Advertisement

அத்தியாயம் 24
காலை உணவு பாதி தயாராகி இருக்க, “நீங்க எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க, இன்னக்கி மூணு வேளையும் எங்க சமையல்” என்று ப்ரணவ்வும், ஷக்தியும் வெற்றியும் கலத்தில் இறங்கி பின்னாடி சமைக்க ஆரம்பித்திருக்க, சந்தியாவுக்கு தலை சுத்தியதில் வெற்றி அவளோடு செல்ல, முந்திரி வாங்கிட்டு வரேன் என்ற பிரணவ் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கதிர்வேலன் குழுவின் பேச்சில் கலந்துக் கொண்டிருக்க, ஷக்தி மட்டும் தான் புறவாசலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனிடம் விரைந்த கௌஷி “அப்பா சொல்லுறது எல்லாம் உண்மையா?” என்று கேட்டிருக்க
அவள் எதை பற்றி கேட்கின்றாள் என்று ஒரு நொடி புரியாது முழித்தவன், வீடு வாங்கியதைதான் கேட்கிறாளாக இருக்கும் என்று “ஆமாம்” எனும் விதமாக தலையசைத்தான்.
“இது உங்க அம்மாக்கு தெரியுமா? தெரிஞ்சா என்ன ஆகும் தெரிஞ்சிதான் பண்ணியா?” கோபம் கணக்க கேட்டாள்.
கதிர்வேலனுக்கு அவன் செய்தது உதவியல்ல. கடமை என்றே எண்ணித்தான் எல்லாவற்றையும் செய்திருந்தான் ஷக்தி.
அவனால் இழந்த வீட்டை எப்படியாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆறு வருடங்களாக சம்பாதித்த சேவிங்க்ஸ் மொத்தத்தையும் நிலம் வாங்க கொடுத்திருந்தான்.
அதுவும் பத்தாமல் லோன் வாங்கலாம் அல்லது கடன் வாங்கலாம் என்று நினைக்க வெற்றிதான் மீதி பணத்தை தருவதாக கூறி தம்பிக்கு தோள் கொடுத்தான்.
ஷக்திக்கு கௌஷி மட்டும் போதும் என்றால் அவளை சேர்த்து வைத்தபின் அவன் வீட்டுக்கு அழைத்து சென்று வாழ்ந்து கொள்ளலாமே.
தன்னால் நேர்ந்த தவறை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தவிப்பது எல்லாம் கௌஷியின் மேலிருக்கும் காதலாலும், குடும்பத்தார் மீதிருக்கும் அன்பால்தானென்றும் இவள் புரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி பேசியே இம்சிக்கின்றாள்.   ஷக்திக்கு கோபம் வருவதற்கு பதிலாக வெறுப்புதான் வந்தது.  
“இங்க பாரு கௌஷி நா அன்னக்கி சொன்னதுதான். என் காசு. நான் என்ன வேணாலும் செய்வேன். என் அம்மா கேட்டா நான் பேசுகிறேன். என்னதான் கேப்பாங்க? நீ எதுக்கு டென்ஷனாகுற?” பொறுமையாகத்தான் மனைவிக்கு பதில் சொன்னான்.
கோபம் கொண்டு கத்திப் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று அவளோடு இருந்த இந்த ஒன்றரை மாதத்தில் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தான் ஷக்தி.
“நீ ஏன் புரியாம பேசுற ஷக்தி. உங்கம்மா எங்க குடும்பத்தை பேச வழி தேடிகிட்டு இருக்காங்க. நீயே ரூட்டு போட்டு கொடுத்திருக்க, அப்பா வீடு வாங்க ஹெல்ப் பண்ணுறேன்னு நிலம் வாங்கி அத என் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணி இருக்க, அறிவிருக்கா உனக்கு”
நிலத்தை வேறு யாருக்காவது விற்று வீடு வாங்கி இருந்தாலாவது பரவாயில்லை என்று கௌஷி எண்ணும் அளவுக்கு அவள் மனம் படபடக்கலானது.
நிலத்தை வாங்கி சாம்பவியின் பெயரில் பதிவு செய்திருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது. கபிலர் பெயரில் அல்லது ஷக்தி, வெற்றி பெயரிலாவது பதிவு செய்திருந்தால் சாம்பவி அமைதியாக இருப்பாள். நிலத்தையும் வாங்கி அதை தங்களது பெயரில் பதிவு செய்தால் சாம்பவி அமைதியாக இருப்பாளா? நிச்சயமாக இருக்க மாட்டாள். எந்த நேரத்தில் இங்கு வந்து பிரச்சினை பண்ணுவாளோ என்ற அச்சத்தில் கௌஷி பேசிக்கொண்டிருந்தாள்.
“ஒன்னு புரிஞ்சிக்க கௌஷி உங்க அப்பாகிட்ட நிலம் வாக்கினதா ஏன் பாக்குற? யார் கிட்டயோ வாங்கி இருந்தா? அத என் பொண்டாட்டி பேர்ல ரெஜிஸ்டர் பண்ணி இருந்தா? அது என் விருப்பம் இல்லையா?” மனைவிக்கு புரிய வைக்க முயன்றான் ஷக்தி.
உண்மைதானே அவன் சொல்வது உண்மைதானே. அவன் மனைவியின் பெயரில் நிலம் வாங்கக் கூடவா அவனுக்கு உரிமை இல்லை. தனக்கென்று வாங்காமல் அவள் பெயரில் வாங்கி இருப்பது அவள் மேல் இருக்கும் அன்பால் தானே அது கௌஷிக்கு புரியாமலில்லை. அவள் அச்சமெல்லாம் சாம்பவி பிரச்சினை பண்ணுவாளோ? வீணான பிரச்சினை வந்து விடுமோ என்றே இருந்தது.
“நான் என்ன சொல்ல வரேன்னு நீ புரிஞ்சிக்க மாட்டேங்குற ஷக்தி. உங்க அம்மாக்கு எங்கள பிடிக்கல. இந்த நேரத்துல அப்பா நிலத்த வாங்கி அவர்க்கு ஹெல்ப் பண்ணி இருக்க, அதுக்கே உங்கம்மா பிரச்சினை பண்ணுவாங்க. அது கூட பரவால்ல. நிலத்த உங்க பேர்ல ரெஜிஸ்டர் பண்ணி இருந்தா உங்க அம்மா அமைதியா இருப்பாங்க. எங்க பேர்ல நிலம் வாங்கினது தெரிஞ்சா, அதுவும் எங்க அப்பா நிலத்தையே வாங்கி எங்க பேர்ல பதிவு பண்ணி இருக்குறது தெரிஞ்சா? என்னெல்லாம் பேசுவாங்க? பேசுறத விடு. அவங்க அப்படிதான் பேசுவாங்க எங்களுக்கு கேட்டு பழகிருச்சு. நாங்க உங்கள ஏமாத்தினதா ஊரு, உலகமே தப்பா பேசாதா? அப்படி ஒரு வார்த்த வர நீங்களே காரணமா இருக்கலாமா?” கௌஷியின் கண்களிலிருந்து கண்ணீர் முணுக்கென எட்டிப்பார்க்க, அவள் அச்சம் ஷக்திக்கு தெளிவாக புரிந்தது.
“இங்க பாரு கௌஷி ஊரு உலகம் அப்படி பேசும் இப்படி பேசனும்னு யோசிச்சு யோசிச்சு ஒவ்வொன்னத்தையும் பண்ணா, நாம நம்ம வாழ்க்கையை வாழ முடியாது. நாம சந்தோசமா வாழ, நமக்கு பிடிச்சா மாதிரி வாழனும்.
உங்க அப்பா நிலத்த வெளில விற்க எங்க யாருக்கும் இஷ்டமில்ல. அப்பாகிட்ட சொன்னாலே அவர் வாங்கி இருப்பாரு. அவர் வாங்குறது எல்லாம் எனக்கும் அண்ணனுக்கும் இல்லையா? ஏன் அவர் கிட்ட நயா பைசா வாங்காம என் சேர்விங்ஸ், வெற்றி சேர்விங்ஸ் எல்லாம் போட்டு நிலத்த வாங்கினோம்”
கௌஷி புரிந்தும் புரியாமலும் கணவனை ஏறிட “என் புருஷன் காசுல வாங்கினது என்று எங்கம்மா நாளைக்கு ஒரு வார்த்த சொல்லக் கூடாதுன்னுதான். புரியுதா? நிலம் என் பேர்ல இருந்தா என்ன? இல்ல உன் பேர்லதான் இருந்தா என்ன? நீ வேற நான் வேறயா?” புன்னகைத்தவாறே கேட்க
கௌஷியின் தலை “இல்லை” எனும் விதமாக தானாக ஆடியது.
“அப்பொறம் என்ன ரொம்ப யோசிக்கிற” அவள் தலையில் தட்டியவன் “உங்க அப்பா அந்த நிலத்த ஆசையாசையா வாங்கல. ஆனா மாமா வாங்கினது. அது உனக்கும் அண்ணிக்கும் சேரணும்னு ஆச பட்டிருப்பாரு. அதே மாதிரி உங்க அப்பாகும் உங்க ரெண்டு பேர்லயும் நிலத்த எழுதணும்னு தோணி இருக்கும். அந்த குட்டி ஆசைய நானும் வெற்றியும் நிறைவேத்திட்டோம். இதுக்கு போய் எங்கம்மா வருவாங்க, சண்டை போட போறாங்கன்னு பூச்சாண்டி காட்டிகிட்டு, தள்ளு எனக்கு நிறைய வேல இருக்கு”
அவன் சொல்ல சொல்லத்தான் கௌஷிக்கும் அவன் செய்தவைகளின் காரண காரியம் புரிந்தது. ஷக்தி சாம்பவியின் பக்கம் இனி பேச மாட்டான். அவளே வந்தாலும் இனி அவன் பேசுவான் என்ற தைரியம் கௌஷிக்கு வரவே
“எங்க போனாலும் நீ அகப்பையும் கையுமா அலையுற ஷக்தி. வேலை போனாலும் உனக்கு சோறு போட வேலை இருக்கு” சிரித்தாள் கௌஷி.
“என்ன கிண்டல் பண்ணது போதும், வா வந்து இந்த வெங்காயத்தை நறுக்கிக் கொடு” ஷக்தி அழைக்க,
“நா வேணா முந்திரிப்பருப்பை உடைச்சி தரட்டுமா?” நக்கலாக கேட்டாள் கௌஷி.
“எதுக்கு பாதி வயித்துக்குள்ள போகவா? கொன்னுடுவேன்” ஷக்தி மிரட்ட
“சீ போ… நீ தனியாகவே அடுப்புல வேகு” என்றவள் ஓடி விட்டாள்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவுண்ண, சந்தியாவுக்கு வெற்றியே உணவூட்டி விட்டான்.
“டேய் ஷக்தி வந்ததுல இருந்தே வேலையா இருக்க கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுடா… மதிய சமையலை நாங்க பாத்துகிறோம்” சந்திரா சொல்ல
“ட்ரைன்ல தூங்கி கிட்டு தான் அத்த வந்தோம். அது மட்டுமில்லாம இந்த ஒன்னரை மாசமா என் பொண்டாட்டி என்ன சமைக்க நல்ல ட்ரைனிங் கொடுத்து இருக்கா. என் கைப்பக்குவம் எப்படினு நீங்க பார்க்க வேணாமா?” ஷக்தி காலரை இழுத்து விட்டு சொல்ல சத்தமாக சிரித்தான் வெற்றி.
பெருமையாக சொல்லுபவன் தினமும் புலம்பிய கதை அவன் மட்டுமல்லவா அறிவான்.
“அடியேய் நீ வீட்டு வேலைக்கு ஆள் வச்சிருக்கேன்னு சொல்லுறப்போவே நான் யாரு என்னனு கேட்டிருக்கணும். மாப்புளையத்தான் வேல வாங்கினியா?” இந்திரா சின்ன மகளின் தொடையை கிள்ளியவாறே கேக்க, வலியில் துடித்தவள் அன்னையையும், இப்படி சபையில் போட்டுடைத்து மானத்த வாங்குறானே என்று கணவனையும்,  மாறிமாறி முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஏங்க மாமா வரேன்னு சொன்னாரே வருவாரா?” சோர்வாக கேட்டாள் சந்த்யா.
கர்ப்பமாக இருக்கிறாள். மாமனாரிடமும், மாமியாரிடமும் ஆசிர்வாதம் வாங்க வேண்டாமா? என்று கேட்டதற்கு, கோவிலுக்கு மட்டும் அழைத்து சென்றவன் சொந்த வீட்டுப்பக்கம் செல்லவே இல்ல. மீண்டும் கேட்டதற்கு கிரகப்ரவேசத்துக்கு அப்பா மட்டும் வருவார் என்றான். பூஜைக்கு வருவார் என்று எதிர்பார்த்திருக்க, கபிலரை காணவில்லை. காலை உணவுக்கும் வரவில்லை என்றால் உணவை கட்டியாவது அனுப்பலாமா? என்று கேட்கத்தான் சந்த்யா இந்த பேச்சை ஆரம்பித்தாள்.
“வருவாரு தியா. சாப்பிட இருப்பாரான்னு தெரியல ஆனா வருவாரு. நாம சந்தோசமா இருக்கணும் என்று அவர் நினைக்க மாட்டாரா? அம்மாவால எந்த பிரச்சினையும் வரக் கூடாது என்றும் நினைப்பார். நீ சாப்பிடு” என்று ஊட்டிவிட்டவன் சொல்லாமல் சொன்னது என் அம்மா வர மாட்டாங்க. அவங்கள பத்தி பேசாதே என்றுதான்.
சாப்பாடு நல்லா இருப்பதாக ஷக்தியை பாராட்டியவாறே அனைவரும் சாப்பிட ப்ரணவ்வும், வெற்றியும் தங்களது பங்களிப்பும் இருப்பதை கூறி சண்டை போட ஆரம்பித்திருக்க, பேசி சிரித்தவாறே உணவுண்டனர் அனைவரும்.
மதிய உணவு தயாராகி இருந்த நிலையில் கபிலர் கதிர்வேலனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
“என்னப்பா காலைல வருவீங்கன்னு எதிர்பார்த்தோம் இப்போ வரீங்க? சாப்டீங்களா?” ஷக்தி அன்போடு கேக்க
“இன்னைக்கு நம்ம வயல்ல மருந்து அடிக்கிறோம்ப்பா.. அதான் வர லேட்டாகிருச்சு” கபிலர் சொல்லிக்கொண்டிருக்க, சந்திரா மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“அடுத்த வெள்ளிக்கு கிழமை நல்ல நாள் அன்னைக்கே சக்தியையும், கௌஷியையும் ஒண்ணா சேர்த்து வச்சிடலாமா?” சந்திரா கேக்க,
“உங்க விருப்பம் எப்படியோ அப்படியே பண்ணிடுங்க. அதுவரைக்கும் ஷக்தி உங்க வீட்டுல இருந்தாலும் எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்ல” என்றார் கபிலர்.
“இல்லப்பா நான் வீட்டுக்கு வரேன். இல்லனா அம்மா கோபப்படுவாங்க” ஷக்தி சொல்ல
அவ கோபப்படாம இருந்தா தானே அதிசயம். வீட்டுக்கு வந்தா இல்லாததையும் பொல்லாததையும் பேசியே உன் மனச மாத்துவா. நீ பிரணவ் கூட இரு” மகனுக்கு அறிவுரை சொன்ன கபிலரின் மனதில் சில விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
“அதானே பார்த்தேன். என்னடா… என் பையன் வீட்டுக்கு வராம இருக்கான்னு. கட்டின புருஷனே இதுங்க வச்ச சூனியத்துல மயங்கி இல்ல இருக்காரு” அங்கே வந்த சாம்பவி கபிலரின் பேச்சை கேட்டு காட்டுக் கத்து கத்த ஆரம்பித்தாள்.
 வெற்றி ஊருக்கு வந்தும் வீட்டுக்குப் பக்கமே வராமல் இருப்பது எரிச்சலை கொடுத்திருக்க, கணவன் மிரட்டியதில் கோபத்தை அடக்கியவாறு இருந்தவள் காத்திருந்தது சின்ன மகன் வீடு வந்து சேரும்வரைதான்.
இன்று காலை ஷக்தி ஊருக்கு வந்ததை பார்த்து விட்டு யாரோ சாம்பவியிடம் சொல்ல “என் புள்ள சென்னைல இல்ல இருக்கான். அவன் எங்க இங்க வரப்போறான்?” தன்னிடம் சொல்லாமல் ஷக்தி வர மாட்டான் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். தினமும் அலைபேசியில் உரையாடுகிறாளே. அன்னையின் நலம் விசாரிப்பவன். செல்லம் கொஞ்சுபவன் தன் பேச்சை மீரா மாட்டான் என்று சாம்பவிக்கு அவ்வளவு நம்பிக்கை.
அந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கியது அடுத்து அவளுக்கு கிடைத்த செய்தி. தோட்டத்தை துப்பரவு செய்ய வர சொல்லி இருந்தவர் இன்று காலைதான் வேலைக்கு வந்திருந்தார். “உங்கள எப்போ வேலைக்கு வர சொன்னேன். இன்னைக்கி வரீங்க?” என்று திட்ட ஆரம்பிக்க
“மன்னிச்சிக்கோங்க தாயே, உங்க சொந்தக்காரங்கதான் வீடு குடிபுகுறாங்க. வீட்டை சுத்தி துப்பரவு பண்ணி கொடுக்க சொன்னாங்க” என்று சொல்ல, யாரு என்ன என்று விசாரித்தவளுக்கு, கதிர்வேலன் அவரது சொந்த வீட்டை வாங்கியது தெரியவந்தது.
அப்போ ஷக்தி ஊருக்கு வந்த சேதி உண்மையா? வீடு வாங்க அந்தாளுக்கு எங்கிருந்து இம்புட்டு காசு? யார் கிட்ட கேக்குறது? என்று யோசித்தவள் புறணி பேசுவதற்காகவே ஊரில் அலையும் சிலருக்கு அலைபேசி அழைப்பு விடுத்து விசாரிக்க, எல்லா உண்மையும் தெரிய வந்தது.
கண்டிப்பாக கணவனுக்கு தெரிந்திருக்கும் கோபத்தில் வயலுக்கு சென்றால் கபிலரை அங்கு காணாமல் கோபம் கணக்க கதிர்வேலனின் வீட்டை அடைந்தால் பெத்த மகனையே வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட சாம்பவியின் கோபம் பல மடங்காகியது.  
சாம்பவியின் சத்தம் கேட்டதும் அசதியில் படுத்துக்க கொண்டிருந்த சந்த்யா திடுக்கிட்டு விழித்தாள்.
பின் புறம் சமைத்துக் கொண்டிருந்த வெற்றி, பிரணவ் கதிர்வேலன் என்று அனைவரும் வாசலுக்கு விரைய வெற்றி மட்டும் சமயலறையிலிருந்த இந்திராவை கையேடு அழைத்து வந்து சந்த்யாவோடு இருத்தி “அத்த சந்த்யாவ பார்த்துக்கோங்க. என்ன நடந்தாலும், எந்த காரணத்துக்காகவும் ரூமை விட்டு வரக் கூடாது, என் பேச்சு மீறி வந்தா தொலைச்சிடுவேன்” மனைவியை மிரட்டியவாறே அறைக்கதவை சாத்திக் கொண்டு வெளியேறினான்.
அன்னையோடு சமயலறையில் இருந்த கௌஷி தான் நினைத்தது நடந்து விட்டது என்ற பதட்டத்தோடு சக்தியின் பின்னால் வந்து நின்றாள்.
“வாடி என் மருமகளே, என் மகன நல்லா மயக்கி வச்சிருக்க போல, என் மகன மட்டுமா மயக்கி வச்சிருக்க என் புருஷனையும் இல்ல மயக்கி வச்சிருக்கீங்க? எங்க உன் ஆத்தாகாரி” என்ன பேசுகிறோம் என்று அறியாமல் ராட்சசியாகவே மாறி இருந்தாள்
“சாம்பவி வீட்டுக்கு கிளம்பு. போதும் பேசினது” கபிலர் பொறுமையாக பேச
“இன்னும் நான் பொறுமையாக பேசணுமா? நீங்க இவளுங்க கூட சேர்ந்து என் பசங்கள என் கிட்ட இருந்து பிரிக்க சதி பண்ணுவீங்க, அத பார்த்துகிட்டு நான் சும்மா இருக்கணுமா? இந்த சூனியக்காரிங்க இவனுகள மயக்கி இருக்குற காசு, பணத்தை எல்லாம் புடிங்கிக்குவாங்க அதையும் நான் பாத்துகிட்டு சும்மா இருக்கணுமா?” அவிழ்ந்து விழுந்த கொண்டையை தூக்கிக் கட்டிக் கொண்டவள் வாசல் பிடியிலிருந்து உள்ளே அடியெடுத்து வைத்திருந்தாள்.
“போதும் சாம்பவி உண்மை என்னனு தெரியாம பேசாத” கபிலர் கோவமாக பேச
“வேணாம் எதையும் சொல்ல வேணாம்” என்றாள் சந்திரா.
“என்ன சொல்ல வேணாம். எங்கண்ணன மயக்கி கல்யாணம் பண்ணி சொத்தெல்லாம் ஆட்டைய போட்டது பத்தாதுன்னு, தங்கச்சி பொண்ணுகள என் பசங்களுக்கு கட்டிக் வச்சி எல்லா சொத்தையும் ஆட்டைய போட்டுடல்ல. இதெல்லாம் உன் பிளான்னு தெரியாம நான் உன் தங்கச்சிய இவ்வளவு நாளா திட்டிக்கிட்டு இருந்தேன்” இவ்வளவு நாளாக அண்ணி என்று கொஞ்சநஞ்சம் சந்திராவின் மீதிருந்த மரியாதையையும் பறக்க விட்டிருந்தாள்.
இந்திராவை மட்டுமே பேசி வந்தவள் சந்த்ராவையும் பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியையும், கோபத்தையும் கொடுக்க,
“அம்மா பார்த்து பேசு” ஷக்தி கத்த
“வாய மூடு யார பேசுற?” வெற்றி கத்த
சந்திரா சொல்ல வேண்டாம் என்ற கோபமும் சேர்ந்துகொள்ள “யார் சொத்தடி யார் ஆசைபட்டாங்க? எல்லாம் தெரியுமா உனக்கு? போ.. போ.. வீட்டுக்கு போய் மூக்கு முட்ட கொட்டிகிட்டு தூங்கு” கபிலர் கத்தினார்.
“ஆமா என் வாய மூடுறதுலையே குறியா இருங்க. என் அண்ணனையும் கொன்னுட்டு சொத்தை அனுபவிக்கிறாளுங்களே. என்னையும் கொன்னு இருக்குற சொத்தெல்லாம் அனுபவிங்க” சாம்பவி கத்த சந்திராவுக்கு கண்ணீரே வந்தது.
“யார் சொத்தை அத்த யார் அனுபவிக்கிறாங்க? இந்த சொத்தெல்லாம் என் அம்மாக்கும் சித்திக்கும் சேர வேண்டிய சொத்து. உங்க அப்பா என் தாத்தாதான் என் அம்மாவையும் சித்தியையும் ஏமாத்திருக்காரு. இத தெரிஞ்சிகிட்ட எங்கப்பா உசுரையே விட்டுட்டாரு” பிரணவ் சொல்ல சந்திரா கதறி அழவே ஆரம்பித்தாள். அவளை கைத்தாங்கலாக கௌஷியும் ப்ரணவ்வும் அழைத்து சென்று சோபாவில் அமர்த்தி இருந்தனர்.    
“என்னடா என் அண்ணன் உசுரோட இல்லனு கத சொல்லுறியா?” பிரணவ்வின் மீது சீறினாள்.
“கத இல்லடி அத்தனையும் உண்ம” கபிலர் சொல்ல கௌஷியும், ஷக்தியும், கதிர்வேலனும் புரியாது பார்க்க, அறையில் இருந்த சந்தியாவும் இந்திராவும் கூட புரியாது கேட்டுக் கொண்டிருந்தனர். 
மற்றவர்களுக்கு அது புதிய செய்தியாக தெரியவில்லை.
வேறு யாராவது சொல்லி இருந்தாலாவது சாம்பவி நம்பி இருக்க மாட்டாள் கணவனே உண்மை என்றதும் “என்ன சொல்ல வரீங்க? புரியும்படி சொல்லுங்க” கத்துவதை நிறுத்தி அமைதியாக கேட்டாள்.
“இதோ உன் அண்ணி யார் வீட்டு பொண்ணு தெரியுமா? கீழத்தூர் ஜமீன் வீட்டு பொண்ணு. ஜமீனோட கடைசி வாரிசு கரிகாலன்தான் இவங்க அப்பா.
சாம்பவிக்கும் அந்த ஜமீனை பற்றி தெரியும் அதிர்ச்சியானவள் கணவன் சொல்வதை செவிமடுக்கலானாள். 
அவருக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரே காரணத்துக்காக குடும்பத்துல இருந்து ஒத்துக்கிட்டாங்க. வேற ஜாதியா இருந்தாலும் இவங்க அம்மா ஆராதனா கொஞ்சம் வசதியான குடும்பம்தான்.
அவங்க அப்பா அம்மாவோட உதவியால் கரிகாலன் தொழில் தொடங்கி முன்னேறி வரும் பொழுதுதான் உன் அப்பாவோட அறிமுகம் கிடைச்சிருக்கு.
உன் தாத்தா காலத்துல ஏற்பட்ட வரட்ச்சியால அவர் விவசாயம் பார்க்க முடியாம, ஏகப்பட்ட நிலப்பத்திரங்கள கொண்டு போய் அடமானம் வச்சி இருக்காரு. இது உங்க அப்பாக்கு தெரியாது.
உன் அப்பா தென்னம் தோப்பு வாங்கி இருந்த சமயம்தான் அவருக்கு சொத்துக்கள் பறிபோக போகிற விஷயமே தெரிய வந்தது. அந்த நேரம் அவருக்கு உதவி செஞ்சது கரிகாலன்தான்.
சொத்துக்கள் எல்லாத்தையும் வாங்கினவரு அவர் பேர்ல சொத்து இருந்தாலும் உங்க அப்பாவையே பார்த்துக்க சொல்லி இருக்காரு. வரும் லாபத்துல மூணுல ஒரு பங்கையும் உங்க அப்பாக்கு கொடுத்திருக்கார். அப்படி பட்ட நல்ல மனுசனுக்கு உங்கப்பா பண்ணது எல்லாமே பச்ச துரோகம்” வெறுப்பை கக்கினார் கபிலர்.
கதிர்வேலனானுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. சக்திக்கும், கௌஷிக்கும் அதிர்ச்சி குறையவில்லை.
“எங்க அப்பா ரொம்ப நல்லவரு அனாதையா இருந்த இவங்கள வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து சோறு போட்டு வளர்த்தாரே” அது உங்க கண்ணுக்கு தெரியலையா?” கணவன் எதோ ஒரு உண்மையை சொல்ல விழைகிறார் என்று தெரியும். இருந்தாலும் தனது தந்தை தப்பானவராக இருக்க முடியாது என்றே பேசினாள் சாம்பவி.
“உனக்கு இன்னுமாம்மா புரியல. நீனும் அந்த வீட்டுல தானே வளர்ந்த? உன் அம்மா இவங்கள எப்படி நடத்தினாங்கனு உனக்கு தெரியாது?” வெற்றி கேக்க, முகம் தொங்கிக்ப் போனாள் சாம்பவி.
கரிகாலனும், ஆராதனாவும் எக்சிடண்ட்டுல இறந்து போனது என்னவோ உண்மைதான். அது விதியா? சதியா? கடவுளுக்கு மட்டும்தான் வெளிச்சம். ஆராதனா வீட்டுல குழந்தைகளை பார்த்துக்க யாருமில்ல. கரிகாலன் வீட்டுல இருந்தும் ஏத்துக்கள.
எங்க வேற யாராவது குழந்தைகளை கூட்டிட்டு போய்ட்டா சொத்து விஷயம் தெரிய வந்து, மொத்த சொத்தும் பறிபோய்டும்னு உங்க அப்பாவே இவங்கள கூட்டிட்டு வந்ததும் இல்லாம வள்ளல்னு பேரும் வாங்கிட்டாரு.
அது மட்டுமா இவங்க படிச்சி, விவரம் தெரிஞ்சா எங்க கேள்வி கேப்பாங்கனு பொம்பள புள்ளைங்களுக்கு எதுக்கு படிப்புனு பாதிலையே நிறுத்திட்டாரு. வெளிய கட்டிக் கொடுத்தாலும் பிரச்சினனனு வயசு வித்தியாசம் கூட பார்க்காம உங்கண்ணனுக்கு இவங்கள கட்டிக் கொடுத்தாரு உங்கப்பா.
இதெல்லாம் பார்த்துகிட்டு கடவுள் சும்மா இருப்பானா? குழந்தை வரத்தை கொடுக்காம கண்ணாமூச்சி ஆடினா… உங்கம்மா இந்த்ராவையும் உங்கண்ணனுக்கு கட்டிவைக்க பாத்திருக்காங்க” கபிலரின் வார்த்தைகளில் வெறுப்பு மட்டும்தான் எஞ்சி இருந்தது. 
அதான் கடவுள் பையன் வழில பேரன், பேத்தியை பார்க்க விடாமலே கண்ண மூட வச்சிட்டு உங்கண்ணிக்கு ப்ரணவ கொடுத்திருக்கான்.  
உன் அண்ணன் திடிரென்று ஒன்னும் நோய் வாய்ப்படல. ஷக்தி கல்யாண விஷயம் பிரச்சினையாக இருக்கே, வெற்றியும், சந்தியாவும் எங்கன்னு தேடணும். நீ வேற பிரச்சினை பண்ணுற சொத்தை சரிசமமான எல்லா புள்ளைங்களுக்கும் எழுதிடலாம்னு முடிவு செஞ்சி பழைய பெட்டகத்தை கிளறி இருக்காரு. அப்போதான் அவருக்கு எல்லா உண்மையும் தெரிய வந்திருக்கு.
சொத்தை அபகரிச்சு ஏமாத்தினதும் இல்லாம சந்திராவ கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டதா அவர் குற்ற உணர்ச்சிளையே பேச முடியாம அத வெளிய சொல்லவும் முடியாம, மன்னிப்பும் கேக்க முடியாம ரண வேதனைப்பட்டு செத்தே போய்ட்டாரு”
“இல்ல.இல்ல.” கண்ணீர் மல்க சாம்பவி மறுக்க,
“இந்த உண்மையெல்லாம் உங்கப்பா கிட்ட வேல பார்த்த பழைய கணக்குப்பிள்ளை சதாசிவம் ஐயாக்கு தெரியும். படுத்த படுக்கையா இருக்கரவர பார்த்து பேசி உண்மைய தெரிஞ்சிகிட்டேன்.  இன்னும் நீ நம்பலனா பத்திரம் பத்திரமாக பெரிய வீட்டுலதான் இருக்கு. உன் பேர்லயோ உன் அண்ணன் பேர்லயோ சொத்தை எழுதாம பரம்பரம்பரையா சொத்தை அனுபவிக்க மட்டும் எதுக்கு உங்க அப்பா உயில் எழுதி இருக்கார்னு இப்போ புரியுதா? ஏன்னா யார் பேர்லயும் எழுத முடியாது. பெரிய வீடும், தென்னம் தோப்பும் மட்டும்தான் உங்க சொத்து. மத்த எல்லாமே இவங்க சொத்துதான். இப்போ சொல்லு யார் சொத்தை யார் இவ்வளவு நாளா அனுபவிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னு” கபிலரின் குரல் உரக்க ஒழிக்க, வாயடைத்து போனாள் சாம்பவி.

Advertisement