Advertisement

அத்தியாயம் 21
அடுத்து நடந்தது எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்திருக்க, நடந்தது கெட்ட கனவே தான் என்று எண்ணினாள் கௌசல்யா.
கௌஷி நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் தோற்றத்தில் இருப்பதால் அதை பார்த்து குமுதா கேள்வி கேட்க ஆரம்பிப்பாள். அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அவளிடம் விசாரிக்க முடியாமல் போய்விடும் என்றெண்ணிய ஷக்தி கௌஷியை பர்வதத்தோடு இருக்குமாறு கூறி இருந்தான்.
குமுதா சக்தியின் காலை பிடித்துக் கெஞ்சியும் அவன் அசராமல் “நீங்க பேச வேண்டிய செயார்மன் கிட்ட மேடம்” என்று சொல்ல
“சார், சார் என்ன எப்படியாவது காப்பாத்துங்க” குமுதா கெஞ்சிக் கொண்டிருக்கும் பொழுது கௌஷி பர்வதத்தோடு வாசலுக்கு வந்தாள்.
அந்த நேரத்தில் குமுதாவுக்கு கௌஷியின் நிறைமாத கர்பிணித் தோற்றம் எல்லாம் கண்ணில் விழவே இல்லை. தன் பிரச்சினைதான் பெரிதாக தென்பட கௌஷியிடம் கெஞ்சலானாள்.
“கௌசல்யா மேடம் நான் பண்ணது தப்புதான். என் வீட்டு நிலவரம் உங்களுக்கு தெரியும் தானே! எப்படியாவது எனக்கு உதவி செய்ங்க” என்று கதறினாள்.
கௌஷிக்கு அவள் குடும்ப நிலவரம் தெரியும். நான்கு பெண்பிள்ளைகளின் இரண்டாவது குமுதா. குமுதா படித்துக் கொண்டிருக்கும் பொழுது அக்காவை கடன் வாங்கி திருமணம் செய்து வைத்திருந்தனர் அவள் பெற்றோர்.
அவள் வேலைக்கு செல்லும் பொழுது ஒரு இரு தங்கைகளும் காலேஜ் படித்துக் கொண்டிருக்க, கடைசி தங்கை காதல் திருமணம் செய்து கொண்டாள்.
படிப்பையும் முடிக்காமல் காதல் திருமணம் செய்து கொண்டது மாத்திரமன்றி அவள் கணவன் வீட்டில் சீதனம் கேட்க, மேலும் கடன்.
மூன்றாவது தங்கை வேலைக்கு சென்றால் வீட்டு பாரம் குறையும் என்று பார்த்தால், வேலைக்கு சேர்ந்த கொஞ்சம் நாட்களிலையே அவளோடு வேலைப் பார்ப்பவரை ரெஜிஸ்டர் திருமணம் செய்துகொண்டு வந்து நின்றாள்.
“உன்னை போல் ஏமாளியாக என்னால் இருக்க முடியாது. என் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கின்றேன்” அவள் பொருட்களோடு சென்று விட்டாள்.
இதற்கிடையில் மூத்த சகோதரியின் கணவன் மிலிட்டரியில் இறந்து விட அவளும் இரண்டு குழந்தைகளோடு வீட்டுக்கு வந்து விட்டாள்.
இவற்றை தாங்கிக் கொள்ள முடியாமல் வயதான தந்தை பக்கவாதத்தில் விழ, குமுதாவை தவிர குடும்பத்தில் சம்பாதிப்பவர் அவர்தான் அந்த வழியும் மூடி போக, கடன் குமுதாவின் கழுத்தை இறுக்க ஆரம்பித்தது.
இந்த நேரத்தில் தான் அந்த பெரியவர் காரியாலயத்துக்கு வந்ததும், குமுதா அவரிடம் பேசியதும்.
காதலித்து திருமணம் செய்த தங்கை தனது மாமனார் பணம் கொடுக்கவில்லையென்றால் வீட்டை விட்டு துரத்தி விடுவார் என்று ஆபீஸ் வாசலுக்கே வந்து அழுது கரைய, அவளை அந்த பெரியவர் வீட்டுக்கு அனுப்பி தான் பணத்தை பெற்றுக்கொண்டிருந்தாள்.
அதை வைத்து தங்கையின் வாழ்க்கையை சரி செய்தவள் கொஞ்சம் கடனையும் அடைத்து, வீட்டின் ஒரு பகுதியில் உணவுக் கடையையும் நிறுவி அக்காவுக்கு வாழ வழி செய்து கொடுத்தாள்.
சமீபத்தில் தான் அவளுக்கு திருமணம் ஆகி இருந்தது அதுவும் முப்பத்தி இரண்டாவது வயதில். எல்லா கடனையும் அடைத்து எந்த பிரச்சினையும் இனி இல்லை என்று நிம்மதியாக உணரும் நேரம் அவள் செய்த காரியம், கணவருக்கும், அவன் வீட்டாருக்கும் தெரியவந்தால் அவள் நிலைமை என்னவாகும்? அவள் வீட்டாருக்கு தெரிந்தால்? அவள் அக்கா தங்கைகளின் வாழ்க்கை என்னவாகும்? சாதாரண பெண்ணாக கண்ணீர் சிந்தினாள். 
சில மனிதர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் தப்பு செய்ய தூண்டப்படுகிறார்கள். குமுதாவின் நிலையும் சக்திக்கும் புரிந்தது. அதற்காக செய்த தப்பை மன்னித்து விட அவன் ஒன்றும் ராஜவர்மன் இல்லையே.
“எதுவானாலும் நீங்க செயார்மன் கிட்ட பேசிடுங்க” என்றவன் ராஜவர்மனுக்கு வீடியோ கால் விடுத்திருந்தான்.
ராஜவர்மனிடம் சுருக்கமாக குமுதாதான் குற்றவாளி என்று கூறியவன். அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டு கையொப்பம் போட்டுக் கொடுத்ததையும் கூறினான்.
அவருக்கும் போலீஸ், கேஸ் என்று போக விருப்பமில்லை. குமாதாவின் நிலையும் அவருக்கு தெரியும். இப்பொழுது நாட்டோட நிலமையும் அவருக்கு தெரியும். பிரச்சினையை சுமூகமாக முடித்துக்கொள்வதுதான் சரி என்று பட்டது.
“நீ பண்ண காரியத்துக்கு உன்ன வேலைல இருந்து தூக்கி. எங்கயும் உனக்கு வேலை கிடைக்காம பண்ணி, போலீஸ்ல ஒப்படைச்சி இருக்கணும். அப்படி பண்ணா என் பணம் கண்டிப்பா எனக்கு கிடைக்காது. பத்திரிக்கையில் உன் பேர் நாறி, அவமானப்பட்டு, குடும்பத்தாருக்கே முகம் கொடுக்க முடியாம நீ தற்கொலை செஞ்சி செத்துடுவ. என் பணத்த யார் கொடுப்பா?” ராஜவர்மனின் வார்த்தைகள் குத்தீட்டியாக குத்திக் கிழிக்க, குமுதாவுக்கு நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.
பாலமுருகனின் கணனியில் தெரிந்த அவரின் உருவத்திடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டவள் தான் எது வேண்டுமானாலும் செய்வதாக கெஞ்சலானாள்.
“எனக்கு என் பணம் தான் வேணும். அதற்கு ஒரே வழிதான் இருக்கு” என்று ராஜவர்மன் சொன்னதும் தப்பாக ஏதும் கேட்டு விடப் போகிறாரோ குமுதாவின் மனம் அச்சப்பட்டது.
    
“இவர்கள் இருக்கும் பொழுது அதுவும் வீடியோ காலில் அப்படி எதுவும் கேட்டு விட மாட்டார். அது போக ராஜவர்மன் சார் நல்ல மனிதர்” குமுதாவின் மனம் குமுறிக்கொண்டிருக்க ராஜவர்மன் திரையில் பேசலானார்.
“என்னோட எல்லா கம்பனிலையும் ஐஞ்சு வருசத்துக்கு ஒருக்கா ஓல்ட் எம்ப்ளயிசுக்கு ப்ரோமொஷனோட சில சலுகைகள் கொடுக்கப்படுறது உனக்கு தெரியும் தானே. இந்த தடவ அது உனக்கு கிடைக்க போகிறதும் உனக்கு ஷக்தி சொல்லி இருப்பானே”
தலையை ஆட்டி வைத்தாள் குமுதா.
“சலுகைகள் ஒன்னும் இல்லாமல் உனக்கு ப்ரோமோஷன் கிடைக்கும்” குமுதா அதிர்ச்சியாக, பாலமுருகன் வாயை பிளந்தான்.
“ப்ரோமோஷன் கிடைச்சதால உன் சம்பளம் அதிகமாகும். அது உனக்கு கிடைக்காது. மாச மாசம் நீ கொடுக்க வேண்டிய பணமா நான் எடுத்துக்கிறேன்” என்றார்.
“என்ன சொல்கிறார் இவர்” என்று குமுதா பார்த்திருக்க,
“இதெல்லாம் ரொம்ப அநியாயம்” என்றான் பாலமுருகன்.
சம்பந்தப்பட்டவள் அவள்தான் என்றாலும் எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்திருந்தாள் கௌசல்யா.
“உன்ன போலீஸ்ல புடிச்சி கொடுத்தா என் பணம் வராது. உன் சம்பளத்துல பிடிச்சிக்கிறத தவிர எனக்கு வேற வழியும் இல்ல. ஏன்னா உன் குடும்ப நிலவரம் தான் எனக்கு தெரியுமே. சமீபத்துலதான் கல்யாணம் ஆகிருச்சு. இப்போ போய் சம்பளம் கம்மி ஆனா உன் புருஷன் கேள்வி கேப்பான். சண்டை வரும். டைவோர்ஸ் ஆனா உன் வாழ்க்கை அஸ்தமனமான பாவம் என்ன சேரும். அதனாலதான் இந்த முடிவு” என்றவர்
“ஷக்தி நான் ஒரு பேக்ஸ் அனுப்புறேன். அதுல குமுதற்க்கு ப்ரோமோஷன் கொடுத்ததாகவும், அவ பண்ண பணமோசடியையும் அதற்காக அவ சம்பள பணத்துல மாசா மாசம் பிடிச்சிக்கிறதையும் குறிப்பிட்டு, எக்காரணத்தைக் கொண்டும் அவ வேலைய விட்டு போகக் கூடாது. அப்படி போனாலோ இல்ல அவ இறந்து போனாலோ அவ புருஷன் இந்த பணத்தை கொடுப்பார்னு எழுதி இருக்கேன். குமுதாகிட்ட சைன் வாங்கி அவளை அனுப்பிடுங்க” என்ற ராஜவர்மன் வீடியோ காலிலிருந்து மறைந்தார்.
“இதெல்லாம் ரொம்ப அநியாயம் சார். ஆம்பிளைக்கு ஒரு நியாயம் பொம்பளைக்கு ஒரு நியாயம். ரொம்ப அநியாயம்” பாலமுருகன் புலம்பியவாறே இருக்க,
“யேம்பா அந்த பொண்ணு என்ன பரம்பரை திருடியா? எதோ சந்தர்ப்ப சூழ்நிலையால தப்பு பண்ணிட்டா. உங்க செயர்மன் நல்லவரா இருக்க இப்படி ஒரு ஆப்ஷன் கொடுத்திருக்கிறாரு. வேற யாராவதாக இருந்தா… ஜெயில்தான். களிதான்” என்றாள் பர்வதம்.
அடுத்த பதினைந்தாம் நிமிடத்தில் பேக்ஸ் வர ஷக்தி அதை படித்துப் பார்த்து குமுதாவிடம் கொடுக்க, குமுதா கையொப்பம் போட்டுக் கொடுத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினாள்.
குமுதா சென்றதாக ஷக்தி ராஜவர்மனை அழைத்துக் கூற, “நன்றி ஷக்தி நிலமையை சரியாக கையாண்டுட்ட. இந்த மாதிரி சிட்டுவேஷன்ல போலீஸ்கிட்ட போறதுதான் முறை. எனக்கு போலீசுக்கு போறதுக்கு இஷ்டம் இல்லை என்றதும். இப்படி ஒரு ஐடியாவ கொடுத்த பாரு. கிரேட் யங் மேன். என்ன பணம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கிடைக்கும். பரவால்ல விடு. தப்பு பண்ணது தெரிஞ்சி போச்சு என்ற பதட்டத்துல வேலைல கவனமா இருப்பா. எப்படியோ உன் வைப் பேர காப்பாத்திட்ட. கௌசல்யாவை கேட்டதா சொல்லு”
“ஓகே சார்” என்று ஷக்தி அலைபேசியை துண்டிக்க,
“நீ பார்த்த வேலையா இது?” எனும் விதமாக பாலமுருகனும், கௌஷியும் சக்தியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.
“எப்படியோப்பா ரெண்டு பொண்ணுக பிரச்சினையை தீர்த்து வச்சிட்ட. வாங்க வந்து சாப்பிடுங்க. கிளம்ப வேணாமா…. வீட்டுக்கு போய் சேருறதுக்குள்ள எவ்வளவு கண்ணீர் வடிக்க வேண்டி இருக்குமோ” பர்வதம் அங்கலாய்க்க,
“ஆமாம் அத்த எனக்கு ரொம்ப பசிக்குது, வாசனை வேற தூக்குது” என்றவாறு ஷக்தி விரைய, சாப்பாடு என்றதும் பாலமுருகனும் விரைந்தான்.
“சார் அஞ்சு மணி அஞ்சர மணிக்கு அப்பொறம் போங்க” சாப்பிட்டவாறே பாலமுருகன் சொன்னான். 
“ஏன்” என்றவாறு அனைவரும் அவனை ஏறிட
“செக்போஸ்ட் போலீஸ் டியூட்டி டைம் முடிஞ்சி ஷிப்ட் மாறி இருப்பாங்க. உங்க நாடகத்துக்கு கரெக்ட்டா இருக்கும். இல்லனா மாட்டிக்குவீங்க” என்று சிரிக்க
வந்த வழியாகத்தான் போயாக வேண்டும். பாலமுருகன் சொல்வது சரியென்று தோன்ற மாலையாகும் அனைவரும் அங்கிருந்து விட்டு கிளம்பினார்.
அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசாரை கண்ணீரில் கரைய வைத்து ஒருவாறு வீடு வந்து சேர்ந்திருந்தனர் ஷக்தி மற்றும் கௌஷி.
குழந்தைக்கான பையோடு பர்வதம் விடைபெற மின்தூக்கியிலிருந்து இறங்கிக் கொண்டனர் சக்தியும் கௌஷியும்.
கௌஷி கதவை திறந்து உள்ளே செல்ல “அப்போ நான் கிளம்புறேன்” என்றான் ஷக்தி
“உள்ள வா ஷக்தி சாப்பிட்டுட்டு போலாம்” அவனின் பதிலை எதிர்பாராமல் கதவையும் பூட்டாமல் தனது அறைக்குள் நுழைந்தாள் கௌஷி.
அவள் அழைத்தது ஷக்திக்கு ஆச்சரியமாக இருக்க, உண்மையிலயே தன்னை அழைத்தாளா? என் காது சரியாகத்தான் கேட்டதா? என்ற சந்தேகம் கூட வந்தது.
கதவு திறந்து இருக்கவே பூட்டி விட்டு சோபாவில் அமர்ந்து கொண்டான்.
“ஷக்தி குளிக்கிறதா இருந்தா அப்பா ரூம்ல போய் குளி. அவர் ட்ரெஸ் கூட கபோட்ல இருக்கு” கௌஷி தனது அறையிலிருந்தே கூற ஷக்தி மறுக்காமல் எழுந்து சென்றான்.
ஷக்தி குளித்து விட்டு வர கௌஷி சமயயலறையில் தோசை வாரத்துக்கு கொண்டிருந்தாள்.
“டின்னர் தோசையா? தொட்டுக்க என்ன?”
“தக்காளி சட்னி தான் பண்ண போறேன்” ஷக்திக்கு தக்காளி சட்னிதான் பிடிக்கும் அதனாலயே கௌஷி அப்படி சொன்னாள்.
“வாவ் நான் தோசை ஊத்துறேன். நீ சட்னி பண்ணிடு” இருக்கையில் இருந்த கௌஷியின் துப்பட்டாவை தலையில் கட்டிக்கொண்டு கைதேர்ந்த சமையற்காரன் போல் கலத்தில் இறங்கினான் ஷக்தி.
பேணியனில் பளீரென்று கைகள் தெரிய லுங்கியையும் மடித்துக் கட்டிக்கொண்டு அவன் தோசை வார்க்கும் அழகு கௌஷிக்கு சிரிப்பைத்தான் மூட்டியது.
“இந்த வேலையெல்லாம் தெரியுமா உனக்கு? தின்கிறது தூங்குறத தவிர எதுவும் தெரியாதுன்னு இல்ல நினச்சேன்” சட்டினிக்கு தாளிப்பை கொட்டியவாறு கிண்டல் செய்தாள் கௌஷி.
“நா ஊருக்கு வந்தா பிரணவ் கூட சேர்ந்து சமைப்பேன். அவனும் நல்லா சமைப்பான்”
“எங்க கூடத்தான் சேர மாட்ட. பரவால்ல பிரணவ் கூட சேர்ந்து இந்த வேல எல்லாம் பார்த்திருக்க” கௌஷி என்னமோ யதார்தமாகத்தான் சொன்னாள்.
ஆனால் ஷக்திக்குத்தான் எதோ போல் ஆனது. சின்ன வயதில் வெற்றி, சந்த்யா கௌஷி மூவரும் ஒன்றாக விளையாடினால் இவன் அந்த பக்கம் செல்வதே இல்லையே.
சட்டென்று கௌஷியின் கையை பிடித்து தன் புறம் இழுத்து அணைத்துக் கொண்டவன் “ஐம் ரியலி சாரி கௌஷி. அம்மா மேல இருந்த பாசத்துல சின்ன வயசுல உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்.  உன்ன பிடிக்கும் எங்குறதையே தெரியாம முறைச்சிகிட்டு திரிஞ்சேன். நீ பெரியமனிசியானப்போ நான்தான் உனக்கு குடிசை கட்டி கொடுத்தேன். அன்னக்கி உன்ன பார்த்தப்போ என்னால உன்ன தவிர வேற எதையும் பார்க்க முடியல. அங்க சுத்தி இங்க சுத்தி உன் முன்னாடிதான் வந்து நின்னேன். எங்க என்ன அறியாமளையே உன் மேல ஈர்ப்பு வந்துடுமோன்னு உன்ன பார்க்கும் போதெல்லாம் வார்த்தைகளால் உன்ன குதறி எடுத்தேன்.
காலேஜ்ல ஓவியாவை காதலிச்சது கூட அந்த ஏஜ்ல வரும் ஈர்ப்புதான்னு அவ விட்டுட்டு போன கொஞ்சம் நாளையே புரிஞ்சிக்கிட்டேன்.
நமக்கு கல்யாணம் நடந்தது கூட கடவுளோட ஏற்பாடுன்னு ஏத்துக்காம போன என்னோட முட்டாள்தனத்தை நான் என்ன சொல்ல? அன்னக்கி ஏத்துக்கிட்டிருந்தா ஒருவேளை உன்மேல இருந்த காதல் எனக்கு புரியாமலே போய் இருந்திருக்கும்.
என் முட்டாள் தனத்தோட உச்சகட்டம் உன் குடும்பத்தையே அவமானப்பட வச்சிட்டு நான் எங்கம்மாவை பேச வச்சி மண்டபத்துல இருந்து கூட்டிட்டு போனது. அன்னைக்கி நான் நிதானமா யோசிச்சு முடிவெடுத்திருந்தா இன்னக்கி நமக்குள்ள எந்த பிரச்சினையும் வந்திருக்காது. எல்லாம் என் ஒருத்தன் தவறுதான். என்னால நீயும் உன் குடும்பமும் ரொம்ப பட்டுடீங்க.    
அப்பா அடிக்கடி வந்து உன் கூட சேர்ந்து வாழ சொல்லி வற்புறுத்த ஆரம்பிச்சாரு. ஊருக்கு வந்தா நீயோ, சந்தியாவோ, வெற்றியோ யாரும் இல்ல. என்னதான் நீங்க விளையாடும் போது நான் முறைச்சிகிட்டு விலகி இருந்தாலும் நீங்க என்ன செயிரீங்கனு பார்த்துக்கிட்டுதான் இருப்பேன். அதிகமா நீ என்ன செய்யிறேன்னு. நீ பண்ணுற ஒவ்வொண்ணும் எனக்கு புடிக்கும். ஆனா கோபம் எங்குற முகமூடியால அது என் புத்திக்கு எட்டவே இல்லனு யாருமே இல்லாதபோ புரிஞ்சிக்கிட்டேன்.
நான் உன்ன சின்ன வயசுல இருந்தே விரும்பி இருக்கேன்னு நினைக்கும் பொழுது எனக்கே ஆச்சரியமா இருந்தது. என்னாலையே அத நம்ப முடியல. அந்த நேரத்துல பிரணவ் பழைய போட்டோஸ் எல்லாம் வச்சி பார்த்துகிட்டு இருந்தான். அதுல நம்ம சின்ன வயசு போட்டோஸ் இருந்து. எங்கப்பா மடியில வச்சுதான் உனக்கு காது குத்தி இருக்காங்க. நீ அழும் போது நான்தான் உன் கண்ணீரையே துடைச்சு விட்டிருக்கேன். அப்போவே உன்ன எனக்கு பிடிச்சிருந்திருக்கு கௌஷி. நீ வயசுக்கு வந்தப்போ எடுத்த போட்டோ பார்த்ததும் என் மனச நான் புரிஞ்சிக்கிட்டேன். உடனே அப்பாகிட்ட பேசி உங்க வீட்டுல பேச சொன்னேன். நேரடியா நானே வந்து பேசினா நீ மாட்டேன்னு சொல்லுவியோன்னு பயம்தான்” லேசாக புன்னகைத்தான் ஷக்தி.
“தள்ளி நில்லு ஷக்தி தோசை கருகுது” என்ற கௌஷி அவன் பேசியவற்றுக்கு எதுவும் கூறாது அடுப்பை அனைத்து சாப்பிட தட்டுக்களை எடுத்து வைத்தாள்.
மனதில் இருந்த எல்லாவற்றையும் ஒரே மூச்சில் கொட்டி விட்டதால் ஷக்திக்கு பாரம் குறைந்த உணர்வுதான். அனால் கௌஷி எந்த பதிலையும் சொல்லவில்லை என்றதும் அவள் கோபம் தீரவில்லையோ என்று அஞ்சினான்.
“என்ன பார்த்துகிட்டு நிக்கிற? வா வந்து சாப்பிடு” கௌஷி தனக்கு மட்டும் பரிமாறிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு இலகுவாக மன்னிப்பு கேட்டு விட்டான்.
அவன் செய்தவைகள்தான் கொஞ்சமா? நஞ்சமா? சிறுவயதில் எதோ அறியா வயதில் தவறிழைத்து விட்டான் என்று மன்னித்து விடலாம். ஆனால் கல்யாண மண்டபத்தில் வேண்டுமென்றே அவன் நடந்துகொண்டதை அவளால் மன்னிக்கத்தான் முடியுமா?
ஒரு மனம் நிச்சயமாக முடியாது என்று அவளோடு சண்டை பிடிக்க, ஷக்தி உன்னை விரும்ப வில்லை என்றால் இவ்வளவு சிரமப்பட்டு பணமோசடியிலிருந்து உன்னை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன? பழிவாங்கத்தான் உன்னை திருமணம் செய்தான் என்றால் அவனுக்கு அதுவே போதுமே உன்னை சிறைக்கே அனுப்பி இருப்பானே என்றது மறுமணம்.
ஷக்தி அவளை காதலிக்கிறான். அவன் சொன்னது அனைத்தும் உண்மை என்பதில் கௌஷிக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவனை ஏற்றுக்கொள்ளத்தான் அவள் மனம் முரண்டு பிடித்தது. 
  
அவளுக்கு இழைத்த அனைத்தையும் மறக்க முடியாவிட்டாலும் மன்னித்து விட அவளால் முடியும். அவள் குடும்பத்தாருக்கு இழைத்ததுக்கு அவளால் மன்னிக்க மனம் வருமா?
ஷக்திக்கு சாம்பவியின் மேல் இருக்கும் கண்மூடித்தனமான பாசம் கௌஷிக்கும் தெரியும். அன்னையையும் கட்டின மனைவியையும் சமாதானமாக வைத்திருக்க வேண்டும் என்று பொய் கூறி இருப்பான்.
சாம்பவியின் குணம் அறிந்து கூறியவன் கௌஷியின் குணம் அறிந்து அவளிடம் உண்மையை கூறி இருக்க வேண்டுமல்லவா? அவளையும் சாம்பவி போல் சண்டைக்காரி என்றல்லவா நினைத்து விட்டான்.
மனிதர்களை குறை, நிறையோடுதான் இறைவன் படைத்திருக்கின்றான். யாரும் நூறு வீதம் சரியாக இருக்க முடியாது. எதோ ஒரு குறை கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஷக்தியின் குறை அவன் கோபமும் அன்னையின் மீதான பாசமும்தான்.
அதிகமான மனிதர்களுக்கு கோபம்தான் பெரிய குறையே. கோபத்தை விட்டு நிதானமாக சிந்தித்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். பல பிரச்சினைகளுக்கு தீர்வும் காணலாம்.
இன்று கௌஷி கோபப்பட்டு கத்தவில்லை. அவளால் சக்தியை புரிந்துக்கொள்ள முடிந்தது. அவன் காதலை புரிந்துகொள்ள முடிந்ததால் நிதானமாக சிந்தித்தாள்.
உண்மையிலயே அவளுக்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வர கால அவகாசம் தேவை பட்டிருந்தது. அது சக்தியோடு வாழ்வதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர.
அவனை விட்டு பிரிந்து இருந்த இந்த ஆறு வருடங்களில் அவள் வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எண்ணி இருக்கவில்லை. இனிமேலும் எண்ணப்போவதுமில்லை. அவள் வாழ்க்கை ஷக்தியோடுதான். அவள் வீட்டாரும் விட மாட்டார்கள் என்று நன்கு புரிய ஒரு முடிவுக்கு வந்தாள்.
சாப்பிட்டு முடித்த ஷக்தி கைகழுவி விட்டு “அப்போ கௌஷி நான் கிளம்புறேன். நான் பேசினது எல்லாம் உண்மை. நீ அமைதியா இருக்குறத பாக்குறப்போவே தெரியும் உனக்கு என்ன பார்க்கவே பிடிக்கலைனு. ஆபீஸ் விஷயமா பார்க்க வேண்டி இருக்கும். வேற வழியில்லை. கூடிய சீக்கிரம் நான் வேற வேலை தேடுகிறேன். உனக்கு எந்த கஷ்டமும் இருக்காது” விரக்தியாக பேசினான் ஷக்தி.
“வேற வேல தேடிகிட்டா மட்டும் எல்லாம் சரியாகிடுமா? லூசு” கௌஷி திட்ட
“என்ன என்னதான் பண்ண சொல்லுற?” குரல் கொஞ்சம் கமறி இருக்க தொண்டையை கனைத்து சரி செய்து கொண்டான்.
“அதான் என்ன லவ் பண்ணுறான்னு சொன்னியே ப்ரூப் பண்ணு” கைகழுவியவள் கையை துடைத்தவாறு கூற அவளை புரியாது பார்த்தான் ஷக்தி.
“நீ என்னதான் சொல்லுற? எனக்கு ஒன்னும் புரியல தெளிவா சொல்லு” அவளை முறைக்க முடியாமல் நின்றான் ஷக்தி.
“அதான் வீட்டாளுங்க நம்மள சேர்த்து வைக்க இன்னும் ரெண்டு மாசம் இருக்கே. அந்த ரெண்டு மாசமும் நீ என் கூட எங்க வீட்டுல இருந்து எல்லா வேலையையும் பாரு” அசால்டாக சொல்ல
“அடிப்பாவி கொரோனானால வீட்டு வேலைக்கு ஆட்கள் வர மாட்டாங்கன்னு  என்ன உன் வீட்டு வேலைக்காரனாக்க போறியா?” முகம் சிவக்கலானான்.
“இங்க பாரு ஷக்தி. லவ் பண்ணுறேன். இந்த ரோஸ் கொடுக்குறது. கார்ட் கொடுக்குறது இந்த ஏமாத்து வேலையெல்லாம் என் கிட்ட செல்லாது. உருப்படியா நல்ல புருஷனா. பொண்டாட்டிக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கிறதா நிரூபி. உன் கூட சேர்ந்து வாழணுமா வேணாமான்னு யோசிச்சு சொல்லுறேன். இதுதான் என் முடிவு. இப்போ நீ கிளம்பு. எனக்கு தூக்கம் வருது. இந்த டீலுக்கு ஓகேனா டான்னு ஆறுமணிக்கு வந்துடு. எனக்கு பெட் காபி வேணும். என்ன இன்னும் இங்கயே நிக்குற போ…” அவன் பொருட்களையும் கையில் கொடுத்து அவனை பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்பி கதவை சாத்தி இருந்தாள் கௌஷி.
கதவையே வெறித்துப் பார்த்திருந்தவன் வீடு வந்திருந்தான்.
வெற்றி அழைத்து கௌஷியிடம் பேசிவிட்டாயா என்று கேட்க “அவளுக்கு பெட் காபி வேணுமாம். பெட் காபி. அத்த நல்லா பொண்ண வளர்த்திருக்காங்க. எனக்கு வர கோவத்துக்கு நாலு சாத்து சாத்த போறேன்” என்று அண்ணனிடம் கத்த
“என்னடா ஆச்சு” என்று விசாரித்த வெற்றி கௌசல்யா சொன்னதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கலானான்.
 “நல்லா சிரி நல்ல சிரி என்ன பார்த்து நல்லா சிரி” கடுப்பில் ஷக்தி கத்த
“தம்பி உன்ன யாரு தோசை வார்த்து அதிகப் பிரசங்கி தனமா உன் பொண்டாட்டிக்கு ஐடியா கொடுக்க சொன்னது? நானா? என் மேல எகுருர. உன் பொண்டாட்டி உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கா அத பயன்படுத்திக்க போறியா? இல்லையா? அது உன் பிரச்சினை. இதுக்குதான் பெரியவங்க எத செஞ்சாலும் யோசிச்சு செய்ய சொல்லி இருக்காங்க. நீ சின்ன வயசுல செஞ்சதுக்கு எல்லாம் சேர்த்து உன் பொண்டாட்டி வச்சி செய்ய போறா… என்ஜோய்” வெற்றி அழைப்பை துண்டித்திருந்தான்.
“அந்த ராட்சசி என்ன செய்ய காத்திருக்காளோ என்றவாறே அலாரம் வைத்து தூங்கி இருந்தான் ஷக்தி”  

Advertisement