றி அத்தனையும் கூப்பிட்டு பேசினோம். நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்த பிறகு பேசிக்கலாம்னு அம்மாதான் சொன்னாங்க. அதுவரைக்கும் ஷக்தி அத்தானுக்கு தெரிய வேணாம்னு வெற்றி அத்தான் சொன்னாரு” என்றான் பிரணவ்.
“அது சரிடா தம்பி. உங்க அப்பாவழித் தாத்தா மகாதேவன் சொத்த கரிகாலன் தாத்தா வாங்கினது அந்த சொத்து பத்திரம் மட்டுமா பெட்டகத்துல இருந்தது? நம்ம தாத்தாக்குனு தனியா சொத்துப்பத்து ஏதும் இல்லையா?” யோசனையாக கேக்க,
“ஏன் இல்ல. நம்ம ஊர்ல இருக்குற, மாந்தோப்பு. கொய்யா தோப்பு ரெண்டுமே கரிகாலன் தாத்தாவோடது. அதுபோக அவரோட ஊருல இருக்குற தென்னை, வாழ, மானு நிறைய இருக்கு. அதெல்லாம் சித்தப்பா தானே அப்பா கூட போய் பார்த்துட்டு வராரு” என்றான் பிரணவ்
“ஆமாம் கௌஷிமா… ஐயா  கூட எதுக்கு அப்பா இந்த ஊருல சொத்து வாங்கி இருக்காரு. பாத்துக்க ஆள் வைக்கவே சிரமமா இருக்கு. பேசாம வித்துடலாம்னு பார்த்தா பத்திரம் எல்லாம் எங்க இருக்குமே தெரியல்னு சொன்னாரு” என்றார் கதிர்வேலன்.
ஆகா பத்திரம் இல்லாமல் இல்லை. மகாதேவன் தாத்தா மறைத்து வைத்திருக்கின்றார். என்று அனைவருக்கும் புரிந்தது.
“சொத்து, சொத்து எதுக்கு இப்போ அத பத்தியே பேசிகிட்டு இருக்கீங்க? சாகுறப்போ கொண்டு போக போறோமா? கௌஷி உன் முடிவுதான் என்ன?” சந்திரா கோபமாக கேக்க, அமைதியாக பெரியம்மாவை பார்த்தாள் கௌஷி.
“ஏன்பா… வெற்றி ஷக்தி உனக்கு கூடவா போன் பண்ணல? நீயாச்சும் போன் பண்ணி பேசலையா? எல்லா உண்மையும் தெரிஞ்ச உங்கம்மாக்கும் அதிர்ச்சியாக இருக்குமில்ல. அங்க என்ன பிரச்சினையோ” சந்திரா கவலையாக கேக்க,
“பேசினேன் அத்த. அம்மாக்கு ஜுரமாம் பினாத்திக்கிட்டே இருக்காங்களாம். ஷக்தி அவங்கள விட்டு நகராம இருக்கான்னு அப்பா சொன்னாரு”
“அப்போ அவன் பேசலையா? மாமாதான் பேசினாரா?” கௌஷி மனதில் நினைத்தவாறே வெற்றியை ஏறிட அவள் கேள்விதான் அவனை அடையவில்லையே. அவள் புறம் திரும்பாமல் மனைவியை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.
“அப்பொறம் என்ன கௌஷிமா உன் மாமியாருக்கு உடம்பு முடியலையாம். உன் இடத்துல இருந்து உன் புருஷன்தான் பாத்துகிறானாம். அதனாலதான் போன் கூட பண்ணலன்னு தெரிஞ்சி போச்சே”
சந்திராவின் பேச்சில் குறுக்கிட்ட இந்திரா “அக்கா ஷக்தி நல்ல பையன்தான். பலவந்தமான என் பொண்ணு ஷக்தியோட வாழ வேணாம். என் பொண்ணு இப்போவாச்சும் அவ விருப்பப்படி வாழட்டும்” என்றாள்.
“ஏய் என்னடி பேசுற?” சந்திரா சீற
“நல்லா கேளுங்க அண்ணி. காலைல இருந்து இப்படித்தான் பேசிகிட்டு இருக்கா. இவ மனசுல எந்த பேய் புகுந்திருச்சோ தெரியல” என்றார் கதிர்வேலன்.
“இங்க பாரு கௌஷிமா உங்க அம்மா புரியாம பேசிகிட்டு இருக்கா. நீ அவ பேச்சு கேட்டு தப்பான முடிவா எடுத்திடாத” சந்திரா சொல்ல,
“ஆமாம்மா. ஷக்தி போல தங்கமாமா மாப்பிள்ளையை என்னால உனக்கு தேடி தர முடியாது.ஆனாலும் நீ என் பொண்ணு. நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் உன் பக்கம் நிப்பேன். நல்ல யோசிச்சு உன் வாழ்க்கைக்கு எது சரினு படுதோ அந்த முடிவுக்கு வா” கதிர்வேலன் சின்ன மகளின் தலையை தடவி விட்டு சென்றார்.
“அப்பா தப்பா ஏதும் சொல்ல மாட்டார். பெரியப்பா இருந்தாலும் இதைத்தான் சொல்வார்” மீண்டும் சொன்னாள் சந்திரா.
“போதும்மா.. வா வீட்டுக்கு போகலாம்” அன்னையை அழைத்துக்கொண்டு பிரணவ் சென்றான்.
“இங்க பாரு கௌஷி. இது உன் வாழ்க பிரச்சினை. அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க அதனாலதான் முடிவெடுத்தேன். ஐயோ என் வாழ்க இப்படி ஆகிருச்சேன்னு அழுது புலம்பக் கூடாது. உன் வாழ்க. முடிவெடுக்க உனக்கு முழு உரிமையையும் அம்மா நான் கொடுத்திருக்கேன் நல்லா யோசிச்சு முடிவெடு” என்று விட்டு சென்றாள் இந்திரா.
அனைவரும் மாறிமாறி பேசியதில் கௌசல்யாவுக்கு தலைவலியே வந்து விட அறையை சாத்தி விட்டு கட்டிலில் சரிந்தாள்.

Advertisement