Advertisement

அத்தியாயம் 23
ஷக்தி ஒரு வாரமாக வேலை செய்தும் கௌசி குறை சொல்கிறாளே தவிர அவனை ஒருதடவையாவது பாராட்டவில்லை. அது கூட பரவாயில்லை குறை சொல்லாமல் இருந்ததே இல்லை. அவள் என்ன நினைக்கின்றாள் என்று கணிக்கக் கூட முடியவில்லை. சில நேரம் நெருங்கி வருகிறாள். சில நேரம் முறைக்கின்றாள். இவள் மனதை எப்படி தொடுவது என்ற சிந்தனை ஒருபுறம் இருக்க, தான் அவளுக்கு சேவகம் செய்ய, தனக்கு சேவகம் செய்ய யாரையாவது தேட வேண்டிய நிலையில் இருந்தான் ஷக்தி.
அவன் வீடு தூசி படிந்து, துவைக்காத துணி குவிந்து கிடக்க, அண்ணனிடம் புலம்ப மட்டும்தான் முடிந்தது.
“ரெண்டு வீட்டு செலவையும் நான் தனியாளாக பார்க்க வேண்டி இருக்குடா… போதாததுக்கு வேலையையும் நானே பார்க்கணும். கௌசி ஒரு துரும்பு கூட அசைக்க மாட்டேங்குறா”
“ஏன்டா நீ அங்கேயும் சமச்சிட்டு இங்கயும் வந்து சமைக்கிரியா என்ன? உன் பொண்டாட்டி உன்ன வேலையும் வாங்கிட்டு சோறு கூட போட மாட்டாளா?” வெற்றி நக்கல் பண்ண
“அதெல்லாம் போடுறா… நா அத சொல்லலடா… வீட்டுக்கு ரெண்ட் கொடுக்கணும், கரண்ட் பில்லு, தண்ணி பில்லுனு கட்டணும், அங்கேயும் செலவு இங்கயும் செலவு” அலுத்துக் கொண்டான் ஷக்தி.  
வெற்றிதான் “டேய் அறிவு கெட்டவனே எதுக்கு இன்னமும் இந்த வீட்டுக்கு கூலி கொடுத்துக்கிட்டு இருக்க? வீட்டை காலி பண்ணிட்டு போய் கௌஷியோடவே இரு. அவ துணிய துவைக்கிறப்போ உன் துணியையும் துவச்சிக்க, ரெண்டு பேருக்கு ரெண்டு வீடெல்லாம் ஓவர் பா…” என்றான்.
“அட ஆமா… என் மரமண்டைக்கு இது தெரியாம போச்சே” தலையில் தட்டிக் கொண்ட ஷக்தி சில விஷயங்களை தீவீரமாக அண்ணனோடு கலந்தாலோசித்தவன் காரியத்தில் இறங்கினான்.
முதலில் அவன் செய்தது தனது துணிமணிகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு கௌஷியின் வீட்டுக்கு சென்றதுதான்.
அங்கேயே வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்து காய விட்டவன் கூலாக அடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
இரவு உணவுக்கு பின் கௌசி வீட்டுக்கு செல்லவில்லையா என்று மிரட்ட, அவளை முத்தமிட ஆரம்பித்தவனை தள்ளி விட்டவள் கத்த ஆரம்பிக்க,
“ஓவரா பண்ணாத கௌசி நான் உன் சேர்வன்ட் மட்டும் இல்ல ஹஸ்பண்ட்டும் கூட. ரெண்டு வீட்டு செலவு, ரெண்டு வீட்டு வேல என்னால பார்க்க முடியாது வீட்டை காலி பண்ணிட்டேன்” என்றான்.
“என்னது? காலி பண்ணிட்டியா? என்ன சொல்லுற? உங்க அம்மாக்கு தெரியுமா?”
வீட்டை காலி செய்ததை விட ஷக்தி கௌஷியோடு இருப்பது சாம்பவிக்கு தெரிந்தால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்று அவளுக்கு தெரியாதா?
“வீடு வாங்கினது நான். என் பணம். அவங்க கேள்வி கேக்க முடியாது. அப்படியே கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்லிக்கிறேன். நான் இப்போ தூங்கணும். எங்க தூங்குறது? என் பொண்டாட்டி கூட தூங்கலாம்ல” என்று கௌஷியின் அறை பக்கம் செல்ல
“மரியாதை கெட்டுடும் சொல்லிட்டேன். போ.. போய் அப்பா ரூம்ல தூங்கு” முறைத்து விட்டு செல்ல, சிரித்தவாறே தூங்க சென்றான். ஷக்தி.
ஷக்தி கௌஷியோடு தங்கி இருந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அவன் அவளை சீண்டுவதும். இவள் இவனை சீண்டுவதுமாக நாட்கள் நகர, ஊரடங்கு கொஞ்சம் தளர்ந்ததும் ஷக்தியின் வீட்டிலிருந்த தளபாடங்கள், சமையலறை பொருட்கள் என்று எல்லாவற்றையும் ஷக்தி ஒரு லாரியில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்திருந்தான்.
ஷக்தியை கௌசி வெறுப்பேத்த செய்வதாக நினைத்து சிறுபிள்ளைத்தனமாக செய்யும் ஒவ்வொரு காரியாத்தையும் ஷக்தி கோபப்படாமல் ரசிக்க ஆரம்பித்த பின் அவளோடு இருக்கும் தருணத்தை அதிகம் விரும்பியது மட்டுமல்லாது, அவளுக்காக செய்பவைகளையும் விரும்பாலானான். 
ஆரம்பத்தில் கடுப்பாக வேலை பார்க்க ஆரம்பித்தவன் காதலாக வேலை பார்க்க ஆரம்பித்திருந்தான். அதற்கு காரணமும் கௌஷிதான். அவள் அவனை வேலை வாங்கினாலே ஒழிய வார்த்தைகளால் காயப்படுத்த எண்ணவில்லை. அவள் நினைத்திருந்தால் அவன் சிறு வயதில் செய்தவைகள் ஒவ்வொன்றையும் நியாபகப்படுத்தி அவனை வார்த்தைகளால் குத்திக் கிழித்திருக்க முடியும். அது அவள் எண்ணத்திலும் இல்லை. அவள் குணமும் அது அல்லவே.  அவன் அவளை காதலிக்கிறான் என்று தெரிந்துக் கொண்ட பின்னும் அவனை காயப்படுத்த நிப்பாளா? இது கூட தன் பெற்றோருக்காக செய்வதாக ஏதோ சிறுபிள்ளைத்தனமாக செய்து கொண்டிருந்தாள்.
ஆனால் ஷக்திக்குத்தான் அவளை புரிந்துக்கொள்ள முடியவில்லை. முத்தம் கொடுத்தாலும் ஆழ்ந்து அனுபவித்து விட்டு அவனை துரத்தியடிப்பவளை என்னவென்று சொல்வான்? கோபமாக இருக்கிறாளா? கோபமாக இருப்பது போல் நடிக்கிறாளா? அல்லது தன் புறம் சாயும் மனதை இறுக்கிப் பிடிக்கிறாளா? ஒன்றும் புரியவில்லை.
வெற்றியும் ஷக்தியை அழைத்து “நல்ல காரியம்தான் பண்ணடா… நானும் எங்க போய் சாமான் வாங்குறது? ஆடர் கொடுத்தா அதிக நாள் ஆகும்னு யோசிச்சு கிட்டு இருந்தேன். ஆனா எங்கம்மா மங்கம்மாக்கு மட்டும் தெரிஞ்சா சாமியாடுவாங்களே” என்று சிரிக்க,
“மாமாவும் அத்தையும் பார்த்து பார்த்து வாங்கின சாமான்கள். எல்லாம் அங்க இருக்கிறதுதான் சரி. அம்மா வந்து கேட்கட்டும் நான் பேசுகிறேன்” சிரிக்காமல் சொன்னான் ஷக்தி.
“ஆமா கௌஷி கிட்ட சொல்லிட்டியா?” வெற்றி கேட்க,
“உங்க யாரையும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டு நானே சொல்வேனா? அவள ஊருக்கு கூட்டிகிட்டு வரணும். அங்க வந்தே தெரிஞ்சிக்கட்டும்” ஷக்தியின் முகம் மலர
“ஓஹ்… சப்ரைஸ்ஸா… ஆமா நீங்க ரெண்டு பேரும் எப்போ வரீங்க?” ஆவலாக கேட்டான் வெற்றி.
“அடுத்த வாரம் வரலாம்னு இருக்கோம். வீட்டையும் காலி பண்ணியாச்சு. ஆபீஸ்லயும் லீவு சொல்லணும்”
“ஒர்க் ப்ரோம் ஹோம் தானே எதுக்குடா லீவ் சொல்லுற?” வெற்றி புரியாது கேக்க
“ஆ… வேல, வேலைனு இருந்துட முடியாதே. அடுத்து வாரம் முடிஞ்சா… என்னையும் கௌஷியையும் சேர்த்து வச்சிடுவாங்க. ஹனிமூன்தான் போக முடியாது. வீட்டுலயாவது நிம்மதியா இருக்கணுமா? இல்லையா?” ஷக்தி சாதாரணமாக சொல்ல
“அட அட அட என் தம்பி இதெல்லாம் பக்காவா பிளான் பண்ணி தான் பண்ணுறான். நான் என்னமோ ஊருக்கு வரும் போது, கௌசி கர்ப்பமா இருக்கானு சொல்லுவியோன்னு நினச்சேன்” வெற்றி சத்தமாக சிரிக்க,
“கடுப்பேத்தாத வெற்றி. உன் மச்சினிச்சி ஒரு தத்தி. சாங்கியம், சம்ரதாயம்னு பேசிகிட்டு இருக்கா. முத்தம்…” என்றவன் மேலே சொல்லாமல் பேச்சை மாற்றி இருந்தான்.
வெற்றியும் தோண்டித்துருவாமல் புன்னகைத்து விட்டு பத்திரமாக ஊருக்கு வருமாறு கூறி அலைபேசியை துண்டித்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஷக்தி ஊர்க்கு செல்ல தயாராக, கௌசி வர மாட்டேன் என்று அடம்பிடித்தாள்.
“இங்க தனியா இருந்து என்ன பண்ண போற? பேசாம கிளம்பி வா… ட்ரைன் டிக்கட் கூட போட்டாச்சு” கடுப்பானான் ஷக்தி.
“உனக்கு வேணும்னா நீ போ.. நான் வரல” அவனுக்கு மேலாக கத்தினாள் கௌசி.
“ஏன் இப்போ வர மாட்டேன்னு சொல்லுற?”
“ஒருவேளை இவளுக்கு என் கூட சேர்ந்து வாழ பிடிக்களையோ? அதனால்தான் வர மறுக்கின்றாளோ?’ துணுக்குற்ற ஷக்தி வெளிப்படையாகவே அதை கௌஷியிடம் கேட்டிருக்க,
அவனை முறைத்தவள் “ஏற்கனவே பிரச்சினை இதுல ஊருக்கு போய் எங்களை சேர்த்து வைக்க சொல்லி நீ பிரச்சினை பண்ணி, உங்க அம்மா பேசி, எங்க அம்மாக்கும் அப்பாகும் நிம்மதி இல்லாம போகவா? ஒன்னும் வேணாம். நீ மட்டும் போய் பார்த்துட்டு வா” என்றாள் கௌசி.
கல்யாணமாகி ஆறு வருஷம் பிரிந்து வாழ்ந்தாகிற்று. அது கூட பரவாயில்லை. படிக்கிற வயதில் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. குடும்பத்த தகராறு, அது, இது என்று சொல்லலாம். இந்த ஆறுமாசத்தை எந்த கணக்கில் சேர்ப்பது? அதுவும் இந்த இரண்டு மாசமும் அவளை தனியாக ஒரே வீட்டில் வைத்துக் கொண்டு பொறுமையாக விலகி இருப்பதெல்லாம் எவ்வளவு கொடுமை. இவள் என்னடா என்றாள் இப்படி பேசிக்கொண்டிருக்கிறாள். அறிவு கெட்டவ” கொஷியை வசைபாடியவன்.
“நீ இப்போ வரல உன்ன குண்டுக்கட்ட தூக்கிட்டு போய்டுவேன்” என்று மிரட்ட
“நீ என்ன சொன்னாலும் நா வரல” சோபாவில் தொப்பென்று அமர்ந்தவள் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கணவனை முறைக்கலானாள்.
“சரிதான் போடி… தனியா சமைச்சி… தனியா சாப்பிட்டு… தனியா தூங்கு… நா மட்டும் போறேன்” என்றவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
யார் அழைப்பு விடுத்தால் அவள் கிளம்பி வருவாள் என்று அவனுக்கு தெரியாதா?
வெற்றியை அழைத்து கௌசி ஊருக்கு வர மறுத்து விட்டதை கூறியவன் இந்திராவை அழைத்து பேசும்படி கூறி, காரணத்தை கூற வேண்டாம் என்று கூறினான்.
“டேய் டேய் அடங்குடா… கௌஷிய வர வழைக்க மேட்டர் சிக்கி இருக்கு”
“அப்படி என்னடா சிக்கினது?” ஷக்தி தாடையை தடவ
“நீ சித்தப்பாவாக போறடா…” குதூகலத்தில் வெற்றி சொல்ல துள்ளிக் குதித்தான் ஷக்தி.
“அட அண்ணி சொன்னாவே என் பொண்டாட்டி பெட்டிபடுக்கையை காட்டுவாளே” சிரித்தான் ஷக்தி.
நடந்ததும் அதுதான் சந்தியாவும் வெற்றி, இந்திரா என அனைவரும் கௌஷியிடம் பேசி இருக்க, அவள் கால்கள் தரையிலையே இல்லை. இப்பொழுதே ஊருக்கு செல்ல வேண்டும் போல் இருக்க, ஷக்தியிடம் எப்படி சொல்வது என்று தடுமாறியவள் ஊருக்கு செல்ல பெட்டியை தயார் செய்து கொண்டு வந்து வைத்தாள்.
“என்ன இது?” என்று ஷக்தி பார்க்க
“நானும் ஊருக்கு வரேன்” அவனை பாராது சொல்ல
“யாரோ வரவே மாட்டேன்னு சொன்னாங்க” ஷக்தி கிண்டல் செய்ய
“ஏன் போறோம்னு உனக்கு தெரியாதா? எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு சும்மா கிண்டல் பண்ணாத” முயன்ற மட்டும் முறைத்தாள் கௌசி.
“நைட் ட்ரைன். டின்னர் ஏதாவது பேக் பண்ணிக்கலாம். வர எப்படியும் ரெண்டு வாரம் ஆகும். ப்ரிஜ்ஜுல இருக்குறதெல்லாம் யாருக்காவது கொடுக்கிறதா இருந்தா கொடுத்துடு” என்று ஷக்தி சொல்ல கௌசி யோசிக்கவில்லை தலையசைத்திருந்தாள்.
வண்டி பிடித்து செல்லாம் என்றுதான் ஷக்தி நினைத்திருந்தான். கௌஷியும் அவனும் மட்டும் என்பதனாலும் இரவில் பயணம் செய்ய வேண்டியதனாலும், குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பை பதிவு செய்திருந்தான்.
ரயில் நிலையம் செல்வதற்கும் கால் டேக்சியையே வரவழைத்திருந்தான். பொருட்களை பின்னாடி ஏற்றியவன் கௌஷியின் ஹாண்ட் பேக்கில் சானிடைசரை வைத்துக் கொள்ளும்படியும்  மேலதிகமாக நான்கு முகக்கவசங்களையும் வைத்துக்கொள்ளும்படியும் கொடுத்தவன். குளிர்சாதனப்பெட்டியில் இருந்தவைகளை கொடுத்தாயா என்று மறக்காமல் கேட்டு கொண்டுதான் வண்டியில் ஏறினான்.
மண்டையை ஆட்டுவித்த கௌஷிக்கு ஷக்தி பொறுப்பான கணவனாக மாறியதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. அவள் அறியவில்லை. அதை விட மகிழ்ச்சியை அவன் அவளுக்கு கொடுக்கப காத்திருக்கிறான் என்று அதை புரிந்துகொள்ளத்தான் கௌஷி முயல்வாளா?
சரியான நேரத்துக்கு ரயில்நிலையம் வந்து சேர, கூட்ட நெரிசலில் சிக்குண்டாமல் தங்களது இருக்கையிலும் வந்தமர்ந்து, பயணத்தையும் தொடர்ந்து விடியற்காலையில் ஊருக்கும் வந்து சேர்ந்தனர் ஷக்தி, கௌசி தம்பதியினர்.
ரயில்நிலையத்துக்கு வண்டியை எடுத்துக்கொண்டு ப்ரணவ்த்தான் வந்திருந்தான். நலம் விசாரித்தவாறே கௌஷியின் கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொள்ள
“என்னடா என் கைல இருக்குற பெட்டியெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா?” ஷக்தி வம்பிழுக்க
“விட்டா எங்கக்காவையே தூக்கிட்டு வர சொல்லி இருப்பேன். நாலுபேர் என்ன? ஏதுன்னு? கேப்பாங்கனு சும்மா இருக்கேன்” பதிலுக்கு பிரணவ்வும் சொல்ல கொஷியும் பிரணவ்வோடு சேர்ந்து ஷக்தியை வம்பிழுக்க ஆரம்பித்தாள்.  
செம்மஞ்சள் நிறத்தை வானம் பூசிக்கொண்டு மெல்ல மெல்ல சூரியன் கிழக்கில் உதயமாக ஆரம்பித்திருந்தான். மணி ஆறை தொட்டுக்கொண்டிருந்தது.
“ஏற்கனவே இதுங்க மூணு பேரும் என்ன பேசும் இப்போ நீயும் இதுங்க கூட சேர்ந்துக்கிட்டியா?” பெட்டிகளை வண்டியில் வைத்த ஷக்தி பிரணவ்வோடு முன்னாடி அமர்ந்துகொள்ள கௌசி பின்னால் ஏறி இருக்க, பிரணவ் வண்டியை இயக்கி இருந்தான்.
என்னதான் கௌஷியும் ப்ரணவ்வும் ஷக்தியை வம்பிழுத்தாலும் அவர்கள் கண்களால் பேசிக்கொண்டதை இவள் கவனிக்கவில்லை.
பண்ணை வீட்டுக்கு செல்லாமல் வண்டி வேறு பாதையில் செல்வதைக் கண்டவள் “நாம எங்க போறோம்” தலையை வெளியே விட்டுக் கேக்க
ஊருக்குள் வந்த பிறகு பாதையும் மணல் பாதையாக இருக்க ஆள் நடமாட்டமும் குறைவாக இருக்கவே ஷக்தி முகக்கவசத்தை கழட்டி இருந்தான்.
ப்ரணவ்வும் முகக்கவசத்தை கழட்டியவாறு கௌஷிக்கு பதில் சொல்வதா? வேண்டாமா? என்று ஷக்தியை பார்க்க வண்டி ஊர்ந்து சென்று நின்றது கதிர்வேலனி பூர்வீக வீட்டு முற்றத்துக்கு.
வீட்டு வாசலில் பெரிய கோலம் போடப்பட்டிருந்தது. வண்டி சத்தம் கேட்டதும் கதிர்வேலன், இந்திரா, சந்த்யா, வெற்றி, சந்திரா என அனைவரும் வெளியே வர கௌஷிக்கு தான் காண்பது கனவா என்று ஒரு கணம் புரியாமல் வண்டியில் அமர்ந்தே திகைத்துப் பார்த்தவள், ஷக்தி இறங்கும்படி குரல் கொடுக்கவும்தான் அடித்துப்பிடித்து இறங்கி இருந்தாள்.
ஓடிச்சென்று அனைவரையும் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தவளுக்கு பேச்சே வரவில்லை. அன்று காலைதான் வீடு குடிபுக அனைவரும் ஒன்று கூடி இருப்பது தெரிந்தது. 
    
“இப்படியே பேசிகிட்டு இருந்தா சரியா? பூஜைக்கு நேரமாச்சு உள்ள வாங்க” சந்திரா அழைக்க, ஆனந்தமாகவே அனைவரும் உள்ளே செல்ல கதிர்வேலனும், இந்திராவும் பூஜைக்காக அமர்ந்துகொண்டனர்.
“மனம் அமைதியான பின்தான் கௌஷியின் மூளை கேள்வி எழுப்பியது? வீடு வாங்க அப்பாக்கு ஏது அவ்வளவு காசு? ஒருவேளை அத்தான் காசு கொடுத்திருப்பாரா? கொடுத்தாலும் அப்பா வாங்கி இருக்க மாட்டாரே” அதை தெரிந்துக் கொள்ளாமல் தலை வெடித்து விடும் போல் இருக்க, யாரிடம் கேட்பது என்று யோசித்தவள் பூஜை முடியும்வரை காத்திருந்தாள்.
பூஜை முடிந்தபின் சந்திரா அவளை பிடித்துக் கொண்டு அடுத்த வாரம் சக்தியையும் அவளையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். அதுவரை கௌஷி இங்கேயும், ஷக்தி அவன் வீட்டில் அல்லது தங்கள் வீட்டில் தங்கி கொள்ளட்டும் என்று கூற, கௌஷி தலையை ஆட்டுவித்திருந்தாள்.
“என்னம்மா… ஷக்தியோட சேர்ந்து வாழறதுல உனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே” மறுத்து விடுவாளோ என்ற கலக்கம் சந்திராவின் முகத்தில் தெரிந்தது.
“நான் வேணான்னு சொன்னா விடவா போறீங்க பெரியம்மா. என்ன விட உங்களுக்கு உங்க நாத்தனார் பையன் மேல பாசம் ஜாஸ்தி. எப்படியாவது என்ன அவன் தலைல கட்டத்தான் போறீங்க” அழுத்துக் கொண்டாள் கௌஷி.
“எனக்கு உன் மேலதாண்டி பாசம் அதிகம். அதான் அவன் தலைல உன்ன கட்டுறேன்” ரகசியம் பேசினாள் சந்திரா.
“அப்போ அவன் நல்லவன்னு சொல்லாம சொல்லுறீங்க. நான் அப்படி இப்படி பொல்லாதவனு சொல்லாம சொல்லுறீங்க” கௌஷி மடக்க,
“அடி போடி… சென்னைக்கு போன பிறகு உன் வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிருச்சு” செல்லமாக அவள் தலையில் கொட்டிவிட்டு சென்றாள் சந்திரா.
அக்காவிடம் தனக்கு தேவையான பதில் கிடைக்கும் என்று சந்தியாவை தேடி வந்தால் அதிகாலை வேலை என்பதால் தலை சுத்தல், வாந்தி, மயக்கம் என்று சோர்வாக படுத்திருந்தாள் சந்த்யா. வெற்றி அவள் தலையை பிடித்து விடுவதும், கையை தடவுவதுமாய் பேசிக்கொண்டிருக்க, “அண்ணனும் தம்பியும் ஒரே மாதிரிதான் இருக்காங்க போல” என்றெண்ணியவாறே உள்ளுக்குள் சிரித்தவள் விலகிச் சென்றாள்.
அன்னைக்கு அதிக விவரம் தெரியாது, அவளிடம் கேட்பது வீண். நேரடியாக தந்தையிடமே கேட்டு விடலாம் என்று கதிர்வேலனையே பிடித்துக் கொண்டாள்.
“அப்பா உண்மைய சொல்லுங்க வீடு வாங்க உங்களுக்கு ஏது இவ்வளவு பணம்?” நேரடியாகவே கேட்க
“என் பொண்ணு போலீஸ்காரி மாதிரி விசாரிக்கிறாளே” புன்னகைத்தார் கதிர்வேலன்.
“ஐயோ என் மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு” பொறுமை இழந்தாள் கௌஷி.
“எதுக்குடி இப்போ கத்துற? இந்தா காபி குடி” இந்திரா கணவனுக்கும் மகளுக்கும் காபியை கொடுக்க அதை இருவரும் வாங்கிக் கொண்டனர்.
கௌஷி மறுக்க நினைத்தாலும் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. சூடாக காபி உள்ளே போனால்தான் கொஞ்சமாவது பதட்டம் குறையும் என்றெண்ணிலாள்.
ஒரு மிடறு அருந்தியவள் “எனக்கு பொறுமை இல்லலப்பா… சீக்கிரம் சொல்லுங்க” தந்தையை உலுக்காத குறையாக விசாரித்தாள்.
“ஷக்தி மாப்பிள்ளையாலதான் என்னால வீடே வாங்க முடிஞ்சது” பெருமையாக சொன்னார் கதிர்வேலன்.
“என்னது?” நம்பாத பார்வையை வீசினாள் மகள்.
“ஆமாம்மா. நம்ம வீடு நம்ம கைய விட்டு போகுறத்துக்கு ஷக்தி மாப்பிள்ளையும் ஒரு காரணம்ன்னு அவருக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கு நம்ம வீட்டை வாங்கிக்கலாம்னு உன் மாமாகிட்ட அடிக்கடி சொல்லி இருக்காரு. மாமாதான் அப்படி வாங்கிக் கொடுத்தாலும் நான் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லி இருக்காரு”
“சரியாதான் சொல்லி இருக்காரு. அப்பொறம் எப்படி வீடு வாங்கினீங்க?”
“கொஞ்சம் பொறுமையா இருடி அப்பா சொல்லுவார்” இந்திரா மகளை அதட்ட, அன்னையை முறைத்தாள் கௌஷி.
சிரித்தவாறே “நான் மகாதேவன் ஐயா கிட்ட வேலைக்கு சேர்ந்தப்போவே சகாதேவன் ஐயா தான் எனக்கு சம்பளம் கொடுப்பாரு. நல்லா சம்பாதிக்கிற பத்துல ஒரு பகுதியை தானதர்மங்களுக்கு செலவு செய்யா என்று சம்பளத்துல புடிச்சிக்குவாரு. நாம எதிர்த்து பேசவா முடியும்? சரிதான்னு நானும் விட்டுட்டேன். உங்கம்மாவ கல்யாணம் பண்ண பிறகும் அது தொடர்ந்துக்கிட்டுதான் இருந்தது. சொந்தக்காரங்களா வேற ஆகிட்டாங்க இத பத்தி பேசினா தப்பா போயிடும்னு அமைதியா இருந்துட்டேன். அதுவும் நல்ல காரியத்துக்காக எடுக்குறதா சொல்லுறாங்களே கேள்வி கேக்க கூட முடியாதே”
“என்னப்பா பேசுறீங்க? பெரியப்பா கிட்ட இல்லாத காசா? பணமா? எதுக்கு உங்க பணத்துல இருந்து தானதர்மம் பண்ணனும்? எனக்கு புரியல?”
“அடியேய் முந்திரிகொட்ட கொஞ்சம் அமைதியா இரேண்டி” சிரித்தாள் இந்திரா.
எதற்காக தன் பெற்றோர் சிரிக்கிறார்கள் என்று புரியாமல் முழித்தாள் கௌஷி.
“அந்த பணத்தை சகாதேவன் ஐயா வங்கில போட்டுக்கிட்டே வந்திருக்காரு. நாம சென்னைக்கு போன பிறகு அந்த காச எடுத்து நகரத்துல ஒரு இடம் வாங்கி என் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணி இருக்காரு”
“என்னப்பா சொல்லுறீங்க?” ஆச்சரியமாக கௌஷி விழி விரிக்க
“ஆமாடி கௌஷி பெரியப்பாகு உங்கப்பாவ பார்த்தப்போவே எனக்கு இவரை கட்டிக்க கொடுக்கணும்னு தோணி இருக்கணும். அவர் காசு கொடுத்தாலோ, நிலம் கொடுத்தாலோ உங்கப்பா வாங்க மாட்டார்னு தான, தர்மம் பண்ணுறேன்னு உங்க அப்பா சம்பளத்தையே புடுங்காத குறையா வாங்கி சேர்த்து வச்சி நிலம் வாங்கி இருக்காரு” இந்திரா கண்ணீரோடு சொல்ல
கௌஷியின் கண்கள் கலங்கி “பெரியப்பா என்னைக்கும் எங்களுக்கு நல்லது மட்டும்தான் பண்ணுவாரு. ஆனா அவர் திடிரென்று இறந்தது என்னால இப்போ கூட நினைச்சி பார்க்க முடியல” சோகமாக சொல்ல
“அவர் ஆசையா வாங்கின நிலத்த வித்துதான் நம்ம பூர்வீக வீட்டை வாங்கினோம்” என்றார் கதிர்வேலன்.
திகைத்த கௌஷி “என்னப்பா சொல்லுறீங்க? நீங்க இப்படி பண்ண மாட்டீங்களே” அதிர்ச்சி மாறாமல் கேட்டாள்.
“நல்லா கேலுக்கா.. நானும் எவ்வளவோ சொன்னேன். நிலத்த விக்க வேணாம். யாராவது சொந்த மருமகனுக்கு போய் நிலத்த விப்பாங்களா?” சிரித்தவாறே வந்தமர்ந்தான் பிரணவ்.
“என்னடா உளறுற” தம்பியை முறைத்தாள் கௌஷி.
“பின்ன வீட்டையும் வாங்கிட்டு நிலத்த பொண்ணுங்க பேர்ல இல்ல எழுதி இருக்காரு” மீண்டும் சிரிக்க,
“டேய் புரியும்படி சொல்லுடா”
“உன் புருஷன், உன் அக்கா புருஷன் ரெண்டு பேரும் நிலத்த வாங்கி கிட்டாங்க அப்போ நிலம் யாருக்கு சொந்தம்? அந்த பணத்துல சித்தப்பா வீட்டை வாங்கிட்டாரு. நிலத்த வாங்கினவங்க பொண்டாட்டிங்க பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்க. அப்போ நிலம் யார்க்கு சொந்தம். ஒரே கல்லுல ரெண்டு மங்கா அடிச்சிட்டாரு சித்தப்பா” பிரணவ் சிரிக்க
தன் கணவன் தன் பெயரில் நிலம் வாங்கினானா? அதுவும், அப்பா நிலத்தை இது என்ன புதுக் கதை. ஏன் யாரும் சொல்லல? ஷக்தியை தேடி ஓடினாள் கௌஷி.
ஷக்திக்கு எப்படியாவது கதிர்வேலனின் பூர்வீக வீட்டை வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. வெற்றி வந்த உடன் அதை பற்றிப் பேச ஊருக்கு சென்ற உடன் வெற்றியும் கதிர்வேலனிடம் பேசி இருந்தான்.
பணமும் வேண்டும், வீட்டை வாங்கியவர்கள் விற்கவும் வேண்டும் என்று அமைதியாக இருந்தார் கதிர்வேலன்.
ப்ரணவ்வோடு கணக்கு வழக்குகளை பார்க்க ஆரம்பித்த பின்தான் பழைய பெட்டகத்திலிருந்து கிடைத்ததாக அவர் பெயரிலிருந்து நிலப்பத்திரத்தை கொண்டு வந்து கொடுத்தான் பிரணவ் கூடவே சகாதேவன் எழுதிய கடிதமும்.
நிறைய எழுதி இருந்த கடிதத்தில் சுருக்கம் என்னவென்றால் “நேர்மையான மனிதர்கள் யார் பணத்துக்கும் ஆசை படமாட்டார்கள் அதனால்தான் உங்க பணத்துலையே நிலம் வாங்கினேன்” என்றிருக்க கண்கள் கலங்கிப் போனார் கதிர்வேலன்.
பூர்வீக வீட்டை வாங்கியவர்கள் விற்க தயாராக இருந்த நிலையில், சகாதேவன் வாங்கிய நிலத்தை விற்கவும் கதிர்வேலனுக்கு மனம் வரவில்லை. என்ன செய்வது என்று வெற்றியிடம் ஆலோசிக்க, ஷக்திதான் தானே நிலத்தை வாங்கிக் கொள்வதாக கூறினான்.
“இல்ல மாப்புள அது சரிப்பட்டு வராது” கதிர்வேலன் மறுக்க,
“மாமா வெளிய கொடுத்தா தானே உங்க மனசு கஷ்டப்படும் எனக்கு கொடுக்க உங்களுக்கு என்ன தயக்கம்? எனக்கு கொடுத்தா? உங்க பொண்ணுக்கு தானே” ஒருவாறு பேசி அவரை சம்மதிக்க வைத்திருந்தான்.
“பாதி காசு நான் தரேன்டா..” வெற்றியும் தான் சம்பாதித்ததை எல்லாம் கொடுத்திருந்தான். கபிலரிடம் கூறி இருந்தாலும், பணம் வாங்கி இருக்கவில்லை. கபிலரும் சாம்பவியிடம் கூறி இருக்கவில்லை.
நிலம் வாங்கியது, வீடு வாங்கியது, ஷக்தி கௌஷியோடு ஊருக்கு வந்து வீட்டுக்கு வராமல் இருப்பது என்று அனைத்தையும் அறிந்துக் கொண்ட சாம்பவி கொதிநிலையில் இருந்தாள்.

 

 

 

 

Advertisement