Advertisement

அத்தியாயம் 2
கதிர்வேலனின் அலைபேசி அலறும் பொழுது இந்திராவுக்கும் விழிப்பு தட்டி இருந்தது. பிரணவ் கூறிய செய்தியை கேட்டு கதிர்வேலன் அதிர்ந்து நின்றது ஒரு நொடிதான்.
“இதோ.. இதோ.. இப்போவே வந்துடுறோம் ப்பா…” என்றவருக்கு மனைவியிடம் எவ்வாறு கூறுவது என்று ஒரு தடுமாற்றம்.
“என்னங்க? யாரு இந்த நேரத்துல?” கூந்தலை கொண்டையிட்டவாறு எழுந்து அமர்ந்தாள் இந்திரா.
“ப்ரணவ்தான் போன் பண்ணான்” கட்டிலை விட்டு இறங்கிய கதிர்வேலன் சொல்லி முடிக்கவில்லை
“மாமாக்கு என்ன ஆச்சு. அவர் நல்லா இருக்கார் தானே” பதட்டத்தோடு கட்டிலை விட்டு இறங்கிய இந்திராவின் கண்கள் கலங்கி இருக்க, கணவனின் முகம் பார்த்தே என்ன நடந்திருக்கும் என்று புரிந்துகொண்டவள் கதறி அழ ஆரம்பித்திருந்தாள்.
என்னதான் மாமா மாமா என்று சகாதேவனை அழைத்தாலும் அப்பா ஸ்தானத்தில் வைத்திருந்தவரின் இறப்பை தாங்க முடியாமல் கணவனின் நெஞ்சில் சாய்ந்து அழ கதிர்வேலன் மனைவியை அணைத்து ஆறுதல் படுத்தலானார்.
“இந்திரா இப்போ நாம அழுதுகிட்டு இருந்தா சரியா? சீக்கிரம் ஊருக்கு கிளம்பணுமா? வேணாமா?” என்றதும்தான் இந்திராவுக்கு சுயநினைவே வந்தது.
“நீங்க போய் கௌஷிய எழுப்புங்க” என்றவள் அவசர அவசரமாக ஊருக்கு செல்ல தயாரானாள்.
கௌஷியை எழுப்பிய கனகவேல் ட்ராவல்ஸ்க்கு கால் செய்து திருநெல்வேலி செல்ல வண்டி அவசரமாக வேண்டு என்று கேட்டிருக்க, வண்டி வர அரை மணித்தியாளமாகும் என்றதும் ஊருக்கு சென்றால் பதினாறாம் நாள் காரியம் முடிந்துதான் வர முடியும் என்பதனால் அவசரமாக வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை சீக்கிரம் முடிக்குமாறு ஏவினார்.
“கௌஷி பெரியப்பாவோட காரியம் முடிஞ்ச பிறகுதான் ஊருல இருந்து வருவோம் கம்பனிக்கு லீவு சொல்லிடுமா”
“நான் மெயில்ல சொல்லிக்கிறேன். நீங்கப்பா..”
“இன்னும் விடிய கூட இல்லையேம்மா நான் போகும் போது போன் பண்ணி சொல்லிக்கிறேன்”
“சரிப்பா..”
பெரியப்பா நோயில் இருந்தார் என்பது கௌஷி அறிந்ததுதான். ஆனாலும் இப்படி திடிரென்று இறப்பார் என்று எண்ணவில்லை. ஊரை விட்டு வந்த இந்த ஆறு வருடங்களில் அவர் உடல்நலமற்ற போது ஒரு தடவை சென்று பார்த்து விட்டு வந்தாள்.
செல்லும் பொழுதே கணவனானவை சந்திக்க நேரிடுமோ! சந்தித்தால் தன்னால் இயல்பாக இருக்க முடியுமா? என்ற பதை பதைப்போடுதான் ஊருக்கே சென்றாள். ஆனால் அவன் ஊரில் இல்லை. நிம்மதியாக பெரியம்மாவின் வீட்டில் இருந்து விட்டு வந்தாள்.
அது நடந்து மூன்று வருடங்களுக்கு மேலாகின்றது. இந்த தடவை அவனை கண்டிப்பாக நேரில் சந்திக்க நேரிடும்.
அவள் மனம் நியாபக மூட்ட “எனக்கு என்ன பயம்? நான் என்ன தப்பு பண்ணேன். என்ன கல்யாணம் பண்ணி கொடுங்க என்று கெஞ்சினது அந்தம்மா. வேணாம்னு சொன்னதும் அந்தம்மா. அவரு வாய மூடிக்கிட்டு தானே நின்னாரு. இழவு வீட்டுல மட்டும் ஏதாவது பேசட்டும். வாய கிழிச்சு விடுறேன்” மனதுக்குள் பொறுமியவள் பெற்றோரோடு ஊருக்கு கிளம்பினாள்.
“திருமணமாகாமல் வீட்டில் இருந்திருந்தால் ஞாயிறு இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கி இருக்கலாம். திருமணம் என்ற பெயரில் சம்பளமில்லாத வேலைக்காரியை மருமகளா கொண்டுவந்ததும் இல்லாம இதுங்களுக்கு சம்பாதிச்சு வேற கொடுக்கணும்” முணுமுணுத்தவாறே கிரிஜா அதிகாலையில் வாசற் கதவை திறக்க எதிர் வீட்டு பங்கஜம் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
“நோக்கு விஷயம் தெரியுமோ கிரிஜா? காலங்காத்தால கௌஷி குடும்பத்தோட  திருநெல்வேலி கிளம்பி போய்ட்டாளே”
“என்னது? எதுக்கு?” அதிர்ச்சியை அப்பட்டமாக முகத்தில் காட்டினாள் கிரிஜா.
“அவாளோட பெரியப்பா காலமாயிட்டாராம். சொல்லலையா நோக்கு. என்ன ப்ரெண்ட்ஸோ..” என்ற பங்கஜம் உள்ளே சென்றிருந்தாள். 
கிரிஜாவுக்கு கௌஷியின் குடும்பத்தை பற்றி ஓரளவுக்கு தெரியும். “அப்போ பதினாறாம் நாள் காரியம் முடிஞ்சிதான் வருவாளே.. அது வரைக்கும் பஸ்லயா போகணும்? எவன் இடிப்பான்? எவன் உரசுவானு நினைச்சாலே குடலை பிரட்டுது. பதினாறு நாள்ல மூணு சண்டே என்று எடுத்தாலும் பதினோரு நாள் வேலைக்கு போகாமலும் இருக்க முடியாதே”
ஒரு உயிர் போய் இருக்கு என்ற கவலையை விட கிரிஜாவுக்கு அவள் கவலைதான் பெரிதாக தெரிந்தது. ஒவ்வொரு மனிதனனும் சுயநலவாதிதான். தங்களது பிரச்சினைதான் பெரிதாக தெரியும். இதுதான் மிடில்கிளாஸ் வர்க்கம்.
“கிரிஜா காபி கொடு…” என்றவாறு வந்த கிரிஜாவின் கணவன் சுரேஷ் “என்ன முகமே சரியில்ல” என்று விசாரிக்க கௌஷி ஊருக்கு சென்ற விடயத்தை கூறினாள் கிரிஜா.
“தெரிஞ்சிருந்தா ஸ்கூட்டி சாவிய வாங்கி வச்சிருக்கலாம். உனக்கு ஆபீஸ் போக வர வசதியா இருந்திருக்கும்” என்றான் அவன்.
“வாங்கி வச்சி பூஜ பண்ணவா? எனக்குதான் வண்டி ஓட்ட தெரியாதே” பொறுமியவாறு உள்ளே சென்றாள் கிரிஜா.
“வீட்டுல தண்டமா உக்காந்து இருந்துட்டு கல்யாணமாகி வந்ததும் எங்க உசுர வாங்குது. கௌஷி கூட தானே வண்டில போற, வர. வண்டி ஓட்ட சொல்லி கொடுக்க சொன்னா சொல்லி கொடுத்திட போறா. அந்த அளவுக்கு கூட அவ கூட நல்லா பழக தெரியல” சுரேஷ் மனைவியின் பின்னால் சென்றவாறு திட்டலானான்.
குபீரென்று கண்ணீர் எட்டிப்பார்க்க அதை அவன் அறியாமல் துடைத்துக் கொண்டவள் இதற்கு மேல் பேசினால் அடிப்பான். அது மாமியாரின் காதில் விழுந்தால் இன்னொரு பஞ்சாயத்து நடக்கும் என்று தெரியுமானதால் அமைதியாக அவனுக்கு காபி கலக்கலானாள்.
ஆனால் அவள் மனமோ! “வண்டியோட்ட கத்துகிட்ட அடுத்த செக்கன் வண்டி வாங்கி கொடுத்திட போறாரு” என்றது.
மனிதர்கள் பலவிதம். சிலர் மற்றவர்களுக்கு உதவுவது கூட தங்களது நிலையையும், சுயலாபத்தையும் பொறுத்து மட்டுமே! சில ஜென்மங்கள் அடுத்தவரை அண்டிப் பொழைப்பதை பற்றியெல்லாம் கவலைகொள்வதே இல்லை. கிரிஜா சுரேசை போல.
ஊரை சென்றடையும்வரை இந்திரா விசும்பியவாறு புடவை முந்தானையால் கண்களை துடைத்துக் கொடுத்தான் வந்தாள். கண்களிலிருந்து வழியும் கண்ணீரோடு அவள் நினைவுகளும் பின்னோக்கி பயணித்தது.
தனக்கு இன்னும் வாரிசு இல்லை என்ற கவலை சந்திராவை வாட்ட, மாமியாரின் ஏச்சு பேச்சுக்களுக்கு ஆளாகி மனதளவில் துவண்டு போய் இருந்தாள்.
மகாதேவனும், லட்சுமியும் கூட முதுமையடைந்த நிலையில் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதுதான் உசிதம் என்று சொந்தபந்தங்கள் வேறு பேச, இன்னொரு திருமணம் செய்துகொள்ள சகாதேவன் நினைக்கவில்லை.
லட்சுமி படுத்த படுக்கையாக, சந்த்ராதான் முழு நேரமும் கவனித்துக் கொண்டாள். அதற்கும் அவளிடத்தில் எந்தவிதமான நல்ல பெயரும் கிடைக்கவுமில்லை. சந்திரா மாமியாரிடம்  அதை எதிர்பார்க்கவுமில்லை.
அன்னையின் பழிச்சொற்களை கேட்டுக்கொண்டும் மனைவி அத்தனை வேலைகளையும் பார்ப்பதை பொறுக்காத சகாதேவன் “இப்போ உங்களுக்கு பேரனையோ! பேத்தியையோ! பார்க்கணும். அவ்வளவு தானே” என்றவன் பதினேழு வயதில்லையே தங்கைக்கு சொந்தத்தில் திருமணம் செய்து வைத்தான்.
சாம்பாவியும் அடுத்த வருடமே ஒரு ஆண் குழந்தையை பிரசவிக்க, சந்திரா தான் அவளையும் குழந்தையையும் கவனித்து அனுப்பினாள்.
மகனுக்கு குழந்தை இல்லை என்று மருமகளை திட்டித் திட்டியே இறைவனடி சேர்ந்தார் லட்சுமி.
மகாதேவனின் கணக்காளர்தான் கதிர்வேலன். நல்ல சம்பளமும் வழங்கப்பட்டது. கதிர்வேலனுக்கு அம்மா மட்டும்தான். சொந்த வீடும் வயலும் இருந்தது. வெளியூருக்கு சென்று வேலை செய்ய அன்னையும் சம்மதிக்கவில்லை. கதிர்வேலனுக்கும்  மனம் வரவில்லை.
கதிர்வேலனின் நேர்மையும், உழைப்பும் பிடித்துப் போகவே சந்திராவின் சம்மத்ததோடு இந்திராவை கதிர்வேலனுக்கு திருமணம் பேசினார் சகாதேவன்.  இந்திரா இருக்கும்வரை சாம்பவி அண்ணன் வீட்டுக்கு வந்தால் ஏதாவது குத்தல் பேச்சு பேசி விட்டுத்தான் செல்வாள்.
சின்ன வயதில் பொருட்களுக்காக சண்டை போட்டதோடு சரி. புரியும் வயதில் சம்பவிக்குத் தான் அந்த வீட்டில் அதிக உரிமை இருக்கிறது என்று இந்திரா ஒதுங்கிக் கொண்டாலும் சாம்பவி விடுவதாக இல்லை.
“அக்காவை கட்டினால் தங்கை இலவசமா? வேலைக்காரியாக வைக்க வேண்டியவர்களை வீட்டுக்காரியாக்கினது எங்கம்மா குத்தம். போதாததுக்கு கொடுக்காக தொங்கச்சிக்கு தண்ட செலவு” என்று பேசுவாள்.
எல்லா பேச்சும் இந்திராவின் காதுபட மட்டும்தான் பேசுவாள். சந்திராவிடம் எதுவும் பேச மாட்டாள். சகாதேவனும் தெரிந்தால் தன்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுவான் என்று தெரியும். அண்ணி அண்ணனிடம் சொல்லி விடுவாளோ! என்ற எண்ணத்தையும் விட அம்மா போல் கவனித்துக் கொள்ளும் சந்திரா மேல் சாம்பவிக்கு பாசம் இருந்தது. அன்னையின் மனம் நோகக் எதுவும் பேச மாட்டாள். மற்றபடி அண்ணி அண்ணனிடம் எதுவும் சொல்ல மாட்டாள் என்று தெரியும்.
சாம்பவி இரண்டாவது குழந்தையை கருத்தரித்திருந்த நேரம்தான் இந்திராவை சகாதேவன் கதிர்வேலனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்துக்கு பின் இந்திரா அக்காவின் வீட்டுக்கு வரவே இல்லை. பிரசவத்தின் பொழுதும் கதிர்வேலனின் அன்னை தான் கவனித்துக் கொண்டாள்.
அக்காவாக சந்திராவுக்கு மனவருத்தம் தான். ஆனாலும் தாயாக பார்த்துக்கொள்ளும் மாமியார் தங்கைக்கு கிடைத்ததில் சந்தோசம்.
ஊரிலுள்ள பெரிய வீடுதான் சகாதேவனின் வீடு. வீடு எந்த அளவுக்கு பெரிதோ அதை விட ஐந்து மடங்கு பெரிய தோட்டம். வாயிலிருந்து முற்றத்துக்கு இரண்டு கிலோமீட்டர் இருக்க வண்டி உள்ளே செல்ல முடியாதபடி ஊரு சனம் முழுவதும் அங்குதான் நின்றிருந்தனர்.
கதிர்வேலன் மனைவியையும் மகனையும் இறங்கி உள்ளே செல்லும்படி கூறி, வண்டியை அனுப்பி விட்டு வருவதாக கூறி வண்டியை ஒதுக்கு புறமாக எடுக்குமாறு சொல்ல, சக்தி வண்டியை கண்டு யாரென்று அறியாமல் ஓடி வந்திருந்தான்.
அவன் இருந்த புறம் இந்திரா இறங்கவும் “உள்ள போங்க அத்த” என்றவனின் கண்கள் மறுபுறம் இறங்கும் மனைவியின் மீது விழ, சனத்திரளைக் கண்டு திகைத்த கௌஷி வேகமாக வந்து அன்னையோடு இணைத்துக் கொண்டாள்.
அழுது கரைந்தவாறு வந்த இந்திராவுக்கு சக்தியையும் கண்ணுக்கு தெரியவில்லை. அவன் பேசியதும் காதில் விழ வில்லை. கௌஷியின் நிலையும் அதே தான். அவ்வளவு சனத்திரளில் அவள் எங்கே அவனை பார்த்தாள் உள்ளே எப்படி செல்வது என்றுதான் பார்த்தாள்.
உள்ளே செல்லவும் வெளியே வரவும் கயிறு கட்டி பாதை அமைத்திருக்க, அதன் வழியே கௌஷி அன்னையை அழைத்துக்கொண்டு நுழைந்திருந்தாள்.
வண்டிக்குள் அமர்ந்திருந்த கதிர்வேலன்  மருமகனைக் கண்டு மரியாதைக்காக இறங்கி பேச “உள்ள வாங்க மாமா” என்றான் சக்தி.
“இல்ல மாப்புள வண்டிய அனுப்பிட்டு. எங்க பையெல்லாம் எடுத்துட்டு வரேன்” என்றார் மாமனார்.
உடனே கழுத்தை திருப்பிப் அங்கேயும் இங்கேயும் பார்த்தவன் ஒரு வேலையாள் அழைத்து கதிர்வேலனோடு செல்லுமாறு கூறி அவர்களது பைகளை பண்ணை வீட்டில் வைக்குமாறு கூறினான்.
கதிர்வேலனின் வீடு விற்றது அவனுக்கு தெரியுமே! என்னதான் அக்கா வீடு என்றாலும் அவனும், அவனின் அன்னையும் இருக்கும் வீட்டில் அவர்கள் தங்க மாட்டார்கள் என்று நொடியில் புரிந்துகொண்ட இந்த ஏற்பாட்டை செய்தவன் அடுத்த காரியங்களை கவனிக்க சென்று விட்டான்.
  சகாதேவனின் பூத உடல் வாசலில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. விபூதி பூசி சந்தன பொட்டு வைத்து தூங்குவது போலவே இருக்கும் அவரை பார்த்து கண்ணீர் வடித்தவாறே ஊரு மக்கள் வணக்கம் வைத்து விட்டு நகர்ந்து சென்று கொண்டிருக்க, கூட்டத்தோடு கூட்டமாக கௌஷியும், இந்திராவும் உள்ளே நுழைந்திருந்தனர்.
வாசலிலையே பிரணவ் நிற்க இந்திரா அவனை கட்டிக்கொண்டு அழ, அவனும் இந்திராவை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
சந்த்ராவுக்கும், சகாதேவனுக்கும் பிறந்தவன்தான் பிரணவ். கௌஷியை விட ஐந்து வருடங்கள் சிறியவன். பலவருடங்கள் கடந்து சந்திராவுக்கு குழந்தை பாக்கியம் கிட்டி இருக்க, பேரனை பார்த்து மகிழவும், செல்லம் கொஞ்சவும் லட்சுமிக்கும், மகாதேவனுக்கும்தான் கொடுத்து வைத்திருக்கவில்லை.
 அக்காவை கண்டதும் இந்திராவின் கண்ணீர் இன்னும் அதிகரித்திருக்க, அக்காவோடு அமர்ந்து அழுது கரைய கௌஷியும் அன்னையின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
சாம்பவித்தான் முழு வீட்டையும் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அத்தனை வேலைகளையும் பார்த்துக்கொண்டிருக்க, இவர்களை கண்டு முகத்தை திரும்பியவள் ஆக வேண்டிய காரியங்களை பார்கலானாள்.
“ஏன்பா ராத்திரி இறந்திருக்காரு. உங்களுக்கு அதிகாலைலதான் தெரிஞ்சிருக்கு. நோயில வேறு இருந்த மனிசன். சீக்கிரம் அடக்கம் பண்ண வேண்டியது தானே” என்று ஒரு பெருசு சொல்ல
“ஆமா அத்தனை சொந்தபந்தமும் ஊருலதானே இருக்காங்க. இன்னும் யாருக்காக காத்துகிட்டு இருக்கீங்க?” என்று இன்னொரு பெருசு பேச
“அட நம்ம கபிலரோட மூத்த மவன் வரும் வரைக்கும் இருக்குறாங்களாக்கும்” என்றார் இன்னொரு பெருசு.
“யாரு ஊர விட்டு ஓடிப்போனானே அவனா?” என்றார் முதலாவது பெருசு.
ப்ரணவவை அழைத்து “ஏன்பா கபிலரோட மூத்த மவன் வரும் வரைக்கும் தான் காத்திருக்கிறீங்களா? என்று கேட்க அவனுக்கு பதில் சொல்ல தெரியாமல் அந்தப்புறமாக வந்த சக்தியிடம் கேட்கும்படி கூறினான்.
அவனுக்குத்தான் அண்ணன் எங்கு இருக்கின்றான் என்று தெரியாதே. அவனும்தான் என்ன பதில் சொல்வான்.
“இவன் முழிக்கிற முழி சரியில்ல” என்று ஒரு பெருசு சொல்ல
“இவன் குடும்பத்தோட எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல போலயே” என்றார் இன்னொரு பெருசு.
“அப்போ இவன் பொண்டாட்டி குடும்பத்தோட சகவாசம் வச்சிருப்பானாகும். எதுக்கும் கேட்டு பாரு தம்பி. நாளைபின்ன மரண செய்தி கூட சொல்லலைனு குறை சொல்ல போறான்” என்றார் இன்னொரு பெருசு. 
“இத்தனை வருடங்களாக அண்ணனை தொடர்புகொள்ள முடியவில்லை. ஒருவேளை இவர்கள் சொல்வது போல் அண்ணன் கௌஷி குடும்பத்தோடு தொடர்பில் இருக்கின்றானோ! கேட்டுப் பார்க்கலாம்” என்றெண்ணியவன் கௌஷியை காண உள்ளே செல்ல அவள் அப்பொழுதுதான் எழுந்து வீட்டின் பின்புறம் சென்றாள்.
அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தவளுக்கு அடிவயிறு முட்டிக்கொண்டு நின்றது. உடனே செல்லவும் முடியவில்லை. அங்கிருந்தவர்கள் அவளை இழுத்துக்கொண்டு ஒப்பாரி வைக்க, சிறிது நேரம் சென்று செல்லலாம் என்று எழுந்து சென்றவள் பின்னால்தான் சக்தி சென்றிருந்தான்.
வீடு நிறைய ஆட்கள் என்பதனால் வீட்டினுள் இருக்கும் கழிவறையை பாவிக்க எதோ போல் இருக்க, வெளிய உள்ள கழிவறைக்கு செல்ல பின்னால் வந்த சக்தி “கௌஷி ஒரு நிமிஷம்” என்று அவளை தடுத்து நிறுத்தி இருந்தான்.
அவனை எதிர்பாராதவள் ஒருகணம் அதிர்ந்து நின்று, உடனே சுதாரித்து “என்ன?” என்னும் விதமாக பார்வையாலையே கேட்டு வைக்க,
“வெற்றியோட போன் நம்பர் கொடுக்குறியா? மாமா இறந்த செய்தி சொல்லணும்” அண்ணன் உங்களோடு தொடர்பில் இருக்கின்றானா? என்றெல்லாம் கேட்கவில்லை. கண்டிப்பாக இருப்பான் என்ற முடிவோடு கேட்க, கணவனை நன்றாக முறைத்தாள் கௌஷி.
அவள் அமர்ந்திருக்கும் பொழுது அவன் அங்கும் இங்கும் அலைவது அவள் கண்களுக்கு தென்பட்டதுதான். அவள் கழுத்தில் தாலி கட்டியது முதல் அவளை முறைத்துக் கொண்டிருந்தவன். அன்னை கூறியதும் அவளை அம்போ என்று விட்டு விட்டு மண்டபத்திலிருந்து கிளம்பி விட்டான். பழைய நியாபகங்கள் அடுக்கடுக்காக நொடியில் விரிந்து மறைய கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பார்கள். கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் கணவனை பார்த்து முகம் திருப்பிக் கொண்டாள்.
கௌஷிக்கு அவனை பார்க்க பார்க்க வெறுப்பு மட்டும்தான் வந்தது. ஆறு வருடங்களாக எந்த தொடர்பையும் ஏற்படுத்த முனையவுமில்லை. அவள் இருக்கின்றாளா? செத்தாளா? என்று கூட எட்டிப்பார்க்கவில்லை. எதுவுமே நடக்காதது போல் வந்து சகஜமாக அண்ணனின் அலைபேசி என்னை கேட்கின்றானே! இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம் என்பதே கிடையாதா?
எப்படி இளித்துக்கொண்டு இருக்கின்றான். என்னமோ, காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு மனைவியிடம் கொஞ்சுவது போல்? அதுவும் இழவு வீட்டில்” கௌஷிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
அவளின் பதிலுக்காக ஷக்தி காத்துக்கொண்டிருக்க, எங்கிருந்தோ வந்த சாம்பவி “என்ன சக்தி என்ன சொல்லுறா? இந்த மேனா மினுக்கி? இழவு வீடு என்றும் பார்க்காம உன்ன ஒதுக்கு புறமா கூப்பிட்டு மயக்க பாக்குறாளா?” தனது கீச்சுக்க குரலில் கத்த ஆரம்பித்தாள்.
அழுது கொண்டிருந்தவர்கள் கூட அழுகையை நிறுத்தி விட்டு கௌஷியைத்தான் பார்த்தனர். இத்தனைக்கும் அவள் அவனோடு ஒரு வார்த்தை பேசவில்லை. கௌஷிக்கு அவமானமாக இருந்தது. அதை விட இயற்கை அழைப்பு வேறு அவஸ்தையாக அவளை படுத்த, அவ்விடத்தை விட்டு சென்றாள் போதும் என்று இருந்தாள்.
“அம்மா என்ன பேசுறீங்க? நான் வெற்றியை பத்தி விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்” என்றான் ஷக்தி.
இப்பொழுது கூட நான் என் மனைவியிடம் தானே பேசினேன் என்றெல்லாம் கூறவில்லை. யாரோ ஒரு பெண்ணிடம் தனது அண்ணனை பற்றி விசாரித்ததாக கூறியது போன்றுதான் கூறினான் கௌஷியின் திடீர் கணவனானவன்.
கௌஷிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. கூடவே கோபமும். உதட்டை கடித்து கோபத்தை அடக்கியவள் இமைகளை தட்டி கண்ணீரையும் உள்ளித்துக் கொண்டாள்.  
“ஓஹ்… அந்த ஓடிப்போனவன் இவளுங்களோட சகவாசம் வச்சிகிட்டுதானா இருக்கான். நினச்சேன். என்னடா… அம்மானு நான் இங்க ஒருத்தி குத்துக் கல்லாட்டம் இருக்கேனே! ஒரு போனப்ப போட்டு நலம் விசாரிக்க மாட்டேங்குறானேன்னு. எல்லாம் இவளுங்க மயக்கி இவளுங்க கைக்குள்ள வச்சிருக்காளுங்க” மீண்டும் பெருங்குரல் எடுத்து கத்த ஷக்திக்குத்தான் ஐயோ என்றானது.
சாம்பவியின் பேச்சில் கௌஷியின் பொறுமை பறந்தது. இழவு வீடு. அமைதியாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு நேரம்தான் பொறுமையை இழுத்து பிடிப்பதாம். “நான் சொன்னேனா? நான் சொன்னேனா? வெற்றி மாமா போன் நம்பர் என் கிட்ட இருக்குனு நான் சொன்னேனா? அவர் எங்க கூட பேசிகிட்டு இருக்காருன்னு நான் சொன்னேனா? இங்க பாருங்க சும்மா என் கூட பேச வேணும் எங்குறதுக்காக காரணம் தேடிக்கிட்டு வந்து வழியாதீங்க, தள்ளுங்க, மனிசியோட அவசரம் புரியாம” என்ற கௌஷி சாம்பவியை இடித்து விட்டு செல்ல சக்தியின் புருவங்கள் உயர்ந்தன.
சின்ன வயதில் எதற்கெடுத்தாலும் பயந்து அழுது கரையும் கௌஷியா இவள்? இல்லை ரொம்பவே மாறி விட்டாள். இல்லை. காலம் அவளை மாற்றி விட்டது. பெருமூச்சு விட்டுக்கொண்டான் ஷக்தி.
 அதற்காக அவன் மனைவியை ஆராய்ச்சியாக பார்க்கவுமில்லை. ஆசையாக பார்க்கவுமில்லை. நன்றாக தெரிந்தவள். பழகியவள் என்ற எண்ணத்தில் தான் பேசினான். ஆனால் அவன் பார்த்து பழகிய கௌஷியல் அவள் என்று சக்திக்கு புரிந்தாலும் அதை பற்றி ஆராயும் நேரமல்ல இது என்று உணர்ந்து கொண்டவன் ஆக வேண்டிய காரியங்களில் ஈடுபடலானான்.
“பாத்தியாடா… என்ன பேச்சு பேசிட்டு போறான்னு? பொண்ணா அவ? பிசாசு. எப்படி வளர்த்திருக்கா பாரு” சைக்கிள் கேப்பில் சாம்பவி இந்திராவை சாட,
“போய் கிட்ட இருந்தவள நிறுத்தி பேச்சு கொடுத்தது நான். என்ன எதுன்னு கேக்காம கத்த ஆரம்பிச்சது நீ. பட்டம் அவளுக்கா? பார்த்து பேசுமா அவ உன் மருமக” என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. இடத்தை காலி செய்திருக்க, சாம்பவியின் மனம் உழைக்காமல் கொதிக்க ஆரம்பித்திருந்தது.
இந்த ஆறு வருடங்களாக மகனை தன் கைக்குள் வைத்திருப்பளல்லவா. எப்படியாவது பஞ்சாயத்தில் விவாகரத்து வாங்கி விடலாம் என்று பார்த்தாள் அண்ணன் சம்மதிக்கவில்லை. இன்னும் ஒருவருடம் சென்றாள் கோட் மூலம் சென்று விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம் என்று பக்கத்து வீட்டு தனசேகரன் சொல்லி இருக்க, பொறுமையாக இருந்தவளுக்கு அண்ணனின் மரணமும் பிடிக்காத மருமகளின் வரவும் வயிற்றில் குளிர் பரவத்தான் செய்தது.
தனது இயற்கை உபாதையை முடித்துக் கொண்டு நீரை முகத்தின் பல தடவைகள் அடித்துக் கழுவியும் கௌஷியின் கோபம் தீரவில்லை.
எப்படி ஒரு மனிதனால் எதுவுமே நடவாதது போல் சாதாரணமாக பேச முடிகிறது. நல்லா இருக்கியா என்று கூட கேக்க மாட்டானா? சரியான சுயநலவாதி. வெற்றி மாமா போன் நம்பர் என் கிட்ட இருந்தாலும் கொடுக்க மாட்டேன்” பொறுமியவள் முகத்தை புடவை முந்தியால் துடைத்தவாறு அன்னையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
தந்தையிடம் சென்ற ஷக்தி அண்ணனுக்கு தகவல் சொல்ல வழியில்லை என்று கூற,  அஞ்சலிக்காக மூணு நாலாவது வைக்கணும். நோயில் படுத்த உடம்பு வைக்க, வைக்க சேதமடையும். வெற்றிக்காக காத்திருக்க நேரமில்லை இறுதிச் சடங்குளை மிக விரைவாக செய்ய வேண்டும் என்றார் கபிலர்.
ஊர் பெரியவர்களோடு கூடிப் பேசி ஏகோபித்த முடிவாக அன்று மாலையே சகாதேவனின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டது.
அதை அறிந்த சந்திரா ஒப்பாரி வைக்க சகாதேவனின் உடல்நிலையை எடுத்துக் கூறி புரிய வைத்து சமாதானப் படுத்தினாள் கௌஷி.
பாடையில் வைத்து மேளதாளங்களோடு சகாதேவனின் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட சந்தணக்கட்டையில் மூட்டப்பெற்ற நெருப்புச் சட்டியுடன் இடது தோளில் மண்பானை கும்பத்துடன் ப்ரணவ் முன்னே நடக்கலானான்.
மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சகாதேவனின் உடலுக்கு தீ கூட வைக்கப்பட்டிருக்காது வீட்டில் சாம்பவி ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தாள்.
“இவ்வளவு நாளா நான் பொறுமையா இருந்தது என் அண்ணனுக்காக இனியும் நான் பொறுமையா இருக்க வேண்டியதில்லை. போதும். அதான் அண்ணன் சாவுக்கு வந்தீங்களே கிளம்புங்க” என்று கத்த
“என்ன பேசுற சாம்பவி? உனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை என் தங்கச்சிக்கு இந்த வீட்டுல இருக்கு” என்றாள் சந்திரா.
“எப்போல இருந்து?” நையாண்டியாக சாம்பவி கேக்க
“உங்க அண்ணனை நான் எப்போ கல்யாணம் பண்ணேனோ அப்போல இருந்து. நானும் உங்க அண்ணனும் வேற வேற இல்ல. ஒண்ணுதான். என் தங்கச்சியும் அவ பொண்ணும் எங்கயும் போக மாட்டா” சந்திரா உறுதியாக சொல்ல
“அப்போ எங்களை வெளிய போக சொல்லுறீங்களா?” என்று எகிறினாள் சாம்பவி. விடாமல் மாயணத்திலிருந்து வந்த கணவரிடமும் மகனிடமும் சந்திரா அவளை வீட்டை விட்டு போக சொன்னதாக அழுது கரையலானாள். 

Advertisement