Advertisement

அத்தியாயம் 19
ஊரடங்கு போடப்பட்டிருந்தாலும் ஊருக்குள் சொந்த நிலங்களில் விவசாயம் பார்ப்பவர்கள் தங்களது வேலைகளை பார்த்தவாறுதான் இருந்தனர். பசி என்ற கொடிய நோய்க்கு மருந்து இன்றுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லையே.
“விவசாயிகள் ஓய்வெடுத்தால் பட்டனியாக சாக வேண்டியதுதான். கொரோனாவை விட மோசம். இப்படியே போனா நாட்டோட நிலைமை என்னவாகுமோ” வெற்றி சொல்ல
சந்தியாவும் “வீட்டுலையே செடி, கொடின்னு நட்டு சாப்பிட வேண்டியதுதான்” என்றாள்.
தொலைக்காட்ச்சி ஓடிக்கொண்டிருக்க, இப்படியே வெற்றியும், சந்தியாவும் பேசியவாறு அவரவர்களின் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். 
கொரோன கொடூரமானதோ! உயிர்கொல்லி நோயோ? அதை விஸ்வரூபமாக காட்டுவது மீடியாதான். இந்தியா முழுவதும் கொரோனா எவ்வளவு தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது. எத்தனை பேர் பாதித்திருக்கிறார்கள். எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள். எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எத்தனை பேரை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள் என்றெல்லாம் மக்களுக்கு சொல்வதாக பீதியை உண்டாக்கிக் கொண்டிருந்தனர்.
பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் எல்லா ப்ரோக்ராமுக்கும் இடையிலும் ஏதாவது ஒன்றை ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர்.
பாடல் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் பொழுது திடிரென்று பிரேக்கிங் நியூஸ் என்று வரவும் வெற்றி மற்றும் சந்தியாவின் கவனமும் கூட தொலைக்காட்ச்சியின் பக்கம் சென்றன.
அதில் “மும்பையை சேர்ந்த பாலியல் தொழில் சாம்ராஜ்யாத்தின் தலைவி ஜாக்ருதி கொரோனா பாதிப்பால் இன்று அதிகாலை மருத்துவமையில் காலமானதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன” என்று ஜாக்ருதியின் புகைப்படமும் ஒளிபரப்பப்பட வெற்றி பழைய சம்பவங்கள் நியாபகத்தில் வர அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.
“ஜாக்ருதியின் வீட்டில் இருந்த பெண்களில் அநேகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதோடு ஜாக்ருதியின் வாடிக்கையாளர்களையும் போலீசார் தனிமைப்படுத்தலுக்காக தேடி வருகின்றனர்” என்று தொலைக்காட்ச்சி குரல் கூற, சந்தியா கதறி அழவே ஆரம்பித்தாள்.
அன்று கணவன் பயந்து நடுங்கியவனாக மும்பையை விட்டு அவளையும் இழுத்துக்கொண்டு ரயில் ஏறி ஓடி வரும் பொழுது ஓவர் ரியேக்ட் செய்வதாக எண்ணி அதிருப்தியுற்று, சண்டை போட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி, மனம்விட்டு பேசாமல் முறைத்துக்கொண்டு இருந்தாள்.
“ஏய் தியா என்ன ஆச்சு…” வெற்றி ஓடி வந்து மனைவியை அணைத்துக் கொண்டான்.
“மும்பையில் இருக்கும் பெண்கள் மாத்திரமன்றி மற்ற மாநிலங்களிலிருந்து செல்லும் பெண்களையும், கடத்தி, மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கணவன், குழந்தை என்று சந்தோசமாக வாழ்ந்த குடும்பப் பெண்களை கூட விட்டு வைத்ததில்லை இந்த ஜாக்ருதி. ஒரு பெண் தனது குடும்பத்தையே கொலை செய்து விட்டதாக வாக்கு மூலம் கொடுத்திருப்பதாகவும் மும்பாய் செய்தியாளர் கூறுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்த போலீசார் தீவீர விசாரணையில் இறங்கியுள்ளனர்”
“நீங்க அந்த ஜாக்ருத்ய பத்தி சொன்னப்போ உங்கள நம்பாம இருந்ததுக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனையை கொடுத்துட்டான். அன்னக்கி எவ்வளவு உயிர் பயத்தோடு என்ன கூட்டிகிட்டு வந்திருப்பீங்க. அவ கைல மட்டும் மாட்டீ இருந்தேனா. என் நிலைமை என்னவாகி இருக்கும்? உங்கள் உயிரோடையே விட்டிருக்க மாட்டா. கடவுள் எனக்கு சரியான தண்டனையை கொடுத்துட்டான் என் குழந்தையையும் எடுக்கிட்டான். என்ன எக்சிடன் பண்ணி கோமாலையும் படுக்க வச்சிட்டான்” புலம்ப ஆரம்பித்தாள்.
மருத்துவர் சந்தியாவின் நிலைமையை பற்றி சொன்னதுதான் “கோமாவில் இருந்து எழுந்ததாக சந்தோச படாதீங்க. நாலு வருஷம் அவங்க வாழ்க்கையை தொலைச்சி இருக்காங்க. கரு வேறு கலஞ்சி இருக்கு. இதெல்லாம் அவங்க மனச ரொம்ப பாதிக்கும். அவங்களுக்கு ஆறுதலா இருக்குறது உங்க பொறுப்பு மட்டுமல்ல, பொறுமையும் ரொம்ப அவசியம். ஒரு குழந்தையை பாத்துகிறது போல தான் கையாளனும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எமோஷன் ஆகிடுவாங்க”
அவளை இறுக அணைத்துக்கொண்டு ஆறுதல் சொன்ன வெற்றிக்கு பழைய நியாபகங்கள் எல்லாம் கண்முன் வரலாயின.  
மும்பாயிலிருந்து சென்னை வந்த பிறகு உடன் பணிபுரிந்த தோழன் விகாஸுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்ற அச்சம் வெற்றியை தாக்கினாலும், அலைபேசி தொடர்பை ஏற்படுத்தி விசாரிக்கவும் பயந்தான். எங்கே இவன் பேசப் போய் அந்த ஜாக்ருதி தேடி வருவாளோ என்ற அச்சம் தான்.
சென்னை வந்த பிறகு வெற்றி அலைபேசி என்னை மாற்றி இருந்ததால் விகாஸுக்கு வெற்றியை தொடர்புகொள்ளும் வழியும் தெரியவில்லை. ஆனால் சந்த்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் விகாஷ் வெற்றியை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டிருந்தான். அவன் நலமாக இருப்பதாக அறிந்துகொண்ட பின்தான் வெற்றிக்கு நிம்மதியாக இருந்தது.
ஜாக்ருதி வெற்றியின் ஆபீஸ்வரை வந்து விசாரித்து இருக்கிறாள். ஆனால் விகாஷ் மேல் எந்த சந்தேகமும் வரவில்லையாம். அவன் அவளை யார் என்று தெரியாதது போல் பேசி வெறுப்பேத்தி அனுப்பி வைத்தானாம்.
 “வெற்றியின் வீட்டு பக்கத்துலயா இருக்கிறீங்க? அவன் ஏன் வேலைய விட்டு போனானு தெரியுமா? அவன் போனதால எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. ஒருத்தன் அழிஞ்சாதான் நாம வாழணும்னு விதி பாருங்க. அந்த மதுராசி திரும்ப வந்துட போறான். வந்த எனக்கு சொல்லுங்க காசு வேணாலும் தரேன்” என்றான்
“டேய் நான் யாரென்று உனக்கு தெரியுமா?” ஜாக்ருதி கோபத்தில் எகிற
விகாஸுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் “கோவிச்சுக்காத அக்கா. பணம்னா யார் வேணாம்னு சொல்லுவாங்க அதான் அப்படி பேசிட்டேன் வேற ஒன்னும் இல்ல” உடனே இறங்கி வந்தான்.
நடந்ததை விகாஷ் சொல்லி சிரிக்க “இருந்தாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திடா” என்றான் வெற்றி.   
” எங்க ஓவரா பேசி அடி வாங்கி அசிங்கப்படுவேனோனு நான் நடுங்கினது எனக்கு மட்டும் தான் தெரியும். நீ வேற” அதன்பின் அடிக்கடி விகாஷ் அழைத்து பேசி அங்கு நடப்பதை பகிர்ந்தான். கசப்பான, பயங்கரமான சம்பவங்களை மறப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்று வெற்றி அடிக்கடி சொல்ல ஜாக்ருதியை பற்றி எந்த பேச்சையும் அவன் பேச வில்லை. வெற்றியும் ஜாக்ருதியை மறந்து கோமாவில் இருக்கும் மனைவியை கவனிப்பதில், அவள் குணமடைய வேண்டும் என்று கடவுளை வேண்டுவதிலையும் ஈடுபடலானான்.
“என்ன தியா? ஏதேதோ பேசுற? உனக்கு நடந்தது ஒரு எக்சிடண்ட் அதனால நம்ம பாப்பா நம்மள விட்டு போய்ட்டா. அது உனக்கு தண்டனைனு நீ நினச்சா. எனக்கும் தண்டனை இல்லையா? இட்ஸ் ஜஸ்ட் அன் எக்சிடண்ட் புரிஞ்சிக்க. அந்த எக்சிடன் கூட தண்டனை கிடையாது, அதுல ஒரு குட்டிப் பொண்ண நீ காப்பாத்தி இருக்க. சில நல்ல காரியம் பண்ணும் பொழுது சிலத நாம இழக்க நேரிடும். அது கடவுள் நாம தண்டிக்கிறதா நாம எடுத்துக்கக் கூடாது. நம்ம நல்லதுக்குனு நினைக்கணும். புரியுதா”
“நம்ம பாப்பா நம்மள விட்டு போனதுல என்னங்க நன்மை இருக்க போகுது?” சந்த்யாவால் தாங்க முடியாமல் வெற்றியின் நெஞ்சில் சாய்ந்தவாறு குமுறினாள்.
“ஏற்கனவே நீ மனதளவில் ரொம்ப தனிமையா இருந்த. சந்தோசமா இல்ல. நானும் உன்ன கஷ்டப்படுத்திட்டேன். இந்த நிலைமையில உருவான கருவோடு நிலைமை எப்படி இருக்கும்?”
“என்ன சொல்ல வரீங்க?” புரியாது கணவனை ஏறிட்டாள் சந்தியா.
“சயன்ஸ் எவ்வளவு முன்னேறி இருக்கு. ஒரு குழந்தை கருவுல உருவானா தாயோட எண்ணங்கள் அந்த குழந்தையை பாதிக்கும். ஒரு சில மாதங்களில் தாய் பேசுறதையே குழந்தை கேட்கும். அப்படி இருக்கும் போது நீ இருந்த மனநிலையில் குழந்தை ஊனமாக கூட பிறக்க வாய்ப்பிருக்கு. ஆராய்ச்சுகள் கூட அப்படித்தான் சொல்லுது. அதனாலதான் டாக்டர்ஸ் தாய சந்தோசமா இருக்க சொல்லுறாங்க. நமக்கு அப்படி ஒரு குழந்தை வேணாம்னு கடவுள் தீர்மானிச்சி இருப்பாரு அதனால கூட நம்ம குழந்தை கருவுலயே கலஞ்சி இருக்கும்”
“எப்படி பிறந்தாலும் என் குழந்தையை நான் பாத்துகிட்டு இருந்திருப்பேன்” தாயுள்ளம் அல்லவா விம்மியவாறே கூறினாள் சந்தியா.
வெற்றி சமாதானப்படுத்தத்தான் இவ்வாறெல்லாம் பேசினான். அவள் இப்படி பேசினால் அவனும்தான் என்ன செய்வான்? அவளையே பாத்திருந்தவன் மெதுவாக அவள் நெத்தியில் முத்தமிட்டு “நானும்தான் பாத்துப்பேன். சந்தியா உனக்கு புரியல ஊனமான குழந்தைகள் பிறந்து கிட்டுதான் இருக்காங்க. அவங்கள நல்லா பாத்துப்பாங்க என்று நினைக்கிற பேரண்ட்ஸுக்கு மட்டுமா பிறக்குறாங்க? இல்லையே அவங்கள பாரமா நினைக்கிறவங்களுக்கும்தான் பிறக்குறாங்க. அந்த மாதிரி குழந்தைகள் அனாதை ஆஸ்ரமங்களையும், தெருவோரம் பிச்சை எடுக்குறாங்களே! குழந்தைகள் பெற்றோருக்கு வரம் மட்டுமல்ல சோதனையும்தான். ஆணோ, பொண்ணோ அவங்கள பெத்து நல்ல முறையில வளர்க்கணும் இதுதான் பெற்றோரோட கடமை. யாருக்கு கொழந்தை இல்லையோ அதுவும் சோதனைதான். கடவுள் என்ன நினைக்கிறார்னு நாம சொல்ல முடியாது. கஷ்டம் கொடுத்தா மட்டும் தானே மனிசனுங்க நாம அவனை தேடி போறோம். அதான் இந்த தடவ கொரோனா என்கிற கொடிய நோயை கொடுத்து கோவிலையே மூட வச்சிட்டான்” வெற்றி ஏதேதோ பேசி அவள் மனதை மற்ற முயன்றான்.
“அது அப்படி இல்லைங்க ஒவ்வொரு வீடும் கோவிலா மாறும். கடவுள நம்பாதவங்க கூட அவன தேடுவாங்க, வணங்குவாங்க. அவருக்கு மட்டும் தான் தெரியும் என்ன செய்யிறோம். ஏன் செய்யிறோம்னு. நமக்கு புரியாது” கணவனின் பேச்சில் தெளிந்தவள் பேச ஆரம்பித்தாள்.
நிம்மதி அடைந்தவனாக அவளை பார்த்த வெற்றி “அதான் நீயே சொல்லிட்டியே அவருக்குத்தான் எல்லாம் தெரியும்னு. கண்டதையும் போட்டு மனச குழப்பிக்காம சந்தோசமா இரு. என்ன இருந்தாலும் மனசைவிட்டு என் கிட்ட பேசு” அவள் தலையில் முட்ட
“ஏங்க நாம சீக்கிரம் குழந்தை பெத்துக்கலாமா?” வெக்கப்பட்டு தலை குனிந்தவள் வெற்றியின் சார்ட் பட்டனை திருக்கியவாறே கேட்டாள்.
அவர்களுக்கிடையில் இருந்த கசப்பு நீக்கினாலும் சந்தியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வெற்றி அவளிடமிருந்து விலக்கித்தான் இருந்தான்.
ஆசையும் ஏக்கமும் இருவருக்கும் இருந்தாலும் வெற்றி மனைவிக்காக பொறுமைகாக்க, சந்த்யா வாய்விட்டே கேட்டிருந்தாள்.
“ம்ம்.. உன் தலையிலிருந்த கட்டையும் அவிழ்த்தாச்சு. உடம்பும் தெரிரிச்சு இன்னம் கொஞ்சம் நாள் போகட்டும் என்று இருந்தேன் நீயே கேட்டா நான் எப்படி சும்மா இருப்பேன்” மனைவியின் முகத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கியவாறே பேசிய வெற்றி மறுகையை இடையோடு கோர்த்து தன் புறம் இழுத்து இருந்தான்.
மாலையாக கைகளை வெற்றியின் கழுத்தில் போட்டவள் “ஓஹ்… ஒஹ்.. நான் கேட்கலானா பக்கத்துல கூட வர மாட்டீங்களா?”
“வந்தா நானும் சும்மா இருக்க மாட்டேன். என் கையும் சும்மா இருக்காது” வெற்றி சிரிக்க, சந்தியா அவன் தோளில் முகம் புதைத்து செல்லமாக கடித்தாள்.
அவளை கையில் ஏந்திக்கொண்டு வெற்றி காதில் ஏதோ ரகசியமாக சொல்லியவாறே அறைக்கு நுழைய, சந்தியா வெக்கிச் சிவந்தாள்.
அந்த நேரம் “சந்தியா கீரையை சுத்தம் செஞ்சிட்டியா?” என்றவாறே இந்திரா வாசலுக்கு வந்து யாரையும் காணாமல் தேட
மூடியிருந்த அறைக்குள் இருந்து வெற்றி “அத்த நீங்களே தனியா சமைச்சிடுங்க. முடியலைன்னா வேலைக்கு ஆள் வச்சிக்கலாம். சந்த்யா உங்களுக்கு பேரன் பேத்தி கொண்டு வர வேலைல…” என்றவன் வாக்கியத்தை முடிக்கவில்லை அநேகமாக சந்தியா அவன் வாயை பொத்தி இருப்பாள் போலும்.
இந்திரா புன்னகையினூடாக வாசலில் இருந்த கீரையை எடுத்துக்கொண்டு சென்றாள்.
ஊரடங்கு என்பதால் எங்கும் செல்ல முடியாது. பாலமுருகனை அலைபேசியில் விசாரிப்பது என்பது சாத்தியமில்லை. நேரடியாக சென்று விசாரிப்பதுதான் சரி. ஆனால் வண்டியில் செல்ல முடியாது என்ன செய்வது? ஷக்தி தீவிரமாக யோசிக்க,
“நடந்தே போலாம்” என்றாள் கௌஷி.
“என்ன விளையாடுறியா? நம்ம அபார்ட்மெண்ட்ல இருந்து முப்பது கிலோ மீட்டர் இருக்கும். நடந்து போறது சாத்தியமே இல்ல. வண்டில மட்டும்தான் போகலாம் எத்தனை செக்போஸ்ட் இருக்கும்னு நினைக்கிற?  எதோ சொல்லணும் என்கிறதுக்காக சொல்லாத” பல்லைக் கடித்தான் ஷக்தி.
“நான் சும்மா ஒன்னும் சொல்லல. எனக்கு தானே பிரச்சினை நான் பாத்துக்கிறேன். நீ கிளம்பு” என்றாள் கௌஷி.
“ஆ ஊனா கிளம்ப சொல்லுறதுலையே குறியா இருக்கா…” அவளை முறைத்தவன் “என்ன தனியா நடந்தே போய் பாலமுருகன் சட்டையை பிடிச்சி உலுக்கி விசாரிக்க போறியா? விஜயசாந்தி ஐ.பி.எஸ் என்ற நினைப்பா?” கடுப்பில் ஷக்தி பேச
“என்ன கிண்டல் பண்ணுறியா? என் பிரச்சினையை நான்தான் பார்த்துக்கணும். ஊரடங்கு நீங்கும்வரை வெயிட் பண்ணா அந்த பாலமுருகன் காணாம போயிடுவான். என் மேல விழுந்த கலங்கத்த நானே துடைச்சிக்கிறேன். உன் கிண்டல் பேச்சுக்களை கேக்க வேண்டிய தேவையும் இருக்காது பாரு” என்றாள் கௌஷி.
சக்திக்கு ஐயோ என்றானது. “சரி சொல்லு நீ எப்படி போகப்போற?” அவனுக்குத்தான் எந்த ஐடியாவும் தோன்றவில்லை. இவள் எதோ சொல்ல விளைகிறாள் அதையாவது கேட்டுப்பார்க்கலாமே காதல் கணவனாக சிந்தித்து குரலில் இருந்த கடினம் மாற மென்மையாக வினவினான். 
“அத நான் ஏன் உன்கிட்ட சொல்லணும். நீ கிளம்பு” முகத்தை திருப்பிக் கொண்டாள் மனையாள்.
“விளங்கிடும். இப்படியே போனா இவள சமாதானப்படுத்த முடியாது” தனக்குள் முணுமுணுத்தவன் “நான் எனக்காகவோ உனக்காகவோ கேட்கல ராஜவர்மன் சார் சொன்னதுக்காக கேட்குறேன். அவர்தான் உனக்கு ஹெல்ப் பண்ண சொன்னாரு” என்றான் ஷக்தி.
“ஓஹ்… அவர் சொன்னதாலதான் வந்தியா?” ஏமாற்றம் அப்பட்டமாக கௌஷியின் குரலில் தெரிய சக்திக்கும் வருத்தமாக இருந்தது.
அவளுக்காக செய்வதாக சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இப்படி சொன்னாலும் கவலையடைகிறாள் என்ன டிசைனோ? என்னதான் இவள் என்னிடம் எதிர்பார்க்கிறாள்? சக்தியால் கௌஷியை புரிந்துக்கொள்ள முடியவில்லை.
“சரி சொல்லு என்ன பிளான்” சாதாரண முகபாவனையில் கேட்டான் ஷக்தி.
“போலீஸ் செக் போஸ்ட் எல்லாம் தவிர்த்து குறுக்கு பாதைல போனா மூணு நாள்ல போகலாம்” என்றவள் அலைபேசியில் வரைபடத்தை காட்டி சொல்ல
“தலையை சுத்தி மூக்கை பிடிக்க சொல்லுற. சாப்பாட்டுக்கு கூட ஏதாச்சும் எடுக்கிட்டு போலாம். நைட்டு எங்க தங்குறதாம்?” கௌஷியின் ஐடியா சரிப்பட்டு வராது என்றே பேசினான் ஷக்தி.
“நாளைக்கு காலைல ஏழுமணிக்கு கிளம்பினா மொத நாள் நைட் என் பிரென்ட் நிஷா வீட்டுல தங்கலாம். அதே மாதிரி அடுத்த நாள் காலை ஏழுமணிக்கு கிளம்பினா…”
“இரு.. இரு.. நாள் முழுக்க நடந்துக்கிட்டே இருக்க போறியா?”
“இல்ல. அப்போ அப்போ அங்க அங்க ரெஸ்ட் எடுக்கலாம். ஆனா நைட் ஏழுமணிக்கு சரியா நிஷா வீட்டுக்கும் ப்ரியா வீட்டுக்கும் போய்டணும்”
“சரி போய் சேர ரெண்டு நாள் போதுமே எதுக்கு மூணு நாள்” புரியாது கேட்டான் ஷக்தி.
“ப்ரியா வீட்டுல இருந்து பத்து நிமிஷம்தான் பாலமுருகன் வீடு. அவனை விசாரிக்க ஒருநாள். அங்க என்னெல்லாம் நடக்கும்னு தெரியாதே”
“நல்ல திட்டம்” மனைவியை மெச்சினான் ஷக்தி.
“சரி குறுக்கு வழில போலீஸ் வந்தா? நாம மாட்டிக்கிட்டா? என்ன சொல்லி தப்பிக்கிறது?”
“உன் வாய பினாயில் ஊத்தி கழுவு. என் திட்டத்துல எந்த ஓட்டையும் இல்ல” கௌஷி பொரும
“நான் ஓட்ட இருக்குனு சொன்னேனா? திடிரென்று போலீஸ் வரலாம். சந்தேகப்பட்டு கூட விசாரிக்கலாம். அப்படி விசாரிக்கும் போது ரெண்டு பேரும் ரெண்டு பதில் சொன்னா நம்மள தூக்கி உள்ள வச்சிடுவாங்க. ஏரியாகாரங்க வேற நம்மள தெரியாதுன்னு சொல்லிடுவாங்க அப்பொறம் நம்ம நிலைமையை யோசி” ஷக்தி எதுவேனாலும் நடக்கலாம் என்று எடுத்துக் கூறினான்.
“நீ சொல்லுறது சரிதான். அப்படி ஒரு சூழ்நிலை உருவானா என்ன சொல்லலாம்?” யோசனையில் ஆழ்ந்தாள் கௌஷி.
கௌஷி நகத்தை கடித்தவாறு யோசிக்க ஷக்தி அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.
நடந்துகொண்டிருந்த ஷக்தி சோபாவில் வந்தமர சோபாவின் மீதிருந்த தொலைக்காட்ச்சி ரிமோர்ட் இயங்கி தொலைக்காட்ச்சி ஓட ஆரம்பித்தது.
படிக்காதவன் படத்தில் ரஜனிகாந்த் தனது வண்டி லக்ஷ்மியை கர்ப்பிணியான அம்பிகாவை ஏற்றிக்கொண்டு செல்ல வண்டியை இயக்குவதும், வண்டி நகர மறுப்பதுமாக காட்ச்சி ஓட ஷக்தி “ஐடியா” என்று கத்தினான்.
“என்ன?” என்றாள் கௌஷி
“நாம நடந்தே போக வேணாம். வண்டிலையே போகலாம்”
“என்ன உளறுற?” சக்தியை முறைக்க ஆரம்பித்தாள்.
“அங்க பாரு…” தொலைக்காட்ச்சி பக்கம் கௌஷியின் முகத்தை ஷக்தி திருப்ப கௌஷி அவன் கையை தட்டி விடவில்லை.
மாறாக “என்ன இப்போ டிவி பாத்து என்ஜோய் பண்ணுற நேரமா?” சக்தியை மட்டம் தட்ட எண்ணினாள்.
உற்சாகத்தில் இருந்த ஷக்திக்கு கௌஷியின் இகழ்ச்சிக் குரல் காதில் விழவே இல்லை. விழுந்திருந்தாலும் கண்டுகொண்டிருப்பானோ? கண்டிப்பாக இல்லை.
காதல் சொட்டும் குரலில் “இல்லடா கௌஷி அங்க பாரு அம்பிகா ப்ரெக்னன்ட் மாதிரி நடிக்கிறாங்க. நீயும் அதே மாதிரி வேஷம் போட்டா நாம வண்டிலேயே போயிட்டு வரலாம். போலீஸ் நிறுத்தினாலும் ஆஸ்பிடல் போறதா பொய் சொல்லலாம். என்ன வலி வந்தா மாதிரி நீ கொஞ்சம் நடிக்க வேண்டி இருக்கும். அதெல்லாம் நீ சரியா பண்ணிடுவ இல்ல” என்று புன்னகைக்க
சக்தியை முறைத்தவாறே “என்ன நா நடிக்கிறேன்னு குத்திக் காட்டுறியா?” என்றாள் கௌஷி.
“சரியான சண்டை கோழி. என்ன சொன்னாலும் அவ குறுக்கு புத்திதான் வேல செய்யும் போல” என்றெண்ணியவன் “நான் காம்ப்ளிமென்ட் தான் பண்ணேன். உனக்கு தப்பா தோணினா அதுக்கு நான் பொறுப்பு இல்ல” உதட்டை சுளித்தான்.
அதில் மயங்கியவள் கொஞ்சம் மனம் சமன்பட “சரி வேஷம் போடலாம். பதினஞ்சு கிலோ மீட்டர். எத்தனை செக்போஸ்ட்? எத்தனை ஆஸ்பிடல்? இருக்குனு சரியா தெரிஞ்சிக்கணும். இல்லனா செக் போஸ்ட்ல இருந்து திருப்பி அனுப்பிடுவாங்க” கௌஷி சொல்ல
“பாய்ண்ட்” என்ற ஷக்தி கணனியில் வரைபடத்தை பெரிதாக்கி எங்கெங்கு மருத்துவமனைகளும், சோதனைச் சாவடிகளும் இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான்.
அவர்களின் திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று பேசிய பின் ஷக்தி விடைபெற்று செல்ல
“தேங்க்ஸ்” என்றாள் கௌஷி.
“எதுக்கு தேங்க்ஸ்? என் கடமையைதான் செஞ்சேன்” வேறெதுவும் பேசாமல் ஷக்தி கிளம்பி செல்ல கௌஷி கதவை மூடி விட்டு சோபாவில் விழுந்தாள்.  
“கடமையா? ஆபீஸ்ல வேலை பார்க்குற ஸ்டாப்புக்கு ஒன்னுனா உதவி செய்யிறதது தன்னோட கடமைனு சொல்லிட்டு போறானா?”
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் கௌஷிக்கு புரிய வைப்பது வேஸ்ட் என்றெண்ணியே ஷக்தி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ஆனால் கௌஷி தப்பாக அர்த்தம் கொண்டிருந்தாள்.
அடுத்தநாள் காலை ஏழு மணியளவில் ஷக்தி போர்மல் ஷூட்டில் கௌஷியின் கதவை தட்டினான். கௌஷியும் சேலை அணிந்து வயிற்றில் ஒரு தலைகாணியை வைத்து கட்டிக்கொண்டு தயாராகி நின்றிருந்தாள்.
சக்தியிடம் “சாப்டியா?” என்று கேட்க அவன் இல்லை என்று தலையசைத்ததும் அவனுக்காக செய்து வைத்திருந்த சென்விச்சை கொடுத்தாள்.
“சீக்கிரம் சாப்பிடு. போலீஸ்ல மாட்டினா பச்சை தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க” கௌஷி சிரிக்க, அவள் கிண்டல் செய்கிறாள் என்று புரிந்துகொண்ட ஷக்தி அவளை முறைத்தான்.
கதவை பூட்டிக் கொண்டு இருவரும் மின்தூக்கியில் ஏற பர்வதம் அத்த இவர்களை கண்டு ஏற விடாது இறங்கியவள் என்ன? ஏது? என்று விசாரிக்கலானாள்.
“ஆபீஸ்ல ஒரு சின்ன ப்ரோக்ராம்” என்று ஷக்தி சொல்ல
“கிரிஜா வீட்டுக்கு போறோம்” வாய்க்கு வந்ததை கௌஷி சொன்னாள்.
இருவரும் இரண்டு பதிலை சொன்னதில் இருவரையும் இழுத்துக்கொண்டு கௌஷியின் வீட்டுக்குள் சென்று பருவதம் அத்த நடந்தத அனைத்தையும் இருவரின் வாயிலிருந்தும் கறந்திருந்தாள்.
“இப்படி போனா உங்க ரெண்டு பேரையும் புழல் ஜெயில்லதான் வைப்பாங்க” பர்வதம் சிரிக்க சக்தியும் கௌஷியும் முழிக்கலாயினர்.
“என்ன பாக்குறீங்க? காலைல ஏழு மணிக்கு பொண்டாட்டிக்கு வலி வந்திருக்கு தூங்கிட்டு இருந்த புருஷனுக்கு ஷார்ட் அயன் பண்ண நேரமிருக்கா? பேண்ட்டை போட நேரமிருக்கா? லுங்கியோட கைல கிடைச்ச டிஷர்ட்டை மாட்டிகிட்டு தலையை கூட சீவாம முகத்தை கூட கழுவாம கார் சாவிய கைல எடுத்திருப்பான்.
பொண்டாட்டிகாரி நைட்டில இருந்திருப்பா. காலைல எழுறவளா இருந்திருந்தா குளிச்சி சாமி கும்பிட்டு மங்களகரமா புடவை கட்டி இருப்பா. இந்த காலத்து பொண்ணுக எங்க புடவை காட்டுறாங்க? சுடிதார் கூட போடுறதில்ல டிஷர்ட்,  பாட்டம் தான்.
குழந்தையை பெத்துக்க ஆஸ்பிடல் போறீங்க தாய்க்கும் சேய்க்கும் தேவையான பொருட்கள் அடங்கிய பை எங்க? அது இல்லனு பார்த்தாவே போதும் உங்க மேல சந்தேகம் வந்து தூக்கி உள்ள வைக்க”
“என்ன சொல்லுறீங்க?” கௌஷி திகைக்க,
“முன்ன பின்ன செத்தா தானே சுடுகாடு தெரியும்?” ஷக்தி பெருமூச்சு விட்டான்.
“கௌஷி நீ போய் கௌஷி நீ போய் ட்ரெஸ் மாத்தி திருநீர் வச்சிக்க. அம்மா நான் வலி வந்து துடிக்கிற பொண்ணுக்கு வச்சி விட்டுருக்கேன் சரியா” நெஞ்சில் கைவைத்து சொன்னவள் “ஷக்தி நீ போய் நான் சொன்னா மாதிரி தயாராகு. நான் போய் லதா வீட்டுல குழந்தைக்கான பொருளோடு பைய எடுத்துட்டு வரேன். அப்பொறம் நானும் கூட வரேன். அப்போதான் இன்னும் நம்புங்க. அவன பிடிக்கிறோம். காச எடுக்கிறோம்” பர்வதம் நிற்காமல் சென்று விட கௌஷி சோபாவில் அமர்ந்து விட்டாள். 
“நம்ம திட்டத்துல இவ்வளவு பெரிய ஓட்டையா? நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்.
“எதுக்கும் லுங்கிகுள்ள ஒரு போட்டம் இல்லனா பேண்ட் போட்டுக்க ஷக்தி. அடிதடி, சேசிங் வந்து நீ ஓட வேண்டி வந்தா.. லுங்கி அவுந்து விழுந்துட போகுது”
“இந்த நேரத்துலையும் உனக்கு எப்படித்தான் கிண்டல் பண்ண தோணுதோ” கௌஷியின் காதை திருகி அவள் தலையில் கொட்டிய ஷக்தி கிளம்பி சென்றிருக்க, உதட்டை கடித்து அமர்ந்திருந்தாள் கௌஷி.
பொதுவாகவே அவள் இவ்வாறெல்லாம் பேசுபவள் இல்லை. சக்தியிடம் பேசும் பொழுது இப்படி பேசி விடுகிறாள். சூழ்நிலையெல்லாம் பார்ப்பதில்லை. எல்லாம் மறந்து மனம் இலேசாக, சந்தோசமாக உணர்கிறாள்.
ஆனால் ஷக்தி தனக்கு உதவுவது கடமைக்காக மட்டும்தான் என்பதால் அவனிடம் அதிகம் நெருக்க கூடாது என்றெண்ணினாள் கௌஷி.

Advertisement