Advertisement

அத்தியாயம் 22
வெற்றியுடன் பேசி விட்டு தூங்கலாம் என்று முயற்சி செய்த ஷக்தியை தூக்கம் தீண்ட கூடவில்லை. தான் செய்தவைகள் தவறு என்று கூறி மன்னிப்பும் கேட்டாயிற்று. தாங்கள் ஒன்று சேர்ந்த பிறகு சொல்ல வேண்டும் என்று மனதில் பூட்டி வைத்திருந்த காதலைக் கூட சொல்லியாயிற்று. தன்னையும் தன் காதலையும் புரிந்துகொள்ளாமல் கௌஷி இப்படி நடந்துக் கொள்வது ஷக்த்திக்கு கவலையை கொடுத்திருக்க, அவள் மனதை மாற்ற அவள் என்ன சொன்னாலும் செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
இந்த மூன்று நாட்களாக இருந்த பதட்டம், ஆபீஸ் டென்ஷன், கௌஷி என எல்லாம் அவன் மனதிலும், மனக்கண்ணிலும் ஓடிக்கொண்டிருக்க, எப்பொழுது தூங்கினான் என்றே தெரியவில்லை.
ஏதேதோ கனவு வேறு அவனை பயமுறுத்தி அவனை விடாது துரத்த, வியர்வையில் குளித்தவன், அலாரம் அடிக்கவே அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான்.
மணி ஆரை நெருங்கிக் கொண்டிருப்பதாக காட்ட குளியலறைக்கு புகுந்துக் கொண்டவன் தயாராகி கௌஷியின் வீட்டுக்கு சென்றான்.
ஏற்கனவே அவள் கொடுத்திருந்த சாவியை கொண்டு கதவை திறந்தவன் நேராக சென்று அவளை எழுப்பலானான்.
“கௌஷி எழுந்திரு..” அவளை உலுக்க, அவளோ எல்லா பிரச்சினையிலிருந்து வெளிவந்த நிம்மதியில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
ஷக்தியின் குரல் கேட்டதும் கண்விழித்தவள் நிஜமாகவே அவன்தானா என்று பார்க்க, அவள் கன்னத்தில் முத்தமிட்டு “குட் மோர்னிங்” என்று சொல்ல
“ஏய் என்ன பண்ணுற?” அவனை தள்ளி விட்டு எழுந்தமர
“பெட் காபி மட்டுமல்ல குட் மோர்னிங் கிஸ் கூட கொடுப்பேன். போ.. போய் ப்ரெஷ் பண்ணிட்டு வா…” அவளை இழுத்து குளியலறை பக்கம் தள்ளி இருந்தான்.
“என்ன இவன டாச்சர் பண்ண கூப்பிட்டா. என்ன டாச்சர் பண்ணுறான். என்ன நாம நமக்கே ஆப்பு வச்சிகிட்டோம் போலயே” கௌஷி சிந்தித்தவாறே அவனை முறைக்க,
“என்ன முறைக்குற? இங்கயே நின்னா பெட் காபி கிடைக்காது. கன்னத்துல கொடுத்ததை லிப்ல கொடுத்துடுவேன், வேணுமா..” என்றவாறே நெருங்கி வர கௌஷி குளியலறைக்குள் புகுந்து கதவை பூட்டி இருந்தாள்.
“அந்த பயம் இருக்கணும்” ஷக்தி சிரித்தவாறே சமயலறைக்கு செல்ல
“எதோ திட்டத்தோடுதான் வந்திருக்கான். பாத்துக்கலாம்” பல்துலக்க ஆரம்பித்தாள் கௌஷி.
கௌஷி முகம் துடைத்துக் கொண்டிருக்கும் பொழுது காபியை ஷக்தி நீட்ட, அதை வாங்கிக் கொண்டவள் “ப்ரேக்பெஸ்ட் இட்லி பண்ணிடு. எனக்கு பிடிச்ச கார சட்னி பண்ணிடு. உனக்கு வேணும்னா சாம்பார் பண்ணிக்க” என்று தொலைக்காட்ச்சியின் முன் அமர்ந்து விட்டாள்.
ஷக்தி எதுவும் பேசவில்லை தலையை மட்டும் ஆட்டி விட்டு குளிர்சாதனப்பெட்டியை திறந்து தேவையானதை எடுத்து மளமளவென வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
எந்த பொருள் எங்கே இருக்கு என்று கௌஷியை தொந்தரவு செய்யவுமில்லை. செய்ய வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவுமில்லை. இந்திரா எல்லா மளிகை சாமான்களையும் கைகெட்டும் தூரத்தில்தான் வைத்திருந்தாள். அது ஷக்த்திக்கு இலகுவாகிப் போனது.
கௌஷி காபி சாப்பிட்டவாறே காலை செய்திகளை பார்த்தவள் வழமையாக காலை உணவை தயார் செய்து விட்டு, வீடு பெருக்குவாள். இனி அவளுக்கு எந்த வேலையும் இல்லை. ஷக்தியின் பொறுமையை சோதிப்பதுதான் அவள் வேலை.
ஷக்தி என்ன செய்கின்றான் என்று கூட பாராமல் யோகா செய்ய ஆரம்பித்தாள்.
காலை உணவு தயாரானதும் கௌஷியை சாப்பிட ஷக்தி அழைக்க, குறை சொல்லியவாறே சாப்பிட்டு முடித்தாள் கௌஷி.
கொஞ்சம் காரம் அதிகம்தான். ஷக்தி என்னதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் கௌஷிக்கு பிடிக்க வேண்டும் என்ற பதட்டத்தில் சொதப்பி இருந்தான்.
அவள் குறை சொல்லியும் அமைதியாக சாப்பிட்டவன் “லஞ்சுக்கு என்ன பண்ணட்டும்?” அவள் முகத்தையே பார்த்திருக்க,
“பிரிஜிஜுல என்ன இருக்கோ பார்த்து ரெண்டு வெஜ், சாதம், அப்பளம் போதும். இப்போவே சமைக்க போறியா என்ன? சமைக்கிறது மட்டும் உன் வேல இல்ல. வீடு பெருக்கணும். துணி துவைக்கணும். வீடு முழுக்க மோப் பண்ணனும். என் துணியெல்லாம் மடிச்சு வைக்கணும். அயன் பண்ண வெளிய கொடுக்க முடியாது. நைட்டுல அயன் பண்ணி வை” வேலைகளை பட்டியலிட
“சரி டி பொண்டாட்டி… வேற ஏதும் இருந்தா சொல்லு. நாம ஆபீஸ் வேலையையும் பார்க்கணும். ரொமான்ஸும் பண்ணனும்” சிரிக்காமல் சொன்னான் ஷக்தி.
“என்ன? என்ன? சொன்ன?” கௌஷி முறைக்க
“வேலைகாரனுக்கு சம்பளம் கொடுக்குறியே எனக்கு என்ன கொடுப்ப? அதான் அப்போ அப்போ முத்தம் கொடு” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக் கொண்டு சமயலறைக்கு செல்ல
அவன் பின்னால் வந்த கௌஷி “என்ன சொன்ன?” என்று கோபமாகவே கேக்க
அவளை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவன் “நீ தான் என் எனர்ஜி பூஸ்ட் கௌஷி. இப்போ எனக்கு நிறைய வேலை இருக்கு அப்பொறம் முத்தம் கொடு. போ.. போய் ரெஸ்ட் எடு” அவளை வாசல் புறம் தள்ளி விட
“இவன நாம வம்பிழுக்குறோமா? இல்ல இவன் என்ன வம்பிழுக்குறானா?” புரியாமளையே கௌஷி வாசலுக்கு சென்றாள்.
 ஷக்தி வீட்டை பெருக்கி மோப் போட்டு முடிக்கும்வரை கௌஷி புத்தகம் தான் வாசித்துக் கொண்டிருந்தாள். புத்தகங்கள் வாசிப்பது அவள் பொழுதுபோக்காக இருந்தாலும் வேலைக்கு சேர்ந்த பிறகு அவளால் லைப்ரரி பக்கம் போகவே முடியவில்லை. அலைபேசியில் வாசிக்கலாம் என்று பார்த்தால், புத்தகத்தின் வாசமும், காகிதங்களை புரட்டும் சத்தமும் இல்லாத அலைபேசி வாசிப்பை வெறுத்தவள் அதை கைவிட்டிருந்தாள். இப்பொழுது கூட முன்பு வாசித்த ஒரு புத்தகத்தைத்தான் வாசித்துக் கொண்டிருக்கின்றாள். 
அதன்பின் இருவரும் அமர்ந்து ஆபீஸ் வேலைகளை பார்க்க ஆரம்பிக்க பத்து மணியளவில் கீரைக்காரியும், மரக்கறி வண்டியும் கீழே வந்திருப்பதாக பர்வதம் அலைபேசி வழியாக கௌஷிக்கு தகவல் கூற,
ஷக்தியை கிண்டலாக பார்த்தவள் “கீழ போய் கீரை வாங்கிட்டு இன்னும் மூணு நாளைக்கு சமைக்க காய்கறி வாங்கிட்டு வா” என்றாள்.
“என்ன விளையாடுறியா? ஆபீஸ் வேலை பாக்குற டைம்ல ஆபீஸ் வேல மட்டும்தான் பார்க்கணும். பதினொன்னரை மணிவரைக்கும் ஆபீஸ் வேல மட்டும்தான்” கறாராக ஷக்தி சொல்ல
“நாம என்ன டூர் வந்திருக்கோம்னு நினைச்சுகிட்டு இருக்கியா? கோரண்டைன்ல இருக்கோம். அபார்ன்ட்மென்ட்டுக்கு மூணு நாளைக்கு ஒருக்காதான் கீரையும், வெஜ்ஜும் வரும். அப்போ வாங்கி கிட்டாதான். அவசரமா போனா நமக்கு தேவையானதை வாங்கிக்கலாம். லேட்டா போனா எஞ்சினத்தான் வாங்கணும். எப்படி வசதி? ஆமா நீ ஆபீஸ் வேலை பாத்துகிட்டு இருக்குறது கீரைக்காரிக்கு தெரியுமா? இல்ல வண்டிக்காரனுக்குத்தான் தெரியுமா? தெரியாதில்ல. போ.. போய் வாங்கிட்டு வா.. நீ இந்த நேரத்துல வேலை பாக்குறதா சொல்லி பதினோரு மணிக்கு அப்பொறம் வர சொல்லித்தான் பாரேன்” கௌஷி நக்கல் பண்ண, டீஸட்டை மாட்டிக் கொண்டு, பையில் அலைபேசியை போட்டுக் கொண்டு மின்தூக்கியை நோக்கி விரைந்தான் ஷக்தி.
அவன் பின்னால் விரைந்தவள் “ஏய் லூசு… காசு எடுத்துட்டு போ…” என்று அவன் பேர்ஸை தூக்கிப் போட அதை பிடிக்க முடியாமல் கீழே விட்டவன், பொறுக்கிக் கொண்டு, மனதுக்குள் கௌஷியை வசைபாடியவாறே மின்தூக்கி கீழே செல்லும் பொத்தானை அழுத்தினான்.
“ஷக்த்திக்கு எதோ சமையல் பண்ண தெரிந்த அளவுக்கு காய்கறிகளை பார்த்துப் பார்த்து வாங்காத தெரியவில்லை. வழமையாக போய் சூப்பர் மார்க்கட்டில்தான் வாங்குவான்.
அங்குதான் சகதியும், மண்ணும் இல்லாமல் சுத்தமாக கழுவி அடுக்கி வைத்திருப்பார்கள். அழகாக, சுத்தமாக இருப்பதாக ஷக்தி அள்ளிக்கொண்டு வந்து விடுவான்.
வண்டியில் அவ்வாறு இல்லையே. மரத்தில் பிடுங்கியது எப்படியோ அப்படியே இருக்கும். இதில் பழையது? அழுகியது? புதியது? பூச்சி தின்றது என்றெல்லாம் ஷக்த்திக்கு தரம் பிரிக்க தெரியவில்லை.
பெண்கள் கூட்டம் வேறு அலைமோத, மாஸ்க் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க யாரும் எண்ணவில்லை. எங்கே நாம் முந்திக் கொள்ளாவிட்டால்  காய்கறிகள் முடிந்து விடும் என்ற அச்சமும், பதட்டமும் தான் அவர்களிடம் இருந்தது.  
“பசியில் மாண்டாலும் பரவாயில்லை கொரானா வந்து சாகக் கூடாதுடா சாமி” என்று ஷக்தி ஒதுங்கி இருக்க, பெல்கனியிலிருந்து அவனை கண்காணித்த கௌஷி அழைப்பு விடுத்து “என்ன வேடிக்க பார்க்கத்தான் போனியா? உள்ள புகுந்து வாங்கு” அவனை வாங்கு வாங்கு என்று வாங்க ஆரம்பித்தாள்.
“இவ ஒருத்தி… என்ன கொரோனா கூட கோர்த்து விடாம ஓய மாட்டா போல” முணுமுணுத்தவன் “கூட்டம் குறையட்டும் கௌஷி யாருக்கு கொரோனா இருக்கோ தெரியல” என்று சத்தமாக சொல்ல, அங்கிருந்தவர்களுக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விலகி நின்றனர்.
கௌஷியும் அவனை சீண்டத்தான் அழைப்பு விடுத்திருந்தாலே ஒழிய, அடித்து பிடித்து காய்கறி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கும் இல்ல. ஷக்தி பத்திரமாக வாங்கிக் கொண்டு வந்தால் போதும் என்றுதான் பார்த்திருந்தாள்.
தினமும் இரண்டு அல்லது மூன்று காய்கறி வண்டி, நான்கு பேர் கீரை விற்க வரும் அபார்ட்மெண்ட் இது. இந்த கொரோனா கொடிய நோயால் அன்றாடம் உழைத்து சாப்பிடுபவர்களின் வயிற்றில்தான் பலத்த அடி விழுந்திருந்தது.
காய்கறிகள் போன்றவற்றை அவர்கள் வாங்கி மூன்று நாட்களுக்கு வைத்துக்கொள்ளவும் முடியாது. இன்று வாங்கியதை இன்றே விற்று விற்று வீடு செல்ல வேண்டும். இறைவா ஏன் இந்த சோதனை.
கூட்டம் கொஞ்சம் வழிவிட ஷக்தி தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு காசை கொடுத்து விட்டு வீடு வந்து சேர, கதவை திறந்த கௌஷி “பைய அங்கேயே வச்சிட்டு செப்பல ரேக்லாயே விட்டுடு. நேரா வாஷ் ரூம் போய் ஒரு தடவைக்கு ரெண்டு தடவ காலையும், கையையும் சோப்பு போட்டு கழுவிடு. ஆபீஸ் வேல முடிஞ்ச உடனே காய்கறி எல்லாம் நால்லா கழுவி உலர விட்டுத்தான் ப்ரிஜ்ல அடுக்கணும் சரியா?”
“சரிடி பொண்டாட்டி” கடுப்பில் பல்லைக் கடித்தவன் மறுத்து பேச முடியாமல் அவள் சொன்னது போல் செய்யலானான்.
ஷக்தி வரும்வரை அலைபேசியை நொண்டிக் கொண்டிருந்த கௌஷி அவள் வந்த பின்தான் ஆபீஸ் வேலையில் மும்முரம் காட்டினாள்.
எல்லா வேலையையும் முடித்து ஷக்தி சமயலறைக்குள் செல்ல கௌஷி அந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் குளிக்கச் சென்றாள்.
“புருஷன் தனியா சமைக்கிறானே, ஐயோ பாவம் ஒரு வெங்காயத்தையாவது நறுக்கிக் கொடுப்போம்னு நினைக்கிறாளா? கிராதாகி” எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசைகளையும் கௌஷிக்கு வழங்கியவாறே சமையலில் ஈடுபட அவள் அறையிலிருந்து சிரிப்புச் சத்தமும் கணனியில் படம் ஓடும் சத்தமும் கேட்டது.
“பட்டபகல்லயே சினிமாவா? என் கூட உக்காந்து பார்க்காம என்ன தனியா வேல பார்க்க விட்டுட்டு அவ மட்டும் புதுப்படம் பாக்குறா. இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்ல” புலம்பியவாறே முள்ளங்கியை நறுக்கினான்.
“என்ன முணுமுணுப்பு…” சமையலறை வாசலில் கௌஷி கையைக் கட்டிக்கொண்டு நிற்க
திடுக்கிட்ட ஷக்தி “ஒண்ணுமில்லையே” மழுப்பலானான்.
“எனக்கு எலுமிச்சை ஜூஸ் வேணும். சீக்கிரம் போட்டுக்கொடு” என்று விட்டு செல்ல
“எக்ஸ்டரா வேற வேல வாங்குறா… இருடி வரேன்” அவசரமாக அவளுக்கு எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்து சென்றான்.
ஜூஸை அவள் கையில் கொடுத்தவன் அங்கேயே நிற்க “என்ன இன்னும் இங்க நிக்கிற? ஓஹ்.. குடிச்சி முடிச்ச உடனே கிளாசை வாங்கிட்டு போகவா?” என்றவள் கடகடவென அதை அருந்திவிட்டு கிளாஸை அவன் கையில் கொடுத்திருந்தாள்.
“அடப்பாவி மாடு களனி தண்ணி குடிக்கிற மாதியே குடிக்கிறியே. எவ்வளவு கஷ்டப்பட்டு போட்ட ஜூஸ். ரசிச்சு ருசிச்சு குடிக்க வேணாமா?” மனதுக்குள் புலம்பியவன் அங்குதான் நின்றிருந்தான்.
“இன்னும் போகலையா? இன்னும் என்ன?” கௌஷி புருவம் உயர்த்த?
“இனாம்… பொண்டாட்டி… இனாம்” என்றவன் அவளை இழுத்து முத்தமிட
“டேய்..” கத்தியவாறு ஷக்தியை தள்ளி விட்டாள் கௌஷி.
“நேத்து நீ ப்ரெக்நாட் லேடி போல ட்ரெஸ் பண்ணி இருந்தியே… செம்மயா இருந்தடி கௌஷி. உண்மையிலையே நீ பிரேக்னன்ட்டா இருந்தா எப்படி இருந்திருக்கும்னு ஒரு செக்கன் யோசிச்சு பார்த்தேன், ஐயோ புல்லரிச்சு போச்சு” அவளை விடாது முத்தமிட
“இருக்கும் இருக்கும். முதல்ல தள்ளிப்போ…” அவனை விட்டு விலகுவதில்லையே குறியாக இருந்தாள் கௌஷி.
“என்ன கொஞ்சம் குண்டா இருந்தா இன்னும் அழகா இருந்திருப்பா ஒல்லிக்குச்சியா இருக்க, அதான் வருத்தமாக இருக்கு” சோகமான குரலில் ஷக்தி கூற,
கௌஷியின் கண்ணுக்குள் ஓவியா வந்து போக கடுப்பானவள் “அடுப்புல எதோ கருக்குது. சாப்பாடு மட்டும் கருக்கட்டும். உன்ன வீட்டை விட்டு துரத்துறேன்” என்று சொல்ல
“அய்யய்யோ…” என்றவாறே ஷக்தி சமயலறைக்கு ஓடி இருந்தான். 
மதிய உணவுக்கு முள்ளங்கி பொரியல், முருங்கக்கா சாம்பார், அப்பளம் கூடவே தக்காளி ரசம் மேசையில் தயாராக இருக்க, கௌஷி சாப்பிட அமர்ந்ததும் ஷக்தியே பரிமாறினான். 
“வாசனை எல்லாம் தூக்கலாதான் இருக்கு. அப்பளம் தண்ணில பொரிச்சா மாதிரி இருக்கு. எது ரசம்? எது சாம்பார்னே பார்த்தா தெரியல. முள்ளங்கி வேகல” குறை சொல்லியவாறே சாப்பிட
“ஷக்தி நீ சொல்ல வேண்டியதெல்லாம் உன் பொண்டாட்டி சொல்லிக்கிட்டு இருக்கா. கொஞ்சம் பொறுத்துக்க, இவ மட்டும் வழிக்கு வரட்டும். இவள சமைக்க சொல்லி குறை மட்டும் சொல்லுறேனா இல்லையானு பாரு” நெஞ்சை நீவிக்கொண்டவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
“நீயும் உக்காந்து சாப்பிடு. அடுத்த வேலைய பார்க்க வேணாம்” என்று கௌஷி சொல்ல “இன்னும் என்ன?” என்ற பார்வையோடு சாப்பிடலானான் ஷக்தி.
மதிய உணவுக்கு பின் கௌஷி “ரொம்ப நாளா வட சாப்பிடல டீயோட வட இருந்தா நல்லா இருக்கும். செஞ்சிடு”  தூங்கச் செல்ல
“கௌஷி நீ ரொம்ப பண்ணுற?” ஷக்தி கடுப்பாக
“அதோ கதவு அந்த பக்கம்தான் ஷக்தி நீ போலாம். இப்போவே போலாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று கையை கட்டிக்கொள்ள
பல்லைக் கடித்தவன் “செஞ்சித் தொலையிறேன்” என்றவாறே சமயலறைக்குள் புகுந்துகொள்ள, கௌஷி நமட்டு சிரிப்போடு தூங்க சென்றாள்.
“சாகுறவரைக்கும் என்ன சமயற்கட்டுல உக்கார வச்சிடுவா போல இருக்கே” புலம்பியவாறு யூ டியூபை ஆன் செய்து வடை செய்வது எப்படி? என்று தேட, ஏகப்பட்ட வீடியோக்கள் காட்டவும் அதில் ஒன்றை ஓட விட்டு பார்த்தவன் “உன் புண்ணியத்துல எங்க வாழ்க்க ஓடிக்கிட்டு இருக்கு” யூ டியூப்புக்கு நன்றி சொன்னவாறே வடைக்கு பருப்பை ஊறவிட்டு அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.
ஐந்தரை மணியளவில் கௌஷியை எழுப்பியவன் வாடையோடு டீயை கொடுக்க “என்ன இது?” என்று கேட்க
“பார்த்தா தெரியல? டீயும், வடையும்” என்றான் ஷக்தி.
“நான் கேட்டது உளுந்து வட. நீ என்ன பண்ணி வச்சிருக்க? சொல்லுறத ஒழுங்கா காதுல வாங்க மாட்டியா?” குறை சொன்னவாறே தட்டில் இருந்த மொத்த வடையையும் காலி செய்தாள்.
“நைட்டுக்கு சப்பாத்தியும், குருமாவும் பண்ணிடு” என்ற கௌஷி தொலைக்காட்ச்சியின் முன் அமர்ந்து விட ஷக்தி பெருமூச்சு விட்டவாறு சமயலறைக்குள் புகுந்திருந்தான்.
“ஷக்தி என் துணியெல்லாம் மடிச்சிட்டியா?” கௌஷி டீவி சத்தத்தை குறைத்தவாறே கேக்க,
“நீ தூங்கும் போதே மடிச்சு எடுத்து வச்சிட்டேன்” என்றான் ஷக்தி.
“மடிச்சா மட்டும் போதும். என் துணிய நான் எடுத்து வச்சிக்கிறேன். நீ ஒன்னும் என் கபோர்ட திறக்க வேண்டியதில்லை” கௌஷி கத்த
“என் பொண்டாட்டி துணி நான் மடிக்கிறேன். என் பொண்டாட்டி கபோர்ட் நான் திறக்கிறேன். நீ பேசக்கூடாது” சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்து சொன்ன ஷக்தி கண்சிமிட்ட கௌஷி அவனை நன்றாக முறைத்தாள்.
இரவு உணவுக்கு பின் ஷக்த்திக்கு கண்கள் சொக்க ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் வீடு சென்றவன் அலாரம் வைத்து தூங்கி இருந்தான்.
இப்படியே ஒரு வாரம் ஷக்தி கௌஷிக்கு அடிமையாக சேவகம் செய்ய கௌஷி அவனை தும்புருத்துவதாக எண்ணி அவன் கைகளில் சிக்குண்டு அவன் முத்த தாக்குதலில் கட்டுண்டு அவனை அடிப்பதும், முறைப்பதுமாக இருந்தவள் அவன் சில்மிஷங்களை உள்ளுக்குள் ரசித்தாலும் அதை வெளியே காட்ட முடியாமல் அவன் வீடு கூட்டி முடிந்த உடன் வேண்டு மென்றே காகிதங்களை கிழித்து வீடு முழுக்க எறியலானாள்.
மோப் செய்தால் தண்ணீரை கொட்டினாள். உணவில் குறை சொல்லிக் கொண்டே இருந்தாள். அது வேண்டும், இது வேண்டும் என்று சமைக்க சொல்லி வேலை கொடுத்தாள்.
“ஷக்தி கடுப்பானாலும் “என் கையாள சாப்பிட்டு நீ குண்டாக்கணும்னு விதி இருந்தா என்ன செய்ய?” என்று சிரித்தவாறு சமயலறைக்குள் செல்ல பல்லைக் கடிப்பாள் கௌஷி.
இரவில் வெற்றியை  அழைத்து கௌசி என்னை இவ்வாறு வேலை வாங்குகிறாள். இப்படியெல்லாம் டாச்சர் செய்கின்றாள் என்று புலம்புவான்.
அதற்கு வெற்றி “அனுபவி அவ கோபம் போனாதான் உனக்கு வாழ்க்கை கிடைக்கும்” என்று சிரிப்பான்.
மாலை தேநீருக்கு பின் வழமையாக வீட்டுக்கு அழைத்து பேசுபவள் காலையும் மாலையும் குடும்பத்தாரோடு பேச, ஆரம்பித்திருந்தாள். இந்திரா மகள் தனியாக கஷ்டப்படுவதாக நினைத்து கவலையாக பேச, வேலைக்கு ஆள் வைத்திருப்பதாகவும், அபார்மண்ட்டில் இருக்கும் ஒருவர் என்பதால் கொரோனா பயம் இல்லை என்று மட்டும் கூறி இருக்க,
“வேலையாட்களை நம்பி வீட்டுல சேர்க்காத கௌஷிமா தனியா வேற இருக்க, டீவிக்காரன் போடுற நியூஸ் பார்த்தாலே அடிவயிறு கலங்குது. பார்த்து பத்திரமா இரு” என்பாள் அன்னை.
“அவனால எனக்கு ஒன்னும் ஆகாது. என்னாலதான் அவன் துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடப் போறான்” உள்ளுக்கு சிரித்துக் கொண்டாள் கௌசி.
கதிர்வேலன் பேசும் பொழுதெல்லாம் சக்தியை விவாகரத்து செய்வதை பற்றி மீண்டும் சிந்தித்துப் பார்க்கும்படி கூறுவார்.
சந்தியாவும் வெற்றியும் நல்லமுறையில் பேசினாலும், வெற்றி ஷக்தி தன்னிடம் புலம்புவதை பற்றி எதுவும் கூறுவதில்லை. அவளுடைய வேலையை பற்றியும், ஊருக்கு வரும்படி மட்டும் கூறுவான்.
எந்த வேலையும் செய்யாமல் காலம் தள்ளுவது எவ்வளவு சிரம் என்பது இரண்டு நாட்களிலையே புரிந்துக் கொண்டவள் எல்லா மொழிகளிலும் இருக்கும், படங்களையும், டீவி சீரியல்களை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டது மட்டுமல்லாது தான் ஆசையாசையாக படிக்க வேண்டும் என்றிருந்த புத்தகங்களை ஆன்லைனில் ஆடர் செய்தாள்.
ஆடர் செய்த புத்தகங்கள் வந்து சேரவும் ஷக்தியிடம் பணம் கேட்க
அவன் “என்ன இது? வீட்டு வேலையும் செய்யணும்? வீட்டு செலவையும் நான் பார்க்கணுமா?” என்று முறைக்கலானான்.
வீட்டுக்கு தேவையான காய்கறியிலிருந்து மாளிகைசாமான்கள் அனைத்துக்கும் அவன்தான் பணம் கொடுத்திருந்தான். 
“நீ தானே என் புருஷன்? அப்போ என் செலவெல்லாம் நீதான் பார்க்கணும்” என்றவள் அவன் பேர்ஸை எடுத்து பணம் கொடுக்க ஷக்தி செய்வதறியாது நின்றிருந்தான்.
“வச்சி செய்றது, வச்சி செய்றது சொல்லுறாங்க. இப்படியெல்லாம் செய்வாங்கனு இன்னிக்கிதான் பாக்குறேன்” அவனால் புலம்ப மட்டும்தான் முடிந்தது.
அவளை திட்ட வேண்டும் போல் இருந்தாலும் திட்ட முடியாமல் அவன் தவிப்பது கௌஷிக்கு சிரிப்பை மூட்ட அறைக்குள் சென்று கணணியை சத்தமாக வைத்து விழுந்து, விழுந்து சிரிப்பாள்.
“சின்ன வயசுல என்ன என்னெல்லாம் பாடுபடுத்தின? உன்ன இப்படி பார்க்கும் பொது ஜாலியா இருக்கு. இந்த ரெண்டு மாசம் பொறுத்துக்க சொல்லு” கண்ணாடியில் தெரியும் தன் விம்பத்திடம் பேசுவாள்.
ஒருவாரம் கௌஷிக்கு சேவகம் செய்ததில் சக்தியின் வீடு தூசிபடிந்து, அவன் துணிகள் துவைக்காமல் வீடே பேய் வீடு போல் காட்ச்சி அளிக்க, கௌஷியின் முன் சென்று நின்றவன் தனக்கு வாரம் ஒருநாள் லீவு வேண்டும் என்று கேட்டான்.
“என்னது லீவா? நீ என்ன ஆபீஸ்லயா வேல பாக்குற லீவெடுக்க? ஒழுங்கா தினமும் வேலைக்கு வா. இல்லையா ஒரேயடியா போ..” என்று மிரட்ட அவளை திட்ட முடியாமல் அன்றைய வேலையை முடித்தவன் வீடு சென்று வளமை போல் வெற்றியிடம் புலம்பலானான்.
“ஹாஹாஹா ஆள் வளர்ந்த அளவுக்கு உனக்கு அறிவு வளரல ஷக்தி. எனக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா நான் என்ன எல்லாம் பண்ணி இருப்பேன் தெரியுமா?” என்று தம்பிக்கு ஐடியா கொடுத்தான் தமையன்.
“இருடி வரேன்” என்ற ஷக்தி அண்ணன் கூறியபடி செய்யலானான்.
அன்றிரவு உணவுண்டு பின் எல்லாவற்றையும் கழுவி அடுக்கி வைத்தவன் கிளம்பாமல் டீவி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட கௌசி
“என்ன நீ இன்னும் கிளம்பாம இருக்க? நாளைக்கு வேலைக்கு வர உத்தேசம் இல்லையா?” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு முறைக்க
“வேலைக்குத்தானே? வர மாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே. இனி நான் இங்கதான் தங்க போறேன்” என்றவாறே மெதுவாக அவளை நெருங்கி இருக்க
“ஏய் என்ன சொல்லுற?” மிரண்டாள் கௌசி.
“புருஷனா செலவு மட்டும் பண்ணா போதுமா? உரிமையையும் எடுத்துக்க வேணாமா?” அவளை இழுத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தான் ஷக்தி.

Advertisement